எந்தவித சலனமும் காட்டாமல் அவனது கைகளில் இருந்து பத்திரிக்கையை வாங்கியவள் முகத்தில் மெலிதாய் புன்னகை விரிய ஆவலுடன் பிரித்துப் பார்த்தாள்.
"காலம் தோறும் கவிதைகளில் உதிர்ந்து கிடக்கும் காதல் இறகுகளையும் வாழ்வின் கனவுகளையும் கோர்த்துக்கொண்டு
மைதிலி ஸ்ரீதர் ஒரு சிறகாகவும்
மகேஷ் ராஜசேகர் மறு சிறகாகவும் மாறிட
ஒரு காதல் பறவை ஜனிக்க இருக்கிறது.
காதல் பயணம் துவங்கும் இப்புதிய பறவையினை வரவேற்று சிறகுகளை வாழ்த்த
இடம் : கொங்கு திருமண மண்டபம், ஈரோடு
நாள் : ஆகஸ்ட் 21, 2008 பகல் 12 முதல் 3 வரை
காற்றுவெளியின் கடைசித்துளி வரை
எங்கள் பயணம் கவிதையென இனித்திட
உங்கள் வருகையினாலும் வாழ்த்துகளாலும்
வலிமை பெற்றுக்கொள்ள அழைக்கும்…
இரு சிறகுகள்,
மைதிலி & மகேஷ்" ( நன்றி அருட்பெருங்கோ)
"ஹேய்ய்ய்ய்ய்!!! ரொம்ப சூப்பரா இருக்குடா... ப்ளீஸ்டா எனக்கு கொஞ்சம் பத்திரிக்கை குடு. ப்ளீஸ் ப்ளீஸ்... என் ஃப்ரெண்ட்ஸ்க்கு குடுக்க மட்டும் ப்ளீஸ்" என்று அவனிடம் கெஞ்சினாள்.
"ரொம்ப ப்ளீஸ் போடாத... நீ என்ன சொன்னாலும் தர மாட்டேன். மேடம் பெருசா இங்லிபிஷ்ல தான் அடிப்பேனு ஓவரா டயலாகெல்லாம் விட்டீங்க. இப்போ மட்டு என்ன வந்துச்சாம்??"
"ஏ ப்ளீஸ்! எங்க ஆபிஸ்ல இருக்கற சப்பாத்திங்களுக்கெல்லாமும் தரணும்னுதான் ஒரே இதா இங்க்லிஷ்லயே போட்டுடலாம்னு சொன்னேன். நீ என்னன்னா ஓவரா பந்தா விடற. சரி போ. எனக்கொண்ணும் வேணாம்" என்று அவள் கோபித்துக் கொள்ள
"கோவிச்சுக்கிட்டா நான் தந்துடுவேனு நினைக்கறியா? ஹி... ஹி..." என்று சிரித்தான்.
"இரு இப்போவே அத்தைக்கு ஃபோன் பண்ணி சொல்றேன்" என்று அவளது ஃபோனை எடுக்க
"அய்யய்யோ! அம்மா தாயே... மாமியாரும் மருமகளும் சேந்து பண்ற கொடுமை என்னால தாங்க முடியலை. தரேன் தரேன். நீ அடிச்சதுல ஒரு இருபது பத்திரிக்கை எனக்குக் குடு. ஆபிஸ்ல கொடுக்கறதுக்கு" என்று அவளது ஃபோனை வாங்கி வைத்தான்.
"ஹ்ம்ம்ம்ம்.... அப்படி வா வழிக்கு என்று புன்னகைத்தாள்.
இரண்டு மாதங்கள் கழித்து...
