"தாலாட்டும் பூங்காற்று நானல்லவ்வா... நீ கேட்டுத் தாலாட்டு ஓ மன்னவா" - ஜானகி ஐபாடில் இதமாய் தாலாட்டிக் கொண்டிருக்க, கண்கள் வெளியே வேடிக்கைப் பார்த்தாலும் மனம் மட்டும் ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தது. என்னைத் தாலாட்டும் பூங்காற்றே! எங்கே இருக்கிறாய் என் தேவதையே? எப்படி இருப்பாய் நீ? பூங்காற்றாகவா இல்லை புயலாகவா? எப்பொழுது என் கண்முன் வருவாய் நீ? இருபத்தேழு வயது இளைஞனுக்குரிய எதிர்பார்ப்புகளை நெஞ்சில் சுமந்தவனாய் நான் மெல்லிய பெருமூச்சு விட்டபோது மெல்லிய குலுங்கலுடன் பெங்களூரிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மடிவாலாவில் நின்றது.
அதுவரை எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்த மனதைக் கட்டியிழுத்தது ஒரு கருவண்டு. அட! இரு கருவண்டுகள். ஒரே மாதிரியே இரு கருவண்டுகள் அலைபாயுமா என்ன? அதுவும் துறுதுறுவென குழந்தைத்தனமான முக்கியமாய் அழகான ஒரு முகத்தில் கள்ளமில்லாமல் அலைபாயும் அவள் விழிகளைப் பார்த்தபோது இதுதான் தோன்றியது. படபடவென பட்டாம்பூச்சியாய் இமையடிக்கும் அவள் விழிகளை விட்டு என்னால் பார்வையை நகர்த்தவே முடியவில்லை. நான் இருந்த பேருந்திற்காக காத்திருந்த பயணிகளில் ஒருத்திப் போலும். அவளுடனிருந்த அவளது தோழிகளுடன் கிண்டலாய் பேசி விளையாடியிருந்த அவளது நொடிக்கொருதரம் மாறிய முக பாவனைகளை இமை மூட மறந்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை. அவள் என்னைப் பார்க்கவில்லை. இறைவா! நீ இருப்பது உண்மையானால் அவளை என்னிடம் பேச வைத்து விடு. பாவம் இறைவன். அவன் இருப்பதை இப்படியெல்லாம் நிரூபித்தாக வேண்டியிருக்கிறது அல்லவா. அங்கே காத்திருந்த மற்றப் பயணிகள் ஏறியதும் கடைசியாய் அவளும் அவள் தோழிகளும் ஏறினர்.
எங்கே உட்காருவாள் என்று ஆவலுடன் ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது இருக்கையை அவள் நெருங்க இதயம் படபடவென அடித்துக் கொண்டது. வந்தவள் எனது இருக்கையை நெருங்கியதும் கையில் இருந்த பயணச்சீட்டை வைத்து இருக்கை எண்ணைப் பரிசோதித்தவள் அவளது உடைமைகளை மேலே வைத்து விட்டு என்னருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். இறைவா! நீ இருப்பது உண்மையென நூறு சதம் என்ன ஆயிரம் சதம் ஒத்துக் கொள்கிறேன். பேச வைக்க வேண்டி கோரிக்கை வைத்த உன் பக்தனுக்கு அருகிலேயே உட்கார வைத்து உன்னை நிரூபித்து விட்டாயே! உள்ளுக்குள் விசிலடித்துக் கொண்டிருந்த நான் மெல்ல அவளைப் பார்த்தேன். நான் பார்ப்பதை உணர்ந்தவள் என்னைப் பார்த்து நட்பாய் புன்னகைத்தாள். "விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே"- என்று இளையராஜா வேறு சமயம் பார்த்து பாடிக் கொண்டிருந்தார். சாரி பாஸ். உங்களை நிறுத்த வில்லையென்றால் உயிரில் கலக்கப் போகும் உறவு பறந்துப் போய் விடும் என்றெண்ணியபடி ஐபாடை நிறுத்தி எடுத்து வைத்தேன்.
பேருந்து கிளம்பி பத்து நிமிடங்கள் ஆகி விட்டது. எப்படி பேச ஆரம்பிக்கலாம். நாமாக ஆரம்பித்தால் எதாவது நினைத்துக் கொள்வாளோ என்று எக்கச்சக்க ஆரய்ச்சிகள் செய்துக் கொண்டிருந்த என் காதுகளில் தேனாகப் பாய்ந்தது "திருச்சிக்கு எத்தனை மணிக்குப் போய் சேரும்னு உங்களுக்குத் தெரியுமா?" என்று அவள் கேட்டது.
"காலைல ஒரு ஏழு மணிக்கெல்லாம் போய் சேர்ந்துடுவோம்" என்றேன்.
"ஓ! தேங்ஸ்" என்றவள் இரு நிமிடங்கள் கழித்து
"நீங்களும் திருச்சிக்கா போறீங்க" என்றாள். வாய்ப்புக் கிடைத்தாயிற்று. நழுவ விட நான் என்ன முட்டாளா?
"ஆமாம். திருச்சி பஸ்ல திருச்சி தானே போக முடியும்?" என்று கிண்டலாய் நான் கேட்கவும் சிரித்தாள்.
"இல்ல. சேலம், நாமக்கல் போறவங்க கூட இதுல வருவாங்கன்னு கேள்விப்பட்டேன்" என்றாள்.
"ஓ! நீங்க திருச்சிக்கு இதுதான் முதல் தடவையா?" என்றதும் ஆமாமென்பதுப் போல தலையாட்டினாள்.
"வீக் எண்ட்ல எல்லாம் அப்டி ஏத்த மாட்டாங்க. ஒன்லி திருச்சிப் போறவங்க மட்டும்தான் ஏத்துவாங்க" என்றேன்.
"ஓஹோ! திருச்சில இருந்து உறையூர் எப்படி போகணும்?"
"சத்திரம் பஸ் ஸ்டாண்ட்ல இறங்கிக்கங்க. அங்க இருந்து நிறைய பஸ் இருக்கு. ஈஸியா போயிடலாம்" என்று நான் முடிப்பதற்குள் பேருந்தில் வேலை செய்யும் பையன் அவளிடம் வந்து முன்னால் ஒரு பெண் இருப்பதாயும் இருக்கை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறியதும் எனக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது. என்ன செய்வது காட்ட முடியாத சூழ்நிலை. அவள் என்ன சொல்வாளோ என்று அவளையேப் பார்த்தேன். ஒரு நிமிடம் யோசித்தவள்
"நோ ப்ராப்ளம். இங்கேயே உக்காந்துக்கறேன்" என்று அந்தப் பையனை அனுப்பி வைக்கவும்தான் என்னால் நிம்மதியாய் மூச்சு விட முடிந்தது.
அதன் பின் எங்கே வேலை செய்கிறோம் வேலை எப்படிப் போகிறது என்று ஆரம்பித்து மற்ற நிறுவனங்களைப் பற்றி அலசி ஆரய்ந்துப் பின் பொழுதுபோக்கு, சினிமா, பிடித்த நடிகர், நடிகை, இயக்குனர், பாடல்கள், படம், பிடித்த ஊர், இறுதியாய் சென்ற சுற்றுலா என்று பல விஷயங்களை அலசி ஆராய்ந்து முடித்தபோது அவளிடம் நெருக்கமாகி விட்டதாய் உணர்ந்தேன். அவளும் என்னை நன்கு பழகிய நண்பனிடம் பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தாள். பெண்கள் அழகுதான். அதோடு குழந்தைத்தனமும் சேர்ந்துக் கொண்டால்... அழகோ அழகு. அதிலும் முகத்தை அழகாய் சுழித்து வெவ்வெவ்வே என்று பழிப்புக் காட்டும்போது அந்தக் கன்னக் குழிகளில் வழுக்கி வழுக்கி விழுகிறேன். இப்படி நான் விழுவது தெரிந்தால் இதேப் போல் என்னுடன் பேசுவாளா? இப்படி நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அவளோ பேசிப் பேசிக் களைப்பாகி மெல்ல தூங்க ஆரம்பித்திருந்தாள்.
எனக்கோ தூக்கம் வரவில்லை. இருகையில் சாய்ந்து கன்னத்தில் கைவைத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவளை என் நெஞ்சில் போட்டுத் தட்டிக் கொடுத்து தூங்க வைக்க வேண்டும் போல இருந்தது. இதெல்லாம் நடக்குமா? இப்படியே விடிய விடிய நான் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க பேருந்தும் திருச்சி எல்லையைத் தொட்டது. மெல்ல கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தவள்
"நீங்க அதுக்குள்ள எழுந்தாச்சா?" என்றாள் மெதுவாக.
"ம்ம்ம்" என்றேன் மெதுவாய். பின் இருவரும் மொபைல் நம்பரை மாற்றிக் கொண்டோம். சத்திரம் பேருந்து நிலையம் செல்ல பத்து நிமிடங்களே இருந்தன. திடீரென்று ஞாபகம் வந்தவனாய்
"திரும்ப எந்த பஸ்ல டிக்கட் புக் பண்ணியிருக்கீங்க?" என்றேன்.
"இல்ல ஆக்சுவலா என் ஃப்ரெண்ட் கல்யாணத்துக்காக திருச்சி வரேன். ஞாயித்துக் கிழமை கல்யாணம். முடிஞ்சதும் கிளம்பி கோயம்புத்தூர் போறேன்"
"நீங்க ஈரொடுனு சொன்னீங்க"
"அது எங்கம்மா வீடு. நான் இப்போ போறது எங்க மாமியார் வீட்டுக்கு" என்று அவள் என்னுள் இடி இறக்குவது தெரியாமல் வெகு சாதாரணமாய் சொன்னாள். என்னால் பேச இயலாமல் வாயடைத்து நின்றேன். சொல்லிவிட்டு நான் ஏதேனும் பேசுவேனென்று என் முகத்தையேப் பார்த்தாள்.
