Thursday, November 29, 2007

இன்னைக்கு எனக்கு பிறந்த நாளுங்க!!! :)

என்ன ஆச்சர்யம்! ஒரே வருஷத்துல ரெண்டு தடவையானு பாக்கறீங்களா? எனக்குனா எனக்கு இல்லைங்க. இம்சை அரசிக்கு :)

சென்ற வருடம்... சென்ற வருடம்... சென்ற வருடம்... (எக்கோப்பா... ;))

இந்த நாள்... இந்த நாள்... இந்த நாள்... (மறுபடியும் எக்கோதானுங்க)

நான் இம்சை அரசியாக அவதரித்த நன்னாள் ;) (நன்னாளான்னு ஆச்சரியத்துல நீங்க வாயப் பொளக்கறது எனக்கு தெரியுது :))

ஆபிஸ்ல என்டரி லெவல் ட்ரெயினிங் முடிச்சு ப்ராஜக்ட்குள்ள வலது கால எடுத்து வச்சதும் அடங்கொக்கமக்கா! மறுபடியும் ட்ரெயினிங். அது முடிஞ்சு ப்ராஜக்டுக்குள்ள ஜாயின் பண்றதுக்கு முன்னாடி கொஞ்ச நாள் வெட்டியா இருந்தப்போ ஆபிஸ் personal pages மூலமா நம்ம வெட்டிப்பயல் ப்ளாக் அறிமுகம். அங்கிருந்து அப்பிடியே வ.வா.சங்கம் :) சென்னி மாநகரத்துல என் ஆருயிருங்கள விட்டு பிரிஞ்சு வந்த துக்கத்துல 7 தோசை மட்டுமே சாப்பிட்டுட்டு இருந்த நான் சங்கத்து பதிவுகள படிச்சு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சேன் (சங்கத்து மக்கள்ஸ்... நோட் திஸ் பாயிண்ட்... அதுக்கான வைத்திய செலவு பில்ல உடனடியா அனுப்பி வைக்கறேன்;))))

நாம எப்படி நம்ம கவலை எல்லாம் மறந்து சிரிக்க ஆரம்பிச்சோமோ அதே மாதிரி அட்லீஸ்ட் ஒரு ரெண்டு பேரையாவது... சிரிக்க வைக்க முடியாட்டியும் பரவாயில்ல... ஒரு சின்ன புன்னகையாவது கொண்டு வர வைக்கணும்கிற ஒரு நல்ல எண்ணத்துல தமிழச்சி-ன்னு பேரு வச்சி ப்ளாக்குக்கு ஓபனிங் செரிமனி நானே நடத்திக்கிட்டேன். ஆரம்பத்துல எதும் தெரியாம முழிச்சிட்டு இருந்த எனக்கு எல்லா உதவிகளையும் செஞ்ச வெட்டிக்கு ஸ்பெஷல் நன்றிகள். அப்புறம் வெட்டி வந்து மேடம் தமிழச்சி-ன்ற பேருல ஏற்கனவே ஒரு பெரிய பதிவர் இருக்காங்க. அதனால நீங்க கொஞ்சம் பேரை மாத்திக்கிட்டிங்கனா பரவால்லைனு சொன்னார். ஆஹா! என்ன பேரு வைக்கலாம்னு ஒரு ரெண்டு நாளா இல்லாத மூளைய.... ச்சே..... மூளைய கசக்கி கசக்கி யோசிச்சேன். ஹ்ம்ம்ம்ம்..... நாளைக்கு என் பிள்ளைக்கு பேர் வைக்க கூட இப்படி யோசிக்க மாட்டேன் போல. ரூம்ல ஃப்ரெண்ட்ஸ் என் டார்ச்சர் தாங்க முடியாம சரி நாங்க எதாவது ஐடியா தரோம்னு மத்த ப்ளாக் பேரெல்லாம் கேட்டாங்க. நான் சொன்னத வச்சு என் ஆருயிர் எதிரி... ச்சே.... தோழி பேசாம உன் கேரக்டருக்கு பொருத்தமா 'இம்சை அரசன்'-ன்னு வச்சிடேன்னு சொன்னா. உடனே இன்னொருத்தி ஹே! அது பசங்க வச்சா நல்லா இருக்கும்னு சொன்னா. அப்போதான் என் மூளைல அப்படியே ஒரு ஸ்பார்க் :))) பேரு கிடைச்சிடுச்சு... பேரு கிடைச்சிடுச்சு... ன்னு குதிச்சேன். சந்தோஷமா 'இம்சை அரசி' எப்படி இருக்குனு நான் கேட்டதும் அடுத்த நொடியே பதில் வந்துச்சு "உனக்கு ஏத்த பேரு"-ன்னு. இதுதாங்க இம்சை அரசியின் வரலாறு. நாளைக்கு உங்க பிள்ளைங்க ஹிஸ்டரில படிக்கும்போது உங்ககிட்ட சந்தேகம் கேட்டா நீங்க தெரியாம முழிக்க கூடாது இல்ல. அதுக்குதான் இவ்ளோ கதையும் ;))))

