Wednesday, October 15, 2008

ஃபிஷ் ஃப்ரை பிரியர்களுக்கு - சைவம்

நீங்க நான் வெஜ் பார்ட்டியா?இல்ல ப்யூர் வெஜிடேரியனா?இல்ல ரெண்டுமே சாப்பிடறவங்களா?அப்ப மேல படிங்க... ஹி... ஹி... இதை தவிர வேற கேட்டகிரியே இல்லைனு நீங்க கேக்கறது எனக்கு தெரியுது. நமக்கு எது நல்லா வருமோ அதைதான் பண்ணனும். நமக்கு பில்ட் அப்புதானுங்க நல்லா வரும். அதைதான் பண்றேன்.சரி சரி... கமிங் டு த பாயிண்ட்... ஃபிஷ் ஃப்ரை மாதிரியே வெஜிடேரியன்ல எப்படி பண்றதுனு என் ஆபிஸ்ல வேல செய்யற ஒரு பொண்ணு சொல்லிக் குடுத்தா. அதை நான் ரெண்டு தடவை சக்சஸ்ஃபுலா செஞ்சுட்டேன். அதான் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் தான் நம்ம கொள்கைனு உங்களுக்கே தெரியுமில்ல... ஹி... ஹி...ஓகே... இனி வெஜிடேரியன் ஃபிஷ் ஃப்ரை செய்யற செய்முறை.தேவையான பொருட்கள்:பச்சைக் கலர்ல வாழைக்காய் - உங்களுக்கு வேணுங்கிற அளவுஉப்பு - இதுவும் உங்களுக்கு வேணுங்கிற அளவுமிளகாய் பொடி - இதுவும் உங்களுக்கு வேணுங்கிற அளவுதானுங்கஇந்த வாழைக்காய்க்கும் மீனுக்கும் ரொம்ப ஒற்றுமை இருக்கு. வாழைக்காய் எப்படி ரெண்டுப் பக்கமும் கட் பண்ணி லைட்டா தோல் சீவறோமோ அதே மாதிரி மீனையும் தலையும் வாலும் கட் பண்ணி செதில் சீவுவோம். இந்த ஒற்றுமையே சாமுராய் படத்துல விக்ரம் நாசரோட மனைவிக்கு சொல்லித் தந்தப்போதான் எனக்கும் தெரிஞ்சது. ஓ மை காட்! செய்முறை சொல்ல வந்துட்டு எங்கேயோ போயிட்டேன். சாரி சாரி...செய்முறை:வாழைக்காய நல்லா கழுவிட்டு ரெண்டுப் பக்கமும் கட் பண்ணி தூக்கி டஸ்ட் பின்ல போட்டுடுங்க. அப்றம் வாழைக்காய அப்டியே ரவுண்டு ரவுண்டா கட் பண்ணிக்கங்க. ரொம்ப ஸ்லைஸா வேணாம். அதுக்காக ரொம்ப மொத்தமாவும் வேணாம். கட் பண்ணினத எல்லாம் எடுத்து குக்கர்லப் போட்டு தண்ணி ஊத்தி கொஞ்சம் சால்ட் போட்டு அடுப்புல வச்சு மூணு விசில் விடுங்க. ப்ரெஷர் அடங்கினதும் எடுத்து தண்ணிய வடிச்சுட்டு ஒரு தட்டுல பரப்பி ஃபேன்க்கு அடில வச்சு நல்லா ஈரம் ஆற விடுங்க. அப்றம் மிளகாய் பொடியோட சால்ட், தண்ணி கலந்து அந்த வாழைக்காய் துண்டு ஒவ்வொண்ணுலயும் ரெண்டு பக்கம் தடவி மறுபடியும் தட்டுல பரப்பி ஈரம் காய விடுங்க. ஈரம் காயலைனா நிறைய எண்ணை இழுக்கும். ஈரம் காய்ஞ்சதும் எடுத்து தோசைக்கல்ல கொஞ்சம் நல்லா எண்ணை விட்டு அதுல போட்டு பொரிச்சு எடுங்க. அப்றம் தட்டுல அழகா அடுக்கி உங்களுக்கு தெரிஞ்ச டெக்கரேஷன் எல்லாம் செஞ்சு சர்வ் பண்ணுங்க. சுவையான வெஜிடேரியன் ஃபிஷ் ஃப்ரை ரெடி.Value added: மிளகாய் தூள் உப்போட கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்தும் பண்ணலாம்.வாழைக்காய் ரவுண்ட் ரவுண்டா கட் பண்ணி செஞ்சா ரொம்ப நேரம் எடுக்குதேனு வருத்தப்படற என்னைய மாதிரி சுடு சோம்பேறிங்களுக்காக: வாழைக்காய் பஜ்ஜிக்கு சீவற மாதிரி நீளமாவும் சீவிப் போடலாம்.புரட்டாசி மாசம், அமாவாசை அந்த நாளு இந்த நாளுன்னெல்லாம் சாப்பிட முடியாம கஷ்டப்படறவங்களுக்காக என்னுடைய இந்தப் பதிவு சமர்ப்பணம். சீக்கிரம் வெஜிடேரியன் சில்லி சிக்கனோட வரேன்.பி.கு: ஒரு குடும்ப ஸ்தீரியா மாறிட்ட தேஜஸ் என் பதிவுல தெரியுதானு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க மக்கா... :)))

