Tuesday, February 27, 2007

வலி - I

'ஏன் இங்க white box error வருது?' கம்பூட்டரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த மனோ அருகில் ஏதோ நிழலாட நிமிர்ந்து பார்த்தான். அவனை முறைத்துக் கொண்டு துர்கா நிற்பதைக் கண்டதும் ஆச்சர்யமானவன்

"என்ன என் ஃபேன்ஸ எல்லாம் பாக்கனும்னு வந்தியா?? எல்லாரையும் பாக்கனும்ணா உனக்கு கழுத்து வலியே வந்துடும். ஹ்ம்ம்ம். அவ்ளோ பேர் இருக்காங்க" என்றான்.

"உன் மூஞ்சிக்கு இன்னும் ஃபேன்ஸ் ஒண்ணுதான் கொறச்சல். நான் இங்க வந்து எவ்ளோ நேரமாச்சு தெரியுமா? உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். வா போய் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்" என்றவள் அவன் பதில் பேச வாயெடுக்கும் முன் அவனை இழுத்துக் கொண்டு சென்றாள்.

"சொல்லுடா. எதோ முக்கியமான விஷயம்னு சொன்னியே" என்றபடியே சான்ட்விச்சை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தவன் "எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாத்துட்டாங்க" என்று அவள் சொன்னதும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி நிமிர்ந்தான்.

"ஹே! நிஜமாவா சொல்ற?" என்றவன் முகத்தில் புன்னகை விரிய சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான்.

"எப்படியோ ஒருத்தனுக்கு ஏழரை ஆரம்பிக்கப் போகுது. யாரு அந்த அப்பாவி?? டீடெயிலா சொல்லு" என்று அவன் அவசரப்படுத்தவும் அவனை சில விநாடிகள் முறைத்தவள்

"எங்களுக்கு தூரத்து சொந்தமாம். ஜாதகமெல்லாம் ஒத்து வந்துடுச்சாம். இப்ப சிகாகோல வொர்க் பண்ணிட்டு இருக்காங்களாம். மூணு மாசத்துல இங்க வராங்களாம். கல்யாணம் முடிஞ்சதும் கூட்டிட்டு போயிடற மாதிரி எல்லாரும் ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க. எல்லாமே பேசி முடிச்சிட்டாங்க" என்று அவள் சொல்லி முடிக்கவும்

"சிகாகோ போறியா? வாவ். சிகாகோவில் சின்ன குரங்கு. இது எப்படி இருக்கு?" என்று சிரித்தான். அவள் கோவித்துக் கொண்டு எழுந்து செல்லவும் அவள் பின்னாலேயே சென்றான்.

"ஹே! விளையாட்டுக்கு சொன்னா ஏன் இப்படி கோவிச்சுக்குவ? ஃபோட்டோ பாத்தியா? பேசினியா?" என்று அவன் சமாதானமாய் கேட்டதும் அவள் முகம் சிவக்க "சும்மாயிருடா. இப்பதான பேசியிருக்காங்க. அதுக்குள்ள என்ன அவசரம்" என்று சிணுங்கினாள். அவளை கிண்டலடித்துக் கொண்டே அன்றைய பொழுது ஓடியது.

இரவு பஸ்ஸில் மனோவின் தோளில் சாய்ந்து கண்களை மூடியிருந்தவள் திடீரென்று நிமிர்ந்து "இன்னும் கொஞ்ச நாளைக்குதான இப்படி இருப்போம்" என்றவளது கண்கள் அவளையும் அறியாமல் கலங்கியது.

"உனக்கு என்ன? ஜாலியா உன் சிகாகோ மாப்பிள்ளையோட டூயட் பாடிட்டிருப்ப" என்றான்.

