Wednesday, July 25, 2007

அத்தை மகனே! அத்தானே!! - III


"சுதா ப்ராதாப்ப போயி சாப்பிட வர சொல்லு" என்று அத்தை சொல்லவும்
"பசிச்சா அவனே வரட்டும். நானெல்லாம் போயி கூப்பிட முடியாது" என்று பதில் சொல்லி விட்டு கையில் இருந்த புத்தகத்தில் மூழ்கினாள்.

"போய் சொல்லு சுதா. என்னால மாடி ஏற முடியாது. அவன் வேற அப்பவே பசிக்குதுனு சொன்னான்" என்று அவர் கெஞ்சலாய் கேட்கவும் வேறு வழியின்றி எழுந்து சென்றாள்.
அவனிடம் பேசாமலே ஒரு நாளை கழித்தவள் இன்று தனிமையில் சந்திக்க நேரும்படி ஆயிற்றே என்று எண்ணியபடி படியேறினாள். அவனது அறைக்குள் நுழைந்தவள் அங்கே அவனை காணாது பின் கதவு வழியாக பால்கனியில் இருக்கிறானா என்று எட்டிப் பார்த்தாள். அங்கும் இல்லாது போகவே எங்கே சென்றிருப்பான் என்ற யோசனையில் அங்கேயே நின்றவள் கழுத்தில் ஏதோ குறுகுறுக்க வேகமாய் திரும்பவும் அப்படியே ப்ரதாப்பின் கைகளுக்குள் வந்தாள். அவனை வெகு அருகில் பார்த்ததும் இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள இமைக்காமல் பார்த்தாள். அவன் அப்படியே ஆள்காட்டி விரலை நெற்றியில் வைத்து மெதுவாக கீழ்நோக்கி விரலை நகர்த்தினான். மூக்கை தொட்டதும் தாள முடியாமல் லேசாய் தலையை பின்னால் சாய்த்து மெல்ல கண்களை மூடினாள். அவளது அந்த நிலையை கண்டு ரசித்தபடியே முன்னேறியவன் அவளது இதழ்களைத் தொட்டதும் அப்படியே அவளை நிமிர்ந்து நிற்க வைத்து கைகளை விலக்கினான். திடுக்கிட்டு விழித்தவள் அவன் புன்னகைத்தபடி நிற்பதை கண்டதும் சுய நினைவு வர 'ச்சே! இவன்கிட்ட இப்படி நடந்துக்கிட்டோமே' என்று எண்ணி வெட்கியபடி வேகமாக வெளியேறினாள்.

படிகளில் இறங்கும்போது மனம் கொதித்தது. 'ப்ச்! அன்னைக்கு எவ்வளவு ரோஷமா பேசினேன். இப்போ அந்த ரோஷம் எங்க போச்சு'-ன்னு என்று தன்னைத் தானே நொந்து கொண்டவள் கண்கள் துளிர்க்க நேராக சென்று படுக்கையில் விழுந்தாள். சிறிது நேரம் அப்படியே தலையணையை நனைத்தவள் சாப்பிட அழைப்பு குரல் கேட்கவும் முகம் கழுவிக் கொண்டு டைனிங் ஹாலுக்கு சென்றாள். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ப்ரதாப்பைக் கண்டதும் திரும்ப எத்தனித்தவளை அத்தையின் குரல் தடுத்தது.

"நீயும் சாப்பிட்டுட்டினா நான் போய் படுப்பேன்" என்று அவர் சொல்லவும் வேறு வழியின்றி டைனிங் டேபிளில் அமர்ந்தாள். அவன் ஏளனமாய் புன்னகைப்பதைக் கண்டதும் கோபம் சுறுசுறுவென்று தலைக்கேற

"அத்தை நாளைக்கு நான் ஊருக்கு கிளம்பறேன்" என்று சத்தமாய் உள்ளே தோசை சுட்டுக் கொண்டிருந்த அத்தைக்கு கூறினாள்.

"ஏன் இன்னும் உனக்கு லீவ் இருக்கு இல்ல? அதுக்குள்ள என்ன??" என்று அவர் கேட்கவும்

"இல்ல நான் வந்து ஒரு நாலு நாள் ஆச்சு" என்று மென்று விழுங்கினாள். அதை கண்டதும் இன்னும் ஏளனமாய் புன்னகைத்தவன்
"ஏன் நான் இருக்கறதால பயமா? உன் கொள்கைல இவ்ளோதான் ஸ்ட்ராங்கா?" என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படியாய் கேட்டான். அவனது ஏளனப் புன்னகை அவளை உசுப்பி விட
"உன்னைப் பார்த்து எனக்கென்ன பயமாம்?" என்று அவன் கண்களை நேராய் பார்த்து கூறியவள்

"இல்ல அத்தை. இன்னும் ஒரு மூணு நாள் கழிச்சே போறேன்" என்றாள் சத்தமாக. அதை கேட்டு அவன் புன்னகைத்தபடி எழுந்து சென்றான். இரண்டு தோசையை அரைமணி நேரத்தில் எப்படியோ கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்து ஹாலுக்கு வந்த போது ஜம்மென்று சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே சென்றால் அவனுக்கு பயந்து கொண்டுதான் போகிறாள் என்று நினைத்துக் கொள்வான் என்றெண்ணி அங்கேயே உட்கார்ந்தாள்.

"உன் கண்ணிலே துளி நீரையும் நீ சிந்தவும் விட மாட்டேன்.... உன் நிழலையும் தரை மீதிலே நடமாடவும் விட மாட்டேன்.... ஒரே உடல் ஒரே மனம் ஒரே உயிர் நினைக்கையில் இனிக்கிறதே....." என்று டிவியில் ஓடிய பாடலுடன் சேர்ந்து அவன் பாட அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது. திரும்பி அவனை பார்க்கவும் அவளைப் பார்த்து "நீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி" என்று பாடினான். அவள் வேகமாக ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றினாள்.

--------------------------------------ooOoo--------------------------------------

"ஏய்! இன்னைக்கு நாங்க ஃபிலிம் போறோம் வரயா?" என்று அவன் கேட்டதும்

"நாங்கன்னா?" என்றாள் கேள்வியாய் பார்த்தாள்.

