Saturday, November 21, 2009

வச்சுட்டாங்கய்யா ஆப்பு!!

நான் பெங்களூர்ல இருந்தப்போ ஆசை ஆசையா ஒரு pepe jean வாங்கினேன். அதுல ரெண்டு இடத்துல கட் பண்ணி நூல் பிரிஞ்சு அதுல பின்க் கலர்ல ஜிக்ஜாக் அடிச்ச மாதிரி டிசைன் போட்டிருந்தாங்க. அத ரொம்ப ரசிச்சு வாங்கினேன். ஒரு தடவ ஊருக்கு போனப்ப அத துவைக்க எடுத்துட்டுப் போயிருந்தேன். நல்லா தூங்கிட்டு இருந்த என்னை எங்கம்மாவோட அதிர்ச்சியான குரல் எழுப்புச்சு. அவசரமா எழுந்து என்னங்கம்மா என்ன ஆச்சுனு பதறிப் போயிக் கேட்டா எங்கம்மா அந்த jean-அ கைல எடுத்துட்டு வந்தாங்க. கண்ணு உனக்கு விவரமே தெரிய மாட்டேங்குது. இப்படி ஏமாந்துப் போயி வந்திருக்கன்னாங்க. என்னடா இது புது குழப்பம்னு தெளிவா சொல்லுங்கனு சொன்னதும் அந்த jean-அ உள்பக்கமா திருப்பி காட்டினாங்க. பிரிச்சு விட்டிருந்த நூல் மேல மேல பிரியாம இருக்கறதுக்காக உள்பக்கமா துணி குடுத்து தச்சிருந்தாங்க. அதக் காட்டி பாரு இவ்ளோ விலைக் குடுத்து ஒட்டுப் போட்ட துணிய வாங்கிட்டு வந்திருக்கனு சொன்னாங்களே பாக்கலாம். எனக்கு வந்த கடுப்புக்கு அளவே இல்ல. அம்மா இல்லம்மா. இது டிசைன் அப்படி. அது இன்னும் பிரியாம இருக்கறதுக்காக அப்டி தச்சிருக்காங்கனு அவ்ளோ தூரம் எடுத்து சொல்றேன். அன்னைக்கு வீட்டுக்கு வந்த எங்கத்தைக்கிட்ட புலம்பறாங்க. பெங்களூர் போயி என்ன ஆச்சுனே தெரில. ஒட்டுப் போட்ட துணிய எல்லாம் அவ்ளோ விலைக் குடுத்து வாங்கிட்டு இருக்குனு. எப்படியோ எல்லார்ட்டயும் புலம்பி என் மானத்த வாங்கிட்டாங்க :(

------------ooOoo------------

சென்னை வந்த புதுசுல என் ஆருயிர் தோழி வீட்டுக்கு வந்தா. அவளுக்கு கொஞ்ச நாள்ல கல்யாணம். பர்ச்சேஸ் போகணும்னு சொன்னா. அவளுக்கு சலங்கை வச்ச மெட்டி மேல ரொம்ப ஆசை. அந்த மாதிரி எங்க ஊர்ல எல்லாம் கிடைக்காது. அதனால இங்க வாங்கணும்னு சொன்னா. ரெண்டு பேரும் கிளம்பி டி.நகர் GRT போனோம். அந்த கடைல எங்க ஆபிஸ் மக்கள்ஸ்க்கு 5% டிஸ்கவுண்ட் உண்டு(குறிப்பிட்ட சிலதுக்கு மட்டும். அதும் செய்கூலிலயோ என்னவோ). அதனாலதான் அங்க அவளக் கூட்டிட்டுப் போனேன். அங்க போயி சூப்பரா ஒரு மெட்டி செலக்ட் பண்ணிட்டோம். அந்த செக்ஷன்-ல இருந்தவரு பில் போட ஆரம்பிச்சார். நான் உடனே எங்க ஐடி கார்ட காட்டி எங்களுக்கு 5% டிஸ்கவுண்ட் இருக்குனு பெருமையா சொன்னேன். அவர் 125 ரூபாய்னு பில் போட்டு அதுல டிஸ்கவுண்ட் 25 ரூபா போட்டிருந்தார். போட்டவர் சும்மா இருக்காம இப்ப வெள்ளிக்கு செய்கூலி சேதாரம் எல்லாம் இல்லாம குடுக்கறோம். அதான் 25 ரூபா கம்மினு சொன்னாரு. எனக்கு வந்ததே கோபம். அப்போ எங்களுக்கு குடுக்க வேண்டிய 5% எங்கனு சண்டைப் போட்டேன். ஒரு 10 நிமிஷ சண்டைக்கு பிறகு 90 ரூபாய்க்கு குடுத்தார். எனக்கு ஒரே சந்தோஷம். அன்னைக்கு வீட்டுக்கு வந்ததும் என் வீட்டுக்கார்ட்ட அன்னைக்கு என்னைப் பாத்து சிரிச்சீங்களே. இன்னைக்கு பாருங்க எப்படி பேரம் பேசினேனு சொல்லி நடந்ததை எல்லாம் சொல்லி பெருமையா அவர் முகத்த பாக்கறேன். அவர் விழுந்து விழுந்து சிரிக்கறார். எனக்கு சப்புனு போச்சு. ஏண்டி அவன் எல்லாம் தினமும் கோடிக் கணக்குல டர்ன் ஓவர் பண்றான். அவன்ட்ட போயி 125 ரூபாய்க்கு வாங்கிட்டு பத்து ரூபாய்க்கு பத்து நிமிஷமா சண்டைப் போட்டிருக்கனு சிரிக்கறாரு. எனக்கு ஒரே அவமானம். மறுபடியும் சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டோமானு கம்முனு இருந்துக்கிட்டேன் :((

------------ooOoo------------

ஒரு நாள்ல வீட்டுல ஜாலியா உக்காந்து TV பாத்துட்டு இருந்தேன். திடிர்னு எங்கம்மாவும் பக்கத்து வீட்டக்காவும் பேசற சவுண்டு கேட்டுச்சு. சரி என்ன பேசறாங்கனு கொஞ்சம் காது குடுத்துக் கேட்டேன். பக்கத்து வீட்டக்கா பாருங்க இப்பல்லாம் வீட்டுல வேலை செய்ய வரவங்க எல்லாம் ஒழுங்காவே செய்ய மாட்டேங்கறாங்க. உங்க வீட்டுக்கு துவைக்க வர அம்மா கூட அப்டிதான் போல. பேண்ட்ட ஒழுங்கா உதறிக் கூட காயப் போடாம போயிருக்காங்க-னு என் பேண்ட்டைக் காட்டி சொல்லிட்டு இருந்தாங்க. உடனே வேகமா எங்கம்மா இல்லம்மா. அந்த பேண்டே அப்டிதான். பாவாடை மாதிரி ரொம்ப பெருசா இருக்குன்னாங்க. அவங்க ஆச்சரியமா அப்படியா என்ன பேண்ட் அதுனு கேக்கவும் எங்கம்மா அது ஏதோ பாட்டி பேண்ட்டாம்னு சொன்னாங்க. எனக்கு அப்டியே புஸுபுஸுனு வந்துச்சு. உடனே வேகமா எழுந்துப் போயி அய்யோ அம்மா அது பாட்டி பேண்ட்டும் இல்ல. பேத்தி பேண்ட்டும் இல்ல. பாட்டியாலா பேண்ட்டு-னு கத்தினேன். இன்னமும் எங்கம்மா அத பாட்டி பேண்ட்டுனேதான் சொல்லி சொல்லி என்னை வெறுப்பேத்தறாங்க :(((