அறையெங்கும் பூவாசத்தில் மிதந்திருக்க அதன் வாசனையை அனுபவித்தாலும் இதயம் ஏனோ ஒருவித பயத்தில் வேகமாக அடித்துக் கொண்டது மைதிலிக்கு. முதல் பார்வையிலேயே பிடித்துப் போனவன்தான். பழகிய பின் வெகு அழகாய் தன்னுள் காதலை ஒரு பூப்போல மலரச் செய்தவன்தான். காதலை வெகு இயல்பாய் எடுத்து சொல்லி தனது காதலை அங்கீகரித்தவன்தான். திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து அவளை வீட்டில் பேச வைத்தவன்தான். எங்கும் எப்போதும் தன்னை நிழல் போலத் தொடர்ந்தவன்தான். நேற்றுவரை ஒரு குறும்புப் பெண்ணாய் சுற்றிக் கொண்டிருந்தவளை வெட்கச் செய்து அமைதியாய் இன்று காலையில் கரம் பிடித்தவன்தான். என்றாலும் இன்று புதிதாய் பார்ப்பதுப் போல ஒரு இனம் புரியாத பயம் மனதைப் பிசைகிறதே...
அருகில் நிழலாட மெல்ல நிமிர்ந்துப் பார்த்தாள். அவள் முன் வந்து நின்றவன் அவளைப் பார்த்து அழகாய் ஒரு புன்னகையை தந்தான். அவளுக்கு ஏனோ அடிவயிற்றைப் பிசைந்தது. என்னவன்... எனக்கே எனக்கானவன்... என் இனிய காதலன்... என் அன்பு கணவன்... என்ற எண்ணவோட்டத்தில் கர்வம் மேலிட குனிந்து கழுத்தில் கிடந்த தாலிக் கயிற்றைப் பார்த்தாள்.
"என்னாச்சு என் செல்லக்குட்டிக்கு?" என்று அவன் வழக்கமாய் கேட்கும் தொனியில் கேட்கவும் இயல்புக்கு வந்தவள் அவனை இழுத்து அருகில் உட்கார வைத்துக் கொண்டாள்.
"உன் சுவாசம்
காற்றில் கலப்பதில் கூட
உடன்பாடில்லை எனக்கு...
எனக்கு மட்டும்
எனக்கே எனக்கு மட்டுமே
வேண்டும் உனது மூச்சுக்காற்று" என்றபடியே கைகளை மாலையாக்கி அவனதுக் கழுத்தில் போட்டாள்.
"ஓ! அப்படியா? அப்போ உனக்கு ஆக்சிஜன் வேண்டாமா? கார்பன்-டை-ஆக்ஸைடுதான் வேணுமா?" என்று அவன் கிண்டலாய் சிரிக்க வந்தக் கோபத்தில் மூக்கு விடைக்க அவனைப் பின் தள்ளிவிட்டு எழுந்து சென்று சற்றுத் தொலைவில் இருந்த நாற்காலியில் சென்றமர்ந்தாள்.
"டேய்! சும்மா விளையாட்டுக்கு சொன்னேண்டா" என்று அவளிடம் சென்று அவன் சமாதானப்படுத்த முயல அவனது கைகளைத் தட்டி விட்டாள்.
"சரி சரி.... என்னை பாத்ததுமே பிடிச்சிடுச்சுனு சொன்னியே. அது ஏனு கல்யாணத்துக்கப்புறம் சொல்றேனு சொன்னியே. இப்போ சொல்லு" என்றுக் கேட்டான். உடனே அவனை முதலில் பார்த்த அந்த தருணம் நினைவுக்கு வர அப்படியே அந்த நிமிடங்களுக்குப் பயணித்தவள்
"நீ அங்க இருந்த ஒரு மரத்தோட பூவெல்லாம் மிதிக்காம கேப்ல நடந்து வந்தியா. அதைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சது. நீ ரொம்ப சாஃப்ட் ஹார்ட்டட்னு தோணுச்சு"
"ஓ அப்போவே என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா?"