"நானும் கவிதாவும் போறோம்" என்றதும் அவள் முகம் கோபத்தில் சிவந்தது.

"நான் எதுக்கு வரணும்? நீங்களே போயிட்டு வாங்க"

"அது சரி" என்றவன் "வயிறெரியாம இருந்தா சரி" என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு திரும்ப கோபம் பொங்க அவனது சட்டையை பிடித்து திருப்பி

"எனக்கு எதுக்குடா வயிறெரியணும்?" என்றவள் முகம் கோபத்தில் சிவந்து இதழ்கள் துடிக்க கண்கள் நிரம்பியது.

அவன் மெதுவாய் புன்னகைக்கவும் அவனை விட்டு விட்டு கைகளால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதாள். இரு நிமிடம் கழித்து அவள் கைகளை அவன் விலக்கி

"இப்போ சொல்லு...... நானா வந்து கேட்டா கூட நீ என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?" என்று அவன் மெதுவாய் கேட்கவும் தாங்க முடியாமல் அவனது கைகளுக்குள் புதைந்தாள். சில நிமிடங்கள் அவன் தோளில் புதைந்து அழுதவள்
"நான் ட்வெல்த் படிக்கறப்ப இருந்து உன்னை லவ் பண்றேன் தெரியுமா? நீதான் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இப்படி சொல்லிட்ட"
"அட என் மாமன் மகளே! மக்கு ப்ளாஸ்திரி!! நீ ஃபிப்த் படிக்கும்போது நம்ம வீட்டு நாய் செத்து போச்சுன்னு என் நெஞ்சுல விழுந்து அழுதியே..... அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன்..... வாழ்நாள் முழுக்க உன்னோட கண்ணீர், சந்தோஷம் எல்லாத்தையும் என் நெஞ்சுலதான் தாங்கணும்னு"

இந்த வார்த்தைகளை கேட்டதும் அவள் காதுகளையே நம்ப முடியாமல் ஆச்சர்யத்தில் மூழ்கியவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். அவன் பரிவாய் புன்னகைக்கவும்

"அப்புறம் ஏன் அன்னைக்கு எனக்கு எதுவும் தோணவே இல்லைன்னு சொன்ன?" என்று செல்ல கோபத்தில் அவன் நெஞ்சில் குத்தினாள். அவள் கைகளை பிடித்து தடுத்தவன்

"நீ என்ன பொண்ணு மாதிரி வெக்கப்பட்டுக்கிட்டா சொன்ன? பெரிய இவளாட்டம் சட்டை காலரை பிடிச்சு ஐ லவ் யூன்னு சொன்னா நாங்க உடனே ஒத்துக்கனுமா?" என்று அவன் கிண்டலாய் சிரித்தான். அவனது மனோநிலை அவளையும் தொற்றிக் கொள்ள பொய் கோபத்தில் மூக்கு விடைத்துக் கொண்டு அவனை தள்ளி விட்டு

"ஆமாண்டா...... அப்படிதான் சொல்லுவேன்" என்று திமிராய் அவள் சொல்ல

"எவ்ளோ கொழுப்புடி உனக்கு" என்று அவளை எட்டிப் பிடித்தான்.

"ஆமா...... ம்ம்ம்ம்ம்" என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அதற்கு மேல் பேச முடியாமல் இதழ்களைப் பற்றினான்.(முடிந்தது)

Tuesday, July 24, 2007

அத்தை மகனே! அத்தானே!! - II


ப்ரதாப் அவனது கம்ப்யூட்டரில் ஏதோ வேலையாயிருக்க அவனுக்கு காபி எடுத்துக் கொண்டு வந்த சுதா "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கிறது" என்று அவனைப் பார்த்து பாடியபடியே வந்தாள். சத்தம் கேட்டு அவன் திரும்பி பார்த்த போது அவசர அவசரமாய் வேறுபுறம் பார்வையை திருப்பினாள். அவன் கையில் காபியை கொடுத்தவள் அவனுக்கு எதாவது புரிந்திருக்குமோ என்ற ஆசையாய் அவனைப் பார்த்தால் அவனோ எதையும் சட்டை செய்யாமல் அவனது வாழ்க்கையின் சந்தோஷமே அந்த காபியை குடிப்பதில்தான் இருக்கிறது என்பது போல காபியை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தான். சற்றே எரிச்சலுற்றவள் இன்று எப்படியாவது சொல்லி விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள். எவ்வளவுதான் தைரியமான பெண்ணாயிருந்தாலும் காதல் கோழையாக்கி விடுவது இயல்புதானே. அதற்கு சுதா மட்டும் விதிவிலக்கா என்ன? எப்படி ஆரம்பிப்பதென்று யோசித்தவள் மீண்டும் பாடலின் துணையையே நாடினாள்.

"காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவி நான்" என்று அவனுக்கு நேராய் ஜன்னலில் சாய்ந்து நின்றபடி பாடினாள். இம்முறை அவளது பாடலுக்கு செவி சாய்த்தவன் நிமிர்ந்து பார்த்தான். இப்பொழுதாவது புரிந்து விட்டதா? இதயம் படபடவென்று வேகமாய் அடிக்க கண்களில் காதல் ததும்ப அவனை ஆவலாய் பார்த்தாள்.

"ஏன்டி..... ஏழாங்கிளாஸ்லயே ஏழு தடவ உக்காந்து உக்காந்து வந்த..... நீயெல்லாம் எங்க ஒரே அட்டம்ப்ட்ல பாஸ் பண்ண போற?" என்று சத்தம் போட்டு சிரித்த சிரிப்பு அவளுள் இருந்த சுயமரியாதையை தட்டி எழுப்ப

"ட்வெல்த்லயும் ஸ்கூல் ஃபர்ஸ்ட்.... இதுவரைக்கும் எல்லா செமஸ்டர்லயும் ஃபர்ஸ்ட் மார்க்... என்ன பாத்தாடா ஏழாங்கிளாஸ்லயே ஏழு தடவ ஃபெயிலுனு சொல்ற" என்றபடியே அவன் தலையில் அடித்தாள். அவன் சிரித்தபடியே தடுக்க கோபம் பொங்கியவளாய் அறையை விட்டு வெளியேறினாள்.