"ஓ! உங்க வீட்டுக்கார்..." என்று நான் இழுக்கவும்
"அவர் ஆன்சைட் போயிருக்கார். அடுத்த மாசம் வந்துடுவார்" என்று அவள் முடித்தபோது சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்க அவள் தோழிகள் அழைக்கவும்
"சரி வரேங்க. பை" என்று கூறிவிட்டு அவளது உடமைகளை எடுத்துக் கொண்டு அமைதியாய் சிரித்தபடிச் சென்றாள் எனது இதயத்தை கூர்க்கத்தி கொண்டு கிழித்துவிட்டு.
(தேவதை வருவாள்)
Thursday, January 31, 2008
யாரிந்த தேவதை - I
Posted by இம்சை அரசி at 7:41 PM 39 comments
Labels: தொடர் கதை, யாரிந்த தேவதை
Wednesday, January 30, 2008
எதற்கும் கண் கலங்காத நான்...
Posted by இம்சை அரசி at 6:51 PM 23 comments
Labels: அனுபவம், சும்மா... லுலுலா...
Tuesday, January 29, 2008
இம்சை அரசியின் எழுத்துக்களில் எனக்குப் பிடித்தது
நம்ம ஜொள்ளுத்தம்பிக்கு நான் சும்மா இருக்கறதுப் பாத்து ஒரே பொறாமை. நீ எப்படிக்கா சும்மா இருக்கலாம்னு வயிறெரிஞ்சாரா... அதோட விட்டிருக்கனும். அதை விட்டுட்டு உனக்குப் பிடிச்ச பதிவு என்னன்னு எழுதுனு என்னையும் கோர்த்து விட்டுட்டாரு. சரி போன வருஷம் அப்டி என்னதான் நாம எழுதிருக்கோம்னு கொஞ்சம் அப்படியேக்கா தலைய உள்ள விட்டுப் பாத்தேன். ஓ மை காட்! 55 பதிவுகள் எழுதியிருக்கேன் :O நானா? நானா?? நானா???-ன்னு நாலாப் பக்கமும் ஒரே எக்கோவா அடிக்குது. ஒரு வாழைப்பழ சோம்பேறி நானே இவ்ளோ எழுதி இருக்கேனா அது ரொம்ப பெரிய சாதனைதானே...
ஹ்ம்ம்ம்... எனக்குப் பிடிச்ச பதிவு என்னன்னு ஒரு வாரமா ஒரே ஆராய்ச்சி. ஆரய்ச்சி பண்ணினதுல வலைச்சரம் ஆசிரியர் ரேஞ்சுக்குப் பதிவுப் போட வேண்டியதாயிடுச்சு. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்கப்பு ;)))
கவிதைகள் எழுத நான் முயற்சி செய்து ஓரளவு சுமாராக வந்த கோபமாய் வருகிறது, வெறித்தனமாய் காதலிக்கிறேன், என்ன ஒரு வில்லத்தனம், எங்கே நீ சென்றாயோ கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். வெறித்தனமாய் காதலிக்கிறேன் கவிதை எனக்கே ரெண்டு தடவை ஃபார்வார்ட் மெயிலல் வந்துடுச்சு. நம்மளோடது கூட ஃபார்வர்ட் பண்ற அளவுக்கு இருக்கானு எனக்கு ஒரே ஆச்சர்யம் :)))
அப்புறம் சும்மா லுலுலா பதிவுகள்ல எடுத்த சபதம் முடிப்பேன் ரொம்ப பிடிச்ச ஒண்ணு. அது கூட ஃபார்வார்ட்ல சுத்துச்சுனு கேள்விப்பட்டேன். ஆனா எனக்கு வரலை.
தொடர் கதைகள்னு எடுத்துக்கிட்டா வலி மற்றும் அத்தை மகனே அத்தானே. இந்த அத்தை மகனே அத்தானே பத்தி வலைச்சரத்துல நிறைய தடவை எழுதினாங்க. பாரி அரசு அவரது தமிழ்மண வாசிப்பில் என்ற பதிவிலும் இதைப் பற்றி எழுதி இருந்தார். இந்த ரெண்டு கதையும் நிறைய பேர் ரொம்ப நல்லா இருக்குனு சொன்னாங்க.
சிறுகதை எழுத நிறைய தடவை ட்ரை பண்ணிட்டேன். எனக்கு ரொம்ப நல்லா வராது. இப்போதான் கொஞ்சம் முன்னேறி இருக்கேன். அப்டி நான் நல்லா எழுதினதா நினைக்கற ஒரு கதை காலம் கரைந்தாலும். ரொம்ப நாளா எழுதணும்னு யோசிச்சு வச்சிருந்த கதை. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது.
அப்புறம் ரொம்ப முக்கியமானது இதே மாதிரி Tag பண்ணினதுல எழுதின அழகென்ற சொல்லுக்கு. என்னோட சிறந்தப் பதிவுக்கு வாக்களிக்க சொன்னா நிறைய பேர் இதைதான் சொல்வாங்க. வலைச்சரத்துலக் கூட வந்துச்சு.
நம்மளோட லிஸ்ட் இதுதாங்க. அப்டியே நம்ம நட்பு வட்டாரத்துல எல்லாம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்திட்டேன்.
1. அண்ணன் CVRக்குப் பிடிச்சது அத்தை மகனே அத்தானே.
2. தல ஜி சொன்னது எடுத்த சபதம் முடிப்பேன் மற்றும் அழகென்ற சொல்லுக்கு.
3. செல்லத் தங்கச்சி மைஃப்ரெண்ட் சொன்னது அழகென்ற சொல்லுக்கு.
4. சிறுகதை சூறாவளி தேவ் அண்ணாவுக்கு பிடிச்சது காலம் கரைந்தாலும மற்றும் கோடி நன்றிகள். இது என் பிறந்த நாளுக்காக போட்டப் பதிவு.
5. கடைசி தங்கச்சி துர்காவுக்கு பிடிச்சது அத்தை மகனே அத்தானே.
6. மோகன்தாஸுக்கு பிடித்ததும் அத்தை மகனே அத்தானே.
7. ஐயப்பன்(ஜீவ்ஸ்) அண்ணாச்சி சொன்னது அத்தை மகனே அத்தானே.
8. நம்ம ஜொள்ளுத் தம்பிக்கு பாய் ஃப்ரெண்ட் தேவையா பதிவுதான் ரொம்ப பிடிக்குமாம். இதைப் படிச்சப்போ தரைல விழுந்து புரண்டு சிரிச்சாராம். அப்படி சிரிக்கற அளவுக்கு அதுல என்னங்க இருக்குனு கேட்டதுக்கு அதுல மொத paragraph-ல கடைசி லைன படிச்சிட்டு அவரால சிரிப்ப அடக்கவே முடியலையாம். grrrrrrr........ என்ன ஒரு வில்லத்தனம்???
சரி இதுல எதைப் போடலாம்னு என் குருவி மூளைய கசக்கி கசக்கி யோசிச்சேன். ஹ்ம்ம்ம். உனக்கு உன் பெரிய பிள்ளை பிடிக்குமா இல்ல சின்னப் பிள்ளையப் பிடிக்குமானு கேட்டா என்ன சொல்வீங்க? ரெண்டுமே ரொம்ப பிடிக்கும்னுதானே சொல்வீங்க. அதே மாதிரிதான். என்னோடப் படைப்புகள் என் பிள்ளைகள். அதுல இதைதான்னு தனியா குறிப்பிட்டு சொல்ல முடியாது. அதனால என்னோடதுல எனக்குப் பிடிச்ச பதிவுனா நான் எழுதின எல்லாமேதான் :)))
அப்புறம் ஏன் இங்க கொஞ்சம் பதிவுகள் பத்திதான் சொல்லி இருக்கனு கேக்கறீங்களா. என் பெரிய பையன் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கினா அதைப் பத்தி மட்டும்தான் சொல்வேன். கூடவே என் ரெண்டாவது பையன் பத்தாவது ரேங்க் வாங்கினானு சொல்ல மாட்டேன். அது மாதிரிதான் இதுவும் ;)))
சரி இப்போ நான் யாரையாவது எழுத சொல்லணுமே... இவங்களை எல்லாம் கூப்பிடலாம்னு யோசிச்சேன்.
- அபி அப்பா
- CVR
- தேவ் அண்ணா
- ஜி
- கப்பி
- மைப்ரெண்ட்
- துர்கா
- மோகன்தாஸ்
- ஜீவ்ஸ் அண்ணா
- கோபி அண்ணா
- G3
- அனுசுயா
- கண்மணி அக்கா
- புலி
- சிபி அண்ணா
- இளா அண்ணா
- ராம் தம்பி
Posted by இம்சை அரசி at 5:08 PM 27 comments
Labels: Tag, சும்மா... லுலுலா..., ரசித்தவை
Thursday, January 24, 2008
பழைய பாடல்களா???
பழைய பாடல்களா என்று எதற்குக் கேள்விக்குறி போட்டிருக்கிறேன் என்று யோசிக்க வேண்டாம். ச்சும்மா போட்டு வைத்தேன். என் அப்பா பழைய படங்கள் மற்றும் பாடல்களின் தீவிர ரசிகர். நான் கோவித்துக் கொண்டால் என்னைப் பார்த்து "ஏன் பிறந்தாய் மகளே! ஏன் பிறந்தாயோ!!" என்றுப் பாடுவார். உடனே நான் சிரித்து விடுவேன். என் அம்மா எதற்காகவாவது வருந்தினால் "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் சொட்டுதடி" என்றுப் பாடுவார். இப்படியே அதிகம் கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ எனக்கு பழையப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். என் மனம் கவர்ந்த அன்றும் இன்றும் என்றும் நான் ரசித்த ரசித்துக் கொண்டிருக்கும் ரசிக்கும் பாடல்களைப் பற்றி எழுத வேண்டுமென்று நெடுநாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்குத்தான் இந்தப் பதிவு.