Tuesday, October 14, 2008

ஓர் இரவை எண்ணி...

தன்னை மறந்து

தனித்துறங்கிய

இரவின் விடியலில்

கண் மலரும் பொழுதில்

துடிதுடித்துப் போகிறேன்...

உன்னிரு கரங்களுக்குள்

துயிலாமல் தொலைத்த

ஓர் இரவை எண்ணி...

Tuesday, October 7, 2008

பேரம் பேசறதுல கில்லாடியா நீங்க??

பேரம் பேசி வாங்கறதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். கொஞ்சம் பயமும் கூட.எங்க ஊர்ல சனிக்கிழமை மட்டும்தான் சந்தை கூடும். நான் அஞ்சாவது படிச்சப்போ இருந்து எங்கம்மாக் கூட சந்தைக்குப் போக ஆரம்பிச்சேன்(அப்போ இருந்தே வீட்டு வேலைக் கத்துக்கோன்னு ஒரே அர்ச்சனை... இருந்தாலும் ஒண்ணுமே கத்துக்காம சாதிச்சிட்டோமில்ல). காய் வாங்கும்போது எந்த காய் எப்படி எப்படி பாத்து வாங்கணும்னு சொல்லிக் கொடுப்பாங்க. ஒரு கடைலக் கூட அட்லீஸ்ட் ஒரு ஐம்பது பைசாவாவது குறைச்சுக் கேட்காம வாங்க மாட்டாங்க. எனக்கு ஒரே எரிச்சலா வரும். ஏம்மா! சூப்பர்மார்க்கெட்ல போய் வாங்கறீங்கல்ல. அங்கல்லாம் பேரம் பேச மாட்டிங்க. இங்க மட்டும் வந்து நல்லா கேளுங்க. எவ்ளோ பாவம் இவங்கனு எங்கம்மாட்ட சண்டைப் போடுவேன். சூப்பர்மார்க்கட்ல எல்லாம் விலை கரெக்டா வச்சிருப்பாங்க. இங்க எல்லாம் அவங்க சொல்றதுதான் விலை. அதனால இஷ்டத்துக்கு சொல்லுவாங்கனு எங்கம்மாவும் எதேதோ காரணம் சொல்லுவாங்க. ஆறாவ்து போனதுக்கப்புறம் என்னை தனியா சந்தைக்கு அனுப்ப ஆரம்பிச்சிட்டாங்க. நான் போனப்போ குறைச்சுக் கேட்டுப் பாப்பேன். முடியாதுனு சொல்லிட்டாங்கனா எதும் பேசாம அவங்க சொன்ன விலைக்கு வாங்கிட்டு வந்துடுவேன்.காலேஜ்-ல என் ஃப்ரெண்ட் யசோ சூப்பரா பேரம் பேசுவா. ஒரு தடவை திருச்சில பர்மா பஜார் போனோம். ஒரு கடைல ட்ரெஸ் வாங்கலாம்னு போய் ட்ரெஸ் எல்லாம் செலக்ட் பண்ணி வச்சுட்டோம். அவ மெல்ல இது எவ்ளோங்கனு கேட்டா. இருநூறு ரூபாய்னு அவர் சொன்னதும் ஒரு ரெண்டு செகண்ட் யோசிச்சவ எழுபத்தைஞ்சு ரூபாய்க்குக் குடுங்கனு கேட்டாளே பாக்கலாம். எனக்கு உதற ஆரம்பிச்சிடுச்சு. அவர் எதாச்சும் கேவலமா திட்டிடப் போறாரோனு ஒரே பயம் எனக்கு. அவரோ கூலா அவ்ளோ கம்மியா எல்லாம் குடுக்க முடியாது. வேணா நூத்தி எண்பதுக்கு தரேனு சொன்னார். இவ உடனே சரி வாடி போலாம்னு என் கையப் பிடிச்சு இழுக்க அவர் வேகமா நூத்தி ஐம்பது குடுத்துட்டு எடுத்துக்கங்க. அதுக்கு மேலக் குறைக்க முடியாதுனு சொன்னார். திரும்பி இவ பேச அவர் பேச ரெண்டு பேரும் பேசி கடைசில தொண்ணூறு ரூபாய்க்கு அந்த ட்ரெஸ்ஸ வாங்கிக் குடுத்தா. நான் ஆ-னு வாயப் பொழந்துக்கிட்டு பாத்துக்கிட்டு இருந்தேன். நல்லவேளை போன ஜென்மத்துல நான் செஞ்ச புண்ணியமமோ என்னவோ வாய்க்குள்ள ஈ போகல.