Thursday, January 24, 2008

பழைய பாடல்களா???


பழைய பாடல்களா என்று எதற்குக் கேள்விக்குறி போட்டிருக்கிறேன் என்று யோசிக்க வேண்டாம். ச்சும்மா போட்டு வைத்தேன். என் அப்பா பழைய படங்கள் மற்றும் பாடல்களின் தீவிர ரசிகர். நான் கோவித்துக் கொண்டால் என்னைப் பார்த்து "ஏன் பிறந்தாய் மகளே! ஏன் பிறந்தாயோ!!" என்றுப் பாடுவார். உடனே நான் சிரித்து விடுவேன். என் அம்மா எதற்காகவாவது வருந்தினால் "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் சொட்டுதடி" என்றுப் பாடுவார். இப்படியே அதிகம் கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ எனக்கு பழையப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். என் மனம் கவர்ந்த அன்றும் இன்றும் என்றும் நான் ரசித்த ரசித்துக் கொண்டிருக்கும் ரசிக்கும் பாடல்களைப் பற்றி எழுத வேண்டுமென்று நெடுநாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்குத்தான் இந்தப் பதிவு.

பழையப் பாடல்கள் என்று சொன்னதும் உடனடியாய் என் நினைவுக்கு வருவது "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்றப் பாடல்தான். காதலை சொல்வதற்கு இதை விட சிறந்த சிறிய வரி இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. இதற்காக கண்ணதாசனை எண்ணிப் பலமுறை வியந்திருக்கிறேன். இதற்கு சரி நிகராய் இருக்கும் பாடல் "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் சொட்டுதடி" கேட்கும்போதே எனக்கு கண்கள் கலங்கும்.

என்ன காரணமென்றே தெரியாது. "கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா" பாடலும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதோ ஏனோ தெரியவில்லை. சிவாஜி காதல் பாட்டு பாடினால் கூட அது எனக்கு தத்துவப் பாட்டுப் போலவே தோன்றும். எம்.ஜி.ஆர் தத்துவப் பாட்டுப் பாடினால் கூட அது காதல் பாட்டுப் போலவே தோன்றும்.

சிவாஜியின் "பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்தப் பறவைகளே" பாடல் கல்லூரி நண்பர்கள் பிரிவிற்காக அன்றே வெளிவந்தப் பாடல். சிறு வயதில் கல்லூரி முடித்து வரும்போது கட்டாயம் பாட வேண்டும் என்று எண்ணி வைத்திருந்தேன். அதற்குள் நான் பள்ளி முடிக்குமுன்பே "முஸ்தபா முஸ்தபா"-வும் கல்லூரி முடிப்பதற்குள் "மனசே மனசே மனசில் பாரம்"-மும் வந்து எனது திட்டத்தைக் கெடுத்து விட்டன.

ஒரு ஜாலியான ரொமான்டிக் பாட்டு. இதைப் பார்க்கும்/கேட்கும் போது எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தாலும் பார்த்த/கேட்டப் பின் ஜாலியான ஒரு மனநிலைமைக்கு கொண்டு வந்து விடும். அதாங்க "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம். கண் தேடுதே சொர்க்கம்". சரோஜா தேவி அழகோ அழகு அந்தப் பாட்டுல. இதே மாதிரி எம்.ஜி.ஆரோட "சர்க்கரைக்கட்டி ராஜாத்தி என் மனச வச்சுக்கோக் காப்பாத்தி" என்ற பாடல். இதில் சரோஜா தேவி பாடும் "அத்தை மகனே அத்தானே... உன் அழகைக் கண்டு நான் பித்தானேன்" என்ற வரிகளை வைத்துத்தான் எனது ஒரு கதைக்கு அத்தை மகனே அத்தானே என்று பெயரிட்டேன். இதே வரிசையில் "தொட்டால் பூ மலரும்", "குமரிப் பெண்ணின் உள்ளத்திலே" பாடல்கள்.