பழையப் பாடல்கள் என்று சொன்னதும் உடனடியாய் என் நினைவுக்கு வருவது "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்றப் பாடல்தான். காதலை சொல்வதற்கு இதை விட சிறந்த சிறிய வரி இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. இதற்காக கண்ணதாசனை எண்ணிப் பலமுறை வியந்திருக்கிறேன். இதற்கு சரி நிகராய் இருக்கும் பாடல் "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் சொட்டுதடி" கேட்கும்போதே எனக்கு கண்கள் கலங்கும்.
என்ன காரணமென்றே தெரியாது. "கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா" பாடலும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதோ ஏனோ தெரியவில்லை. சிவாஜி காதல் பாட்டு பாடினால் கூட அது எனக்கு தத்துவப் பாட்டுப் போலவே தோன்றும். எம்.ஜி.ஆர் தத்துவப் பாட்டுப் பாடினால் கூட அது காதல் பாட்டுப் போலவே தோன்றும்.
சிவாஜியின் "பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்தப் பறவைகளே" பாடல் கல்லூரி நண்பர்கள் பிரிவிற்காக அன்றே வெளிவந்தப் பாடல். சிறு வயதில் கல்லூரி முடித்து வரும்போது கட்டாயம் பாட வேண்டும் என்று எண்ணி வைத்திருந்தேன். அதற்குள் நான் பள்ளி முடிக்குமுன்பே "முஸ்தபா முஸ்தபா"-வும் கல்லூரி முடிப்பதற்குள் "மனசே மனசே மனசில் பாரம்"-மும் வந்து எனது திட்டத்தைக் கெடுத்து விட்டன.
ஒரு ஜாலியான ரொமான்டிக் பாட்டு. இதைப் பார்க்கும்/கேட்கும் போது எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தாலும் பார்த்த/கேட்டப் பின் ஜாலியான ஒரு மனநிலைமைக்கு கொண்டு வந்து விடும். அதாங்க "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம். கண் தேடுதே சொர்க்கம்". சரோஜா தேவி அழகோ அழகு அந்தப் பாட்டுல. இதே மாதிரி எம்.ஜி.ஆரோட "சர்க்கரைக்கட்டி ராஜாத்தி என் மனச வச்சுக்கோக் காப்பாத்தி" என்ற பாடல். இதில் சரோஜா தேவி பாடும் "அத்தை மகனே அத்தானே... உன் அழகைக் கண்டு நான் பித்தானேன்" என்ற வரிகளை வைத்துத்தான் எனது ஒரு கதைக்கு அத்தை மகனே அத்தானே என்று பெயரிட்டேன். இதே வரிசையில் "தொட்டால் பூ மலரும்", "குமரிப் பெண்ணின் உள்ளத்திலே" பாடல்கள்.
ஜெமினியின் சாந்தி நிலையம் படத்தில் "இயற்கை என்னும் இளையக் கன்னி" பாடலும் மிகவும் பிடித்தப் பாடல். இதுதான் SPBயின் முதல் பாடல் என்று கேள்விப்பட்டேன். அதேப் படத்தில் முதலாவதாய் வரும் பாடல் "இறைவன் வருவான். அவன் என்றும் நல்வழித் தருவான்" பாடலும் இன்றைய "அன்பென்ற மழையிலே" பாடலைப் போன்ற ஒரு அருமையானப் பாடல். ஜெமினியின் பலப் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதிலும் ரொம்ப ஸ்பெசல் என்றால் ஜெமினி, சாவித்திரி நடித்த "அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ" பாடல். கேட்கும்போதெல்லாம் அதன் இசைக்கு மயங்காமல் இருந்ததே இல்லை. ஜெமினியின் "வளர்ந்த கதை மறந்து விட்டாள் கேளடா கண்ணா" குழந்தையிடம் சொல்வதுப் போல கணவன் மனைவி பிரச்சினையை பற்றிப் பேசும் பாடல்.
பத்மினிக்கும் இன்னொரு பெண்ணுக்கும் போட்டி நடனம் ஒன்று வரும். "சாதுர்யம் பேசாதேடி. என் சலங்கைக்கு பதில் சொல்லடி" என்று கூட வரும். முதல் வரி மறந்து விட்டது. அருமையான பரதநாட்டியம். பரதம் என்று சொன்னதும் முதலில் நினைவுக்கு வருவது "மறைந்திருந்தேப் பார்க்கும்" பாடலும் "நலந்தானா" பாடலும்தான். இந்தப் பாடலை எந்த அளவு ரசித்தேன் என்று என்னுடைய அழகென்ற சொல்லுக்குப் பதிவில் சொல்லி இருந்தேன்.
சிவாஜியின் "யாரடி நீ மோகினி" பாடல் வெகுவாய் ரசித்துப் பார்த்த ஒன்று. "மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்" இதை ரசிக்காதவர் எவரும் இருக்கவே முடியாது. சிவாஜிப் பாடல்களிப் பற்றி பேசும்போது என் தோழி ஒரு பாட்டு சைக்கிள்ல போயிட்டே பாடுவாரே என்று முதல் வரி யோசிக்கவும் நானும் "மனிதன் மாறி விட்டான்" என்று பாடினேன். உடனடியாய் அவள் "மரத்தில் ஏறி விட்டான்" என்று பாடினாளேப் பார்க்கலாம். உடனே இன்னொருத்தி ஓடி வந்து அவன் என்ன குரங்கா? அது மரத்தில் இல்ல மதத்தில் என்றுத் திருத்தினாள். அதைக்கேட்டு அவள் முழித்த முழி இருக்கிறதே. எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்தப் பாடலும் அட்டகாசமானப் பாடல். "அந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை"
காதல் பாடலில் ஒரு அருமையானப் பாடல் "ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் ப்பெயர் என்ன" பாடல். அதில் காதலில் தொடங்கி திருமணம் அதன் பின் வரும் பந்தம் என எல்லாவற்றையும் சொல்லும் பாடல். ஜெயசங்கரின் "அன்புள்ள மான்விழியே" பாடலும் இனிமையானப் பாடல்.
தோல்விப் பாடல்கள் என்றதும் நினைவுக்கு வருவது "அவள் பறந்துப் போனாளே", "எங்கிருந்தாலும் வாழ்க". சோகப் பாடல்கள் எக்கச்சக்கம். "நெஞ்சம் மறப்பதில்லை", "மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா","சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே" நமக்கே கண்ணீர் வந்து விடும்.
ரொம்ப ரொம்ப ஜாலியான மற்றும் அடிக்கடி நான் முணுமுணுக்கும் பாடல் "மாடி மேல மாடிக் கட்டி கோடி கோடி சேர்த்து வைத்த சீமானே" பாடல். நல்ல ஒரு நகைச்சுவைப் பாடல். எனது பள்ளித் தோழி ஒருத்தியின் தந்தைப் பெயர் விஸ்வநாதன். தாயார் பெயர் இசைவாணி. நானும் இன்னொருத் தோழியும் அடிக்கடி "விஸ்வநாதன் வேலை வேண்டும் இசைவாணி சோறு வேண்டும்" என்று அவளைப் பார்த்துப் பாடிக் கொண்டிருப்போம் :)))
நாகேஷின் பெரும்பான்மையானப் பாடல்கள் அட்டகாசனாய் இருக்கும். அதிலும் முக்கியமாய் "எதிர் நீச்சல்" படப் பாடல்கள். சிவக்குமாரின் "கந்தன் கருணை" படத்தில் "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் முருகா" பாடல் இன்றும் பெரும்பான்மையானோர் சினிமாவில் வெளிவராத பக்திப் பாடல் என்றே எண்ணியிருக்கின்றனர். அதேப் படத்தில் "மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு... நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு" எனக்கு மிக மிகப் பிடித்தமானப் பாடல்.
இன்னும் எக்கச்சக்கமாய் இருக்கின்றன. "அன்று வந்ததும் அதே நிலா" மற்றும் "அதோ அந்தப் பறவைப் போல ஆட வேண்டும்" பாடல்களோடு முடித்துக் கொள்ளலாமென்று மேடம் முடிவு செய்து விட்டார்கள். உங்களுக்கும் இந்த பாடல்கள் எல்லாம் எவர்க்ரீன் ஃபேவரைட்டாக இருக்கும் என்று நினைக்கிறேன் :))))
உங்களுக்குப் பிடித்தப் பாடல்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த பாடலை பாடல் வரிகளுடன் கேட்க விரும்பினால் தேன்கிண்ணத்தில் நேயர் விருப்பத்தின் மூலம் தெரியப்படுத்துங்கள். பிறகு பாடலை வரிகளுடன் ரசித்து மகிழுங்கள் :)))
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :)))
Posted by இம்சை அரசி at 6:12 PM 23 comments
Wednesday, January 23, 2008
என் பொண்ணுக்கு ரொம்ப பொறுப்பு வந்துடுச்சு!!
"அது ஏம்மா உருளைக்கிழங்கை கட் பண்ணி உப்பு கலந்த தண்ணில போடணும்?"
நான் வெகு ஆர்வமாய் கேட்கவும் என் அம்மாவிற்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அதே ஆர்வம் அவரையும் தொற்றிக் கொள்ள
"அப்போதான் ஃப்ரை பண்னும்போது ஒண்ணோட ஒண்ணு ஒட்டாம வரும். பாத்திரத்துலயும் அடிப் பிடிக்காது" என்று விளக்கினார்.
"சரி இன்னைக்கு உருளைக்கிழங்கு ஃப்ரை கத்துக்கிட்டது போதும்மா. நான் போய் என் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்றேன்" என்று சொல்லிவிட்டு வேக வேகமாக என அறைக்குள் ஓடினேன்.
