Tuesday, October 7, 2008

பேரம் பேசறதுல கில்லாடியா நீங்க??

பேரம் பேசி வாங்கறதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். கொஞ்சம் பயமும் கூட.எங்க ஊர்ல சனிக்கிழமை மட்டும்தான் சந்தை கூடும். நான் அஞ்சாவது படிச்சப்போ இருந்து எங்கம்மாக் கூட சந்தைக்குப் போக ஆரம்பிச்சேன்(அப்போ இருந்தே வீட்டு வேலைக் கத்துக்கோன்னு ஒரே அர்ச்சனை... இருந்தாலும் ஒண்ணுமே கத்துக்காம சாதிச்சிட்டோமில்ல). காய் வாங்கும்போது எந்த காய் எப்படி எப்படி பாத்து வாங்கணும்னு சொல்லிக் கொடுப்பாங்க. ஒரு கடைலக் கூட அட்லீஸ்ட் ஒரு ஐம்பது பைசாவாவது குறைச்சுக் கேட்காம வாங்க மாட்டாங்க. எனக்கு ஒரே எரிச்சலா வரும். ஏம்மா! சூப்பர்மார்க்கெட்ல போய் வாங்கறீங்கல்ல. அங்கல்லாம் பேரம் பேச மாட்டிங்க. இங்க மட்டும் வந்து நல்லா கேளுங்க. எவ்ளோ பாவம் இவங்கனு எங்கம்மாட்ட சண்டைப் போடுவேன். சூப்பர்மார்க்கட்ல எல்லாம் விலை கரெக்டா வச்சிருப்பாங்க. இங்க எல்லாம் அவங்க சொல்றதுதான் விலை. அதனால இஷ்டத்துக்கு சொல்லுவாங்கனு எங்கம்மாவும் எதேதோ காரணம் சொல்லுவாங்க. ஆறாவ்து போனதுக்கப்புறம் என்னை தனியா சந்தைக்கு அனுப்ப ஆரம்பிச்சிட்டாங்க. நான் போனப்போ குறைச்சுக் கேட்டுப் பாப்பேன். முடியாதுனு சொல்லிட்டாங்கனா எதும் பேசாம அவங்க சொன்ன விலைக்கு வாங்கிட்டு வந்துடுவேன்.



காலேஜ்-ல என் ஃப்ரெண்ட் யசோ சூப்பரா பேரம் பேசுவா. ஒரு தடவை திருச்சில பர்மா பஜார் போனோம். ஒரு கடைல ட்ரெஸ் வாங்கலாம்னு போய் ட்ரெஸ் எல்லாம் செலக்ட் பண்ணி வச்சுட்டோம். அவ மெல்ல இது எவ்ளோங்கனு கேட்டா. இருநூறு ரூபாய்னு அவர் சொன்னதும் ஒரு ரெண்டு செகண்ட் யோசிச்சவ எழுபத்தைஞ்சு ரூபாய்க்குக் குடுங்கனு கேட்டாளே பாக்கலாம். எனக்கு உதற ஆரம்பிச்சிடுச்சு. அவர் எதாச்சும் கேவலமா திட்டிடப் போறாரோனு ஒரே பயம் எனக்கு. அவரோ கூலா அவ்ளோ கம்மியா எல்லாம் குடுக்க முடியாது. வேணா நூத்தி எண்பதுக்கு தரேனு சொன்னார். இவ உடனே சரி வாடி போலாம்னு என் கையப் பிடிச்சு இழுக்க அவர் வேகமா நூத்தி ஐம்பது குடுத்துட்டு எடுத்துக்கங்க. அதுக்கு மேலக் குறைக்க முடியாதுனு சொன்னார். திரும்பி இவ பேச அவர் பேச ரெண்டு பேரும் பேசி கடைசில தொண்ணூறு ரூபாய்க்கு அந்த ட்ரெஸ்ஸ வாங்கிக் குடுத்தா. நான் ஆ-னு வாயப் பொழந்துக்கிட்டு பாத்துக்கிட்டு இருந்தேன். நல்லவேளை போன ஜென்மத்துல நான் செஞ்ச புண்ணியமமோ என்னவோ வாய்க்குள்ள ஈ போகல.ஹி... ஹி...