ஜெமினியின் சாந்தி நிலையம் படத்தில் "இயற்கை என்னும் இளையக் கன்னி" பாடலும் மிகவும் பிடித்தப் பாடல். இதுதான் SPBயின் முதல் பாடல் என்று கேள்விப்பட்டேன். அதேப் படத்தில் முதலாவதாய் வரும் பாடல் "இறைவன் வருவான். அவன் என்றும் நல்வழித் தருவான்" பாடலும் இன்றைய "அன்பென்ற மழையிலே" பாடலைப் போன்ற ஒரு அருமையானப் பாடல். ஜெமினியின் பலப் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதிலும் ரொம்ப ஸ்பெசல் என்றால் ஜெமினி, சாவித்திரி நடித்த "அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ" பாடல். கேட்கும்போதெல்லாம் அதன் இசைக்கு மயங்காமல் இருந்ததே இல்லை. ஜெமினியின் "வளர்ந்த கதை மறந்து விட்டாள் கேளடா கண்ணா" குழந்தையிடம் சொல்வதுப் போல கணவன் மனைவி பிரச்சினையை பற்றிப் பேசும் பாடல்.

பத்மினிக்கும் இன்னொரு பெண்ணுக்கும் போட்டி நடனம் ஒன்று வரும். "சாதுர்யம் பேசாதேடி. என் சலங்கைக்கு பதில் சொல்லடி" என்று கூட வரும். முதல் வரி மறந்து விட்டது. அருமையான பரதநாட்டியம். பரதம் என்று சொன்னதும் முதலில் நினைவுக்கு வருவது "மறைந்திருந்தேப் பார்க்கும்" பாடலும் "நலந்தானா" பாடலும்தான். இந்தப் பாடலை எந்த அளவு ரசித்தேன் என்று என்னுடைய அழகென்ற சொல்லுக்குப் பதிவில் சொல்லி இருந்தேன்.

சிவாஜியின் "யாரடி நீ மோகினி" பாடல் வெகுவாய் ரசித்துப் பார்த்த ஒன்று. "மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்" இதை ரசிக்காதவர் எவரும் இருக்கவே முடியாது. சிவாஜிப் பாடல்களிப் பற்றி பேசும்போது என் தோழி ஒரு பாட்டு சைக்கிள்ல போயிட்டே பாடுவாரே என்று முதல் வரி யோசிக்கவும் நானும் "மனிதன் மாறி விட்டான்" என்று பாடினேன். உடனடியாய் அவள் "மரத்தில் ஏறி விட்டான்" என்று பாடினாளேப் பார்க்கலாம். உடனே இன்னொருத்தி ஓடி வந்து அவன் என்ன குரங்கா? அது மரத்தில் இல்ல மதத்தில் என்றுத் திருத்தினாள். அதைக்கேட்டு அவள் முழித்த முழி இருக்கிறதே. எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்தப் பாடலும் அட்டகாசமானப் பாடல். "அந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை"

காதல் பாடலில் ஒரு அருமையானப் பாடல் "ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் ப்பெயர் என்ன" பாடல். அதில் காதலில் தொடங்கி திருமணம் அதன் பின் வரும் பந்தம் என எல்லாவற்றையும் சொல்லும் பாடல். ஜெயசங்கரின் "அன்புள்ள மான்விழியே" பாடலும் இனிமையானப் பாடல்.

தோல்விப் பாடல்கள் என்றதும் நினைவுக்கு வருவது "அவள் பறந்துப் போனாளே", "எங்கிருந்தாலும் வாழ்க". சோகப் பாடல்கள் எக்கச்சக்கம். "நெஞ்சம் மறப்பதில்லை", "மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா","சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே" நமக்கே கண்ணீர் வந்து விடும்.

ரொம்ப ரொம்ப ஜாலியான மற்றும் அடிக்கடி நான் முணுமுணுக்கும் பாடல் "மாடி மேல மாடிக் கட்டி கோடி கோடி சேர்த்து வைத்த சீமானே" பாடல். நல்ல ஒரு நகைச்சுவைப் பாடல். எனது பள்ளித் தோழி ஒருத்தியின் தந்தைப் பெயர் விஸ்வநாதன். தாயார் பெயர் இசைவாணி. நானும் இன்னொருத் தோழியும் அடிக்கடி "விஸ்வநாதன் வேலை வேண்டும் இசைவாணி சோறு வேண்டும்" என்று அவளைப் பார்த்துப் பாடிக் கொண்டிருப்போம் :)))

நாகேஷின் பெரும்பான்மையானப் பாடல்கள் அட்டகாசனாய் இருக்கும். அதிலும் முக்கியமாய் "எதிர் நீச்சல்" படப் பாடல்கள். சிவக்குமாரின் "கந்தன் கருணை" படத்தில் "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் முருகா" பாடல் இன்றும் பெரும்பான்மையானோர் சினிமாவில் வெளிவராத பக்திப் பாடல் என்றே எண்ணியிருக்கின்றனர். அதேப் படத்தில் "மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு... நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு" எனக்கு மிக மிகப் பிடித்தமானப் பாடல்.