"முன்னாடி சமையல் கத்துக்கோ சமையல் கத்துக்கோனு தலைல அடிச்சிப்பேன். அப்போ எல்லாம் கண்டுக்கவே மாட்டா. போற எடத்துல உங்கம்மா என்னத்ததான் சொல்லிக் குடுத்தானு என்னையதான் திட்டுவாங்கன்னு எனக்கு ஒரே கவலையா இருந்துச்சு. வேலைக்குப் போனதும் ரொம்ப பொறுப்பு வந்துடுச்சு. அவளே வந்து அது எப்படி செய்யணும் இது எப்படி செய்யணும்னு கேட்டுக் கத்துக்கறா" என்று பக்கத்து வீட்டு மாமியிடம் அம்மா சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்ததும் என்னையும் மீறிய ஒரு புன்னகை வந்தது.
அதற்கு மேல் அவர்களது பேச்சை கவனியாமல் தீவிரமாய் சிந்தித்துக் கொண்டிருந்தேன். கடைசியாய் சமையல் குறிப்புதானே போட்டேன். அடுத்தே இன்னொன்று போடுவதா? இல்லை. வேண்டாம். ஒரு கதை போட்டு விட்டு முந்தா நாள் எழுதி வைத்த கவிதையும் போட்ட பின் இந்த உருளைக்கிழங்கு குறிப்பை போட்டு விடலாம் என்று முடிவெடுத்துக் கொண்டு அடுத்துப் போட வேண்டிய கதையை யோசிக்க ஆரம்பித்தேன்.
பி.கு : எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தாலும் உடனடியாய் அதை எப்படி ப்ளாக்கில் எழுத வேண்டுமென்று யோசிக்கும் என் இனிய ப்ளாக் மக்களுக்கு சமர்ப்பணம் :)))
Posted by இம்சை அரசி at 6:50 PM 12 comments
Labels: சிறுகதை
Tuesday, January 22, 2008
காபி பிரியரா நீங்கள்? அவசியம் இங்க வாங்க :)
காபி... ஸ்ஸ்ஸ்ஸ்... நினைக்கும்போதே அப்படியே அந்த வாசம் மூக்கைத் துளைக்குது(என் பக்கத்து க்யூபிக்கிள்ல காபி குடிச்சிட்டு இருக்காரு எங்க தல. அதான் போல ;)))). எனக்கு காபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல காபி போட்டுதான் அம்மா எழுப்புவாங்க. வேகமா ப்ரஷ் பண்ணிட்டு ஓடி வந்து நானும் என் தம்பியும் எங்க வீட்டு நிலகால்ல ஆளுக்கு ஒருப் பக்கமா உக்காந்துக்கிட்டு அந்த காபிய ரசிச்சு ருசிச்சுக் குடிப்போம். எனக்கு ஃபில்டர் காபின்னா உயிர். ஸ்ட்ராங்கா டிகாக்ஷன் போட்டு சக்கரை கம்மியா இருக்கணும். இல்லைனா பேயாட்டம் ஆடுவேன். அதென்னவோ பில்டர் காபில ஒரு தனி வாசமே வரும். அது வேற எந்த காபிலயும் வரது இல்ல.
அப்புறம் சென்னை வந்ததும் வெண்டிங் மிஷின் காபி அறிமுகம். நிஜமா காபின்னு காதுல கேட்டாலே அலறியடிச்சுட்டு ஓடற அளவுக்கு இருந்துச்சு அதோட டேஸ்ட். ஹ்ம்ம்ம். கர்ண கொடூரம். அப்புறம் பெங்களூர் வந்ததுக்கு அப்புறம் வேற ஒரு வெண்டிங் மெஷின் காபி. அது கொஞ்சம் பரவால்லயா இருந்துச்சு. அதுல காபி கொட்டைய அரைச்சு காபி போட்டுத் தரும். காபி மேல இருந்த லவ்ல காபிய குடிக்கறத விட்டுட்டு மில்க் குடிச்சிட்டு அந்த காபி பீன் சாப்பிட ஆரம்பிச்சேன். எல்லாரும் எவ்வளவோ அட்வைஸ் பண்ணியும் என்னால விட முடியலை. அப்புறம் நானா தெளிஞ்சு விட்டுட்டேன். அதுக்கு ரீஸன் CCD காபி அறிமுகம். Cappucino, Cafe Latte இப்படி எத்தனை அவதாரங்கள்... அப்பப்பா... டேஸ்ட்டோ டேஸ்ட்டு...
ஆனா கொஞ்ச நாள்ல இந்த Hot Chocalate அறிமுகத்தால அதை எல்லாம் விட்டுட்டேன். வீட்டுல குடிக்கற காபி மட்டும்தான். சரி சரி உன் காபி புராணத்தக் கொஞ்சம் நிறுத்தறயானு நீங்க சொல்றது கேக்குது. இப்போ பக்கமா என் டீம் மேட் எனக்கு ஒரு வித்தியாசமான காபி சொல்லிக் குடுத்தா. ரொம்ப ஈஸியா செஞ்சுடலாம். நான் ட்ரை பண்ணிட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. சோ வழக்கமான வசனம்தான். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :)))
ஒரு டம்ளர் காபிக்கு எவ்வளவு சர்க்கரை, ப்ரூ இல்லைனா சன்ரைஸ் காபித்தூள் (இன்ஸ்டன்ட்காபித்தூள் ஒன்லி)போடுவீங்களோ அதை ஒரு டம்ளர்ல எடுத்துக்கோங்க. அது கரையற அளவுக்கு சுடுதண்ணி ஊத்தி அதுல ஒரு ஸ்பூனப் போட்டு நல்லா அடிங்க. தண்ணி ஊத்தினதும் கருப்பு கலர்ல இருந்தது இப்போ ப்ரவுன் கலர்ல ஆயிடும். லைட் ப்ரவுன் கலர்ல வரவரைக்கும் நல்லா அடிங்க. அப்படியே க்ரீமியா வரும். இப்போ அதுல தேவையான அளவு பாலை ஊத்தி ஸ்பூன்ல ஒரு கலக்கு கலக்குங்க. அவ்ளோதான். நம்ம க்ரீமி காபி ரெடி. எஞ்சாய் பண்ணுங்க :)))
இதை செய்யும்போது நீங்க செய்யக் கூடாதது(என் அனுபவத்துல கண்டுபிடிச்சது):
1. சுடுதண்ணி ரொம்ப ஊத்தாதீங்க. இல்லைனா ஸ்பூன் போட்டு அடிக்கும்போது உங்க ட்ரெஸ்ல எல்லாம் அடிச்சு ட்ரெஸ் வீணாயிடும்.
2. பால் ஊத்தும்போது ரொம்ப தூக்கி ஊத்தாதீங்க. அப்டி பண்ணினா அந்த க்ரீம் பால்ல கரைஞ்சுப் போயிடும்.
3. ஸ்பூன் போட்டு லைட்டாக் கலக்குங்க. ரொம்ப ஸ்பீடா கலக்காதீங்க. அப்போதான் அந்த காபி க்ரீம் ஒரு தனி லேயரா மேல இருக்கும்.
ரொம்ப ஈஸியா இருக்கு இல்ல. ரொம்ப ஸ்ட்ராங்கா வெணும்னா காபித்தூள் நிறைய போட்டுக்கோங்க. இல்லைனா உங்களுக்கு தேவையான அளவுப் போட்டுக்கோங்க. செஞ்சுப் பாத்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க மக்கள்ஸ் :)))
Posted by இம்சை அரசி at 6:55 PM 41 comments
Monday, January 21, 2008
பதில் கூறு ப்ளாக் உலகே!
காதல் - இந்த வார்த்தை மனிதனை எவ்வளவு பாடுபடுத்துகிறது. இந்த வார்த்தை எப்படி இந்த அளவு நமக்கு பரிச்சயமானது? இதற்கான பதிலில் பெரும்பங்கு வகிப்பவை திரைப்படங்களும் இலக்கியங்களும்தான். காதல் இல்லாத திரைப்படம் ஒன்றை கூறி விடுங்கள் பார்க்கலாம். வேறு ஏதேனும் கருப்பொருளைக் கொண்டிருந்தாலும் பழி வாங்குவதில், நகைச்சுவையில் அல்லது வேறு எப்படியாவது இந்த காதல் வந்து விடுகிறது. திரைப்படத்துறை இன்று இந்த அளவிற்கு வளர்ந்தது என்றால் அது இந்த காதல் என்ற வார்த்தையால் மட்டும்தான் என்கிறேன். என்ன சொல்லுகிறீர்கள்? இலக்கியங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அன்றைய திருவள்ளுவர் முதல் இன்றைய பா.விஜய் வரை காதலில் வெளுத்து வாங்குகிறார்கள். இப்படி எல்லாருமாய் சேர்ந்து செய்ததின் விளைவு பள்ளி சேருமுன்னே ஒவ்வொரு குழந்தையும் கற்றுக் கொள்கிற ஒரு அத்தியாவசிய வார்த்தையாகி விட்டது.
எங்கள் அலுவலக HR-க்கு வேலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண்ணிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்தப் பெண் அவள் தெருவில் இருக்கும் ஒரு பையனை உயிருக்கு உயிராய் நேசிப்பதாயும், ஆனால் அவளது பெற்றோர் இந்த வேலையில் சேரச் சொல்லி வற்புறுத்துவதாயும், அவளுக்கு அவனை விட்டு வருவதற்கு மனமில்லையென்றும் இந்த வேலையை எப்படி முறைப்படி வேண்டாமென்று சொல்வது என்று கேட்டும் மின்னஞ்சல் அனுப்பி இருந்தாள். அதைப் பார்த்ததும் காதல் இப்படியெல்லாம் கூட படுத்துமா என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டேன்.