"அய்! ஆசையப் பாரு. அதெல்லாம் ஒண்ணுமில்ல. அப்போ உன்னை பிடிச்சது அவ்ளோதான். ஆனா பழகி ரொம்ப நாள் கழிச்சுதான் லவ் பண்ண ஆரம்பிச்சேன்"
"ஹ்ம்ம்ம்! நல்லா ஏமந்துட்டியா?" என்று சத்தம் போட்டு சிரித்தவனை கேள்வியாய் பார்த்தாள்.
"ஹி... ஹி... அந்த பூ ஷூ-ல நல்லா ஒட்டிக்கும். ஆபிஸ்ல நடக்கறப்ப ஃப்ளோர்ல எல்லாம் விழும். அதான் அதை மிதிக்காம நடந்தேன். அதைப் பாத்து நீ ஏமாந்துட்ட... ஹாஹாஹா" என்று அவன் வயிறு குலுங்க சிரிக்க
"யூயூயூ" என்றபடி அவனை அவள் கண்டபடி அடிக்க
"அப்பாடா... எப்படியோ கேஷுவல் ஆயிட்டயா?" என்றபடியே அவள் கைகளைப் பிடித்து அடிப்பதை தடுத்தவன்
"அப்படியே பூ மேல நான் நடந்துப் போவேனு நினைக்கறயாடி நீ?" என்று முகத்தை சீரியசாய் வைத்து அவன் கேட்க தனது செயலை எண்ணி வருந்தியவள் தாள முடியாமல் அவனை இழுத்து அணைத்தாள்.
சுபம்...
பி.கு: இது என்னுடைய கதையா என்று பலர் கேட்பதால் இந்த பி.கு. என்னுடையது purely arranged marriage. இதில் வரும் எந்த ஒரு சம்பவமும் என்னுடையது அல்ல.
பி.குவிற்கு பி.கு: நான் எழுதும் எந்த ஒரு கதையும் என்னுடைய சொந்த கதை இல்லை. என்னைப் பொறுத்தவரை "Personal should be personal". சோ ப்ளாக்ல எல்லாம் எழுத மாட்டேன் :)))
Monday, June 30, 2008
காதல் நீதானா?!! - II
Posted by இம்சை அரசி at 7:31 PM 19 comments
Labels: காதல் நீதானா, தொடர் கதை
Tuesday, June 24, 2008
காதல் நீதானா?!! - I
காலை ஆறு மணி. "துதிப்போர்க்கு வல்வினைப்போம்..." அன்று ஆரம்பித்த மொபைல் ஃபோனை தலையணையடியில் கைவிட்டு துழாவி எடுத்த மைதிலி கண் திறக்காமலே அலாரத்தை நிறுத்தினாள். ஒரு பத்து நிமிடங்கள் புரண்டு புரண்டுப் படுத்தவளுக்கு அன்று ஒன்பது மணிக்கு ஆன்சைட்டுக்கு பண்ண வேண்டிய கால் நினைவுக்கு வர வேகமாக எழுந்தாள். படபடவென்று காலை வேலைகளை முடித்து குளித்து கிளம்பியவள் ஆபிஸ் பஸ்ஸை பிடிக்க வேண்டுமென்று அறைத் தோழியுடன் வேகமாக தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். வழியில் இருந்த ஒரு கடையில் அவள் தோழி ஏதோ வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று சென்றதால் தெருவை வேடிக்கைப் பார்த்தபடி காத்திருக்க ஆரம்பித்தாள்.