------------ooOoo------------

போன செப்டம்பர்ல பெங்களூர் போயிருந்தோம். அவர் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தோம். போற அன்னைக்கே ஃபீவர் வந்துடுச்சு. மாத்திரை எல்லாம் போட்டு சரியாயிடுச்சுனு நினைச்சு தைரியமா போயிட்டேன்(அங்க போயி நிறைய ட்ரெஸ் எடுத்து தரேனு சொல்லி இருந்தார். அதான் ;)))) ஆனா ட்ரெயின்லயே நல்லா ஃபீவர் வந்துடுச்சு. அங்கப் போயி அடுத்த நாள் காலைல பக்கத்துல இருந்த ஹாஸ்பிட்டல்க்கு 2 பேரும் கூட்டிட்டுப் போனாங்க. அங்க போனா 1 வாரமா ஃபீவர் இருக்கு. 2 பாட்டல் ட்ரிப்ஸ் இறக்கணும்னு குண்டத் தூக்கிப் போட்டாங்க. அடக் கடவுளே! 2 பாட்டலானு நான் ங-னு முழிச்சிட்டு இருந்தேன். என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு அவங்க டாக்டர் அத்தைக்கு ஃபோன போட்டாங்க. அவங்க அவ தண்ணியே ஒழுங்கா குடிச்சிருக்க மாட்டா. அதான் டெம்ப்ரேச்சர் ஜாஸ்தி ஆயிருக்கும்னு சொல்லி ஒரு மாத்திரை குடுத்து அடிக்கடி எலக்ட்ரால் குடுக்க சொன்னாங்க. அன்னைக்கு மாதிரி நான் வாழ்க்கைல தண்ணிக் குடிச்சதே இல்ல. அன்னைக்கு நல்லானேன்.அடுத்த நாள் திருப்பி ஃபீவர் வந்துடுச்சு. இப்படியே இருக்கேனு என் வீட்டுக்கார் என் பக்கத்துல உக்காந்து கவலையாப் பாத்துட்டு இருந்தார். பாக்கவே ரொம்ப பாவமா இருந்துச்சு. சரி நாம இது வரைக்கு ஆராய்ந்து அறிந்த அரிய உண்மைய சொல்லிடலாம்னு ஏங்க-னு ஆரம்பிச்சேன். எனக்கு ஏன் ஃபீவர் வந்துச்சுனு ரீஸன் கண்டுபிடிச்சிட்டேன்னு ஆர்வமா பாத்தேன். அவரும் ஆர்வமாயி ஏன்னு கேட்டார். போன தடவை ஊருக்குப் போயிட்டு வந்ததும் என்ன சொன்னேன்? அவரும் ரொம்ப யோசிச்சு தெரியலையேனு சொன்னார். போங்க நீங்க. உங்ககிட்ட எது சொன்னாலும் மறந்துடுவீங்கனு சலிச்சிக்கிட்டு போன தடவை ஊருக்கு போனப்போ ஜாதகம் பாக்கப் போனேன் இல்ல. அந்த ஜோசியர் என்ன சொன்னாருனு கேட்டதும் முறைக்க ஆரம்பிச்சார். எனக்கு அஷ்டம சனி முடியுது இல்ல. அதான் இப்படி பாடாபடுத்துது. வேற ஒண்ணும் இல்லனு சந்தோஷமா சொல்றேன். அவரு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு. இதுல மடச்சினு எனக்கு பேரு வேற :(((( உண்மைய சொன்னா நம்பணும். சரி இதனால எல்லாருக்கும் நான் சொல்ல வரது என்னன்னா எல்லாரும் நல்லா தண்ணிய ஐ மீன் வாட்டர குடிங்க... குடிங்க... குடிச்சிட்டே இருங்க...
எனக்கு அப்டிதான் ஃபீவர் சரியாச்சு. இப்பல்லாம் நல்லா தண்ணி குடிக்க ஆரம்பிச்சிட்டேன் :)))

Sunday, October 4, 2009

புரிந்துக் கொள்ளத் தவறிய உறவுகள்!


"இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி அவர் எனக்குப் போட்ட லெட்டர்ஸ்" வெட்கத்துடன் என்னிடம் நீட்டிய பிரியாவின் முகம் என் கண்முன்னே வந்துப் போனது. எவ்வளவு நெருக்கமாய் நினைத்திருந்தால் எந்த தயக்கமுமின்றி அக்கடிதங்களை என்னிடம் படிக்கக் கொடுத்திருப்பாள். எண்ணும்போதே கடகடவென கண்களில் கண்ணீர் வழிந்தது. அதை துடைக்கக் கூட திராணியின்றி அமர்ந்திருந்தேன்.

"அப்போ அவர் நிறைய கவிதை எல்லாம் எழுதி அனுப்புவார். படிக்கறப்போ ரொம்ப அருமையா கவிதை எழுதறார்னு எனக்கு அப்படியே பெருமையா இருக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு பாட்டுக் கேட்டப்போதான் இவரு குட்டு தெரிஞ்சது. எப்பயோ வந்த பாட்டுல நடுல இருந்து லைன்ஸ் எடுத்து எழுதி அனுப்பியிருக்காரு. அண்ணன் தங்கச்சி எல்லாம் ஒரே மாதிரிதான" என்று வழக்கமாம் போல அவரது தங்கையாய் நான் எடுத்துக் கொண்ட உரிமையை வைத்து என்னையும் சேர்த்து கிண்டலடித்தாள். வழக்கமான நலம் விசாரிப்புகளுடனும் நீயின்றி போனால் உயிர் வாழ மாட்டேன் என்ற அந்த வயதிற்குரிய காதல் மொழிகளுடன் எழுதப் பட்டிருந்த கடிதத்தைப் படித்து விட்டு அவளது கிண்டலால் விளைந்த புன்னகையுடன் திருப்பிக் கொடுத்ததும் ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தது.

மூன்று வீடுகளைக் கொண்ட காம்பவுண்டில் எங்கள் வீட்டருகே எட்டு மாதக் கைக்குழந்தையுடன் குடி வந்த அவளுக்கும் எனக்கும் ஒரே வயதென்பதாலோ என்னவோ என்னுடன் நெருங்கிப் பழகினாள். கல்லூரி விடுமுறையில் மட்டுமே வரும் நான் அவளுடனேயே இருப்பேன். எனதுக் கல்லூரிக் கதைகளையும் ஒன்று விடாமல் சொல்வேன். அவளுக்கு அத்தைப் பையனுடன் வந்த காதல் பற்றியும், பன்னிரெண்டாவது படிக்கும்போதே வேறு சில பிரச்சினைகளால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதையும், புகுந்த வீட்டுப் பிரச்சினைகளால் தனிக்குடித்தனம் வந்ததுப் பற்றியும் பகிர்ந்துக் கொள்ள அவளுக்கு நான் மட்டுமே உற்றத் தோழியாய் இருந்தேன் போலும். எவ்வளவு இருந்தும் என்ன ஆயிற்று?

உனக்கு எதாவது ஒன்று ஆகி விட்டால்... எனக்கு ஆயிரம் தோழிகள் கிடைக்கலாம். ஆனால் உன்னைப் போலொரு மனதிற்கு நெருக்கமான உறவின் இழப்பு என்றும் ஈடு செய்ய முடியாததுதானே. ஏனடி இப்படி செய்தாய்? உள்ளுக்குள் எரிமலையாய் வார்த்தைகள் வெளிவராமல் குமுறிக் கொண்டிருக்க கண்கள் கண்ணீரை மட்டும் நிறுத்தாமல் உற்பத்தி செய்துக் கொண்டிருந்தது. அனைவரையும் பார்த்து பயந்து அத்தை மடியில் நிம்மதியாய் இருப்பதாய் எண்ணி உறங்கும் சூர்யாவின் தலையை கைகள் அனிச்சையாய் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தன.

கம்ப்யூட்டர் வகுப்பில் இருந்தபோது ஃபோன் செய்து அருணுக்கும் பிரியாவிற்கும் ஏற்பட்ட பிரச்சினையால் அவள் மருந்துக் குடித்து மருத்துவமனையில் சேர்த்தப்பட்டிருப்பதாக அம்மா கூறியபோது கோபமாய் வந்தது. இதற்கு முன்பு நெருக்கமானவர் யாரேனும் மருந்துக் குடித்து மருத்துவமனையில் சென்று நாள் முழுதும் அழுதிருந்தால்தானே தெரியும். சாதரணமாய் ஏதோ செய்து விட்டாள். காப்பாற்றியிருப்பார்கள். போனதும் இரண்டு அறை விட்டு ஏனடி இப்படி செய்தாய் என்று கூற வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டல்லவா கிளம்பினேன். வழியெல்லாம் அருண் அண்ணாவின் மீது எக்கச்சக்க கோபம் வந்தது. போனதும் பார்த்து கண்டபடி திட்ட வேண்டும் என்றும் முடிவெடுத்துக் கொண்டு வந்தேன்.

ஆனால்... என் ஆருயிர் தோழி மூச்சு விடவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாளாம். கேட்டபோது நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது. ICU-வின் கதவருகிலேயே கத்திக் கதறிக் கொண்டிருந்த அருணைப் பார்த்த போது எனது உயிரைப் பிசைவது போல இருந்தது. யாரைக் குற்றம் சொல்வது? அன்று இரவு குழந்தை அழுகிறான் என்று வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு வந்து விட்டேன். அழுதபடி தோளில் உறங்கிய அவனைப் பார்க்க பார்க்க அழுகைப் பொங்கியது. அம்மா இல்லாமல் வளர நேரிடுமோ என் செல்லமே! அடுத்த நாள் காலையிலேயே மருத்துவமனைக்கு ஓடிய எனக்கு நல்ல நேரம் போலும். உடல் நிலையில் இப்பொழுது சிறிது முன்னேற்றம் உள்ளது என்ற செய்திக் கிடைத்தது. நிம்மதியுடன் அம்மாவுடன் அருகிலிருந்த ஹோட்டலுக்கு சாப்பிடப் போனேன். அங்கே பிரியாவின் தங்கை...

