Monday, January 29, 2007

என்ன ஒரு வில்லத்தனம்?!!!

கடிகாரத்தை பார்த்தாலே

வெறுப்பாய் வருகிறது

நீயில்லாத பொழுது

மெதுவாய் நகர்வதும்

உன்னுடன் இருக்கும் பொழுது

வேக வேகமாய் ஓடுவதும்......

என்ன ஒரு வில்லத்தனம்?!!!

Sunday, January 21, 2007

புரிந்து கொண்டாயா???

என்னுள்
வாசம் செய்யும்
என் சுவாசமே!

என்னுள்ளிருந்து
துடித்துக் கொண்டிருக்கும்
என் இதயமே!

ஒவ்வொரு நொடியும்
என்னை வழிநடத்தும்
என் மனமே!

உன்னிலிருந்து
வார்த்தைகளாய் நான்
உருப்பெருகிறேன் என்றாய்

என்னுள்ளிருக்கும்
எனது உயிராய்
நீ மாறி விட்டதை
புரிந்து கொண்டாயா???

Monday, January 15, 2007

இந்தியா குடியரசானது எப்பொழுது?

பொங்கல் லீவுக்கு நானும், என் தம்பியும் வீட்டுக்கு போய் சேர்ந்துட்டோம். ஞாயித்துக் கிழமை காலைல ரொம்ப நேரமா ஒரு ஒன்பதரை மணிக்கெல்லாம் என் தம்பி என்னை எழுப்பி விட்டுட்டான். சரி இனியும் தூங்கிட்டு இருந்தா குடியிருந்த கோயில் விளக்குமாத்த தூக்கிட்டு வந்திடும்னு அப்படியே எழுந்திருக்கலாமான்னு நல்ல நேரத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்பதான் எங்க பக்கத்து வீட்டு சின்ன பையன் வந்தான் (டிப்ளமோ செகண்ட் இயர் படிக்கிறான். ஆனா இன்னமும் எங்களுக்கு அவன் சின்ன பையன்தான்).

வந்தவன் நேரா என் தம்பிகிட்ட போய் "அண்ணா நான் உங்ககிட்ட ஒரு GK question கேக்கறேன்" னான். இதென்னடா காலைலங்காட்டி வம்பா போச்சுன்னு என்னதான் கேக்கறான்னு பாக்கலாமேன்னு நானும் அவனுங்க பேசறத கவனிச்சேன். என் தம்பி சரின்னதும் "ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது எந்த ஆண்டு?" ன்னு கேட்டான். எங்க வீட்டுலயே GK அதிகம் உள்ள ஒரு அறிவாளி யாருன்னா அது என் தம்பிதான். அவனே ஒரு நிமிஷம் முழிச்சான். அடடா...... அடுத்து நம்மகிட்ட வந்துடுவானேன்னு நான் நல்லா கண்ண இறுக்கி மூடிக்கிட்டேன்.