இதைப் பற்றி பேசும்போது கண்டிப்பாக எனது பன்னிரெண்டாவது வகுப்பில் என்னுடன் விடுதியில் தங்கிப் படித்த ஒரு பெண்ணைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவள் எப்பொழுதுப் பார்த்தாலும் படித்துக் கொண்டேயிருப்பாள். எப்பொழுது தூங்கிகிறாள். எப்பொழுது எழுகிறாள் என்றே தெரியாது. அவள் தூங்கி நான் பார்த்ததேயில்லை. டாக்டராக வேண்டுமென்ற வெறியோடுப் படித்தாள். நான் அவளை வெகு ஆச்சர்யமாகவும் மரியாதையாகவும் பார்ப்பேன். லட்சியத்தை அடைவதற்கு எவ்வளவு வருத்திக் கொள்கிறாள் என்று. பின்பு ஒரு நாள் என் தோழி ஒருத்தி சொன்னாள். அவளுக்கும் அவளது அண்ணனின் நண்பனுக்கும் காதல் என்று. அவள் வீட்டில் அந்த விஷயம் தெரிந்து அவளது அப்பா நீ டாக்டரானால் கண்டிப்பாக அவனுக்கே திருமணம் செய்து வைக்கிறேன் என்றாராம். அதற்குத்தான் உயிரைக் கொடுத்துப் படிக்கிறாளாம். இதைக் கேட்டதும் என்னால் ஆச்சர்யத்தை தாங்கவே முடியவே இல்லை. இப்படியும் இருப்பார்களா என்று. அவள் என்ன ஆனாள் என்றுதான் தெரியவில்லை :(
இதற்கு மேல் காதலை உங்களுக்கு அறிமுகப்படுத்த எனக்குத் தெரியவில்லை. இன்னும் உங்களுக்குப் புரியவில்லை என்றால் என்னை விட ஏழெட்டு வயது பெரியவர் என்றாலும் அவரது வயதைக் குறைத்துக் கொள்வதற்காக என்னை அன்போடு அக்கா என்றழைக்கும் நமது பாசக்கார அண்ணன் CVR, முனைவர் பட்டம் பெற வேண்டி காதலைப் பற்றி செய்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைத்தான் நீங்கள் படித்தாக வேண்டும்.
சரி... ஏதோ பதில் வேண்டுமென்று போட்டிருந்தாயே அது என்ன என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. எனது பிரச்சினை இதுதான். நான் கதை எழுதினால் காதல் கதைதான் எழுதுகிறேனாம். கவிதை எழுதினால் காதல் கவிதைதான் எழுதுகிறேனாம். ஏன்? தேன்கிண்ணத்தில் பாட்டு எழுதினால் கூட காதல் பாட்டுதான் எழுதுகிறேனாம். ஏகப்பட்ட குற்றச்சாட்டு என்மேல். நீங்களே சொல்லுங்கள். தமிழ்ப்படங்களில் எதைப் பற்றி அதிகப் பாட்டுகள் இருக்கின்றன? இது என் குற்றமா இல்லை காதல் திரைப்படங்களையே கொடுக்கும் இந்த திரைப்படத்துறையின் குற்றமா? (பதிவெழுத என்னை அர்ப்பணித்துக் கொண்டதால் நான் தற்பொழுது புத்தகங்கள் படிக்க நேரம் கிடைப்பதேயில்லை என்பதை நான் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்). இல்லை தேன்கிண்ணத்தில் தத்துவப் பாடல்களாக எழுத கப்பி, ராம், புலியைப் போல் எனக்கு வயசாகி விட்டதா என்ன? பதில் கூறுங்கள் ப்ளாக் கூறும் நல்லுலகே...
பி.கு: அப்பாடா இனிமேல் காதல் கதை அதிகம் எழுதப் போறதில்லைனு சொல்றதுக்கு என்னென்ன பில்டப்பு குடுக்க வேண்டி இருக்கு... போதும் போதும்னு ஆச்சுடா சாமி... :P
Posted by இம்சை அரசி at 5:30 PM 20 comments
Labels: அனுபவம், சும்மா... லுலுலா...
Thursday, January 10, 2008
அருகாமையில் புரிவதில்லை!
அலட்சியமாய் வீசிய
பார்வைகளும்
காரணமில்லா பொய்க்
கோபங்களும்
விட்டுத்தர மறுத்த
உள்ளுணர்வுகளுமாய்
வீணடிக்கப்பட்ட நொடிகளுக்கு
அன்று ஏனோ
புரிந்ததேயில்லை...
பார்க்குமிடமெல்லாம்
தோன்றும் உன் முகம்
ஒன்றாய் கழித்த நொடிகளின்
ஞாபகத் தந்திகளை
மீட்டிச் செல்கிறது...
அருகாமையில் புரிவதில்லை
எந்த ஒரு பொருளின்
அருமையும் பெருமையும்!!
Posted by இம்சை அரசி at 9:30 PM 13 comments
Labels: கவிதை
அவள் அப்படித்தான்!!
தயாவை நினைக்கும்போது வெறுப்பாய் வருகிறது. அவளுக்குப் போய் தோழியாய் இருந்தோமே என்று என் மீதே எனக்கு வெறுப்பு வருகிறது. ச்சே! இவளெல்லாம் ஒரு பெண் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.
Posted by இம்சை அரசி at 7:59 PM 18 comments
Wednesday, January 9, 2008
அட இது சுப்ரபாதம் தானுங்க!
suprabhatam.mp3 |
எனக்கு கந்த சஷ்டி கவசம் ரொம்ப பிடிக்கும். அந்த இசை, குரல் அப்பப்பா எத்தனை தடவை வேணும்னாலும் கேக்கலாம். எங்க வீட்டுக்குப் போனா காலைல எழுந்ததும் சிஸ்டம் மூஞ்சிலதான் முழிப்பேன். கந்த சஷ்டி கவசத்த ஆன் பண்ணி விட்டுட்டுதான் ப்ரஷையே கைல எடுப்பேன். என்ன எங்கம்மாதான் திட்டுவாங்க. கந்த சஷ்டி கவசமெல்லாம் காலைல அஞ்சு மணி ஆறு மணிக்கு எழுந்து போடணும். இப்படி எட்டு மணி ஒன்பது மணிக்கு எழுந்து போடக்கூடாதுன்னு. அதையெல்லாம் நாம என்னைக்கு காதுல வாங்கி இருக்கோம்.
இப்போ கொஞ்ச நாளுக்கு முன்னாடி என் தம்பி எங்க இருந்தோ சுப்ரபாதம் ரிமிக்ஸ் புடிச்சிட்டு வந்து சிஸ்டத்துல போட்டு வச்சான். மொத தடவை கேட்டப்பவே அசந்துப் போயிட்டேன். என்ன அழகா ரிமிக்ஸ் பண்ணியிருக்காங்க பாருங்களேன். இப்போல்லாம் காலைல எழுந்ததும் இந்த சுப்ரபாதம்தான். என் மொபைல்ல அலாரத்துக்கும் இதைதான் வச்சிருக்கேன். என்ன என் ஃப்ரெண்ட்ஸ்தான் ஆஃப் பண்ணிட்டு தூங்கறதுக்கு சுப்ரபாதம் வச்சா என்ன சுசித்ரா பாட்டு வச்சா என்னன்னு ஓட்டிட்டாளுங்க. இதுக்கெல்லாம் அசந்துடுவோமா என்ன? ;)))
சரி யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் :)))
உங்களுக்கும் பிடிக்கும்னு நினைச்சு இங்க போட்டிருக்கேன். கேட்டுப் பாத்து சொல்லுங்க :)))
Posted by இம்சை அரசி at 7:06 PM 25 comments
Sunday, January 6, 2008
இதயம் ரோஜா காதல் முள் - IV
ஹலோ! நான் தாங்க வினி. இப்போதான் எங்கம்மா செஞ்ச சிக்கன் பிரியாணிய மூக்குப் பிடிக்க சாப்பிட்டு வந்து மொட்டை மாடில உக்காந்திருக்கேன். மனசுல இவ்வளவு கவலைய வச்சுக்கிட்டு எப்ப்டி உன்னால மட்டும் மூக்குப் பிடிக்க சாப்பிட முடியுது ஆச்சரியமா நினைக்காதீங்க. நீங்க ஆச்சரியப்படறதுக்கு ஒண்ணுமே இல்ல. ஏன்னா என் மனசுலதான் கவலையே இல்லையே :P இது என்னடா புது கூத்து. இந்த புள்ளக்கு என்னாச்சுனு பாக்கறீங்களா? சரிங்க. சுத்தி வளைச்சு உங்களை கடுப்பேத்தாம விஷயத்துக்கு வரேன். நேத்து நைட்டு அண்ணாகிட்ட பேசணும்னு முடிவு பண்ணி வச்சிருந்தேன். ஆனா எனக்கு ஒரு பயம். அண்ணா என்ன சொல்லுவானோன்னு ஒரு பக்கம் பயம். அண்ணா ஓகே சொல்லி எங்க அவன் இல்லைனு சொல்லிடுவானோன்னு பயம் இன்னொரு பக்கம். எதை மொதல்ல பண்ணலாம்னு எங்க வீட்டுலயே ரூம் போட்டு யோசிச்சேன்.
