Thursday, January 10, 2008

அவள் அப்படித்தான்!!


தயாவை நினைக்கும்போது வெறுப்பாய் வருகிறது. அவளுக்குப் போய் தோழியாய் இருந்தோமே என்று என் மீதே எனக்கு வெறுப்பு வருகிறது. ச்சே! இவளெல்லாம் ஒரு பெண் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.

நானும் தயாமலரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாய் படித்து வந்தோம். எனது அப்பாவும் அவளது அப்பாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதாலோ என்னவோ நாங்களிருவரும் நெருங்கிய தோழிகளாகவே இருந்து வந்தோம். எனக்கு பல முறை இந்த சந்தேகம் வந்ததுண்டு. உண்மையிலேயே நாங்களிருவரும் நண்பர்களா இல்லை இந்த நட்பு எங்கள் மீது திணிக்கப்பட்டதா என்று. அவளுக்கு எப்படியோ தெரியாது ஆனால் என்னால் அவளை விட்டு இருக்க முடியாது.

அவளது குணம் மிகவும் வித்தியாசமானது. எனக்கே கூட பல சமயங்களில் விசித்திரமாய்தானிருக்கும். பொதுவாக எல்லாருக்கும் பிடித்த விஷயங்கள் அவளுக்கு பெரும்பாலும் பிடிக்காது. அவளுக்கு பிடித்த விஷயங்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்கு பிடிக்காததாய்தானிருக்கும். கல்லூரியில் சேர்ந்ததும் சீனியர் வைத்த அறிமுகக் கூட்டத்தில் ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த நடிகர் ரஜினி, கமல், அஜித், விஜய், மாதவன் என்ரு சொல்ல இவள் மட்டும் பிரகாஷ்ராஜ் என்றாள். அதற்கு ஒரு சீனியர் நாங்கள் ஃபேவரைட் ஹீரோவைக் கேட்டோம் என்றதற்கு இல்லையே பிடித்த நடிகர் என்றுதானே கேட்டீர்கள். நடிகர் என்றால் ஹீரோ மட்டும்தானென்று அர்த்தம் அல்ல என்று வெடுக்கென்று சொன்னாள். பர்ஸ்ட் இயட்லயே திமிரைப் பாரேன் என்று மற்ற சீனியர்கள் பேசியது என் காதிலேயே விழுந்தது. என் வகுப்பு தோழிகள் என்னிடம் வந்து ஏன் அப்படி சொன்னாள் என்று கேட்டதற்கு எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. "அவள் அப்படித்தான்" என்று பதிலுக்கு அவஸ்தையாய் சிரித்து வைத்தேன்.

இதே போல் மெஸ்ஸில் அனைவரும் ஞாயிறு காலை ப்ரெட் போடுவதை நிறுத்த வேண்டும் என்று வார்டனிடம் கோரிக்கை வைக்க இவள் மட்டும் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ப்ரெட் போட வேண்டும் என்று கோரிக்கை வைத்தாள். இதனால் ஒட்டு மொத்த ஹாஸ்டல் மக்களின் கோபமும் இவள் மீது திரும்பியது. என்னதான் கோபம் வந்தாலும் அவளிடம் கேட்க பயப்படுவார்கள். முகத்திலடித்தாற்போல் ஏதேனும் சொல்லி அசிங்கப்படுத்தி விடுவாளோ என்று. இந்த முறையும் என்னிடம்தான் கெட்டார்கள். அவள் ஏன் அப்படி செய்கிறாள். உனது தோழிதானே. எடுத்து சொல்லலாம் அல்லவா என்று. எனக்குத்தான் சங்கடமாய் போயிற்று. இம்முறையும் அதையே சொன்னேன் "அவள் அப்படித்தான்".

