Wednesday, February 27, 2008

நாதம் இல்லாத வீணை


அடடா! மணி ஐந்தரை ஆயிற்றே. ஐந்து மணிக்கே கிளம்ப வேண்டும் என்றல்லவா நினைத்திருந்தேன். ச்சே! மீட்டிங் மீட்டிங்னு வச்சு இப்படி சதி பண்ணிட்டாங்களே. என் செல்லக் குட்டி இந்நேரம் என்னைக் காணோம்னு ஏமாந்து போயிருப்பாளே!

என் செல்லக்குட்டியப் பாத்திருக்கீங்களா? நேத்து சாயந்திரம் ஒரு ஆறு மணிப் போல போத்திஸ் வந்திருந்தீங்கனா கண்டிப்பாப் பாத்திருப்பீங்க. நேத்து அவளைக் கூட்டிட்டு வந்திருந்தேன். எங்க கூட்டிட்டுப் போனாலும் எல்லாரும் அவளையேதான் வச்சக் கண்ணு வாங்காமப் பாக்கறாங்க. ஏனா அவ அவ்வளவு அழகு. என் தேவதை. அவ கையத் தொடறப்போ எல்லாம் என் பிறவிப் பயனே அடைஞ்சுட்டேனோனு தோணும். எதுக்காவது அவ கண்ணுல இருந்து தண்ணி வந்தா எனக்கு உயிரே போற மாதிரி இருக்கும்.

என்னைப் பாத்து பாத்து வளர்த்த என் அம்மா கேன்சர்ல இருந்தப்போ எனக்கு என் உயிரே போயிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு. எல்லாம் முடிஞ்சுப் போயி அம்மா இல்லைனு நான் உலகமே இருண்டுப் போற மாதிரி இருந்தப்போதான் என் கவி எனக்கு கிடைச்சா. அவ எனக்கு கிடைக்கறதுக்காக ஏழு வருஷம் தவமா தவம் இருந்தேன். நான் தவம் இருந்துப் பெற்ற வரம் அவ. என்னை விட்டுப் போன என் அம்மாவ மறுபடியும் என் கவி உருவத்துலதான் பாத்தேன். மொத தடவையா அவளைப் பாத்தப்போ இவளுக்காகதான் பிறந்தேனோனுதான் தோணுச்சு. என் வாழ்க்கையே முழுமையடைஞ்சுதோன்னு.

அவ பேசப் பேச நான் கேட்டுட்டே இருக்கணும். நான் கவனிக்காம விட்டா அவளுக்கு கோபம் வந்துடும். என்னை உக்கார வச்சு கதை சொல்லுவா. சாப்பாடு ஊட்டுவா. கழுத்தக் கட்டிக்கிட்டு கொஞ்சுவா. என் நெத்தில முட்டி முட்டி அவ தேங்காமுட்டு விளையாடற சந்தோஷத்த விட இந்த உலகத்துல வேற சந்தோஷம் இருக்கறதா எனக்குத் தெரியலை.

இப்படி என் உலகமா இருக்கற என் செல்லக்குட்டிய என் காதுபடவே நிறைய பேரு குறை சொல்லிட்டாங்க. நான் உருகி உருகி காதலிச்சுக் கைப்பிடிச்ச என் ஆசை மனைவி ப்ரபா எனக்கு கொடுத்த காதல் பரிசுதான் என் கவி. கடவுள் உனக்கு எப்போதுமே நீ விரும்பற விஷயங்கள்ல ஒண்ணு மட்டும்தான் உனக்கு நிலைக்கும்னு நினைச்சாரோ என்னவோ. அவ மூணு மாசக் குழந்தையா இருந்தப்போ என் ப்ரபா ஒரு விபத்துல என் கண்ணு முன்னாடியே என்னை விட்டுட்டுப் போயிட்டா. இது நான் செஞ்ச பாவம்னு சொல்லியிருந்தாக் கூட பரவாயில்லைங்க. என் கவி பிறந்த நேரம்னு என் காதுபடவே பேசறாங்க. அதைதான் என்னால தாங்கிக்க முடியலை.

என் ப்ரபா என்னை விட்டு போனதும் நானும் அவளோடயே போயிடணும்னு நினைச்சேன். கவி அழுகுரல் கேக்கறப்போ எல்லாம் அட மடையா! உன் கைல எவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்திட்டுப் போயிருக்கேன். ஏன் இப்படியெல்லாம் நினைக்கறனு ப்ரபா மண்டைல ஓங்கி அடிச்சு சொன்ன மாதிரி இருந்துச்சு. ப்ரபாவுக்கு பொண்ண பரதநாட்டிய டான்ஸர் ஆக்கணும். செஸ்ல சாம்பியனாக்கணும். கராத்தே சொல்லித் தரணும். இப்படி பல ஆசைகள். அதையெல்லாம் நிறைவேத்தி என் ப்ரபா கனவுகள நிஜமாக்கறது ஒண்ணுதான் என்னோட வாழ்க்கை லட்சியம்.

நான் வேணா நாதம் இல்லாத வீணையா இருக்கலாம். ஆனா என்னால நல்லதோர் வீணை செய்ய முடியும்ன்ற நம்பிக்கைல இருக்கேன். கண்டிப்பா செய்ய முடியும் இல்லைங்களா? சரிங்க. வீட்டுக்கு வந்துட்டேன். சாரி. கவிக்கு ஸ்கூல் பஸ்ல இருந்து இறங்கும்போதே நான் வாசல்ல நிக்கணும். லேட்டா வந்ததுக்காக கோவிச்சிட்டு இருப்பா இந்நேரம். நான் போய் சமாதானப்படுத்தறேன். வரேங்க. பை.

பி.கு: இந்த தலைப்பு நாமக்கல் சிபி அண்ணா குடுத்து எழுத சொன்னார். சோ இந்த கதை அவருக்காக :)))

Thursday, February 21, 2008

மரகதம் (கருங்குயில் குன்றத்துக் கொலை)

என்னடா இந்த பொண்ணு கொலை-ன்னு எல்லாம் போட்டிருக்கு. எதாவது த்ரில்லர் ஸ்டோரி எழுத ஆரம்பிச்சிடுச்சோனு நெனக்காதீங்க. நாமல்லாம் வந்தோமா மொக்கை போட்டோமான்னு இருக்கணும். அதை விட்டுட்டு தேவையில்லாத வேலையெல்லாம் பண்ணக் கூடாதுன்றதுல நான் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கேன். சோ அந்த மாதிரியெல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டேன்.

அப்போ என்னதான் இதுனு தலைல இருக்கற நாலு முடியையும் நீங்க பிச்சிக்கறதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன். இது ஒரு படம். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படங்கள்ல இதுக்கு ரொம்ப முக்கியமான இடம் இருக்கு. நான் குட்டிப் பொண்ணா இருந்தப்போ சன் டிவி-ல இது எம்.ஜி.ஆர் வாரம், நகைச்சுவை வாரம்னு, சாம்பார் வாரம், சட்னி வாரம்னு ஒரு வாரத்துக்கு ஒரு டாபிக் எடுத்து அது சம்பந்தமான படங்களை போடுவாங்க. அப்படி போட்ட சிவாஜி வாரத்துலதான் இந்தப் படத்தை மொதல்லப் பாத்தேன். மொதல்லப் பாத்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. தேடிப் பிடிச்சு CD வாங்கி வச்சிட்டேன். வீட்டுக்கு போறப்போ எல்லாம் அடிக்கடி இந்த படம் பாப்பேன்.

