Tuesday, November 18, 2008

என்றென்றும் காதலுடன்...!!!

சமயலறை விழுப்புண்களில்
மகிழவே செய்கிறேன்
எனக்கான துயரம்
தேங்கிய விழிகளுடன்
அன்பாய் நீ தரும்
முத்தங்களை எண்ணி...

என் உள்ளங்கைகளில்
பொத்தி பாதுகாத்திருக்கும்
உன் முத்தங்களின் இளஞ்சூட்டினை
இந்தப் பாழாய்ப் போன
கீபோர்டிற்குத் தர
எப்படி மனம் வரும் எனக்கு?

அதிசயம்தான்!
எனக்கு கழுத்தில்
மகுடம் சூட்டியிருக்கிறாயே!!

ஒரே தட்டில் உண்டு...
ஒரே கட்டிலில் உறங்கி...
இந்தக் கடவுள் மீது
கோபமாய் வருகிறது!
உடல்கள் மட்டும் ஏன்
இரண்டாய் படைத்தானென்று!!

எப்பொழுதும் உனது
கொஞ்சல் மொழிகளும்
கெஞ்சல் ஒலிகளுமே
காதுகளில் ஒலித்திருக்க
PR-களிலும் CR-களிலும்
எப்படி கவனம் செலுத்துவது??

தவமிருக்கிறேன்
எண்ணற்ற இதயங்கள்
வேண்டுமென்று...
அள்ளி அள்ளி
நீ தரும் காதலை
பொத்தி வைக்க
என் ஒரு இதயம்
போதவில்லையே...

Thursday, November 6, 2008

அவள் முடிவு சரியானதா?!!

அவள் - ஒரு நல்ல ரசிகை. எதைக் கண்டாலும் ரசிப்பவள். எப்பொழுது பார்த்தாலும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பாள். அம்மா, அப்பா, தம்பி மற்றும் நல்ல நண்பர்கள் என்று அழகான உலகம் அவளுடையது. புத்தகங்களுக்குள் புதைந்துப் போக விரும்புவாள். அம்மாவின் மடியில் தலை வைத்து அம்மாவுடன் கதை பேசிக் கொண்டே இருக்க ஏங்குவாள். தம்பியுடனான செல்ல சண்டைகளை ரசிப்பாள். உணவு உண்பதை விட தூங்குவதை வாழ்வின் அத்தியாவசிய ஒன்றாக கொண்டவள். எழுத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவள். தனக்கென்று ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து மனம் தளராமல் மொக்கைப் போட்டவள். காதல் கதைகள் ஓரளவு நன்றாக எழுதுபவள். கதை என்ற ஒன்று இல்லாமலே நாலு பாகங்கள் ஐந்து பாகங்கள் என்று எழுதும் அதீத திறனுடையவள். இவ்வாறு ஒன்றுமில்லாமலே வலையுலகில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவள்.



காதல் கவிதைகள், காதல் கதைகள் என்று எழுதி காதலை காதலித்துக் கொண்டிருந்தவளை ஏனோ காதலுக்குப் பிடிக்கவில்லைப் போலும். அவளுக்கு அவள் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவளது அந்த அழகான உலகில் காதல் விதையூன்றினான் அவன். அவளது கனவுகளை அவன் வசம் செய்தான். அவளது ஒவ்வொரு நொடியையும் கொள்ளை கொண்டான். இவ்வாறாக அவர்களது திருமண வாழ்க்கை சிறப்பாய் ஆரம்பித்தது. யார் கண்பட்டதோ என்னவோ அவளுக்கு வேலை மாற்றம் கிடைக்கவில்லை. அவள் பெங்களூரிலும். அவன் சென்னையிலும். மூன்று மாதங்கள் இடைவிடாமல் போராடி வேலை மாற்றம் பெற்றாள். அந்த மூன்று மாத இடைவெளியில் நூற்றுக்கணக்கான மைல்கள் அப்பாலிருந்த அவனை எண்ணி எண்ணி சோகத்தில் ஆழ்ந்திருப்பதையே தொழிலாய் கொண்டிருந்ததில் அவளது வலைப்பதிவை கவனிக்க இயலவில்லை. சென்னை வந்ததும் உங்க ஊர் மொக்கை இல்லை. எங்க ஊர் மொக்கை இல்லை. அந்த அளவு படுபயங்கரமாய் மொக்கைப் போட்டுக் குவிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சென்னையில் வலது கால் எடுத்து வைத்தாள்.



மறுபடியும் யார் கண்பட்டதோ என்னவோ அவளால் எழுத இயலவில்லை. அவளில் எண்ணவோட்டமே இன்று இரவு டிபன் என்ன செய்யலாம், நாளை காலை என்ன செய்யலாம், வீடு துடைக்க வேண்டுமே, அழுக்குத் துணிக்கூடை நிரம்பி வழிகிறதே, எப்பொழுது துவைப்பது? வாஷிங்மெசினுக்கு கவர் வாங்கிப் போட வேண்டுமே, அடுத்த மாதம் கவிதாயினி கல்யாணத்திற்கு என்ன உடை உடுத்தலாம் என்றவாறே மாறிப் போனது. இவற்றை எல்லாம் மீறியும் வேலை நேரத்திற்கிடையில் எதாவது எழுதலாமென்று எடுத்து வைத்தாலும் எழுதுவதற்குத் தோன்றுவதில்லை.



காலையில் எழுந்து அரக்கப் பரக்க காலை மற்றும் மதிய உணவு செய்து, கணவருடன் ஆபிஸ் கிளம்பி, சாயந்திரம் திரும்பும்பொழுது MTC பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறி எவரேனும் எழுகிறார்களா என்று கண்கொட்டாமல் பார்த்து எவரேனும் எழுந்தால் ஓடிச் சென்று அந்த சீட்டில் அமர்ந்து நிறுத்தத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்தை சுற்றியுள்ள மரம், பூச்செடிகள், வேடிக்கைப் பேசியபடி சைக்கிளில் சுற்றும் பள்ளி மாணவர்கள் இப்படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஜாலியாய் வீட்டிற்கு நடந்து சென்று இரவு உணவிற்கான வேலையை துவங்கியபடியே பெற்றோருடனும் மாமியார், நாத்தனாருடனும் கதைகள் பேசிக்கொண்டிருந்து, கணவர் வந்ததும் இரவு உணவை முடித்துக் கொண்டு கம்ப்யூட்டரில் சண்டைப் போட்டுக் கொண்டு விளையாடுவது என்று இந்த வாழ்க்கையை அவள் மனம் வெகுவாய் ரசிக்கலாயிற்று. கொஞ்ச காலத்திற்கு இந்த வாழ்க்கையை முழுதாய் அனுபவிக்க வேண்டும். ஆனால் பதிவெழுத ஆரம்பித்தால் மனம் அதைப் பற்றியே யோசிக்க ஆரம்பித்து விடும். இரவு வந்ததும் கணினியையே நோண்டிக் கொண்டிருக்க வேண்டும். அதனால் சிறிது காலத்திற்கு வலைப்பதிவிற்கு விடுமுறை அளித்து விடலாம் என்ற முடிவிற்கு வந்து விட்டாள். அவள் முடிவு சரியானதா என்று கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன் :-)



பி.கு: அப்பாடா! என்னை ஹீரோயினா வச்சு ஒரு கதை எழுதணும்னு நெம்ப நாளா ஆசை. இன்னைக்கு நிறைவேறிடுச்சு :)))

Wednesday, October 15, 2008

ஃபிஷ் ஃப்ரை பிரியர்களுக்கு - சைவம்

நீங்க நான் வெஜ் பார்ட்டியா?



இல்ல ப்யூர் வெஜிடேரியனா?



இல்ல ரெண்டுமே சாப்பிடறவங்களா?



அப்ப மேல படிங்க... ஹி... ஹி... இதை தவிர வேற கேட்டகிரியே இல்லைனு நீங்க கேக்கறது எனக்கு தெரியுது. நமக்கு எது நல்லா வருமோ அதைதான் பண்ணனும். நமக்கு பில்ட் அப்புதானுங்க நல்லா வரும். அதைதான் பண்றேன்.



சரி சரி... கமிங் டு த பாயிண்ட்... ஃபிஷ் ஃப்ரை மாதிரியே வெஜிடேரியன்ல எப்படி பண்றதுனு என் ஆபிஸ்ல வேல செய்யற ஒரு பொண்ணு சொல்லிக் குடுத்தா. அதை நான் ரெண்டு தடவை சக்சஸ்ஃபுலா செஞ்சுட்டேன். அதான் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் தான் நம்ம கொள்கைனு உங்களுக்கே தெரியுமில்ல... ஹி... ஹி...



ஓகே... இனி வெஜிடேரியன் ஃபிஷ் ஃப்ரை செய்யற செய்முறை.



தேவையான பொருட்கள்:



பச்சைக் கலர்ல வாழைக்காய் - உங்களுக்கு வேணுங்கிற அளவு



உப்பு - இதுவும் உங்களுக்கு வேணுங்கிற அளவு



மிளகாய் பொடி - இதுவும் உங்களுக்கு வேணுங்கிற அளவுதானுங்க



இந்த வாழைக்காய்க்கும் மீனுக்கும் ரொம்ப ஒற்றுமை இருக்கு. வாழைக்காய் எப்படி ரெண்டுப் பக்கமும் கட் பண்ணி லைட்டா தோல் சீவறோமோ அதே மாதிரி மீனையும் தலையும் வாலும் கட் பண்ணி செதில் சீவுவோம். இந்த ஒற்றுமையே சாமுராய் படத்துல விக்ரம் நாசரோட மனைவிக்கு சொல்லித் தந்தப்போதான் எனக்கும் தெரிஞ்சது. ஓ மை காட்! செய்முறை சொல்ல வந்துட்டு எங்கேயோ போயிட்டேன். சாரி சாரி...



செய்முறை:



வாழைக்காய நல்லா கழுவிட்டு ரெண்டுப் பக்கமும் கட் பண்ணி தூக்கி டஸ்ட் பின்ல போட்டுடுங்க. அப்றம் வாழைக்காய அப்டியே ரவுண்டு ரவுண்டா கட் பண்ணிக்கங்க. ரொம்ப ஸ்லைஸா வேணாம். அதுக்காக ரொம்ப மொத்தமாவும் வேணாம். கட் பண்ணினத எல்லாம் எடுத்து குக்கர்லப் போட்டு தண்ணி ஊத்தி கொஞ்சம் சால்ட் போட்டு அடுப்புல வச்சு மூணு விசில் விடுங்க. ப்ரெஷர் அடங்கினதும் எடுத்து தண்ணிய வடிச்சுட்டு ஒரு தட்டுல பரப்பி ஃபேன்க்கு அடில வச்சு நல்லா ஈரம் ஆற விடுங்க. அப்றம் மிளகாய் பொடியோட சால்ட், தண்ணி கலந்து அந்த வாழைக்காய் துண்டு ஒவ்வொண்ணுலயும் ரெண்டு பக்கம் தடவி மறுபடியும் தட்டுல பரப்பி ஈரம் காய விடுங்க. ஈரம் காயலைனா நிறைய எண்ணை இழுக்கும். ஈரம் காய்ஞ்சதும் எடுத்து தோசைக்கல்ல கொஞ்சம் நல்லா எண்ணை விட்டு அதுல போட்டு பொரிச்சு எடுங்க. அப்றம் தட்டுல அழகா அடுக்கி உங்களுக்கு தெரிஞ்ச டெக்கரேஷன் எல்லாம் செஞ்சு சர்வ் பண்ணுங்க. சுவையான வெஜிடேரியன் ஃபிஷ் ஃப்ரை ரெடி.



Value added: மிளகாய் தூள் உப்போட கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்தும் பண்ணலாம்.



வாழைக்காய் ரவுண்ட் ரவுண்டா கட் பண்ணி செஞ்சா ரொம்ப நேரம் எடுக்குதேனு வருத்தப்படற என்னைய மாதிரி சுடு சோம்பேறிங்களுக்காக: வாழைக்காய் பஜ்ஜிக்கு சீவற மாதிரி நீளமாவும் சீவிப் போடலாம்.



புரட்டாசி மாசம், அமாவாசை அந்த நாளு இந்த நாளுன்னெல்லாம் சாப்பிட முடியாம கஷ்டப்படறவங்களுக்காக என்னுடைய இந்தப் பதிவு சமர்ப்பணம். சீக்கிரம் வெஜிடேரியன் சில்லி சிக்கனோட வரேன்.



பி.கு: ஒரு குடும்ப ஸ்தீரியா மாறிட்ட தேஜஸ் என் பதிவுல தெரியுதானு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க மக்கா... :)))

Tuesday, October 14, 2008

ஓர் இரவை எண்ணி...

தன்னை மறந்து

தனித்துறங்கிய

இரவின் விடியலில்

கண் மலரும் பொழுதில்

துடிதுடித்துப் போகிறேன்...

உன்னிரு கரங்களுக்குள்

துயிலாமல் தொலைத்த

ஓர் இரவை எண்ணி...

Tuesday, October 7, 2008

பேரம் பேசறதுல கில்லாடியா நீங்க??

பேரம் பேசி வாங்கறதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். கொஞ்சம் பயமும் கூட.எங்க ஊர்ல சனிக்கிழமை மட்டும்தான் சந்தை கூடும். நான் அஞ்சாவது படிச்சப்போ இருந்து எங்கம்மாக் கூட சந்தைக்குப் போக ஆரம்பிச்சேன்(அப்போ இருந்தே வீட்டு வேலைக் கத்துக்கோன்னு ஒரே அர்ச்சனை... இருந்தாலும் ஒண்ணுமே கத்துக்காம சாதிச்சிட்டோமில்ல). காய் வாங்கும்போது எந்த காய் எப்படி எப்படி பாத்து வாங்கணும்னு சொல்லிக் கொடுப்பாங்க. ஒரு கடைலக் கூட அட்லீஸ்ட் ஒரு ஐம்பது பைசாவாவது குறைச்சுக் கேட்காம வாங்க மாட்டாங்க. எனக்கு ஒரே எரிச்சலா வரும். ஏம்மா! சூப்பர்மார்க்கெட்ல போய் வாங்கறீங்கல்ல. அங்கல்லாம் பேரம் பேச மாட்டிங்க. இங்க மட்டும் வந்து நல்லா கேளுங்க. எவ்ளோ பாவம் இவங்கனு எங்கம்மாட்ட சண்டைப் போடுவேன். சூப்பர்மார்க்கட்ல எல்லாம் விலை கரெக்டா வச்சிருப்பாங்க. இங்க எல்லாம் அவங்க சொல்றதுதான் விலை. அதனால இஷ்டத்துக்கு சொல்லுவாங்கனு எங்கம்மாவும் எதேதோ காரணம் சொல்லுவாங்க. ஆறாவ்து போனதுக்கப்புறம் என்னை தனியா சந்தைக்கு அனுப்ப ஆரம்பிச்சிட்டாங்க. நான் போனப்போ குறைச்சுக் கேட்டுப் பாப்பேன். முடியாதுனு சொல்லிட்டாங்கனா எதும் பேசாம அவங்க சொன்ன விலைக்கு வாங்கிட்டு வந்துடுவேன்.



காலேஜ்-ல என் ஃப்ரெண்ட் யசோ சூப்பரா பேரம் பேசுவா. ஒரு தடவை திருச்சில பர்மா பஜார் போனோம். ஒரு கடைல ட்ரெஸ் வாங்கலாம்னு போய் ட்ரெஸ் எல்லாம் செலக்ட் பண்ணி வச்சுட்டோம். அவ மெல்ல இது எவ்ளோங்கனு கேட்டா. இருநூறு ரூபாய்னு அவர் சொன்னதும் ஒரு ரெண்டு செகண்ட் யோசிச்சவ எழுபத்தைஞ்சு ரூபாய்க்குக் குடுங்கனு கேட்டாளே பாக்கலாம். எனக்கு உதற ஆரம்பிச்சிடுச்சு. அவர் எதாச்சும் கேவலமா திட்டிடப் போறாரோனு ஒரே பயம் எனக்கு. அவரோ கூலா அவ்ளோ கம்மியா எல்லாம் குடுக்க முடியாது. வேணா நூத்தி எண்பதுக்கு தரேனு சொன்னார். இவ உடனே சரி வாடி போலாம்னு என் கையப் பிடிச்சு இழுக்க அவர் வேகமா நூத்தி ஐம்பது குடுத்துட்டு எடுத்துக்கங்க. அதுக்கு மேலக் குறைக்க முடியாதுனு சொன்னார். திரும்பி இவ பேச அவர் பேச ரெண்டு பேரும் பேசி கடைசில தொண்ணூறு ரூபாய்க்கு அந்த ட்ரெஸ்ஸ வாங்கிக் குடுத்தா. நான் ஆ-னு வாயப் பொழந்துக்கிட்டு பாத்துக்கிட்டு இருந்தேன். நல்லவேளை போன ஜென்மத்துல நான் செஞ்ச புண்ணியமமோ என்னவோ வாய்க்குள்ள ஈ போகல.ஹி... ஹி...



அதுல இருந்து அவளோட போகும்போதெல்லாம் ஒரெ உதறலாதான் இருக்கும். என்னைக்கு எவன்கிட்ட அடி வாங்கப் போறோமோனு. நீயும் எங்கம்மாவும் ஒண்ணுடி. கஷ்டப்படறவங்ககிட்டதான் போய் பேரம் பேசுவீங்கனு சொன்னதுக்கு கோனார் நோட்ஸ் கணக்கா விளக்கவுரை சொன்னா. ஒரு தடவ ஒரு கடைல அவ எதோ வாங்கிட்டு இருந்தப்போ ஒருத்தர் பயங்கரமா பேரம் பேசி குறைச்சு வாங்கிட்டுப் போனாராம்.அவர் போனதுக்கப்புறம் அவர்ட்ட வியாபாரம் பண்ணினவரை கூட இருந்தவர் திட்டினாராம். எப்போமே எல்லாரும் பேரம் பேசதான் செய்வாங்க. இதுக்கு தான் நீ ஒரு நூறு ரூபா இருநூறு ரூபா அதிகம் சொல்லி இருக்கணும்னு. அதைக் கேட்டதுல இருந்துதான் இவ இப்படி ஆயிட்டாளாம். பாருங்க ஒவ்வொருத்தரும் நிறைய ஹிஸ்டரி வச்சிருக்காங்க :P.



இப்படியே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்லி வச்சதுல பேரம் பேசறதுனாவே ஒரு பயம் வந்து ஐ மீன் பேரமோஃபோபியா வந்து ஃபிக்சட் ரேட் கடைகங்களுக்கு மட்டுமேப் போயிருந்தேன். பெங்களூர்ல MG ரோடுக்கு ஒரு தடவை ஷாப்பிங் போயிருந்தோம். ரொம்ப ஆசையா ஒரு துப்பட்டா வாங்கினேன். விலை எவ்ளோனு கேட்டதும் நூத்தி இருபது ரூபானு சொல்லிட்டு இன்னொருத்தவங்களுக்கு துணி எடுத்து காட்டப் போயிட்டான். என் ஃப்ரெண்டு பக்கத்துல இருந்து மெதுவா எண்பது ரூபாய்க்கு கேளுடி கேளுடினு இடிக்கறா. எனக்கு பேரமோஃபோபியா வந்து உதற ஆரம்பிச்சு மெல்ல அவகிட்ட நீயே கேளுடி செல்லம்ன்னு நான் சொல்லி முடிக்கறதுக்குள்ள அவன் திரும்பி வந்துட்டான். அவன் நான் என்ன சொல்லுவேனு என்னையப் பாக்கறான் அப்புறம் துப்பட்டாவப் பாக்கறான். இவளா வாயத் தொறக்க மாட்டேங்கறா. எனக்கு ஒரே கடுப்பு. சரி நாமளே டீல் பண்ணிக்கலாம்னு நூறு ரூபாய்க்கு குடுங்கனு மெல்ல கேட்டேன். இருந்தாலும் திட்டிப்புடுவானோனு உள்ளுக்குள்ள ஒரே பயம். அவன் உடனே எதும் பேசாம சரிங்க மேடம்னு சொல்லிட்டான். எனக்கா என் மேலயே கோபம் கோபமா வருது. அடியே அவ சொன்ன மாதிரி எண்பது ரூபாய்க்கு கேட்டிருக்க மாட்டனு. அந்த பக்க திரும்பினா அவ மொற மொறைனு மொறைக்கிறா. அப்புறம் என்ன? நூறு ரூபாயக் குடுத்துட்டு துப்பட்டாவ வாங்கிட்டு வந்துட்டேன். வர வழியெல்லாம் அதுக்கு அர்ச்சனை. நாம வாழ்க்கைல வாங்காத அர்ச்சனையா? ப்பூனு ஊதி தள்ளிக்கிட்டே வந்து சேர்ந்துட்டேன்.