நேராக வீட்டிற்கு வெளியே சென்றவள் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தாள். கோபத்தில் இதழ்கள் துடிக்க ஒரு ஐந்து நிமிடம் அமைதியாய் இருந்தாள். ச்சே. எப்பவும் போல விளையாட்டுக்குதான பேசினான். ஏன் இப்படி கோபப்பட்டு வந்தேன் என்று தன்னைதானே கடிந்து கொண்டவளுக்கு இது அவனது கிண்டலினால் வந்த கோபம் அல்ல. அவளது காதலை அவன் புரிந்து கொள்ளாததால் வந்த கோபம் என்று தெளிவாக புரிந்தது. ப்ச்.... பாவம் அவனை வேறு அடித்து விட்டோமே என்று வருந்தியவள் எழுந்து அவனது அறைக்கு சென்றாள். அவன் யாரிடமோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததால் அமைதியாய் பின்னால் நின்றாள்.

"டேய்! ப்ளீஸ்டா செல்லம். நாளைக்கு உன்னை கண்டிப்பா ஷாப்பிங் கூட்டிட்டு போறேன். இதுக்காக எல்லாம் பேச மாட்டேனு சொல்லாத.... நீ பேசாம என்னோட யார் பேசுவாங்கன்னு சொல்லு.... செல்லம் இல்ல.... தங்கம் இல்ல.... என் புஜ்ஜி இல்ல....." என்று அவன் பாட்டுக்கு கொஞ்சி கொண்டிருக்க அவளுக்கு ஏதோ சுறுசுறுவென்று ஏறியது. சிறிது நேரத்தில் அவன் வைத்து விட அவன் முன் போய் நின்றவள்

"யாருகிட்ட மாமா இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்த?" என்றாள்.

"இப்போதான் பெரிய இவளாட்டம் கோவிச்சிக்கிட்டு போன? இப்ப மட்டும் எதுக்குடி பேசற?"

"நீ மொதல்ல சொல்லு.... யார்ட்ட பேசிட்டு இருந்த?"

"என் ஃப்ரெண்டுடி.... கூட வொர்க் பண்றா...."

"அதுக்குனு இப்படி கொஞ்சிட்டு இருக்கற"

"ஏய்! அவ எனக்கு ரொம்ப க்ளோஸ். இன்னைக்கு ஷாப்பிங் போகணும்னு சொல்லியிருந்தா. என் டேமேஜர் அதுக்குள்ள வேலைய குடுத்து உக்கார வச்சுட்டாரு. அதான் கோவிச்சிக்கிட்டு பேச மாட்டென்றா" என்றவாறு அவன் எழுந்து வெளியே செல்ல அவன் சட்டையை பிடித்து உள்ளிழுத்தாள். அவனை சுவறோடு சாய்த்து அவன் சட்டை காலரைப் பிடித்து

"இங்க பாரு. இனிமேல் ஃப்ரெண்டு அவ இவனு யார்கூடயாவது சுத்திட்டு இருந்த...... என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது...... சரியா?" என்றாள். அவன் திகைத்து விழிக்க

"இங்க பாரு மாமா உன்னைதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு என்னைக்கோ முடிவு பண்ணிட்டேன். ஐ லவ் யூ"

அவன் விழிகள் அதிர்ச்சியில் அப்படியே உறைய
"இங்க பாரு உனக்கு ரெண்டே ரெண்டு சாய்ஸ்தான். ஒண்ணு மி டூன்னு சொல்லு. இல்லைனா எப்போ கல்யாணத்த வச்சுக்கலாம்னு கேளு".
அவன் மௌனமாய் இருக்கவே

"நீ எனக்கு தாலி கட்டறியா இல்ல உன்னை தூக்கிட்டு போய் நான் கட்டவா?" என்று அவள் பொறுமையிழந்து கேட்கவும் நினைவு வந்தவனாய் அவள் கையை எடுத்து விட்டவன்

"என்னடி விட்டா ரொம்ப பேசிட்டே போற?" என்று மீண்டும் சேரில் அமர்ந்தான்.

"உன் பதில் என்னன்னு சொல்லு"

எவ்வித உணர்ச்சியுமின்றி ஒரு நிமிடம் அவளையே இமைக்காமல் பார்த்தான்.
"ஏன்டி உனக்கு இப்படியெல்லாம் தோணுது? இதுவரைக்கும் எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்ல. இனிமேலும் வருமோனு தெரியாது" என்று அவன் சொன்னதை கேட்டதும் அவளால் அங்கே நிற்க முடியவில்லை. எதோ இருட்டிக் கொண்டு வருவது போல இருந்தது. அப்படியே தலையை பிடித்துக் கொண்டு பெட்டில் அமர்ந்தாள். ஒரு ஐந்து நிமிடம் பொறுத்து அவன் எழுந்து அவளருகில் வந்தான்.
"என்னடி ஆச்சு?" என்றபடி அவள் தலையில் கைவைக்க அவனது கைகளை பட்டென்று தட்டி விட்டாள். வேகமாய் எழுந்தவள்

"இங்க பாரு. இனிமேல் நீயா வந்து கேட்டா ஏன் காலைப் பிடிச்சு கெஞ்சினா கூட நான் உன்னை நிச்சயமா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்று அவனை நேராக பார்த்து சொல்லி விட்டு விடுவிடுவென்று அறையை விட்டு வெளியேறினாள்.
தொடரும்......

Monday, July 23, 2007

அத்தை மகனே! அத்தானே!! - I


வேக வேகமாய் ஓடி வந்த சுதா பிரதாப்பின் மேல் மோதி நின்றாள். ஒரு நிமிடம் தடுமாறி சுதாரித்தவன்

"எரும மாடே! கண்ணு தெரியல? உங்கப்பா உன்ன இப்படிதான் வளத்தாரா? அடக்க ஒடுக்கம்னா என்னன்னே தெரியாது" என்று திட்ட சுய நினைவுக்கு வந்தவள்

"எவ்ளோ கொழுப்பு இருந்தா நீ எங்கப்பாவ பத்தியெல்லாம் பேசுவ? உங்கம்மாட்ட அப்பவே சொன்னேன். இவனுக்கு நெய் ஊத்தி போடாதீங்க. கொழுப்பு ஏறிட்டே போகுதுனு. உங்கம்மா கேட்டாதான?" என்று இடுப்பில் கைவைத்து அவள் திமிராய் சொல்ல

"ஆமா.... உங்கப்பா மாசம் ஆனா வண்டி வண்டியா நெய் அனுப்பறாரு... போடி.... சொல்ல வந்துட்டா" என்றான் கிண்டலாய்.