"எங்கம்மாவுக்கு என்னையும் தங்கச்சியையும் விட தம்பியதான் ரொம்ப பிடிக்கும். அவனுக்குதான் எல்லாமே செய்வாங்க. அவனுக்கும் எங்க மேல பாசமே கிடையாது. நானாவது இப்போ நல்லா இருக்கேன். பாவம் தங்கச்சி" என்று அவள் வரும்போதெல்லாம் அவளுக்கு பிடித்ததை செய்து கொடுத்தவள் சாகக் கிடக்கிறாள். திருமணமாகி ஒரே வாரம் முடிந்த புதுப் பெண்ணாய் அலங்காரம் கலையாமல் வந்து அமைதியாய் அவள் கணவனின் அருகில் அமர்ந்திருந்த அவளது தங்கையைக் கண்டதும் எனக்கு உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது. ச்சே! என்ன மனிதர்கள்... அவள் இப்படியெல்லாம் சொன்னதாலோ என்னவோ எனக்கும் பிடிக்காமல் போன அவள் தம்பியை நான் இதுவரை கவனிக்கவே இல்லை. சாப்பிட்டுத் திரும்பியதும் எனது கண்கள் தானாக அவனைத் தேடியது. அருணின் அருகில் அமர்ந்து கலங்கிய கண்களுடன் அவன். மனிதர்களை கணிக்கத் தெரியவில்லை அவளுக்கு. வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் வெள்ளை உள்ளம் கொண்டவளுக்கா இந்த நிலைமை? கண்கள் மூடி அப்படியே அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன். அன்று ஓரளவு பரவாயில்லை என்ற தகவலே கிடைத்ததால் லேசான நிம்மதியுடன் வீட்டிற்குச் சென்றேன். இரண்டு நாட்களாய் சரியாய் உறங்காததாலும், தொடர்ந்த அழுகையாலும் அப்படியே உறங்கிப் போனேன். காலையில் வெகு நேரம் கழித்து எழுந்ததால் பதினொரு மணிப் போல் மருத்துவமனைக்குச் சென்றேன்.

உள்ளே நுழைந்ததும் அருண் அவசரமாய் என்னிடம் ஓடி வந்து ப்ளட் க்ரூப் என்ன என்றுக் கேட்டார். எனக்குத் தெரியாதே என்று நான் சொல்லவும் அவசரமாய் என்னை அழைத்துச் சென்று இரத்தப் பரிசோதனை நடக்குமிடத்தில் விட்டு பரிசோதனை செய்ய சொன்னார். என்னவாயிற்று என்று அருகிலிருந்தவரிடம் கேட்டபோது பிரியாவிற்கு உடனடியாய் ரத்தம் வேண்டுமாம். பல்ஸ் குறைந்து கொண்டே வருகிறது. ரத்தம் கிடைக்கவில்லையென்றால் காப்பாற்ற முடியாது என்று கையை விரித்து விட்டார்கள் என்று அவர் கூறியதில் தோன்றிய வலியில் நர்ஸ் கையில் ஊசியால் குத்தியது தெரியவில்லை. அவ ப்ளட் க்ரூப் என்ன என்று அவசரமாய் கேட்டேன். AB நெகட்டிவ் என்றார். கடவுளே! என்னுடையது AB நெகட்டிவாய் இருக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொண்டிருக்கும்போதே உங்களுடையது A1 பாசிட்டிவ் என்ற பதில் கிடைத்தது. என்ன ஆகுமோ என்ற பயம் உள்ளுக்குள் பரவ ICU-வின் முன்னால் வந்து அமர்ந்தேன். அதற்கு மேல் யாரும் மருத்துவமனையில் அழ வேண்டாம் என்று நினைத்தாளோ என்னவோ... என் தோழி முடிந்துப் போய் விட்டாள் என்ற செய்தி வந்தது. எங்கிருந்து அப்படியோர் அழுகை வந்ததென்றே தெரியவில்லை. அதுபோல் என் வாழ்வில் நான் கதறி அழுததேயில்லை. அருண் இருந்த பக்கம் நான் திரும்பவே இல்லை. திரும்பும் துணிவும் எனக்கு இல்லை. அனைவரும் சூர்யாவைப் பார்த்து அழவும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தபடி நின்றிருந்தவனை வாரியெடுத்து வெளியில் கொண்டு சென்றேன். அவளது உடலை வெளியே எடுத்துட் செல்கையில் அனைவரும் கதறியழ அவளது தங்கை மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல் அமைதியாய் நின்றிருந்தாள். எனக்கோ உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது. சூர்யாவையும் அருணையும் அருணின் அம்மா அப்பா அழைத்துச் சென்று விட்டார்கள்.

அதன் பின் இரண்டு நாட்களாய் அழுதுக் கொண்டிருந்த என்னிடம் அவர்கள் வீட்டைக் காலி செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எனது தாயார் சொன்னதும் ஓடிச் சென்றேன். அந்த வீட்டிற்குள் நுழையும் தைரியமில்லாமல் வெளியே நின்றிருந்தேன். வீட்டைக் காலி செய்து பூட்டி விட்டு அனைவரும் சென்றதும் அவளது தம்பி அந்தக் கதவைப் பிடித்தபடியே இமைக்காமல் உள்ளுக்குள் பார்த்துக் கொண்டிருந்தான். "சங்கர்" என்று அவனை அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பியவன் விழிகள் முழுவதும் நிரம்பியிருந்தது. துடைக்க துடைக்க வழியும் கண்களைத் துடைத்துக் கொண்டே வீட்டை திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே அவன் சென்றது இன்னும் என் கண்களுக்குள் இருக்கிறது.

பி.கு: இது கதை போல் இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. ஆனால் உண்மையாக இது எனது அனுபவம். எத்தனையோ ஜாலியான அனுபவங்கள் எழுதினேன். இது போல் ஒரு சோகமான தருணம் இது வரை என் வாழ்க்கையில் வந்ததே இல்லை. வெகு நாட்களாய் அவளை எண்ணி எண்ணி அழுது கொண்டேயிருந்த எனக்கு இப்பொழுது நினைத்தாலும் அழுகை வந்து விடுகிறது :((( தற்கொலையின் கோரமான விளைவுகளை கண்ணெதிரில் பார்த்ததிலும் நெருங்கிய தோழியின் மரணத்தை நேரில் கண்ட சோகத்திலும் விளைந்த பதிவு இது.

Thursday, September 17, 2009

கா for கா... த... ல்...



காதல்... இந்த மூணெழுத்து வார்த்தை நம்மளப் படுத்தறப் பாடு இருக்கே... அப்பப்பா... சொல்லி மாளாது... உடனே நீ இன்னும் திருந்தலையானு கேக்காதீங்க? ;) திருந்தலையானு கேக்கற அளவுக்கு அது என்ன அவ்ளோ பெரிய கொலைக்குத்தமா என்ன? ஹி... ஹி... இப்படில்லாம் கேப்பேனு நினைச்சிங்களா? வவ்வவ்வவே... நீங்க என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லயே... :P

சரி விஷயத்துக்கு வருவோம். ஆக்சுவலா இத போன போஸ்ட்ல சமீபத்திய ஃப்ளாஷ்பேக்-னு போட்டு எழுதணும்னு நினைச்சேன். அத எழுதும்போது மறந்துப் போயிட்டேன். வயசாவுதுல்ல ;)

வீட்டுல என் இம்சை தாங்க முடியாம எங்கப்பா என்னைக் கொண்டுப் போய் ஹாஸ்டல்ல தள்ளிட்டார். அங்க ஒரு பட்டாளமே சேர்ந்து கும்மியடிச்சுட்டு இருந்தோம். அதுல ஒருத்திக்கு 9th படிக்கறப்ப இருந்தே லவ்வு. அதும் அவ அத்தைப் பையன் மேல. அவ அதேப் பையனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு பெங்களூர்ல செட்டில் ஆயிட்டா இப்போ. எங்க கேங்-ல இன்னொருத்தி இருந்தா. அவளோட அத்தைப் பையன் அவள லவ் பண்றானோனு எங்களுக்கெல்லாம் ஒரு டவுட். அவன டவுட் பண்ணியே இவ அவன லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா. அதுல எங்களுக்கெல்லாம் டென்ஷன் ஆக ஆரம்பிச்சது. வேறேன்ன? எப்படியாவது இவங்கள சேத்து வைக்கணுமேன்ற கவலைதான். அதுக்கு ஃபர்ஸ்ட் அவன் இவள லவ் பண்றான்னு கன்ஃபார்ம் பண்ணனும். அவளுக்கு பொலம்பறதே வேலையாப் போச்சு. எப்பப் பாத்தாலும் கண்ணக் கசக்கிட்டே அவன் என்னை லவ் பண்றானானு தெரியலை. அவன் நோ சொல்லிட்டா அப்புறம் நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேனு அவங்க செத்துப் போன பாட்டி மேலல்லாம் சத்தியம் பண்ணினா. சோ அத தெரிஞ்சுக்க உடனடியா செயல்ல இறங்கணும்னு ஒரு சனிக்கிழமை தீர்மானிச்சோம்.