இப்படியாப்பட்ட என்னோட பேரம் பேசற ஹிஸ்டரி தெரியாம என் வீட்டுக்காரர் நாங்க சென்னை வீடு பால் காய்ச்சறதுக்கு முன்னாடி நாள் பூ வாங்கக் கூட்டிட்டுப் போனார். அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தின்றதால அன்னைக்கு பூ விலை எக்கச்சக்கம். ஃபர்ஸ்ட்டே அவர் பேரம் பேசி ஒரு முழத்துக்கு இவ்ளோனு குறைச்சிட்டார். ஆஹா! நம்மாளு என்னமா பேரம் பேசறாருனு சந்தோஷத்துல அப்படியே வேடிக்கைப் பார்த்துட்டு நின்னுட்டு இருந்தேன். அந்தம்மா பூவைக் குடுத்துட்டு மொத்தம் நூத்தி முப்பத்தைஞ்சு ரூபானு சொன்னுச்சு. இவர் அதெல்லாம் முடியாது நூத்திப் பதினைஞ்சு ரூபாதானு மொட்டையா சொன்னார். உடனே அந்தம்மா சாமிப் பூ தொண்ணுத்தி அஞ்சு ரூபா. மல்லிகைப் பூ நாப்பது ரூபா. அப்ப மொத்தம் நூத்தி முப்பத்தைஞ்சு ரூபானு சொன்னுச்சு. நான் மனசுக்குள்ள வேக வேகமா கணக்குப் போட்டேன். 95+40 = 135 தான சரியாதான் அந்தம்மா சொல்லி இருக்குனு சரியா கணக்குப் போட்ட எனக்கு ஒரு சபாஷ் சொல்லிக்கிட்டு ஆமாங்க நூத்தி முப்பத்தைஞ்சு ரூபாதானு சொல்லிட்டேன்.நான் சொன்னதால அந்தம்மா அதுக்கு மேல இறங்காம அப்படியெ பிடிச்சுக்கிச்சு. சரினு அவரும் நூத்தி முப்பத்தைஞ்சு ரூபா குடுத்துட்டு பூ வாங்கிட்டு வந்தார். பைக்ல போகும்போது அடியேய்! நான் நூத்தி பதினைஞ்சுதான் குடுப்பேனு சொல்லிட்டிருக்கேன். நீ நூத்தி முப்பத்தைஞ்சு ரூபாதானு சொல்றன்னு ஆரம்பிச்சார். அய்யோ! நான் அதை சொல்லலைங்க. 95+40 = 135 அப்படினு அந்த அம்மா சொன்ன கணக்கு சரினு சொன்னேன். மத்தபடி வேற எதுவும் சொல்லலைனு அப்பாவியா சொன்னேன். ஆண்டவா! இவள வச்சுக்கிட்டு நான் எப்படி பொழைக்கப் போறேனோனு சொல்லி அன்னைக்கு சிரிச்சவர்தான். என் ஃப்ரெண்ட்ஸ் முதற்கொண்டு எல்லார்ட்டயும் இந்த விஷயத்த சொல்லி சிரிச்சு சிரிச்சு மானத்த வாங்கறார் :(((. நீங்களே சொல்லுங்க. இது என் தப்பா இல்ல என்னோட பேரம்ப்ப்ஃபோபியா பத்தி தெரிஞ்சுக்காம பேரம் பேசக் கூட்டிட்டுப் போன அவரோட தப்பா? அவர் மேல தப்ப வச்சுக்கிட்டு என்னை சொல்லி சொல்லி சிரிக்கறார். என்ன கொடுமை சார் இது?!!

Monday, October 6, 2008

கண்ணீரின் சுவை!!!

பல சமயங்களில்

பல தருணங்களில்

சிந்தியிருந்த போதும்

சுவைத்த தருணங்கள்

சில மட்டுமே...



விழி சிந்தும்

துளி நீருக்குதான்

எத்தனை சுவைகள்!

கோபம்...

ஆனந்தம்...

அதிர்ச்சி...

துக்கம்...

வருத்தம்...

இயலாமை...

காதல்...

நீண்டு செல்லும் பட்டியலாய்…



செய்த தவறுகளை

உணர்ந்து வருந்திய பொழுதுகளில்

என் மீதே எனக்குள் பொங்கிய

கோபத்தின் பயனாய்

சுவைத்த துளிகள்



எதிர்கொண்ட துயரங்கள் மறந்து

பணியிலமர்ந்த என்னைக் கண்டு

சொல்லவொண்ணா ஆனந்தத்தில்

அடக்க இயலாமல் தந்தை

சிந்திய துளிகள்



உடன் திரிந்த தோழி

சுவாசம் மறந்த தருணத்தில்

முதன்முறை நேரில்

மரணம் கண்ட அதிர்ச்சியில்

நில்லாமல் விழியில்

வழிந்த துளிகள்



என் பிம்பம் தானோ

என்றெண்ணி வியந்த

ஆருயிர் நட்பை

கல்லூரியில் பிரிந்த நாளன்று

விவரிக்க இயலா துக்கத்தில்

திரையிட்ட துளிகள்



பொத்திப் பொத்தி

வளர்த்த ஆசைகள்

என்னை மீறி நிறைவேறாமல்

போன தருணங்களில்

இயலாமையில் துடித்துத்

தெறித்த துளிகள்



கோடானு கோடி கொட்டிக் கொடுத்தாலும்

கிடைக்காத சந்தோஷத்தை விட

பெரும் சந்தோஷம் என்றாலும்

இனி தன் வீட்டுப் பெண் இல்லையென்ற

சிறு வருத்தத்தில் தாய் தந்தையர்க்கு

பொங்கிய துளிகள்



இந்நாளிலெல்லாம் எதுவென்றாலும்

அக்கணமே வெளிவராது

உனைக் கண்டதும் கட்டியணைத்து

மனதின் பாரம் குறைய

உன் தோளையும் மார்பையும்

நனைக்கும் துளிகள்



இன்னும் சுவைக்க வேண்டியவை பல

உறுதியாய் வருமென்றாலும்

எண்ணி எண்ணி வியக்கிறேன்

விழி சிந்தும் துளி நீருக்குதான்

எத்தனை சுவைகள்!!

Friday, October 3, 2008

உன்னோடுதான் என் ஜீவன் - III

'நேத்து வாங்கிட்டு வந்த இந்த பச்சக் கலர் ஹேர்பேண்டை எங்கே வைத்தேன்?' என்று பொறுமையில்லாமல் தனது பேக்கின் ஒவ்வொரு ஜிப்பிலும் துழவிக் கொண்டிருந்தாள் கிரி. ஒரு வழியாய் கண்டுபிடித்து எடுத்தவள் அழகாய் படிய வாரியிருந்த நீண்ட பின்னலை புதிய பச்சை வண்ண ஹேர் பேண்டைக் கொண்டு கட்டினாள். பச்சை சுடிதாருக்கென்று முந்தினம் பிரத்தியேகமாய் வாங்கி வந்திருந்த பச்ச வண்ண பொட்டை எடுத்து நெத்தியில் வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் திரும்பி எல்லாம் சரியாய் இருக்கிறதா என்று அழகு பார்த்தவளுக்கு ஏதோ குறைவதுப் போலவே தோன்றியது. எதோ ஒன்றை மறந்து விட்டோமே என்று யோசித்தவளுக்கு 'முன்ன பின்ன இப்படியெல்லாம் பண்ணியிருந்தா தான் தெரியும்' என்ற எண்ணம் வேறு இடையில் வந்து தொலைத்தது. அச்சோ என்று சலித்துக் கொண்டவளுக்கு மின்னல் வேகத்தில் நினைவு வர வேகமாய் சென்று ஃப்ரிட்ஜ்ஜைத் திறந்து முந்தினம் வாங்கி வைத்திருந்த மல்லிகைப் பூவை எடுத்து தலையில் வைத்து மீண்டும் கண்ணாடி முன் நின்று அழகுப் பார்த்தாள். இப்பொழுது திருப்தியானவள் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். ஹாலில் இருந்தபடியே அவளது இந்த புதிய நடவடிக்கைகளை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அம்மாவிடம்

"அம்மா! அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குப் போறேனு நேத்தே சொன்னேனில்ல. அதான் கிளம்பிட்டேன். போயிட்டு வரேன்" என்றபடியே தாயின் பதிலுக்கு காத்திராமல் கிளம்பி விட்டாள்.

'நான் செய்யறது எல்லாம் சரிதானா? ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்த நான் தானா இதுனு எனக்கே சந்தேகமா இருக்கே. ஒரு வாரத்துல எப்படி மாறிப் போயிட்டேன். இந்த மாதிரியெல்லாம் வாழ்க்கைல இருக்கவே மாட்டேனு நினைச்சேன். ஆனா இப்படி என்னை அடியோட மாத்திட்டியேடா... கார்த்திக்...' அவனது பெயரை மனம் உச்சரித்த மாத்திரத்திலேயே அவளுக்கு கன்னம் சூடேறியது. மெலிதாய் புன்னகைத்துக் கொண்டாள். 'நல்லவேளை பக்கத்துல யாரும் இல்ல... இல்லைனா இதென்னடா அதுவா சிரிச்சுக்குதுனு நினைச்சிருப்பாங்க. எனக்குள்ளயும் இப்படி ஒரு மனசு இருக்குனு புரிய வச்சியேடா... இன்னும் உன்னைப் பார்த்ததுக் கூட இல்லயே... கார்த்திக் நீ எப்படிடா இருப்ப' இப்படியே அவனைப் பற்றியே சிந்த்தித்துக் கொண்டே அர்த்தநாரீஸ்வரர் கோவிலை அடைந்தாள். வெளியே இருந்து அவனுடைய மொபைலுக்கு கால் செய்தாள். ரிங் போகும்போது மனம் படபடவென அடித்துக் கொண்டது. ஏனென்றால் ஒன்று முதல் முதலாய் ஒரு ஆணை தனியாய் சந்திக்கப் போகிறோம். இரண்டு கல்லூரிக் காலங்களிலேயே எத்தனையோ பேர் காதலிக்கிறேன் என்று சொன்ன போதெல்லாம் ஒரு போதும் வந்தறியாத இனம் புரியாத உணர்வு. மூன்று இருவரும் ஒத்துக் கொண்டால் இவன்தான் தனது வாழ்க்கைத் துணை. நான்கு வீட்டுக்குத் தெரியாமல் சந்திப்பது. ஐந்து இதுவரை எத்தனையோ நண்பர்களை இதுப் போல் சந்தித்திருந்தாலும் அப்பொழுதெல்லாம் வராத ஒரு குற்ற உணர்வு இப்பொழுது வெகுவாய் பயத்தை தருவது.

இப்படியாக லிஸ்ட் போட்டு முடிப்பதற்குள் கார்த்திக் ஃபோனை எடுத்து விட்டான்.

"ஹே! கிரி. எங்கடா இருக்க?" அவனது இந்தப் பரிவானப் பேச்சில் அனைத்து குற்ற உணர்ச்சியும் அடிபட்டுப் போக அவளால் இன்னதென்று அறியமுடியாத ஒரு விநோதமான உணர்வு ஆட்கொள்ள

"கோவில் வாசல்ல இருக்கேன்" என்றாள்.

"ஓஓ! நான் உள்ள வந்துட்டேனே. சரி. அங்கேயே இரு. நான் வரேன். என்ன கலர் ட்ரெஸ் போட்டிருக்க?"

"க்ரீன். நீங்க?"

"வொயிட்ல ப்ளூ ஸ்ட்ரைப்பெடு"

"சரி வாங்க"

முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாததுப் போல காட்டிக் கொண்டாலும் அவள் மனம் ஏனோ திக் திகென்றிருந்தது. தொலைவில் அவன் சொன்ன உடை அடையாளத்தில் இறங்கி வருவது தெரிந்ததும் மனம் இன்னும் வேகமாய் அதன் புதிய வேலையை செய்ய ஆரம்பித்திருந்தது. அருகில் வர வர இமைக்காமல் அவனது புன்னகை மாறாத முகத்தை உள்வாங்கிக் கொண்டாள். ஏனோ அவள் கண்களுக்கு உல அழகனாய் தெரிந்தான். அருகில் வந்தவன் புன்னகை மாறாமலே

"ஹை கிரி... கார்த்திக்" என்றான்.

பதிலுக்குப் புன்னகைத்தவள் என்னப் பேசுவதென்று தெரியாமல்

"வந்து ரொம்ப நேரம்... உள்ளப் போகலாமா?" என்று உளறினாள்.

"இல்லடா. வந்து பத்து நிமிஷம் தான் ஆகுது. நீ முன்னாடி வந்து வெயிட் பண்ணுவியோனு அவசர அவசரமா வந்தேன். சரி வா போலாம்" என்றபடியே படிகளில் ஏற ஆரம்பித்தான். அவனுக்கு இணையாக ஏற ஆரம்பித்தவளின் படபடப்பைப் புரிந்துக் கொண்டவன்

"கூலா இருடா... என்ன டென்ஷன். நமக்குப் பிடிச்சா ஓகே சொல்லப் போறோம். இல்லைனா நல்ல ஃப்ரெண்ட்ஸா இருப்போம். சரியா?" என்றதும் தனது படபடப்பைப் புரிந்துக் கொண்டானே என்று உள்ளுக்குள் குதூகலித்தாள். என்றாலும் இந்த ஆண்களால் என்றுமே பெண்களின் மனதை சரியாய் புரிந்துக் கொள்ள முடியாது என்று துர்கா அடிக்கடி சொல்லும் கருத்து நினைவிற்கு வந்தது. சரியாக தவறான காரணத்தைக் கண்டுபிடித்து விட்டான் என்று உதட்டை சுழித்தாள். அவளாய் எதேதோ யோசித்துக் கொண்டு அதன் விளைவாய் மாறும் அவள் முகபாவங்களை அவன் ரசித்தபடி முன்னேற அவனுக்கு இணையாய் அவளும் முன்னேற கோவில் பிரகாரத்தை அடைந்தார்கள்.

எதுவும் பேசாமல் அமைதியாய் தரிசனம் முடித்து விட்டு கோவில் மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். அவள் அமைதியாகவே இருக்கவே கார்த்திக் முதலில் பேச்சைத் தொடங்கினான்.

"என்ன முடிவு பண்ணிருக்க கிரி? உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா? ஐ மீன் என் கேரக்டர்ஸ், என்னோட ஃபிசிக்கல் அப்பியரன்ஸ்? உன் மனசுக்கு என்ன தோணுதோ அதை வெளிப்படையா சொல்லு. ஏன்னா இது நம்ம லைஃப். காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டுப் போற விஷயமில்ல. சரியா?" என்று அவன் கேட்டதும் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

"அதே கேள்விய நான் கேக்கறேன். உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?"

"ஹ்ம்ம்ம். எனக்கு என் லைஃப் பீஸ்ஃபுலா போகணும். என் ஃபேமிலியோட அவங்க பொண்ணு மாதிரி இருக்கணும். இதுக்கு உன்னால உத்திரவாதம் தர முடியுமா?"

"என்னால உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. நான் எப்பவும் உண்மையா இருப்பேன். ஆனா என்னோட ஃப்ரீடம்ல நீங்க தலையிடக் கூடாது. ஐ மீன் என்னோட வேலை விஷயங்கள். எனக்கு இருக்கற லட்சியங்கள். இப்படி... இதுக்கு உங்களால உத்திரவாதம் தர முடியுமா?"

அவளது கேள்வியில் புன்னகைத்தவன் "ஷ்யூர்" என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே பதிலாகத் தந்தான். பின் இரு நிமிட அமைதிக்குப் பின்

"உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?" என்றாம் மெதுவாக. பதிலேதும் சொல்லாமல் ஆமாமென்பதுப் போல் மெதுவாய் தலையாட்டினாள்.

கையில் வத்திருந்த கவரைப் பிரித்து அதிலிருந்தப் பூவை அவளிடத்தில் கொடுத்தான். ஆச்சரியமாய் அவனைப் பார்த்தபடியே வாங்கியவளின் கையைப் பிடித்துக் கொண்டவன்

"ஐ லவ் யூ கிரி" என்றான். அய்யோ! இதற்குப் பெயர்தான் வெட்கமா என்று அவளது உள்மனது சந்தோஷக் கூச்சலிட வேறுபுறம் திரும்பியவள்
"மி டூ" என்றாள். சொல்லி முடிப்பதறகுள் அடி வயிற்றில் ஒரு பிரளயமே நடந்திருந்தது.

"என்னடா கோவில்ல ரொமான்ஸ் பண்றானேனு தப்ப எடுத்துக்காத. எனக்கென்னவோ ஃபர்ஸ்ட் உன்கிட்ட பேசினப்பவே நீதான் எனக்குனு மனசு சொல்லுச்சு. அதான் உன்னைக் கோவில்ல வச்சுப் பாக்கணும்னு ஆசைப்பட்டேன். என் வாழ்க்கையும் இந்தக் கோவில்ல வச்சுதான் ஆரம்பமாகணும்னு நினைச்சேன். அதான் இங்கயே சொன்னேன்"

அவனது விளக்கத்தைக் கேட்டதும் சிரிப்பு வந்தது.

"சரி நான் கிளம்பறேன். லேட்டாப் போனா அம்மாவுக்கு ஏதும் டவுட் வந்துடும். நான் ஃபோன் பண்றேன் உங்களுக்கு"

"சரிடா. வா நானும் வரேன். வந்து பஸ் ஏத்தி விடறேன்"

வீட்டிற்கு பயங்கர குஷியோடு வரும் மகளைப் பார்த்ததும் அவளது தாயாருக்கு சந்தேகம் வந்தது. என்றாலும் அவள் கோபப்படும்படியாக எதுவும் கேட்க வேண்டாம் என்று விட்டு விட்டார். பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு அவள் ஓகே சொல்ல வேண்டுமே. இப்பொழுது கேட்கலாமா இப்பொழுது கேட்கலாமா என்றே அவர் பொழுதை ஓட்ட எப்போ கேப்பாங்க எப்போ கேப்பாங்க என்று கிரி பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தாள். ஒருவழியாக மாலையில் அவளுக்கு காஃபி கொடுக்க சென்ற போது பேச்சை ஆரம்பித்தார்.

"மனோ அங்கிள் பையன் கார்த்திக் ஃபோன் பண்ணினாரா எப்போவாச்சும்? நீ பேசினியாடா?"

அப்படியே ஆர்வம் இல்லாதவள் போல் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்

"போன வாரம் ஒரு ரெண்டு தடவைப் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கறேன். ஒரு அஞ்சு நிமிஷம் பேசினாங்க"-தைரியமாய் சொன்னாலும் பொய் சொல்லுகிறோமே என்று உள்ளுக்குள் உதறியது.

"ஓ! சரி அங்கிள் இன்னைக்கு காலைலக் கூட ஃபோன் பண்ணினார். என்ன ஆச்சுனு கேட்டார். என்னடா பதில் சொல்லலாம்? எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லணும். ஒத்து வரலைனா அவங்க வேற இடத்துல பாப்பாங்க இல்ல" கடைசியாய் சொன்னது அவளுக்கு பயத்தைத் தர

"உங்களுக்கு பிடிச்சா எனக்கும் ஓகே அம்மா. உங்க இஷ்டப்படியே செய்ங்க. நீங்க என்ன சொன்னாலும் எனக்கு முழு சம்மதம்" என்று தனக்கும் நடிக்கத் தெரியும் என்று நிரூபித்தாள்.

அவளது வார்த்தைகளைக் கேட்டதும் சந்தோஷம் பிடிபடாமல் "இப்போவே உங்கப்பாட்ட சொல்லி அவருக்கு ஃபோன் பண்ண சொல்றேன்" என்றபடியே அவளது அறையிலிருந்து வெளியேறினார்.

ஆனால் அவளது அப்பா சிவநேசனோ...

(தொடரும்)

Friday, August 29, 2008

சென்னையில் மீண்டும் சுனாமி வரப் போகிறதா?

ரெண்டு வாரமா வாழ்க்கையே ஒரே சோகமயமா இருக்கு :((( ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பொட்டிக் கட்டிட்டு வந்து பெங்களூர்ல வந்து இறங்கினப்ப இருந்து இந்த ரெண்டு வருஷ பெங்களூர் வாழ்க்கையும் கண்ணு முன்னாடி கொசுவர்த்தி சுத்திக்கிட்டே இருக்கு. ஏன் இவ்ளோ ஃபீலிங்கா விட்டுட்டு இருக்கேனு பாக்கறீங்களா?

மேடம்க்கு சென்னை ட்ரான்ஸ்பர் கிடைச்சுடுச்சு. எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர் பெங்களூர்னாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒருத்தர் சென்னைல இருக்கறதால ஆபிஸ்ல டேமேஜர்ட்ட நாலு மாசமா சண்டைப் போட்டு சென்னி மாநகரத்துக்கு புலம் பெயருகிறேன். வர திங்கள் கிழமைல இருந்து சென்னை வாசியாகப் போகிறேன்.