"நான் போனதுக்கு அப்புறம் எப்படியும் உனக்கு புது ஃப்ரெண்ட் கிடைப்பா. அதுக்கு அப்புறம் என்னை மறந்துடுவியா?" என்று அவள் கேட்டதும் சிரித்தவன்

"உன்னை எப்படி மறப்பேன். என் புது ஃப்ரெண்ட்கிட்ட குரங்கு குட்டி மாதிரி ஒண்ணு என்னை ஒட்டிட்டே அலையும்னு உன்னை பத்தி பெருமையா சொல்லுவேன்ல" என்றான்.

"அப்ப நீ என்ன எனக்கு அம்மா குரங்கா?" என்று அவள் கேட்டதும் "இல்ல நான் குரங்காட்டி" என்றான்.

"போடா. உன்னோட நான் பேசவே மாட்டேன்" என்று கோவித்துக் கொண்டு எழுந்து சென்று வேறு ஸீட்டில் உட்கார்ந்துக் கொண்டாள். மனோ அவளிடம் எதுவும் பேசவில்லை.

அன்று இரவு முழுவதும் அவனுக்கு அவள் ஞாபகமாகவே இருந்தது. அவளை முதல் முதலாய் ட்ரெயினிங்கின் போது சந்தித்தது. அங்கு அறிமுகமே இல்லாமல் நாட்கள் ஓட ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் அவன் பஸ்ஸிற்காக காத்திருந்த போது அவளாய் வந்து பேசி அவளை அழைத்து செல்லுமாறு கேட்டுக் கொண்டது. அன்று ஆரம்பித்த அவர்கள் நட்பு இருவரும் ஒரே ப்ராஜக்டில் சேர்ந்த பின் வளர்ந்து இந்த ஒரு வருடத்தில் விருட்சமாகி நிற்கிறது. எப்பொழுதும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தவர்கள் இனி பிரியப் போகும் நேரம் வந்து விட்டது என்றெண்ணும்போது அவனுக்கு ஏதோ ஒன்று அவனை விட்டு செல்வது போல தோன்றியது. தூக்கம் வராமல் புரண்டவன் அவளுக்கு ஃபோன் செய்தான். வெகு நேரம் பிஸியாக இருக்கவே வைத்து விட்டு எழுந்து வெளியே வந்தான்.

அங்கிருந்த ரோஜாத் தொட்டிகளைப் பார்த்ததும் அவனுள் ஏதோ செய்தது.
"எனக்கு ரோஸ் செடி வளத்தனும்னு ரொம்ப ஆசைடா. ஆனா வீட்ல இடமே இல்ல. PGலயும் வைக்க முடியாது. உங்க ரூம் முன்னாடி நிறையா இடம் இருக்குதான" என்று நிறைய செடிகளை வாங்கி வைத்தாள். முதல் முதலாய் பூ பூத்த போது அதை பறித்துச் சென்று அவளிடம் கொடுத்தான்.

"ஏன்டா பறிச்ச? நான் பூ வைக்க மாட்டேன். தலைல வச்சா என்னால பாக்க முடியாது இல்ல" என்று அவள் சொன்னபோது அவனுக்கு ஏதோ வித்தியாசமாய் தெரிந்தாள்.

'என்ன இது எதைப் பாத்தாலும் அவ ஞாபகமாவே வருது' என்று தலையை சிலுப்பிக் கொண்டு சென்று படுத்தான். வெகு நேரம் இப்படியே நினைத்துக் கொண்டிருந்தவன் அப்படியே உறங்கிப் போனான்.

(தொடரும்)

Thursday, February 15, 2007

தயவு செய்து யாராவது எங்களுக்கு உதவுங்களேன்

நாங்க நாலு பேர். எங்க அகராதில பயம் என்ற வார்த்தைக்கு இடமே கிடையாது. நாங்க செஞ்ச சமையலை நாங்களே சாப்பிடறோம்னா பாத்துக்கங்களேன். அஞ்சு யானைங்களை எங்க மேல ஏத்தலாம். அவ்ளோ தைரியம்!!!