இந்த படம் பத்தி தெரிஞ்சவங்க ரொம்ப கொஞ்சம் பேருதான் இருப்பீங்கனு நினைக்கறேன். ஏனா இது ஒரு பக்கா கருப்பு வெள்ளை படம். ஆனா அந்த படத்துல வர ஒரு பாட்டைத் தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது. அதாங்க... நம்ம சந்திரபாபு சார் நடிச்ச "குங்குமப் பூவே கொஞ்சு புறாவே" பாட்டு. அதை தவிர வேற பாட்டு எல்லாம் வேற எங்கேயும் நானும் கேட்டதில்ல.

கதை ஆரம்பிக்கறதே இலங்கைல. சிவாஜியும் அவரோட ஃப்ரெண்ட்ஸும் குதிரைல போறப்போ கொள்ளைக்காரங்க வழிமறிச்சுக் கடத்திட்டுப் போறாங்க. ஏனா அவர் தமிழ்நாட்டுல ஒரு சிற்றரசோட ராஜா வீட்டுப் பிள்ளை. அந்த கொள்ளைக்காரனோட இடத்துக்கே பத்மினி அவரக் காப்பாத்த வராங்க. ஏற்கனவே பத்மினி செஞ்ச ஒரு உதவிக்காக என்ன கேட்டாலும் தரேனு சத்தியம் பண்ணிக் கொடுத்திருந்த கொள்ளைக்காரனும் அவங்களை விட்டுடறான். அப்புறம் உடம்பு சரியில்லாமப் போகிற சிவாஜிய அப்பாவோட மட்டும் வனாந்திரப் பகுதில வாழ்ந்துட்டிருக்கற பத்மினி வீட்டுல வச்சு பாத்துக்கும்போது அவங்க ரெண்டு பேருக்கும் வேறென்னங்க அந்தப் பாழாப் போன கருமம்தான் வந்து தொலைக்குது.

சிவாஜி நல்லாகி ஊருக்கு புறப்படும்போது அவங்க அப்பாட்ட பொண்ணு கேக்கறப்போ அவர் மறுத்துடறார். அதனால பத்மினி அழ அப்போதான் வருது ஃப்ளாஷ்பேக். கருங்குயில் சிற்றரசோட ராஜா கால் ஊனம்ன்ற காரணத்தால தான் கல்யாணம் பண்ணிக்காம தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்கறார். தம்பியோட மனைவி வீட்டுக்கும் இவங்களுக்கும் பகை வந்துடுது. அதனால தம்பிய விவாகரத்துப் பண்ண சொல்றார். அவர் மறுக்கவும் வீட்டை விட்டு வெளியேப் போக இவர் சொல்ல அவர் முடியாது எனக்கு சொத்துல பங்கு இருக்குனு சொல்ல ஒரே பிரச்சினை. உன்னைக் கொன்னுடுவேனு அண்ணனைத் தம்பி மிரட்டிட்டுப் போயிடறார். அடுத்த நாள் பார்த்தா அண்ணன் இறந்துக் கிடக்கறார். சாட்சிகள் எல்லாம் இவருக்கு பாதகமா போக ஜெயில்ல போட்டுடறாங்க. அவர் தப்பி ஓடி வந்து அவரோட மூன்று வயது மகளைத் தூக்கிட்டு இலங்கை வந்துடறார். அவர்தான் இங்க அப்பா. அந்த மூணு வயசு பாப்பாதான் இப்போ 19 வயசு பத்ம்னி. அவரோட மனைவியோட தம்பிதான் நம்ம தலைவர் சிவாஜி.

இந்த கதையக் கேட்டுட்டு அவருக்கு ஆறுதல் சொல்லிட்டு சிவாஜியயும் மறக்க முடியாம இருக்கறப்போதான் அந்தக் கொள்ளைக்காரன் பிரச்சினை பண்றான். இவங்க படகுல ஏறி தப்பி ஓடும்போது நடக்கிற சண்டைல அப்பாவும் பொண்ணும் பிரிஞ்சிடறாங்க. கடற்கரைல மயங்கி கிடக்கிற பத்மினிய அவங்க அம்மாவே காப்பாத்தி செத்துப் போயிட்டதா அவங்க நினைச்சுட்டு இருக்கற அவங்களோட பொண்ணு போலவே இருக்கறதால பாசமாப் பாத்துக்கறாங்க. கடைசி வரைக்கும் தான் யார்னு சொல்லாம பத்மினியும், பாதில அவங்களை இன்னார்னு தெரிஞ்சிக்கற சிவாஜியும் உண்மையான கொலைகாரங்களைக் கண்டுபிடிக்கறதுதான் மிச்சக் கதை.

ரொம்ப அருமையான படம். கிடைச்சா பாருங்க. பாட்டு எல்லாம் நல்லா இருக்கும். பத்மினி அவங்க அம்மா எல்லாரும் கருங்குயில் குன்றம் போயிருக்கறப்போ வரவேற்புக்காக ரெண்டு பொண்ணு ஆடுவாங்க. ரொம்ப நல்லா இருக்கும். இந்தப் படத்துல என்ன ஒரு விசித்திரம்னா பதினாறு வருடம் கழிச்சு இலங்கைல இருந்து வர அப்பா பொண்ணுகிட்டதான் உருவ மாற்றம் தெரியும். மத்தவங்க எல்லாரும் பதினாறு வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாங்களோ அப்படியேதான் இருக்காங்க. ஒருவேளை அது நம்ம தமிழ் மண்ணோட மகிமையோ என்னவோ ;)))

Wednesday, February 20, 2008

கோடி புண்ணியம் செய்த நான்...


உன்னுடனான நெருக்கம்
நீ பிறந்தது முதல்...
சிறு வயதுகளில் உன்னுடன்
சண்டையிட்டிருக்கலாம்
ஆனால் இப்பொழுது...
என் நண்பர்கள் பலர்
உன்னைக் கண்டுப்
பொறாமைப்படும் வேளைகளில்
பெருமிதமாய் உணர்வேன்
என் சந்தோஷ நொடிகளை
பகிர்ந்துக் கொள்ளும்
நண்பனாய் நீ
என் துயர வேளைகள்
தேடும் தாய்மடி நீ
பிள்ளையாய் பாவித்து
என்னைத் தாங்கும்
தந்தை உள்ளம் நீ
சகோதரனாய் பழகும்
நண்பன் கிடைப்பது எளிது
சகோதரனே நண்பனாயிருந்தால்...
ஆயிரம் அண்ணன்களோடு
பிறந்த ஆனந்தம் அடைகிறேன்
தம்பி உன் ஒருவனுக்கு
தமக்கையாய் பிறக்க
கோடி புண்ணியம் செய்த நான்...