எங்க குட்டி ராஜ்ஜியத்தின் சக ராணிகள் மூணு பேரு(என் ரூமீஸ்), ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி, அங்கிள், அவங்களோட பொண்ணுங்க, வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற எல்லம்மாள் கோவில், எப்போ போனாலும் சொந்தக்காரரப் போல பாசமா விசாரிக்கிற மளிகை கடை அங்கிள், குட்டி உலகம் போல இருக்கற என் ஆபிஸ், ஆபிஸ் ஃப்ரெண்ட்ஸ், க்யூட்டான என்னோட க்யூபிக்கிள், சைக்கிள் ரைடிங்ல சிலிர்க்க வச்ச பனிக் காற்று, குளிருக்கு இதமா கம்பளிய இழுத்துப் போர்த்தி தூங்கற சுகம், காலைல பதினொரு மணி வரைக்கும் நிம்மதியா தூங்கினத் தூக்கம், நேரம் காலம் தெரியாம ஆபிஸில் கழித்த பொழுதுகள்(எல்லாம் ப்ளாக்-காகத்தான்), ப்ரெண்ட்ஸோட ஜாலியா ஊர் சுத்தின பொழுதுகள், கன்னட வாசம் வீசும் BMTC பஸ் பயணங்கள், மாமியார், நாத்தனார், அருண் அண்ணா, மீராக் குட்டி, அன்பு நண்பன் ஜி, பாசமிகு அண்ணன்கள் ராம், அய்யப்பன், அருணா அண்ணி, ஜெயஸ்ரீ குட்டி இப்படி பல விஷயங்களை மிஸ் பண்ணப் போறேனு நினைக்கும்போது அழுகையா வருது.

இம்சை ஸ்டாப் யுவர் சென்டி-னு நீங்க கத்தறது காதுல விழுது. எதுக்கு "சென்னையில் மீண்டும் சுனாமி வரப் போகிறதா?"-ன்னு டைட்டில் வச்சனு நீங்க கேக்கறதும் தெரியுது. ட்ரான்ஸ்பர் கன்ஃபார்ம் ஆனதும் சென்னை நட்புகளுக்கு ஃபோனப் போட்டு சொன்னதுக்கு அவங்க சொன்னது "சோ சுனாமி அகைன் பேக் டு சென்னை"-னு பயங்கரமா ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............ பாருங்க.... அப்பாவி பச்சப் புள்ளயப் பாத்து இப்டில்லாம் சொல்லலாமா? நீங்களே சொல்லுங்க.

Tuesday, August 19, 2008

The 3 mistakes of my life...

ஹி... ஹி... அப்படி என்ன மூணு மிஸ்டேக்ஸ் பண்ணினேன்னு பாக்கறீங்களா? மூணே மூணு மிஸ்டேக்ஸ் மட்டும் பண்ற அளவுக்கு நான் ஒண்ணும் கஞ்சம் பிடிச்சவ இல்ல. எண்ண முடியாத அளவுக்கு சராமரியா மிஸ்டேக்ஸா பண்ணிக் குவிப்போமில்ல... ;))) சரி மேட்டருக்கு வருவோம்.

லாங் லாங் அகோ... ஒன்ஸ் அப்பான் அ டைம் எப்போ பாத்தாலும் புக்கும்(ஒன்லி ஸ்டோரி புக்ஸ்) கையுமாதான் இருப்பேன். சாப்பிடறப்போ படிக்காதனு எங்கம்மாட்ட டெய்லியும் திட்டு வாங்குவேன். அப்படி இருந்த நான் காலெஜ் முடிச்சிட்டு வேலைல சேர்ந்ததும் ஆபிஸ்ல வாங்குற ஆப்புகளுக்கு நடுலயும் என் பணி ப்ளாக் எழுதிக் கிடப்பதே-னு சபதம் எல்லாம் போட்டு என்னை முழுசா ப்ளாக்குக்கு அர்ப்பணிச்சிட்டதால(யாரு அங்க உன்னோடுதான் என் ஜீவன் பார்ட் III எங்கனு கேக்கறது?) புத்தகம் படிக்கறப் பழக்கத்த விட்டுட்டேன். எனக்கே ஷேம் ஷேமாதான் இருக்கு. என்ன பண்றது? இந்த ப்ளாகுக்காக எல்லாத்தையும் தியாகம் பண்ண வேண்டியதா போயிடுச்சு.... ஓகே ஓகே... பேக் டு தி மேட்டர்...

இது ரொம்ப காலத்துக்கு அப்புறமா நான் படிச்ச ஒரு புக். Chetan Bagat-ன்றவரு எழுதின புக். என் டீம்மேட்கிட்ட(ஒரு போஸ்ட்டுக்கு கவிதை எழுதி தந்தாரில்ல. அவரு) இருந்து சுட்டுட்டுப் போய் படிச்சேன். எனக்கு ரொம்ப பிடிச்சது. உங்களோட ஷேர் பண்ணலாம்னுதான் இந்த போஸ்ட்.

அவருக்கு வர தற்கொலை மெயிலோட ஸ்டார்ட் ஆகுது கதை. அந்த மெயில் அனுப்பின பையனைத் தேடிப் போய் ஹாஸ்பிட்டல்ல அவனைக் கண்டுபிடிச்சு அவன்கிட்ட கதையக் கேட்டு எழுதற மாதிரி நாவலை ஃப்ரேம் பண்ணி இருக்காரு. அவனை மீட் பண்ணினதுக்கப்புறம் அவனே கதைய நேரேட் பண்றான்.

அப்பா வேற ஒரு பெண்ணோட போயிட ஸ்நேக்ஸ் பிசினஸ் பண்ற அம்மாவோட ஒரே பையனான கோவிந்த் பட்டேல் தான் கதையோட ஹீரோ. ஆஸ்ட்ரேலியா பீச் அழகிகளைப் பாக்கும்போது கூட மேத்ஸ் கால்குலேஷன்தான் வருதேனு அவனே நொந்துக்கற அளவுக்கு ஒரு maths lover. அவனோட கனவு ஒரு பெரிய பிசினஸ்மேன் ஆகணும்ன்றது. அவனோட உயிர் தோழர்களான இஷானையும் ஓமியையும் கூட்டா வச்சிக்கிட்டு ஒரு கடை திறக்கறான். கிரிக்கட் பைத்தியத்தால மிலிட்டரி வேலையை விட்டுட்டு ஓடி வந்த இஷானோட திருப்திக்காகவும் சில பல பிசினஸ் கால்குலேஷன்ஸாலயும் ஸ்போர்ட்ஸ் கடை ஆரம்பிக்கறாங்க. பிஸினெஸ்-ல வர பணத்தை பெருசா எடுக்காத இஷான், ஓமி, ஓமியோட மாமா கொண்டு வர அரசியல், குஜராத் நிலநடுக்கம், குஜராத் ரயில் குண்டுவெடிப்பு, மேத்ஸ் டியூஷன் எடுக்கப் போயி இஷானோட தங்கைகிட்ட வர காதல், அதனால இஷானோட வர பிரச்சினைகள் இப்படி பல பல காரணங்களால அவனும் அவன் பிஸினெஸும் என்ன ஆகுதுன்றதுதான் கதை. தங்கையோட தனக்கிருந்தக் காதல் தெரிஞ்சதுல இருந்து மூணு வருஷமா இஷான் பேசாம இருந்து ஒரு கட்டத்துல இஷான் "dishonest"-னு இவனை சொன்னதால ரொம்ப மனசு உடைஞ்சுப் போய் தற்கொலை பண்ணிக்கப் போயிடறான். கடைசில நம்ம Chetan அவனைக் கண்டுபிடிச்சு அவனோட ஃப்ரெண்டையும் காதலியையும் அவனோட சேர்த்து வைக்கறார். இதான் கதை.

ரொம்ப நல்லா நகருது. ஆன நடுவுல ஒரு விசிட்டிங் கார்ட காட்டி எல்லாரையும் ஏமாத்திட்டு ஆஸ்ட்ரேலியன் கிரிக்கெட் ப்ளேயர் ஒருத்தரை மீட் பண்றது, அவரோட தயவுல ஆஸ்ட்ரேலியா போயிட்டு வரது, கசமுச மசாலா காதல்னு கொஞ்சம் சினிமாத்தனம். என்னக் காரணத்துக்காக வித்யா அவனை லவ் பண்ண ஆரம்பிக்கறானே தெரியல. அவ அண்ணன் அம்மா அப்பா எல்லாரும் அவன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தா அவன் ரூம் கதவ லாக் பண்ணிட்டு டியூஷன் எடுக்கறதுக்கும் ஒண்ணும் சொல்லாம இருந்திருப்பாங்க. ஆனா நம்ம ஹீரோவுகும் குற்ற உணர்ச்சி ரொம்பவே இருக்கும். எந்த ஒரு உணர்வுக்கும் இடம் குடுக்காம இருந்த நம்ம கோவிந்த எப்படி லவ் பண்ன வச்சுடறா வித்யா. அதான். பொண்ணுங்க நினைச்சா என்ன எதை வேணாலும் சாதிக்க முடியும்.

இந்தக் கதைல என்னைப் பொறுத்தவரைக்கும் கோவிந்த் விட இஷான் தான் ஒரு நல்ல பிஸினஸ்மேன். அக்கவுண்ட்ஸ்லாம் பாத்துக்காட்டியும் கஸ்டமர்ட்ட திறமையாப் பேசி பிஸினஸ் பண்றானில்லையா? அவங்க சொல்ற விலைக்கு இறங்கிப் போய் சேல்ஸ முடிக்கறதை விட நாம சொல்ற விலைக்கு அவங்களை வாங்க வைக்கறதுதான் திறமையான பிசினஸ். என்ன சொல்றீங்க?

சரி. டைம் இருந்தாப் படிங்க. என் வாழ்க்கைல நான் பண்ணின பெரிய மிஸ்டேக் இந்த புக்கப் படிச்சதுதானு நினைக்கறேன். இல்லைனா Chetan-ஓட Five point someone and One night @ the Call center கண்டிப்பாப் படிக்கணும்னு முடிவுப் ப்ண்ணிருப்பேனா?? ;)))

Monday, August 11, 2008

பாட்டு... பாட்டு... பாட்டு...

ஒரு கன்னடப் பாட்டுக்கு வரிகள் எழுதிருக்கேன். எப்படி இருக்குனு சொல்லுங்க...




-------------------------------------------------------
உன்னருகிலே உன்னருகிலே
என் மேகம் மழையாகுதே
உன்னருகிலே உன்னருகிலே
என் இதயம் இசை மீட்டுதே

ஏனிங்கு என் உலகை உருமாற்றினாய்
எங்கெங்கும் உன் பிம்பம் தோன்றுதே
ஏனிந்த பார்வைதான் வீசிச் சென்றாய்
மனமெங்கும் புதுவித வலி தோன்றுதே

இருள் சூழ்ந்த உலகம் போல் நீதானே
எனையிங்கு முழுதாய் சூழ்ந்தாயோ
பனி விழுந்த மலர் போல் நான்தானே
ஒவ்வொரு அணுவிலும் சிலிர்த்தேனோ
என் பார்வையும் உன் மௌனமும்
போர் செய்யும் அனுதினமும்

உன்னருகிலே உன்னருகிலே
என் மேகம் மழையாகுதே

அழகோவியம் உனை நானும் வரைந்திடத்தானே
வானவில்லின் நிறங்களும் உயிர் பெறுமே
கவிதை உனை நானும் படித்திடத்தானே
தமிழின் வார்த்தைகளும் மோட்சம் பெறுமே
உன்னிடமே வரம் கேட்கிறேன்
மௌனத்தினால் கொல்லாதே

உன்னருகிலே உன்னருகிலே
என் மேகம் மழையாகுதே
உன்னருகிலே உன்னருகிலே
என் இதயம் இசை மீட்டுதே

ஏனிங்கு என் உலகை உருமாற்றினாய்
எங்கெங்கும் உன் பிம்பம் தோன்றுதே
ஏனிந்த பார்வைதான் வீசிச் சென்றாய்
மனமெங்கும் புதுவித வலி தோன்றுதே
-------------------------------------------------------

P.S: vl post "Unnoduthaan en jeevan - III" soon...

P.S: This is NOT a translation... Tamil lyrics is written by me :))

Thursday, August 7, 2008

அன்பில் அடை மழைக்காலம்!

எழுத்தறிவித்தவன்
இறைவன் ஆவானாம்!
ஒரே நொடியில்
காதல் மொழியை
கற்றுத் தந்தாயே
நீ என்ன காதல் கடவுளா?!

தேர்வறையில் விடை மறந்த
மாணவியாய் திணறுகிறேன்
உன் பார்வை வினாக்களின்
அர்த்தம் புரியாமல்...

நீ கொஞ்சிக் கொஞ்சி
செல்லமாய் சொல்லும்
சுகத்தை அடையத்தானா
இத்தனை நாளும் தவமிருந்தது
எனது இந்தப் பெயர்?

கண்டும் காணாதது போல்
போகிறேன் என்றெப்பொழுதும்
குற்றம் சாட்டுகிறாயே...
நீ போகாத விஷேசங்களுக்கு
நானும் செல்வதே இல்லை
என்பதை என்றேனும்
உணர்ந்திருக்கிறாயா?

அடை மழையிலும்
விரும்பி நனைகிறேன்
ஜுரத்தில் முனகும்
தருணங்களில் கிடைக்கும்
உன் உள்ளங்கையின்
ஸ்பரிஸத்திற்கு ஏங்கி...

கோடி முறை
மனனம் செய்தாலும்
உனைக் கண்டதும்
அதரங்களிலேயே
புதைந்து விடுகிறதே
என் வார்த்தைகள்!

உன் விரலை
தூரிகையாக்கி
என்னை ஓவியப்
பலகையாக்குகிறாயே!
என்னை
ஓவியம் வரையவா?!
என்னைப் போல்
ஓவியம் வரையவா?!

Tuesday, July 22, 2008

உன்னோடுதான் என் ஜீவன் - II

இரவு உணவு முடிந்து தனது அறைக்கு படியேறி வந்த கிரிஜாவின் மொபைல் சிணுங்கியது. வீட்டு எண்ணைக் கண்டதும் உற்சாகமானவள் அப்படியே பால்கனிக்கு சென்றுப் பேச ஆரம்பித்தாள்.

"சொல்லும்மா"

"என்னடா பண்ணிட்டு இருக்க?"

"இப்போதான் சாப்பிட்டு ரூமுக்குப் போயிட்டு இருந்தேன். சரி காலைலதான பேசினேன். அதுக்குள்ள என்ன மறுபடியும்? என்ன விஷயம்?"

"ஏன் காலைல பேசினா இப்போ உன்கிட்டப் பேசக் கூடாதா?"

"அப்படி இல்லம்மா... எப்போமே இப்படி பண்ணினதில்லையே. அதான் கேட்டேன். ஏதும் முக்கியமான விஷயமோனு.." என்று இழுத்தாள்.

"முக்கியமான விஷயம் தான். எங்களுக்கு இப்போ இருக்கற ஒரே கவலை உன்னைப் பத்திதான். அதை விட வேற என்ன முக்கியமான விஷயம் இருக்கப் போகுது?"

"ஆரம்பிச்சிட்டியாம்மா. எனக்குனு ஆண்டவன் ஒருத்தனை என் தலைல எழுதி வச்சிருப்பான். எப்பன்னும் எழுதி வச்சிருப்பான். அந்த டைம் வந்தா ஆட்டொமேட்டிக்கா எல்லாம் நடக்கும்"

"சரி சரி. இப்போ ஏன் கோபப்படுற? என் கஷ்டத்தை உன்கிட்ட சொல்லாம நான் யார்கிட்ட சொல்லுவேன்" -தாயின் குரலில் தொய்வைக் காணவும் மனம் குழைந்தவள்

"சரி சொல்லுங்கம்மா என்ன விஷயம்?" என்று கேட்டாள்.

"நானும் அப்பாவும் ஒரு பையனை டிசைட் பண்ணி வச்சிருக்கோம்"

எப்பொழுதும் ஒரு பையன் ஜாதகம் பொருந்தி வருகிறது. குடும்பம் நன்றாயிருக்கிறது என்றே சொல்லும் அம்மா இன்று முடிவு செய்து வைத்திருக்கிறோம் என்று சொன்னதிலேயே அவரின் மனநிலையை அவளால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

"ம்ம்ம்"

"அப்பாவோட ஸ்கூல்ல இருந்து ஒண்ணா படிச்சவர் மனோகர்னு அடிக்கடி சொல்லுவாரில்ல. அவரோட பையன் கார்த்திக்தான். பையனும் பெங்களூர்லதான் இருக்காப்படியாம். டி.சி.எஸ்ல வேலை. காலேஜ் எல்லாம் நீ பாப்பனு தெரிஞ்சுதான் எல்லாமே விசாரிச்சு வச்சுட்டேன். கோயம்பத்தூர் பி.எஸ்.ஜி காலேஜ்-ல மெரிட் சீட்ல பி.இ படிச்சிட்டு முடிச்ச உடனே கேம்பஸ்-ல வேலைக்கு போயாச்சாம். ஒரே ஒரு தம்பி. சென்னைல விப்ரோ-ல வேலைல இருக்காப்படியாம். ஜாதகம் பாத்தாச்சு. சூப்பரா பொருந்தி வந்துடுச்சு. அவங்களுக்கு டபுள் ஓகே. சிவநேசன் பொண்ணுன்னா கண்ணை மூடிக்கிட்டு ஓகே சொல்லிடுவேனே-னு மனோ அங்கிள் சொல்லிட்டார். எங்களுக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு. இனி நீ பேசிட்டு ஓகே சொல்றது மட்டும் தான் பாக்கி"

அப்போ பேசிட்டு நான் ஓகேதான் சொல்லணும்னு அம்மா எதிர்பாக்கறாங்க என்று யோசித்தவளை

"என்னடா சத்தமே காணோம்?" என்ற குரல் கலைத்தது.

"இல்லம்மா. நான் பேசணும். பேசிப் பாத்துட்டுதான் எதுவா இருந்தாலும் சொல்லுவேன். நான் ஓகேதான் சொல்வேன்னு ரொம்ப ஹோப் வச்சுக்காதீங்க"

"ரொம்ப நல்ல பையன். பையனைப் பத்தியும் நல்லா விசாரிச்சிட்டோம். சோ உனக்கு கண்டிப்பா பிடிக்கும்னு எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் உன் முடிவுல நான் தலையிடலை. கார்த்திக்கு இந்நேரம் உன் நம்பர் குடுத்திருப்பாங்க. கால் பண்ணுவார். பேசு. கார்த்திக் நம்பரையும் நான் மெசேஜ் பண்ணிடறேன் சரியா?"

"ஹ்ம்ம்ம்.... சரிம்மா" - சுரத்தில்லாமல் தொடர்பைத் துண்டித்து விட்டு அங்கேயே நின்றிருந்தாள்.

'நான் சொன்ன எல்லா கண்டிஷன்ஸ்ம் சேட்டிஸ்ஃபை பண்றானே. எப்படி வேணாம்னு சொல்றது. பேசிப் பாப்போம். அட்லீஸ்ட் ஒரு காரணமாவது கிடைக்காமலா போயிடும். ஆனா அம்மாதான் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க. சோ அவனையே வேணாம்னு சொல்ல வச்சிடணும்' என்று எண்ணியவள் மனது திடீரென்று குண்டைத் தூக்கிப் போட்டது 'எவ்வளவு நாள்தான் இப்படியே ஏமாத்தறது? இப்படியே லேட் பண்ணிட்டேப் போனா கடைசில எவனாச்சும் சிக்கினா போதும்னு அவன் தலைலக் கட்டிட்டாங்கன்னா??' யோசித்துக் கொண்டிருக்கும்போதே மொபைல் மறுபடியும் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தவள் புதிய நம்பரைக் கண்டதும் ஒருவேளை அந்த கார்த்திக்காய் இருக்குமோ என்றெண்ணியபடி எடுத்து "ஹலோ" என்றாள்.

"ஹலோ மேடம்! வி ஆர் காலிங் ஃப்ரம் ஐசிஐசிஐ பேங்க். திஸ் இஸ் ரிகார்டிங் லைஃப்டைம் ஃப்ரீ க்ரெடிட் கார்ட்..." என்று அவன் பேசிக் கொண்டே செல்ல எரிச்சலுற்றவள்

"ஐம் நாட் இன்ட்ரெஸ்டெட். குட் யு ப்ளீஸ் ரிமூவ் மை நேம் ஃப்ரம் யுவர் டேட்டாபேஸ்" என்று முடிப்பதற்குள் எதிர்முனையில் இருந்தவன் கடகடவென சிரித்தான்.

"என்ன மேடம்? உங்களுக்கு யார் இந்த நேரத்துக்கு ஐசிஐசிஐ-ல இருந்து கால் பண்றாங்க?" என்று அவன் கேட்கவும்தான் அவளுக்கு யாரோ தன்னிடம் விளையாடுகிறார்கள் என்ற உண்மை உரைத்தது. உடன் பொங்கிய கோபத்தை வெளிக்காட்டாமல்

"ஹலோ! யார் பேசறீங்க?" என்றாள் வேகமாக.

"நான் கார்த்திக் பேசறேங்க. சாரி. சும்மா விளையாட்டுக்குதான் பேசினேன். தப்பா எடுத்துக்காதீங்க"- அவனது சாரியில் சற்றே கோபம் தணிந்தவள் இவனை எப்படி வேண்டாமென்று சொல்ல வைப்பது என்ற யோசனையில் அமைதியாகவே இருந்தாள்.

