Friday, August 29, 2008

சென்னையில் மீண்டும் சுனாமி வரப் போகிறதா?

ரெண்டு வாரமா வாழ்க்கையே ஒரே சோகமயமா இருக்கு :((( ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பொட்டிக் கட்டிட்டு வந்து பெங்களூர்ல வந்து இறங்கினப்ப இருந்து இந்த ரெண்டு வருஷ பெங்களூர் வாழ்க்கையும் கண்ணு முன்னாடி கொசுவர்த்தி சுத்திக்கிட்டே இருக்கு. ஏன் இவ்ளோ ஃபீலிங்கா விட்டுட்டு இருக்கேனு பாக்கறீங்களா?

மேடம்க்கு சென்னை ட்ரான்ஸ்பர் கிடைச்சுடுச்சு. எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர் பெங்களூர்னாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒருத்தர் சென்னைல இருக்கறதால ஆபிஸ்ல டேமேஜர்ட்ட நாலு மாசமா சண்டைப் போட்டு சென்னி மாநகரத்துக்கு புலம் பெயருகிறேன். வர திங்கள் கிழமைல இருந்து சென்னை வாசியாகப் போகிறேன்.

எங்க குட்டி ராஜ்ஜியத்தின் சக ராணிகள் மூணு பேரு(என் ரூமீஸ்), ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி, அங்கிள், அவங்களோட பொண்ணுங்க, வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற எல்லம்மாள் கோவில், எப்போ போனாலும் சொந்தக்காரரப் போல பாசமா விசாரிக்கிற மளிகை கடை அங்கிள், குட்டி உலகம் போல இருக்கற என் ஆபிஸ், ஆபிஸ் ஃப்ரெண்ட்ஸ், க்யூட்டான என்னோட க்யூபிக்கிள், சைக்கிள் ரைடிங்ல சிலிர்க்க வச்ச பனிக் காற்று, குளிருக்கு இதமா கம்பளிய இழுத்துப் போர்த்தி தூங்கற சுகம், காலைல பதினொரு மணி வரைக்கும் நிம்மதியா தூங்கினத் தூக்கம், நேரம் காலம் தெரியாம ஆபிஸில் கழித்த பொழுதுகள்(எல்லாம் ப்ளாக்-காகத்தான்), ப்ரெண்ட்ஸோட ஜாலியா ஊர் சுத்தின பொழுதுகள், கன்னட வாசம் வீசும் BMTC பஸ் பயணங்கள், மாமியார், நாத்தனார், அருண் அண்ணா, மீராக் குட்டி, அன்பு நண்பன் ஜி, பாசமிகு அண்ணன்கள் ராம், அய்யப்பன், அருணா அண்ணி, ஜெயஸ்ரீ குட்டி இப்படி பல விஷயங்களை மிஸ் பண்ணப் போறேனு நினைக்கும்போது அழுகையா வருது.

இம்சை ஸ்டாப் யுவர் சென்டி-னு நீங்க கத்தறது காதுல விழுது. எதுக்கு "சென்னையில் மீண்டும் சுனாமி வரப் போகிறதா?"-ன்னு டைட்டில் வச்சனு நீங்க கேக்கறதும் தெரியுது. ட்ரான்ஸ்பர் கன்ஃபார்ம் ஆனதும் சென்னை நட்புகளுக்கு ஃபோனப் போட்டு சொன்னதுக்கு அவங்க சொன்னது "சோ சுனாமி அகைன் பேக் டு சென்னை"-னு பயங்கரமா ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............ பாருங்க.... அப்பாவி பச்சப் புள்ளயப் பாத்து இப்டில்லாம் சொல்லலாமா? நீங்களே சொல்லுங்க.

Tuesday, August 19, 2008

The 3 mistakes of my life...

ஹி... ஹி... அப்படி என்ன மூணு மிஸ்டேக்ஸ் பண்ணினேன்னு பாக்கறீங்களா? மூணே மூணு மிஸ்டேக்ஸ் மட்டும் பண்ற அளவுக்கு நான் ஒண்ணும் கஞ்சம் பிடிச்சவ இல்ல. எண்ண முடியாத அளவுக்கு சராமரியா மிஸ்டேக்ஸா பண்ணிக் குவிப்போமில்ல... ;))) சரி மேட்டருக்கு வருவோம்.

லாங் லாங் அகோ... ஒன்ஸ் அப்பான் அ டைம் எப்போ பாத்தாலும் புக்கும்(ஒன்லி ஸ்டோரி புக்ஸ்) கையுமாதான் இருப்பேன். சாப்பிடறப்போ படிக்காதனு எங்கம்மாட்ட டெய்லியும் திட்டு வாங்குவேன். அப்படி இருந்த நான் காலெஜ் முடிச்சிட்டு வேலைல சேர்ந்ததும் ஆபிஸ்ல வாங்குற ஆப்புகளுக்கு நடுலயும் என் பணி ப்ளாக் எழுதிக் கிடப்பதே-னு சபதம் எல்லாம் போட்டு என்னை முழுசா ப்ளாக்குக்கு அர்ப்பணிச்சிட்டதால(யாரு அங்க உன்னோடுதான் என் ஜீவன் பார்ட் III எங்கனு கேக்கறது?) புத்தகம் படிக்கறப் பழக்கத்த விட்டுட்டேன். எனக்கே ஷேம் ஷேமாதான் இருக்கு. என்ன பண்றது? இந்த ப்ளாகுக்காக எல்லாத்தையும் தியாகம் பண்ண வேண்டியதா போயிடுச்சு.... ஓகே ஓகே... பேக் டு தி மேட்டர்...