"எங்கப்பா எதுக்குடா உனக்கு நெய் அனுப்பனும்?" என்று அவள் எகிற

"ஏ! மரியாதையா பேசுடி.... உங்கப்பா உனக்கு மரியாதை கூட சொல்லி தரலையா? வாங்க மாமா போங்க மாமானு மரியாதையா சொல்லு"

"வாடா மாமா..... போடா மாமா..... இது ஓகேவாடா மாமா உனக்கு???" என்று அவள் பழிப்பு காட்டினாள்.

"எவ்வளவு திமிருடி உனக்கு???" என்றபடி அவன் கையை ஓங்க

"அத்தை.... என்னை அடிக்கறான்" என்று கத்தியபடியே சமையலறைக்குள் ஓடினாள்.

"ஏன்டா அவள்ட்ட சும்மா வம்பு பண்ணிட்டே இருக்க?" என்று ப்ரதாப்பின் அம்மா சலித்துக் கொள்ள

"அவள மொதல்ல சும்மா இருக்க சொல்லுங்கம்மா" என்று அவன் புகார் வாசித்தான்.

"என்னவோ உங்க சண்டைல என்னை இழுக்காதீங்க" என்று அவர் கழண்டு கொள்ள அமுக்கமாய் சுதா கிளுக்கி சிரித்தாள்.

"உன்ன அப்புறம் கவனிச்சிக்கறேண்டி" என்று அவன் விரலை ஆட்டி சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

------------------------------------ooOoo------------------------------------

"ஏய்! என் பெயிண்டிங்ஸ் எடுத்து என்னடி பண்ற?" என்றபடியே வேக வேகமாய் ரூமுக்குள் வந்தான் ப்ரதாப். அவன் பெட்டில் அமர்ந்து அவனுடைய பெயிண்டிங்ஸ் எல்லாவற்றையும் எடுத்து அவளைச் சுற்றி பரப்பி வைத்திருந்த சுதா

"ஓ! இதெல்லாம் நீ வரைஞ்சதா மாமா???!!! நான் கூட ஏதோ பிக்காஸோ பெயிண்டிங்ஸ்தான் வாங்கி வச்சிருக்கியோஓஓஓ.......னு நினைச்சேன்" என்று அவள் உதட்டை பிதுக்கி சிரித்தாள்.

"உன்ன........" என்று பற்களை கடித்தவன் அவள் கழுத்தில் கைவைத்து சுவற்றோடு சாய்த்தான்.

"அய்யோ என்னை கொல்றான் கொல்றான்" என்று அவள் கத்த அவள் வாயில் கை வைத்து பொத்தினான். அவள் பயத்தில் விழிக்க அருகில் வந்தவன் அலைபாயும் அவளிரு விழிகளையே ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தான். அவள் அப்படியே கண்களை மூட ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவன் பின் கைகளை விலக்கி திரும்பி வெளியே சென்றான்.

ஏதோ இனம் புரியாத உணர்வொன்று அவளை சூழ்ந்து கொள்ள அதுவரை சொல்லாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த காதல் மழை மேகம்
கண்ட மயில் தோகையாய் அழகாய் விரிந்து ஆடியது.

------------------------------------ooOoo------------------------------------

கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பும் வழியில் ஒரு சிறுவன் ஒரு சிறுமிக்கு சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுப்பதை கண்டதும் அவளையும் மீறி அவள் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.

"நீ நடக்க ஆரம்பிச்சப்ப பொசுக்கு பொசுக்குனு விழுந்துடுவ. ப்ரதாப் தான் ஓடி வந்து தூக்கி கைப்பிடிச்சி நடக்க வைப்பான்"

"அவன் எப்பயாச்சும் சான்ஸ் கிடைச்சா நல்லா அடிபடற மாதிரி தள்ளி விடலாம்னு ப்ளான் பண்ணிதான் இதெல்லாம் பண்ணியிருப்பான்" என்று அதற்கும் வாயாடியது நினைவுக்கு வர மெலிதாய் புன்னகைத்தாள்.

'இப்படி உன்னோட எப்பவும் சண்டை போட்டேதானடா எனக்கு பழக்கம்? எப்படி எனக்குள்ள வந்த??' என்றவளது எண்ணம் பின்னோக்கி சென்றது.

அவள் பன்னிரெண்டாம் வகுப்பிலிருந்த போது அவன் கல்லூரி இறுதியாண்டு. ப்ராஜக்டிற்காக ஹைதராபாத் கிளம்பி கொண்டிருந்தான். முடித்தபின் அங்கேயே வேலையில் சேர்ந்து கொள்வது போல கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகியிருந்தான். அவனுக்கு விடை கொடுப்பதற்காக சுதா வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தனர். எப்பொழுதும் போல இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது யதேச்சையாய்

"இனிமேல் பாருடி... அங்க போயி ஒரு நல்ல ஃபிகரா பாத்து ஃப்ரெண்டு பிடிச்சு அவளோடதான் பேசுவேன். உன்னோட இனி பேசக் கூட
மாட்டேன்" என்று அவன் சொன்னதும் அவளுக்கு பொசுக்கென்று கோபம் வந்தது.

"நீ பேசலைனு நான் ஒண்ணும் அழலை. எங்கேயோ போயி எக்கேடோ கெட்டு போ...... எனக்கென்ன வந்துச்சாம்" என்று எரிந்து விழுந்தவள் அவனிடம் அதற்கு பிறகு பேசவே இல்லை.