ஹி... ஹி...அதுல இருந்து அவளோட போகும்போதெல்லாம் ஒரெ உதறலாதான் இருக்கும். என்னைக்கு எவன்கிட்ட அடி வாங்கப் போறோமோனு. நீயும் எங்கம்மாவும் ஒண்ணுடி. கஷ்டப்படறவங்ககிட்டதான் போய் பேரம் பேசுவீங்கனு சொன்னதுக்கு கோனார் நோட்ஸ் கணக்கா விளக்கவுரை சொன்னா. ஒரு தடவ ஒரு கடைல அவ எதோ வாங்கிட்டு இருந்தப்போ ஒருத்தர் பயங்கரமா பேரம் பேசி குறைச்சு வாங்கிட்டுப் போனாராம்.அவர் போனதுக்கப்புறம் அவர்ட்ட வியாபாரம் பண்ணினவரை கூட இருந்தவர் திட்டினாராம். எப்போமே எல்லாரும் பேரம் பேசதான் செய்வாங்க. இதுக்கு தான் நீ ஒரு நூறு ரூபா இருநூறு ரூபா அதிகம் சொல்லி இருக்கணும்னு. அதைக் கேட்டதுல இருந்துதான் இவ இப்படி ஆயிட்டாளாம். பாருங்க ஒவ்வொருத்தரும் நிறைய ஹிஸ்டரி வச்சிருக்காங்க :P.இப்படியே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்லி வச்சதுல பேரம் பேசறதுனாவே ஒரு பயம் வந்து ஐ மீன் பேரமோஃபோபியா வந்து ஃபிக்சட் ரேட் கடைகங்களுக்கு மட்டுமேப் போயிருந்தேன். பெங்களூர்ல MG ரோடுக்கு ஒரு தடவை ஷாப்பிங் போயிருந்தோம். ரொம்ப ஆசையா ஒரு துப்பட்டா வாங்கினேன். விலை எவ்ளோனு கேட்டதும் நூத்தி இருபது ரூபானு சொல்லிட்டு இன்னொருத்தவங்களுக்கு துணி எடுத்து காட்டப் போயிட்டான். என் ஃப்ரெண்டு பக்கத்துல இருந்து மெதுவா எண்பது ரூபாய்க்கு கேளுடி கேளுடினு இடிக்கறா. எனக்கு பேரமோஃபோபியா வந்து உதற ஆரம்பிச்சு மெல்ல அவகிட்ட நீயே கேளுடி செல்லம்ன்னு நான் சொல்லி முடிக்கறதுக்குள்ள அவன் திரும்பி வந்துட்டான். அவன் நான் என்ன சொல்லுவேனு என்னையப் பாக்கறான் அப்புறம் துப்பட்டாவப் பாக்கறான். இவளா வாயத் தொறக்க மாட்டேங்கறா. எனக்கு ஒரே கடுப்பு. சரி நாமளே டீல் பண்ணிக்கலாம்னு நூறு ரூபாய்க்கு குடுங்கனு மெல்ல கேட்டேன். இருந்தாலும் திட்டிப்புடுவானோனு உள்ளுக்குள்ள ஒரே பயம். அவன் உடனே எதும் பேசாம சரிங்க மேடம்னு சொல்லிட்டான். எனக்கா என் மேலயே கோபம் கோபமா வருது. அடியே அவ சொன்ன மாதிரி எண்பது ரூபாய்க்கு கேட்டிருக்க மாட்டனு. அந்த பக்க திரும்பினா அவ மொற மொறைனு மொறைக்கிறா. அப்புறம் என்ன? நூறு ரூபாயக் குடுத்துட்டு துப்பட்டாவ வாங்கிட்டு வந்துட்டேன். வர வழியெல்லாம் அதுக்கு அர்ச்சனை. நாம வாழ்க்கைல வாங்காத அர்ச்சனையா? ப்பூனு ஊதி தள்ளிக்கிட்டே வந்து சேர்ந்துட்டேன்.