ஓகே... ஓகே.... நோ வயலென்ஸ்.... அப்படியெல்லாம் கோவமா முறைக்க கூடாது. ஏனா இன்னைக்கு நான் பர்த்டே பேபி ;)))

சரி மேடம் சீரியஸ் ஆயிட்டாங்க.......

இதுவரைக்கும் நான் எழுதியதை படிச்சு நிறை குறைகள் சொல்லி, என்னை மென்மேலும் வளர்த்துக் கொள்ள உதவிய சக பதிவர்களுக்கும், பதிவர் அல்லாத மற்ற நண்பர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் :)))

இந்த இம்சை அரசியால எனக்கு நிறைய விலை மதிக்க முடியாத பரிசுகள் கிடைச்சிருக்கு. அதாங்க அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள், தங்கைகள், நட்புகள். அதுல ஒரு விலை மதிக்க முடியாத பரிசு என் பிறந்த நாளுக்காக ஒரு பரிசு கொடுத்திருக்கு. அது என்னன்னு தெரியணும்னா இங்க க்ளிக் பண்ணுங்க :)))

Monday, November 19, 2007

உன் கண்ணோரம் வாழ... IV

'அய்யோ அவளை மாட்டி விட்டுட்டேனே! என்ன பண்ணப் போறாளோ'

'ச்சே... அவங்கப்பா வேற எதாவது ஃபோன்ல பிரச்சினைனு நினைச்சிருப்பாரு'

'ஒருவேளை அவர் அப்படி நினைக்காம வேற எதும் திங்க் பண்ணினார்னா...'

மனது இரண்டாய் பிரிந்து உட்கார்ந்து பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க அந்த ஏ.சி வால்வோ பஸ் பயணம் அவனுக்கு நெருப்பின் மேல் உட்கார்ந்திருப்பது போல் இருந்தது.

அடுத்த நாள் காலையில் ஆபிஸிற்கு கிளம்பி கொண்டிருந்தவன் மொபைல் பாட்டு பாட ஆவலாய் ஓடி சென்று எடுத்தான். ஊரிலிருந்து ஆனால் புதிய நம்பர்... யாராய் இருக்கும்? என்ற கேள்வியுடன் எடுத்து "ஹலோ" என்றான்.

"அண்ணா! நான் உமா பேசறேன்" என்றதும் ஒரு மெல்லிய பதட்டம் உடலில் பரவ

"என்னாச்சு உமா என்னாச்சு? எதாச்சும் பிரச்சினையா?" என்று கேட்டான்.

"அனு நைட் என்கிட்ட பேசினா. நேத்து அப்பாகிட்ட எதோ பேசிட்டிங்களாமே. அவருக்கு எதோ ரொம்ப சந்தேகம் வந்துடுச்சாம். அவ என்ன பண்றான்னு நோட் பண்ணிட்டே இருக்காராம். அவர் தூங்கினதுக்கப்புறம் தெரியாம எனக்கு ஃபோன் பண்ணினா. உங்ககிட்ட இதை சொல்ல சொன்னா" என்றாள்.