Monday, February 18, 2008

கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்)

என் தமிழ் ஆசிரியர் நீங்க நல்ல கதைகள் எழுதணும். அதிலும் சமுதாயத்துல பலப் பிரச்சினைகள் இருக்கு. அதைப் பத்தியெல்லாம் எழுதணும்னு எனக்கு நிறைய அறிவுரை சொன்னார். நான் எழுதறது வச்சுப் பலப் பிரச்சினைகள் வராம இருந்தா சரினு உள்ளுக்குள்ள நினைச்சுட்டே சிரிச்சு வச்சேன். அப்போதான் அவர் சொன்னார். கல்யாணமாகி ஒரு நாலைஞ்சு வர்ஷம் ஆகி இருக்கறப் பொண்ணுங்கள்ட்ட கேட்டா நிறையப் பிரச்சினைகள் சொல்வாங்கனு சொன்னார். அது என்னங்க சார் நாலைஞ்சு வருஷக் கணக்குனு நான் புரியாமக் கேட்டேன். அதாவது கல்யாணமாகி ரெண்டு மூணு வருஷம் வரைக்கும் அவங்க ரொம்ப அன்னியோன்யமா இருக்கறதால அவ்வளவா பிரச்சினை வராது. வந்தாலும் ரொம்ப பெருசா தெரியாது. ஒரு ஆறேழு வருஷம் ஆனவங்களுக்கு பிரச்சினைகள் பழகிப் போயிடும். அதனால பெருசா எடுத்துக்க மாட்டாங்க. ஆனா இந்த இடைப்பட்டக் காலத்துல இருக்கறவங்களுக்கு தான் நிறையப் பிரச்சினை இருக்கும். அதுக்காக ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருப்பாங்கன்னு அவர் சொன்னார். ஆஹா! இப்படியெல்லாம் மேட்டர் இருக்கா-னு அப்போ இருந்து இந்த ஆரய்ச்சிய ஆரம்பிச்சேன். பல கதைகள்ல படிச்சது, எனக்கு பலர் சொன்ன அறிவுரைகள், நானா ஆராய்ந்து அறிந்தது, என் ஃப்ரெண்ட்ஸ் வச்சு நானா ஒரு முடிவுக்கு வந்தது இப்படி பல விஷயங்கள வச்சு இந்த ஆராய்ச்சிக் கட்டுரைய ரெடிப் பண்ணியிருக்கேன். படிச்சிட்டு எனக்கு முனைவர் பட்டம் கிடைக்குமானு சொல்லிட்டுப் போங்க ;)))

இந்த கட்டுரை முழுக்க முழுக்க திருமணமாகி ஓராண்டுக்குள் இருப்பவர்களுக்காகவும், இனித் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறவர்களுக்காகவும் முக்கியமாய் பெண்களுக்காக மட்டும். ஏனென்றால் இந்தக் கட்டுரையின் நோக்கம் முழுக்க முழுக்க கணவரின் அன்பைப் பெறுவது எப்படி என்பது (ஆஹா! தமிழ்ல புகுந்து விளையாடறேனா ;))))

--------------------------------------ooOoo--------------------------------------

மறுத்துப் பேசாதீர்கள் - உங்க ஆத்துக்காரர் எதாவது இப்படி பண்ணலாம்னு சொல்லும்போது அது உங்களுக்கு வேணாம்னு தோணுச்சுனா உடனே வேணாம்னு டக்குனு சொல்லாதீங்க. ஏங்க! இதுல இப்படி பிரச்சினை இருக்கே பரவால்லயா-னு மெல்ல கேளுங்க. அட ஆமாம்னு அவர் யோசிச்சா அதுக்கு இப்படி செய்யலாமேனு அப்போ உங்க கருத்த முன் வையுங்க. ஆனா அட ஆமாம்னு அவர் யோசிக்கற அளவுக்கு ஸ்ட்ராங்கான பிரச்சினைய சிரிச்சுட்டே சாஃப்டா சொல்லுங்க. அப்புறம் போகப் போக உங்களைக் கேக்காம எதும் செய்யாத அளவுக்கு வந்துடுவாங்க.

புகுந்த வீட்டு உறவுகளை உங்களுடையதாய் பாவியுங்கள் - அவரோட உறவினரை உங்க உறவினரை எப்படி ட்ரீட் பண்றீங்களோ அதே மாதிரி ட்ரீட் பண்ணுங்க. அப்போதான் அவரும் உங்க உறவினர்கிட்ட ரொம்ப நல்லாப் பழகுவார். அதும் அவர் தங்கச்சி, அத்தைப் பொண்ணு, மாமாப் பொண்ணு இப்படி உங்களை விட சின்னப் பொண்ணுங்ககிட்ட ஈஸியா பழக ஆரம்பிக்கலாம். அவங்கள்ட்ட நீங்க க்ளோஸ்ஸா இருந்தாலே நீங்க எல்லார்ட்டயும் அப்டி இருக்கற ஒரு ஃபீல் வந்துடும்.

பிறந்த வீட்டுப் புராணம் பாடாதீர்கள் - எப்போ பார்த்தாலும் எங்க வீட்டுல அப்டி இருக்கும் இப்டி இருக்கும்னு உங்க பிறந்த வீட்டுப் புராணமே பாடாதீங்க. ஒரு வேளை நம்ம நல்லா வச்சுக்கலைனு ஃபீல் பண்றாளோனு நினைக்க ஆரம்பிச்சிடுவாங்க. இன்னும் போகப் போக அதுவே இன்னும் இவளுக்கு என்னதான் செய்யணும்னு ஒரு எரிச்சலா மாறிடும்.

பிறந்த வீட்டை எண்ணி வருந்தாதீர்கள் - சும்மா எங்கம்மா வீட்டுக்குப் போகணும்னு நச்சுப் பண்ணிட்டே இருக்காதீங்க. அவர் சந்தோஷமா இருக்கற சமயமாப் பார்த்து அப்படியே எங்கயாவது வெளிலப் போயிட்டு வரலாமேங்கன்னு ஆரம்பிச்சு ஏங்க நாளைக்கு சென்னைக்குப்(உங்க வீடு இருக்கற ஏரியாப் பேரு) போயிட்டு வரலாமானு மெல்ல பிட்டுப் போடுங்க.

மாமியாரைத் தாய் போல நினையுங்கள் - நான் பார்த்தவரைக்கும் கதைகள்லயும் சரி. படங்கள்லயும் சரி. நண்பர்கள்லயும் சரி. என் தம்பியும் சரி. உலகத்துல அவங்க நேசிக்கிற முதல் ஆள் அவங்க அம்மாவாதான் இருப்பாங்க. இதுல விதிவிலக்கு இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. அதனால அவங்களை ஐஸ் வைக்கனு மட்டும் சொல்லலை. மாமியார் உங்களோட அட்ஜஸ்ட் பண்ணிப் போகாட்டியும் நீங்க அவங்களோட அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க. உங்க அம்மா எதாவது சொன்னா அட்ஜஸ்ட் பண்ணிக்கறதில்லையா? இவங்களும் நமக்கு அம்மா மாதிரி தானனு அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க. நான் தான் அவருக்கு இதை செய்வேன் அதை செய்வேன்னு அவங்களோட மல்லுக்கு நிக்காதீங்க. அவங்க அன்பை வாங்கிட்டிங்கனா ஆட்டொமேட்டிக்கா அவங்க உங்களுக்கு எல்லாமே விட்டுக் கொடுப்பாங்க.