இது ரொம்ப காலத்துக்கு அப்புறமா நான் படிச்ச ஒரு புக். Chetan Bagat-ன்றவரு எழுதின புக். என் டீம்மேட்கிட்ட(ஒரு போஸ்ட்டுக்கு கவிதை எழுதி தந்தாரில்ல. அவரு) இருந்து சுட்டுட்டுப் போய் படிச்சேன். எனக்கு ரொம்ப பிடிச்சது. உங்களோட ஷேர் பண்ணலாம்னுதான் இந்த போஸ்ட்.

அவருக்கு வர தற்கொலை மெயிலோட ஸ்டார்ட் ஆகுது கதை. அந்த மெயில் அனுப்பின பையனைத் தேடிப் போய் ஹாஸ்பிட்டல்ல அவனைக் கண்டுபிடிச்சு அவன்கிட்ட கதையக் கேட்டு எழுதற மாதிரி நாவலை ஃப்ரேம் பண்ணி இருக்காரு. அவனை மீட் பண்ணினதுக்கப்புறம் அவனே கதைய நேரேட் பண்றான்.

அப்பா வேற ஒரு பெண்ணோட போயிட ஸ்நேக்ஸ் பிசினஸ் பண்ற அம்மாவோட ஒரே பையனான கோவிந்த் பட்டேல் தான் கதையோட ஹீரோ. ஆஸ்ட்ரேலியா பீச் அழகிகளைப் பாக்கும்போது கூட மேத்ஸ் கால்குலேஷன்தான் வருதேனு அவனே நொந்துக்கற அளவுக்கு ஒரு maths lover. அவனோட கனவு ஒரு பெரிய பிசினஸ்மேன் ஆகணும்ன்றது. அவனோட உயிர் தோழர்களான இஷானையும் ஓமியையும் கூட்டா வச்சிக்கிட்டு ஒரு கடை திறக்கறான். கிரிக்கட் பைத்தியத்தால மிலிட்டரி வேலையை விட்டுட்டு ஓடி வந்த இஷானோட திருப்திக்காகவும் சில பல பிசினஸ் கால்குலேஷன்ஸாலயும் ஸ்போர்ட்ஸ் கடை ஆரம்பிக்கறாங்க. பிஸினெஸ்-ல வர பணத்தை பெருசா எடுக்காத இஷான், ஓமி, ஓமியோட மாமா கொண்டு வர அரசியல், குஜராத் நிலநடுக்கம், குஜராத் ரயில் குண்டுவெடிப்பு, மேத்ஸ் டியூஷன் எடுக்கப் போயி இஷானோட தங்கைகிட்ட வர காதல், அதனால இஷானோட வர பிரச்சினைகள் இப்படி பல பல காரணங்களால அவனும் அவன் பிஸினெஸும் என்ன ஆகுதுன்றதுதான் கதை. தங்கையோட தனக்கிருந்தக் காதல் தெரிஞ்சதுல இருந்து மூணு வருஷமா இஷான் பேசாம இருந்து ஒரு கட்டத்துல இஷான் "dishonest"-னு இவனை சொன்னதால ரொம்ப மனசு உடைஞ்சுப் போய் தற்கொலை பண்ணிக்கப் போயிடறான். கடைசில நம்ம Chetan அவனைக் கண்டுபிடிச்சு அவனோட ஃப்ரெண்டையும் காதலியையும் அவனோட சேர்த்து வைக்கறார். இதான் கதை.

ரொம்ப நல்லா நகருது. ஆன நடுவுல ஒரு விசிட்டிங் கார்ட காட்டி எல்லாரையும் ஏமாத்திட்டு ஆஸ்ட்ரேலியன் கிரிக்கெட் ப்ளேயர் ஒருத்தரை மீட் பண்றது, அவரோட தயவுல ஆஸ்ட்ரேலியா போயிட்டு வரது, கசமுச மசாலா காதல்னு கொஞ்சம் சினிமாத்தனம். என்னக் காரணத்துக்காக வித்யா அவனை லவ் பண்ண ஆரம்பிக்கறானே தெரியல. அவ அண்ணன் அம்மா அப்பா எல்லாரும் அவன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தா அவன் ரூம் கதவ லாக் பண்ணிட்டு டியூஷன் எடுக்கறதுக்கும் ஒண்ணும் சொல்லாம இருந்திருப்பாங்க. ஆனா நம்ம ஹீரோவுகும் குற்ற உணர்ச்சி ரொம்பவே இருக்கும். எந்த ஒரு உணர்வுக்கும் இடம் குடுக்காம இருந்த நம்ம கோவிந்த எப்படி லவ் பண்ன வச்சுடறா வித்யா. அதான். பொண்ணுங்க நினைச்சா என்ன எதை வேணாலும் சாதிக்க முடியும்.