"சரி அவள எதும் கவலைப்படாம இருக்க சொல்லு"

"இல்ல அண்ணா. அவ ரொம்ப பயந்துட்டே இருக்கா. நெத்து நைட் ஒரே அழுகை. அந்த பையன் வீட்டுல வேற ரொம்ப ப்ரெஸ் பண்ணி கேக்கறாங்களாம். என்ன ஆகுமோன்னு தெரியலைனு சொல்லி அழுதுட்டே இருக்கா"

இதைக் கேட்டதும் அவன் கண்கள் அவனையும் அறியாமல் தளும்பியது.

"அவகிட்ட நான் இருக்கேன். தைரியமா இருன்னு சொல்ல சொன்னேனு சொல்லு. ரொம்ப தேங்ஸ் மா"

"ஓகே அண்ணா. எதாவது சொல்ல சொன்னா நான் மறுபடியும் ஃபோன் பண்றேன்" என்று ஃபோனை வைத்து விட்டாள்.

நான்கு நாட்கள் என்ன ஆயிற்று ஏது ஆயிற்று என்று தெரியாமலே நகர்ந்தன. அவனுக்கு வாழ்க்கையே இருண்டு போய் விட்டது போல தோன்றியது. சாப்பிடாமல், தூங்காமல், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் சகலத்தையும் தொலைத்தவன் போல திரிந்து கொண்டிருந்தான். வியாழக்கிழமை இரவு வீட்டிற்கு ஃபோன் செய்த போது அம்மாவிடம் பேச்சு வாக்கில் அனு வீட்டை இழுத்து வந்தான்.

"அந்த பொண்ண யாரோ கேட்டுகிட்டே இருக்காங்கன்னு சொன்னீங்களே என்னாச்சும்மா?"

"ஓ! அதுவா.... பாரு மறந்தே போயிட்டேன். அனு அப்பா இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருந்தார்டா. அப்பாகிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தார். அந்த பையனுக்கு இப்போதைக்கு நிச்சயம் பண்ணிடலாம்னு யோசிச்சிட்டு இருக்காராம். அப்பாவுக்கு தெரிஞ்சவங்கன்றதால கொஞ்சம் இடம் எப்படினு விசாரிக்க சொல்லிட்டு போயிருக்காரு"

இதைக் கேட்டதும் அவனால் ஒன்றுமே பேச முடியவில்லை.

"சரிம்மா. நமக்கெதுக்கு அவங்க பிரச்சினை. நான் சாப்பிட போறேன். அப்புறம் பேசறேன்" என்று வைத்து விட்டு சென்று படுக்கையில் விழுந்தான். அவனது மொபைல் அடிப்பது கூட உணராமல் படுத்தேக் கிடந்தவன் திடீரென்று உணர்வு வந்தவனாய் வேகமாய் எடுத்து பேசினான்.

"தம்பி அப்பா பேசறேன்"

"சொல்லுங்கப்பா"

"சனிக்கிழமை எதாவது வேலை இருக்கா?"

"இல்ல"

"சரி நாளைக்கு கிளம்பி வீட்டுக்கு வா. உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்"

"என்ன வி... ஷ... ய...ம்???"

"கிளம்பி வான்னா வா. சரி வைக்கறேன்"

'எதுக்கு அப்பா வர சொல்றார். ஒருவேளை மாமா பேசினது நாந்தான்னு கண்டுபிடிச்சிருப்பாரோ?? அப்பாகிட்ட போட்டு குடுத்திருப்பாரோ???' பயத்தில் நாக்கு உலர்ந்தது.

'அப்பா கேட்டா என்னன்னு சொல்றது. அவர்ட்ட நேர்ல நின்னே பேச மாட்டேனே'

அடுத்த நாள் முழுவதும் இப்படியே யோசனையில் கழிந்தது. அடுத்த நாள் இரவு ஊருக்கு பயணமானான். அடுத்த நாள் காலையில் அப்பா எழுவதற்கு முன் எழுந்து குளித்து கிளம்பி அவரது அழைப்பிற்காக காத்திருக்கலானான். கிளம்பி வந்தவர் அவனை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றார்.