அப்பொழுதுதான் அவளது தோழிக்கு அவள் நன்றிக்கடன் பட வேண்டிய சூழ்நிலை உண்டானது. வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள் விழிகள் சற்றுத் தள்ளி விரிந்திருந்த ஒரு மரத்தையும் அதிலிருந்து உதிர்ந்து தரையெங்கும் சிதறிக் கிடந்த ஊதா நிறப் பூக்களையும் ரசித்துக் கொண்டிருந்த வேளையில் அப்பூக்களை மிதிக்க மனமில்லாமல் அதன் நடு நடுவே இருந்த இடைவெளியில் கவனமாய் நடந்து வந்த அவனை கவனித்தாள். இதே மாதிரி காதல் தேசம் படத்துல தபு நடந்து வருவா இல்ல- என்று ஒரு நொடி நினைத்தவள் பொதுவாக பெண்களுக்கு இருக்கிற மென்மை முதன் முதலாய் ஒரு ஆணிடம் பார்க்கிறாள். ஏனோ சொல்லமுடியாத சந்தோஷத்தில் மனம் விசிலடிக்க அவனை தொடர்ந்து செல்ல முடிவு செய்தாள். அவளை அவன் கடக்கையில் அவளது தோழி வந்து சேர்ந்து கொள்ள அவளை இழுத்துக் கொண்டு வேகமாய் அவன் பின்னாலே நடந்தாள். அவனும் அவளது நிறுத்தத்திலேயே போய் நிற்க அவனருகில் சற்று தள்ளி நின்று கொண்டாள். அவன் கழுத்தில் இருந்த ஆபிஸ் ஐடி கார்டைப் பார்த்து அவன் அவளது அலுவலகம் இல்லையென்பதை உறுதி செய்து கொண்டாள்.
படிய வாரிய தலையில் காற்றுக்கு லேசாய் முன்புறம் கலைந்த முடி, கருப்புமின்றி வெள்ளையுமின்றி ஒரு கலவையான நிறம், அங்கும் இங்குமாய் அலைபாயாத விழிகள், எடுப்பான நாசி, அளவான உடல், நல்ல உயரம் என்று அவனையே வைத்தக் கண் வாங்காமல் அளந்துக் கொண்டிருந்த அவளை அவன் கவனிக்கவேயில்லை. எப்படியாவது அவனிடம் பேசி அவனையும் பேச வைத்து விட வேண்டும் என்று எண்ணியவளுக்கு திடீரென்று வந்த யோசனையால் கைப்பையினுள் கைவிட்டுத் துழாவி ஒரு சிறிய துண்டு பேப்பரை எடுத்துக் கொண்டு அவனருகில் சென்றாள். அவனோ அவளை கவனிக்காமல் காதில் மாட்டியிருந்த ஹெட்ஃபோனில் கேட்டுக் கொண்டிருந்த பாட்டிலேயே கவனமாயிருந்தான். அவனது காலிடம் கையிலிருந்த பேப்பரை போட்டவள் அவனிடம் மெதுவாய் "எக்ஸ்க்யூஸ் மி" என்றாள். வெகு அருகில் நிழலாட திரும்பியவன் அவளைக் கண்டு ஒரு நொடி புரியாமல் விழித்து காதிலிருந்த ஃஹெட்போனைக் கழட்டி "யெஸ்" என்றான்.
"பேப்பர் மிஸ் ஆயிடுச்சு" என்று ஒரு இனம் புரியாத உணர்ச்சியில் உளறினாள்.
"எந்த பேப்பர்?" என்று அவன் புரியாமல் கேட்க ஹையா! தமிழ்ப் பையன் தான் என்று உள்ளம் குதூகலிக்க வார்த்தைகள் மடை திறந்த வெள்ளமாய் கொட்டின.
"என் கைல வச்சிருந்த பேப்பர் மிஸ் ஆகி உங்க கால்கிட்ட விழுந்துடுச்சு. கொஞ்சம் தள்ளிக்கிட்டிங்கனா எடுத்துக்குவேன்"
"ஓ! சாரி. எடுத்துக்குங்க" என்று கொஞ்சம் தள்ளியவன் அவள் எடுக்க வருவதற்குள் அவனே குனிந்து எடுத்து அவளிடம் தந்தான்.