இந்தக் கதைல என்னைப் பொறுத்தவரைக்கும் கோவிந்த் விட இஷான் தான் ஒரு நல்ல பிஸினஸ்மேன். அக்கவுண்ட்ஸ்லாம் பாத்துக்காட்டியும் கஸ்டமர்ட்ட திறமையாப் பேசி பிஸினஸ் பண்றானில்லையா? அவங்க சொல்ற விலைக்கு இறங்கிப் போய் சேல்ஸ முடிக்கறதை விட நாம சொல்ற விலைக்கு அவங்களை வாங்க வைக்கறதுதான் திறமையான பிசினஸ். என்ன சொல்றீங்க?

சரி. டைம் இருந்தாப் படிங்க. என் வாழ்க்கைல நான் பண்ணின பெரிய மிஸ்டேக் இந்த புக்கப் படிச்சதுதானு நினைக்கறேன். இல்லைனா Chetan-ஓட Five point someone and One night @ the Call center கண்டிப்பாப் படிக்கணும்னு முடிவுப் ப்ண்ணிருப்பேனா?? ;)))

Monday, August 11, 2008

பாட்டு... பாட்டு... பாட்டு...

ஒரு கன்னடப் பாட்டுக்கு வரிகள் எழுதிருக்கேன். எப்படி இருக்குனு சொல்லுங்க...




-------------------------------------------------------
உன்னருகிலே உன்னருகிலே
என் மேகம் மழையாகுதே
உன்னருகிலே உன்னருகிலே
என் இதயம் இசை மீட்டுதே

ஏனிங்கு என் உலகை உருமாற்றினாய்
எங்கெங்கும் உன் பிம்பம் தோன்றுதே
ஏனிந்த பார்வைதான் வீசிச் சென்றாய்
மனமெங்கும் புதுவித வலி தோன்றுதே

இருள் சூழ்ந்த உலகம் போல் நீதானே
எனையிங்கு முழுதாய் சூழ்ந்தாயோ
பனி விழுந்த மலர் போல் நான்தானே
ஒவ்வொரு அணுவிலும் சிலிர்த்தேனோ
என் பார்வையும் உன் மௌனமும்
போர் செய்யும் அனுதினமும்

உன்னருகிலே உன்னருகிலே
என் மேகம் மழையாகுதே

அழகோவியம் உனை நானும் வரைந்திடத்தானே
வானவில்லின் நிறங்களும் உயிர் பெறுமே
கவிதை உனை நானும் படித்திடத்தானே
தமிழின் வார்த்தைகளும் மோட்சம் பெறுமே
உன்னிடமே வரம் கேட்கிறேன்
மௌனத்தினால் கொல்லாதே

உன்னருகிலே உன்னருகிலே
என் மேகம் மழையாகுதே
உன்னருகிலே உன்னருகிலே
என் இதயம் இசை மீட்டுதே

ஏனிங்கு என் உலகை உருமாற்றினாய்
எங்கெங்கும் உன் பிம்பம் தோன்றுதே
ஏனிந்த பார்வைதான் வீசிச் சென்றாய்
மனமெங்கும் புதுவித வலி தோன்றுதே
-------------------------------------------------------

P.S: vl post "Unnoduthaan en jeevan - III" soon...

P.S: This is NOT a translation... Tamil lyrics is written by me :))

Thursday, August 7, 2008

அன்பில் அடை மழைக்காலம்!

எழுத்தறிவித்தவன்
இறைவன் ஆவானாம்!
ஒரே நொடியில்
காதல் மொழியை
கற்றுத் தந்தாயே
நீ என்ன காதல் கடவுளா?!

தேர்வறையில் விடை மறந்த
மாணவியாய் திணறுகிறேன்
உன் பார்வை வினாக்களின்
அர்த்தம் புரியாமல்...

நீ கொஞ்சிக் கொஞ்சி
செல்லமாய் சொல்லும்
சுகத்தை அடையத்தானா
இத்தனை நாளும் தவமிருந்தது
எனது இந்தப் பெயர்?

கண்டும் காணாதது போல்
போகிறேன் என்றெப்பொழுதும்
குற்றம் சாட்டுகிறாயே...
நீ போகாத விஷேசங்களுக்கு
நானும் செல்வதே இல்லை
என்பதை என்றேனும்
உணர்ந்திருக்கிறாயா?

அடை மழையிலும்
விரும்பி நனைகிறேன்
ஜுரத்தில் முனகும்
தருணங்களில் கிடைக்கும்
உன் உள்ளங்கையின்
ஸ்பரிஸத்திற்கு ஏங்கி...

கோடி முறை
மனனம் செய்தாலும்
உனைக் கண்டதும்
அதரங்களிலேயே
புதைந்து விடுகிறதே
என் வார்த்தைகள்!

உன் விரலை
தூரிகையாக்கி
என்னை ஓவியப்
பலகையாக்குகிறாயே!
என்னை
ஓவியம் வரையவா?!
என்னைப் போல்
ஓவியம் வரையவா?!