"அதான் சாரி சொல்லிட்டேன் இல்ல. இன்னும் ஏன் பேச மாட்டென்றீங்க?"

"இல்ல இல்ல... சொல்லுங்க"

"இன்ஃபோசிஸ்லதானே இருக்கீங்க?"

"ம்ம்ம்"

"எலக்ட்ரானிக் சிட்டி ஆபிஸா?"

"ஹ்ம்ம்ம்"

"நானும் எலக்ட்ரானிக் சிட்டி ஆபிஸ்லதான் இருக்கேன்"

மீட் பண்ணலாம் என்று கேட்பானோ? - கிரி

மீட் பண்ணனும்னு கேப்பேனு எதிர்பார்ப்பாளோ? - கார்த்திக்

"திருச்செங்கோடு வந்திருக்கீங்களா?"

"அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி வருவேன். அப்போ வரதுதான்"

"ஓ! ஓகே! அப்புறம் வேறென்னங்க?"

"அப்புறம் நீங்கதான் சொல்லணும்"

"நான் சொல்றதுக்கும் ஒண்ணுமில்லைங்க"

நான் எதாவது பேசணும்னு எதிர்பாக்கறானோ. இவன்ட்ட போய் என்ன பேசறது? - கிரி

ஏன் எதுமே பேச மாட்டேன்றா. ஷை-யா ஃபீல் பண்றாளோ - கார்த்திக்

"அப்புறம்?" என்றாள் சில நொடிகள் கழித்து.

"அப்புறம் நீங்கதான் சொல்லணும்"

"நான் என்னங்க சொல்லட்டும்? சொல்றதுக்கு ஒண்ணுமில்ல"

"எனக்கும் சொல்றதுக்கும் ஒண்ணுமில்ல"

இப்ப ஏன் இவன் பேச மாட்டேன்றான். ஷை-யா ஃபீல் பண்றானோ? என்னாலயும் எதும் பேச முடியலையே. இதுக்கு முன்னாடி இப்படி யார்ட்டயும் பெசினதில்ல. ஒரு மாதிரி டிஃபரண்ட் ஃபீலா இருக்கே. ஒருவேளை நாமளும் ஷை-யா ஃபீல் பண்றோமா?!!! !~#$%^&*& - கிரி

என்னது இது வாய் மூடாம பேசிட்டே இருப்பேன். பேசறதுக்கு ஒண்ணும் தோண மாட்டேங்குதே. அதை விட வார்த்தை வர மாட்டேங்குதேனே சொல்லலாம். என்ன பண்றது இப்போ?? - கார்த்திக்

"அப்புறம்"- மீண்டும் கிரி ஆரம்பிக்க அட மறுபடியும் அப்புறம் புராணமா என்று உள்ளுக்குள் சலித்தவன் ஒரு முடிவாய்

"இங்க பாருங்க கிரி. இப்படி பேசினா அப்புறம் அப்புறம் தவிர வேற எதையும் பேச மாட்டோம்னு நினைக்கறே. சோ லெட் அஸ் ஃபர்கெட் திஸ் ப்ரோபோஸல் அண்ட் லெட் அஸ் டாக் அஸ் ஃப்ரெண்ட்ஸ்" என்று படபடவென சொல்லி முடித்தான். அவன் சொன்னதும் அவளுக்கு சரியென்றுப் பட்டது.

"சரி. சொல்லுங்க" என்றாள்.

"நான் ரொம்ப ஜாலி டைப்புங்க. அதது அந்தந்த நேரத்துல தான் செய்யணும்ன்றது என் கொள்கை. எனக்கு ஃப்ரெண்ட்ஸ் ஜாஸ்தி. நான் இருக்கற இடம் கலகலனு இருக்கணும்னு விரும்புவேன். அதே டைம் அடுத்தவங்களையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ இப்படிதான் இருக்கணும்னு யாரையும் கம்பெல் பண்ணவும் மாட்டேன். என்னைப் பொறுத்த வரைக்கும் என் எதிர்காலம் எந்த பிரச்சினையும் இல்லாம ஸ்மூத்தா போகணும். தட்ஸ் ஆல்"

"ஹ்ம்ம்ம்... நான் ஜாலி டைப் எல்லாம் இல்ல. ஆனா என் ஃப்ரெண்ட்ஸோட பேரண்ட்ஸோட மட்டும் ஜாலியா இருக்கணும்னு நினைப்பேன். எனக்கு என் கெரியர் தான் ரொம்ப முக்கியம். லைஃப்ல நிறைய அச்சீவ் பண்ணனும். சும்மா பொறந்தோம் வளந்தோம் செத்துப் போனோம்னு ஒரு சராசரியா இல்லாம செய்யற வேலைல நம்ம பேரை பதிய விடணும்ன்றது என் கொள்கை. இதை தவிர எனக்கும் பெருசா எந்த கொள்கையும் இல்ல. என்னைப் பத்தி அவ்ளோதான்"

"ஹ்ம்ம்ம்... எனக்கு வரவங்ககிட்டயும் ரொம்ப எதிர்பார்ப்புகள் இல்ல. என் மேல ரொம்ப பாசமா இருந்தா போதும். என் ஃபேமிலியோட நல்லா மிங்கிள் ஆகணும். அவ்ளோதான்"

"எனக்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கு. என் ஃப்ரீடம்ல தலையிடக் கூடாது. என் வேலை விஷயத்துலயும் தலையிடக் கூடாது. என் ஃபேமிலியோட நல்லா மிங்கிள் ஆகணும்"

"உங்களோட நல்ல ஃப்ரெண்டா இருக்கணும் ரைட்?"

"யெஸ்"

"ஹ்ம்ம்ம்... ஒருவேளை நமக்கு ஃபிக்ஸ் ஆச்சுனா நான் உங்களுக்கு ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டா இருப்பேன். ஓகேவா?"

எதிர்பாராத அவனது இந்த பதிலில் சற்றே விழித்தவள் என்ன சொல்வதென்று அறியாது

"ஹ்ம்ம்ம்ம்" என்றாள்.

"நீங்க எப்போ அடுத்து ஊருக்குப் போறீங்க?"

"நெக்ஸ்ட் வீக் எண்ட்"

"அப்போ அர்த்தநாரீஸ்வரர் கோவில் வருவீங்களா?"

"ஆமாம். ஏன்?"

"இல்லைங்க. நான் ஃபர்ஸ்ட் பாக்கப் போற பொண்ணு நீங்கதான். ஒரு வேளை நீங்களே கூட எனக்கு முடிவாகலாம். என்னவோ தெரியலை. எனக்கு ரொம்ப பிடிச்ச கோவில் உங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. சோ நான் உங்களை மொதல்ல அங்க வச்சுதான் மீட் பண்ணனும்னு இருக்கேன். அதான் எப்போ வரீங்கனு கேட்டேன்"

பரவாயில்லையே. இந்த நேரத்துக்கு வா-ன்னு சொல்லாம நான் போற நேரத்துக்கு வரேனு சொல்றானே! - கிரி

ஏன் இவ்ளோ யோசிக்கறா? ஓகே சொல்லுவாளா? - கார்த்திக்

சில நொடிகள் கழித்து "சரி" என்றாள்.

"சரிங்க. நேரமாச்சு. போய் தூங்குங்க. நாளைக்கு கால் பண்றேன்" என்றவனிடம் வேண்டாமென்று வாய் வரை வந்தாலும் சரியென்றே சொன்னாள்.

'அடுத்தவங்களையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ இப்படிதான் இருக்கணும்னு யாரையும் கம்பெல் பண்ணவும் மாட்டேன்' என்ற கார்த்திக்கின் வார்த்தைகளே காதில் ஒலித்துக் கொண்டிருக்க அட என்ன இது தூங்காமல் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தன்னையே கடிந்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

'லைஃப்ல நிறைய அச்சீவ் பண்ணனும். சும்மா பொறந்தோம் வளந்தோம் செத்துப் போனோம்னு ஒரு சராசரியா இல்லாம செய்யற வேலைல நம்ம பேரை பதிய விடணும்ன்றது என் கொள்கை' என்ற கிரியின் வார்த்தைகளை நினைத்துக் கொண்டிருந்தவன் ரொம்ப பொறுப்பான பொண்ணு போல. வீட்டுல ஒருத்தராவது பொறுப்பா இருக்கணுமில்ல. பாப்போம். என்ன ஆகுதுனு என்றெண்ணியபடியே தூங்க ஆரம்பித்தான்.

தொடரும்...

Thursday, July 17, 2008

உன்னோடுதான் என் ஜீவன் - 1

உங்களுக்கு இன்னைக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ். புதுசா ரெண்டுப் பேரை அறிமுகம் பண்ணி வைக்கப் போறேன். அட அவங்க என் கூட இங்க இல்லைங்க. வாங்க... இப்ப நேரா இன்ஃபோசிஸ் கேம்பஸ்ல மூணாவது பில்டிங் போறோம். ஹ்ம்ம்ம்... ஒரு வழியா வந்துட்டோம். அவசரப்படாதீங்க. க்ரவுண்ட் ப்ளோர்லயே உள்ள நேராப் போய் அந்த டெட் எண்ட்ல அப்டியே ரைட்ல திரும்புங்க. செகண்ட் க்யூபிக்கிள்ல கைல ஏதோ கொஞ்சம் பேப்பர்ஸ் வச்சு அதுல எதோ படிச்சிட்டு இருக்காளே அவளைதான் இப்போ பாக்க வந்தோம். இனிமேல் நான் எதுக்கு? அவளேப் பேசுவா கேளுங்க.

"ஹாய்! நான் கிரிஜா. இன்ஃபோசிஸ்ல தான் வேலை செய்யறேன். அடுத்த அப்ரைசல்ல ப்ரோமோஷன் எதிர்பார்த்துட்டு இருக்கேன். என்னடா ஜாயின் பண்ணி மூணு வருஷத்துலயே ப்ரொமோஷன் கேக்கறேனு பாக்கறீங்களா? பின்ன என்னங்க? காலைல எட்டு மணிக்கு ஆபிஸ் வந்தா நைட்டு எட்டு மணிக்குதான் வீட்டுக்கு கிளம்பறேன். இது வரைக்கும் நாலு அவார்ட்ஸ் வாங்கி இருக்கேன். எட்டு கஸ்டமர் அப்ரிசியேஷன் மெயில்ஸ் வச்சிருக்கேன். ஆபிஸ் வந்துட்டா நோ மெயில்ஸ்... நோ சாட்ஸ்... நோ லாங்க் ப்ரேக்ஸ்... இப்படி இருக்கும்போது இதைக் கூட எதிர்பார்க்கக் கூடாதா என்ன?

ஃபுல்லா ஆபிஸ்லயே இருந்தா வீட்டோட எப்படி டைம் ஸ்பெண்ட் பண்ணுவேனு பாக்கறீங்களா? எங்க வீடுதான் ஈரோடுல இருக்கே. நான் இங்க ஹாஸ்டல்லதான் இருக்கேன். எனக்கு இருக்கற ஒரே ஒரு ஃப்ரெண்ட் துர்காவும் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டா. லவ் மேரேஜ் தான் பண்ணிக்கிட்டா. வீட்டுல பர்மிஷன் குடுக்க மாட்டெனு சொன்ன அப்பா அம்மாட்ட ரெண்டு வருஷமா போராடி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணிக்கிட்டா. அப்பப்பா... அப்போல்லாம் எப்போ பாத்தாலும் சோகமாவே இருப்பா. எனக்கு ஒரே கடுப்பா இருக்கும்.

அப்படி எதுக்கு இந்த கருமம் புடிச்சத செஞ்சு தொலைக்கணும்? சும்மா நம்மளையும் கஷ்டப்படுத்திக்கிட்டு நம்மள சுத்தி இருக்கவங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு?? என் டீம்மேட் தீபி-தான் சொல்லுவா. கல்யாணத்துக்கு முன்னாடி பண்ணினா மட்டும் லவ் இல்ல. கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம லைஃப் பார்ட்னர் மேல வச்சிருக்கற அந்த பாசமும் லவ்தான்னு. ஆனா என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த உலகமே மணி ட்ரிவன் தான். என்ன சொல்றீங்க? லவ் பண்ணும்போது காசு பணம் தெரியாது. கல்யாணத்துக்கப்புறம் அந்த பையன் ஒழுங்கா சம்பாரிச்சுப் போடாம இவள லவ் பண்ணிட்டே இருந்தா மட்டும் போதுமா? அப்போ அவங்களுக்குள்ள அந்த காதல் எத்தனை நாளுக்கு இருக்கும்? சோ லவ்ன்றது எல்லாம் சுத்த பேத்தல். சரி அரேஞ்சுடு மேரேஜே எடுத்துக்கங்க. பொண்ணு வீட்டுல பையன் நல்லா சம்பாரிக்கிறானா நம்ம பொண்ணை கஷ்டப்படாம காப்பத்துவானான்னுதான் முக்கியமா பாக்கறாங்க. பையன் வீட்டுலயும் பொண்ணு வேலைக்கு போகுதா இல்ல வீட்டுல நல்லா செய்வாங்களா இப்படி தான் எதிர்பாக்கறாங்க. இதுலயும் பணம்தான் மொதல்ல வருது.

இதனாலதான் இந்த காதல் கத்திரிக்கா கல்யாணம் இதிலெல்லாம் ரொம்ப வெறுப்பாயிடுச்சு. எங்க வீட்டுலயும் எனக்கு மாப்பிள்ளைப் பாக்கறேனு நச்சிக்கிட்டே இருந்தாங்க. இன்னும் கொஞ்சம் நாள் இன்னும் கொஞ்ச நாள்னு தள்ளிப் போட்டுட்டே வந்தேன். இப்போ எங்கம்மாவ சமாளிக்க முடியல. சரின்னு சொல்லிட்டேன். ஆனா அவங்க பாக்கற மாப்பிள்ளையெல்லாம் இந்த கம்பனிலயா வேணாம் இதுவா படிச்சிருக்கான் அப்போ வேணாம் இப்படி எதாச்சும் சாக்கு சொல்லி தப்பிச்சிட்டு இருக்கேன்.

நம்மளால எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு கண்ணே பொன்னேனு ஒருத்தன் பேத்தறதையெல்லாம் கேட்டுக்கிட்டு குப்பைக் கொட்ட முடியாது. எனக்குனு லைப்ல எவ்வளவோ லட்சியங்கள் இருக்கு. சீக்கிரமா பி.ம், டி.எம்-னு ஆகி என் பேரை இங்க நிலைக்க வைக்கணும். ஹ்ம்ம்ம்... என்னதான் ஆகுதுனு பாப்போம்.

சரிங்க. என் மேனேஜரோட ஒரு மீட்டிங் இருக்கு. நான் கிளம்பறேன். பை"

என்னங்க? அவதான் போயிட்டாளே. இன்னும் ஏன் அங்கேயே நின்னுக்கிட்டு இருக்கீங்க? அப்படியே அந்த இன்ஃபோசிஸ் கேம்பஸ்ல இருந்து வெளியே வந்து அந்த மெயின் ரோடுலயே நேரா வாங்க. ஹ்ம்ம்ம்... ஸ்டாப் ஸ்டாப். இதோ நாலவது இருக்கற டி.சி.எஸ் கேம்பஸ்குள்ள அப்படியே உள்ள வாங்க. நேரா போயி ரைட் சைட் திரும்பினா இதோ கேன்டீன். அங்க ரவுண்டு கட்டி கும்மாளம் போட்டுக்கிட்டு இருக்கற கும்பல்ல பேல் யெல்லோ அண்ட் பேல் க்ரீன் ஸ்டரைப்ஸ் போட்ட சர்ட்-ல இருக்கானே அவன்தான் கார்த்திக். "ஹே கார்த்திக்! இங்க வா. உன்னைப் பாக்கதான் வந்திருக்காங்க". இதோ வந்துட்டான். இனிமேல் உங்களை பேச விட மாட்டான் பாருங்க.

"ஹை ஹை ஹை... நான் தான் கார்த்திக். டி.சி.எஸ்லதான் நாலு வருஷமா வேலை செய்யறேன். நான் பயங்கர ஜாலி டைப்புங்க. லைஃபோட ஒவ்வொரு நிமிஷத்தையும் அணு அணுவா ரசிச்சு வாழணும்ன்றது என் கொள்கை. காலைல ஷார்ப்பா ஒன்பது மணிக்கு ஆபிஸ்ல இருப்பேன். சாயந்திரம் ஷார்ப்பா ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிடுவேன். என் ஃபேமிலி திருச்செங்கோடுல இருக்கு. இங்க ஃப்ரெண்ட்ஸோடதான் தங்கி இருக்கேன். எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ். சாயந்திரம் ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா வெளில சுத்தறது இல்லைனா வீட்டுல எதாவது பண்ணிட்டு இருப்போம். ப்ளாக் படிக்கறது, கதை புக்ஸ், டி.வினு நேரம் போறதே தெரியாது.

நமக்கிருக்கறது ஒரே ஒரு வாழ்க்கை. அதை ஜாலியா சந்தோஷமா வாழ்ந்துட்டு போகனுமில்லையா? அதான் எஞ்சாய் பண்ணிட்டு இருக்கேன். என்னக் கேட்டீங்க? கேர்ள் ஃப்ரெண்டா? நமக்கு அந்த குடுப்பினை எல்லாம் இல்லைங்க. எனக்கு அமைஞ்சிருக்குமா இல்லையானு தெரியலை. ஆனா நான் ட்ரை பண்ணலை. எங்கம்மாதான் எனக்கு உயிர். சின்ன வயசுல இருந்து இந்த ட்ரெஸ் போட்டா நல்லா இருக்கும் இந்த ஸ்கூல்ல படிச்சா நல்லா இருக்கும்னு பாத்து பாத்து செஞ்ச அம்மாவுக்கு தெரியாதா எந்தப் பொண்ணைக் கட்டிக்கிட்டா நான் நல்லா இருப்பேன்னு. அதான் அவங்க சாய்ஸ்ல விடணும்னு ஒரு தீர்மானமா இருக்கேன்.

எனக்கு வரப் போற வைஃபதான் லவ் பண்ணனும். அவள இப்படிப் பாத்துக்கணும் அப்படிப் பாத்துக்கணும்னு பலக் கனவுகள். ராணி மாதிரி உள்ளங்கைல வச்சு தாங்குவேன். எங்கே இருக்காளோ என் தேவதை. எனக்கு ஃபிக்ஸ் ஆனதும் பத்திரிக்கை கொடுக்கறேன். கண்டிப்பா வந்துடுங்க. சரி என் ஃப்ரெண்ட்ஸ் வெயிட் பண்றாங்க. இன்னொரு நாள் பாப்போம். பை"

சரிங்க நாம கிளம்புவோமா? அட! மறந்துப் போயிட்டேன் பாருங்க. இன்னும் நாம பாக்க வேண்டிய ஒருத்தர் இருக்காங்க. அவங்களைப் பாத்துட்டு கிளம்பலாம் சரியா? நேரா உங்க கம்ப்யூட்டர்ல போய் உக்காருங்க. ஒரு IE இல்லைனா Firefox ஓப்பன் பண்ணுங்க. அட்ரஸ்ல http://imsaiarasi.blogspot.com/ -னு டைப் பண்ணுங்க. லோட் ஆயிடுச்சா? இவங்கதாங்க நம்ம இம்சை அரசி. பேருல மட்டும் தாங்க இப்படி. நிஜத்துல ரொம்ப அமைதியான, அடக்க ஒடுக்கமான மொத்தத்துல பிளாட்டினமான பொண்ணு. இவங்க நிஜப் பேரு ஜெயந்தி. இவங்க உங்ககிட்ட எதோ சொல்லணும்னு சொன்னாங்க. வாங்க என்னன்னு கேப்போம்.

"ஹலோ! நான் இம்சை அரசி. சுமார் ஒரு ரெண்டு வருஷமா இந்த ப்ளாக் எழுதறத மெயின் வேலையாவும், சாஃப்ட்வேர் இஞ்சினியர் வேலைய பார்ட் டைம் வேலையாவும் செஞ்சுட்டு இருக்கேன். இப்போ என்ன பண்ணப் போறேனு சொல்லத்தான் உங்களைக் கூப்பிட்டேன். ரெண்டு டோட்டல் ஆப்போசிட் கேரக்டர்ஸா இருக்கற கிரியும், கார்த்திக்கும் சேர்ந்தா என்னாகும்? அப்படி அவங்க சேரணும்னு அவங்க தலையெழுத்த எழுதி வச்சுட்டேன். என்னப் பண்ணப் போறாங்களோ தெரியலை. பொறுத்திருந்துப் பாப்போமே. ஓகேங்க. என் வீட்டுக்கார் கூப்பிடறார். இவங்க கதையப் பாத்துட்டு லாஸ்ட்ல மீட் பண்ணுவோம். cya"

_/\_ தொடரும் _/\_

Monday, July 14, 2008

திண்ணை

ரெண்டு பேரு க்ரூப் சாட் போட்டு நம்ம அரை மணி நேரத்த சாப்பிட்டுட்டு மெதுவா திண்ணையப் பத்தி எதாச்சும் எழுதுங்கோ அக்கா-ன்னு மெதுவா கேட்டாங்க. அவ்ளோ நேரமா பேசிட்டு இருந்ததுல சரி பாசக்கார பயபுள்ளக கேட்டுட்டாங்க. ஸ்ரீ-ன்னு ஒரு பொண்ணு வேற நம்மள tag பண்ணிட்டாங்க. என்ன ஆயிடப் போவுது எழுதிடலாம்னு உக்காந்து யோசிச்சப்போதான் அந்த ஒரு பகிங்கரமான உண்மை படார்னு என்னை அறைஞ்சது. ச்சே! எதுக்கு இந்த பில்ட் அப் இம்சை? ஒழுங்கா சொல்லு...