மாமியார் உதவியை நாடுங்கள் - கண்டிப்பா எந்த ஒரு பையனுக்கும் அவங்க அம்மா சமையல் தான் தேவாமிர்தமா இருக்கும். உங்க சமையல் சரியில்லாமப் போச்சுனா அத்தை செய்யற மாதிரியே செய்யணும்னு ட்ரை பண்ணினேன். ஆனா அவங்கள மாதிரி வரலை. அடுத்த முறை அவங்ககிட்டதான் கேட்டு செய்யணும்னு எடுத்து விடுங்க. அவருக்கு சந்தோஷத்துல நீங்க செஞ்ச சாப்பாடும் அமிர்தமா மாறிடும். எதும் சொல்லாம சாப்பிடுவார்.

விட்டுக் கொடுத்துப் போங்கள் - எதாவது நீங்க சொல்லி அவர் ஏத்துக்க மறுத்தா விட்டுக் கொடுங்க. இப்படியே ஒரு நாலு தடவை ஆச்சுனா ஆட்டொமேட்டிக்கா அஞ்சாவது தடவை அவரே விட்டுக் கொடுத்துடுவார். பிடிவாதம் பிடிக்கறதால யாருக்கு என்ன லாபம் சொல்லுங்க. நமக்குதான் டென்ஷன். சண்டை. அதனால ஒரு சின்ன விரிசல். இதெல்லாம் தேவையா? சோ சந்தோஷமா விட்டுக் கொடுங்க.

உங்களை ஃப்ரெஷ்ஷாய் வைத்துக் கொள்ளுங்கள் - எப்பவும் நீங்க ஃப்ரெஷ்ஷா எனெர்ஜிடிக்கா இருக்கற மாதிரிப் பாத்துக்கோங்க. அழுது வடிஞ்சுட்டு, தூங்கிட்டு வழிஞ்சிட்டு இருந்தா ஏற்கனவே எதாவது டென்ஷன்ல வந்திருந்தார்னா உங்களைப் பாத்தா இன்னும்தான் எரிச்சலா வரும். சோ எப்பவும் ஃப்ரிட்ஜுக்குள்ள வச்ச ஆப்பிளாட்டம்ம் ஃப்ரெஷ்ஷா இருங்க.

பிடித்ததை செய்யுங்கள் - அவருக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸ், ஜுவெல்ஸ், மேக்-அப்னு பண்ணிக்கங்க. அவருக்கு லைட் கலர் பிடிக்கும்னா எனக்கு டார்க் கலர்தான் பிடிக்கும்னு மல்லுக்கு நிக்காதீங்க. அவர் சொல்ற ட்ரெஸ்ஸை செலெக்ட் பண்ணுங்க. அப்புறம் பிற்காலத்துல ஒரு மணி நேரம் என்ன ஒரு நாள் முழுசும் கூட உங்களோட துணிக்கடைல ஸ்பெண்ட் பண்ண வந்துடுவாரு.

யோசித்துப் பேசுங்கள் - மொதல்ல கொஞ்ச நாளுக்கு எதைப் பேசறதுனாலும் கொஞ்சம் இல்ல நல்லாவே யோசிச்சுப் பேசுங்க. ஏனா எதுக்கு அவர் எப்படி ரியாக்ட் பண்ணுவார்னு உங்களுக்கு முழுசாத் தெரியாது. நாளாக நாளாக அவரோடப் பழக்க வழக்கங்கள் உங்களுக்குப் பழகிடுச்சுனா அப்புறம் எல்லாம் இயல்பாயிடும்.

புரிந்துக் கொள்ளுங்கள் - அவரோட நடவடிக்கைகள், முக பாவனைகள் வச்சு ஓரளவு புரிஞ்சுக்க முயற்சிப் பண்ணுங்க. இப்போ அவர் தலைவலியோட வீட்டுக்கு வரார்னா கேக்கறதுக்கு முன்னாடி காபிப் போட்டுக் குடுங்க. கோபமா இருக்கார்னுத் தெரிஞ்சா எதும் பேச ஆரம்பிக்காம அமைதியா இருங்க. நம்மளப் புரிஞ்சிட்டு நடந்துக்கறானு உங்க மேல பாசம் பிச்சிக்கிட்டு வரும்.

--------------------------------------ooOoo--------------------------------------

பி.கு: இதையெல்லாம் ஒரு வருஷத்துக்குள்ள சக்சஸ்ஃபுல்லா செஞ்சு அவர் அன்பை பெற்று விட்டீர்களானால் காலத்துக்கும் நாய்க்குட்டி மாதிரி உங்களையே சுத்தி சுத்தி வருவார் ;)))


என்னங்க அதுக்குள்ள என்னை டாக்டர்.இம்சை அரசி-ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டிங்க??? ஹி... ஹி... இன்னும் நிறைய இருக்கு. அப்பப்போ ஆராய்ச்சிக் கட்டுரைய சப்மிட் பண்றேன் ;)))

Wednesday, February 13, 2008

காதலர் தின வாழ்த்துக்கள்!!!

அப்பாடா! எது வருதோ இல்லையோ வருஷம் ஆனா இது வந்துடுது. சரி எல்லாத்துக்கும் வாழ்த்து போடறோம் இதுக்கும் போட்டுடலாமேனு என் குருவி மூளையப் போட்டு கசக்கிப் பிழிஞ்சு ஏதோ எனக்கு தோணினத எழுதி இருக்கேன். அப்புறம் எல்லாருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!!!

இது எங்க எதிர் கட்சி மக்களுக்கு...




இது எங்க கட்சி மக்களுக்கு...


தேடித் தேடி
வாழ்த்து அட்டை
வாங்க வேண்டும்
தெரிகின்ற அனைத்து
வெப்சைட்டிலிருந்தும்
வாழ்த்து அனுப்ப வேண்டும்
பன்னிரெண்டு மணிக்கு
ஃபோனில் பேச வேண்டும்
எனக்குப் பிடித்ததை
வாங்கித் தரும் உனக்கு
என்ன வாங்க வேண்டுமென்று
குழம்பித் தவிக்க வேண்டும்
என்ன உடை உடுப்பதென்று
உன்னிடம் கேட்க வேண்டும்
எப்போதுப் பார்ப்போம்
என்று ஆவலுடன்
காத்திருக்க வேண்டும்
சண்டை போட்டபடி
ஒன்றாய் உணவருந்த வேண்டும்
அலைகளில் கால் நனைய
உன் கைகோர்த்து
நடக்க வேண்டும்
இப்படி கனவுகள் பல
சுமந்து நானிருக்க
நீ எங்கேடா செல்லம் இருக்க?