இவன் எப்படி சமாளிக்கப் போறானோன்னு ஒரு நிமிஷம் எனக்கும் பாவமாத்தான் இருந்துச்சு. ஆனாலும் என்னை நேரமா எழுப்பி விட்டுட்டானில்ல. நல்லா முழிக்கட்டும்னு உள்ளுக்குள்ள ஒரு சந்தோஷத்தோட என்ன பண்ணப் போறான்னு பாத்துட்டு இருந்தேன். "அதெல்லாம் இருக்கட்டுண்டா. இந்தியா சுதந்திரம் ஆனது எப்பன்னு சொல்லு. நான் உன் questionக்கு answer பண்றேன்" ன்னு என் தம்பியும் கேட்டான். அவன் உடனே ரொம்ப வேகமா "1947 ஆகஸ்ட் 15" ன்னான். என் தம்பி அப்படியே அவன பாத்து ஹீரோ கணக்கா ஒரு லுக் விட்டான். பய எப்படி சமாளிக்க போறான்னு பாப்போம்னு நானும் தூங்கற மாதிரி ஆக்ட் விட்டுட்டு இருந்தேன். "டேய்! question-அ ஒழுங்கா கேட்டுட்டு சொல்லனும். நான் கேட்டது இந்தியா குடியரசானது எப்பன்னு. நீ என்ன பதில் சொல்ற?" ன்னு கேட்டான். உடனே அவனும் சளைக்காம "ஓ! குடியரசாண்ணா? அதுகூட எனக்கு தெரியாதா? 1956 ஜனவரி 26" ன்னானே பார்க்கலாம். என்னால சிரிப்ப அடக்க முடியல. எழுந்து உக்காந்து நான் சிரிச்ச சிரிப்புல என் தம்பியும் சேர்ந்துக்க அவனுக்கு அப்பவும் புரியல. நான் உடனே "டேய்! நான்தான் GKல ஜீரோன்னு நினைச்சுட்டு இருந்தேன். எனக்கும் மேல நீயா? இந்தியா குடியரசானது 1956லயா?!" ன்னு கேட்டு நான் சிரிச்ச சிரிப்புலதான் அவனுக்கு புரிஞ்சது. "அய்யோ இல்ல இல்ல...... 1950 ஜனவரி 26" ன்னு வேக வேகமா சொன்னான்.

அதையெல்லாம் நாங்க ஏத்துக்காம அவன அப்படி இப்படின்னு கிண்டலடிச்சு எங்க அம்மாகிட்ட பஞ்சாயத்துக்கு போயி அப்புறம் கடைசியாதான் தெரிஞ்சது அவனுக்கு ரெண்டே ரெண்டு questionதான் தெரியும். அதை எல்லார்கிட்டயும் கேட்டு கேட்டு பெரிய அறிவாளி மாதிரி பந்தா விட்டுட்டு இருப்பான்னு. ஆஹா நம்ம தம்பி எப்படி சமாளிச்சுட்டான்னு பெருமை பொங்க அவன பாத்தப்பதான் எனக்கு ஞாபகம் வந்தது அவன் என்னை நேரமா எழுப்பி விட்டது. அடடா chance-ஐ miss பண்ணிட்டோமேனு எனக்கு ஒரே ஃபீலிங். ஆகட்டும் ஆகட்டும். இன்னொரு நாளைக்கு மாட்டாமயா போயிடுவ. அன்னைக்கு வச்சிக்கிறேண்டி உனக்கு கச்சேரின்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டே அவனப் பாத்து "சிங்ககுட்டிடா நீயி. எந்தம்பி இல்ல. எப்படி சமாளிச்ச"ன்னு புகழ்ந்து வச்சேன். ஹ்ம்ம்ம். என்ன பண்றது????

Thursday, January 11, 2007

வெறித்தனமாய் காதலிக்கிறேன்!

சில சமயங்களில்
சமத்துப் பிள்ளையாய்
சொன்னபடி செய்கிறாய்

சில சமயங்களில்
சொல் பேச்சு கேளாமல்
தடுமாற வைக்கிறாய்

சில சமயங்களில்
தலையை பிய்த்துக் கொண்டு
அலைய விடுகிறாய்

சில சமயங்களில்
எதிர்பாராத எதையேனும் செய்து
குழம்ப விடுகிறாய்

என்றாலும்
இந்த பாழாய் போன
மனம் என்னவோ
உன்னைத்தான்
வெறித்தனமாய் காதலிக்கிறது
சாஃப்ட்வேர் ப்ரோக்ராமே :)

(எப்பொழுதும் கம்ப்யூட்டரினுள்ளேயே தலையை நுழைத்துக் கொண்டிருக்கும் என் இனிய சாஃப்ட்வேர் மக்களுக்கு சமர்ப்பணம்)

Wednesday, January 10, 2007

நானா? சன் மியுசிக்லயா?