அட ஆமாங்க... நான் நாலாவது படிச்ச வரைக்கும் ஒரு வீட்டுல குடி இருந்தோம். அந்த வீட்டுல மட்டும்தான் திண்ணை இருந்துச்சு. அதுக்கப்புறம் நாங்க இருந்த எந்த வீட்டுலயும் திண்ணையே இல்ல. என்ன கொடுமை இம்சை இது??? இதை வச்சு எப்படி எழுதறது? இப்படியெல்லாம் மானிட்டரையே பாத்து முறைச்சுட்டே இருந்ததுல அந்த திண்ணைல நடந்த கதையெல்லாம் கொசுவத்தி சுத்திட்டு வந்துச்சு. ஹி... ஹி... நமக்கு தான் நம்ம LKG வயசுல நடந்தது கூட ஞாபகம் இருக்குமே. அப்புறம் எப்டி இது மட்டும் மறந்துப் போகும்?? சரி நம்ம திண்ணைக் கதைக்கு போவோம்.

ஒன்ஸ் அப்பான் எ டைம் லாங் லாங் அகோ நாங்க குடியிருந்த ஒரு வீட்டுல வாசலுக்கு ரெண்டுப் பக்கமும் திண்ணை இருந்துச்சு. ஒரு மாதிரி மெரூன் கலர்ல பெயிண்ட் பண்ணீயிருப்பாங்க. வாசலுக்கு வலதுப் பக்கம் இருக்க திண்ணை நீளமா இருக்கும். இடதுப் பக்கம் இருக்கறது கொஞ்சம் நீளம் கம்மியா இருக்கும். அந்த பெரிய திண்ணைக்கு எனக்கும் என் தம்பிக்கும் சண்டை வரும். காலைல எழுந்து ப்ரஷ் பண்ணினதும் அம்மா தர காபிய வாங்கிகிட்டு வேக வேகமா போவோம் பெரிய திண்ணையப் பிடிக்க. அதுலப் போய் உக்காந்து ஒரு வெற்றி சிரிப்போட பெருமையா காபிக் குடிப்பேன். பாவம் அவன் சின்ன பையன்றதால என்கிட்ட ரொம்ப தோத்துப் போவான்.

எங்க எதிர்த்த வீட்டுல எங்களை மாதிரியே ஒரு அண்ணன் தங்கச்சி இருந்தாங்க. மகேந்திரன், கோமதினு பேரு. கோமதி என் செட்டுப் பொண்ணு. எனக்கும்(என் தம்பி யார்ட்டயும் சண்டை போட மாட்டான்) அவங்க ரெண்டு பேருல யாருக்குமாச்சும் சண்டை வந்து டூ விட்டுக்கிட்டா அவங்க வந்து எங்க திண்ணைல உக்காரக் கூடாது. நாங்க ரெண்டுப் பேரும் அவங்க திண்ணைக்கு போக மாட்டோம். இது எங்க எழுதப்படாத சட்டம். பழம் விடறப்போ யார் போய் பழம் விடறாங்களோ அவங்க வீட்டுத் திண்ணைலதான் உக்காந்து விளையாடுவோம்.

எங்க திண்ணைக்கு அடில ஆத்து மணல் கொட்டி வச்சிருந்தாங்க. அதுல கோவில் கட்டி வீட்டுல இருந்த பிஸ்கட், நொறுக்குத் தீனி எல்லாம் வச்சு சாமிக்குப் படைச்சு விளையாடுவோம். திண்ணை மேல ஒரு பக்கட் தண்ணி வச்சு அது மேல போற கம்பில ஒரு கொட்டாங்குச்சி கட்டின கயிறு விட்டு தண்ணி சேந்தி விளையாடுவோம். அச்சாங்கல், பல்லாங்குழி-னு என் சின்ன வயசு விளையாட்டுக்கெல்லாம் அந்த திண்ணைதான் ப்ளே க்ரவுண்டு.

நான் மண்டிப் போட்டு ஸ்லேட்டுல அ, ஆ... A, B, C, D... எழுதக் கத்துக்கிட்டது எல்லாம் அந்த திண்ணைலதான். ட்ராயிங் கத்துக்க ஆரம்பிச்சப்ப, கோலம் போட ஆசைப்பட்டப்ப எல்லாம் மொதல்ல தேடி ஓடினது அந்த திண்ணையதான். அம்மா திட்டினப்போ, அப்பா சாப்பிட சொல்லி மிரட்டினப்போ தஞ்சம் புகுந்ததும் அந்த திண்ணைகிட்டதான். இப்படி என் ஃப்ரெண்ட் மாதிரி இருந்த திண்ணைய் பிரிஞ்சுப் போனப்போ அப்போ ஒண்ணும் தெரியலை. திரும்ப ஒரு தடவை அந்தப் பக்கம் கோமதியப் பாக்க போக நேர்ந்தப்போ பூட்டியிருந்த அந்த காலி வீட்டுத் திண்ணைலப் போயி கொஞ்ச நேரம் உக்காந்துட்டு வந்தேன். ஏன் அப்படி பண்ணீனேனு இன்னமும் தெரியலை. ஹ்ம்ம்ம்... அதுக்கப்புறம் திண்ணையோட நட்பு எனக்கு வாழ்க்கைல கிடைக்கவே இல்ல.

ஒரு தடவை எங்கம்மாகிட்ட கேட்டேன். "கோமதி வீட்டுல, சாந்தி அக்கா வீட்டுல, சந்திரா அக்கா வீட்டுல, ராஜா அண்ணா வீட்டுலனு எல்லார் வீட்டுலயும் திண்ணை இருக்கே. எதுக்கங்கம்மா வீட்டுக்கு திண்ணை வச்சுக் கட்டி இருக்காங்க?"-னு. அதுக்கு எங்கம்மா "அந்தக் காலத்துல இப்படி சைக்கிள், பைக், கார்னு எதுமே கிடையாது. எல்லாரும் நடந்துதான் போவாங்க. வழில கால் வலிச்சோ இல்ல வேற எதுக்காகவோ உக்காரணும்னு நினைச்சா இடம் வேணும் இல்லையா? அதுக்காகதான் வழிப் போக்கர்கள் உக்காந்து ரெஸ்ட் எடுத்துட்டுப் போறதுக்காக அப்படிக் கட்டினாங்க"-னு சொன்னாங்க.

இந்தக் காலத்துல கண்ணு முன்னாடியே உயிருக்குப் போரடினாக் கூட நமக்கென்னனு கண்டும் காணாமப் போறவங்க வழிப் போக்கர்கள் உக்காரட்டும்னா பாக்கப் போறாங்க? இப்போ திண்ணை வச்சுக் கட்டற பழக்கம் இல்லாமப் போனதுக்கு இதும் கூட ஒரு காரணமா இருக்கலாம். ஹ்ம்ம்ம்...

சரிங்க... கொசுவத்தி சுத்தி சுத்தி கண்ணுல அந்த திண்ணையேதான் தெரியுது. அடுத்த தடவை ஊருக்குப் போகும்போது கண்டிப்பா போய் ஒரு அஞ்சு நிமிஷமாவது உக்காந்திருந்துட்டு வரணும்னு நினைச்சுட்டு இருக்கேன். இப்போ என் முறையா???

இந்தப் பதிவு எழுத சொல்லி க்ரூப் சாட்ல சொன்ன, என்னோட எல்லாப் படைப்புகளையும் ரசிச்சு விமர்சனம் பண்ற, ப்ளாக் ஆரம்பிச்சு பேருக்கு நாலு போஸ்ட் போட்டுட்டு அதுக்கப்புறம் தலை வச்சுப் படுக்காமலே இருக்கும் என் அன்பு தங்கச்சி வைதேகி... திண்ணைப் பதிவு மூலமா ரீஎன்ட்ரி கொடுடா செல்லம் :)))

ரெண்டுப் பேர பண்ணனுமாம். இன்னொருத்தர் யாரைப் பண்றது??? அடடா... அமெரிக்கால உக்காந்துக்கிட்டு அமெரிக்க மாப்பிள்ளை கதை எழுதி திரிஞ்சுட்டு இருக்கற நம்ம ஜி-ய சும்மா விடலாமா? யப்பா பூட்சு போட்ட பூனையாரே. எழுதிடுங்க :)))

Wednesday, July 9, 2008

காதலெனப்படுவது யாதெனில்...

நம்ம காதல் முரசு அருட்பெருங்கோ இருக்காரே.... சும்மாவே இருக்க மாட்டாரு. எதாவது ஒரு சிக்கல்ல மாட்டிக்க வேண்டியது. அப்புறம் நான் நிம்மதியா இருக்கறது பிடிக்காம என்னையும் மாட்டி விட வேண்டியது. இப்ப "காதலெனப்படுவது யாதெனில்"-ன்ற தலைப்புல எதாச்சும் எழுதுங்கனு மாட்டி விட்டுட்டாரு. இவ்வளவு அழகான தலைப்ப வச்சு சோகமா எழுதுனதே பெரிய தப்பு. இதுல என்னை வேற மாட்டி விட்டு இன்னும் பெரிய தப்பு பண்ணிட்டாரு... ஹி... ஹி... நாமதான் எந்த தலைப்புக் கிடைச்சாலும் அதை கொலைப் பண்ணாம விட மாட்டோமில்ல... மேடம் இதை வச்சு ஒரு கவிதை எழுத ட்ரை பண்ணி இருக்காங்க... தேறுமானு சொல்லிட்டுப் போங்கப்பூ....

******************************************



காதலெனப்படுவது யாதெனில்...
இதற்கு மேல் தொடரத்
தெரியவில்லை
உன்னைக் காணும் முன்பு...

எத்தனையோ விளக்கங்கள்
எத்தனையோ செய்திகள்
முன்பு கேட்டிருந்தாலும்
ஒரு புரிதல் இல்லாமலே நான்...

சொல்லவொண்ணா சோகங்களில்
நில்லாமல் வழிந்த விழிநீரில்
மனம் கசிந்து என்னுடன்
உனதிருப்பை உணர்த்திய
உன் உள்ளங்கையின்
மௌன மொழியா காதல்?

சிறு பிள்ளையாய்
அடம் பிடிக்கும் சமயங்களில்
விளையாட்டாய் சண்டையிட்டு
முகம் சுருங்கும் என்னை
ஆதரவாய் இழுத்தணைக்கும்
அணைப்பின் சுகமா காதல்?

கிண்டல்களில் துளிர்க்கும்
கோபங்களை ரசித்து
விடைத்த மூக்கில்
குறும்பாய் நீ வைக்கும்
முத்தத்தின் ஈரப்பதமா காதல்?

எழவும் துணிவற்ற
நலமிழந்த தருணங்களில்
நொடியும் பிரியாமல்
அடைகாக்கும் கோழியாய்
எனை கவனித்த உன்
உள்ளத்தின் தாய்மையா காதல்?

தனித்திருக்கும் பொழுதுகளில்
இதமாய் அணைத்து
காதுமடலில் மெலிதாய்
சூடுப் பரப்பிச் செல்லும்
முத்தங்களின் ஸ்பரிசங்களா காதல்?

உனைப் பிரிகையில்
எனையும் அறியாமல்
துளிர்க்கும் நீரைக் கண்டு
கூடாதென்று எவருமறியாமல்
சொல்லும் உன் சைகையில்
பொதிந்த அரவணைப்பா காதல்?

என்னாயிற்று எனக்கு?
சுருங்க சொல்லாமல்
விவரித்துக் கொண்டிருக்கிறேனே!!
காதலெனப்படுவது யாதெனில்
அன்பே நீதான்.... நீ மட்டும்தான்....
******************************************

அப்பாடா.... ஒரு வழியா தலைல விழுந்த பொறுப்பை சரியாவோ மொக்கையாவோ செஞ்சாச்சு... இனி அடுத்தவங்க தலைல கட்ட வேண்டியதுதான். யார் தலைல கட்டலாம்??? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....................(யோசிக்கிறேன் ;))))

நம்ம அண்ணன் இருக்கும்போது வேற யாரைப் போயி tag பண்றது?? ஹி... ஹி... நம்ம வெண்பா வாத்தி, ஃப்ரொபஷனல் கொரியர், என் அருமை பாசமலர் அண்ணா ஜீவ்ஸை இதை தொடர அழைக்கிறேன்.....

ஸ்ஸ்ஸ்ஸ்..... அப்பா.... சோடா எங்க? சோடா எங்க?? ;)))

Thursday, July 3, 2008

என்னைப் பாத்து நாலுக் கேள்வியா?!!

என்னைப் பாத்து நாலுக் கேள்வியா?!!

நெஜமா நல்லவன்... நீங்க நிஜமாவே நல்லவரா? ஏன் என் மேல இந்த கொலைவெறி? இப்படியெல்லாம் எக்குத்தப்பா கேள்வி கேட்டா பச்சப்புள்ள நான் என்ன செய்வேன்??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............

இருந்தாலும் என்னைய மதிச்சு, என்னோட பதிவுகளை நியாபகம் வச்சு கேள்விக் கேட்ட உங்கப் பாசத்துல புல்லரிச்சுப் போயி இந்தப் பதிவ எழுதி இருக்கேன்.

நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி...

*********************************************

1.உங்களது முதல் நாவல் அச்சுவடிவில் வெளிவந்த தருணம், முதல் பதிவு வெளிவந்த தருணம், விகடன் வரவேற்பறையில் வலைப்பூ அறிமுகம் கண்ட தருணம் இதில் எப்பொழுது நீங்கள் மிக மகிழ்வாக உணர்ந்தீர்கள்? எப்படிப்பட்ட உணர்வுகள் என்று விவரிக்க முடியுமா?

என் நாவல் வெளி வந்த தருணம் எப்படி இருந்ததுனு என்னோட "அழகென்ற சொல்லுக்கு" பதிவுல எழுதி இருந்தேன். எப்படின்னா "முதல் பிரசவம்... மனதளவில் உணர்ந்தேன் பிரசவ வலியை..."

நான் முதல் முதலா சாதம் வச்சப்போ பயங்கர சந்தோஷம். ஹை! நாமளும் சாதம் செய்யறோமேனு. சாதம் வைக்கறது வாழ்க்கைல தினசரி வேலைகள்ல ஒண்ணு. அதை கத்துக்கிட்டப்போ எவ்ளோ சந்தோஷம் இருக்குமோ அந்த சந்தோஷம் தான் என் முதல் பதிவு வெளி வந்த தருணம்.

விகடன்-ல என் வலைப்பூ வந்தப்போ சந்தோஷமா இருந்துச்சு. அட நாம கூட கொஞ்சம் உருப்படியா எழுதறோம் போலனு. அது பத்தாவதுல பாஸ் ஆன சந்தோஷம்.

இதுல எது ரொம்ப மகிழ்வான தருணம்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் :)))

2.என்னதான் பொண்ணுங்க மேக்கப் போட்டு போஸ் கொடுத்தாலும் மேக்கப்பே போடாம மாப்பிள்ளைங்க பெயரை அள்ளிக்கிட்டு போய்டுறாங்க. இதை பற்றி உங்களுக்கு நல்லாவே தெரியும். பொண்ணுங்களுக்கு மேக்கப் அவசியமா? அவசியமென்றால் எப்படி எந்த அளவிற்கு இருக்கலாம்?

\\  என்னதான் பொண்ணுங்க மேக்கப் போட்டு போஸ் கொடுத்தாலும் மேக்கப்பே போடாம மாப்பிள்ளைங்க பெயரை அள்ளிக்கிட்டு போய்டுறாங்க  \\

அப்படியா?!! எனக்கு தெரியவே தெரியாதே... ;)))

ஏனுங்க உங்களுக்கே இது நியாயமா இருக்கா? ஸ்மைல் பண்ணினதால எங்காத்துக்காரர் என்னை விட அழகா இருந்தார்னு எல்லாரும் சொன்னாங்கனுதான் சொன்னேன். ஸ்மைல் பண்ணாம இருந்திருந்தா அவரை விட நான் அழகா இருந்தேனு சொல்லி இருக்கலாம். நான் சொல்ல வந்தது என்னதான் மேக்-அப் பண்ணிக்கிட்டாலும் ஒரு ஸ்மைல் தர அழகுக்கு முன்னாடி அது ஒண்ணுமே இல்லனு. பொண்ணுதான் அழகு மாப்பிள்ளை தான் அழகுனு சொல்ல வரலை :)))

மேக்-அப் கண்டிப்பா அவசியம்தான். ஸ்மைல் தர அழகு மட்டுமே போதும்னாலும் சினிமா-ல ஸ்நேகா-வுக்கோ ரோஜாவுக்கோ மேக்-அப் போடாம ஸ்மைல் மட்டும் பண்ண விட்டிருந்தா அவங்க பெரிய ஹீரோயின் ஆயிருப்பாங்களா?

எங்கேயாவது வெளில போனிங்கனா உங்களோட ட்ரெஸ் மற்றும் லுக்கப் பாத்து தான் மரியாதை கிடைக்கும். பேங்க்ல கோடி கோடியா பணம் வச்சிருந்தாலும் எண்ணெய் வடிஞ்சு ஒரு சாதாரண ட்ரெஸ்-ல போய் பாருங்க அப்போ தெரியும் மேக்-அப்போட அவசியம் :)

அடுத்தவங்க கண்ணை உறுத்தாத அளவுக்கு இருக்கற வரைக்கும் மேக்-அப் ஓகே தான்...

3."வாழ்க்கை சர்க்கரையாய்
இனிக்க வேண்டும்
ஆனால்
சர்க்கரை நோயாய்
மாறி விடக் கூடாது"

இது நீங்கள் பத்தாவது படித்தபோது எழுதிய கவிதை. இப்பொழுது உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? பதில் ஒரு கவிதையாக கூட இருக்கலாம்.

அளவா சர்க்கரை கலந்த பால் மாதிரி இருக்கு. சுத்தமா... டேஸ்ட்டா... திகட்டாம... :)))

4.''நான் வாங்கின பையனுக்கு நான் எதுக்கு ஹெல்ப் பண்ணனும். சோ நோ பாத்திரம் கழுவிங், நோதுணி துவைச்சிங், நோ சமைச்சிங். அவன்தான் எல்லாமே செய்யணும்"

இது நீங்க திருமணத்திற்கு முன் உங்க பதிவுல சொன்ன கமெண்ட் தான். இப்போதைய நிலைமை என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?

நான் எதிர்பார்த்தது எனக்கு வரவர் எவ்வளவு குடுக்கறாங்கனு பாக்காம என்னைப் பாத்து கல்யாணம் பண்ணிக்கணும்னு. அதை மனசுல வச்சுதான் இந்த பதிவு எழுதினேன். இப்போ அதே மாதிரியே நடந்துடுச்சு. சோ நான்தான் காசுக் குடுத்து வாங்கலையே. அப்புறம் எப்படி செய்ய சொல்ல முடியும்???


*********************************************

இப்போ என் turn :)))

அகில உலக வ.வா.ச ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த, இருக்கும் முக்கால்வாசி க்ரூப் பளாக்கிலும் இணைந்திருந்தாலும் அதன் பக்கமே தலை வைத்துப் படுக்காத, ரஞ்சனி மகா என்ற இரண்டு கனவுப் பெண்களின் காதலன், புலி கவுஜ ஸ்பெஷலிஸ்ட், சின்னத்தல ராயல் ராமிடம் இதோ இந்த நான்கு கேள்விகளை முன் வைக்கிறேன்.

1. 'சின்னத்தல'-ன்னு பேரு வாங்கிட்டு வா.வ.சங்கம் பக்கம் எட்டிப் பாக்காமலே இருக்கீங்களே ஏன்?

2. ஒரு பெரிய ப்ரொபஷனல் கொரியர் ச்சே... ப்ரொபஷனல் போட்டோகிராபர் ஆயிட்டு வரதால இந்த கேள்வி. பின்நவீனத்துவமா புலிக் கவுஜ, எலிக் கவுஜனு எழுதற உங்களால பின்நவீனத்துவமா போட்டோ எடுப்பது எப்படினு சொல்ல முடியுமா? அதில் புனைவு ஃபோட்டோ கூட முடியுமா? அப்படியே புனைவு, பின்நவீனத்துவம்னா என்ன அது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னு மூத்தப் பதிவர் நீங்க சொன்னா எங்களை மாதிரி தெரியாத ஆளுங்க தெரிஞ்சுக்குவோம்.