அந்த 9th லவ் பொண்ணு அவ கசின்க்கு ஸ்டடி ஹாலிடேஸ். சோ இவ கசின்க்கும் கண்டிப்பா ஸ்டடி ஹாலிடேஸ் இருக்கும்னு நாங்களா முடிவுப் பண்ணிக்கிட்டோம். சரி இவள எப்படி வீட்டுக்கு அனுப்பறது? எங்க ஸ்கூல்ல பேரண்ட்ஸ் வந்து கையெழுத்துப் போட்டுதான் கூட்டிட்டுப் போகணும். வீட்டுக்குப் போறதுக்கு எதாவது ஸ்ட்ராங் ரீசன் இருக்கணும். எல்லாரும் ரவுண்டுக் கட்டி யோசிச்சோம். மஞ்சள் காமாலை வந்துடுச்சு, ஒரே நெஞ்சு வலியாவே இருக்கு - இப்டில்லாம் நான் சொன்ன நல்ல நல்ல யோசனையெல்லாம் ரிஜக்ட் பண்ணிட்டாளுங்கன்ற கோவத்துல என்னதான் சொல்லப் போறாளுங்கன்னு நானும் வேடிக்கைப் பாத்துட்டு இருந்தேன். அவளும் என்ன பண்றதுன்னே தெரியாம சோடாப்புட்டிக் கண்ணாடிக்குள்ள உருட்டி உருட்டி முழிச்சிட்டு இருந்தா. அப்போதான் அந்த இன்னொரு லவ் பண்ற பொண்ணு உன் கண்ணாடியக் கழட்டிக் கொடுடினு சொன்னா. நாங்க எல்லாம் இப்ப எதுக்கு இதக் கேக்கறானு ஆச்சர்யமாப் பாத்தோம். அத வாங்கி கண்ணாடிக்கும் கண்ணாடிய காதுல மாட்டறதுக்கு இருக்கற கம்பிக்கும் உள்ள தொடர்ப துண்டிச்சா. அட அதாங்க அது ரெண்டையும் ஜாயிண்ட் பண்ற ஸ்க்ரூவக் கழட்டினா. போய் HM-ட்ட கண்ணாடி உடைஞ்சுடுச்சுனு சொல்லி அப்பாவ வர சொல்லு. இங்கயே கடைலக் குடுத்து சரி பண்ணிக்கலாமேனு சொல்லுவார். இல்ல இப்ப பவர் செக் பண்ணி மாத்தணும்னா ஒரேடியா மாத்திட்டு வந்துடுவேன். அதே டாக்டர்ட்டதான் பாக்கணும்னு சொல்லுனு சொல்லிக் குடுத்தா. நாங்கெல்லாம் கைத் தட்டாத கொறதான். எவ்ளோ சூப்பர் ஐடியா இல்ல? ஆனா காதலிக்கறவங்களுக்குதான்பா இப்படியெல்லாம் எடக்கு முடக்கா ஐடியா எல்லாம் தோணும் ;)

நம்மாளு நேரா HM ரூமுக்கு போனா. நாங்களும் கூடவேப் போய் HM ரூமுக்கு வெளில நின்னுட்டு இருந்தோம். அவர் அவ சொன்ன மாதிரியே இங்கயேக் குடுத்து சரி பண்ணிக்கலாமேனு கேட்டார். இவ கோழி திருடுனவ மாதிரி திரு திருனு முழிச்சுட்டே இல்ல பவர் செக் பண்ணனும் அப்டினு அவ சொல்லி குடுத்த மாதிரியே உளறிக் கொட்டினா. ஹூர்ர்ரேரே... எங்க ப்ளான் சக்ஸஸ். அவ வீட்டுக்கு ஃபோன் பண்ணி வர சொல்லிட்டாங்க. அம்மணியும் டிப்டாப்பா கிளம்பிப் போனாங்க. நாங்க எப்படா திங்கக்கிழமை வரும். அவன் என்ன பதில் சொல்லிருப்பான்? ஆமானு ஒத்துக்கிட்டு இருப்பானோ இல்ல நோ சொல்லி இருப்பானோ. அவன் நோ சொல்லிட்டா இவ என்ன பண்ணுவா இப்படி பல விதமா யோசிச்சு ஞாயித்துக் கிழமைய நகத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.

ஒரு வழியா திங்கள் கிழமை காலைல வந்து சேர்ந்தா. அவ அப்பாவுக்கு டாடா பை பை எல்லாம் சொல்லி அனுப்பி வச்சு வேகமா அவள ரூமுக்கு இழுத்துட்டு வந்து என்னடி ஆச்சுன்னு கேட்டா பெக்க பெக்கனு சிரிக்கறா. ஞாயித்துக் கிழமை எங்களுக்கு இருந்த டென்ஷன்க்கு BPயே வந்திருக்கணும். நாங்க அவ்ளோ டென்ஷனா இருக்கோம். அந்த குப்பிக் கழுதை ஊருக்குப் போய் ஆட்டுக்கால் சூப்பும் கோழி பிரியாணியும் தின்னுட்டு புதுப் படம் ரெண்டுப் பாத்துட்டு வந்துட்டேனு கூலா சொல்லுது. எல்லாம் சேர்ந்து நல்லா மொத்தி எடுத்தோம். அவனுக்கு செமஸ்டர் எக்ஸாம் நடக்குதாம். அவன் வீட்டுக்கு வரலைனு எங்கத்த சொன்னாங்க நான் என்னடிப் பண்ணட்டும்னு அப்பாவி மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு கேட்டா. போய் தொலை. நீயுமாச்சு உன் லவ்வுமாச்சுனு விட்டுட்டோம்.

அதுக்கப்புறம் அவ லவ்வ சொல்லி அவன் ஒத்துக்காமப் போயி கடைசில ரெண்டும் சண்டைக் கட்டிக்கிட்டு திருப்ப சமாதானம் ஆகி... இந்த விஷயம் வீட்டுக்குத் தெரியாம வீட்டுலயேப் பேசி முடிச்சு அவங்க ரெண்டு பேருக்குமே கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. இப்ப குழந்தைக் குட்டியோட சந்தோஷமா இருக்கா :)))

ஆனாப் பாருங்க. லவ் பண்றவங்கள விட லவ்வுக்கு ஹெல்ப் பண்றவங்க படற பாடு இருக்கே. அப்பப்பா... எனக்கு நிறைய அனுபவம் உண்டு. இது நாடோடிகள் படம் பாத்ததும் ஞாபகத்துல வந்துச்சு. இதே மாதிரி ஹெல்ப் பண்ணப் போய் பல்பு வாங்கின கதை இருந்தா ஷேர் பண்ணுங்க (அடுத்தவங்க பல்பு வாங்கினத கேக்கறதுலதான் என்ன சுகம் என்ன சுகம் ;))))

Wednesday, September 2, 2009

ச்சும்மா...

என்னத்த எழுதறதுன்னு ஒரு மண்ணும் தோண மாட்டேங்குது... சரி நம்ம லேட்டஸ்ட் சரித்திரத்த எழுதலாம்னு வந்துட்டேன். பதிவ படிக்கப் போறீங்களா? இனி உங்கள அந்த ஆண்டவனாலக் கூட காப்பாத்த முடியாது... கிகிகிகிகிகி...

சமீபத்திய சந்தோஷம்:
==========================================================

புதுசா எக்லெஸ் கேக், பிஸ்கட் புட்டிங், போலேநாத் வண்டில பாதாம் கீர்-னு விப்பாங்க இல்ல அது எல்லாம் செய்ய கத்துக்கிட்டேன். நான் செஞ்ச கேக்க எங்க ஆபிஸ்ல கொண்டு போய் குடுத்ததும் என் டீம்மேட் நல்லா இருக்கேனு கேட்டு ரெசிப்பி எல்லாம் வாங்கிட்டுப் போய் அவனும் செஞ்சுப் பாத்தான். நான் செஞ்சத விட அவன் செஞ்சது ரொம்ப சூப்பரா இருந்துச்சு. ஹி ஹி... சொல்லிக் குடுத்த நமக்கு இத விட வேற என்ன வேணும்.