Tuesday, February 12, 2008

எப்படியப்பா கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்???

நெஞ்சில் போட்டு
தட்டிக் கொடுத்து
தூங்க வைத்த
பொழுதுகளில்
உங்கள் பெண்ணாய்தானே
நானிருந்தேன்

சைக்கிள் ஓட்டப்
பழகிய நாட்களில்
தவறி விழுந்த போதெல்லாம்
ஓடி வந்து தூக்கிய
பொழுதுகளில்
உங்கள் பெண்ணாய்தானே
நானிருந்தேன்

பள்ளி ஆண்டுவிழாக்களில்
பரிசு வாங்கியபோது
கலங்கிய கண்களுடன்
புன்னகைத்தபடி
கைத்தட்டி மகிழ்ந்த
பொழுதுகளில்
உங்கள் பெண்ணாய்தானே
நானிருந்தேன்

அரசுப் பொதுத் தேர்வுகளில்
எவ்வளவு மதிப்பெண்
வாங்குவேனோ என்று
அதிகக் கவலையுடன்
காத்திருந்த
பொழுதுகளில்
உங்கள் பெண்ணாய்தானே
நானிருந்தேன்

கல்லூரி முடித்து
வேலையில் சேர்ந்தபோது
சொல்ல முடியாத
சந்தோஷத்தில்
பேசத் திணறிய
பொழுதுகளில்
உங்கள் பெண்ணாய்தானே
நானிருந்தேன்

இன்று ஒரே நாளில்
ஒற்றைக் கயிறால்
நம் பந்தம்
அறுந்து விடுமோ?
இனி அவர்கள் வீட்டுப்பெண்
என்று சொல்கிறார்களே?
எப்படியப்பா கேட்டுக்
கொண்டிருக்கிறீர்கள்???

Thursday, February 7, 2008

பிரிவில்!!


உன் பிரிவில்
மனம் கசிந்து
இல்லாத உன்னை
இருப்பதாய் எண்ணி
உனக்காய் விட்டு
அமரும் இடத்தில்
பட்டுத் தெறிக்கும்
ஒரு துளிக் கண்ணீர்
உணர்த்துகிறது
என்னுள் உனது இருப்பை!!

Wednesday, February 6, 2008

யாரிந்த தேவதை - II

கனவுகள் கூட சோகமே வடிவாய் போக மெத்தையில் குப்புறப் படுத்து தலையணையில் முகத்திற்கு கைகளை முட்டுக் கொடுத்து நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ச்சே! நேற்று இப்படி ஆகி விட்டதே. காதல் எல்லாம் சுத்த பேத்தல் என்று சொல்லிக் கொண்டிருந்ததால் இந்த பாழாய் போன காதல் என்னை பழி வாங்கி விட்டதோ??? சரி. போனது போகட்டும். நல்ல வேளை நன்கு பழகிப் பின் கடைசியில் சொல்லாமல் போனாளே... அவளுக்குத்தான் தெரியுமா என்ன இப்படி உள்ளுக்குள் நான் உடைந்துப் போய் உருகியது. இப்படியெல்லாம் என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்ளதான் விரும்புகிறேன். இந்தப் பாழாய் போன மனம் என்னவோ ஒரு நாய்க் குட்டியைப் போல அவள் பின்னாலேயே ஓடுகிறதே.

"சரவணா! என்னடா இன்னும் தூங்கிட்டு இருக்கற? நேரமாச்சு கிளம்பு" என்றபடியே வருவது வேறு யார் என் ஆருயிர் நண்பன் மகேஷ்தான். இங்கே நாங்கள் ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறோம். அதில் ஒருவனான ரகுவின் தங்கைக்கு நாளை காலையில் திருமணம். அதற்காகத் தான் அடித்துப் பிடித்து ஓடி வந்து மனதை தொலைத்து விட்டு தொலைத்த மனதில் காயத்தையும் வாங்கிக் கொண்டு நிற்கிறேன்.

"இருடா! குளிச்சிட்டு வரேன்" என்று சுரத்தில்லாமல் சொன்னேன்.

"என்னடா நீ! எவ்வளவு வேலை இருக்கு. எல்லாரும் ஆளுக்கொரு பக்கமா அலைஞ்சிட்டு இருக்கோம். நீ பாட்டுக்கு மல்லாக்கப் படுத்துக்கிட்டு கனவு கண்டுக்கிட்டு இருக்க" என்று கடிந்துக் கொண்டான். வேறு சமயமாக இருந்திருந்தால் உள்ளுக்குள் உள்ள பாரத்தையெல்லாம் அவனிடம் இறக்கி வைத்திருப்பேன். என்ன செய்வது??? :(((

"இருடா. ஒரு பத்தே நிமிஷம். கிளம்பிடறேன்"

"எனக்கு மண்டபத்துல வேலை இருக்குடா. ரூம் எல்லாம் அரேஞ்ச் பண்ணினது வேறப் பாக்க போகணும். ரகு உடனே வர சொல்லி இருக்கான். நான் அங்க போறேன். உனக்குதான் ஒரு வேலை. சத்திரம் பஸ் ஸ்டாண்ட் போய் அருண பிக் அப் பண்ணிட்டு வரணும். அவன் வந்துட்டே இருக்கான். டோல்கேட் வந்ததும் கால் பண்ணுவான் உனக்கு" என்று கூறிக் கொண்டே கிளம்பி விட்டான்.

மெல்லக் குளித்துக் கிளம்பி பேருக்கு சாப்பிட்டு விட்டு அருணுடைய அழைப்பிற்காகக் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அவன் அழைக்க எனது வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ஹ்ம்ம்ம். சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தாயிற்று. இந்த அருண் பயலை இன்னும் காணோம். எரிச்சலாய் வந்தது. ஏன் இப்படி தேவையில்லாமல் எரிச்சல்படுகிறேன்? எல்லாக் கேள்விகளுக்கும் அவளே விடையாய் வந்து நின்றாள். சும்மா நின்றால் கூடப் பரவாயில்லை. என்னைப் பார்த்து கேலியாய் கைகொட்டி சிரிக்கிறாள். ச்சே! என்ன இது. மணமானப் பெண். அவளைப் பற்றி நினைக்கக் கூடாது. இப்படியெல்லாம் கட்டுபபடுத்த முயல்கிறேன். ஆனால் முடியவில்லை. சரி அப்படியே போய் நிழலில் நிற்கலாம்.

அட! யாரது அது? அவளா? ஆமாம் அவளேதான். அதுவும் மகேஷின் தங்கை ப்ரியாவுடன். அவளது தோழியா இவள். இருக்கும் இருக்கும். ரகுவின் தங்கையும் மகேஷின் தங்கையும் ஒன்றாய்தானே கல்லூரியில் படித்தார்கள். அடக் கடவுளே! அப்போ அவள் வந்திருப்பது ரகுவின் தங்கையின் திருமணத்திற்கா? அவளிடம் ஏதோ பேசி ஒரு பையை கையில் கொடுத்து விட்டுப் போகிறாள். அவள் வருவதற்குள் சீக்கிரம் போய் ப்ரியாவிடம் விசாரித்து விடலாம் என்றெண்ணி வேகமாய் அவளிடம் சென்றேன்.