3. காதல் பத்தி என்ன நினைக்கறீங்க? ரஞ்சனி மகாவுடனான பேச்சு வார்த்தை எந்த அளவில் இருக்கு?

4. வலையுலகுக்கு வந்தது மூலம் உங்களுக்கு கிடைச்சதா நினைக்கற விஷயங்கள் என்ன?

பதில் சொல்லுங்கண்ணாவ் :)))))))))

Wednesday, July 2, 2008

ரசிக்க மறந்த பாடல்களில் ஒன்று...

எனக்கு ஒரு பாட்டு பிடிக்கும்னா ஒண்ணு அதோட இசை நல்லா இருக்கணும். அப்புறம் முக்கியமா வரிகள் நல்லா இருக்கணும். இசை நல்லா இல்லைனா கூட வரிகள் நல்லா இருந்தா அது எனக்கு பிடிச்சப் பாட்டா ஆயிடும். ஆனா இந்தப் பாட்டுல ரெண்டுமே ரொம்ப நல்லா இருக்கும். அப்படியே ஒருப் பொண்ண நினைச்சு நினைச்சு உயிர் உருகப் பாடினா எப்படி இருக்குமோ அப்படி இருக்கற பாட்டு.

சிலப் பாட்டு மொக்கையா இருந்தாக் கூட படம் ஹிட் ஆச்சுனா ஓரளவு எல்லாருக்கும் தெரிஞ்சிடும். ஆனா மொக்கைப் படத்துல வர நல்ல பாட்டு கூட அந்த படம் காரணமா வெளில தெரியாமப் போயிடுது. அப்படிப் போன பாட்டுல இதும் ஒண்ணுனு நினைக்கறேன். எத்தனை பேரு இந்தப் பாட்டு பாத்திருப்பீங்கனு தெரியலை. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. படத்துல இல்லாத காதலிக்காக அஜித் உருகி உருகிப் பாடுவார். பாட்டுலதான் ஜோதிகா வருவாங்களேனு கேக்கப்பிடாது. அது ஜோதிகாவோட கனவு.

படம் பாத்தப்போ அஜித் பிரியங்கா திரிவேதியோட ஃப்ளாஷ்பேக் கதைக்காக நான் ரொம்ப ஃபீல் பண்ணினேன். நாம காதலிச்ச உயிர் பிரிஞ்சுப் போனாக் கூட உலகத்துல எங்கேயோ ஒரு மூலைல சந்தோஷமா இருந்தா சரினு விட்டுடலாம். ஆனா உலகத்த விட்டேப் போனா எவ்ளோப் பெரியக் கொடுமை. அதும் கண்ணு முன்னாடியேனா?? அதனால இந்தப் படத்துல அஜித் கேரக்டர பார்த்தா பாவமா இருந்துச்சு. ஆனா கடைசில அந்த பிரியா-வ விட்டுட்டேன் இந்த பிரியா-வ விட மாட்டேன்னு சொல்லி ஜோதிகாவா கூட்டிட்டுப் போனப்போ கடுப்பாயிடுச்சு. சரி யார் எப்படி போனா நமக்கென்னங்க? பாட்டு எப்படி இருக்குனு கொஞ்சம் சொல்லிட்டு போங்க... :))))


Get Your Own Hindi Songs Player at Music Plugin

நீ பார்க்கின்றாய் என்னுள்ளே மின்னல் தொடும் உணர்வு
நீ பேசினாய் என்னுள்ளே தென்றல் தொடும் உணர்வு
ஒரே முறை நீ கண் பாரடி
அதில் கண்டேன் நான் தாயின் மடி
காதல் என்று சொன்னாலே தியானமல்லவா
உன்னை எண்ணி நானும் தான் தியானம் செய்யவா

(நீ பார்க்கின்றாய்)

நீயும் நடந்தால் என்னைக் கடந்தால்
ஒரு பூங்காவே என் மீது மோதும் சுகம்
கண்ணை அசைத்தால் என்னை இசைத்தால்
ஒரு பனிப்பாறை என்னுள்ளே தோன்றும் கனம்
உன்னை சுற்றிடும் விண் கலமாகிறேன்
உந்தன் பார்வையில் நான் வளமாகிறேன்
நீ ஒற்றை ரோஜா தந்தால் அதில் உலகப் பூவின் வாசம்
நீ ஓரக் கண்ணில் பார்த்தால் சில லட்சம் மின்னல் வீசும்
அன்பே அன்பே நீ தரை வானவில்
உன்னைப் பாடும் நான் தவப் பூங்குயில்

(நீ பார்க்கின்றாய்)

உந்தன் விழிக்குள் என்னை அடைத்தால்
ஒரு அழகான சிறைச்சாலை இதுவல்லவா
உன்னைப் பிரிந்தால் எந்தன் விழிக்குள்
ஒரு முந்நூறு முள் வந்து நடமாடுதே
கொன்று விட்டதே உன் ஒரு பார்வையே
அன்பு செய்திடு என் அதிகாரியே
நீ பூமிப் பந்தில் வந்து நடமாடும் குட்டி சொர்க்கம்

நீ கல்லில் அல்ல பெண்ணே கனியாலே செய்த சிற்பம்
உந்தன் கண்கள் அது ஒரு அங்குலம்
ஆனால் அதில் என் உயிர் சங்கமம்

(நீ பார்க்கின்றாய்)

Tuesday, July 1, 2008

ஐயகோ! பாவம் செய்து விட்டேனே!!

உயிரைக் கொல்றது பாவமாங்க?? என் மனசு என்னவோ பாவம்தானு அடிச்சு சொல்லுது. ஆனா சில நேரங்கள்ல அந்த மனசு எங்கதான் ஓடி ஒளிஞ்சுக்குதுனே தெரியலை. ஹ்ம்ம்ம் :(((

நான் ஸ்கூல் படிக்கும்போது ஹிஸ்டரி புக்ல சமணத் துறவிகள் பத்திப் படிச்சிருக்கேன். அவங்க நடக்கும்போது நடக்கற பாதையை மயிலிறகால கூட்டிக்கிட்டே போவாங்களாம். அதுக்கு என்ன காரணம்னா அவங்க கால் பட்டு வழில இருக்கற எறும்பு, பூச்சி மாதிரி உயிரினங்கள் செத்துப் போயிடக்கூடாதுனு அப்டி பண்ணுவாங்களாம். அப்போ ச்சே! எவ்ளோ க்ரேட் அவங்க-னு தோணுச்சு. அப்போ நாமளும் எந்த உயிரையும் கொல்லக் கூடாதுனு முடிவுப் பண்ணினேன். என்னை எறும்பு கடிச்சாக் கூட அதைப் பிடிச்சு தூரப் போட ஆரம்பிச்சேன். இப்டிலாம் நல்லப் பொண்ணா மாறரதுக்கு பயங்கரமா ட்ரை பண்ணிட்டு இருந்தாலும் ஞாயித்துக் கிழமையானா அம்மா வைக்கற கோழிக் குழம்பு வாசம் கும்முனு வந்து அப்பாவிப் பொண்ணு என்னைய ஒரு உயிரைக் கொன்ன பாவியா மாத்திடும். ஹ்ம்ம்ம். நாமளா கொன்னோம்? இல்லையே.... செத்துப் போனத சாப்பிடறதால நம்மள பாவம் பிடிக்காதுனு சமாதானப்படுத்திக்குவேன்.

அப்போ நான் டியூஷன் படிச்ச சார் என்கிட்ட பயங்கரமா ஆர்க்யூ பண்ணுவார். ஒரு உயிரக் கொன்னு சாப்பிடறியே பாவமில்லையானு. ஹி... ஹி... நான் எங்க சார் கொன்னேன்? கடைல கொன்னு வச்சுடறாங்க. அது வேஸ்ட்டாப் போகக் கூடாதேன்ற ஒரு நல்ல எண்ணத்துலதான் நான் சாப்பிட்டுட்டு இருக்கேன். வேற எந்த ஒரு காரணமும் கிடையாதுனு சொல்லி சமாளிச்சேன். இப்படி சிக்கன் சாப்பிடறதுக்கு மட்டும் ஒரு காரணத்தைக் கண்டுபிடிச்சேன். மத்தபடி உயிரை வதைக்கா கொள்கைய கடைபிடிச்சுட்டுதான் இருந்தேன். அப்போதான் என் கொள்கைக்கு இன்னொரு சோதனை வந்துச்சு.

என் இம்சை தாங்க முடியாம எங்கப்பா என்னைக் கொண்டுப் போயி ஹாஸ்டல்ல தள்ளிட்டார். ஹாஸ்டல் பொண்ணுங்கன்னாவே உங்களுக்கெல்லாம் ஃபர்ஸ்ட் என்ன ஞாபகத்துக்கு வருமோத் தெரியாது. எனக்கு டக்குனு இந்த பேன் தான் ஞாபகத்துக்கு வரும். அது நாள் வரைக்கும் நான் கஷ்டப்பட்டு சாப்பிட்டு சேர்த்து வச்ச நாலு சொட்டு ரத்தத்தையும் மனசாட்சியே இல்லாம அதும் என் தலைல இருந்துகிட்டே குடிச்சுதுன்னா அதுக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கும் பாருங்களேன். சரி ரெண்டாவது முறையா நம்ம கொள்கைய தளர்த்திக்குவோம்னு முடிவு பண்ணினேன்.

காலேஜ் முடிஞ்சு சென்னைல ப்ராஜக்ட்ன்ற பேருல குப்பை கொட்ட வந்தப்போ நாங்க நாலு பேரு சேர்ந்து வீடு எடுத்து தங்கி இருந்தோம். நாலு பேருல எனக்குதான் ஓரளவு சமையல் தெரியும். அதையே பயங்கரமா பிட்ட போட்டு போட்டு சீஃப் குக் ரேஞ்சுக்கு எனக்கு மரியாதை குடுக்க வச்சிட்டேன். ஒரு நாள் சிக்கன் ஆசை வந்து சரி நாமளே செய்வோம்னு ஒரு தைரியத்துல களத்துல இறங்கிட்டோம். நானும் என்னைப் போல வீரமுள்ள இன்னொருத்தியும் சிக்கன் வாங்கலாம்னு கடைக்கு கிளம்பினோம். அரைக் கிலோ சிக்கந்னு சொல்லிட்டு வெயிட் பண்ணிட்டிருந்தப்போதான் அந்த கொடூரமான காட்சியப் பாத்தேன். கோழியோட கழுத்த கீறி விட்டு பாதியா வெட்டி வச்சிருந்த குடத்துக்குள்ள விட்டுட்டாங்க. அது துடி துடினு துடிச்சு இறக்கைய படபடனு அடிச்சுட்டு இருந்துச்சு. அதைப் பாக்க பாக்க எனக்கு ஹார்ட் பீட்டு எகிறுது. என் கழுத்தை அறுத்து விட்ட மாதிரி ஒரு ஃபீலிங். அதோட இறக்கை அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சிவப்பு கலர்ல மாறி கொஞ்ச கொஞ்சமா அதோட துடிப்பு நின்னுடுச்சு. எனக்கு மனசே ஆறலை. ச்சே! இப்படியா ஒரு உயிரை துடிக்க துடிக்க கொன்னு அதை சாப்பிட்டு நம்ம உடம்ப வளக்கணும்னு ஒரே வருத்தம். எப்படியோ கயமுயானு போட்டு சிக்கன் செஞ்சுட்டோம். ஆனா சாப்பிடப் போனப்போ அந்தக் கோழி இறக்கைய அடிச்சுட்டு துடிச்சதே ஞாபகம் வந்து நான் சாப்பிடவே இல்ல. அதுக்கப்புறம் ரொம்ப நாளா சாப்பிடாமலே இருந்தேன். திருப்பி பெங்களூரு வந்ததுக்கப்புறம் ரொம்ப நாள் கழிச்சுதான் அதை மறந்துப் போனதாலோ என்னவோ சாப்பிட ஆரம்பிச்சேன். இப்படியா என் பாவ மூட்டை ஏறிட்டே போறப்போதான் அடுத்த ஒரு கொடுமை நடந்துச்சு.

பெங்களூருல எங்க ரூம் சூப்பரா இருக்கும். திங்க்ஸ் வச்ச இடம் போக மீதி இடம் படுக்கறதுக்கு மட்டும்தான் இருக்கும். இப்படியாப்பட்ட எங்க குட்டி வசந்த மாளிகைல நாங்க ராஜ்ஜியம் பண்ணிட்டிருந்தப்போதான் வில்லனாட்டம் வந்து சேந்துச்சுங்க இந்த கரப்பான் பூச்சிங்க. எனக்கு மொதல்ல எல்லாம் கொள்கை ஞாபகத்துக்கு வந்து அடிக்காம விட்டுடுவேன். கொஞ்ச நாள் போகப் போக அதுங்களோட அட்டூழியம் தாங்க முடியலை. காய், பழம் எல்லாம் கடிச்சு வச்சுட வேண்டியது. துணிங்களுக்குள்ளப் போயி சுகமா தூங்க வேண்டியது. இப்படியே நாசம் பண்ண ஆரம்பிச்சா விடுவோமா? எங்களோட வீரவாளை அட அதாங்க துடைப்பத்தை எடுத்துட்டுப் போருக்குப் புறப்பட்டோம். எதிரிங்களை கண்டுபிடிச்சு துரத்தி துரத்தி அடிச்சுக் கொன்னோம். வேற வழி? கொளகையாவது மண்ணாவது???

தலைல பேனும், வீட்டுல கரப்பான் பூச்சி, எலித் தொல்லையும் இருந்திருந்தா திருவள்ளுவரே ஏன்டா உயிரைக் கொல்வது பாவம்னு எழுதினோம்னு அவரோட 133 அடி சிலை உச்சில இருந்து டகால்னு கடலுக்குள்ள விழுந்து சூசைட் பண்ணிட்டிருந்திருப்பாரு.

என் வீட்டுக்கார் சுத்த சைவம். egg content இருக்கற சாக்லேட் கூட சாப்பிட மாட்டார். என்கிட்ட அடுத்த உயிரைக் கொன்னு சாப்பிடறதுனு சொல்லுவார். ஆனா நான் கண்டுக்கவே மாட்டேன். ஒரு நாள் ரெண்டு பேரும் அனிமல் ப்ளேனட் சேனல் பாத்துட்டு இருந்தோம். ஒரு சிலந்தி வலைல ஒரு தேள் மாட்டிக்கிச்சு. அந்த சிலந்தி அதைக் கொட்டிக் கொட்டி கொல்ல ஆரம்பிச்சது. என்னால பாக்க முடியல. அய்யோ அது உயிரோட இருக்கைலயே அதை அப்டி கொட்டி கொட்டி சாப்பிட ஆரம்பிச்சா அந்த தேளுக்கு எப்படி இருக்கும்னு சொல்லிக்கிட்டே கண்ணை இறுக்க மூடிக்கிட்டு சேனலை மாத்துங்கனு சொன்னேன். உடனே வேகமா என்கிட்டத் திரும்பி அப்போ கோழி உயிரோட இருக்கும்போதே அதோட கழுத்த அறுத்தா அதுக்கு எப்படி இருக்கும்னு கேட்டாரேப் பாக்கலாம். நான் எதுமே பேசாம நைசா எஸ் ஆகப் பாத்தேன். பதில சொல்லுனு சொல்லி அவர் சிரிக்கவும் எனக்கு சுறுசுறுனு ஏறுச்சு. இங்கப் பாருங்க. சிங்கம் புல்ல சாப்பிடாது. அது விலங்குகளை வேட்டையாடி சாப்பிடணும்ன்றதுதான் அதுக்கு எழுதி வச்சிருக்கு. அப்படி பாவம் பாத்து சாப்பிடாம விட்டா அது செத்துப் போயிடும். அதுக்காக சிங்கம் பாவம் செய்யுதுனு அர்த்தம் இல்ல. அதே மாதிரிதான் நாமளும் மாமிசப் பட்சிணிகள். சோ நாம சாப்பிடறது ஒண்ணும் தப்பில்ல அப்டி இப்டினு ஏதேதோ உளறி எஸ் ஆயிட்டேன்.

சைவமா மாறிடலாம்னு நானும் எவ்வளவோ ட்ரை பண்ணிட்டு இருக்கேன். ஆனா முடிய மாட்டேன்றது. என்னதான் சொல்லுங்க. இந்த பெப்பர் சிக்கன நினைச்சாலே நாக்கு ஊறுது. என்னதான் சமாதானத்துக்கு காரணம் சொல்லிக்கிட்டாலும் மனசு இப்பொல்லாம் கஷ்டமா இருக்கு. கூடிய சீக்கிரம் வெஜிடெரியனா மாறிடுவேன்னு நம்பிட்டு இருக்கேன் :)))

Monday, June 30, 2008

காதல் நீதானா?!! - II

எந்தவித சலனமும் காட்டாமல் அவனது கைகளில் இருந்து பத்திரிக்கையை வாங்கியவள் முகத்தில் மெலிதாய் புன்னகை விரிய ஆவலுடன் பிரித்துப் பார்த்தாள்.

"காலம் தோறும் கவிதைகளில் உதிர்ந்து கிடக்கும் காதல் இறகுகளையும் வாழ்வின் கனவுகளையும் கோர்த்துக்கொண்டு

மைதிலி ஸ்ரீதர் ஒரு சிறகாகவும்

மகேஷ் ராஜசேகர் மறு சிறகாகவும் மாறிட

ஒரு காதல் பறவை ஜனிக்க இருக்கிறது.

காதல் பயணம் துவங்கும் இப்புதிய பறவையினை வரவேற்று சிறகுகளை வாழ்த்த

இடம் : கொங்கு திருமண மண்டபம், ஈரோடு
நாள் : ஆகஸ்ட் 21, 2008 பகல் 12 முதல் 3 வரை
காற்றுவெளியின் கடைசித்துளி வரை
எங்கள் பயணம் கவிதையென இனித்திட
உங்கள் வருகையினாலும் வாழ்த்துகளாலும்
வலிமை பெற்றுக்கொள்ள அழைக்கும்…

இரு சிறகுகள்,
மைதிலி & மகேஷ்" ( நன்றி அருட்பெருங்கோ)


"ஹேய்ய்ய்ய்ய்!!! ரொம்ப சூப்பரா இருக்குடா... ப்ளீஸ்டா எனக்கு கொஞ்சம் பத்திரிக்கை குடு. ப்ளீஸ் ப்ளீஸ்... என் ஃப்ரெண்ட்ஸ்க்கு குடுக்க மட்டும் ப்ளீஸ்" என்று அவனிடம் கெஞ்சினாள்.

"ரொம்ப ப்ளீஸ் போடாத... நீ என்ன சொன்னாலும் தர மாட்டேன். மேடம் பெருசா இங்லிபிஷ்ல தான் அடிப்பேனு ஓவரா டயலாகெல்லாம் விட்டீங்க. இப்போ மட்டு என்ன வந்துச்சாம்??"

"ஏ ப்ளீஸ்! எங்க ஆபிஸ்ல இருக்கற சப்பாத்திங்களுக்கெல்லாமும் தரணும்னுதான் ஒரே இதா இங்க்லிஷ்லயே போட்டுடலாம்னு சொன்னேன். நீ என்னன்னா ஓவரா பந்தா விடற. சரி போ. எனக்கொண்ணும் வேணாம்" என்று அவள் கோபித்துக் கொள்ள

"கோவிச்சுக்கிட்டா நான் தந்துடுவேனு நினைக்கறியா? ஹி... ஹி..." என்று சிரித்தான்.

"இரு இப்போவே அத்தைக்கு ஃபோன் பண்ணி சொல்றேன்" என்று அவளது ஃபோனை எடுக்க

"அய்யய்யோ! அம்மா தாயே... மாமியாரும் மருமகளும் சேந்து பண்ற கொடுமை என்னால தாங்க முடியலை. தரேன் தரேன். நீ அடிச்சதுல ஒரு இருபது பத்திரிக்கை எனக்குக் குடு. ஆபிஸ்ல கொடுக்கறதுக்கு" என்று அவளது ஃபோனை வாங்கி வைத்தான்.

"ஹ்ம்ம்ம்ம்.... அப்படி வா வழிக்கு என்று புன்னகைத்தாள்.

இரண்டு மாதங்கள் கழித்து...

அறையெங்கும் பூவாசத்தில் மிதந்திருக்க அதன் வாசனையை அனுபவித்தாலும் இதயம் ஏனோ ஒருவித பயத்தில் வேகமாக அடித்துக் கொண்டது மைதிலிக்கு. முதல் பார்வையிலேயே பிடித்துப் போனவன்தான். பழகிய பின் வெகு அழகாய் தன்னுள் காதலை ஒரு பூப்போல மலரச் செய்தவன்தான். காதலை வெகு இயல்பாய் எடுத்து சொல்லி தனது காதலை அங்கீகரித்தவன்தான். திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து அவளை வீட்டில் பேச வைத்தவன்தான். எங்கும் எப்போதும் தன்னை நிழல் போலத் தொடர்ந்தவன்தான். நேற்றுவரை ஒரு குறும்புப் பெண்ணாய் சுற்றிக் கொண்டிருந்தவளை வெட்கச் செய்து அமைதியாய் இன்று காலையில் கரம் பிடித்தவன்தான். என்றாலும் இன்று புதிதாய் பார்ப்பதுப் போல ஒரு இனம் புரியாத பயம் மனதைப் பிசைகிறதே...