இப்படியாப்பட்ட என்னோட பேரம் பேசற ஹிஸ்டரி தெரியாம என் வீட்டுக்காரர் நாங்க சென்னை வீடு பால் காய்ச்சறதுக்கு முன்னாடி நாள் பூ வாங்கக் கூட்டிட்டுப் போனார். அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தின்றதால அன்னைக்கு பூ விலை எக்கச்சக்கம். ஃபர்ஸ்ட்டே அவர் பேரம் பேசி ஒரு முழத்துக்கு இவ்ளோனு குறைச்சிட்டார். ஆஹா! நம்மாளு என்னமா பேரம் பேசறாருனு சந்தோஷத்துல அப்படியே வேடிக்கைப் பார்த்துட்டு நின்னுட்டு இருந்தேன். அந்தம்மா பூவைக் குடுத்துட்டு மொத்தம் நூத்தி முப்பத்தைஞ்சு ரூபானு சொன்னுச்சு. இவர் அதெல்லாம் முடியாது நூத்திப் பதினைஞ்சு ரூபாதானு மொட்டையா சொன்னார். உடனே அந்தம்மா சாமிப் பூ தொண்ணுத்தி அஞ்சு ரூபா. மல்லிகைப் பூ நாப்பது ரூபா. அப்ப மொத்தம் நூத்தி முப்பத்தைஞ்சு ரூபானு சொன்னுச்சு. நான் மனசுக்குள்ள வேக வேகமா கணக்குப் போட்டேன். 95+40 = 135 தான சரியாதான் அந்தம்மா சொல்லி இருக்குனு சரியா கணக்குப் போட்ட எனக்கு ஒரு சபாஷ் சொல்லிக்கிட்டு ஆமாங்க நூத்தி முப்பத்தைஞ்சு ரூபாதானு சொல்லிட்டேன்.நான் சொன்னதால அந்தம்மா அதுக்கு மேல இறங்காம அப்படியெ பிடிச்சுக்கிச்சு. சரினு அவரும் நூத்தி முப்பத்தைஞ்சு ரூபா குடுத்துட்டு பூ வாங்கிட்டு வந்தார். பைக்ல போகும்போது அடியேய்! நான் நூத்தி பதினைஞ்சுதான் குடுப்பேனு சொல்லிட்டிருக்கேன். நீ நூத்தி முப்பத்தைஞ்சு ரூபாதானு சொல்றன்னு ஆரம்பிச்சார். அய்யோ! நான் அதை சொல்லலைங்க. 95+40 = 135 அப்படினு அந்த அம்மா சொன்ன கணக்கு சரினு சொன்னேன். மத்தபடி வேற எதுவும் சொல்லலைனு அப்பாவியா சொன்னேன். ஆண்டவா! இவள வச்சுக்கிட்டு நான் எப்படி பொழைக்கப் போறேனோனு சொல்லி அன்னைக்கு சிரிச்சவர்தான். என் ஃப்ரெண்ட்ஸ் முதற்கொண்டு எல்லார்ட்டயும் இந்த விஷயத்த சொல்லி சிரிச்சு சிரிச்சு மானத்த வாங்கறார் :(((. நீங்களே சொல்லுங்க. இது என் தப்பா இல்ல என்னோட பேரம்ப்ப்ஃபோபியா பத்தி தெரிஞ்சுக்காம பேரம் பேசக் கூட்டிட்டுப் போன அவரோட தப்பா? அவர் மேல தப்ப வச்சுக்கிட்டு என்னை சொல்லி சொல்லி சிரிக்கறார். என்ன கொடுமை சார் இது?!!