சரி அதை விடுங்க. நம்ம மேட்டருக்கு வருவோம். பொங்கல், இட்லி, தோசை, நூடுல்ஸ், இடியாப்பம், சப்பாத்தி, பூரி, ரவா தோசை, கோதுமை தோசை, மைதா ரொட்டி இதையெல்லாம் திருப்பி திருப்பி சாப்பிட்டு ரொம்ப போரடிச்சு போச்சு. வேற எதாவது புதுசா செய்றதுக்கு ஐடியா குடுங்களேன் ப்ளீஸ். நல்ல ஐடியாவா குடுக்கறவங்களை ஒவ்வொரு தடவை சாப்பிடும்போதும் நினைச்சுக்குவோம்(உங்களுக்கு விக்கல் எடுக்குதுனு கோவமா வந்தா அதுக்கு நாங்க பொறுப்பு இல்ல :)))))

நீங்க ஐடியா குடுக்கறதுக்கு முன்னாடி நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

1. செய்முறை ரொம்ப எளிமையா இருக்கணும்
2. எப்படி செஞ்சாலும் அதை சாப்பிடற மாதிரி இருக்கணும்
3. என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட நான் சபாஷ் வாங்கணும் (ஏதோ வைர மோதிரம் போடற அளவுக்கு இல்லாட்டியும் அட்லீஸ்ட் தங்க மோதிரமாவது அவங்க எனக்கு செஞ்சு போடணும்)

அவ்ளோதான்..........

இங்க நிறைய ரங்கமணிங்க சூப்பர் சூப்பரா செஞ்சு அவங்க தங்கமணிகிட்ட சபாஷ் வாங்கியிருப்பிங்க. கொஞ்சம் உங்க ஐடியாக்களை வாறி இறைங்க பார்ப்போம்........

காதலர் தினம்







நேத்து ரொம்ப ஆணி புடுங்க வெச்சிட்டாங்க. அதனால இன்னைக்கு போடறேன்.

Wednesday, February 7, 2007

எடுத்த சபதம் முடிப்பேன்

வேலை பெங்களூருலன்னு கடுதாசி வாங்குனதும் அழுதுக்கிட்டே நம்ம சென்னைப் பட்டணத்துக்கு ஒரு டாட்டா சொல்லிட்டு பெங்களூரு வந்து இறங்கினேன். அடுத்த நாள் போய் வேலைல ஜாயின் பண்ணி ஒரு வாரம் ட்ரெயினிங் முடியற வரைக்கும் எனக்கு அந்த சந்தேகமே வரலை. எப்ப என் க்யூபிக்கிள்மேட் என்கிட்ட ஹிந்தில பேசி பதிலுக்கு நான் சிரிச்சு மழுப்பிட்டே "சாரி ஐ டோன்ட் நோ ஹிந்தி"ன்னு சொன்னதும் அவன் என்னை கேவலமா ஒரு பார்வை பார்த்து "ஆர் யூ அன் இண்டியன்"னு கெட்டதும்தான் எனக்கு இந்த சந்தேகமே வந்தது. அப்படியே நாலா பக்கமும் இருந்து நான் இந்தியன் இல்லையா?.... இந்தியன் இல்லையா?.....இல்லையா?..... ன்னு ஒரே எக்கோவா அடிக்குது. அட கொடுமையே! என்னடா இது?? ஊரு விட்டு ஊரு வந்து இப்படி வாங்கி கட்டிக்கிட்டோமேனு ஒரே கவலையான கவலை. அப்புறம்தான் முடிவு பண்ணினேன். என்னத்த பெரிய ஹிந்தி. அதுல சும்மா பிச்சு உதற மாதிரி கத்துக்கிட்டு அந்த பையன்கிட்ட பேசி காட்டி போன மானத்த மீட்டே ஆகனும்னு சபதம் எடுத்தேன்.