அவள் யாரையும் இதுவரை அதுபோல் அவமானபப்டுத்தியதில்லை. என்றாலும் அவள் மேல் ஒரு பயம். அதற்கு காரணம் அவளது தைரியம். எனக்கு தெரிந்து அவள் எதற்கும் பயந்தது கிடையாது. யாரேனும் செய்தது தவறு என்று தோன்றினால் அதை நேரடியாய் கேட்டு விடுவாள். அவளது இந்த குணம் தெரிந்தபடியால் அனைவரும் அவளிடம் சற்று விலகியே இருந்தார்கள். அவளும் அவர்களிடம் நன்றாக பேசுவாள். ஆனால் எல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டுதான். இதுவரை அவள் ஏதேனும் செய்திருந்தால் எனக்கு கோபம் வரும். ஆனால் எல்லாம் இரண்டு நிமிடத்திற்குதான். அவள் குணம் அப்படி என்று விட்டு விடுவேன். சில சமயங்களில் இப்படி எல்லாம் செய்யாதேடி என்று சொல்லலாம் என்று தோன்றும். ஆனால் அவளைப் பொறுத்தவரை என்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறால் என்று இதுவரை எனக்குத் தெரியாது. அதனால் எதுவும் நான் சொல்வதில்லை. அவளது நட்புப் பட்டியலில் என் இடம் எதுவென்று அறிந்துக் கொள்ளும் ஆர்வம் எனக்குண்டு. ஆனால் கேட்கும் தைரியம் இருந்ததில்லை.

ஆனால் இன்று கேட்டு விட வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறேன். அவள் என்னுடனான நட்பை முறித்துக் கொண்டு போனாலும் பரவாயில்லை. பாவம் ஸ்ரீதர். எங்கள் வகுப்பின் ஹீரோ. அனைவருக்கும் அவனை மிகவும் பிடிக்கும். படிப்பிலும் சரி. பாரபட்சமில்லாமல் எல்லாருடனும் பழகுவதிலும் சரி. அவனை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அவனது கெட்ட நேரம் தயாவின் மீது காதல் வயப்பட்டது. எங்கள் வகுப்பில் அநேகம் பேருக்கு இது அரசல் புரசலாய் தெரிந்த விஷயம். ஆனால் அவள் இதைப் பற்றி கண்டு கொண்டதில்லை. இன்று மதியம் வகுப்பிலிருந்து திரும்பி வரும்போது அவளுடன் பேசிக் கொண்டே நடந்து வந்தவன் அவனது காதலை அவளிடம் சொல்லி விட்டான். அதற்கு அவள் அவனைப் பிடித்து கிழி கிழியென்று கிழித்து விட்டாள். நான் யாருனு தெரியும? எங்கப்பா எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? என்னை லவ் பண்ற அளவுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? என்று அவனது வீட்டு நிலமையை சொல்லித் திட்டி விட்டு சென்று விட்டாள். மற்றவர் முன் அவன் கூனி குறுகி நின்றதைப் பார்த்த போது பாவமாக இருந்தது. போயும் போயும் இந்த ராட்சசியிடம் போய் பழகினோமே என்று என்னை நானே நொந்து கொண்டு அறைக்கு திரும்பி விட்டேன்.

வசதியில்லாக் குடும்பத்தில் பிறந்தது அவன் தவறா? பிடிக்கவில்லையென்றால் இல்லையென்று நாசுக்காக சொல்லிவிட்டு வந்திருக்கலாமே. ஏன் இப்படி அவமானப்படுத்தினாள்? சத்தம் கேட்கிறது. அவள்தான் வந்து விட்டாள். உள்ளே நுழைந்த போது கையில் வைத்திருந்த புத்தகத்தில் பார்வையை படர விட்டேன். மனம் எவ்வாறு ஆரம்பிப்பது எப்போது ஆரம்பிப்பது என்று வேகமாக யோசித்துக் கொண்டிருந்தது. அவள் அழைத்த குரல் கேட்டு மெல்ல நிமிர்ந்துப் பார்த்தேன்.

"இன்னைக்கு மதியம் ஸ்ரீதர்..." அவள் முடிக்குமுன்

"எனக்குத் தெரியும். நானும் அங்கதான் இருந்தேன்" என்று நான் முந்திக் கொண்டேன். அவள் எதுவும் சொல்லாமல் கட்டிலுக்குச் சென்று குப்புறப் படுத்துக் கொண்டாள்.