ஒரு நாள் நைட் எல்லாரும் உக்காந்து சன் ம்யூசிக் பார்த்துட்டு இருந்தோம். அந்த பொண்ணு "நீங்க யார்க்கு இந்த் பாட் dedicate பண்றிங்க?"ன்னு கேட்டுட்டு இருந்தப்ப தான் எனக்கு அந்த யோசனை தோணுச்சு.

உடனே வேகமா "ஏ பேசாம நானும் VJவா போயிடட்டுமா?"ன்னுதான் கேட்டேன்.

உடனே என்னை ஒரு நக்கல் சிரிப்போட திரும்பி பார்த்த என் ப்ரெண்ட் சொன்னா "அதுக்கெல்லாம் கொஞ்சமாவது பார்க்கற மாதிரி இருக்கனும்"

"ஆஆஆஆ......" எனக்கு வந்த கடுப்புக்கு அளவே இல்ல.

"அதெல்லாம் மேக்கப் போட்டா உள்ளூர் கிழவிகூட உலக அழகியா தெரிவாய்ங்க. இவ கொஞ்சமாவது தெரிய மாட்டாளா?" ன்னு எனக்கு ஒத்து ஊதற மாதிரி இன்னொருத்தி கால வாருனா.

"அடியே சைக்கிள் கேப்புல டேங்கர் லாரியே ஓட்டறியா நீயி"ன்னு நான் சவுண்டு விட்டதும்

"இல்ல இல்ல. நீ தாராளமா VJ ஆகலாம்னு சொன்னேண்டி" ன்னா.

நானும் அப்படியே சந்தோஷம் தாங்க முடியாம "இதொ பெங்ளூரிலிர்க்கும் நம்ம இம்சை அர்சிக்காக இதொ இந்த் பாட்" ன்னு அப்படியே VJ மாதிரி பேசிக் காட்டினேன்.

அதுவரைக்கும் அமைதியா உக்காந்திருந்த என் ப்ரெண்டு "ஏண்டா இப்படி தமிழ கொல பண்ற? இதுல நீ ஒரு எழுத்தாளர் வேற" அப்படின்னு சொன்னாலே பார்க்கலாம். "என்னது எழுத்தாளரா??!!!". எனக்கு அப்படியே மயக்கமே வந்துடுச்சு.

அப்பதான் இன்னொருத்தி சொன்னா "நீ வேற. அவ ப்ளாக் எழுதறவங்கள எழுத்தாளர்னு சொல்லுவா. ஏதோ நீ பொழப்பில்லாம அடிச்சு வெளயாண்டுட்டு இருக்கறதப் பார்த்துட்டு உன்னையும் தெரியாத்தனமா அந்த லிஸ்ட்ல சேத்துட்டா. நீ அதுக்காக எல்லாம் பீல் பண்ணிக்காத" ன்னு.

ஆஹா! கதை இப்படி போகுதா! இதையே அப்படியே மெயின்டெயின் பண்ணிக்க வேண்டியதுதான்னு நினச்சுக்கிட்டே என் VJ கனவ எனக்குள்ள போட்டு புதைச்சுக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன். ஹ்ம்ம்ம். சன் ம்யூசிக்குக்கு அதிர்ஷ்டம் இல்ல போல. என்ன miss பண்ணிடுச்சுன்னு என்ன நானே தேத்திக்கிட்டேன்.

Sunday, January 7, 2007

உயிரில் கலந்த உறவே - 2

ஏதேனும் துன்பம் நேர்ந்தால்
விதியே என்று அமைதியுறுவேன்
விதியே சதி செய்தால்.........

ஏ.சி சான்ட்ரோ காரினுள் அமைதியாய் அமர்ந்திருந்த கவிதாவிற்கு நெருப்பின் மேல் இருப்பது போலிருந்தது.

"என்ன கவி. பாட்டிக்கு இப்படி ஆயிடுச்சேன்னு பீல் பண்றியாடா? என்னாலயும் தாங்கவே முடியலை" என்று சந்திரசேகர் துக்கத்துடன் கூறினார்.