ஹரியானால இருந்து ஒரு பொண்ணு. அதுகிட்ட அப்படியே பிட்ட போட்டு "ப்ளீஸ் டீச் மி ஹிந்தி யார்"ன்னு கேட்டு வச்சேன். அந்த பொண்ணும் சொல்லி தரேனு ஒத்துக்கிட்டு என்கிட்ட படாதபாடு பட்டுச்சு. கடைசில "எப்டி இர்கிங்க? நல்லா இர்கிங்க்ளா?"ன்னு நம்ம மக்கள்ட்ட கேக்கற அளவுக்கு டெவலப் ஆயி சண்டிகர் போய் சேர்ந்துடுச்சு. ஒரு வார்த்தை கூட இந்த குருவி மூளைல ஏறலை. நமக்குதான் இந்த மானப் பிரச்சினை எல்லாம் தூங்கி எழுந்தா சரியாப் போயிடுமே. என் சபத மேட்டர மறந்துட்டு ப்ராஜக்ட் ட்ரெயினிங்ல வலது காலை எடுத்து வச்சிட்டு பாத்தா என் ட்ரெயினிங் டீம்ல இருக்கற ஏழு பேரும் ஹிந்தில பேசிட்டு இருக்காங்க. அய்யகோ............ இங்கயுமா எமகண்டம்???? அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அந்த ஏழு பேரும் எனக்கு ஹிந்தி தெரியாதுனு ஓட்டின ஓட்ட நான் உக்காந்து வில்லுப்பாட்டாதான் பாடணும்........... ஆப்போ ஆப்பு........

எப்படியாவது இந்த ஹிந்திய கத்தே ஆகனும்னு அன்னைக்கு முடிவு பண்ணி ஒரு 2 நாளா ஹிந்தி சேனல்ஸ் மட்டும் பாத்தேன். என் ரூம்ல இருக்கற ஒருத்திக்கு ஓரளவு ஹிந்தி தெரியும். அவள்ட்ட கெஞ்சி கூத்தாடி நான் கேட்டதுல சொல்லி தரேனு ஒத்துக்கிட்டா. "நீ என் ஃப்ரெண்டுனு எப்படி ஹிந்தில சொல்றது?" இது நானு. "து மேரா துஷ்மன்" இது அவ. துஷ்மனா??? ஏதோ இடிக்குதேன்னு ஒரே சந்தேகம். சரி நம்ம ஃப்ரெண்டு அப்படியெல்லாம் ஏமாத்த மாட்டானு நம்பி ஒரு ஹிந்தி தெரிஞ்ச ஃப்ரெண்டுக்கு ஃபோன போட்டு "து மேரா துஷ்மன்"-ன்னேன் பெருமையா. எங்க இன்னொரு தடவை சொல்லுனு அவ சொன்னதும் ஒரு தடவை என்ன நாலு தடவையே சொல்றேனு திருப்பி திருப்பி நாலு தடவை சொன்னேன். "அப்படியே போன வச்சிட்டு ஓடி போயிடு"ன்னு போன வச்சிட்டா. அதுல வந்த கோவத்துல ஹிந்தியாவது பிந்தியாவதுன்னு அந்த சபதத்தை குழி தோண்டி புதைச்சு வச்சிட்டு பொழப்ப பாக்க ஆரம்பிச்சேன்.

சிவனேன்னு ப்ராஜக்ட்க்குள்ள மெல்ல தலைய விட்டு எட்டி பாத்தா எங்க lead பேச ஆரம்பிச்சாவே அவங்களுக்கு ஹிந்திதான் வருது. எனக்கு தெரியாதுனு என்கிட்ட மட்டும்தான் இங்க்லீஷ்ல பேசுவாங்க. ஒரு நாள் அவங்க ஏதோ கமெண்ட் அடிக்க நான் புரியாம முழிக்க "யு சுட் லேர்ன் ஹிந்தி" ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. அதுதான் எனக்கு வந்து தொலைய மாட்டென்றதே. என்னைய விட்டுடுங்கன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு அதோட அதை மறந்துட்டு சுத்திட்டு இருந்தேன்.