"ப்ரியா" என்றதும் திரும்பியவள்

"ஹை! சரவணண்ணா... இங்க என்ன பண்றீங்க?" என்று கேட்டுச் சிரித்தாள்.

"அருண பிக் அப் பண்ண வந்தேன். சரி அதை விடு. இப்போ ஒரு பொண்ணு உன்கிட்ட பேசிட்டு போனாளே. பச்சைக் கலர் சுடிதார். யார் அது?"

"ஓ மஞ்சுவா? என் காலேஜ் ஃப்ரெண்ட் அண்ணா. கல்யாணத்துக்குதான் வந்திருக்கா" என்றாள்.

"ஓ! அப்படியா? நேத்து பஸ்லப் பாத்தேன். அதான் கேட்டேன்" என்று சொல்லி விட்டு அதைக் கேட்கலாம வேண்டாமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போதே

"ஓஹோ! பாவம். நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதும் அவ திருப்பி ஈரோடு போய் திருப்பி பெங்களூர் போகணும். திருச்சில இருந்து பெங்களூருக்கு டிக்கட் கிடைக்கலையாம். பேசாம நானாவது உங்கள்ட்ட சொல்லி இருக்கலாம்" என்று அவள் சொன்னபோது எனக்கு குழம்பியது.

"என்கிட்ட கோயம்புத்தூர் போறேனு சொன்னா" என்றேன்.

"கோயம்புத்தூரா? அவ வீடு ஈரோடுல இருக்கு" என்றாள்.

"இல்ல அவங்க மாமியார் வீட்டுக்கு போறேனு சொன்னா"

"மாமியார் வீடா? நீங்க வேற யாரையோ நினைச்சுக்கிட்டு சொல்றீங்கனு நினைக்கறேன். அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகலையே" என்று சாதாரணமாய் சொன்னாள் என்னுள் சந்தோஷ அலையடிக்க வைத்தது தெரியாமல். என்னால் எதுவும் பேச முடியவில்லை. அவள் திரும்பி வருவதைக் கண்டதும்

"சரி நான் போய் அருண் வந்துட்டானானு பாக்கறேன். நான் பாத்தது இவங்க இல்ல. கன்பியூஸ் ஆயிட்டேன். நீ அவங்களை போட்டுக் குழப்பிட்டு இருக்காத" என்று வேகமாய் இடத்தைக் காலி செய்தேன்.

என்னையா ஏமாற்றி இருக்கிறாய்? இன்று இருக்கிறது உனக்கு என்றெண்ணியபடியெ அன்றைய பொழுது ஓடி மாலை வந்தது. ஏனோ! அவளது குறும்புத்தனத்தை வெகுவாய் ரசித்தேன். அவளிடம் எப்படி சொல்லலாம் என்ரு யோசித்துக் கொண்டே ரிசப்ஷனிற்கு வந்து சேர்ந்து விட்டேன். எங்கே இருக்கிறாள்?? அதோ! மணப்பெண்ணின் அருகே உள்ள பட்டாளத்தில் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். வா. இன்று உனக்கு இருக்கிறது.

ஆஹா! இங்கேதான் வருகிறாள். அவளைக் கவனியாதவன் போல அமர்ந்திருந்தேன். அருகில் வந்தவள்

"ஹலோ சரவணன். என்னை ஞாபகம் இருக்கா?" என்றபடியே அருகில் இருந்த சேரில் அமர்ந்தாள்.

"ம்ம்ம்ம். நீங்களும் இந்த கல்யாணத்துக்குதான் வந்திருந்தீங்களா?" என்று தெரியாதவன் போல் நடித்தேன்.

"ஆமா. இவ என் காலேஜ் ஃப்ரெண்ட்"

"ஓஹோ! ரகு, மகேஷ், நான் எல்லாரும் சின்ன வயசுல இருந்து க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். இவங்க ரெண்டு பேரும் என் சொந்த தங்கச்சிங்க மாதிரி"

"தெரியுமே எனக்கு" என்று என்னை ஆச்சர்யப்படுத்தினாள்.

"இன்னைக்கு மதியம் ப்ரியா சொல்லி இருப்பா" என்றேன் ஆச்சர்யத்தைக் காட்டாமல்.

"இல்லையே! எனக்கு காலேஜ் படிக்கும்போதே தெரியும். உங்க ஃபோட்டோஸ் பாத்திருக்கேன்"

"ஓ! அப்போ நேத்து..." என்று நான் ஆச்சரியத்தை வெளிக்காட்ட

"நேத்தே உங்களைத் தெரியும் எனக்கு" என்று சிரித்தாள். எப்படி விளையாடியிருக்கிறாள்??? அந்த சிரிப்பு வேறு என்னுள் லேசானக் கோபத்தை தூண்டி விட

"ஓஹோ! சரி உங்க வீட்டுக்கார் பேரு என்ன?" என்றேன் கிண்டலாய். அந்தக் கேள்வியிலேயே எனக்கு உண்மைத் தெரிந்து விட்டதை அறிந்துக் கொண்டவள்

"ஹஸ்பெண்ட் பேரெல்லாம் சொல்லக் கூடாது" என்றாள் அதே சிரிப்புடன்.

"பரவால்ல சொல்லுங்க"

"ஹ்ம்ம்ம்... மிஸ்டர்.எக்ஸ்-னு வச்சுக்கங்களேன்" என்றாள்.

"அந்த எக்ஸை சரவணன்னு ரீப்ளேஸ் பண்ணிடலாமா?" என்று எதையும் யோசியாமல் டக்கென்று கேட்டேன். ஒரு நொடித் திகைத்தவள் பின் கலகலவென்று சிரித்தாள். என்ன சொல்வாளோ என்ற பதட்டத்தில் அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்தேன். எனதுப் பார்வையை சந்திக்கத் துணிவின்றி தலையைத் தாழ்த்தி யோசித்தாள். ஒரு நிமிடம் கழித்து கைக்குட்டையை இரு கைகளால் போட்டு பிசைந்தபடியே

"அதை விட வேற பெஸ்ட் ரீப்ளேஸ்மெண்ட் இருக்குமா என்ன?" என்றாளேப் பார்க்கலாம். நான் எங்கு இருக்கிறேன் என்றுப் புரியாமல் விழித்தேன். அட என்ன இது? பாரதிராஜா படத்தைப் போல தேவதைகள் எங்களைச் சுற்றி ஆஆஆ என்றுப் பாடிப் பூக்களைத் தூவினால் எவ்வளவு நன்றாய் இருக்கும். அன்றையத் திருமணம் முழுநேரமும் எனக்கு எப்படிப் போனதென்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா உங்களுக்கு???