சமீபத்திய துக்கம்:
==========================================================

என்ன ட்ரை பண்ணியும் அவன் செஞ்ச கேக் மாதிரி எனக்கு செய்ய வரமாட்டேங்குது. அதனால என் வீட்டுக்கார்ட்ட நம்ம வீட்டு microwave oven தான் சரி இல்லனு ஏமாத்தி வச்சிருக்கேன். ஹி ஹி...

சமீபத்திய பாராட்டு:
==========================================================

என் ஆபிஸ் நண்பரிடம் நேற்று சொன்னது:

கடுகு கருவப்பில்ல தாளிச்சு, தக்காளிய வெட்டிப் போட்டு புளியக் கரைச்சு ஊத்தி ஒரு கொதி விட்டா ரசம். இது ஒரு பெரிய வேலையா? சாதத்த மத்துப் போட்டு நல்லாஆஆஆ கடைஞ்சு அதுல பாலை ஊத்தி மறுபடியும் கட்டி விழாம நல்லாஆஆஆக் கடைஞ்சு அதுல தயிறு கொஞ்சம் ஊத்தி மறுபடியும் கட்டி விழாம நல்லாஆஆஆக் கடைஞ்சு, அதுல கொத்தமல்லி தழை வெட்டிப் போட்டு, இஞ்சி கட் பண்ணிப் போட்டு தயிர்சாதம் செய்யறது எவ்ளோ பெரிய வேலை??

அதுக்கு அவர் சொன்னது:

ஆனா பேச்சுலயே ரசம் வைக்கறது ஈஸி தயிர்சாதம் செய்யறது ரொம்ப கஷ்டம்னு அடுத்தவங்கள நம்ப வைக்க உங்களால மட்டும்தாங்க முடியும்

:))))))))))))

சமீபத்திய ஆப்பு:
==========================================================

எங்க யூனிட்ல எல்லாருக்கும் யூனிட் பேரு போட்டு கைல போட்டுக்கற பேண்ட் ஒண்ணு கொடுத்தாங்க. பெருசா இருக்கேனு கைல வச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ அங்க வந்த ஒரு நார்த் இண்டியன் ஃப்ரெண்ட் அத பிடுங்கி அவன் கைலப் போட்டுக்கிட்டான். ரெண்டு நாள் கழிச்சு அவன் கைல அத பாத்துட்டு அவன ஓட்டணும்னு நினைச்சு என்னது இது? சிங்குச்சா சிங்குச்சா மஞ்ச கலரு சிங்குச்சா-னு கேட்டேன். உடனே அவன் இத ஒரு பைத்தியம் குடுத்துச்சுனு சொன்னான். உடனே வேகமா நான் குடுக்கல-னு சொல்ல ஆரம்பிச்சேன். அவன் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிட்டான். அப்போதான் நானே ஒத்துக்கிட்டேனேனு எனக்குப் புரிஞ்சது :(((( ஆக்சுவலா நான் இதக் குடுக்கல நீயாதான் பிடிங்கிக்கிட்டனு அவன ஓட்ட நினைச்சு சொல்ல ஆரம்பிச்சேன். எனக்கே ஆப்பாயிடுச்சு :(((( பாருங்க எவ்ளோ அப்பாவிப் பொண்ணு நான்...

சமீபத்திய ஃபீலிங்:
==========================================================

இப்ப அடிக்கடி இந்த FM-ல பேப்பர் வாழை இலைக்கு விளம்பரம் போடறாங்க. அதக் கேட்டாலே கோபமா வருது. வாழை இலைல சாப்பிடறது உடம்புக்கு எவ்ளோ நல்லது. விஷேசத்துக்கெல்லாம் அதப் போடாம பேப்பர் வாழை இலை வாங்கிப் போட்டா நல்லா இருக்குமா? இனிமேல் நிறையப் பேர் அத வாங்க ஆரம்பிச்சுடுவாங்க. யப்பா... கடைசில இலையக் கூட விட்டு வைக்க மாட்டேன்றாங்கப்பா... அதையும் ஆர்டிஃபிசியலா பண்ணிட்டாங்க...

சமீபத்திய கோபம்:
==========================================================

என் நாத்தனாரின் கணவர் ஒரு லிங்க்கைக் கொடுத்துப் பார்க்க சொன்னார். அதப் பாத்ததும் ரொம்ப கஷ்டமாயிடுச்சு. இவங்கல்லாம் மனுஷங்களா இல்ல மிருகங்களா? கண்டிப்பா மனுஷங்களா இருக்கவே முடியாது. நீங்களும் பாத்துட்டு சொல்லுங்க.

http://maaruthal.blogspot.com/2009/08/blog-post_29.html

சமீபத்திய சிந்தனை:
==========================================================

பாலிதின் கவர் யூஸ் பண்ணாதிங்க பண்ணாதிங்கனு எல்லாருக்கும் அட்வைஸ் பண்றத விட்டுட்டு கவர்மென்ட்டே பாலிதின் கவர் ப்ரொடக்ஷன நிறுத்தினா என்ன?!!

சமீபத்தில் ரசித்தப் பாடல்:
==========================================================

கந்தசாமி படத்துல வர எக்ஸ்கியூஸ் மி மிஸ்டர் கந்தசாமிப் பாட்டு அவ்ளோ பிடிக்குதுங்க எனக்கு. அந்த பாட்ட பாத்ததில்ல இன்னும்(அதனாலதான் பிடிக்குதோ :S) சுச்சி வாய்ஸ் அவ்ளோ சூப்பரா இருக்கு. ஸ்டார்ட்டிங்க்ல மியூஸிக் செமயா இருக்கு. என் மொபைல்க்கு அததான் ரிங்க்டோனா வச்சிருக்கேன் :)

சமீபத்தில் பார்த்த படம்:
==========================================================

சமீபத்தில் பார்க்க ஆரம்பித்த படம்னு சொல்லலாம். என்கிட்ட பேண்ட பிடுங்கின அந்த ஃப்ரெண்ட்... ப்ரெண்ட் இல்ல எனிமி... ஒரு படம் குடுத்தான். சூப்பரா இருக்கும். பாருனு. பத்தே நிமிஷம்தான் பாத்திருப்போம். ப்ரபு வேணாம்னு ஆஃப் பண்ணிட்டாங்க. அவ்ளோ கொடூரம். ஆரம்பிச்சதுல இருந்து கொலை கொலை கொலை. அதும் ரொம்ப கொடூரமா. யப்பா. எடுத்தவன் சைக்கோவா இருப்பான் போல. அந்தப் படம் பாக்கணும்னு உங்களுக்கு ஆசையா இருக்கா? "My Bloody Valentine" தான் அந்தப் படம். வீக்கெண்ட்ல பாத்து எஞ்சாய் பண்ணுங்க.

படம்னு சொல்லும்போது இத சொல்லியே ஆகனும். என் வீட்டுக்கார் எப்போப் பாத்தாலும் இங்க்லிஷ் படமேப் பாத்துட்டு இருப்பார். அடிக்கடி என் மாமியார் கடுப்பாகி தமிழ் படம் போட்டா என்னடா-னு கேட்டுட்டே இருப்பாங்க. ஒரு நாள் அவங்க அப்படி கேட்டதும் இவங்க ஒரு சூப்பர் தமிழ் படம் போட்டாங்க. அதப் பாத்ததுக்கப்புறம் என் மாமியார் தமிழ் படமே கேக்கறதில்ல. அப்படி என்ன படம்னு கேக்கறீங்களா? ஹி ஹி... நம்ம டாக்டர் நடிச்ச வில்லு படம்தான்.

சமீபத்திய ஃபோட்டோ:
==========================================================

ப்ரபுவோட கசின்ஸ் வந்திருந்தப்போ மகாபல்லிபுரம் போயிருந்தோம். அங்க அவர் தங்கச்சி ஹஸ்பெண்ட் எங்களுக்குத் தெரியாம எடுத்த ஃபோட்டோ இது :)))



ஓக்கேய்... நிறைய எழுதணும்னு நினைச்சேன். எல்லாம் மறந்துப் போயிட்டேன். சீக்கிரம் மீட் பண்ணுவோம். பை பை... :)))

Saturday, May 30, 2009

ஐயகோ! என்ன ஒரு அவமானம்!!