இன்னும் எக்கச்சக்கமாய் இருக்கின்றன. "அன்று வந்ததும் அதே நிலா" மற்றும் "அதோ அந்தப் பறவைப் போல ஆட வேண்டும்" பாடல்களோடு முடித்துக் கொள்ளலாமென்று மேடம் முடிவு செய்து விட்டார்கள். உங்களுக்கும் இந்த பாடல்கள் எல்லாம் எவர்க்ரீன் ஃபேவரைட்டாக இருக்கும் என்று நினைக்கிறேன் :))))

உங்களுக்குப் பிடித்தப் பாடல்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த பாடலை பாடல் வரிகளுடன் கேட்க விரும்பினால் தேன்கிண்ணத்தில் நேயர் விருப்பத்தின் மூலம் தெரியப்படுத்துங்கள். பிறகு பாடலை வரிகளுடன் ரசித்து மகிழுங்கள் :)))

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :)))

23 comments:

மங்களூர் சிவா said...

மீ த பர்ஸ்ட்டா???

Unknown said...

அது "கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே" என தொடங்கும்...
எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்!!
அப்புறம் ம்ம்ம்!!!!!!!!!!!!!!
1. P.B.Srinivas அவர்களின் பாடல்கள். அதிலும் ஜெமினி, ஸ்ரீனிவாஸ் காம்பினேஷன் சூப்பர்!! உ.தா. "வளர்ந்த கதை மறந்து விட்டாய் கேளடா கண்ணா" கேட்டுகொண்டே இருக்கலாம்!!!
2. உத்தமபுத்திரன் " யாரடி நீ மோகினீ"
3. மன்மத லீலையை வென்றார் உண்டோ
4. நவராத்திரி படத்தில் சாவித்ரியும் சிவாஜியும் பாடும் கூத்து பாடல்..எனக்கு அந்த பாடலின் வரிகள் மறந்து போச்சு :(( ஆனால் மிகவும் ஜாலியான ஒரு பாடல் அது!!!

இப்போ இவ்ளோதான் அப்பறம் இன்னும் யோசிச்சு திரும்பவும் வறேன்!!!!

Yogi said...

எனக்கு எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்

"அத்திக்காய் காய் காய்"

:)

ஜே கே | J K said...

கலெக்சன் நல்லா இருக்கு.

நிஜமா நல்லவன் said...

////நானும் இன்னொருத் தோழியும் அடிக்கடி "விஸ்வநாதன் வேலை வேண்டும் இசைவாணி சோறு வேண்டும்" என்று அவளைப் பார்த்துப் பாடிக் கொண்டிருப்போம் :)))///



'இம்சை அரசி தினம் ஒரு பதிவு வேண்டும்'

G.Ragavan said...

ஆகா... பழைய பாட்டுன்னா எனக்கும் பிடிக்கும். மெல்லிசை மன்னர் இசையில வெளிவந்த பாடல்கள்னா ரொம்பவும் பிடிக்கும்.

நீங்க சொன்ன மாதிரி "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"னு காதலை வேற யாரும் எளிமையாச் சொல்லலை.

சொல்லியிருக்குற எல்லாப் பாட்டுகளுமே எனக்குப் பிடிக்கும்.

Dreamzz said...

//என்ன காரணமென்றே தெரியாது. "கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா" பாடலும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதோ ஏனோ தெரியவில்லை//
எனக்கும் பிடிச்ச பாட்டுங்க இது :)

Dreamzz said...

பழைய பாடல் பற்றிய அருமையான தொகுப்பு..

Anonymous said...

lisi nalla iruku. en mahan(6 yr old)pattu padava parthu pesava, rombar rsithu padum(fulla thappa) tune mattum than sariya irukum.
-isthri potti

Anonymous said...

//4. நவராத்திரி படத்தில் சாவித்ரியும் சிவாஜியும் பாடும் கூத்து பாடல்..எனக்கு அந்த பாடலின் வரிகள் மறந்து போச்சு :(( ஆனால் மிகவும் ஜாலியான ஒரு பாடல் அது!!!//


raajadhi raaja mahaa.. rajapradhaban .. appadinnu aarambikkum. :)

Iyappan Krishnan said...