"என்ன இருந்தாலும் நீ பண்ணினது ரொம்ப தப்பு தயா. பிடிக்கலைனா பிடிக்கலைனு நாசுக்காக சொல்லிட்டு வந்திருக்கலாமே. இப்படி வசதி பாத்துதான் பழகுவனு இத்தனை நாள் எனக்குத் தெரியாமப் போச்சு. உன் ஃப்ரெண்டுனு சொல்லிக்கவே எனக்கு அசிங்கமா இருக்கு. ச்சே" என்று நான் சொன்னதும் மெல்ல தலையைத் தூக்கி இரு நொடிகள் என்னைப் பார்த்தாள். பின் மீண்டும் தலையணையின் மீது தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். அவள் உடல் குலுங்கவும்தான் அவள் அழுகிறாள் என்பதை உணர்ந்தேன். எனக்குள் ஏதோ ஒன்று உருகியது. இது நாள் வரை அவள் அழுது நான் பார்த்ததே இல்லை. ஓடிச் சென்று அவளருகில் உட்கார்ந்து அவள் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அவளது தலையை பரிவாய் தடவிக் கொடுத்தேன். என்னை அப்படியே கட்டிக் கொண்டு சிறிது நேரம் அழுதாள். பின் அழுகையினூடே

"அவன அவங்க வீட்டுல எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கறாங்கனு எனக்குத் தெரியும். அதனாலதான் இல்லைனு நாசூக்கா சொல்லலை. அப்படி சொல்லியிருந்தா அவன் திரும்ப வந்து என்ன கன்வின்ஸ் பண்ணவோ இல்ல என்னை லவ் பண்ன வைக்கவோதான் ட்ரை பண்ணுவான். நான் இப்படி சொன்னா என்னை ரொம்ப கேவலமா நினைக்க ஆரம்பிச்சிடுவான். என் மேல ஒரு வெறுப்பும் வந்துடும். அதனால நான் இல்லைன்றது அவனுக்கு பெரிய ஒரு இழப்பா தெரியாது. அதான் அப்படி சொன்னேன். எல்லாரும் என்னை இப்படி தப்பாதான் நினைப்பாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா மத்தவங்க நினைக்கறாங்கங்கறதுக்காக அவன் வாழ்க்கைய ஸ்பாயில் பண்ண நான் விரும்பலை. ஏதோ என்னைப் பொறுத்த வரைக்கும் என்னால முடிஞ்ச ஒரு நல்லது பண்ணியிருக்கேன் அவ்வளவுதான்" என்று தேம்பினாள்.

எனக்கு என்ன சொல்வதன்றே தெரியவில்லை. அவன் நல்லதிற்காக செய்தவளை இப்படி தவறாகப் பேசி விட்டோமே என்று வருந்தினேன்.

"சாரிடி. நான்தான் தப்பா நினைச்சுட்டேன்" என்று மனதார மன்னிப்புக் கேட்டேன். அவள் அழுகை தொடர்ந்தபடியே இருக்கவும்

"அவன் நல்லதுக்குதானே இப்படி பண்ணின. அப்புறம் ஏன் அழற?" என்று கேட்டேன்.

"அதுக்காக நான் அழலை. எல்லாரும் என்னைத் தப்பா நினைப்பாங்கன்ன்னு நினைச்சப்போக் கூட நீ மட்டும் என்னைத் தப்பா நினைக்க மாட்ட. புரிஞ்சிப்பனு நினைச்சேன். ஆனா என் ஒரே ஃப்ரெண்ட் நீயே..." என்று அவள் தேம்பவும் எனக்கு மனம் ஆகாயத்தில் பறந்தது. எனக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் நான் தவறாக நினைத்ததற்காக இப்படி அழுவாள் என்று எண்ணும்போது உலகின் மொத்த சந்தோஷமும் எனக்குள் பூத்தது. அவள் தலையைப் பரிவுடன் தடவிக் கொடுத்து ஆயிரம் மன்னிப்புகள் கேட்டு சமாதானப்படுத்தினேன். அவள் சமாதானமடைந்து அப்படியே தூங்க ஆரம்பித்தாள். மெஸ்ஸில் மாலைத் தேநீருக்கான மணியடிக்கவும் எங்கள் இருவருக்கும் வாங்கி வருவதற்காக வெளியில் வந்தேன். என்னைப் பிடித்து இழுத்துச் சென்ற என் வகுப்புத் தோழிகள்

"உன் ஃப்ரெண்டு ஏன்டி இப்படி இருக்கா? பாவம் ஸ்ரீதர். பிடிக்கலைனா பிடிக்கலைனு சொல்லிட்டு வந்திருக்கலாம்தான. இவ்வளவு கேவலமா அவன அசிங்கப்படுத்திட்டா" என்று அவர்கள் அடுக்கிக் கொண்டே போகவும் எனக்கு கோபம் வந்தது.