"பேப்பர மிதிச்சிட்டேனுங்களா?" என்று கேட்டவனைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள்
"அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. ரொம்ப தேங்க்ஸ்" என்று புன்னகைத்தாள். பதிலுக்கு அவனும் புன்னகைக்க அய்யோ! என்று அந்த புன்னகையில் அலைபாய்ந்த மனதை இழுத்துப் பிடித்து நிறுத்தினாள்.
"நீங்க கோயமுத்தூருங்களா?" கேட்ட அவளை ஆச்சரியமாய் பார்த்தவன்
"இல்லைங்க. ஈரோடு. எப்படி கண்டுபிடிச்சீங்க?" என்றான்.
"இதுல என்னங்க இருக்கு? அதான் உங்க பேச்சேக் காட்டிக் குடுக்குதே. நான் திருச்செங்கோடுதான்"
"அட! நம்மூருங்களா நீங்க" என்று குதூகலித்தவன் "பை த வே நான் மகேஷ்" என்றான்.
"நான் மைதிலி...." என்று ஆரம்பித்து பேசி மொபைல் நம்பரை பரிமாறிக் கொண்டவர்கள் அவரவர் பேருந்து வரவும் விடை பெற்றனர்.
அதன் பிறகு சொல்லவா வேண்டும்? ஆருயிர் ஏழுயிர் எட்டுயிர் நண்பர்களாகி அவன் வீட்டிற்கு "ஹலோ ஆன்ட்டி! எப்படி இருக்கீங்க?" என்று இவள் வாரத்திற்கு ஒருமுறை ஃபோன் செய்வதும் "கோவிலுக்கு போகணும்னு சொன்னதால இந்த வாரம் வீட்டுக்கு வர மாட்டென்றாளா? நான் சொல்றேன் அங்கிள். அடம் பிடிச்சா பார்சல் பண்ணி அனுப்பிடறேன் கவலைப்படாதீங்க" என்று அவன் அப்பா இவனிடம் சிபாரிசுக்கு வருமளவிற்கு ஆகி விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு வருடம் கழித்து...
"ஹே மைத்தி!"
"சொல்..லு..டா... மணி ஒண்ணாச்சு. தூங்கலையா நீ?"
"தூக்கம் வரலைடி. உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சு"
"எருமை! உனக்கு தூக்கம் வரலைனா என்னையும் தூங்க விடாம பண்ணனுமா? ஒரு மணிக்கு என்னடா உனக்கு பேசணும் போல இருக்கு?"
"ஒரு மணிக்கு மட்டு இல்லடி... ஒரு நாளுல 24 மணி நேரமும், வாரத்துல ஏழு நாளும், வருஷத்துல 365 நாளும்..."
"டேய்ய்ய்ய்ய்.... என் பொறுமைய சோதிக்காத... நானே அரைத் தூக்கத்துல பேசிட்டு இருக்கேன். நீ புள்ளி விவரம் சொல்லிட்டு இருக்காத... சீக்கிரமா சொல்லு"
"இருடி... சொல்ல விடு... ஒரு நாளுல 24 மணி நேரமும், வாரத்துல ஏழு நாளும், வருஷத்துல 365 நாளும், என் ஆயுசுல எல்லா வருஷமும் ஐ மீன் என் ஆயுசு முழுக்க உன்னோடவே இருக்கணும் போல இருக்குடி" - இறுதியா சொல்லும்போது அவன் குரல் ஒரு வித அச்சம் கலந்த சந்தோஷத்தில் குழைந்தது. அவனது வார்த்தைகளில் திடுக்கிட்டு தூக்கம் மொத்தமாய் தொலைத்து விருட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
"என்னடா சொல்ற?" அவள் குரலில் ஆச்சரியம் அதிர்ச்சி எல்லாம் அப்பட்டமாய் தெரிந்தது.