Monday, October 6, 2008

கண்ணீரின் சுவை!!!

பல சமயங்களில்

பல தருணங்களில்

சிந்தியிருந்த போதும்

சுவைத்த தருணங்கள்

சில மட்டுமே...விழி சிந்தும்

துளி நீருக்குதான்

எத்தனை சுவைகள்!

கோபம்...

ஆனந்தம்...

அதிர்ச்சி...

துக்கம்...

வருத்தம்...

இயலாமை...

காதல்...

நீண்டு செல்லும் பட்டியலாய்…செய்த தவறுகளை

உணர்ந்து வருந்திய பொழுதுகளில்

என் மீதே எனக்குள் பொங்கிய

கோபத்தின் பயனாய்

சுவைத்த துளிகள்எதிர்கொண்ட துயரங்கள் மறந்து

பணியிலமர்ந்த என்னைக் கண்டு

சொல்லவொண்ணா ஆனந்தத்தில்

அடக்க இயலாமல் தந்தை

சிந்திய துளிகள்உடன் திரிந்த தோழி

சுவாசம் மறந்த தருணத்தில்

முதன்முறை நேரில்

மரணம் கண்ட அதிர்ச்சியில்

நில்லாமல் விழியில்

வழிந்த துளிகள்என் பிம்பம் தானோ

என்றெண்ணி வியந்த

ஆருயிர் நட்பை

கல்லூரியில் பிரிந்த நாளன்று

விவரிக்க இயலா துக்கத்தில்

திரையிட்ட துளிகள்பொத்திப் பொத்தி

வளர்த்த ஆசைகள்

என்னை மீறி நிறைவேறாமல்

போன தருணங்களில்

இயலாமையில் துடித்துத்

தெறித்த துளிகள்கோடானு கோடி கொட்டிக் கொடுத்தாலும்

கிடைக்காத சந்தோஷத்தை விட

பெரும் சந்தோஷம் என்றாலும்

இனி தன் வீட்டுப் பெண் இல்லையென்ற

சிறு வருத்தத்தில் தாய் தந்தையர்க்கு

பொங்கிய துளிகள்இந்நாளிலெல்லாம் எதுவென்றாலும்

அக்கணமே வெளிவராது

உனைக் கண்டதும் கட்டியணைத்து

மனதின் பாரம் குறைய

உன் தோளையும் மார்பையும்

நனைக்கும் துளிகள்இன்னும் சுவைக்க வேண்டியவை பல

உறுதியாய் வருமென்றாலும்

எண்ணி எண்ணி வியக்கிறேன்

விழி சிந்தும் துளி நீருக்குதான்

எத்தனை சுவைகள்!!

Friday, October 3, 2008

உன்னோடுதான் என் ஜீவன் - III

'நேத்து வாங்கிட்டு வந்த இந்த பச்சக் கலர் ஹேர்பேண்டை எங்கே வைத்தேன்?' என்று பொறுமையில்லாமல் தனது பேக்கின் ஒவ்வொரு ஜிப்பிலும் துழவிக் கொண்டிருந்தாள் கிரி. ஒரு வழியாய் கண்டுபிடித்து எடுத்தவள் அழகாய் படிய வாரியிருந்த நீண்ட பின்னலை புதிய பச்சை வண்ண ஹேர் பேண்டைக் கொண்டு கட்டினாள். பச்சை சுடிதாருக்கென்று முந்தினம் பிரத்தியேகமாய் வாங்கி வந்திருந்த பச்ச வண்ண பொட்டை எடுத்து நெத்தியில் வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் திரும்பி எல்லாம் சரியாய் இருக்கிறதா என்று அழகு பார்த்தவளுக்கு ஏதோ குறைவதுப் போலவே தோன்றியது. எதோ ஒன்றை மறந்து விட்டோமே என்று யோசித்தவளுக்கு 'முன்ன பின்ன இப்படியெல்லாம் பண்ணியிருந்தா தான் தெரியும்' என்ற எண்ணம் வேறு இடையில் வந்து தொலைத்தது. அச்சோ என்று சலித்துக் கொண்டவளுக்கு மின்னல் வேகத்தில் நினைவு வர வேகமாய் சென்று ஃப்ரிட்ஜ்ஜைத் திறந்து முந்தினம் வாங்கி வைத்திருந்த மல்லிகைப் பூவை எடுத்து தலையில் வைத்து மீண்டும் கண்ணாடி முன் நின்று அழகுப் பார்த்தாள். இப்பொழுது திருப்தியானவள் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். ஹாலில் இருந்தபடியே அவளது இந்த புதிய நடவடிக்கைகளை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அம்மாவிடம்