"என்னாலயும் தாங்கிக்கவே முடியல டாடி. அதை விட இன்னும் என்ன கஷ்டமா இருக்குன்னா பாட்டிகிட்ட இப்படி பொய்
சொல்லிட்டீங்களேன்னுதான்..." என்று அவள் முடிப்பதற்குள்

"பின்ன என்னடா? பாட்டிக்கிட்ட போய் உங்களுக்கு ப்ளட் கேன்சர் அப்படின்னு சொல்ல முடியுமா?" என்றார்.

"அய்யோ நான் அதை சொல்லலை டாடி. பாட்டி எப்பவுமே அவங்க போறதுக்குள்ள என் கல்யாணத்தைப் பார்த்திடனும்னு சொல்லுவாங்க.
அவங்ககிட்ட போய் கல்யானம் பண்ணலாம்னு சொல்லிட்டு... அப்புறம் கடைசி நேரத்தில ரொம்ப பீல் பண்ணுவாங்க இல்லையா டாடி? அதை
நினைச்சாதான் இன்னும் கஷ்டமா இருக்கு" என்று வருத்தத்துடன் கூறினாள்.

"அது பொய்னு உனக்கு யார் சொன்னது?" என்று சந்திரசேகர் ஆச்சரியமாய் கேட்கவும் தூக்கி வாரிப்போட நிமிர்ந்தவளிடம்

"உங்கம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். அவ இப்பவே போகும் போது தரகரைப் பார்த்துட்டு போகச் சொன்னா. நான் தான் உன்கிட்ட
கேட்டுட்டு போய் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன்" என்றார்.

"நோ டாடி. என்னால சம்மதிக்க முடியாது. எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்க கொஞ்சம் கூட விருப்பமில்லை" என்று உறுதியாக
தலையசைத்தாள்.

"கவிம்மா ப்ளீஸ். சூழ்நிலையை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுடா. நீயே யோசிச்சுப் பாரு. நான் சொல்றது சரின்னு புரியும்"

"டாடி ஆனா நான் இப்பதான் பி.எஸ்.ஸியே கம்ப்ளீட் பண்ண போறேன். நான் இன்னும் பி.எட் பண்ணனும்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன். இப்ப
வந்து இப்படி சொன்னா என்ன டாடி அர்த்தம்?"

"உன் ஆசையை நான் குறை சொல்லலை. ஆக்சுவலா உனக்கு இப்ப கல்யாணம் பண்ற ஐடியாவும் இல்லை. ஆனா பாட்டியோட ஆசை என்ன?
உன்னோட கல்யாணத்தைப் பார்க்கணும் அவ்வளவுதான். எங்களால என்னடா பண்ண முடியும்?" என்று அவர் கெஞ்சலாய் கேட்டும் அவள் அமைதியாய் அமர்ந்திருக்கவே மேலும்

"எதுவா இருந்தாலும் உன் விருப்பம். உன்னை நான் கட்டாயப்படுத்தலை. என்ன...... எங்க எல்லாரையும் விட பெத்த பிள்ளையான என்னை விடவும் உன் மேலதான் பாசம் அதிகம். உன்னை கண்ணுல வச்சு வளர்த்த உயிர் நிம்மதியா போகறதும் போகாததும் உன் கையிலதான் இருக்கு" என்றார்.

"நான் யோசிச்சு சொல்றேன் டாடி" என்று மெதுவாய் சொன்னவள் அதற்குள் வீடு வந்துவிடவும் வேகமாக இறங்கிச் சென்று அவளது அறைக்குச்
சென்றாள். சந்திரசேகர் காரை ஷெட்டில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார்.