"எனக்கு கொஞ்ச நாளாவே அப்படியேதாண்டி தோணுது. என்ன பண்றதுனு தெரியலை. எனக்கு எதுனாலும் நீதான ஐடியா குடுப்ப. அதான் உன்கிட்டயே கேக்கலாம்னு சொன்னேன். என்ன பண்ணட்டும் நான்?"
இரண்டு நிமிடங்கள் பதிலில்லாமலே இருக்க அதற்கு பொறுமையிழந்தவனாய்
"ப்ளீஸ்! கோபம்னா நல்லா திட்டிக்கோ. பேசாம மட்டும் இருந்துடாதடி. ப்ளீஸ்...." என்றான். அதற்கும் பதில் பேசாமலே அவள் இருக்க
"எதாவது சொல்லு. நான் என்ன பண்ணட்டும்?"
"ம்ம்ம்ம்...." என்று இழுத்தாள். அதற்குள் என்ன சொல்வாளோ என்று அவனது இதயம் வேகமாய் அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.
"வீட்டுல கேட்டு கல்யாணம் பண்ணிக்கோ" என்று அவள் சொல்லவும் அவன் காதுகளையே அவனால் நம்ப முடியவில்லை.
"ஹே! நிஜமாதான் சொல்றியா?"
"நிஜம்னு எப்படி ப்ரூவ் பண்ணனும் உனக்கு?"
"ஹே! தேங்க்ஸ்டி செல்லம்.... நான் ரொம்ப பயந்துட்டே இருந்தேன். யு நோ ஒன்திங்க்? எனக்கு லாஸ்ட் த்ரீ மன்த்ஸாவே ஒரு மாதிரி வித்தியாசமா ஃபீல் பண்ணினேன். இப்போதான் அது காதல்னு கண்டுபிடிச்சேன்" என்று ஏதோ சாதித்துவிட்ட பெருமையில் சொல்லிக் கொண்டிருந்தான்.
"ஹ்ம்ம்ம்... உனக்கு லாஸ்ட் த்ரீ மன்த்ஸாதான் அப்படி... எனக்கு உன்னை ஃபர்ஸ்ட் பாத்தப்பவே ஒரு டிஃபரண்ட் ஃபீலிங்" என்று அவள் மெதுவாய் சொல்லி நிறுத்த
"ஹே ரியலி??? என்னால நம்பவே முடியலை. என்கிட்ட வந்து பேசினப்பவா?"
"இல்ல. அதுக்கு முன்னாடியே அந்த தெருல நீ நடந்து வந்தப்போ உன்னைப் பார்த்தேன். உன்னைப் பிடிச்சதாலதான் நானா பேப்பர கீழ போட்டுட்டு வந்து பேசினேன்" என்று அவள் சிரிக்க
"அடிப் பாவி! என்னை ஏமாத்திட்டியா நீ?" என்று செல்லக் கோபம் காட்டியவன்
"எதனால உனக்கு என்னை அப்போ பிடிச்சது?" என்று ஆர்வமாய் கேட்டான்.
"அதெல்லாம் சொல்ல மாட்டேன்"
"ப்ளீஸ்டி... சொல்லு"
"அதை நமக்கு கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் சொல்றேன். ப்ளீஸ் கேக்காத..."
"ஓகே... ஓகே..."
"இந்த வீக் எண்ட் ஊருக்கு போறோம் இல்ல. நான் எங்க வீட்டுல கேக்கறேன். நீ உங்க வீட்டுல கேளு...." என்று வீட்டில் பேசுவதைப் பற்றி பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
மூன்று மாதங்கள் கழித்து...
"ஹலோ! எங்க இருக்க?"
"நான் உன்னைப் பாத்துட்டேன். அப்படியே ரைட் சைடுல திரும்பி நாலாவது டேபிள்ல பாரு"
CCD-யினுள் அவளுக்காக காத்திருந்த மகேஷின் இருப்பிடத்தை கண்டுபிடித்த மைதிலி நேராக அவனிடம் சென்று எதிர்புறமிருந்த சேரினில் அமர்ந்தாள்.