அதுல இருந்து அவளோட போகும்போதெல்லாம் ஒரெ உதறலாதான் இருக்கும். என்னைக்கு எவன்கிட்ட அடி வாங்கப் போறோமோனு. நீயும் எங்கம்மாவும் ஒண்ணுடி. கஷ்டப்படறவங்ககிட்டதான் போய் பேரம் பேசுவீங்கனு சொன்னதுக்கு கோனார் நோட்ஸ் கணக்கா விளக்கவுரை சொன்னா. ஒரு தடவ ஒரு கடைல அவ எதோ வாங்கிட்டு இருந்தப்போ ஒருத்தர் பயங்கரமா பேரம் பேசி குறைச்சு வாங்கிட்டுப் போனாராம்.அவர் போனதுக்கப்புறம் அவர்ட்ட வியாபாரம் பண்ணினவரை கூட இருந்தவர் திட்டினாராம். எப்போமே எல்லாரும் பேரம் பேசதான் செய்வாங்க. இதுக்கு தான் நீ ஒரு நூறு ரூபா இருநூறு ரூபா அதிகம் சொல்லி இருக்கணும்னு. அதைக் கேட்டதுல இருந்துதான் இவ இப்படி ஆயிட்டாளாம். பாருங்க ஒவ்வொருத்தரும் நிறைய ஹிஸ்டரி வச்சிருக்காங்க :P.



இப்படியே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்லி வச்சதுல பேரம் பேசறதுனாவே ஒரு பயம் வந்து ஐ மீன் பேரமோஃபோபியா வந்து ஃபிக்சட் ரேட் கடைகங்களுக்கு மட்டுமேப் போயிருந்தேன். பெங்களூர்ல MG ரோடுக்கு ஒரு தடவை ஷாப்பிங் போயிருந்தோம். ரொம்ப ஆசையா ஒரு துப்பட்டா வாங்கினேன். விலை எவ்ளோனு கேட்டதும் நூத்தி இருபது ரூபானு சொல்லிட்டு இன்னொருத்தவங்களுக்கு துணி எடுத்து காட்டப் போயிட்டான். என் ஃப்ரெண்டு பக்கத்துல இருந்து மெதுவா எண்பது ரூபாய்க்கு கேளுடி கேளுடினு இடிக்கறா. எனக்கு பேரமோஃபோபியா வந்து உதற ஆரம்பிச்சு மெல்ல அவகிட்ட நீயே கேளுடி செல்லம்ன்னு நான் சொல்லி முடிக்கறதுக்குள்ள அவன் திரும்பி வந்துட்டான். அவன் நான் என்ன சொல்லுவேனு என்னையப் பாக்கறான் அப்புறம் துப்பட்டாவப் பாக்கறான். இவளா வாயத் தொறக்க மாட்டேங்கறா. எனக்கு ஒரே கடுப்பு. சரி நாமளே டீல் பண்ணிக்கலாம்னு நூறு ரூபாய்க்கு குடுங்கனு மெல்ல கேட்டேன். இருந்தாலும் திட்டிப்புடுவானோனு உள்ளுக்குள்ள ஒரே பயம். அவன் உடனே எதும் பேசாம சரிங்க மேடம்னு சொல்லிட்டான். எனக்கா என் மேலயே கோபம் கோபமா வருது. அடியே அவ சொன்ன மாதிரி எண்பது ரூபாய்க்கு கேட்டிருக்க மாட்டனு. அந்த பக்க திரும்பினா அவ மொற மொறைனு மொறைக்கிறா. அப்புறம் என்ன? நூறு ரூபாயக் குடுத்துட்டு துப்பட்டாவ வாங்கிட்டு வந்துட்டேன். வர வழியெல்லாம் அதுக்கு அர்ச்சனை. நாம வாழ்க்கைல வாங்காத அர்ச்சனையா? ப்பூனு ஊதி தள்ளிக்கிட்டே வந்து சேர்ந்துட்டேன்.