அதற்கு பின் ஒவ்வொரு முறையும் அவன் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் எதோ ஒன்றை தொலைத்தது போலவே தவித்தாள். என்னவென்று புரியாமல் குழம்பினாள். ஃபோன் செய்து பேசலாம் என்று நினைக்கும்போதெல்லாம் அவனாய் பேசும் வரை தானும் பேசக் கூடாது என்ற ஈகோ வந்து தடுத்தது. இந்த நிலையில் முழுத் தேர்வு வந்தது. அதில் கவனம் செலுத்தியதில் அவனைப் பற்றிய நினைவு சிறிது விலகிப் போயிருந்தது. தேர்வுக்கு இரண்டு நாட்களே இருக்கும்போது அவனிடம் இருந்து தேர்வு நன்றாய் எழுத வாழ்த்து அட்டை வந்தது. அதை கண்டதும் வாழ்க்கையில் தொலைத்த அதி அத்தியாவசியமான பொருள் ஒன்று மீண்டும் கைசேர்ந்தது போல பொங்கிய சந்தோஷத்தில் கண்கள் பனித்தது. ஓடிச் சென்று அவசர அவசரமாய் ஃபோன் செய்து அவனிடம் பேசினாள். நான்கு மாதங்களாய் சேர்த்து வைத்திருந்த ஏக்கங்கள் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தாள்.

அன்று மனதில் பூத்த காதல் இது நாள் வரை அவளது இதயத்தில் மட்டுமே மணம் பரப்பிக் கொண்டிருந்தது. அவனிடம்தான் முதலில் சொல்ல
வேண்டுமென்ற எண்ணத்தில் அவளது நெருங்கிய தோழியிடம் கூட சொல்லாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தாள். ஆனால் அவனிடம்
சொல்வதற்கு இதுவரை தைரியமே வரவில்லை. இதுவரை அவன் என்ன நினைக்கிறான் என்பது பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தவள் நேற்று
அவன் நடந்து கொண்ட விதத்தில் அதையும் சிந்திக்க ஆரம்பித்தாள். இந்த முறை நிச்சயம் சொல்லி விட வேண்டுமென்று முடிவெடுத்த வேளையில்
வீட்டை அடைந்திருந்தாள்.

"அம்மா இங்க பாருங்களேன் உங்க அண்ணன் மகள.... இவளுக்கு அப்போவே கீழ்ப்பாக்கத்துல ஒரு சீட் புக் பண்ணிடலாம்னு அப்பவே சொன்னேன். யாராவது கேட்டீங்களா??? அய்யோ.... இப்ப வேற சீட் கிடைக்குமானு தெரியலையே" என்று ப்ரதாப் புலம்ப அவனை என்ன என்பது போல பார்த்தாள்.

"உனக்கு மொதல்ல சீட் இருக்கானு பாரு" என்று மெதுவாய் சொன்னாள்.

"நானா கைல குடைய வச்சுக்கிட்டு மழைல நனைஞ்சுகிட்டே ட்ரீம் அடிச்சிட்டு வரேன்???" என்று அவன் கேட்டதும் தான் கவனித்தாள் கையிலேயே குடையை வைத்துக் கொண்டு தொப்பலாய் நனைந்திருப்பதை...
தொடரும்....

Wednesday, July 18, 2007

பாய் ஃப்ரெண்ட் தேவையா???


ஒரு தடவை சிங்கார சென்னைக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாமேன்னு மேடம்(வேற யாரு நாந்தான்) முடிவு பண்ணி டிக்கட் எல்லாம் புக் பண்ணிட்டாங்க. வெள்ளிக்கிழமை நைட் 10 மணிக்கு பஸ். எங்க இந்த ஜிலேபி தேசத்துல ட்ராபிக் தொல்லையோ தொல்லை. அதனால ஒரு 7 மணிக்கே கெளம்பி சிட்டி பஸ்ஸ்டாப்ல போயி நின்னேன். எங்கடா ஒரு பஸ்ஸையும் காணோமேனு அப்டியே சுத்தி ஒரு நோட்டம் விட்டேன். ஓ மை காட்!!!!! ஒருத்தன் என்னையே பாத்துட்டு இருக்கான். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ எவ்ளோ தைரியம்??? ஒரு பொண்ணு அழகா இருந்துட கூடாதே.........


சரி கொஞ்ச நேரத்துல நாயி போயிட போகுதுன்னு விட்டுட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சுப் பாத்தா அப்பவும் பாத்துட்டே இருக்கான். ஆஹ்ஹ்ஹ்!!! என்ன இது சோதனைன்னு கொஞ்சம் தள்ளி இன்னொருத்தர் பின்னாடி நின்னா உடனே அவனும் தள்ளி நின்னு வேலைய ஆரம்பிச்சுட்டான். அய்யய்யோ சீக்கிரம் பஸ் வந்தா பரவால்லயேன்னு நான் வேண்டிக்கிட்டது சாமி காதுல விழுந்துடுச்சு போல. உடனே பஸ் வந்துடுச்சு. அப்பாடான்னு சாமிக்கு நிறைய தேங்ஸ் சொல்லிட்டு ஏறி ஒரு சீட் பாத்து உக்காந்துட்டேன். கொஞ்ச நேரத்துல எனக்கு நேர் சீட்ல இருந்தவர் இறங்கிட்டார். அப்டியே ஜாலியா வேடிக்கை பாத்துட்டு இருந்தப்போதான் ஒரு இடி விழுந்துச்சு. ஐயகோ! அவன் பின்னாடி இருந்து எழுந்து வந்து காலியான அந்த நேர் சீட்ல உக்காந்து மறுபடியும் வேலைய ஆரம்பிச்சுட்டான். பேசாம கூப்பிட்டு ஏன் என்னையே பாக்கறனு கேட்டுடலாமானு ஒரு எண்ணம். உடனே மனசாட்சி அவதாரம் எடுத்து அறிவு இருக்கா உனக்கு? இந்த ராத்திரி நேரத்துல தனியா போற..... எதாவது பிரச்சினை பண்ணினா என்ன பண்ணுவன்னு திட்டினதும்தான் ஆஹான்னு கம்முனு வேற பக்கம் திரும்பி உக்காந்துக்கிட்டேன்.