நேராகச் சென்று மெத்தையில் விழுந்த கவிதா என்ன செய்வதென்று புரியாமல் குழம்பினாள். தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று
வருந்தியவள் திருமணம் செய்து கொள்வது பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.
'இப்ப பண்ணிக்க விருப்பமில்லைதான். பி.எட் முடிக்கணுமே. பரவாயில்ல. எனக்கு பாட்டிய விட நானே முக்கியமில்ல. என் ஆசை எந்த மூலைக்கு'
என்றெண்ணியவளின் கண்கள் பாட்டியின் நினைவுகளில் மீண்டும் குளமாயின.

சிறு வயதிலேயே கணவனை இழந்த தங்கம்மாள் ஒரே மகனான சந்திரசேகரைக் கண்ணுக்கு கண்ணாக வளர்த்தார். தனக்காக எவ்வளவோ
தியாகங்கள் செய்து கஷ்டப்பட்டு வளர்த்த தாயிடம் சந்திரசேகர் உயிரையே வைத்திருந்தார். தனது தொழில் திறமையால் நன்கு முன்னேறி ஒரு
சிறந்த தொழிலதிபராய் ஆன சந்திரசேகர் வளர்மதியைக் கைப்பிடித்தப் பிறகும் தாயிடம் வைத்திருந்த பாசம் சிறிது கூட குறையவே இல்லை.
சந்திரசேகரின் முதல் குழந்தையான கவிதாவை அதை விட பன்மடங்கு பாசத்தைக் கொட்டி வளர்த்தார் தங்கம்மாள். அவளுக்கு பிறகு பிறந்த
அபிஷேக்கிடம் கூட அந்த அளவு பாசம் வைக்கவில்லை. பிறந்தது முதல் பாட்டியிடமே இருந்து வந்த கவிதாவும் தனது பெற்றோரை விடவும்
பாட்டியிடமே அதிக பாசம் வைத்திருந்தாள். டீச்சர் டிரெயினிங் படிப்பிற்காக அவளை ஹாஸ்டலில் கொண்டு விட்டபோதுகூட எனக்கு படிப்பே
வேண்டாம் என்று கூறி விட்டு வந்துவிட்டாள். தங்கம்மாள் தான் இரண்டு வருடம் தானே இரண்டு நிமிடமாய் பறந்து விடும் என்று அவளை
சமாதானப்படுத்திக் கொண்டு விட்டு வந்தார். எப்படியோ கஷ்டப்பட்டு இரண்டு வருடங்களை தள்ளியவள் உள்ளூரிலேயே படித்துக் கொள்கிறேன்
என்று அருகில் இருந்த கல்லூரியிலேயே பி.எஸ்.ஸி கணிதம் சேர்ந்து விட்டாள். பி.எஸ்.ஸி முடிக்க கடைசி செமஸ்டர் தேர்வுகள் மட்டுமே
மிச்சமிருக்கும் பட்சத்தில் இப்படி அவள் தலையில் இடி விழுந்து விட்டது.

'அய்யோ! உன் மடியில் தலை வச்சு படுத்து நீ தலை நீவி விடாம நான் எப்படி தூங்குவேன்? ரெண்டு வருஷத்தை உன் பக்கத்தில் இல்லாம தள்ள
எவ்வளவு கஷ்டப்பட்டேன். இப்படி என்னை விட்டுட்டு போகப் போறியே. நான் என்ன செய்யப் போறேன்?' என்று அழுது கொண்டே இருந்தவள்

'உன்னை விட எனக்கு எதுவும் முக்கியமில்ல. உனக்காக.......... உன் சந்தோஷத்துக்காக......... நான் என்ன வேணும்னாலும் செய்வேன். ஆப்டர்
ஆல் கல்யாணம்........ இதைக் கூட உனக்காக செஞ்சுக்க மாட்டேனா' என்று எண்ணிக் கொண்டே கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.

சட்டென்று சக்திவேல் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வர தொய்ந்து போய் அப்படியே மீண்டும் தொப்பென்று விழுந்தாள்.

'அய்யோ சக்தி. நான் என்ன பண்ணட்டும்? எனக்கு வேற வழி தெரியலை சக்தி' என்று புலம்பிய மனது சக்திவேலை எண்ணத் தொடங்கியது.