"ஹே" என்று நான் விளக்கம் சொல்ல ஆரம்பித்தபோது என்ன சொன்னாலும் இவர்களுக்கு அவளைப் புரியாது என்று எனக்குத் தெளிவாக தெரிந்தபடியால்

"அவள் அப்படித்தான்" என்று சொல்லிவிட்டு எழுந்து வந்தேன். இம்முறை சொன்னபோது முழுக்க முழுக்க சந்தோஷமாய் மட்டுமே சொன்னேன்.

18 comments:

லக்ஷ்மி said...

வழக்கமான காதல் இல்லாம இந்த முறை நட்பா? சூப்பரா இருக்கு. முடிவு கடைசி வரை யூகிக்க முடியாததா இருக்கறதே கதையோட பலம்னு நான் நினைக்கறேன். கலக்கல்பா..

நிஜமா நல்லவன் said...

"இம்சை இப்படித்தான்!!" சொல்லுற மாதிரி எப்ப பார்த்தாலும் ரொம்ப நல்ல கதையா எழுதுறீங்க.

Dreamzz said...

கதை அருமையா இருந்துச்சுங்க! சூப்பர்!

CVR said...

சூப்பரு கதை!!
Nicely narrated!!

Rock on!! B-)

Unknown said...

Very good narration

இம்சை அரசி said...

// Blogger லக்ஷ்மி said...

வழக்கமான காதல் இல்லாம இந்த முறை நட்பா? சூப்பரா இருக்கு. முடிவு கடைசி வரை யூகிக்க முடியாததா இருக்கறதே கதையோட பலம்னு நான் நினைக்கறேன். கலக்கல்பா..
//

நன்றி லஷ்மி :)))

இனிமேல் காதல் கதைகள் எழுதறது இல்லைனு முடிவு பண்ணியிருக்கேன் :)))

இம்சை அரசி said...

// Blogger NejamaNallavan said...

"இம்சை இப்படித்தான்!!" சொல்லுற மாதிரி எப்ப பார்த்தாலும் ரொம்ப நல்ல கதையா எழுதுறீங்க.
//

ஆஹா...
ரொம்ப நன்றிங்க :)))

இம்சை அரசி said...

// Blogger Dreamzz said...

கதை அருமையா இருந்துச்சுங்க! சூப்பர்!
//

நன்றி Dreamzz :)))

இம்சை அரசி said...

// Blogger CVR said...

சூப்பரு கதை!!
Nicely narrated!!

Rock on!! B-)
//

நன்றி அண்ணா :)))

இம்சை அரசி said...

// Blogger Nagarajan said...

Very good narration
//

thk u Nagarajan :)))
keep coming :)))

மங்களூர் சிவா said...

கதை சூப்பர்.
சாகித்ய அகடமிக்கு அனுப்பலாம்!! (நன்றி கோவி.கண்ணன்)

மங்களூர் சிவா said...

ப்ரெட் என்ன ஆச்சு????

மங்களூர் சிவா said...

வாரத்திற்கு இரண்டு முறை போட்டது நிறுத்தினார்களா இல்லையா???

மங்களூர் சிவா said...

ஸ்ட்ரைக் எதும் பண்ணலையா???

G.Ragavan said...

நல்லாருக்கு கதை. மிகவும் ரசித்தேன். நல்ல பாத்திரங்கள். அதைப் பயன்படுத்திய விதமும் நன்றாக இருக்கிறது.

Nazeer Ahamed said...

It's really nice Jayanthi... Daya simply superb...

தமிழ் முகம் said...

கதையில் கொஞ்சம் செயற்கை தனம் இருக்கிறது. பராவாயில்லை. நன்றி. தமிழ்-முகம்

Saravanan said...

nice story. Good flow. Nice thoughts from Imsai