இப்படியாப்பட்ட என்னோட பேரம் பேசற ஹிஸ்டரி தெரியாம என் வீட்டுக்காரர் நாங்க சென்னை வீடு பால் காய்ச்சறதுக்கு முன்னாடி நாள் பூ வாங்கக் கூட்டிட்டுப் போனார். அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தின்றதால அன்னைக்கு பூ விலை எக்கச்சக்கம். ஃபர்ஸ்ட்டே அவர் பேரம் பேசி ஒரு முழத்துக்கு இவ்ளோனு குறைச்சிட்டார். ஆஹா! நம்மாளு என்னமா பேரம் பேசறாருனு சந்தோஷத்துல அப்படியே வேடிக்கைப் பார்த்துட்டு நின்னுட்டு இருந்தேன். அந்தம்மா பூவைக் குடுத்துட்டு மொத்தம் நூத்தி முப்பத்தைஞ்சு ரூபானு சொன்னுச்சு. இவர் அதெல்லாம் முடியாது நூத்திப் பதினைஞ்சு ரூபாதானு மொட்டையா சொன்னார். உடனே அந்தம்மா சாமிப் பூ தொண்ணுத்தி அஞ்சு ரூபா. மல்லிகைப் பூ நாப்பது ரூபா. அப்ப மொத்தம் நூத்தி முப்பத்தைஞ்சு ரூபானு சொன்னுச்சு. நான் மனசுக்குள்ள வேக வேகமா கணக்குப் போட்டேன். 95+40 = 135 தான சரியாதான் அந்தம்மா சொல்லி இருக்குனு சரியா கணக்குப் போட்ட எனக்கு ஒரு சபாஷ் சொல்லிக்கிட்டு ஆமாங்க நூத்தி முப்பத்தைஞ்சு ரூபாதானு சொல்லிட்டேன்.நான் சொன்னதால அந்தம்மா அதுக்கு மேல இறங்காம அப்படியெ பிடிச்சுக்கிச்சு. சரினு அவரும் நூத்தி முப்பத்தைஞ்சு ரூபா குடுத்துட்டு பூ வாங்கிட்டு வந்தார். பைக்ல போகும்போது அடியேய்! நான் நூத்தி பதினைஞ்சுதான் குடுப்பேனு சொல்லிட்டிருக்கேன். நீ நூத்தி முப்பத்தைஞ்சு ரூபாதானு சொல்றன்னு ஆரம்பிச்சார். அய்யோ! நான் அதை சொல்லலைங்க. 95+40 = 135 அப்படினு அந்த அம்மா சொன்ன கணக்கு சரினு சொன்னேன். மத்தபடி வேற எதுவும் சொல்லலைனு அப்பாவியா சொன்னேன். ஆண்டவா! இவள வச்சுக்கிட்டு நான் எப்படி பொழைக்கப் போறேனோனு சொல்லி அன்னைக்கு சிரிச்சவர்தான். என் ஃப்ரெண்ட்ஸ் முதற்கொண்டு எல்லார்ட்டயும் இந்த விஷயத்த சொல்லி சிரிச்சு சிரிச்சு மானத்த வாங்கறார் :(((. நீங்களே சொல்லுங்க. இது என் தப்பா இல்ல என்னோட பேரம்ப்ப்ஃபோபியா பத்தி தெரிஞ்சுக்காம பேரம் பேசக் கூட்டிட்டுப் போன அவரோட தப்பா? அவர் மேல தப்ப வச்சுக்கிட்டு என்னை சொல்லி சொல்லி சிரிக்கறார். என்ன கொடுமை சார் இது?!!