"நம்ம நடேசன் மாமாவோட சின்ன பொண்ணு அனுவ தேரியுமா?"

"ஒரு ரெண்டு மூணு தடவை பாத்திருக்கேன்பா" பயத்தில் நா உலர்ந்தது.

"ஹ்ம்ம்ம். அந்த பொண்ணை நம்ம தங்கவேலு பையனுக்கு கேக்கறாங்களாம். அவங்க அப்பா வந்து அவங்களப் பத்தி விசாரிக்க சொன்னார்"

"சரிங்கப்பா" பயத்திலும் துக்கத்திலும் வார்த்தைகள் தடுமாறின. மனம் அனிச்சையாய் 'ஒருவேளை நம்மளைப் போயி விசாரிக்க சொல்லுறாரோ' என்று எண்ணியது.

"ரொம்ப நல்ல பொண்ணுப்பா. தங்கம். அப்படி பொண்ணு கிடைக்கறதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்" என்றவர் அமைதியாகி அவன் முகத்தை ஆராய்ந்தார். எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் அடுத்த வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்தான்.

"முன்னாடி இருந்தே எனக்கு ரொம்ப ஆசை. அனுவ உனக்கு கட்டி வச்சு நம்ம வீட்டு மருமகளாக்கிக்கணும்னு. நான் கேட்டா பதிலேதும் பேசாம சரின்னு சொல்லிடுவார். இருந்தாலும் உன் வாழ்க்கை. உன்னை கேக்காம நான் முடிவு பண்ணக் கூடாதுனு தான் நேத்து அவர்கிட்ட எதுவும் பேசலை. இனி உன் பதில்லதான் இருக்கு"

'ஆஹா! கரும்பு தின்ன கூலியா??!!! நம்ம பிரச்சினை இப்படி அல்வா சாப்பிடற மாதிரி முடியும்னு நினைக்கவே இல்லையே! கடவுளே!! ரொம்ப ரொம்ப நன்றி' மனம் குதியாட்டம் போட முகம் அதை வெளிக்காட்டாமல்

"உங்க இஷ்டம் எப்படியோ அப்படியே பண்ணுங்கப்பா. உங்க முடிவு எதுவாயிருந்தாலும் எனக்கு சம்மதம்" என்று நல்ல பிள்ளையாய் அவன் நடிக்கவும் அவர் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.

வேறென்னங்க? நிச்சயம் ஆகி இந்த ஜோடி கல்யாணத்துக்கு காத்துட்டு இருக்கு. அநேகமா அடுத்த மாசம் கல்யாணம் வச்சிருவாங்க. என்னடா இதுனு பாக்கறீங்களா?? இதுல வர நிகழ்ச்சிகள் என் கூட வேலை பார்க்கும் நண்பர் ஒருவரோடது. அவரை பாக்கும்போதெல்லாம் எனக்கு காதல் மேல ஒரு மரியாதையே வரும். அதனால இந்த தொடர் நாலும் அவரோட காதலுக்கு சமர்ப்பணம் :)))

--சுபம்...

Tuesday, November 13, 2007

அன்பு அண்ணாவிற்கு...............

அடுத்து எத்தனை பிறவிகள் இருந்தாலும் அத்தனை பிறவிகளிலும் எனக்கு அண்ணனாக பிறக்க வேண்டுமென்று நான் வேண்டும் என் பாசமலர் தொல்ஸ் அண்ணாவிற்கு அன்பு தங்கையின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)))))))))))))))))))))))))))))))))


உங்களுக்காக நான் ஸ்பெசலா செஞ்ச Flower Cake..... :)))


இங்கே இருந்திருந்தா கண்டிப்பா நானே என் கையால கேக் செஞ்சு தந்திருப்பேன் ;)))))))

உன் கண்ணோரம் வாழ... III

"டேய்! ஏண்டா என் உயிர எடுக்கற?" அழாத குறையாய் சொன்ன ராமிடம் கெஞ்சினான் அரவிந்த்.