/4. நவராத்திரி படத்தில் சாவித்ரியும் சிவாஜியும் பாடும் கூத்து பாடல்..எனக்கு அந்த பாடலின் வரிகள் மறந்து போச்சு :(( ஆனால் மிகவும் ஜாலியான ஒரு பாடல் அது!!!//

நீங்கள் கேட்ட நவராத்திரி பாடல்.

http://movies-tv-songs.com/SongsNew/Songs/SivajiHits/Navaraathiri/RajaRajaMaharaja.MP3

Anonymous said...

மிகவும் அருமையான தொகுப்பு

ஜி said...

:)))) nice collection

Anonymous said...

நல்ல முயற்சியிது...

வாத்திய இசையில் வார்த்தைகள் களவு போகும் இக்காலக்கட்ட பாடல்களை ஒப்பிடும் போது அக்காலக் கட்டத்தில் வந்த கண்ணதாசனின் பெரும்பாலான பாடல்கள் அருமையானவை என்று நிச்சயம் கூறலாம்..'தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு'....

ரசிகன் said...

எனக்கு ஏதோ.. நீங்க பிறந்த காலத்துக்கு போயிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்கு..:P

Anonymous said...

very nice collectin

Anonymous said...

"இந்த பச்சை கிளிகொரு" என்றொரு பாடல்..(எம் ஜி ஆர் படம் என்று ஞாபகம்..)

பாடியவர் வரலக்ஷ்மி என்று நினைக்கிறேன்... everlasting song என்பார்களே... அந்த வகையை சார்ந்த இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

Anonymous said...

சரி பாட்டி, போதும்!! போதும்!!!

Sanjai Gandhi said...

//என்னைப் பார்த்து "ஏன் பிறந்தாய் மகளே! ஏன் பிறந்தாயோ!!" என்றுப் பாடுவார்//

டூ லேட் --- இது உங்க அப்பாவுக்கு. :P

S.Muruganandam said...

பண்டைய நாட்களில் திங்கள் அன்று இரவு சென்னை அலைவரிசை -1 ல் இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை பழைய பாடல்கள் மட்டுமே ஒலி பரப்புவார்கள், அப்படியே ஊர் சந்தடி அடங்கிய அந்த வேளையில் சுகமாக அந்த பாட்டுக்களைக் கேட்டுக்கொண்டே அப்படியே தூங்கிய நாட்களும் உண்டு.

உங்கள் பதிவைப் படித்த போது அந்த நாள் ஞாபகம் தான் வந்தது. வாழ்த்துக்கள்.

ஆனால் இப்போது பழைய பாடல்கள் கேட்டால் என் மக்கள் பழங்கஞ்சி என்கிறார்களே அது ஏன்?

ஸ்ரீ said...

அழகான தொகுப்பு எனக்கும் பழைய பாடல்கள் மேல் தான் அதிக நாட்டம். கண்ணதாசனை சொல்ல வந்துவிட்டு
1.மாலைப்பொழுதின் மயக்கத்திலே, 2.நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்,
3.காலங்களில் அவள் வசந்தம்,
4.கொடியசைந்ததும் காற்று வந்ததா,
5.இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா,
6.உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல,
7.தூங்காத கண்ணென்று ஒன்று,
8.பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது,
9.ஞாயிறு என்பது கண்ணாக,
10.மலர்ந்த்தும் மலராத,

எனக்கு மிகவும் பிடித்தவை இவை.
இவைகளை மறந்துவிட்டீர்களா? கண்ணதாசன் எல்லா பாட்டுமே அழகு தான். சொல்ல வேண்டுமானால் எல்லாவற்றையும் தான் நாம் குறிப்பிட வேண்டும்.

Anonymous said...

பத்மினிக்கும் இன்னொரு பெண்ணுக்கும் போட்டி நடனம் ஒன்று வரும். "சாதுர்யம் பேசாதேடி. என் சலங்கைக்கு பதில் சொல்லடி" என்று கூட வரும். முதல் வரி மறந்து விட்டது. அருமையான பரதநாட்டியம். பரதம் என்று சொன்னதும் முதலில் நினைவுக்கு வருவது "மறைந்திருந்தேப் பார்க்கும்" பாடலும் "நலந்தானா" பாடலும்தான். இந்தப் பாடலை எந்த அளவு ரசித்தேன் என்று என்னுடைய அழகென்ற சொல்லுக்குப் பதிவில் சொல்லி இருந்தேன்.

the anotther girl... is

i feel she is vaijayanthimala

Hindu Marriages In India said...

Nanru.