கோவிலுக்கு போறப்போ எல்லாம் அம்மா அம்மா-னு பின்னாடியே வர பிச்சைக்காரங்களப் பாத்தா உங்களுக்கு என்ன தோணும்? எனக்கு சில டைம் பாத்தா பாவமா இருக்கும். சில டைம் கோபமா வரும்(ஹிஹி... அது நம்ம மூட பொறுத்ததாக்கும்). எனக்கு சின்ன வயசுல எல்லாம் ஒரே டவுட்டா இருக்கும். ஏன் இவங்க எல்லாம் இப்படி காசு கேக்கறாங்க? இந்த அம்மா ஒரு நாலணா போட்டா என்னனு அம்மா மேல வேற தேவை இல்லாம கோபமா வரும். நம்ம கைல காசு இருந்தா எல்லாருக்கும் போடலாமெனு நினைப்பேன். பத்தாவது படிக்கற வரைக்கும் என் கைல காசே தர மாட்டாங்க. அதனால அவங்களுக்கு காசு போடற சான்ஸ் எனக்கு கிடைக்கவே இல்ல. ப்ளஸ் டூ-வும் கொண்டு போய் ஹாஸ்டல்-ல தள்ளிட்டாங்க :( அந்த ஸ்கூல்ல இருந்து லீவு கிடைச்சு ஊருக்கு போறதே ரொம்ப கஷ்டம். கிடைக்கற அந்த கொஞ்ச நாள்ல எங்க போய் பிச்சைக்காரங்களப் பத்தி நினைக்கறது??

ப்ளஸ் டூ-ல என் க்ளோஸ் ஃப்ரெண்ட் பிருந்தா. லீவுல அவ வீட்டுக்குப் போயிருந்தப்ப நாங்க ரெண்டு பேரும் சாயந்திரமா வெளில கிளம்பினோம். வழில நிறையப் பிச்சைக்காரங்க. ஆனா அவ யாருக்கும் ஒரு பைசா கூட போடல. எனக்கு கொஞ்சம் கடுப்பாயிடுச்சு. ஏன் இவ இப்படி கஞ்சத்தனமா இருக்கா. வீட்டுக்குப் போனதும் ரெண்டு டோஸ் குடுக்கலாம்னு நினைச்சேன். அப்போ திடீர்னு அவ இங்கயே நில்லு. நான் 2 mins-ல வந்துடறேனு சொல்லிட்டு ரோட க்ராஸ் பண்ணிப் போனா. எதுக்குப் போறானு நானும் அவளையே வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தேன். அவ அந்தப் பக்கம் போயி அங்க இருந்த ஒரு ரொம்ப வயசான தாத்தாவுக்கு 5 ரூபா போட்டுட்டு திரும்பி வந்தா. எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. ஏண்டி இவ்ளோ பேர் வழில வந்தாங்க. அவங்களுக்கு எல்லாம் போடல-னு நான் ஆச்சர்யமா கேட்டதும் அவங்களுக்கெல்லாம் என்ன இல்ல சொல்லு. கால் கை எல்லாம் நல்லாதான இருக்கு. எதாச்சும் ஒரு சின்ன வேலையாச்சும் அட்லீஸ்ட் சாப்பாட்டுக்காகவாவது செஞ்சுக்கலாம் இல்ல. சோ அவங்களுக்கு எல்லாம் போட மாட்டேன். இந்த தாத்தா-வால நடக்க முடியாது. கண் பார்வை இல்ல. ரொம்ப வயசானவர். அவரால ஒண்ணும் பன்ண முடியாது. அதான் எப்ப இந்தப் பக்கம் வந்தாலும் அவருக்கு எதாவது செய்வேனு சொன்னா. எனக்கும் அவ சொன்னது ரொம்ப ரொம்ப சரினு பட்டது. அதுல இருந்து யாராவது பிச்சைக் கேட்டா நல்லா யோசிச்சு இவங்களுக்கு இத விட்டா வேற வழியே இல்லைனு தோணினாதான் காசு போடுவேன்.

பேங்களூர்ல இருந்தப்போ சில சமயம் ஆபிஸ்ல இருந்து ஓசூர் வந்து பஸ் பிடிச்சுப் போவேன். அங்க பஸ் ஸ்டாண்ட் அநியாயத்துக்கு மோசம். சின்ன சின்ன பொண்ணுங்க பசங்க எல்லாம் வந்து கையத் தொட்டு தொட்டு அக்கா அக்கா-னு கேக்கறப்ப எல்லாம் இழுத்து ஒரு அறை விடணும் போல தோணும். ஆனா பேசாம தள்ளி நின்னுக்குவேன். ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஃப்ரெண்ட்ஸோட பீச் போயிருந்தப்போ ஒரு வயசான அம்மா வந்து தொண தொணனு கேட்டுட்டே இருந்துச்சு. ஒருத்தர் சலிச்சுக்கிட்டே எடுத்து 1 ரூபா குடுத்தார். அட ஏன் இதுக்குப் போய் இவ்ளோ சலிச்சுக்கறிங்க. வயசான அம்மாதான-னு நான் அப்பாவியா(அட நெசமாத்தான்) கேட்டதுக்கு அவர் இது நேரா எங்க போகும் தெரியுமா. பிச்சை எடுத்து காசு சேத்து நைட் போய் தண்ணி அடிக்கும். இதுக்கு முன்னாடி நான் ஒரு அம்மாவ அப்டி நேராப் பாத்தேன் அப்டினு சொன்னார். என்னடா இது ஒவ்வொருத்தரும் ஒரொரு மாதிரி சொல்றாங்களேனு ஃப்ரீயா விட்டுட்டேன்.

பெங்களூர்ல என் நாத்தனார் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பிச்சைக்காரர் இருப்பார். யார்ட்டயும் போய் நச்சரிக்க மாட்டார். யாராச்சும் குடுத்தா மட்டும் வாங்கிப்பார். அவரால ரொம்ப எல்லாம் நல்லா நடக்க முடியாது. ஆனாலும் கஷ்டப்பட்டு அவர் ட்ரெஸ் எல்லாம் வாஷ் பண்ணி சுத்தமாதான் போட்டிருப்பார். எங்கத்தை அவரப் பத்தி ஒரு நாள் பேசிட்டு இருந்தப்போ வாழ்ந்துக் கெட்டவர் போல-னு சொல்லிட்டு இருந்தாங்க. ஹ்ம்ம்ம்... இப்படியும் சிலர்னு நினைச்சுக்கிட்டேன். நாங்க யார் அந்த வழியாப் போனாலும் அட்லீஸ்ட் ஒரு ரூபாயாச்சும் போடுவோம். எங்கண்ணா அவர ஃபேமிலிப் பிச்சைக்காரார்னு விளையாட்டா சொல்லுவார். எங்க மீராக் குட்டிப் போனா டாடா எல்லாம் சொல்லுவார் :) so cool na :))

பிச்சைக்காரங்க-ன்ற டாபிக் எடுத்தாலே என் லைஃப்ல நடந்த ஒரு முக்கியமான சம்பவம் ஞாபகத்துக்கு வரும். அந்த ஸீந்ல இருந்த என் ஃப்ரெண்ட்ஸ் இன்னமும் சொல்லி சொல்லி சிரிச்சு என் BP ஏற வைக்கற அளவுக்கு எனக்கு நடந்த அவமானம். நீங்க சொல்லி சொல்லி சிரிக்க மாட்டேனு ப்ராமிஸ் பண்ணினா உங்களுக்கு சொல்றேன்.

ப்ராமிஸ்???

ப்ராமிஸ் பண்ணிட்டிங்கனா தொடர்ந்துப் படிங்க. ப்ராமிஸ் பண்ணாம படிச்சா சாமி உங்க கண்ணக் குத்திடும். ஜாக்கிரதை....