தொடரும்....

உயிரில் கலந்த உறவே - 1

பெரு மகிழ்ச்சியை கொண்டாடும்
இதயத்தை படைத்தாய்
இறைவா!
சிறு துன்பத்தையும் தாங்கும்
மனதினை படைக்க
ஏன் மறந்து போனாய்?


"நோ" என்ற கவிதாவின் அலறலில் மருத்துவமனையே கிடுகிடுத்தது.

"ஷ்ஷ்... கவிம்மா இது ஹாஸ்பிடல்" என்ற டாக்டரின் குரலுக்கு அடங்கியவள் தனது கைகளால் வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கியபடியே இடிந்து போய் அமர்ந்திருக்கும் சந்திரசேகரிடம் சென்றாள். அவர் முன் டேபிளில் கைகளை ஊன்றிக் கொண்டு "டாடி ப்ளீஸ் டாடி. அங்கிள்கிட்ட விளையாட வேண்டாம்னு சொல்லுங்க டாடி" என்று கெஞ்சினாள்.

"இதுல விளையாட என்னம்மா இருக்கு?" என்று கண்ணீருடன் நின்றவளைப் பார்த்து பரிதாபமாய் சொன்னவர் சந்திரசேகரிடம் திரும்பி "எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்து கன்பார்ம் பண்ணிக்கிட்டு தான்டா சந்துரு சொல்றேன். அம்மாவுக்கு கன்பார்மா ப்ளட் கேன்சர்தான். மிஞ்சிப் போனா ரெண்டு மாசம் தான். அதுக்கு மேல தாங்காது" என்றார்.

"வேற வழியே இல்லையா?" என்ற சந்திரசேகர் கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கூடத் துடைக்காமல் அமர்ந்திருந்தார்.

"ஆரம்ப நிலையா இருந்தா கொஞ்ச நாள் உயிர் வாழ வைக்க முயற்சி செய்யலாம். ஆனா கடைசிக் கட்டத்திலேதான் கண்டுபிடிச்சிருக்கோம். ஒண்ணே ஒண்ணுதான் பண்ண முடியும். உங்கம்மாவை கண் மூடற வரைக்கும் நிம்மதியா எந்த குறையும் இல்லாம பார்த்துக்கணும். அவங்க கடைசி ஆசை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அதையெல்லாம் நிறைவேத்தனும். வேற எதுவும் பண்ண முடியாது" என்று கையை விரித்த டாக்டரிடம் வேறு எதுவும் கேட்கத் தோன்றாமல் சந்திரசேகர் எழுந்தார். கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு டாக்டரைப் பார்த்து தலையாட்டி விட்டு வெளியே சென்றவரின் பின்னாலேயே கவிதா கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டே சென்றாள். தங்கம்மாள் இருந்த அறையை நெருங்கியதும் நின்று கவிதாவிடம்

"கவிம்மா பாட்டிகிட்ட இதை எதுவும் சொல்லக் கூடாது. அவங்க உடம்புக்கு எதுவும் இல்லைன்னு சொல்லனும்" என்று
சந்திரசேகர் சொன்னதும் மீண்டும் பொல பொலவென்று கண்ணீர் வடித்தாள்.

"ஷ். அங்க வந்து இப்படியே அழுதுகிட்டு இருந்தீன்னா உங்கம்மா என்ன என்னன்னு கேப்பா. அப்புறம் பாட்டிக்கும் தெரிஞ்சிடும். தயவு செஞ்சு கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு இரு" என்று அவர் கெஞ்சலாய்க் கேட்கவும் தலையாட்டிக் கொண்டே கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு அவர் பின்னால் சென்றாள்.