அப்பாடா...... மெஜஸ்டிக் வந்து சேந்தாச்சுன்னு வேக வேகமா பஸ்ல இருந்து இறங்கி திரும்பி பாக்காம KSRTC பஸ் ஸ்டாண்ட்க்கு வேகமா நடக்க ஆரம்பிச்சேன். ரோடு க்ராஸ் பண்ண வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது அவனும் சைடுல நிக்கறான். ஏதடா இம்சைக்கே இம்சையானு ரெண்டு பக்கமும் வண்டி வருதா க்ராஸ் பண்ணலாமானு திரும்பி திரும்பி பாத்தேன். அவன் மெதுவா "Hi"ன்னு சொன்னான். ஆ! என் சின்ன ஹார்ட் வேக வேகமா அடிச்சுக்குது. வேகமா க்ராஸ் பண்ணி உள்ள போனா அவனும் பின்னாடியே வரான். huh! உடனே வேகமா என் மொபைல எடுத்து என் சென்னை சிங்காரிக்கு ஃபோனப் போட்டேன். அவ எடுத்ததும் சத்தமா "டேய் நாயே! எங்கடா இருக்க? கொஞ்சமாவது அறிவிருக்கா? நான் ஒருத்தி இங்க தனியா வந்துட்டு இருக்கேன்"ன்னு கத்தினேன். அவ புரியாம "என்னடா உளறுற? கிளம்பிட்டியா இல்லயா?"ன்னு பாவமா கேட்டா. "ஓ! சாரிடா..... சென்னை பஸ் பக்கத்துலயா நிக்கிற? இரு ஒரு 5 நிமிஷத்துல அங்க இருப்பேன். பை" சொல்லி கட் பண்ணிட்டு பாக்கறேன் ஆளயே காணோம். அப்படியே அப்ஸ்காண்ட் ஆயிட்டான். அப்பாடான்னு போயி பஸ்ஸ புடிச்சு ஒரு வழியா ஊரு போயி சேந்தேன்.
அப்பதான் ஒரு பாய் ஃப்ரெண்டோட அவசியத்த புரிஞ்சிக்கிட்டேன். அட்லீஸ்ட் பஸ் ஏத்தி விடவாவது ஒரு ஃப்ரெண்ட் வேணும்னு. அடுத்த நாள் இதை என் ஃப்ரெண்ட்கிட்ட சொல்லிட்டு இருந்தப்ப அவ சொன்னா "மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துன கதையா இல்ல இருக்கு நீ சொல்றது"ன்னு. அது சரி...... அவ சொல்றதும் சரிதான. பஸ் ஏத்தி விடறதுக்காக எதுக்கு தொல்லைய கூடவே வச்சுக்கணும்னு நானும் ஃப்ரீயா விட்டுட்டேன் ;)


=========================ooOoo===================================

இதோ இதுக்கு என் அன்பு அண்ணன் CVR குடுத்த ஒரு பாசக்கார க்ளைமேக்ஸ்:
ஏதடா இம்சைக்கே இம்சையானு ரெண்டு பக்கமும் வண்டி வருதா க்ராஸ் பண்ணலாமானு திரும்பி திரும்பி பாத்தேன். அவன் மெதுவா "Hi"ன்னு சொன்னான்
நானும் திரும்பி பாத்து"Hi"னு சொன்னேன்.

"உங்கள பாத்தா சமீபத்துல செத்து போன என் தங்கச்சி மாதிரியே இருக்கீங்க,உங்கள நான் தங்கச்சின்னு கூப்பிடலாமா??"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"
==============================ooOoo=============================

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............. அண்ணா உங்க பாசத்துக்கு அளவே இல்லாம போச்சு. ஆனா இது உண்மையா நடந்த ஒரு விஷயம்..............

Tuesday, July 10, 2007

சுயம்...

"இம்சை...... எல்லாரும் புரியாத மொழி கவிதை எழுதறாங்க. நீ ஏன் எழுதக் கூடாது???"-னு என் கனவுல அடிக்கடி ஒரு அசரீரி ஒலிச்சுக்கிட்டே இருந்துச்சு. அதனால நானும் ரெண்டு நாளா சோறு தண்ணியில்லாம செவுத்தப் பாத்து விட்டத்தப் பாத்து யோசி யோசின்னு யோசிச்சேன். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஏ இவளுக்கு என்னவோ ஆயிடிச்சுடின்னு பயந்து போயி பக்கத்துல இருக்கற அம்மன் கோயில்ல பூஜை பண்ணி குங்குமம் வாங்கிட்டு வந்து பூசற அளவுக்கு ஆயிடுச்சுன்னா பாத்துக்கங்களேன். அதுக்கப்புறமா பொங்கி எழுந்தேன். அதனோட விளைவுதான் இந்த கவுஜ.... ச்சீ..... கவித..... மொழி கவித...... புரியாத மொழி கவித...... (நல்லா எக்கோ அடிக்குதா???:))

சுயம்...

சுயமறிதலின் போரட்டங்களில்
ஆதியின் வாசனைகளோடும்
இருண்ட கனவுகளின் வெளித்தோன்றலாகவும்
மட்டற்ற மனவெளியில்
கட்டுக்கடங்கா கள்வெறியில்
மடையுடைத்துப் பாய்ந்து
நிதம் அலையுதென் சுயம்

குழப்பமாய் நீளும்
என் கனவுகளின் நீட்சியாய்
அடர் கானகத்தின் குகைகளுக்கு
உள்ளும் புறமுமென
அலையுதென் மனம்

சுயம் கொண்டு போராடியும்
எஞ்சிய ஏமாற்றத்தின் சாயலில்
புளிய மர உச்சிவாழ் உயிராய்
தெளிவில்லாமலே நான்

பி.கு :

இந்த கவிதைல கடைசில இருக்கற ரெண்டு வரிகளைத் தவிர மீதி எல்லாத்தையும் அய்யனார், ராம், ஜீவ்ஸ், ஜி கவிதைகள்ல இருந்து சுட்டது ;)))

பி.குக்கு பி.கு :

இந்த கவுஜக்கும் அய்யனார், ராம், ஜீவ்ஸ், ஜி இவங்க கவுஜகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்ல...... இல்ல...... இல்ல..........

பி.குக்கு பி.குக்கு பி.கு :

ஏன்னா இது புலி கவுஜ இல்ல........ புளி கவுஜ................ புளி கவுஜ................ புளி கவுஜ................


சந்தேகம்னா கடைசி ரெண்டு வரிய திரும்ப படிங்க ;)))

Thursday, July 5, 2007

அழகான பொண்ணுதான்... அதுக்கேத்த ஊருதான்...