காவிரி ப்ரச்சினை வந்த அன்னைக்கு எல்லா தமிழ் சேனலும் கட் பண்ணி போட்டாங்க. என்னடா பண்றது போர் அடிக்குதேனு நினைச்சப்பதான் கண்ணு முன்னாடி கொசுவர்த்தி சுத்தி சபத மேட்டர் எல்லாம் ஞாபகம் வந்தது. அட எப்படியும் நாளைக்கு ஆபிஸ் லீவாதான் இருக்கும்னு கையில இருந்த spec-ஐ தூக்கி போட்டுட்டு ஓடி போய் Z டிவிய போட்டு உக்காந்தேன். நானும் என்னை மாதிரி பல அவமானங்களை சந்திச்ச ஒரு ஃப்ரெண்டும் ஹிந்தி தெரிஞ்சவள இழுத்து பிடிச்சு உக்கார வச்சோம். ஒரு டயலாக் வந்த உடனே (எங்களுக்கு புரியற மாதிரி) அவ எங்களுக்கு ஒரு ஒரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லனும். திருப்பி நாங்க நாலு தடவை ஒப்பிப்போம். அதுல தப்பு இருந்தா அவ சரியா சொல்லி தரனும். இதுதான் டீல். கடைசில அவ படத்துல ஒன்றிப் போயிட்டா. நாங்க அவள பாக்க விடாம டார்ச்சர் பண்ணி கண்டுபிடிச்ச ஒரே டயலாக் "முஜே தோ பெகலி பத்தா தா". இதையே கடைசி வரைக்கும் ஒப்பிச்சு ஒப்பிச்சு கடைசில வேற ஒண்ணும் புரியாம கடுப்பாயி "என்னடி இது லாங்குவேஜ்? பத்துமா பத்தாதானு"ன்னு நாங்க பொலம்பும்போது படமே முடிஞ்சு போச்சு.

காலைல 6 மணிக்கு ஒரு நட்பு ஃபோனப் போட்டு லீவெல்லாம் கிடையாது வந்து சேருன்னு சொன்னதும் காவிரி கலவரமெல்லாம் எனக்குள்ளதான் ஆச்சு. அய்யோ ஆன்சைட் ஆளுங்க ஆப்படிப்பாங்களேனு எழுந்து அவசர அவசரமா கெளம்பி ஆபீஸ்க்கு ஓடியாந்து Spec-ஐ வச்சு முட்டிட்டு இருந்தேன். மதியம் போய் lead-கிட்ட ஹிந்தி கத்துக்க ஆரம்பிச்சிட்டேனு பெருமையா சொல்லிட்டு "முஜே தோ" ன்னு சொல்லங்குள்ள மீதி எல்லாம் மறந்து போச்சு. "முஜே தோ..... முஜே தோ...."ன்னு நான் இழுக்கவும் அவங்களுக்கு சிரிப்பு தாங்கலை. எனக்கு ஏற்கனவே தெரியும்னு எப்படி சொல்றதுனு கேட்டதும் "முஜே தோ பெகலி சே பத்தா ஹோ"ன்னாங்க. அதுல இருந்து இதையேதான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு திரிஞ்சுட்டு இருக்கேன். இன்னைக்கு மதியம் "முஜே தோ பெகலி சே பத்தா ஹோ"ன்னு நான் சொன்னதும் அன்னைக்கு என்னோட கத்துக்கிட்ட ஃப்ரெண்ட் "தப்பா சொல்ற பத்தா ஹோ இல்ல பத்தா தா" ன்னா. அப்படியே கேவலமா அவள ஒரு லுக் விட்டு "இது ஸ்டைலிஷ் ஹிந்தி" ன்னு நான் சொன்னதும் என்னை ஒரு பார்வை பார்த்தாலே பார்க்கலாம். அவளுக்கு ஸ்டைலா பேசறேனு என் மேல பொறாமைனு முஜே தோ பெகலி சே பத்தா ஹோ...........................