23 comments:

இவன் said...

மீ த first??

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ.....

நான் முந்தியெல்லாம் கில்லாடியா இருந்து இப்ப அடங்கிப்போயிட்டேன்.
கல்யாணம் ஆன புதுசுலே வீட்டுவாசலில் கீரைக்காரம்மாகிட்டே 'நாலணாவுக்குக் கீரை கொடுங்க. நாங்க ரெண்டேபேர்தான் அதனாலே கொஞ்சமாக் கொடுங்க'ன்னு சொல்லிப் பேரம் பேசி இருக்கேன்.

rapp said...

நானெல்லாம் இப்டி பேரம் பேசி கெட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கறதுல பேர் போனவள், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............

ஆயில்யன் said...

//நான் செஞ்ச புண்ணியமமோ என்னவோ வாய்க்குள்ள ஈ போகல.ஹி... ஹி.../

இதுக்கெல்லாமா புண்ணியம் செஞ்சிருக்கணுமா அக்கா!?? அச்சச்சோ! நானும் கடைத்தெரு சுத்தறச்ச ரெண்டு மூணு வாட்டி ஈ போயிருக்கே :((( (நொம்ப பாவம் செஞ்சுருக்கேன் போல )

ஆயில்யன் said...

//எல்லார்ட்டயும் இந்த விஷயத்த சொல்லி சிரிச்சு சிரிச்சு மானத்த வாங்கறார் :(((. //

அக்கா அதெல்லாம் ஒண்ணுமில்லக்கா!! மாமுவவிட நீங்க நொம்ப புத்திசாலின்னு எல்லார்க்கிட்டயும் பெருமை சொல்லிக்கிணு திரியறாக போல :)))))

rapp said...

நியாய தர்மப்படி பார்த்தா பெண்களுக்குத்தான் விஞ்ஞானப்பூர்வமா இந்த டெக்னிக் supera இருக்கணும், ஆனா இப்போல்லாம் எதுக்கு இந்த கணவர்கள் உஷாரா இருக்காங்கன்னே எனக்கும் புரியல:(:(:(

வெண்பூ said...

//பேரம் பேசறதுனாவே ஒரு பயம் வந்து ஐ மீன் பேரமோஃபோபியா வந்து ஃபிக்சட் ரேட் கடைகங்களுக்கு மட்டுமேப் போயிருந்தேன்//

சேம் பிளட்... :))

உங்களுக்கு பேரம் பேச தெரியாதுன்றது கொஞ்சம் நம்புற மாதிரி இல்லை.. இப்படி ஒரு மொக்க போடுற பார்ட்டியா இருக்குற நீங்க கடைக்காரனுங்கள உண்டு இல்லைன்னு பண்ணிட மாட்டீங்க.. :))

Prabakar said...

அட பாவமே என்ன கொடுமைங்க இது .. இந்த காலத்தில் நல்லதுக்கே காலம் இல்லை . ஹி ஹி ஹி

Divyapriya said...

ஹீ ஹீ :-D சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ் தான் :)

விஜய் ஆனந்த் said...

:-)))...

" பேரமோஃபோபியா "...

இது நல்லா இருக்கே!!!

Vijay said...

என்னது பேரம் பேசத்தெரியாத பெண்ணா. உலகத்தின் முதல் அதிசயமே நீங்க தாங்க.

Sundar சுந்தர் said...

//ஆண்டவா! இவள வச்சுக்கிட்டு நான் எப்படி பொழைக்கப் போறேனோனு சொல்லி அன்னைக்கு சிரிச்சவர்தான்.//
:) அவர் நெலம எனக்கு புரியுது.

மொக்கைச்சாமி said...