ஷ்ஷ்ஷ்ஷ் அப்பாஆஆஆ.......... சும்மா வித விதமா ஆணியப் பாத்து பாத்து ஒரே கடுப்பா வருதுன்னு எங்க ரூம்ல ஒரு ரெண்டு நாளா வட்டதரை (எங்க ரூம்ல மேஜை எல்லாம் இல்லீங்க) மாநாடு போட்டு மைசூர் போயிட்டு வரலாம்னு தீர்மானம் போட்டோம். ஒரு நல்ல வெள்ளிக் கிழமை சாயந்திரம் 5 மணிக்கா எங்க புனித பயணத்த ஆரம்பிச்சோம். மைசூர்ல இருந்த எங்க ஃப்ரெண்ட் ரூம்ல தங்கி இந்த ஊர் சுத்தற வேலைய வெற்றிகரமா முடிச்சுட்டு வந்துட்டோம். எங்க எல்லாரும் ஜோரா கைதட்டுங்க பாப்போம்...... எங்க ஃப்ரெண்ட் ரொம்ப புத்திசாலி(அப்புறம் எப்படி உனக்கு ஃப்ரெண்டா இருக்கறான்னு கேக்கப்படாது). பக்காவா ப்ளான் பண்ணி ரெண்டே நாள்ல மைசூர சூப்பரா சுத்திக் காட்டினா. எங்க ப்ளான்

சனிக்கிழமை:

1. திப்பு சுல்தான் சம்மர் பேலஸ்
2. மைசூர் மஹாராஜா பேலஸ்
3. ப்ருந்தாவன் கார்டன்

ஞாயிறு:

1. சாமுண்டி ஹில்ஸ்
2. கரஞ்சி லேக்
3. எங்க ஆபிஸ்

எங்கயாவது டூர் போறவங்களுக்கு என்னோட ஒரே அட்வைஸ் என்னன்னா போற நாள் எல்லாத்துக்கும் ஃபர்ஸ்ட்டே பக்காவா ப்ளான் பண்ணிட்டு போங்க. இது வரைக்கும் அந்த மாதிரி பண்ணாம நான் எப்பவும் சொதப்புவேன். இப்போ இந்த ஃப்ரெண்டை பாத்ததும்தான் இதுலதான் இவ்ளோ சொதப்பல் ஆகுதுனு தெரிஞ்சு இனி அவள மாதிரி இருக்கணும்னு முடிவு பண்ணினேன். அவ்ளோ பக்காவா எல்லா எடத்துக்கும் எங்கள கூட்டிட்டுப் போனா. ஓகே. இனி ஓவர் டு மைசூர்..........

1. மைசூர் :

ஊரே ரொம்ப அழகு...... ரொம்ப சுத்தம்..... ரொம்ப அமைதி...... நாங்க போனப்ப க்ளைமேட் படு ஜோரா இருந்ததால ஒரு ஹில் ஸ்டேஷன்ல இருந்த ஒரு ஃபீல். வீடெல்லாம் வித்தியாசமா கட்டி இருந்தாங்க. எப்பேற்பட்ட வீடா இருந்தாலும் ஒரு ஓடாவது வச்சிடறாங்க. மாடி வீடுன்னா ஜன்னலுக்கு ஓடு இப்படி. அப்புறம் வாட்டர் டேங்க் எல்லாம் கீழ இருக்கற படத்துல இருக்கற மாதிரி எதாவது ஒரு டிசைன்ல. செடியோ மரமோ இல்லாத வீட நாங்க பாக்கவே இல்ல. கட்டிட வேலை ஆரம்பிக்கும்போதே செடி நாட்டுடறாங்க. ஹ்ம்ம்ம்ம்.......... அப்படியே சென்னனய நினைச்சு ஒரு பெருமூச்சு மட்டும்தான் விட முடிஞ்சது.........
2. திப்பு சுல்தான் சம்மர் பேலஸ் :

இது திப்பு சுல்தான் சம்மர் பேலஸ். ஹ்ம்ம்ம்...... சம்மர்ல போயி ரெஸ்ட் எடுக்கறதுக்கு எல்லாம் மனுஷன் என்னமா கட்டி வச்சிருக்கார். இங்க நான் ரொம்ப ரசிச்ச விஷயம் பெயிண்டிங்ஸ். ரொம்ப அழகா இருந்தது. சுத்தி இருக்கற கார்டன ரொம்ப அழகா சுத்தமா மெயின்டெயின் பண்ணிட்டு இருக்காங்க. உள்ள ஃபோட்டோ எடுக்க அனுமதி இல்ல :-(

3. மைசூர் மஹாராஜா பேலஸ் :

மைசூர்ல இருக்கற ரொம்ப முக்கியமான இடம் இந்த பேலஸ். உள்ள போனதும் ஆஆன்னு வாய பொளந்துக்கிட்டு பாத்த எனக்கு தோணின ஒரே விஷயம் "மனுஷன் என்னமா வாழ்ந்திருக்கார்!!!!!". இதுக்கு மேல எனக்கு சொல்ல வார்த்தையே தெரியலை. அழகுன்னா அழகு அவ்வளவு அழகு. சுவர்ல விட்டத்துல இப்படி எங்க பாத்ததலும் ஒரே பெயிண்டிங்ஸ்தான். அந்த காலத்துல போருக்கு போனது, திருவிழா நடந்தது, அரசர்கள், அரசிகள், இளவரசர்கள், இளவரசிகள் இப்படி எல்லாருடைய பெயிண்டிங்ஸ்ம் அவ்வளவு அழகா வரைஞ்சிருந்தாங்க. வரைஞ்ச ஓவியர் மட்டும் இருந்திருந்தார்னா கால்ல விழுந்து கும்பிட்டிருப்பேன். அப்புறம் ராஜா பயன்படுத்திய வாள், வேல், துப்பாக்கில இருந்து இளவரசர் விளையாண்ட சொப்பு சாமான்கள், குதிரை வண்டி, அவங்க போட்ட உடைகள், மது கிண்ணங்கள் வரைக்கும் எல்லாமே வச்சிருக்காங்க.
4. பிருந்தாவன் கார்டன்:

இதும் ரொம்ப அழகான இடம். கிருஷ்ணசாகர் அணைகிட்ட இருக்கு. இங்க டேன்ஸிங் ஃபால்ஸ்னு ஒண்ணு இருக்கு. இது ரொம்ப ஸ்பெசல். போறவங்க இதை மிஸ் பண்ணிடாதீங்க.