இருவரும் உள்ளே நுழைந்ததும் கட்டிலில் படுத்திருந்த தங்கம்மாள் எழ முயல அவரை அப்படியே படுக்க வைத்தாள் வளர்மதி. அதற்குள் கவிதா சென்று அவரது தலைமாட்டில் நின்றுக் கொண்டாள். அம்மாவின் அருகில் அமர்ந்த சந்திரசேகர் அவரது கைகளை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு,
"எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்தாச்சும்மா. உடம்புக்கு எதுவும் இல்லையாம். கொஞ்சம் வீக்கா இருக்கீங்க அவ்வளவுதான்" என்று புன்னகைக்க முயன்றார். அதைக் கேட்டு லேசாய் சிரித்த தங்கம்மாள்

"என்னை சமாதானப்படுத்தினது போதும்ப்பா. எனக்கு என்னன்னு தெரிஞ்சுக்கவும் நான் விரும்பலை. ஆனா என் முடிவு நெருங்கிடுச்சு. அது மட்டும் நிச்சயம் தெரியும்" என்று சொல்லி முடிப்பதற்குள் "அம்மா தயவு செஞ்சு அப்படியெல்லாம் எதுவும் சொல்லாதீங்க. எங்களை விட்டுட்டு நீங்க எங்கயும் போயிட மாட்டீங்க. உங்களுக்கு எதுவும் ஆகாது" என்ற சந்திரசேகரின் கண்கள் அவரையும் அறியாமல் கலங்கியது. அதைக் கேட்டு விசும்பிய கவிதாவின் சத்தத்தைக் கேட்ட தங்கம்மாள் அவளது கையைப் பற்றி இழுத்துத் தனக்கு அருகில் உட்கார வைத்துக் கொண்டு

"நீ ஏன்டாம்மா அழற? ஒண்ணும் கவலைப்படாத. எனக்கு எப்பவும் ஒரே ஆசைதான். கண்ணை மூடறதுக்குள்ள உன் கல்யாணத்தைப் பார்த்திடனும். அவ்வளவுதான். என் தங்கத்தைக் கல்யாணக் கோலத்தில பார்க்காம என் உயிர்தான் போயிடுமா என்ன?" என்று புன்னகைத்தார்.

"அதைதாம்மா நானும் யோசிச்சுட்டு இருக்கேன். இன்னும் ஒரு மாசத்தில் கவியோட படிப்பு முடிஞ்சுடும்.முடிஞ்ச உடனேயே கல்யாணம் பண்ணிடலாம்னு நினைக்கிறேன். அவளுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுது இல்லையா? நீங்க என்ன சொல்றீங்க?" என்று சந்திரசேகர் கேட்டார்.

"அவ விருப்பம் எப்படியோ அப்படியே செய்ப்பா. எனக்கு கேட்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா" என்று கவிதாவின் தலையை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தார். கவிதா எதுவும் புரியாமல் அவரைப் பார்த்து விழிக்க "பாட்டிக்கிட்ட பேசிட்டு இரு. நான் போய் மருந்து வாங்கிட்டு வரேன். வந்ததும் நாம ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்பலாம்" என்று கூறி விட்டு வளர்மதியை அழைத்துக் கொண்டு சென்றார்.

வெளியில் சென்றதும் அவளிடம் எல்லா விவரங்களையும் கூறி விட்டு பின் மருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டு கவிதாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
(தொடரும்...)

Friday, January 5, 2007

கோபமாய் வருகிறது

நீ எவ்வளவு

விலை கொடுத்து

வாங்கியிருந்தாலும்

எனக்கு கவலை இல்லை.............

நீ கஷ்டப்பட்டு

சம்பாதித்த பணத்தில்

ஆசையாய் வாங்கினாய்

என்பதும் எனக்கு தெரியும்............

என்றாலும் பார்க்கும்

போதெல்லாம் எனக்கு

கோபம் கோபமாய்

வருகிறது.................

எனக்கே எனக்கு

மட்டும் சொந்தமான

உனது கைகளுக்குள்ளேயே

எப்பொழுதும் குடியிருக்கிறதே

இந்த செல்போன்...............