"ப்ளீஸ்டா. நான் அப்புறம் எப்படி அவகிட்ட பேசுவேன். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா"

"டேய் உனக்கே இது அநியாயமா தெரியலை. எனக்கு கால் பண்ணி நான் அட்டெண்ட் பண்ணின உடனே ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கற வாய்ஸ போட்டு விடற. அது உடனே போடறியா இல்ல லேட் ஆகுதானு சொல்ல சொல்லி உயிர வாங்குற. நெனைச்சு பாருடா. மூணு நாளா ஃபோனும் கையுமா உக்காந்திருக்கேன். என்னைப் பாத்தா உனக்கு பாவமா தெரியலையா?" பரிதாபமாய் அவன் சொல்லவும் என்ன செய்வதென்று திரும்பியவன் கண்களில் விழுந்த சந்துரு வேக வேகமாய்

"மச்சான் நான் வெளில கிளம்பறேண்டா. பை" என்று சொல்லி விட்டு எஸ் ஆகிவிட்டான்.

"சரிடா. இதுவரைக்கும் ப்ராக்டிஸ் பண்ணினத வச்சு இன்னைக்கு டெஸ்ட் பண்றேன்" என்றபடி ஹெட்ஃபோனை எடுத்து காதில் மாட்ட ஆர்வமான ராம் அவன் அருகில் வண்து அமர்ந்தான்.

ரிங் போக ஆரம்பித்ததும் ஒரு இனம் புரியாத பயம் எழுந்து வயிற்றை பிசைய அவஸ்தையாய் நெளிந்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் எதிர்பார்த்தது போல அனுவின் அம்மா ஃபோன் எடுக்கவும் வேக வேகமாய் வேலை செய்து ரெக்கார்ட் செய்து வைத்திருந்ததை போட்டு விட்டான். அவளது அம்மாவும்

"ஒரு நிமிஷம் இரும்மா. கூப்பிடறேன்" என்று கூறி அவளை அழைத்து ஃபோனைக் கொடுத்தார்.

"ஹே உமா... வீட்டுக்கு போயிட்டியாடி?" என்று வழக்கமான தோரணையில் ஆரம்பித்தவளிடம்

"ஏ அனு... உமா இல்ல. நான்தான் அரவிந்த்" என்று சொன்னதும் வாயைப் பிளந்தவள் அருகிலிருந்த தாயைக் கண்டதும் அமைதியாய்

"ஹ்ம்ம்ம்... சொல்லுடி... ஓ அன்னைக்கு இன்ட்ரோ பண்ணினியே அந்த அக்காவா... சரி..." என்றாள்.

"எப்படி இருக்க?"

"நான் இங்க நல்லா இருக்கேங்கக்கா. நீங்க எப்படி இருக்கீங்க? உங்களுக்கு வேலை எல்லாம் எப்படி போகுது?"

"வேலை எங்க போகுது? எப்போ பார்த்தாலும் உன் நினைப்பாவே இருக்கு" என்று வேதனையாய் சொன்னவன் சட்டெனத் திரும்பி பார்த்தான். அவனை ஆர்வமாய் கவனித்தபடி அருகிலிருந்த ராமை முறைத்தபடி எழுந்து அறைக்குள் சென்று அமர்ந்தான்.

"அதெல்லாம் ஒண்ணும் நினைக்காதிங்கக்கா. நல்லா பண்ணுங்க. உடம்ப பாத்துக்கங்க. போன தடவைப் பாத்தப்பவே கொஞ்சம் இளைச்சுப் போயிருந்தீங்க"

"சரி அதை விடு... அங்க எதும் பிரச்சினை இல்லையெ. வீட்டுல திரும்ப எதாவது அந்த பையன் மேட்டர் பத்தி பேசினாங்களா?"

"காலெஜ்ல எந்த பிரச்சினையும் இல்லாம போயிட்டு இருக்கு. எங்க லெக்சரர் திரும்ப அந்த செமினார் பத்தி எதுமே பேசலை. நீங்க எதும் வொரி பண்ணிக்காதீங்க" என்றவள் பார்வையில் அவள் அம்மா அந்த இடத்தை விட்டு செல்வது விழுந்ததும் சத்தத்தை குறைத்து ஹஸ்கி வாய்ஸில்

"மாமா இங்க எதும் பிரச்சினை இல்ல. ஒண்ணும் ஃபீல் பண்ணாதீங்க. சரி அம்மா உமா பேசறானு சொன்னாங்க" என்று ஆச்சரியமாய் கேட்டாள்.