காலேஜ் லீவுல திருச்சிப் போயிட்டு ஊருக்கு திரும்பறதுக்காக ஜங்ஷன்ல இருக்க பஸ் ஸ்டாண்ட் போயிருந்தோம். அப்போ என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட் அப்படியே எங்களப் பாக்க வந்திருந்தார். அவர்ட்ட பேசிட்டு இருந்தப்போ ஒரு வயசான பாட்டி வந்து கைய நீட்டிக்கிட்டே இருந்துச்சு. யாரும் அத மதிக்கக் கூட இல்ல. நானும் போடலாமா வேணாமா-னு ரொம்ப யோசிச்சு சரி போனா போகுது கொஞ்சமா குடுத்துடலாம்னு நினைச்சு என் பர்ஸ எடுத்து துழவி துழவி ஒரு நாலணா-வ எடுத்து அது கையில போட்டுட்டு பெருமையாப் பாத்தேன். அந்தப் பாட்டி அது கையில இருந்த நாலணாவப் பாத்துது. என்னையப் பாத்துது. அப்படி ரெண்டு தடவைப் பாத்ததும்தான் எனக்கு ஒரு பயம் வந்து நான் என் ஃப்ரெண்டப் பாத்தேன். அவருக்கு ஒரே சிரிப்பு. உடனே அந்த பாட்டி ஏன் பாப்பா! எதுக்கு இதக் குடுத்த? இத வச்சு என்னால என்ன பண்ண முடியும்னு நினைச்சுக் குடுத்த? இத வச்சு என்னால ஒரு டீ குடுக்க முடியுமா?-னு அது பாட்டுக்கு காசு வச்சிருந்தக் கைய என் முன்னாடி நீட்டி நீட்டி சத்தம் போட்டு போட்டுக் கேக்குது. எனக்கா ஒரே பயம். எங்க அந்தம்மா என் கையப் பிடிச்சு என் கையில திரும்ப அந்த நாலணாவக் குடுத்துடுமோனு. அதுக்குள்ள என் ஃப்ரெண்ட் ஒரு அஞ்சு ரூபா காயின எடுத்துப் போட்டதும் அமைதியா போயிடுச்சு. கூட இருந்த டாக்ஸ்லாம் இன்னமும் இத சொல்லி சொல்லி சிரிக்குங்க. என்னே ஒரு வில்லத்தனம். நானாச்சும் நாலணாப் போட்டேன். அதுங்க எதுமே போடாம எப்படி என்னையப் பாத்து சிரிக்கலாம். நீங்களே நியாயத்த சொல்லுங்க மக்கா!!

Monday, March 23, 2009

காதல்?!!


நான் நடிப்பது
தெரியாததுப் போல்
நெற்றியில் முத்தமிடும்
உன் பாசாங்கும்

நீ முத்தமிட
வேண்டுமென்பதற்காக
தூங்குவதாய் நடிக்கும்
என் பாசாங்கும்தான்
காதலோ?!!

Sunday, March 8, 2009

சிறுகதைனா சும்மா இல்ல!!

சிறுகதைனாலே எனக்கு ரொம்ப அலர்ஜி. எவ்ளோ ட்ரை பண்ணியும் எனக்கு வராத ஒண்ணு :((( ஆனந்த விகடன், வாரமலர் இப்படி புக்ஸ்ல சிறுகதைகள் படிக்கும்போது எனக்கு ஆச்சர்யமா இருக்கும். எப்படிதான் இப்படி crispy-ஆ எழுதறாங்களோனு. இதுவே மலைப்பா இருக்கறப்ப ஆ.வி-ல அரைப்பக்கத்துக்கு கதை போடுவாங்க பாருங்க. அப்போல்லாம் ஆச்சர்யத்தில மயக்கம் போட்டு விழாதக் குறைதான்.

நானும் எழுதலாம்னு நிறைய தடவை ட்ரை பண்ணிருக்கேன். நமக்கு எப்போமே வழவழா கொழகொழானு எழுதிதான் பழக்கமாச்சே. அதனால ஒண்ணும் வந்தபாடில்ல. சரி போ கழுத-னு விட்டுத் தள்ளிட்டேன். அப்புறமா நம்ம ப்ளாக்-க ஸ்டார்ட் பண்ணி மொக்கை போட ஆரம்பிச்சப்போ தான் தொடர்கதையா எழுத ஆரம்பிச்சேன். அப்போதான் ஓ நமக்குக் கூட கதைன்ற வஸ்து ஒண்ணு இல்லாமலே மூணு பார்ட் நாலு பார்ட்-னு தொடர் எழுதற அளவுக்கு தெறம இருக்குனு மண்டைக்குள்ள பல்பு எரிஞ்சுச்சு. ஆஹா! இதே போதும் நமக்குனு கிடைச்சத வச்சு சந்தோஷப்பட்டுக்கிட்டேன்(நாமதான் அது வேணும் இது வேணும்னு பேராசை படற பழக்கம் எல்லாம் இல்லாத நல்ல பொண்ணாச்சே :))))

போன மாசம் ஒரு நாள் சும்மா ஆபிஸ் BB-ய பாத்துட்டு இருந்தப்போதான் சிவக்குமார்-னு ஒருத்தர் எழுதி இருந்த கதையப் படிச்சேன். ஒரே ஒரு பாராதான் கதை. ஆனா ரொம்ப நல்லா எழுதி இருந்தார். வழக்கம் போல நமக்கு எழுத வரமாட்டேன்றதே ஒரு ஃபீலிங்கோட படிச்சிட்டு அவருக்கு சூப்பரா இருக்குனு மெயிலப் போட்டேன். அப்போதான் நம்ம கொள்கை தலைதூக்குச்சு. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். இதோ உங்களுக்காக அந்தக் கதை :)))

**********************************************************

Who said?

I whispered to her to come near me. She came closer, with a smile in her face. The smile, which I realized, is going to make me crazy for the rest of my life time. I drew my hands up so as to feel her fingers. I don’t know why. But, I wanted to feel her fingers at that moment. I cuffed her fingers. I haven’t felt anything soft ever before. Her chin went down with a shy smile. She wanted to look at me. At the same instant, she was afraid. I held her shoulders and drew her closer to me. She came closer, although restrained. I started having goose-bumps. The concept of magnetism must be true, I realized. Her head was turning towards me, slowly. “May be to have a glimpse of me” I thought. “Hey” I called her in a broken voice. She was silent for a second and smiled without saying anything. I brought her still more close. She immediately brought her chin down. I wanted to feel her chin. I made her look at me. Her eyes met mine. She looked deep into my eyes as if falling deep into me. Only then, I realized what love is. “Who said arranged marriages are not exciting?” I thought. I have had enough excitement for one minute.

**********************************************************

எப்படி இருக்குங்க கதை?? :)))

Sunday, February 22, 2009

Slum Dog Millionaire - தமிழில் ரீமேக் செய்தால்?!!

நேத்துதான் Slum Dog Millionaire படம் பாத்தேன். ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. பல காட்சிகள் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் "Jab we met" தமிழ்ல எடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டேன். அதுல பரத், தமன்னா நடிக்கறாங்கன்னும் கேள்விப்பட்டேன். உடனே மனசுல தோணினது ஆண்டவா! அந்தப் படத்த என்னென்னக் கொலை செய்யப் போறாங்களோனு. இந்தப் படத்தப் பாத்ததும் இதே படம் தமிழ்ல ரீமேக் பண்ணினா எப்படி இருக்கும்னு நினைச்சுப் பாத்தேன். ஓ மை காட்!!!

தமிழ்ல எடுத்தா அதுல என்னென்ன மாற்றங்கள் செய்வாங்கனு என் சிற்றறிவுக்கு எட்டினதை லிஸ்ட் அவுட் பண்ணிருக்கேன். உங்களுக்கு தோணறத எடுத்து விடுங்க மக்கா...

1. ஹீரோவை கான்ஸ்டபிள் அடிக்க கையை ஓங்கும்போது படாரென்று அவர் மூக்கில் ஒரு குத்து விட்டு நம்ம ஹீரோ ஒரு பஞ்ச் டயலாக் பேசுவார்(like சொல்லி அடிக்கறதுல இவன் கில்லி... சொல்லாம அடிக்கறதுல இவன் ஒரு பல்லி...:P)

2. உடனே ஹீரோவுக்கு ஒரு என்ட்ரி சாங்(பாக்கத்தான் இவன் ஸ்லம் டாக்... மனசால ஒரு பொமரேனியன் டாக்... கோவம் வந்தா ஒரு ஸ்ட்ரீட் டாக்... ரவுண்டு கட்டி அடிக்கறதுல டாபர் டாக்...)

3. ஃப்ளாஷ்பேக் சீன்ல ஹீரோவோட அம்மா செத்துப் போறப்போ தாய்க்குலங்க மனச டச் பண்ற மாதிரி ஒரு சென்டிப் பாட்டு. (like அம்மா அம்மா எந்தன் ஆருயிரே...)

4. ஹீரோ குப்பைக் குழியில எல்லாம் படுத்து உருளும்போது அந்த அம்மாப் பாட்டு அப்படியே கன்டினியூ ஆகணும்.

5. ஹீரோயின விட்டுப் பிரிஞ்சு இருக்கறப்போ அப்பப்போ கனவுல அவங்களோட டூயட் பாடுவாரு. இதுக்கு இந்த லண்டன், பாரிஸ், ஜெர்மனி இப்படி கன்ட்ரீஸ்லப் போயி சாங்க சூட் பண்ணிக்கலாம்(ahem... நாங்க வேணா உடுத்திக்க நல்லத் துணிக் கூட இல்லாத சேரிக் காதலர்களா இருக்கலாம். ஆனா டூயட்டுனு வந்துட்டா யூரோப், யூவெஸ் இப்படி ப்ளேஸ்லதான் டூயட் பாடுவோம்)

6. பிரிஞ்சுப் போனக் காதலிய தேடி மும்பை வர ஈரோ அவளக் கண்டுபிடிக்கறதுக்காக தெரு தெருவா அவங்க சின்ன வயசுல பாடிட்டு இருந்தப் பாட்ட பாடிக்கிட்டே போவாரு. அதைக் கேட்டு ஈரோயின் சிக்னல் குடுக்க அவங்களப் போய் காப்பாத்திக் கூட்டிட்டு வருவாரு.