பேரமோஃபோபியா இருந்தா கடைக்கு போனோமா...கேட்ட காசை கொடுத்தோமா... கம்ம்னு வந்தோமான்னு இருக்கணும். வேற யாரவது பேரம் பேசும்போது நடுவுல பேசினா இப்படித்தான்...
காலேஜ் படிக்கும் போது டெல்லி டூர்ல தொப்பி வாங்க கடைக்கு போய், தெரியாத பாஷையில பேரம் பேசி கடைசியில கடைகாரன் திட்டி தொப்பி வாங்காமையே வந்துட்டேன் (அசிங்கமா திட்டினான்னு நினைக்கறேன், நமக்கு தான் ஹிந்தி தெரியாதே அதனால பெருசா பீல் பண்ணலே. துடைச்சி போட்டுட்டு வந்துட்டேன்)

கோபிநாத் said...

//ஆண்டவா! இவள வச்சுக்கிட்டு நான் எப்படி பொழைக்கப் போறேனோனு சொல்லி அன்னைக்கு சிரிச்சவர்தான்.//

;-)))))

பாவம்மா அவரு ;))

MyFriend said...

யக்கா...

நாளைக்கு போன் பன்றப்போ மாமாட்ட போன் கொடுங்க. இந்த காமெடியை அவர் வாயாலேயே கேட்டு நான் சிரிக்கணும்க்கா. :-)

MSK / Saravana said...

//வெண்பூ said...
உங்களுக்கு பேரம் பேச தெரியாதுன்றது கொஞ்சம் நம்புற மாதிரி இல்லை.. இப்படி ஒரு மொக்க போடுற பார்ட்டியா இருக்குற நீங்க கடைக்காரனுங்கள உண்டு இல்லைன்னு பண்ணிட மாட்டீங்க.. :))//

கண்ணா பின்னாவென்று ரிப்பீட்டுகிறேன்..

MSK / Saravana said...

//பேரம் பேசறதுனாவே ஒரு பயம் வந்து ஐ மீன் பேரமோஃபோபியா வந்து ஃபிக்சட் ரேட் கடைகங்களுக்கு மட்டுமேப் போயிருந்தேன்//

எனக்கும் கொஞ்சம் பேரமோஃபோபியா உண்டு..

MSK / Saravana said...

// விஜய் said...
என்னது பேரம் பேசத்தெரியாத பெண்ணா. உலகத்தின் முதல் அதிசயமே நீங்க தாங்க.//

கன்னா பின்னாவென்று கண்மூடித்தனமாக வழிமொழிகிறேன்..

MSK / Saravana said...

//Sundar said...

//ஆண்டவா! இவள வச்சுக்கிட்டு நான் எப்படி பொழைக்கப் போறேனோனு சொல்லி அன்னைக்கு சிரிச்சவர்தான்.//
:) அவர் நெலம எனக்கு புரியுது.//

ஹி ஹி ஹி

Anonymous said...

இன்னும் சிரிச்சிகிட்டு இருக்கிறேன். இவ்ளோ அப்பாவியா இருக்கியே கண்ணு

Unknown said...

பாவம்தான் அவரு :)
ஆனா, இனிமே உஷாரா இருப்பாரு.

நானெல்லாம் பேரம் ஆளுக்குத் தக்க பேசுவேன். ஒரு தொகைக்கு மேலதான் பேரமே. எங்க அப்பா பேரம் பேசுறதுக்கு முன்னாடி, பட்டேல்கள் பிச்சை வாங்கனும். 100 ரூபா கடைக்காரன் சொன்னா, கூசாம 5 ரூபாய்க்குக் கேப்பாரு :)

kavidhai Piriyan said...

Ungalukku Beram pesa teriyudho illa yo..aana ..adhai vechi ariumai ya Blog poda teriyum enbadhu Unmaiye !!!Arumai !!!

Thamira said...

ரசனையும், நகைச்சுவையும் கலந்தவை உங்களது பதிவுகள். ரசித்தேன்.

நிஜத்தில் வெண்பூ சொல்வது போலத்தான் நீங்கள் இருப்பீர்கள் எனத் தோன்றுகிறது.