5. சாமுண்டி ஹில்ஸ்:

இங்க சாமுண்டீஸ்வரி கோவில் இருக்கு. ரொம்ப சக்தி வாய்ந்த சாமியாம். இந்த சாமிக்குதான் ஜெயலலிதா தங்க கிரீடம் செஞ்சு குடுத்தாங்களாம்.


6. கரஞ்சி லேக்:

ரொம்ப அமைதியான பார்க். உள்ளேயே ஏரியும் இருக்கு. மைசூர்லயே பெரிய லவ்வர்ஸ் பார்க் இதுவாதான் இருக்கும்னு நினைக்கறேன் ;)

இங்கதான் மொதல்ல மயில் தோகை விரிக்கறத நேர்ல பாத்தேன். அவ்ளோ அழகு. தோகைய சுருக்கினதுக்கு அப்புறம் கொத்தி கொத்தி அழகா அடுக்குது பாருங்க....... வாவ்.........


அன்ன பறவை இனமே அழிஞ்சிடுச்சுனு கேள்விப்பட்டேன். இங்க என்னடான்னா வெள்ளை கலர்ல கருப்பு கலர்லன்னு நிறைய இருக்கு :)இது பஸ்க்காக வெயிட் பண்ணிட்டு இருந்தப்போ எடுத்தது. ரொம்ப அழகா பண்ணியிருக்காங்கன்னு எடூத்தோம் :)


ஓகே................ மைசூர் சுத்தி பாத்துட்டீங்களா??

இது நம்மளோட 50வது போஸ்ட். எப்படியோ தட்டு தடுமாறி நானும் 50ஐ தொட்டுட்டேன். அதான் உங்க எல்லாருக்கும் ஃப்ரீயா மைசூர சுத்தி காட்டினேன் :)))

கைடு வேல நல்லா பண்றேனா??? ;)

Monday, July 2, 2007

எட்டுக்குள்ளே உலகம் இருக்கு ராமையா...

அட அட அட.... பாசக்கார பயபுள்ளக நம்மள விடாம இம்புட்டு இழுத்து புடிக்கறத நினைக்கும்போது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஒரே ஆனந்த கண்ணீரா வருது. நம்ம புளி ச்சே... பாசக்கார புலி, நிலவு நண்பன், காதல் முரசு அருட்பெருங்கோ, கொல்லிமலை சாரல் JK எல்லாரும் வாங்க வாங்கன்னு என்னையும் ஆட்டத்துல இழுத்து விட்டுட்டாங்க. இன்னும் போடலையா-ன்னு கோவத்துல புலி உறுமின உறுமுல பயந்து அலறியடிச்சுட்டு 8 போட ஓடியாந்துட்டேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். நம்மள பத்தி எட்டு பெருமையான விஷயத்த சொல்லனும்னு சொன்னதும் என்ன அப்படி நம்மகிட்ட எட்டு பெருமையான விஷயம்னு நின்னுக்கிட்டு யோசிச்சேன்.... உக்காந்தும் யோசிச்சேன்..... படுத்துக்கிட்டும் யோசிச்சேன்..... என்னய்யா இது அநியாயம். இப்போ தாஜ்மஹால் உலக அதிசயம்னா அதுல இருக்கற கதவு, ஜன்னல், தரை இப்படி ஒண்ணொன்னையும் அதிசயம்னு சொல்லிட்டு இருக்க முடியுமா??? அந்த மாதிரிதான். என்னை பொறுத்த வரைக்கும் உலக அதிசயம் எட்டும் நாந்தான்(இப்படியெல்லாம் மொறைக்கப்படாது:)))) அப்புறம் என்ன தனி தனியா பிரிச்சு எழுதிட்டுன்னு எனக்கே என் மேலயே கடுப்பா வந்துச்சு. அதான் நம்ம லிஸ்ட் இப்டி அழகா வந்துடுச்சு. ஹி... ஹி... உருட்டு கட்டையெல்லாம் அப்டியே ஓரமா தூக்கிப் போட்டுட்டு வரனும்.

1. நான்
2. ஜெயந்தி
3. இம்சை அரசி
4. ஜெயராஜ், ஜெயலஷ்மியோட பொண்ணு
5. தினேஷோட அக்கா
6. என் ஃப்ரெண்ட்ஸுக்கு நல்ல ஃப்ரெண்ட்
7. தொல்ஸ் அண்ணா, தேவ் அண்ணா, சிபி அண்ணா, ராம் அண்ணா, ஐயப்பன் அண்ணா, CVR அண்ணா இவங்களுக்கு தங்கச்சி
8. வரப் போற என் ஆத்துக்காரருக்கு ஒரு அழகான ராட்சசி (யாருல அது இதெல்லாம் நெம்ப ஓவருன்னு சொல்றது???)

அப்புறம் நம்ம தலைவர் வேற எட்ட பத்தி ஒரு பாட்டு பாடியிருக்கார். அதான் ஒரு ஸீனா இருக்குமேனு இந்த தலைப்பு வச்சேன். தலைப்ப பாத்துட்டு வந்து ஏமாந்திருந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல சாமியோவ்.......

எனக்கு தெரிஞ்சு எல்லாருமே எட்டு பதிவ போட்டுட்டாங்க. நிறைய பேர் கூப்பிட்டும் இன்னும் போடாம இருக்கறது எங்க அண்ணன்தான். ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சின்னு எப்படி ப்ரூஃப் பன்றோம் பாருங்க. ஹ்ம்ம்ம்...... அவரே ஒரு பெருமையான விஷயம். அவர் என்ன எழுதறாருன்னு பாக்கறேன்.

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.


பி.கு: இந்த மாதிரி ரூல்ஸை ஃபாலோ பண்றேன் பாருங்க. இதுவே எம்புட்டு பெரிய பெருமையான விஷயம்!!!!

ஷ்ஷ்ஷ்ஷ்........ அப்பாஆஆஆஆஆஆ....... இப்பவே கண்ண கட்டுதே...... போயிட்டு வரேனுங்க........