7. கோடீஸ்வரன் நிகழ்ச்சிய நடத்தறவரு ரெஸ்ட் ரூம்ல தப்பான விடைய சொல்லித் தந்தும் நிகழ்ச்சில சரியான விடைய சொல்ற நம்ம ஹீரோ நிகழ்ச்சிய நடத்தறவருக்கு மட்டும் கேக்கற மாதிரி ஒரு பஞ்ச் டயலாக் சொல்லுவாரு.

8. படத்துல கண்டிப்பா ஒரு குத்துப்பாட்டும் அட்லீஸ்ட்டு ரெண்டு ஃபைட்டாவது இருக்கோணும். அதும் ஈரோ சும்மா ஒரு அஞ்சாறு குண்டு ஆளுங்கள ஒரே அடில சுழட்டி அடிச்சு எழுந்திருக்க முடியாதபடி விழ வைக்கணும்.

9. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹீரோகிட்ட அவர் சொன்ன பதில் சரியானு கேக்கும்போது ஹீரோ ஒரு பஞ்ச் டயலாக் விடனும்(ஒரு தடவ சொல்லிட்டா என் பதில நானே மாத்திக்க மாட்டேன்...)

10. கால் சென்டர்-ல ட்ரெயினிங் க்ளாஸ் எடுக்கற பொண்ணு ஒரு பையன்ட கேள்விக் கேட்டு அவன் தெரியாம முழிக்கும்போது அங்க டீ கொண்டு வர நம்ம ஹீரோகிட்ட பதில் சொல்ல சொல்லிக் கேக்கும்போது ஹீரோ கைல வச்சிருந்த ட்ரேய மேல தூக்கி வீசிட்டு அந்த பொண்ணு கைல இருக்க மார்க்கர் பென்-ன வாங்கி அமெரிக்கன் அக்சென்ட்-ல இங்க்லிபிஷ் பேசி அந்த ட்ரெயினிங் செஸன் ஃபுல்லா எடுத்துடுவாரு(நோட் திஸ் பாயிண்ட். ஹீரோ ஸ்கூல் பக்கமே தலை வச்சுக் கூடப் படுக்காதவரு). முடிச்சிட்டு மார்க்கர வீசிட்டு அவர் திரும்ப வரும்போது அது வரைக்கும் அந்தரத்துலயெ நின்னுட்டு இருந்த ட்ரே இப்போ அவர் கைல கரெக்டா வந்து விழும்.

11. அவர் க்ளாஸ் எடுத்த அழகுல மயங்கிப் போயிடுது அந்த க்ளாஸ்ல இருந்த ஒரு பொண்ணு. இங்கதான் செகண்ட் ஹீரோயின் இன்ட்ரோ. அவங்க கனவுல ஹீரோவோட கவர்ச்சிகரமா டான்ஸ் ஆடுவாங்க. ஹீரோ பின்னாடியே சுத்துவாங்க. ஆனா ஹீரோ அவங்கள கண்டுக்கவே மாட்டாரு. ஹீரோயினயே நினைச்சுட்டு பீலிங்ஸா உட்டுட்டு இருப்பாரு.

12. ஹீரோ சின்னப் பையனா இருக்கும்போது அவங்க சேரில தலைவர் சூட்டிங்குக்கு வர மாதிரி வச்சு அவருக்கு ஒரு சாங்க வச்சுடணும். ஜோடியா நயன் தாரா(இவங்க பழசாயிட்டாங்களோ?!!), தமன்னா இப்படி யாரையாச்சும் கால்குறை ட்ரெஸ்ல ஆட விடணும்.

Last but not the least...

13. படம் பூஜைப் போட்டதுமே இந்தப் படம் தலைவர் படம்னு ஃபுல்லா நியூஸ் பரப்பி எடுக்கப் போற வெத்து வேட்டுப் படத்த சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கிடணும். NOM :)))

இந்தக் கதைக்குப் பொருத்தமான ஈரோ, ஈரோயின கொஞ்சம் சஜஸ்ட் பண்ணுங்க மக்கா :)))

Wednesday, February 4, 2009

இனிய இல்லறம்!!!



"ஏங்க! சாப்பிடலாமா?"

"சரிம்மா"

"இங்க பாருங்க. நான் செய்யறதுல என்ன குறை இருக்கோ அத அப்டியே சொல்லணும். அப்போதான் அடுத்த தடவை அந்த தப்பு இல்லாம என்னால செய்ய முடியும். சரியா?"

"சரி"

"எப்படி இருக்கு?"

"சாம்பார்ல உப்பு கம்மியா இருக்கு. காரமும் கம்மியா இருக்கு"

"போங்க நீங்க ரொம்ப மோசம். நான் ஆபிஸ் போயிட்டு அங்க அவ்ளோ வேலை செஞ்சுட்டு வீட்டுக்கு வந்து உங்களுக்காக ஆசை ஆசையா செஞ்சு குடுத்தா நீங்கப் பாட்டுக்கு குறை சொல்றீங்க..."

"@#$^#@$"

-------------------------------------------------------------------------------

"ஏங்க"

"என்னம்மா?"

"நான் ஒண்ணு கேப்பேன். நீங்க உண்மைய சொல்லணும்"

"கேளு சொல்றேன்"

"கண்டிப்பா?"

"கேளு"

"நான்... நான்... ரொம்ப அழகா? இல்ல ரொம்ப ரொம்ப அழகா?"

"ஆண்டவா! எனக்கு நெஞ்சு வலிக்குதே"

-------------------------------------------------------------------------------

"என்னங்க இந்த வாரம் ஊருக்குப் போகும்போது அம்மாட்ட சொல்லி உங்களுக்கு சுத்திப் போட சொல்லணும்"

"என்னடி திடீர்னு?"

"இன்னைக்கு பொரியல்க்கு வெண்டைக்காய் வெட்டி தந்தீங்க இல்ல. மதியம் லஞ்ச் அப்போ என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்டி இவ்ளோ பொடிசா நறுக்கினனு ஆச்சர்யமா கேட்டுட்டு இருந்தாங்க. என் வீட்டுக்கார்தான் வெட்டித் தந்தார்னு ரொம்ப பெருமையா சொன்னேன் :-)"

":-|"

"அதான் கண்டிப்பா சுத்திப் போடனும்னு சொன்னேன். ஏங்க... இன்னைக்கு கோவைக்காய் ஃப்ரை பண்ணலாம்னு வாங்கி வச்சிருக்கேன்..."

"!@$%^$#@"

-------------------------------------------------------------------------------

"ஏண்டி இருக்க இருக்க ஏறிட்டேப் போற?"

"கொஞ்சம்தான வெயிட் போட்டிருக்கேன்"

"கல்யாணத்துக்கு முன்னாடியும் பின்னாடியும் எவ்ளோ வெயிட்?"

"முன்னாடி 45 கே.ஜி தாஜ்மகால். அப்றம் 54 கே.ஜி தாஜ்மகால். கொஞ்சம்தான ஏறிருக்கேன்?"

"ஆண்டவா! எனக்கு ஏனிந்த சோதனை..."

-------------------------------------------------------------------------------

"ஏங்க வருஷ வருஷம் தீபாவளி அப்போ உங்க அம்மாவுக்கு உங்க அப்பா என்ன வாங்கி தருவார்?"

"உனக்கு தீபாவளிக்கு எதும் வேணும்னா நேரா கேளு"

"எனக்கு ஒண்ணும் வருஷ வருஷம் வேணாம். மொத தீபாவளினால இந்த வருஷம் மட்டும் வாங்கி கொடுங்க"

"சரி என்ன வேணும்?"

"ஒண்ணும் பெருசா எதும் வாங்கி தர வேணாம்"

"சரி என்ன வேணும்னு சொல்லு"

"ஒரே ஒரு... வைர ஒட்டியாணம் மட்டும் வாங்கித் தாங்கப் போதும்"

அப்போது வாயடைத்தவர் இரண்டு நாட்களுக்கு வாயை திறக்கவே இல்லை.

இப்படித்தான் எங்கள் இனிய இல்லறம் வெகு இனிதாய் நடந்துக் கொண்டிருக்கிறது :)

பி.கு: சிங்கம் களத்துல இறங்கிடுச்சு இல்ல...