"அம்மா! அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குப் போறேனு நேத்தே சொன்னேனில்ல. அதான் கிளம்பிட்டேன். போயிட்டு வரேன்" என்றபடியே தாயின் பதிலுக்கு காத்திராமல் கிளம்பி விட்டாள்.

'நான் செய்யறது எல்லாம் சரிதானா? ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்த நான் தானா இதுனு எனக்கே சந்தேகமா இருக்கே. ஒரு வாரத்துல எப்படி மாறிப் போயிட்டேன். இந்த மாதிரியெல்லாம் வாழ்க்கைல இருக்கவே மாட்டேனு நினைச்சேன். ஆனா இப்படி என்னை அடியோட மாத்திட்டியேடா... கார்த்திக்...' அவனது பெயரை மனம் உச்சரித்த மாத்திரத்திலேயே அவளுக்கு கன்னம் சூடேறியது. மெலிதாய் புன்னகைத்துக் கொண்டாள். 'நல்லவேளை பக்கத்துல யாரும் இல்ல... இல்லைனா இதென்னடா அதுவா சிரிச்சுக்குதுனு நினைச்சிருப்பாங்க. எனக்குள்ளயும் இப்படி ஒரு மனசு இருக்குனு புரிய வச்சியேடா... இன்னும் உன்னைப் பார்த்ததுக் கூட இல்லயே... கார்த்திக் நீ எப்படிடா இருப்ப' இப்படியே அவனைப் பற்றியே சிந்த்தித்துக் கொண்டே அர்த்தநாரீஸ்வரர் கோவிலை அடைந்தாள். வெளியே இருந்து அவனுடைய மொபைலுக்கு கால் செய்தாள். ரிங் போகும்போது மனம் படபடவென அடித்துக் கொண்டது. ஏனென்றால் ஒன்று முதல் முதலாய் ஒரு ஆணை தனியாய் சந்திக்கப் போகிறோம். இரண்டு கல்லூரிக் காலங்களிலேயே எத்தனையோ பேர் காதலிக்கிறேன் என்று சொன்ன போதெல்லாம் ஒரு போதும் வந்தறியாத இனம் புரியாத உணர்வு. மூன்று இருவரும் ஒத்துக் கொண்டால் இவன்தான் தனது வாழ்க்கைத் துணை. நான்கு வீட்டுக்குத் தெரியாமல் சந்திப்பது. ஐந்து இதுவரை எத்தனையோ நண்பர்களை இதுப் போல் சந்தித்திருந்தாலும் அப்பொழுதெல்லாம் வராத ஒரு குற்ற உணர்வு இப்பொழுது வெகுவாய் பயத்தை தருவது.

இப்படியாக லிஸ்ட் போட்டு முடிப்பதற்குள் கார்த்திக் ஃபோனை எடுத்து விட்டான்.

"ஹே! கிரி. எங்கடா இருக்க?" அவனது இந்தப் பரிவானப் பேச்சில் அனைத்து குற்ற உணர்ச்சியும் அடிபட்டுப் போக அவளால் இன்னதென்று அறியமுடியாத ஒரு விநோதமான உணர்வு ஆட்கொள்ள

"கோவில் வாசல்ல இருக்கேன்" என்றாள்.

"ஓஓ! நான் உள்ள வந்துட்டேனே. சரி. அங்கேயே இரு. நான் வரேன். என்ன கலர் ட்ரெஸ் போட்டிருக்க?"

"க்ரீன். நீங்க?"