இப்போ திருச்சியில் இருந்து பெங்களூர் போகும் பேருந்தில் நான். என்னருகில் என் மஞ்சு. என் தோளில் சாய்ந்து கண்களை மூடியிருக்கிறாள். எனது ஐபாடின் ஹியர் ஃபோனின் ஒரு புறம் அவள் காதில். மற்றொன்று என் காதில். எங்களிடையே பேச்சு இல்லை. இளையராஜாதான் எங்களுக்காகப் பாடிக் கொண்டிருந்தார்.

'நேத்து ஒருத்தர ஒருத்தரு பார்த்தோம். பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்...'

பி.கு: சரவணன், மஞ்சு பேரைப் பாத்துட்டு நம்ம குசும்பனோட கதையான்னு கேக்கப்படாது. இது சத்தியமா அவங்கக் கதை இல்ல. ஆனா திஸ் கதை இஸ் டெடிகேட்டட் டு கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போற சரவணன் (அதாங்க நம்ம குசும்பன்) அண்ட் அவர் வுட்பி மஞ்சு :)))

Tuesday, February 5, 2008

பாடலாசிரியராக மீண்டும் ஒரு முயற்சி!!!

"Jab we met" படத்துல வர "ye ishq ha" பாட்டு எனக்கு எவ்வளவுப் பிடிக்கும்னு இந்தப் பதிவுல சொல்லியிருந்தேன். அதைக் கேட்டுக் கேட்டு அந்தப் பாட்டுக்கு தமிழ்ல வரிகள் எழுதணும்னு ஆசை வந்துடுச்சு. இன்னைக்கு நான் பண்ணின முயற்சில இதான் வந்துச்சு. நடுவுல கொஞ்சம் மேட்ச் ஆகாத மாதிரி ஒரு ஃபீலிங். என்ன பண்றது. ச்சும்மா ஷா... ஹா... ன்னு பாடி வச்சா இப்படி எழுதவறங்களுக்கு கஷ்டமா இருக்கும்னு கொஞ்சம் கூட ஃபீல் பண்ணாம எழுதி வச்சிருக்காங்கப் பாருங்க. இனிமேல் இப்படி எழுதக் கூடாதுனு போராட்டம் நடத்தலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க? சரி அதை விடுங்க. நம்ம பாட்டு எப்படி இருக்குனு சொல்லிட்டுப் போங்க. உங்களால முடியும் எழுதுங்க எழுதுங்கன்னு உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளமாக்கிய பெருமை நம்ம வைதேகியத்தான் சேரும். அதனால உங்களோட அர்ச்சனை எதுவா இருந்தாலும் அவங்களைத்தான் போய் சேரும்(அப்பாடா மி தி எஸ்கேப்பு;))))

------------------------------ooOoo------------------------------





ஏன் என்னுள் புது மாற்றம்
மெலிதாய் ஒரு ஏக்கம்
உன்னை பார்த்ததாலா

ஏன் ஒரு வார்த்தை இல்லையே
துளி அசைவும் இல்லையே
உன்னை பார்த்ததாலா

பார்த்தாயா பார்த்தாயா என்னை
தூறல் விழும் பாலை நிலமாய் நான்
பார்த்தாயா பார்த்தாயா

பார்த்தாயா பார்த்தாயா என்னை
பாடித்திரியும் ஒற்றைக் கிளியாய் நான்

இயல்பாய் வந்தாயே
விழியில் விழுந்தாயே
இதமாய் கொன்றாயே நீ
ஓ அன்பே

சிறு பெண் நானே எவ்வளவு சுமைதான் தாங்குவேன் இங்கு
உனக்குப் புரியாதா
ஆகையால் என் இதயத்தை அன்பே இன்று நீ எடுத்துக் கொள்வாயா

பார்த்தாயா பார்த்தாயா அன்பே நீ
காதல் தீயில் பனியாய் உருகும் உயிரை

கேட்டாயா கேட்டாயா அன்பே நீ
என் மனதின் காதல் ராகங்களை

இயல்பாய் வந்தாயே
விழியில் விழுந்தாயே
இதமாய் கொன்றாயே நீ
ஓ அன்பே

ஏனென்று எனக்கும் தெரியாமல் போனதே
உனது நாய்க்குட்டியானேன் என்று
உனக்காவது புரிந்தால் சொல் அன்பே
ஆயுள் முழுதும் அடிமையாய் நான்

கேட்டாயா கேட்டாயா அன்பே நீ
என்னுள் எரிமலையின் வெடிச்சத்தங்களை

பார்த்தாயா பார்த்தாயா அன்பே நீ
பூந்தோட்டம் இன்று உன் காலடியில்

இயல்பாய் வந்தாயே
விழியில் விழுந்தாயே
இதமாய் கொன்றாயே நீ
ஓ அன்பே

------------------------------ooOoo------------------------------

உங்க கருத்த கொஞ்சம் சொல்லிட்டுப் போங்களேன்... பின்னாடி ஒருவேளை நான் ஒரு பெரிய பாடலாசிரியர் ஆனா (நோட் திஸ் பாயிண்ட்ஸ் "ஒருவேளை", "ஆனால்") என்னை உருவாக்கியப் பெருமை உங்களைச் சேருமில்ல. அந்த நல்லெண்ணைல ச்சே... நல்லெண்ணெத்துல சொன்னேன் ;)))

Monday, February 4, 2008

கம்ப்யூட்டர் லேபுக்கு ஏன் ஏசி போடறாங்க?


எனக்கு கம்ப்யூட்டர் எப்போ அறிமுகமாச்சுனு எனக்கேத் தெரியாது. அந்த சரித்திரப் புகழ் வாய்ந்த நாளை குறிச்சு வைக்காம விட்டுட்டேன். பின்னாடி வரலாறுல எழுதும்போது இதைப் பத்தி எழுதலைனா நல்லா இருக்காது இல்ல. அதான். நான் பத்தாவது படிச்சப்போ எங்க மாமா வீட்டுல புதுசா கம்ப்யூட்டர் வாங்கினாங்க. என் மாமாவோட செஸ் விளையாடறது சின்ன வயசுல இருந்து வழக்கம் எனக்கு. கஜினி முஹம்மது கணக்கா பல தடவை முயற்சிப் பண்ணி கடைசில ஒரு நாள் அவரை நான் ஜெயிச்சதுக்காக சிங்கப்பூர் போயிட்டு வந்தப்போ எனக்கு மேக்னட்டிக் செஸ் போர்ட் வாங்கிட்டு வந்துக் கொடுத்தார். அவர் எதாவது புதுசா கத்துக்கிட்டா எனக்குக் கத்துக் கொடுப்பார். அதனால அவர் என்னை வரச் சொல்லி கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாட சொல்லிக் கொடுத்தார். அந்த நாளை சரித்திரத்துல போட்டுக்கலாம்னு முடிவுப் பண்ணி வச்சிருக்கேன்.