அருகில் நிழலாட மெல்ல நிமிர்ந்துப் பார்த்தாள். அவள் முன் வந்து நின்றவன் அவளைப் பார்த்து அழகாய் ஒரு புன்னகையை தந்தான். அவளுக்கு ஏனோ அடிவயிற்றைப் பிசைந்தது. என்னவன்... எனக்கே எனக்கானவன்... என் இனிய காதலன்... என் அன்பு கணவன்... என்ற எண்ணவோட்டத்தில் கர்வம் மேலிட குனிந்து கழுத்தில் கிடந்த தாலிக் கயிற்றைப் பார்த்தாள்.

"என்னாச்சு என் செல்லக்குட்டிக்கு?" என்று அவன் வழக்கமாய் கேட்கும் தொனியில் கேட்கவும் இயல்புக்கு வந்தவள் அவனை இழுத்து அருகில் உட்கார வைத்துக் கொண்டாள்.

"உன் சுவாசம்
காற்றில் கலப்பதில் கூட
உடன்பாடில்லை எனக்கு...
எனக்கு மட்டும்
எனக்கே எனக்கு மட்டுமே
வேண்டும் உனது மூச்சுக்காற்று" என்றபடியே கைகளை மாலையாக்கி அவனதுக் கழுத்தில் போட்டாள்.

"ஓ! அப்படியா? அப்போ உனக்கு ஆக்சிஜன் வேண்டாமா? கார்பன்-டை-ஆக்ஸைடுதான் வேணுமா?" என்று அவன் கிண்டலாய் சிரிக்க வந்தக் கோபத்தில் மூக்கு விடைக்க அவனைப் பின் தள்ளிவிட்டு எழுந்து சென்று சற்றுத் தொலைவில் இருந்த நாற்காலியில் சென்றமர்ந்தாள்.

"டேய்! சும்மா விளையாட்டுக்கு சொன்னேண்டா" என்று அவளிடம் சென்று அவன் சமாதானப்படுத்த முயல அவனது கைகளைத் தட்டி விட்டாள்.

"சரி சரி.... என்னை பாத்ததுமே பிடிச்சிடுச்சுனு சொன்னியே. அது ஏனு கல்யாணத்துக்கப்புறம் சொல்றேனு சொன்னியே. இப்போ சொல்லு" என்றுக் கேட்டான். உடனே அவனை முதலில் பார்த்த அந்த தருணம் நினைவுக்கு வர அப்படியே அந்த நிமிடங்களுக்குப் பயணித்தவள்

"நீ அங்க இருந்த ஒரு மரத்தோட பூவெல்லாம் மிதிக்காம கேப்ல நடந்து வந்தியா. அதைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சது. நீ ரொம்ப சாஃப்ட் ஹார்ட்டட்னு தோணுச்சு"

"ஓ அப்போவே என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா?"

"அய்! ஆசையப் பாரு. அதெல்லாம் ஒண்ணுமில்ல. அப்போ உன்னை பிடிச்சது அவ்ளோதான். ஆனா பழகி ரொம்ப நாள் கழிச்சுதான் லவ் பண்ண ஆரம்பிச்சேன்"

"ஹ்ம்ம்ம்! நல்லா ஏமந்துட்டியா?" என்று சத்தம் போட்டு சிரித்தவனை கேள்வியாய் பார்த்தாள்.

"ஹி... ஹி... அந்த பூ ஷூ-ல நல்லா ஒட்டிக்கும். ஆபிஸ்ல நடக்கறப்ப ஃப்ளோர்ல எல்லாம் விழும். அதான் அதை மிதிக்காம நடந்தேன். அதைப் பாத்து நீ ஏமாந்துட்ட... ஹாஹாஹா" என்று அவன் வயிறு குலுங்க சிரிக்க

"யூயூயூ" என்றபடி அவனை அவள் கண்டபடி அடிக்க

"அப்பாடா... எப்படியோ கேஷுவல் ஆயிட்டயா?" என்றபடியே அவள் கைகளைப் பிடித்து அடிப்பதை தடுத்தவன்

"அப்படியே பூ மேல நான் நடந்துப் போவேனு நினைக்கறயாடி நீ?" என்று முகத்தை சீரியசாய் வைத்து அவன் கேட்க தனது செயலை எண்ணி வருந்தியவள் தாள முடியாமல் அவனை இழுத்து அணைத்தாள்.

சுபம்...

பி.கு: இது என்னுடைய கதையா என்று பலர் கேட்பதால் இந்த பி.கு. என்னுடையது purely arranged marriage. இதில் வரும் எந்த ஒரு சம்பவமும் என்னுடையது அல்ல.

பி.குவிற்கு பி.கு: நான் எழுதும் எந்த ஒரு கதையும் என்னுடைய சொந்த கதை இல்லை. என்னைப் பொறுத்தவரை "Personal should be personal". சோ ப்ளாக்ல எல்லாம் எழுத மாட்டேன் :)))

Tuesday, June 24, 2008

காதல் நீதானா?!! - I

காலை ஆறு மணி. "துதிப்போர்க்கு வல்வினைப்போம்..." அன்று ஆரம்பித்த மொபைல் ஃபோனை தலையணையடியில் கைவிட்டு துழாவி எடுத்த மைதிலி கண் திறக்காமலே அலாரத்தை நிறுத்தினாள். ஒரு பத்து நிமிடங்கள் புரண்டு புரண்டுப் படுத்தவளுக்கு அன்று ஒன்பது மணிக்கு ஆன்சைட்டுக்கு பண்ண வேண்டிய கால் நினைவுக்கு வர வேகமாக எழுந்தாள். படபடவென்று காலை வேலைகளை முடித்து குளித்து கிளம்பியவள் ஆபிஸ் பஸ்ஸை பிடிக்க வேண்டுமென்று அறைத் தோழியுடன் வேகமாக தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். வழியில் இருந்த ஒரு கடையில் அவள் தோழி ஏதோ வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று சென்றதால் தெருவை வேடிக்கைப் பார்த்தபடி காத்திருக்க ஆரம்பித்தாள்.

அப்பொழுதுதான் அவளது தோழிக்கு அவள் நன்றிக்கடன் பட வேண்டிய சூழ்நிலை உண்டானது. வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள் விழிகள் சற்றுத் தள்ளி விரிந்திருந்த ஒரு மரத்தையும் அதிலிருந்து உதிர்ந்து தரையெங்கும் சிதறிக் கிடந்த ஊதா நிறப் பூக்களையும் ரசித்துக் கொண்டிருந்த வேளையில் அப்பூக்களை மிதிக்க மனமில்லாமல் அதன் நடு நடுவே இருந்த இடைவெளியில் கவனமாய் நடந்து வந்த அவனை கவனித்தாள். இதே மாதிரி காதல் தேசம் படத்துல தபு நடந்து வருவா இல்ல- என்று ஒரு நொடி நினைத்தவள் பொதுவாக பெண்களுக்கு இருக்கிற மென்மை முதன் முதலாய் ஒரு ஆணிடம் பார்க்கிறாள். ஏனோ சொல்லமுடியாத சந்தோஷத்தில் மனம் விசிலடிக்க அவனை தொடர்ந்து செல்ல முடிவு செய்தாள். அவளை அவன் கடக்கையில் அவளது தோழி வந்து சேர்ந்து கொள்ள அவளை இழுத்துக் கொண்டு வேகமாய் அவன் பின்னாலே நடந்தாள். அவனும் அவளது நிறுத்தத்திலேயே போய் நிற்க அவனருகில் சற்று தள்ளி நின்று கொண்டாள். அவன் கழுத்தில் இருந்த ஆபிஸ் ஐடி கார்டைப் பார்த்து அவன் அவளது அலுவலகம் இல்லையென்பதை உறுதி செய்து கொண்டாள்.

படிய வாரிய தலையில் காற்றுக்கு லேசாய் முன்புறம் கலைந்த முடி, கருப்புமின்றி வெள்ளையுமின்றி ஒரு கலவையான நிறம், அங்கும் இங்குமாய் அலைபாயாத விழிகள், எடுப்பான நாசி, அளவான உடல், நல்ல உயரம் என்று அவனையே வைத்தக் கண் வாங்காமல் அளந்துக் கொண்டிருந்த அவளை அவன் கவனிக்கவேயில்லை. எப்படியாவது அவனிடம் பேசி அவனையும் பேச வைத்து விட வேண்டும் என்று எண்ணியவளுக்கு திடீரென்று வந்த யோசனையால் கைப்பையினுள் கைவிட்டுத் துழாவி ஒரு சிறிய துண்டு பேப்பரை எடுத்துக் கொண்டு அவனருகில் சென்றாள். அவனோ அவளை கவனிக்காமல் காதில் மாட்டியிருந்த ஹெட்ஃபோனில் கேட்டுக் கொண்டிருந்த பாட்டிலேயே கவனமாயிருந்தான். அவனது காலிடம் கையிலிருந்த பேப்பரை போட்டவள் அவனிடம் மெதுவாய் "எக்ஸ்க்யூஸ் மி" என்றாள். வெகு அருகில் நிழலாட திரும்பியவன் அவளைக் கண்டு ஒரு நொடி புரியாமல் விழித்து காதிலிருந்த ஃஹெட்போனைக் கழட்டி "யெஸ்" என்றான்.

"பேப்பர் மிஸ் ஆயிடுச்சு" என்று ஒரு இனம் புரியாத உணர்ச்சியில் உளறினாள்.

"எந்த பேப்பர்?" என்று அவன் புரியாமல் கேட்க ஹையா! தமிழ்ப் பையன் தான் என்று உள்ளம் குதூகலிக்க வார்த்தைகள் மடை திறந்த வெள்ளமாய் கொட்டின.

"என் கைல வச்சிருந்த பேப்பர் மிஸ் ஆகி உங்க கால்கிட்ட விழுந்துடுச்சு. கொஞ்சம் தள்ளிக்கிட்டிங்கனா எடுத்துக்குவேன்"

"ஓ! சாரி. எடுத்துக்குங்க" என்று கொஞ்சம் தள்ளியவன் அவள் எடுக்க வருவதற்குள் அவனே குனிந்து எடுத்து அவளிடம் தந்தான்.

"பேப்பர மிதிச்சிட்டேனுங்களா?" என்று கேட்டவனைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள்

"அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. ரொம்ப தேங்க்ஸ்" என்று புன்னகைத்தாள். பதிலுக்கு அவனும் புன்னகைக்க அய்யோ! என்று அந்த புன்னகையில் அலைபாய்ந்த மனதை இழுத்துப் பிடித்து நிறுத்தினாள்.

"நீங்க கோயமுத்தூருங்களா?" கேட்ட அவளை ஆச்சரியமாய் பார்த்தவன்

"இல்லைங்க. ஈரோடு. எப்படி கண்டுபிடிச்சீங்க?" என்றான்.

"இதுல என்னங்க இருக்கு? அதான் உங்க பேச்சேக் காட்டிக் குடுக்குதே. நான் திருச்செங்கோடுதான்"

"அட! நம்மூருங்களா நீங்க" என்று குதூகலித்தவன் "பை த வே நான் மகேஷ்" என்றான்.

"நான் மைதிலி...." என்று ஆரம்பித்து பேசி மொபைல் நம்பரை பரிமாறிக் கொண்டவர்கள் அவரவர் பேருந்து வரவும் விடை பெற்றனர்.

அதன் பிறகு சொல்லவா வேண்டும்? ஆருயிர் ஏழுயிர் எட்டுயிர் நண்பர்களாகி அவன் வீட்டிற்கு "ஹலோ ஆன்ட்டி! எப்படி இருக்கீங்க?" என்று இவள் வாரத்திற்கு ஒருமுறை ஃபோன் செய்வதும் "கோவிலுக்கு போகணும்னு சொன்னதால இந்த வாரம் வீட்டுக்கு வர மாட்டென்றாளா? நான் சொல்றேன் அங்கிள். அடம் பிடிச்சா பார்சல் பண்ணி அனுப்பிடறேன் கவலைப்படாதீங்க" என்று அவன் அப்பா இவனிடம் சிபாரிசுக்கு வருமளவிற்கு ஆகி விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


ஒரு வருடம் கழித்து...

"ஹே மைத்தி!"

"சொல்..லு..டா... மணி ஒண்ணாச்சு. தூங்கலையா நீ?"

"தூக்கம் வரலைடி. உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சு"

"எருமை! உனக்கு தூக்கம் வரலைனா என்னையும் தூங்க விடாம பண்ணனுமா? ஒரு மணிக்கு என்னடா உனக்கு பேசணும் போல இருக்கு?"

"ஒரு மணிக்கு மட்டு இல்லடி... ஒரு நாளுல 24 மணி நேரமும், வாரத்துல ஏழு நாளும், வருஷத்துல 365 நாளும்..."

"டேய்ய்ய்ய்ய்.... என் பொறுமைய சோதிக்காத... நானே அரைத் தூக்கத்துல பேசிட்டு இருக்கேன். நீ புள்ளி விவரம் சொல்லிட்டு இருக்காத... சீக்கிரமா சொல்லு"

"இருடி... சொல்ல விடு... ஒரு நாளுல 24 மணி நேரமும், வாரத்துல ஏழு நாளும், வருஷத்துல 365 நாளும், என் ஆயுசுல எல்லா வருஷமும் ஐ மீன் என் ஆயுசு முழுக்க உன்னோடவே இருக்கணும் போல இருக்குடி" - இறுதியா சொல்லும்போது அவன் குரல் ஒரு வித அச்சம் கலந்த சந்தோஷத்தில் குழைந்தது. அவனது வார்த்தைகளில் திடுக்கிட்டு தூக்கம் மொத்தமாய் தொலைத்து விருட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

"என்னடா சொல்ற?" அவள் குரலில் ஆச்சரியம் அதிர்ச்சி எல்லாம் அப்பட்டமாய் தெரிந்தது.

"எனக்கு கொஞ்ச நாளாவே அப்படியேதாண்டி தோணுது. என்ன பண்றதுனு தெரியலை. எனக்கு எதுனாலும் நீதான ஐடியா குடுப்ப. அதான் உன்கிட்டயே கேக்கலாம்னு சொன்னேன். என்ன பண்ணட்டும் நான்?"

இரண்டு நிமிடங்கள் பதிலில்லாமலே இருக்க அதற்கு பொறுமையிழந்தவனாய்

"ப்ளீஸ்! கோபம்னா நல்லா திட்டிக்கோ. பேசாம மட்டும் இருந்துடாதடி. ப்ளீஸ்...." என்றான். அதற்கும் பதில் பேசாமலே அவள் இருக்க

"எதாவது சொல்லு. நான் என்ன பண்ணட்டும்?"

"ம்ம்ம்ம்...." என்று இழுத்தாள். அதற்குள் என்ன சொல்வாளோ என்று அவனது இதயம் வேகமாய் அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

"வீட்டுல கேட்டு கல்யாணம் பண்ணிக்கோ" என்று அவள் சொல்லவும் அவன் காதுகளையே அவனால் நம்ப முடியவில்லை.

"ஹே! நிஜமாதான் சொல்றியா?"

"நிஜம்னு எப்படி ப்ரூவ் பண்ணனும் உனக்கு?"

"ஹே! தேங்க்ஸ்டி செல்லம்.... நான் ரொம்ப பயந்துட்டே இருந்தேன். யு நோ ஒன்திங்க்? எனக்கு லாஸ்ட் த்ரீ மன்த்ஸாவே ஒரு மாதிரி வித்தியாசமா ஃபீல் பண்ணினேன். இப்போதான் அது காதல்னு கண்டுபிடிச்சேன்" என்று ஏதோ சாதித்துவிட்ட பெருமையில் சொல்லிக் கொண்டிருந்தான்.

"ஹ்ம்ம்ம்... உனக்கு லாஸ்ட் த்ரீ மன்த்ஸாதான் அப்படி... எனக்கு உன்னை ஃபர்ஸ்ட் பாத்தப்பவே ஒரு டிஃபரண்ட் ஃபீலிங்" என்று அவள் மெதுவாய் சொல்லி நிறுத்த

"ஹே ரியலி??? என்னால நம்பவே முடியலை. என்கிட்ட வந்து பேசினப்பவா?"

"இல்ல. அதுக்கு முன்னாடியே அந்த தெருல நீ நடந்து வந்தப்போ உன்னைப் பார்த்தேன். உன்னைப் பிடிச்சதாலதான் நானா பேப்பர கீழ போட்டுட்டு வந்து பேசினேன்" என்று அவள் சிரிக்க

"அடிப் பாவி! என்னை ஏமாத்திட்டியா நீ?" என்று செல்லக் கோபம் காட்டியவன்

"எதனால உனக்கு என்னை அப்போ பிடிச்சது?" என்று ஆர்வமாய் கேட்டான்.

"அதெல்லாம் சொல்ல மாட்டேன்"

"ப்ளீஸ்டி... சொல்லு"

"அதை நமக்கு கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் சொல்றேன். ப்ளீஸ் கேக்காத..."

"ஓகே... ஓகே..."

"இந்த வீக் எண்ட் ஊருக்கு போறோம் இல்ல. நான் எங்க வீட்டுல கேக்கறேன். நீ உங்க வீட்டுல கேளு...." என்று வீட்டில் பேசுவதைப் பற்றி பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.


மூன்று மாதங்கள் கழித்து...

"ஹலோ! எங்க இருக்க?"

"நான் உன்னைப் பாத்துட்டேன். அப்படியே ரைட் சைடுல திரும்பி நாலாவது டேபிள்ல பாரு"

CCD-யினுள் அவளுக்காக காத்திருந்த மகேஷின் இருப்பிடத்தை கண்டுபிடித்த மைதிலி நேராக அவனிடம் சென்று எதிர்புறமிருந்த சேரினில் அமர்ந்தாள்.

"வந்து ரொம்ப நேரமாச்சா?"

"இல்லடி... இப்பதான்... ஒரு ஃபைவ் மினிட்ஸ்தான் ஆகுது"

அமைதியாய் அவளது பையிலிருந்து இன்விடேஷனை எடுத்து அவன் முன் நீட்டினாள்.

"இந்தா என் வெட்டிங்க் கார்ட்" என்று அவள் நீட்டியதும் வாங்கி அதைப் பிரித்துப் பார்த்தான். படித்து முடித்து மடித்து வைத்தவன் எவ்வித சலனமுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் முன் அவனும் ஒரு கார்டை நீட்டினான்.

"இந்தா என்னோட இன்விடேஷன்"


(தொடரும்...)

தசாவதாரம் - ஜி.ரா-வின் பதிவிற்காக!

எனக்கு படம் பார்த்து விமர்சனம் எழுத வராது. அதனால் எழுதுவதில்லை. இப்பொழுதும் தசாவதாரம் படத்திற்கு விமர்சனம் எழுத வரவில்லை. ஜி.ரா-வின் பதிவைப் பார்த்ததும் அவரிடமே சென்று சண்டையிட்டேன். சரி பதிவே எழுதி விடலாம் என்றெண்ணியதால் இப்பதிவு.

தசாவதாரம் சுமார்தான் என்று பலர் சொல்லியதால் ரொம்ப பெரிய எதிர்பார்ப்புடன் செல்லவில்லை நான். என்றாலும் படம் பார்த்ததும் எனக்கு நிறைவாகவே இருந்தது. பெரியவர்களை எறும்பை விட சிறியதாக்கும் மெஷின்களை கண்டுபிடிப்பதும், கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களை உருவாக்குவதும், கட்டிடங்களின் மேல் சிலந்தியைப் போல் ஏறும் மனிதனாய் மாறுவதுமாய் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்களை அமெரிக்கர்கள் செய்வதை ஏற்றுக் கொள்ளும் மக்கள் ஒரு தமிழன் உலகை அழிக்க வல்ல கிருமியை உருவாக்குவதையும் அதனிடமிருந்து உலகைக் காப்பாற்றப் போராடுவதையும் ஏற்றுக் கொள்ள ஏன் மறுக்கிறார்கள் எனபதுதான் புரியவே இல்லை :-S

சில பாத்திரங்கள் (ஜப்பானியராய், கலிஃபுல்லா கானாய்) தேவையற்றது என்று முதலில் நினைத்த போதும், எப்படியும் அந்த ஜப்பானிய கமல் இல்லாவிடில் ப்ளெட்சர் கோவிந்தை கொன்று விடுவான், கலிஃபுல்லா இல்லாவிடில் கோவிந்தால் தப்பித்திருக்க முடியாது என்றபோது அந்த பாத்திரங்கள் அவசியமாகிப் போகின்றன. எப்படியும் யாரோ நடித்திருக்க வேண்டிய பாத்திரத்தை கமலே நடித்து விட்டார் போல என்று நினைத்துக் கொண்டேன்.