"வொயிட்ல ப்ளூ ஸ்ட்ரைப்பெடு"

"சரி வாங்க"

முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாததுப் போல காட்டிக் கொண்டாலும் அவள் மனம் ஏனோ திக் திகென்றிருந்தது. தொலைவில் அவன் சொன்ன உடை அடையாளத்தில் இறங்கி வருவது தெரிந்ததும் மனம் இன்னும் வேகமாய் அதன் புதிய வேலையை செய்ய ஆரம்பித்திருந்தது. அருகில் வர வர இமைக்காமல் அவனது புன்னகை மாறாத முகத்தை உள்வாங்கிக் கொண்டாள். ஏனோ அவள் கண்களுக்கு உல அழகனாய் தெரிந்தான். அருகில் வந்தவன் புன்னகை மாறாமலே

"ஹை கிரி... கார்த்திக்" என்றான்.

பதிலுக்குப் புன்னகைத்தவள் என்னப் பேசுவதென்று தெரியாமல்

"வந்து ரொம்ப நேரம்... உள்ளப் போகலாமா?" என்று உளறினாள்.

"இல்லடா. வந்து பத்து நிமிஷம் தான் ஆகுது. நீ முன்னாடி வந்து வெயிட் பண்ணுவியோனு அவசர அவசரமா வந்தேன். சரி வா போலாம்" என்றபடியே படிகளில் ஏற ஆரம்பித்தான். அவனுக்கு இணையாக ஏற ஆரம்பித்தவளின் படபடப்பைப் புரிந்துக் கொண்டவன்

"கூலா இருடா... என்ன டென்ஷன். நமக்குப் பிடிச்சா ஓகே சொல்லப் போறோம். இல்லைனா நல்ல ஃப்ரெண்ட்ஸா இருப்போம். சரியா?" என்றதும் தனது படபடப்பைப் புரிந்துக் கொண்டானே என்று உள்ளுக்குள் குதூகலித்தாள். என்றாலும் இந்த ஆண்களால் என்றுமே பெண்களின் மனதை சரியாய் புரிந்துக் கொள்ள முடியாது என்று துர்கா அடிக்கடி சொல்லும் கருத்து நினைவிற்கு வந்தது. சரியாக தவறான காரணத்தைக் கண்டுபிடித்து விட்டான் என்று உதட்டை சுழித்தாள். அவளாய் எதேதோ யோசித்துக் கொண்டு அதன் விளைவாய் மாறும் அவள் முகபாவங்களை அவன் ரசித்தபடி முன்னேற அவனுக்கு இணையாய் அவளும் முன்னேற கோவில் பிரகாரத்தை அடைந்தார்கள்.

எதுவும் பேசாமல் அமைதியாய் தரிசனம் முடித்து விட்டு கோவில் மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். அவள் அமைதியாகவே இருக்கவே கார்த்திக் முதலில் பேச்சைத் தொடங்கினான்.

"என்ன முடிவு பண்ணிருக்க கிரி? உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா? ஐ மீன் என் கேரக்டர்ஸ், என்னோட ஃபிசிக்கல் அப்பியரன்ஸ்? உன் மனசுக்கு என்ன தோணுதோ அதை வெளிப்படையா சொல்லு. ஏன்னா இது நம்ம லைஃப். காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டுப் போற விஷயமில்ல. சரியா?" என்று அவன் கேட்டதும் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

"அதே கேள்விய நான் கேக்கறேன். உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?"

"ஹ்ம்ம்ம். எனக்கு என் லைஃப் பீஸ்ஃபுலா போகணும். என் ஃபேமிலியோட அவங்க பொண்ணு மாதிரி இருக்கணும். இதுக்கு உன்னால உத்திரவாதம் தர முடியுமா?"

"என்னால உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. நான் எப்பவும் உண்மையா இருப்பேன். ஆனா என்னோட ஃப்ரீடம்ல நீங்க தலையிடக் கூடாது. ஐ மீன் என்னோட வேலை விஷயங்கள். எனக்கு இருக்கற லட்சியங்கள். இப்படி... இதுக்கு உங்களால உத்திரவாதம் தர முடியுமா?"

அவளது கேள்வியில் புன்னகைத்தவன் "ஷ்யூர்" என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே பதிலாகத் தந்தான். பின் இரு நிமிட அமைதிக்குப் பின்

"உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?" என்றாம் மெதுவாக. பதிலேதும் சொல்லாமல் ஆமாமென்பதுப் போல் மெதுவாய் தலையாட்டினாள்.