அப்போ ரொம்ப ஆர்வத்தோட விளையாடினாலும் எவ்வளவோ கஷ்டப்பட்டு என் கை அந்த நாலு arrow keys தவிர வேற எங்கேயும் படாம பாத்துக்கிட்டேன். ஒரு தடவை என் சுண்டு விரல் தெரியாம Ctrl key மேல பட்டுடுச்சு. கம்ப்யூட்டருக்கு எதாவது ஆயிடுமோனு பயந்தேப் போனேன். அதுக்கப்புறம் வேற எங்கேயும் கைப்படாம விளையாடி ப்ராக்டிஸ் பண்ணிட்டேன்.

நான் பத்தாவது முடிச்சிட்டு லீவுல இருந்தப்போ எங்கப்பாக்கிட்ட போய் அப்பா நான் கம்ப்யூட்டர் க்ளாஸ் போறேன்னு கேட்டதுக்கு எங்கப்பா மொதல்ல டைப் க்ளாஸ் போங்க. அப்போதான் கம்ப்யூட்டர்ல ஸ்பீடா டைப் பண்ண வரும்னு சொன்னார். அப்போ அவரைப் பொறுத்த வரைக்கும் கம்ப்யூட்டர்னா புதுவித டைப்ரைட்டர்னு எனக்கு அப்போ தெரியாமப் போயிடுச்சு. தந்தை சொல்லைத் தட்டாதப் பெண்ணல்லவா நான். அதான் சமத்துப் பிள்ளையா அப்பா சேர்த்து விட்ட டைப் இன்ஸ்டியூட்ல என் தம்பியோட சமத்தாப் போய் டைப் அடிக்க கத்துக்க ஆரம்பிச்சேன்(அந்தக் கதைய இங்க சொல்ல முடியாது. அதுக்கு தனிப் பதிவே போடணும். அம்புட்டு பெரியக் கதை).

அப்புறம் ரிசல்ட் வந்து பதினொண்ணாவது சேர்ந்து என் இம்சை தாங்க முடியாம எங்கப்பா என்னைக் கொண்டுப் போயி ஹாஸ்டல்லத் தள்ளிட்டார். அங்கயும் ஆறு பேரு சேர்ந்து ஒரு வானரப் படையமைச்சோம். பதினொண்ணாவதுல பயாலஜி அதாங்க ஃபர்ஸ்ட் க்ரூப்ல இருந்தேன். எங்கப் படைல மூணுப் பேரு பயாலஜி. மூணு பேரு கம்ப்யூட்டர் சயின்ஸ். எனக்கு அப்போல்லாம் கம்ப்யூட்டர் க்ரூப்ல இருந்தவங்களப் பார்த்தா ஒரு பொறாமையா இருக்கும். நாமளும் அதுலயே சேர்ந்திருக்கலாமோன்னு. அப்போதான் பாதிலயே பன்னிரெண்டாவது சிலபஸ் எடுக்க ஆரம்பிச்சாங்க. மத்ததெல்லாம் ஓகே. ஆன இந்த ஜுவாலஜி. உவ்வே... அந்த அனாடமியெல்லாம் படிக்கறதுக்குள்ள வாந்தியெடுக்காத கொறைதான். இயற்கையிலேயே எனக்கு கொஞ்சம் இளகிய மனசா. அதான்... அடம் பிடிச்சு எனக்கு க்ரூப் மாத்தி தரலைனா படிக்க மாட்டேனு எல்லாம் சபதம் எடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ரூப்புக்கு மாறிட்டேன். எடுத்த சபதம் முடித்தப் பெண்ணல்லவா நான்... ஹி... ஹி... ஹி...


நான் அந்த க்ரூப்புக்கு மாற இருந்த இடைப்பட்டக் காலத்துல நடந்ததுதான் இந்தப் பதிவெழுதக் காரணமான அந்த வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த சம்பவம். நானும் என் வானரக் கூட்டத்து தோழி ஒருத்தியும் கம்ப்யூட்டர் லேப் முன்னாடி உக்காந்து படிக்கறோம்ன்ற பேருல கதையடிச்சுட்டு இருந்தோம். அப்போதான் அவ கேட்டா "கம்ப்யூட்டர் லேபுக்கு மட்டும் ஏன் ஏசி போடறாங்கன்னு தெரியுமா உனக்கு?" அட ஆமா! இத்தனை நாளா இதை நோட் பண்ணினது இல்லையே. கெமிஸ்ட்ரி லேபுல அடுப்பு... ச்சே... விளக்குப் பத்த வைப்போம். அது அணைஞ்சிடும். சோ அங்க ஏசி போட முடியாது. ஆனா பிசிக்ஸ் லேப், பயாலஜி லேபுல போட்டிருக்கலாமே. அங்க எல்லாம் போடாம இங்க மட்டும் ஏன் போட்டாங்க? நான் கேள்வியாய் அவளைப் பார்த்தேன். இதுக் கூடத்தெரியாதா உனக்குன்ற மாதிரி என்னைப் பாத்துக் கேவலமா ஒரு லுக்கு விட்டு அந்தப் பிசாசு சொன்னுச்சு.

"கம்ப்யூட்டர் லேப்ல ஏசி போடலைனா வைரஸ் வந்துடும். அது அட்டாக் பண்ணிட்டா கம்ப்யூட்டரே வேஸ்ட் ஆயிடும்"-னு சொன்னா.

அடக் கடவுளே! இத்தனை நாளா இது தெரியாமாப் போச்சே-னு என்னையே நொந்துக்கிட்டேன். எவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கா என்று ஆச்சர்யமாய் அவளைப் பாத்தப்போதான் தோணுச்சு. அய்யய்யோ எங்க மாமா வீட்டுல ஏசி போடலையேனு எனக்கு ஒரே வருத்தம். அப்புறம் கிட்டத்தட்ட ஒரு வருஷமா கம்ப்யூட்டர் ஒரு மெஷின்தான. அதை எப்படி வைரஸ் அட்டாக் பண்ணும். அது உயிருள்ள விஷயங்களைதான அட்டாக் பண்ணும்ன்ற கேள்வி என் மண்டையக் குடைஞ்சிட்டே இருந்துச்சு.

காலேஜ் சேர்ந்து கொஞ்ச நாளுல கம்ப்யூட்டர் வைரஸ்னா ஒரு சாஃப்ட்வேர் ப்ரோக்ராம்தானு நான் தெரிஞிட்டப்போ அவ மேல வந்த கொலை வெறி இருக்கே.... grrrrrrrrrrrrrrr......... இன்னும் என் கேள்விக்கு விடைக் கிடைக்கலை. அந்த துரோகி வேணும்னே அப்டி சொன்னாளா இல்லை நிஜமாவே அவளும் அப்படி யார்ட்டயோ லூசாயிட்டு வந்து அதுதான் உண்மைனு நினைச்சு சொன்னாளான்னு. ஹ்ம்ம்ம்ம்....

இது மாதிரி உங்களுக்கும் நிறைய அனுபவம் இருக்கும்னு நினைக்கறேன். முடிஞ்சா சொல்லுங்க மக்கள்ஸ். விரைவில் டைப் கத்துக்கிட்ட கதையுடன் மேடம் வருவாங்க :))))