"அன்னைக்கு உமாவ பேச சொல்லி ரெக்கார்ட் பண்ணி வச்சேன் இல்ல. அதை யூஸ் பண்ணி பண்ணினேன். இனிமேல் சாயந்திரம் இதே நேரத்துக்கு ஃபோன் பண்றேன். நீயே வந்து எடு"

"ஹ்ம்ம்ம்.... பெரிய ஆள் தான் நீங்க... சரி எப்பொ ஊருக்கு வரீங்க?"

"இந்த வாரம் சனி ஞாயிறு வரேன். உன்னை பாக்க முடியுமா?"

"ரொம்ப கஷ்டம். வர சனிக்கிழமை உங்க வீட்டுக்கு வரணும்னு எங்கப்பாவும் பெரியப்பாவும் சொல்லிட்டு இருந்தாங்களே"

"என்ன விஷயமாம்?"

"தெரியலை.... சரி சரி.... அம்மா வராங்கனு நினைக்கறேன். நாளைக்கு பேசுங்க. இல்லைனா இவ்ளோ நேரம் பேசறேனு சந்தேகம் வந்துடும்"

"சரி. பை டா"

"பை மாமா" என்று ஃபோனை வைத்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள். உலகத்தையே புரட்டி காலடியில் போட்ட களிப்பு முகத்தில் தெரிந்தது.

--------------------------------------

சனிக்கிழமை...

வழக்கமான நேரத்தில் ஃபோன் அடிக்கவும் ஓடி சென்று ஃபோனை எடுத்தாள் அனு.

"உங்கப்பாவும் பெரியப்பாவும் கிளம்பிட்டாங்க. காருக்கு பின்னாடி அந்த நம்பர் ப்ளேட்டுக்கு மேல ஒரு தகடு இருக்கு இல்ல. அதுக்குள்ள ஒரு கீசெயின் செல்லோ டேப் போட்டு ஒட்டி வச்சிருக்கேன். எடுத்துக்கோ. பாத்து பத்திரமா எடு"

"சரி. வந்துட்டாங்க. ஒரு கால் மணி நேரம் கழிச்சு ஃபோன் பண்ணுங்க" என்று வைத்தவள் ஆவலாய் வாசலுக்கு ஓடினாள். படியேறி வந்த தந்தை அவள் தலையில் கைவைத்து முன் முடியை சிலுப்பி விட்டு புன்னகைத்தபடி உள்ளே சென்றதும் காரிடம் ஓடினாள். அவன் சொன்ன இடத்தில் இருந்து கீசெயினை எடுத்தவள் அதை இமைக்காமல் அப்படியே பார்த்தாள். ஒரு சதுர வடிவ கண்ணாடி போன்ற பொருளில் அவனது படம் செதுக்கியது போல இருந்தது. மனம் உற்சாகத்தில் துள்ள வேகமாக உள்ளே ஓடினாள். அங்கே அவளது தந்தை ரிசீவரை கையில் வைத்துக் கொண்டு

"உமாவா? எப்படிம்மா இருக்க?" என்று கேட்டுக் கொண்டிருக்க அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

"அவளை கூப்பிடறேன். ஏன் அப்பாகிட்ட பேச மாட்டியா" என்றவருக்கு வந்த பதிலில் ஏதோ பிடிபட திரும்பி பார்த்தவர் மகள் பேயடித்தது போல நிற்பதை கண்டதும் மீண்டும் வேகமாக

"எங்கம்மா இருக்க இப்போ?" என்று கேட்கவும் மறுமுனை உடனடியாய் துண்டிக்கப்பட்டது. அதை வைத்து விட்டு திரும்பியவர் பார்வையில் பயத்தில் அவசர அவசரமாய் உள்ளே ஓடிய அனு பட்டதும், ஏதோ புரிந்தவராய் முகம் சுருக்கினார்.

தொடரும்...