எப்படியும் அவன் சரி சொல்லி அண்ணா வேணாம்னு சொன்னாலும் அண்ணன சமாதானம் பண்ணப் போறோம். ஆனா அவன் சரி சொல்லி ஷ்யாம் சொல்லலைனா அது ரொம்ப கஷ்டம்னு மொதல்ல அவன்கிட்ட சொல்லிடலாம்னு முடிவு பண்ணி ஃபோன் பண்ணினேன். அவன் ஃபோன எடுத்ததும் அதுவரைக்கும் இருந்த தைரியமெல்லாம் எங்க ஓடிப் போச்சுன்னே தெரியலை. சாப்பிட்டியா சாப்பிட்டியானே நாலு தடவை கேட்டேன். அவன் ஒவ்வொரு முறையும் சாப்பிட்டேனு சொன்னதும் என்ன சாப்பிட்டனு கேட்டேன். அதுக்கு மேல பொறுக்க முடியாம ஏன்டி உளறிட்டே இருக்க?-னு கேட்டான். ஷ்யாம்! எங்க வீட்டுல எனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திருக்காங்கடா-னு சொன்னேன். அந்த பக்கம் இருந்து ஒரு பதிலும் வரலை. பையன் உங்க ஊருதான். உன்கிட்ட சொல்லிதான் விசாரிக்க சொல்லணும்னு இருந்தேன்னு சொன்னதும் அவன் ஓ! அப்படியா? அப்போ நீ ஓகே சொல்லிட்ட-ன்னு சொன்னான். குரல் அப்படியே கொஞ்சம் டல்லாயிடுச்சு. ஆமாம். பையன் சூப்பரா இருக்கான். நல்ல ஃபேமிலி. நல்ல பையன். ரொம்ப கேரிங். என்னை நல்லாப் பாத்துப்பான்-னு நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே போக ஹே! உனக்கெப்படி அவனைப் பத்தி தெரியும்? பாத்துப் பேசிட்டியா அதுக்குள்ள-னு அவன் கேட்டதுல பதட்டம் ரொம்ப நல்லா தெரிஞ்சது. எனக்கு சிரிப்பு வந்துடுச்சு. பேசிட்டியாவா? எனக்கு அவனப் பத்தி A to Z தெரியும்-னு சிரிச்சிக்கிட்டே சொன்னேன். என் சிரிப்புல உண்மைய தெரிஞ்சிக்கிட்டவன் பொய் கோழி! பொய்யாடி சொல்ற. இங்கதான வருவ. என்ன பண்றேன் பாரு-னு கத்தினான். நான் பொய் சொல்லலைடா. உண்மையாவே எனக்கு பையன் பாத்தாச்சு-னு சீரியஸா சொன்னேன். ஓஹோ! அப்படியா? பையன் பேரு என்ன? ஊரு என்ன? எங்க வேலை செய்யறான்?-னு நம்பாம கேட்டான். எங்க இருந்து தான் அப்போ எனக்கு அவ்ளோ தைரியம் வந்துச்சுனு இன்னமுமே எனக்கு தெரியலைங்க. உடனே வேகமா பையன் ஊரு கோயம்பத்தூர். வேலை செய்யறது TCSல. பேரு-ன்னு நான் இழுக்கவும் பேரு?-ன்னு ரொம்ப ஆர்வமாக் கேட்டான். உடனே எனக்கு வெக்கம் வந்துடுச்சு. ஹ்ம்ம்ம். இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு ஃபீலிங் அனுபவிச்சதே இல்ல. என்ன ஒரு நைஸ் ஃபீலிங் தெரியுமா? ஆனா அதைப் பாக்க அவன் பக்கத்துல இல்லைனுதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு :((( நேர்ல சொல்லி இருக்கலாம். நான்தான் முன்னாடியே சொல்லாம தப்பு பண்ணிட்டேன்.
அடடா! இப்படிதாங்க. ஒரு விஷயத்த சொல்றதுக்குள்ள வேற விஷயத்துக்கு போயிடுவேன். back to the matter. பேரு-ன்னு அவன் கேக்கவும் என்னால பேச முடியலை. ஏனோ கண்கள் அப்படின்னு கள்வனின் காதலி படத்துல ஒரு பாட்டு இருக்கும் தெரியுமா? அதுல ஒரு லைன் வரும். நூறு கோடி மான்கள் ஓடும் வேகம் போல இருதயம் துடிக்கிறதே அப்படின்னு. அந்த வரிய அப்போதான் அனுபவத்துல உணர்ந்தேன். அப்படியே நெஞ்சு பக் பக்குனு அடிக்குது. அந்த ஒரு நிமிஷத்துல அவன் என்ன சொல்லுவானோனு ஒரு எதிர்பார்ப்பு, ஓகே சொல்லிடுவான்ற சந்தோஷம், இல்லைனு சொல்லிட்டா-ன்ற பயம், அப்படி சொல்லிட்டா என்ன பண்றதுனு கவலை இப்படி எல்லா ஃபீலிங்ஸையும் மிக்ஸில போட்டு அடிச்சா என்ன ஃபீலிங் வரும். அதேதான் எனக்கும் இருந்துச்சு. ஷ்யாம்-னு வாய் வரைக்கும் வந்த வார்த்தை எனக்கேத் தெரியாம ஊஹூம்-ன்ற வார்த்தையா மாறிப் போய் வெளில வந்துச்சு. மேடம் வெக்கப்படறாங்கப் போல-னு அவன் சொன்னப்போ அவங்கம்மா அவனைக் கூப்பிட்ட சத்தம். grrrrrrrr....... அவன் அத்தைகிட்ட(ஹி... ஹி...) பேசிட்டு என்கிட்ட திரும்பி நான் வெளில போகணும் இப்போ. வர லேட்டாகும். சீக்கிரம் சொல்லு-னு என்னை அவசரப்படுத்தினான்.
அய்யய்யோ. நைட் வேற அண்ணன்கிட்ட பேசணுமே. அதுக்குள்ள இவன்கிட்ட பேச முடியாம போயிடுச்சுனா என்ன பண்றதுனு ஒரு பயம் வந்து வேக வேகமா நீதாண்டா-னு பட்டுனு போட்டு உடைச்சிட்டேன். ஓ! அப்படியா? சரிடி. நான் போயிட்டு வந்து பேசறேன்-னு ரொம்ப சாதாரணமா சொல்றான் மடையன். எனக்கு வந்துச்சே கோபம். டேய் நான் எவ்வளவு சீரியஸா கேட்டுட்டு இருக்கேந்னு கத்தவும் இப்ப உனக்கு என்னடி வேணும்னு கேட்டான். உன் பதில சொல்லு-னு கேட்டப்போ என் வாய்ஸ் எனக்கே கேக்கலை. ஒரு ரெண்டு செகண்ட்ஸ் யோசிச்சிட்டு என்னை ரொம்ப ஏமாத்திட்ட வினு-ன்னான். எனக்கு அப்படியே உள்ளுக்குள்ள ஏதேதோ கெமிக்கல் ரியாக்ஷன் எல்லாம் நடக்குது. கண்ணு கலங்குது. பேச்சே வரலை. அவனே உனக்குள்ள நான் வந்துட்டேன்னு எனக்கு எப்போவே தெரியும். அதே மாதிரி எனக்குள்ள நீ வந்தது உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். பட்.... ஏமாத்திட்டடி சொன்னானே பாக்கலாம். எனக்கு கோபமா வந்துச்சு. அழுகையாவும் வந்துச்சு. அப்படியே அழ ஆரம்பிச்சிட்டேன். போடா ராஸ்கல். என்னை பயமுறுத்திட்ட இல்லனு நான் அழவும் எதுக்கு இப்போ அழற? எந்த நிலைமைலயும் உன்னை விட்டுட்டு நான் போக மாட்டேன். சரியா? நீ இல்லாம, உன் செல்ல சண்டை இல்லாம, பொய்க் கோபம் இல்லாம, FM ரேடியோ மாதிரி வாய மூடாம பேசற பேச்சு இல்லாம, இழுத்து அறை விடத் தோண வைக்கற உன் அடம் இல்லாம, அட்வைஸ் பண்றதா நினைச்சு சொல்ற வெட்டி அறுவை இல்லாம, கோபப்பட்டு சிணுங்கற அந்த சிணுங்கல் இல்லாம, அறிவாளித்தனமா பேசறதா நினைச்சு என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கற இந்த அறிவு ஜீவி இல்லாம எனக்கு என்ன லைஃப் இருக்கு சொல்லு-னு மூச்சு விடாமப் பேசி முடிச்சான். அவன் பேச்சுல என் அழுகை அடங்கி வந்த பொய் கோபத்துல இதுதான் சாக்குனு என்னை நல்லா மட்டம் தட்டிட்ட இல்ல. ஊருக்கு வா உனக்கு நல்லா உண்டு-னு சண்டை போட ஆரம்பிச்சிட்டேன். அதுக்குள்ள அத்தை திரும்ப கூப்பிடவும் அப்புறம் பேசறேனு ஓடிப் போயிட்டான்.