கமலின் நடிப்பிற்கு தீவிர ரசிகை நான். சலங்கை ஒலி படத்தில் கமலின் நடிப்பை அணு அணுவாய் ரசித்து அந்த ஒரு காரணத்திற்காகவே ரசிகையானேன். ஒன்றை கவனியுங்கள். நான் "கமலின் நடிப்பிற்கு"-தான் தீவிர ரசிகை. "கமலுக்கு" அல்ல. அதனால் கமலை யார் எது சொன்னாலும் அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை. என்றாலும் ஜி.ராவின் பதிவில் சில விஷயங்களுக்கு மனம் ஒப்பவில்லை.

கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கமல் (ரங்கராஜ நம்பி) வைணவத்தை ஆதரித்தும் சைவத்தை எதிர்த்தும் நடித்திருப்பதுதான் இங்கு பிரச்சினையே. கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இப்படி செய்தது ரங்கராஜ நம்பிதானே ஒழிய கமல் இல்ல. அந்த காலகட்டத்தில் சைவர்களும் வைணவர்களும் தத்தம் சமயம்தான் உயர்ந்தது என்று உறுதியாய் நம்பியதும், மற்றதை அழிக்க முயன்றதையும் நான் பல சரித்திரக் கதைகளில் படித்திருக்கிறேன். ஒரு மலையடிவாரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு சைவ அடியாரின் தலையில் மலையிலிருந்த விஷ்ணு கோவில் இடிந்து அதிலிருந்து உருண்டு வந்த கல் விழுந்து மண்டை உடைந்து ரத்தம் வழிவதையும் பொருட்படுத்தாமல் வைணவக் கோவில் இடிந்துவிட்டதற்காய் ஆனந்தக் கூத்தாடினாராம். இந்த கதையை சிறு வயதிலேயே கேட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்த ரங்கராஜ நம்பி ஐந்தெழுத்தை சொல்ல மனமின்றி உயிர்விட்டது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இந்த இடத்தில் "ரங்கராஜ நம்பி"-யாய்தான் பார்க்க வேண்டுமே தவிர கமலாய் பார்க்கதீர்கள்.

இப்படத்தில் ரங்கராஜ நம்பியை ராமானுஜரின் சீடர் என்று சொல்வார்கள். இவரைப் பற்றியும் படித்திருக்கிறேன் (பா.விஜய்-இன் உடைந்த நிலாக்கள் இரண்டாம் பாகத்தில் முதல் கதையில்). இதே போல் சாமி சிலையை வெளியே எடுக்க விடாமல் கதவை சாத்திக் கொண்டதாயும் பின் யானையை வைத்து கதவை உடைத்து திறந்தனர் என்பதையும் எங்கோப் படித்திருக்கிறேன். கடலில் போட்டதாய் கூட படித்த ஞாபகம். But I am not sure. இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்த பாத்திரத்தை உள்ளது உள்ளபடியே சொன்னதால் கமலை ஏன் குறை சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை. "பொன்னியின் செல்வன்" கதையைப் படித்தவர்களுக்கு "ஆழ்வர்க்கடியான்" பாத்திரம் பற்றி நன்கு தெரிந்திருக்கும். வைணவப் பித்தராய் சைவர்களைக் கண்டால் கையில் வைத்திருக்கும் கட்டையால் சைவரின் தலையிலேயே அடிப்பாராம். அதற்காகதான் அந்த கட்டையை எப்போதும் கையிலேயே வைத்திருப்பாராம். இப்படிப்பட்ட பாத்திரத்தைப் படைத்த கல்கி-யை குறை சொல்வதுப் போல இருக்கிறது கமலை நீங்கள் குறை சொல்வது.

முதலில் கடவுளை நம்பும் வைணவப் பித்தராய் வரும் "ரங்கராஜ நம்பி" கமலின் மீது கோபமென்றால் இறுதியில் கடவுள் நம்பிக்கை பெரிதும் இல்லாமல் அசினோடு சண்டை போடும் கமலை தூக்கி வைத்து கொண்டாட வேண்டுமல்லவா? அதை ஏன் யாரும் செய்யவில்லை?

கமலிற்காக பரிந்துப் பேச இதை எழுதவில்லை. ஆனால் ரங்கராஜ நம்பி பாத்திரத்தின் மூலம் வைணவத்தை சொல்கிறார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடவுள் நம்பிக்கை பெரிதும் உண்டு எனக்கு. டி.டி-யில் போடும் "ஓம் நமச்சிவாய" சீரியலில் நெருப்பு உருவத்தில் நடனமாடும் சிவனை ஒவ்வொரு முறை பார்க்கும்பொழுதும் சிலிர்த்துக் கொள்ளும். அதே சமயம் அரங்கநாதரைப் பார்க்கும்பொழுது விழிகள் மூட மனமில்லாமல் திருவுருவத்தை கண்களுக்குள்ளேயே கடத்தி வைத்துக் கொள்ளும் ஆசை எழும். ஆனால் பலமுறை யோசித்த ஒரு விஷயம் உலகையே ஆளும் கடவுளர்கள் இவர்கள். இவர்களுக்கு உலக மக்கள் அனைவரும் சமம் தானே. ஆனால் ஏன் தமிழரை மட்டுமே காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதும் தமிழ்நாட்டிற்கு மட்டுமேயான மொழியை வளர்க்க பாடுபட்டனர் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. அப்பொழுது அவர்களுக்கு ஆங்கில, ப்ரெஞ்ச், ஜெர்மன் மக்களெல்லாம் முக்கியமில்லையா என்று பல கேள்விகள் எழுகிறது. யோசிக்க யோசிக்க விடை கிடைக்காமல் நீண்டு செல்கிற விஷயம் இது. யோசிப்பதை விட்டுவிட்டு வணங்குவதோடு நிறுத்திக் கொள் பெண்ணே எனறு எனக்கு நானே சொல்லிக் கொண்டு விட்டேன் :)))

தசாவதாரம்...

பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சுத்தமான வைணவனாய், ஒரு இளம் விஞ்ஞானியாய், அக்மார்க் அமெரிக்க வில்லனாய், அமெரிக்க அதிபராய், காமெடியில் கலக்கிய பலராம் நாயுடுவாய், சித்தசுவாதீனமற்ற குறும்புக்கார பாட்டியாய், தங்கையின் கொலைக்கு பழிவாங்கத் துடிக்கும் ஒரு ஜப்பானியனாய், மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடும் நேர்மையான மனிதனாய், பாடுவதை வாழ்க்கையாய் நினைக்கும் அவதார் சிங்காய், அப்பாவியான கலிஃபுல்லாவாய் கமல் என்னைப் பொறுத்தவரை மீண்டும் ஒருமுறை அவரை நிருபித்திருக்கிறார்.

"லைட்டப் போடுங்கய்யா இங்கென்ன ஃபர்ஸ்ட் நைட்டா நடக்குது" என்றபோது, "Sir can speak five languages in Telugu" என்று சொல்லும்போது பெருமையாய் சிரிக்கும்போது, ராவ் பெயரைக் கேட்டதும் பொங்கி வழிந்த பாசத்தோடு தெலுக்குவாடா என்று கேட்கும்போது இப்படி பல இடங்களில் பல்ராம் நாயுடுவைப் பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

Big kudos Kamal!!!

ஏதேனும் உங்களை வருத்தப்படும் செய்யும் வகையில் எழுதி இருந்தால் தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள் ஜி.ரா அண்ணா.

பி.கு: எனக்கு ஆபிஸில் blogger access இல்லையென்பதால் எந்த ஒரு பின்னூட்டத்திற்கும் பதிலளிக்க இயலாமல் இருக்கிறேன். தயவு செய்துப் பொறுத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து பின்னூட்டமிடும் அன்பு உள்ளங்களுக்கு கோடி நன்றிகள் :)))

Wednesday, June 18, 2008

மேக்-அப்

நம்ம முகத்துக்கு மேக்-அப் அவசியமானு எப்பயாச்சும் யோசிச்சிருக்கிங்களா? நான் பல தடவை யோசிச்சிருக்கேன். சின்ன வயசுல எல்லாம் இந்த Fair & Lovely, Fairever விளம்பரம் எல்லாம் பாக்கும்போது இது என்னம்மா-னு எங்கம்மாட்ட கேப்பேன். எங்கம்மா அது வெள்ளையாவறதுக்கு போடற க்ரீம்-னு சொன்னாங்க. அப்போ எனக்குனு கேட்டதுக்கு நீ ஏற்கனவே ரொம்ப வெள்ளையா இருக்கற கண்ணு. அதை போட்டு இன்னும் வெள்ளையானா எல்லாரும் உன்ன வித்தியாசமா பாப்பாங்க அப்டி இப்டினு சொல்லி சமாளிச்சிட்டாங்க. அப்புறம் ஒரு எட்டாவது படிச்சப்போ என் ஃப்ரெண்ட் ஒருத்தி நல்லா பளபளனு வருவா. நான் எண்ணை வடிஞ்சு பாவம்போல போவேன். ஒருநாள் அவட்ட உன் அழகோட ரகசியம் என்னடி-னு கேட்டேன். Fair & Lovely தானு சொன்னாளே பாக்கலாம். எனக்கு எங்கம்மா மேல வந்த கடுப்புக்கு அளவே இல்ல. அப்புறம் நானும் வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்.

இங்கதான் எங்கம்மாவோட திறமைய நான் எடுத்து சொல்லணும். எதாவது அவங்க வேண்டாம்னு சொல்லி நான் வேணும்னு அடம்பிடிச்சா என்னைத் திருப்பி கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா இது பண்ணினா இப்படி ஆகும் அப்படி ஆகும்னு சொல்லி நானே பயந்து போயோ இல்ல வெறுத்துப் போயோ தானா நிறுத்திடுவேன். ப்யூட்டி பார்லர் வச்சா கண்டவங்க முகத்த க்ளீன் பண்ணனும். காலை எல்லாம் தொடணும். நீயே பயங்கரமா சுத்தம் பாப்ப. நீ எப்படி இதையெல்லாம் செய்வ-னு கேட்டு என்னோட ப்யூட்டி பார்லர் கனவை என்ன வச்சே தகர்த்து எரிஞ்சுட்டாங்க. அப்பேற்பட்டவங்க என் Fair & Lovely மேட்டர சும்மா விடுவாங்களா? Fair & Lovely போட்டா இப்போ நல்லா இருக்கும். ஆனா சீக்கிரமாவே சுருக்கம் வந்து முகம் கிழவியாட்டம் ஆயிடும்னெல்லாம் பயமுறுத்தி அதுக்கப்புறம் Fair & Lovely என்ன பவுடரே வேணாம்னு நிறுத்திட்டேன். அதுக்கப்புறம் வாழ்க்கைல முகத்துக்கு எதுமே போட்டதில்ல. யாராவது இதைப் பத்திக் கேட்டா நாங்கெல்லாம் நேச்சுரல் ப்யூட்டிப்பா. எனக்கெதுக்கு இதெல்லாம்-னு சொல்லி சிரிப்பேன்.

கல்யாணம் முடிவானதும் எங்கக்கா கல்யாண மேக்-அப்க்காக ஒரு பார்லர் கூட்டிட்டுப் போனாங்க. எங்க ஊருல அவங்கதான் நம்பர் ஒன். நிறைய கல்யாணத்துல அவங்க பண்ணி விட்ட மேக்-அப் பாத்து ஆச்சர்யப்பட்டிருக்கேன். மூணு கோட் நாலு கோட்னு இல்லாம ரொம்ப சிம்பிளா ஆனா அதே சமயம் ரொம்ப அழகா பண்ணி இருப்பாங்க. அவங்ககிட்ட போனதும் கல்யாண தேதி எல்லாம் கேட்டுட்டு மூணு தடவை ஃபேஷியல் பண்ணிக்கோனு சொல்லிட்டாங்க. சரி கல்யாணத்துக்காகதானனு நானும் சரி சொல்லிட்டேன். மொத தடவை ஃபேஷியல் பண்ணப் போனப்போ என்ன முகம் இவ்ளோ ரஃப்-பா இருக்கு? என்ன க்ரீம் போடுவனு கேட்டாங்க. நான் பெருமையா எதுமே போட மாட்டேனு சொன்னேன். எதும் போடலைனா இப்படி தான் ரஃப் ஆகும்னு சொன்னாங்களே பாக்கலாம். தாய்க்குலத்து மேல தீராத கோபம். வீட்டுக்குப் போய் சண்டையான சண்டை போட்டேன். அவங்க எல்லாம் அப்படிதான் சொல்லுவாங்க. ஆன நீ எதும் போடாதனு அப்பவும் அம்மா அதையே சொன்னாங்க.சரி-னு சொல்லிட்டு அப்புறமா வாங்கி போட ஆரம்பிச்சிடலாம்னு விட்டுட்டேன்.

கல்யாணத்துக்கு முன்னாடி ஃபேஷியல்-ன்ற பேருல முகத்த தேச்சு தேச்சு எடுத்தாங்க. எல்லாரும் பாத்துட்டு அட! கல்யாண களை வந்துடுச்சே... அப்டினு சொன்னப்போ எல்லாம் மனசுல அது எப்டினு எனக்குதான தெரியும். பார்லர்ல அந்த அளவுக்கு தேச்சு எடுத்தா வராமலா இருக்கும்னு நானா நினைச்சுக்கிட்டு சிரிச்சு வச்சேன். அப்றமா மூணாவது தடவையா பண்ண போனப்போ கோல்டன் ஃபேஷியல் பண்ணிக்கிறயா? அப்போதான் முகத்துல ஒரு glow வரும். நல்லா இருக்கும்னு சொன்னாங்க. சரி கல்யாணத்தப்போ நம்மள சுத்தி ஒரு ஒளிவட்டம் தெரியும். தக தக-னு மின்னுவோம் போலனு நினைச்சுட்டு சரி-னு சொன்னேன். அதுக்கு தண்டமா ஒரு ஆயிரம் ரூபாய அழுது வச்சிட்டு வந்தேன். பண்ணிட்டு வந்ததுக்கப்புறம் கண்ணாடி முன்னாடி நின்னு நின்னு பாத்தேன். ஒரு glow-யும் காணோம்.

கல்யாணத்தப்போ எல்லாரும் அழகா இருக்க அழகா இருக்க-னு சொன்னப்போ அப்படியே சந்தோஷம் பொங்குச்சு. நாம பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போகலை போலனு சந்தோஷப்பட்டுக்கிட்டேன். அப்புறம்தான் தோணுச்சு. அட! எத்தன கல்யாணத்துல சுமாரா இருந்தவங்களையெல்லாம் நாமளே ரொம்ப அழகா இருக்கீங்கனு சொல்லிட்டு வந்தோம்னு ஞாபகம் வந்து ஒரே சோகம் சோகமா போயிடுச்சு. இருந்தாலும் எல்லாரும் சொல்லும்போது சந்தோஷமாதான் வந்துச்சு. கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் சொன்ன விஷயம் என்னனா உனக்கு மேக்-அப் ரொம்ப நல்லா பண்ணி விட்டிருந்தாங்க. நீயும் ரொம்ப அழகா இருந்த. ஆனா எந்த மேக்-அப்ம் இல்லாம எப்பவும் ஸ்மைலோட இருந்த உன் வீட்டுக்காரர் உன்னை விட அழகா இருந்தார்னு சொன்னாங்க. ஃபோட்டோஸ் வந்ததும் எங்க வீட்டுலயும் இதே கமெண்ட்தான் குடுத்தாங்க.

இப்போதாங்க நல்லா புரியுது. தலைல இருந்த கால் வரைக்கும் ரொம்ப நல்லா பண்ணின மேக்-அப் தர அழகைவிட முகத்துக்கு ஒரு சின்ன ஸ்மைல் தர அழகு இருக்கே. அதை எந்த மேக்-அப்பாலயும் தர முடியாது. என்ன சொல்றீங்க?

Monday, June 9, 2008

உன் பேர் சொல்லி வாழ்த்துக் கூற...




ஆராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்துக் கூற நீயும் சேயில்லை
இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை
இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை

(ஆராரோ)

மார்பிலே போட்டு நான் பாட வழிதான் இல்லையே
மடியிலே போட்டுதான் பார்க்க நினைத்தால் தொல்லையே
வயதில் வளர்ந்த குழந்தையே வம்பு கூடாது
சிரித்து மயக்கும் உன்னையே நம்பக் கூடாது
மேலாடைப் பார்த்துதான் நீ சிரித்தால் ஆகுமா
மேனியே கூசுதே ஆசை வேர் விடுதே

(ஆராரோ)

தோளிலே நாளெல்லாம் சாய்ந்து இருந்தால் போதுமே
வாழ்விலே ஆனந்தம் மேலும் நிறைந்தே கூடுமே
இதயம் எழுதும் இனிமையே... இன்பம் வேறேது
கனவில் வளர்ந்த கவிதையே... என்றும் மாறாது
நீ என்றும் தேனென்றும் வேதங்கள் ஏதம்மா
நினைத்ததும் இனித்திடும் காதல் பூமழையே

(ஆராரோ)

*************
இன்று பிறந்த நாள் காணும் என் இனிய அன்பு கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்.


ஒரு பெரிய கவிதை எழுதியிருக்க வேண்டிய நான் ஏன் இப்படி செய்தேனென்றால்

"உன்னுள் முழுமையாக
என்னை தொலைத்தால்
வெட்கி சிவந்து
உன்னுள்ளேயே
ஓடி ஒளிந்து கொண்டன
எனது வார்த்தைகளும்"
(ஸ்ஸ்ஸ்.... அப்பாடா.... எப்படியோ சமாளிச்சாச்சு ;)))))

Thursday, May 8, 2008

அது ஏன்?!!

அது ஏன்?!!

சோப்பு விளம்பரத்துல வர பாட்டிங்க எப்போ பாத்தாலும் எதாவது இலை தழை வச்சு அரைச்சுக்கிட்டே இருக்காங்களே அது ஏன்??!!

************************************

எல்லா சோப்புக்கும் பொண்ணுங்களை வச்சு விளம்பரம் பண்ணும்போது லைஃப்பாய் சோப்புக்கு மட்டும் ஆண்களை வச்சு விளம்பரம் பண்றாங்களே அது ஏன்?





************************************

தமிழ் படத்து ஹீரோயின் தலைமுடில ஒண்ணு கூட கருப்பா இல்லைனாலும் பாட்டுல கார்மேக கூந்தல், கரிசல் காடுகள் இப்படி எழுதறாங்களே(உதாரணத்துக்கு "ஒரு ஊரில் அழகே உருவாய்" பாட்டுல வர "தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்" வரிகள் - காக்க காக்க) அது

ஏன்?!!!!

************************************

பாக்கவே பிடிக்காத அளவுக்கு இருக்கற ரவுடியயும் இந்த தமிழ்படத்து கதாநாயகிகளால மட்டும் காதலிக்க முடியுதே அது ஏன்?!!

************************************

நல்லா neatஆ போனா BMTC பஸ்ல டிக்கட்டுக்கு சில்லறை தர மாட்டேன்றாங்க... சில தனியார் பஸ்ல டிக்கட்டே தர மாட்டேன்றாங்களே அது ஏன்?!!


************************************

ப்ளாக்குக்கு லீவு விட்டுட்டா மக்களே மனசாட்சியே இல்லாம மறந்துடறீங்களே அது ஏன்?!!


************************************

ஹி... ஹி... ச்சும்மா இப்படி ஒருத்தி இருக்கேனு ஞாபகப்படுத்தரதுக்காக இந்த பதிவு... ;)))

Tuesday, April 22, 2008

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே!!!



அட! ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னு நினைச்சுட்டே இருந்தேன். வேற என்ன பெரிய விஷேசம் இருக்கப் போகுது??? கல்யாணம்தான். ஹி... ஹி... எங்க பக்கத்து வீட்டு அக்காவோட வீட்டுக்காரரோட தங்கச்சியோட நாத்தனாரோட கொழுந்தனாரோட மாமனார் தம்பி பொண்ணோட அத்தைப் பையனோட மச்சானோட வீட்டுக்காரம்மாவோட அம்மா வீட்டுப் பக்கத்துல இருக்கற ஆன்ட்டியோட அண்ணன் மருமகளோட தங்கச்சிக்கு கல்யாணம்னு நான் சொல்ல வரலை :)))) (இப்படியெல்லாம் மொறைக்கப்படாது ;))))


என் அப்பாவோட பையனோட அம்மாவோட ஒரே பொண்ணுக்கு மே 18, 2008ஆம் தேதி கல்யாணம். மே 19, 2008ஆம் தேதி திருமண வரவேற்பு. தவமின்றி வரம் பெறப் போகிற அட அதாங்க கல்யாணம் பண்ணிக்கப் போற அதிர்ஷ்டசாலி திரு.மோகன் பிரபு.

அவருக்கும், அவரோட அன்பும் பண்பும் அழகும் அறிவும் நிறைந்த மனைவிக்கும் உங்க விலைமதிப்பற்ற வாழ்த்துக்களை வாங்கித் தரதுக்குதான் இந்த பதிவு :))))))) தந்துட்டு போங்க மக்களே!!!