கையில் வத்திருந்த கவரைப் பிரித்து அதிலிருந்தப் பூவை அவளிடத்தில் கொடுத்தான். ஆச்சரியமாய் அவனைப் பார்த்தபடியே வாங்கியவளின் கையைப் பிடித்துக் கொண்டவன்

"ஐ லவ் யூ கிரி" என்றான். அய்யோ! இதற்குப் பெயர்தான் வெட்கமா என்று அவளது உள்மனது சந்தோஷக் கூச்சலிட வேறுபுறம் திரும்பியவள்
"மி டூ" என்றாள். சொல்லி முடிப்பதறகுள் அடி வயிற்றில் ஒரு பிரளயமே நடந்திருந்தது.

"என்னடா கோவில்ல ரொமான்ஸ் பண்றானேனு தப்ப எடுத்துக்காத. எனக்கென்னவோ ஃபர்ஸ்ட் உன்கிட்ட பேசினப்பவே நீதான் எனக்குனு மனசு சொல்லுச்சு. அதான் உன்னைக் கோவில்ல வச்சுப் பாக்கணும்னு ஆசைப்பட்டேன். என் வாழ்க்கையும் இந்தக் கோவில்ல வச்சுதான் ஆரம்பமாகணும்னு நினைச்சேன். அதான் இங்கயே சொன்னேன்"

அவனது விளக்கத்தைக் கேட்டதும் சிரிப்பு வந்தது.

"சரி நான் கிளம்பறேன். லேட்டாப் போனா அம்மாவுக்கு ஏதும் டவுட் வந்துடும். நான் ஃபோன் பண்றேன் உங்களுக்கு"

"சரிடா. வா நானும் வரேன். வந்து பஸ் ஏத்தி விடறேன்"

வீட்டிற்கு பயங்கர குஷியோடு வரும் மகளைப் பார்த்ததும் அவளது தாயாருக்கு சந்தேகம் வந்தது. என்றாலும் அவள் கோபப்படும்படியாக எதுவும் கேட்க வேண்டாம் என்று விட்டு விட்டார். பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு அவள் ஓகே சொல்ல வேண்டுமே. இப்பொழுது கேட்கலாமா இப்பொழுது கேட்கலாமா என்றே அவர் பொழுதை ஓட்ட எப்போ கேப்பாங்க எப்போ கேப்பாங்க என்று கிரி பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தாள். ஒருவழியாக மாலையில் அவளுக்கு காஃபி கொடுக்க சென்ற போது பேச்சை ஆரம்பித்தார்.

"மனோ அங்கிள் பையன் கார்த்திக் ஃபோன் பண்ணினாரா எப்போவாச்சும்? நீ பேசினியாடா?"

அப்படியே ஆர்வம் இல்லாதவள் போல் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்

"போன வாரம் ஒரு ரெண்டு தடவைப் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கறேன். ஒரு அஞ்சு நிமிஷம் பேசினாங்க"-தைரியமாய் சொன்னாலும் பொய் சொல்லுகிறோமே என்று உள்ளுக்குள் உதறியது.

"ஓ! சரி அங்கிள் இன்னைக்கு காலைலக் கூட ஃபோன் பண்ணினார். என்ன ஆச்சுனு கேட்டார். என்னடா பதில் சொல்லலாம்? எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லணும். ஒத்து வரலைனா அவங்க வேற இடத்துல பாப்பாங்க இல்ல" கடைசியாய் சொன்னது அவளுக்கு பயத்தைத் தர

"உங்களுக்கு பிடிச்சா எனக்கும் ஓகே அம்மா. உங்க இஷ்டப்படியே செய்ங்க. நீங்க என்ன சொன்னாலும் எனக்கு முழு சம்மதம்" என்று தனக்கும் நடிக்கத் தெரியும் என்று நிரூபித்தாள்.

அவளது வார்த்தைகளைக் கேட்டதும் சந்தோஷம் பிடிபடாமல் "இப்போவே உங்கப்பாட்ட சொல்லி அவருக்கு ஃபோன் பண்ண சொல்றேன்" என்றபடியே அவளது அறையிலிருந்து வெளியேறினார்.

ஆனால் அவளது அப்பா சிவநேசனோ...

(தொடரும்)