அப்புறம் நைட் அண்ணனும் நானும் சாப்பிட்டு மொட்டை மாடிக்கு போனோம். ரொம்ப நேரம் அது இதுனு எல்லாம் பேசிட்டு இருந்தோம். எப்படி ஸ்டார்ட் பண்ணலாம்னு நான் யோசிச்சிட்டு இருந்தப்போ வினி நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு இருந்தேன்னு அவன் ஆரம்பிச்சான். என்னடா இது. அவனுக்கும் ஒரு ஸ்டோரி ஓடிருக்கும் போலனு நினைச்சுட்டே சொல்லுனு சொன்னேன். லவ் பத்தி என்ன நினைக்கறனு கேட்டான். ஹுஹாஹாஹானு விழுந்து புரண்டு சிரிக்கணும் போல இருந்துச்சு. கஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கிக்கிட்டு இதுல நினைக்க என்ன இருக்குனு நான் முடிக்கறதுக்குள்ள நினைக்க ஒண்ணும் இல்ல. ஆன செய்ய மட்டும் தெரியுதோனு சொல்லவும் ஒரு நிமிஷம் நடுங்கிப் போயிட்டேன். இன்னைக்கு மதியம் சாப்பிட்டு முடிச்சிட்டு ப்ளேட்ல ஹார்ட்டின் வரைஞ்சு அதுக்குள்ள உன் பேரையும் இன்னும் ஏதோ ஒரு பேரையும் எழுதினியே பாத்துட்டுதான் இருந்தேன்னு அவன் சிரிச்சுக்கிட்டே சொல்லவும்தான் என் பயம் போச்சு. அடியே வினிதா! இப்படியா லூசுத்தனமா செஞ்சு மாட்டிப்பனு என்னை நானேத் திட்டிக்கிட்டு அவன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னேன். சரி அம்மா அப்பாகிட்ட உனக்காக நான் பேசறேன். அதுக்கு நீ பதிலுக்கு என்ன செய்வ?-னு கேட்டான். ஒண்ணும் புரியாம முழிச்சிக்கிட்டே என்ன பண்ணனும்னு கேட்டேன். என் விஷயம்பத்தி அம்மா அப்பாகிட்ட நீதான் சொல்லணும்னு சொன்னானேப் பாக்கலாம். அடப்பாவி. என்னமோ நல்லவன் மாதிரி நடிச்ச. யாரு என் அண்ணினு கேக்கவும் அவனுக்கு வெக்கம் வந்துடுச்சு. தலையக் குனிஞ்சிட்டே உனக்கு தெரிஞ்ச பொண்ணுதான்னு சொன்னான். தோடா! உனக்கு வெக்கம் வருதானு அவன் காதை திருகி யாருனு ஒழுங்கா சொல்லுனு சொன்னான். உன் ஃப்ரெண்ட். என் ஆபிஸ்ல...னு அவன் ஆரம்பிச்சவே எனக்கு தெரிஞ்சிடுச்சு. ஓ! தெய்வா... அவதான் அந்த கல்ப்ரிட்டா. அவளைப் பேசிக்கறேனு சொன்னதும் ஆரம்பிச்சான் அவன் கதைய. ரொம்ப நேரம் உக்காந்து பேசிட்டு திரும்பி வரப்போதான் உன் ஆள் பேரென்னனு கேட்டான். ஷ்யாம்-னு நான் சொல்லவும் ஆச்சர்யமாப் பாத்தான். உன் பேரை வச்சிருந்ததாலதாண்ணா அவன மொதல்ல பாத்ததும் டக்குனு பிடிச்சதுனு சொன்னேன் :)))
இன்னைக்கு காலைல அம்மா அப்பாகிட்ட ரெண்டு பேர் விஷயத்தையும் சொல்லி சம்மதம் வாங்கியாச்சு. அவன் வீட்டுல பேசினதும்... வேறென்னங்க??? ஊஹூம். சிரிக்காதீங்க. இனிமேல் எனக்கு அவன்கிட்ட சாரி அவர்கிட்ட பேசவே நேரம் இருக்காதுன்னு நினைக்கறேன். ரொம்ப சாரிங்க. எங்க கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைப்பேன். அவசியம் வரணும் நீங்க. அண்ணனுக்கு கூட உங்களைத் தெரியுமாமே. போன வாரத்துக்கு முன்னாடி வாரம் உங்களோட பேசினானாம். அவனும் உங்களைக் கூப்பிடனும்னு சொல்லிட்டு இருந்தான். மறக்காம வந்துடுங்க. ஓகே. பைங்க. ஷ்யாம் கால் பண்றான். நான் போறேன் டேக் கேர். சீ யூ.
(சுபம்)
பி.கு: இந்த வினிதா ஒரு கற்பனை கதாப்பாத்திரம் ஆகையால் பத்திரிக்கை வரும் போய் ஒரு பிடி பிடிச்சிட்டு வரலாம்னு யாரும் கனவுல மிதக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் ;)))
Posted by இம்சை அரசி at 5:37 PM 17 comments
Labels: இதயம் ரோஜா காதல் முள்
நண்பருக்காக பதிவு போட விரும்புகிறீர்களா?
ரொம்ப நாள் கழிச்சு ஒரு ஃப்ரெண்ட்கிட்ட பேசிட்டு இருந்தேன். என் பிறந்த நாளை மறந்து போயிட்டதுக்காக ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டாங்க. நான் பெருமையா என் பர்த்டேதான் ஊருக்கே தெரியுமே. நிறைய பேர் போஸ்ட் எல்லாம் போட்டு வாழ்த்தினாங்கனு சொன்னேன். உடனே அவங்க உங்களுக்கென்னப்பா? யாருக்காவது வாழ்த்து சொல்லனும்னா உடனே ஒரு போஸ்ட் போட்டுடுவீங்க. எங்களுக்கெல்லாம் யார் இப்படி போடறாங்க? இல்ல நாங்க யாருக்காவது வாழ்த்து போஸ்ட் போடணும்னா அதுக்காக ஒரு ப்ளாக் ஆரம்பிக்க முடியுமா-னு ரொம்ப சலிச்சிக்கிட்டாங்க.
மக்கள் வருத்தப்பட்டா நமக்கு மனசு தாங்குமா? அதான் எக்கச்சக்க மீட்டிங்க் எல்லாம் போடாம, ஓவரா யோசிக்காம நம்ம உலகத்திலுள்ள நண்பர்களுக்காக நானும் அருமை நண்பர் ஜியாவும், பாசக்கார அண்ணன்கள் ராம் மற்றும் CVR (மூணு பேருக்கும் அக்கவுண்ட் நம்பர் மெயில்ல அனுப்பறேன்) சேர்ந்து ஆரம்பித்த ப்ளாக் இந்த Buddy Wishes. இதுல அப்படி என்ன இருக்குனு கேக்கறீங்களா?
ஒண்ணும் இல்லைங்க. நீங்க யாராவது உங்க நண்பருக்காக பதிவு போடவோ இல்லை வாழ்த்து சொல்லவோ இல்லை மெசேஜ் கொடுக்கவோ விருப்பப்பட்டா எங்களுக்கு மெயில் அனுப்புங்க. உங்க சார்பா இந்த Buddy Wishes ப்ளாக்ல நாங்க போட்டுடுவோம். அது மட்டுமில்லாம எங்களுக்கு கிடைக்கற நட்பு பற்றிய கவிதைகள், கதைகள் மற்றும் படங்கள்னு போடலாம்னு இருக்கோம்.
இதுக்கு உங்க பேர், உங்க ஃப்ரெண்ட் பேர், விருப்பப்பட்டால் அவங்க இமெயில் ஐடி(அவங்களுக்கும் பதிவு லிங்க் அனுப்ப) மற்றும் உங்க மெசேஜ் இதை எல்லாம் போட்டு buddywishes@gmail.com-க்கு ஒரு மெயில தட்டி விடுங்க. அதிக பட்சம் மூணு நாளுக்குள்ள உங்க போஸ்ட் வந்துடும். பிறந்த நாள் இல்லை வேற எதாவது விஷேச தின வாழ்த்துனா மூணு நாளுக்கு முன்னாடியே எப்போ போடணும்னு mention பண்ணி அனுப்புங்க. அப்புறம் வேற என்ன? அந்த பதிவோட லிங்க்க உங்க ஃப்ரெண்ட்க்கு குடுத்து சந்தோஷப்படுத்துங்க :)))
நம்ம தமிழ் பதிவர்களுக்கு சுவரொட்டி அப்படின்னு ஒரு வலைப்பூ இருக்கறது தெரிஞ்சது தானே!!
அப்போ இதுக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம்னு கேக்கறீங்களா??
இது நம்முடைய தமிழ் தெரியாத நண்பர்களுக்கும், பதிவர்களாக அல்லாத நண்பர்களுக்கும் முக்கியமாக ஆரம்பிக்கப்படுவது. அதனால உங்க்களுக்கு இருக்கற தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் அல்லது வேற ஏதாவது பிற மொழி நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கனும்னா கூட எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பலாம்!!
Posted by இம்சை அரசி at 3:30 PM 12 comments
Labels: புதுசு கண்ணா புதுசு
நான் வெகுவாய் ரசித்த பாடல்
என் டீம் மேட் அவ ரிங் டோனா இந்த பாட்டு வச்சிருந்தா. அவளுக்கு ஃபோன் வரும்போதெல்லாம் இந்த பாட்டு கேட்டு கேட்டு எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. ரொம்ப நல்ல இசை. ஸ்ரேயா கோஷல் குரலுக்காகவே எத்தனை தடவை வேணும்னாலும் கேக்கலாம். வரிகள் நல்லா இருக்குனு அவ சொன்னா. ஆனா எனக்கு ஒரு ரெண்டு மூணு வரிகள்தான் புரிஞ்சிது. ஒரு நாளைக்கு கொறைஞ்சது அஞ்சு தடவையாவது கேட்டுடுவேன். நான் அடிக்கடி வச்சுக் கேட்டு கேட்டு என் ஃப்ரெண்ட்க்கும் பிடிச்சிடுச்சு. அவள பாட்டு போடுடினு சொன்னா இந்த பாட்டு தான் போட்டுவா. இந்த பாட்டுக்காகவே படமும் பாத்தேன்னா பாத்துக்கங்க எனக்கு எவ்ளோ பிடிச்சதுனு :)
Posted by இம்சை அரசி at 1:54 PM 17 comments
Tuesday, January 1, 2008
இதயம் ரோஜா காதல் முள் - III
அப்பாடா! உங்களப் பாத்து ரெண்டு வாரம் ஆச்சுல்ல. என்னங்க பண்றது? எல்லாம் இந்த இம்சையாலதான். அடடா! இம்சை அரசிய சொல்லலைங்க. அவங்க எவ்ளோ நல்லவங்க... வல்லவங்க... எவ்ளோ பெரிய அறிவாளி... திறமைசாலி... பொறுமையானவங்க... பொறுப்பானவங்க... அமைதியானவங்க... அவங்களப் போய் இப்படியெல்லாம் சொல்லுவேனா? நான் சொன்னது என்னைப் பிடிச்சு ஆட்டற இம்சை... அதான் அந்த இம்சை புடிச்சவன் ஷ்யாம்...
உங்ககிட்ட பேசிட்டு இருந்தப்போ அவன் யாரோ ஒரு பொண்ணு கூட வரானு பயந்துட்டு இருந்தேன் இல்ல. அந்த பொண்ணு அவனோட வேலை செய்யற பொண்ணாம். ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்டுனு சொன்னான். இருந்தாலும் என்னை விட க்ளோஸா இருக்க மாட்டானு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன் :))) அவ உடனே கிளம்பிட்டா. அன்னைக்கு படம் பார்த்துட்டு பீச் போனோம். அவன் கையப் பிடிச்சிட்டு பீச்ல கால் நனைய நடக்கற சந்தோஷத்த அனுபவிச்சிட்டு இருந்தப்போதான் பேசாம நாமளே சொல்லிடலாமானு தோணுச்சு. நீ கல்யாணத்தப் பத்தி என்ன நினைக்கறனு மெல்ல பேச்ச ஆரம்பிச்சேன். கல்யாணம்னு ஒரு ரெண்டு நிமிஷம் சீரியஸா யோசிச்சான். எனக்கு வரவ என்னை நல்லா புரிஞ்சவளா இருக்கணும். என் ஃபேமிலியோட நல்லா மிங்கிள் ஆகி எங்க வீட்டுப் பொண்ணு மாதிரி பாசமா இருக்கணும். எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டா என் சந்தோஷத்தை கொண்டாடி, என் துக்கத்துல ஆறுதலா இருந்து, என் தப்பையெல்லாம் செல்லமா குட்டி ஒரு புன்னகையோட சரி செய்யறவளா இருக்கணும்னு சொன்னான். சொல்லிடு சொல்லிடுனு மனசு சொன்னாலும் வாய் மட்டும் திறக்கவே மாட்டேன்றது. நான் என்னதான் பண்ணுவேன். சரி எதாவது கேக்கணுமேனு யாரையாவது லவ் பண்ணியிருக்கியா ஷ்யாம்னு நான் கேட்டதும் என்னை முறைச்சான். ஹே! என் டீம் மேட் ப்ளாக் எழுதறா இல்ல. அதுக்கு எதாவது கதை தேறுமானு கேட்டேன்பானு நான் சமாளிச்சேன். உடனே என்னைப் பாத்து அவன் சிரிச்சப்போ எனக்கு ரொம்ப பயமாயிடுச்சு. வேற எதாவது இருக்குனு சொல்லிடுவானோனு நெஞ்சு படபடனு அடிச்சுக்குது.
சொல்லுடானு நான் அவசரப்படுத்தவும் முகத்த சோகமா வச்சிக்கிட்டு எனக்கு ஏகப்பட்ட காதல் கதை இருக்கு. ஆன எல்லாமே ஃபெயிலியர் லவ்ஸ்னு அவன் சொன்னதும் எனக்கு மனசு இன்னும் பக் பக்குனு அடிச்சது. சரி ஒவ்வொண்ணா சொல்லுனு நான் கஷ்டப்பட்டு எதையும் வெளில காட்டிக்காம சாதரணமா கேட்டேன். நான் பத்தாவது படிக்கறப்போ சிம்ரன் சிம்ரன்னு ஒரு பொண்ண லவ் பண்ணினேன். ஆனா அந்த பொண்ணு அப்போ வேற ஒருத்தர லவ் பண்ணுச்சுனு சொன்னாங்க. கொஞ்ச நாள் அப்படியே சோகத்துல இருந்தேன்னு அவன் சொன்னதும் எனக்கு கோபம் தலைக்கேறுச்சு. நான் முறைக்கவும் இரு இரு. இன்னும் கதை இருக்கு. சொல்றத முழுசா கேளுடி. அதுக்கப்புறம் பன்னெண்டாவது படிச்சப்போ ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா ராய்னு ஒரு பொண்ண லவ் பண்ணினேன். அந்த பொண்ணும் வேற ஒருத்தர லவ் பண்ணிடுச்சு. அந்த சோகமும் தாங்க முடியாம என் நெஞ்சே வெடிச்சுடுச்சு. ஆனாலும் என் வாழ்க்கைல இவ்ளோ சோகம் இருக்க கூடாதுனு சாமிகிட்ட எல்லாம் சண்டை போட்டேனு அவன் ரொம்ப சோகமான குரல்ல சொல்லவும் நான் பயங்கர கடுப்பாகி பட்பட்டுன்னு நாலு சாத்து சாத்தினேன். ஹே! இது மாதிரி இன்னும் எவ்ளோ சோகம் இருக்கு தெரியுமா? இதுக்கே இவ்ளோ சலிச்சுக்குற. கஷ்டப்பட்ட எனக்குதான தெரியும்னு அவன் சொல்லி முடிச்சப்போ அவன் பைக்கிட்ட வந்துட்டோம். சரி நேரமாச்சுனு கிளம்பினோம். வண்டில போகும்போது எப்படி சொல்றதுனு நான் யோசிச்சிட்டே வந்தேன். அவனும் எதுமே பேசலை. அமைதியாவே வந்தான்.
சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு போனோம். இப்போ எப்படியாவது சொல்லிடணும்னு லவ் பத்தி என்ன நினைக்கற ஷ்யாம்னு கேட்டேன். அவன் ஒரு ஸ்மைல் பண்ணினான். நான் சீரியஸா கேக்கறேனு சீரியஸா முகத்த வச்சுக்கிட்டு சொன்னேன். சரி நீ ஃபர்ஸ்ட் சொல்லு. நீ என்ன நினைக்கறனு கேட்டான். இவங்க கூட நாம ஃலைப் லாங்க் இருக்கணும்னு தோணற ஃபீலிங்னு நான் சொன்னதும் அது ஃப்ரெண்ட்ஸ் கூடவும் லைப் லாங்க் இருக்கலாமேனு சொன்னான். இது ஃப்ரெண்ட்ஷிப்பையும் மீறிய ஒரு ஃபீலிங். இவங்க மட்டும்தான் அந்த இடத்த ஃபில் பண்ண முடியும்னு தோணுது பாத்தியா. அதானு நான் சொன்னதும் மறுபடியும் அவன் சிரிச்சான். போடா எனக்கு சொல்லத் தெரியல. பட் இட்ஸ் அ நைஸ் ஃபீலிங்னு நான் சொன்னேன். சோ நீ யாரையோ லவ் பண்ற. அம் ஐ ரைட்?-னு அவன் கேக்கவும் எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை. கோழி திருடுனவளாட்டம் முழிச்சேன். நல்லா மாட்டிக்கிட்டேனு முழிச்சிட்டே சமாளிக்க நீ யாரையாவது லவ் பண்றியானு கேட்டேன். நான் கேட்டதுக்கு பதில் சொல்லுனு அவன் சீரியஸா கேக்கவும் இதுக்கு மேல மறைக்க முடியாதுனு யெஸ்னு சொன்னேன். யாருனு அவன் கேக்கவும் நான் பதில் சொல்லாம நான் கேட்டதுக்கு மொதல்ல பதில் சொல்லுனு கேட்டேன். அவன் ஒரு நிமிஷம் டேபிள்ல வச்சிருந்த கையவே பாத்துட்டு இருந்தான். அப்புறம் ஆமாம். நானும்தான்னு சொன்னான். எனக்கு அப்படியே சந்தோஷமாயிடுச்சு. இருந்தாலும் வேற யாராவதா இருந்துட்டானு ஒரு பயமும் வந்துடுச்சு. நான் அவள ரொம்ப சீரியஸா லவ் பண்றேன். அவ இல்லைனா எனக்கு லைஃபே இல்லைனு நினைச்சுட்டு இருக்கேனு அவன் சொன்னப்போ அவங்க வீட்டுல இருந்து அவனுக்கு ஃபோன் வந்துச்சு. அவன் தாத்தாவுக்கு ரொம்ப சீரியஸ்னு உடனே கிளம்பி வர சொன்னாங்க. அதனால என்னை ஆட்டோ பிடிச்சு ஹாஸ்டல் போக சொல்லிட்டு அவன் உடனே கிளம்பி போயிட்டான். இன்னும் ஹாஸ்பிட்டல்லதான் இருக்காங்க. தாத்தாவுக்கு இப்போ பரவால்லையாம். ஃபோன் பண்ணினப்ப சொன்னான். சரி இந்த நேரத்துல அதைப் பத்தி கேக்க வேணாம்னு நான் கேக்கலை.
எனக்குதான் சோறு தண்ணி இறங்க மாட்டேன்றது. அவன் சொன்னது என்னைதான்னும் ஒரு வேளை வேற யாராவதா இருக்குமோனு மனசு ரெண்டா பிரிஞ்சு உக்காந்து பட்டிமன்றம் நடத்தி என்னைப் பாடாபடுத்துது. இந்த வாரம் ஊருக்கு போறேன். அண்ணன் வரான். அவன்கிட்ட இதை சொல்லப் போறேன். அவன்கிட்ட பேசினாதான் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கும். பட் நேர்ல பாத்து பேசணும்னுதான் போறேன். அவன் வேற என்ன சொல்வானோனும் பயமா இருக்கு. காதல்ல விழுந்தா இப்படிதான் பயந்து பயந்தே சாகணும்னு எதாவது எழுதி வச்சிருக்குப் போல. பாவம்பா லவ் பண்றவங்க. அதும் நான் ரொம்ப பாவம். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்னு சும்மாவா சொல்லி வச்சிருக்காங்க. சரி விடுங்க. விட்டா நான் உக்காந்து ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிடுவேன். உங்களுக்கு நியூ இயர் செலிப்ஸ் எப்படி போச்சு? நல்லா எஞ்சாய் பண்ணினிங்களா? Happy New Year!!! நான் வரேங்க. இன்னொரு நாள் பாப்போம். பை.
தொடரும்...
Posted by இம்சை அரசி at 8:33 PM 15 comments
Labels: இதயம் ரோஜா காதல் முள், தொடர் கதை