"வந்து ரொம்ப நேரமாச்சா?"
"இல்லடி... இப்பதான்... ஒரு ஃபைவ் மினிட்ஸ்தான் ஆகுது"
அமைதியாய் அவளது பையிலிருந்து இன்விடேஷனை எடுத்து அவன் முன் நீட்டினாள்.
"இந்தா என் வெட்டிங்க் கார்ட்" என்று அவள் நீட்டியதும் வாங்கி அதைப் பிரித்துப் பார்த்தான். படித்து முடித்து மடித்து வைத்தவன் எவ்வித சலனமுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் முன் அவனும் ஒரு கார்டை நீட்டினான்.
"இந்தா என்னோட இன்விடேஷன்"
(தொடரும்...)
Posted by இம்சை அரசி at 5:11 PM 31 comments
Labels: காதல் நீதானா, தொடர் கதை
தசாவதாரம் - ஜி.ரா-வின் பதிவிற்காக!
எனக்கு படம் பார்த்து விமர்சனம் எழுத வராது. அதனால் எழுதுவதில்லை. இப்பொழுதும் தசாவதாரம் படத்திற்கு விமர்சனம் எழுத வரவில்லை. ஜி.ரா-வின் பதிவைப் பார்த்ததும் அவரிடமே சென்று சண்டையிட்டேன். சரி பதிவே எழுதி விடலாம் என்றெண்ணியதால் இப்பதிவு.
தசாவதாரம் சுமார்தான் என்று பலர் சொல்லியதால் ரொம்ப பெரிய எதிர்பார்ப்புடன் செல்லவில்லை நான். என்றாலும் படம் பார்த்ததும் எனக்கு நிறைவாகவே இருந்தது. பெரியவர்களை எறும்பை விட சிறியதாக்கும் மெஷின்களை கண்டுபிடிப்பதும், கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களை உருவாக்குவதும், கட்டிடங்களின் மேல் சிலந்தியைப் போல் ஏறும் மனிதனாய் மாறுவதுமாய் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்களை அமெரிக்கர்கள் செய்வதை ஏற்றுக் கொள்ளும் மக்கள் ஒரு தமிழன் உலகை அழிக்க வல்ல கிருமியை உருவாக்குவதையும் அதனிடமிருந்து உலகைக் காப்பாற்றப் போராடுவதையும் ஏற்றுக் கொள்ள ஏன் மறுக்கிறார்கள் எனபதுதான் புரியவே இல்லை :-S
சில பாத்திரங்கள் (ஜப்பானியராய், கலிஃபுல்லா கானாய்) தேவையற்றது என்று முதலில் நினைத்த போதும், எப்படியும் அந்த ஜப்பானிய கமல் இல்லாவிடில் ப்ளெட்சர் கோவிந்தை கொன்று விடுவான், கலிஃபுல்லா இல்லாவிடில் கோவிந்தால் தப்பித்திருக்க முடியாது என்றபோது அந்த பாத்திரங்கள் அவசியமாகிப் போகின்றன. எப்படியும் யாரோ நடித்திருக்க வேண்டிய பாத்திரத்தை கமலே நடித்து விட்டார் போல என்று நினைத்துக் கொண்டேன்.
கமலின் நடிப்பிற்கு தீவிர ரசிகை நான். சலங்கை ஒலி படத்தில் கமலின் நடிப்பை அணு அணுவாய் ரசித்து அந்த ஒரு காரணத்திற்காகவே ரசிகையானேன். ஒன்றை கவனியுங்கள். நான் "கமலின் நடிப்பிற்கு"-தான் தீவிர ரசிகை. "கமலுக்கு" அல்ல. அதனால் கமலை யார் எது சொன்னாலும் அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை. என்றாலும் ஜி.ராவின் பதிவில் சில விஷயங்களுக்கு மனம் ஒப்பவில்லை.
கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கமல் (ரங்கராஜ நம்பி) வைணவத்தை ஆதரித்தும் சைவத்தை எதிர்த்தும் நடித்திருப்பதுதான் இங்கு பிரச்சினையே. கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இப்படி செய்தது ரங்கராஜ நம்பிதானே ஒழிய கமல் இல்ல. அந்த காலகட்டத்தில் சைவர்களும் வைணவர்களும் தத்தம் சமயம்தான் உயர்ந்தது என்று உறுதியாய் நம்பியதும், மற்றதை அழிக்க முயன்றதையும் நான் பல சரித்திரக் கதைகளில் படித்திருக்கிறேன். ஒரு மலையடிவாரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு சைவ அடியாரின் தலையில் மலையிலிருந்த விஷ்ணு கோவில் இடிந்து அதிலிருந்து உருண்டு வந்த கல் விழுந்து மண்டை உடைந்து ரத்தம் வழிவதையும் பொருட்படுத்தாமல் வைணவக் கோவில் இடிந்துவிட்டதற்காய் ஆனந்தக் கூத்தாடினாராம். இந்த கதையை சிறு வயதிலேயே கேட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்த ரங்கராஜ நம்பி ஐந்தெழுத்தை சொல்ல மனமின்றி உயிர்விட்டது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இந்த இடத்தில் "ரங்கராஜ நம்பி"-யாய்தான் பார்க்க வேண்டுமே தவிர கமலாய் பார்க்கதீர்கள்.
இப்படத்தில் ரங்கராஜ நம்பியை ராமானுஜரின் சீடர் என்று சொல்வார்கள். இவரைப் பற்றியும் படித்திருக்கிறேன் (பா.விஜய்-இன் உடைந்த நிலாக்கள் இரண்டாம் பாகத்தில் முதல் கதையில்). இதே போல் சாமி சிலையை வெளியே எடுக்க விடாமல் கதவை சாத்திக் கொண்டதாயும் பின் யானையை வைத்து கதவை உடைத்து திறந்தனர் என்பதையும் எங்கோப் படித்திருக்கிறேன். கடலில் போட்டதாய் கூட படித்த ஞாபகம். But I am not sure. இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்த பாத்திரத்தை உள்ளது உள்ளபடியே சொன்னதால் கமலை ஏன் குறை சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை. "பொன்னியின் செல்வன்" கதையைப் படித்தவர்களுக்கு "ஆழ்வர்க்கடியான்" பாத்திரம் பற்றி நன்கு தெரிந்திருக்கும். வைணவப் பித்தராய் சைவர்களைக் கண்டால் கையில் வைத்திருக்கும் கட்டையால் சைவரின் தலையிலேயே அடிப்பாராம். அதற்காகதான் அந்த கட்டையை எப்போதும் கையிலேயே வைத்திருப்பாராம். இப்படிப்பட்ட பாத்திரத்தைப் படைத்த கல்கி-யை குறை சொல்வதுப் போல இருக்கிறது கமலை நீங்கள் குறை சொல்வது.
முதலில் கடவுளை நம்பும் வைணவப் பித்தராய் வரும் "ரங்கராஜ நம்பி" கமலின் மீது கோபமென்றால் இறுதியில் கடவுள் நம்பிக்கை பெரிதும் இல்லாமல் அசினோடு சண்டை போடும் கமலை தூக்கி வைத்து கொண்டாட வேண்டுமல்லவா? அதை ஏன் யாரும் செய்யவில்லை?
கமலிற்காக பரிந்துப் பேச இதை எழுதவில்லை. ஆனால் ரங்கராஜ நம்பி பாத்திரத்தின் மூலம் வைணவத்தை சொல்கிறார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடவுள் நம்பிக்கை பெரிதும் உண்டு எனக்கு. டி.டி-யில் போடும் "ஓம் நமச்சிவாய" சீரியலில் நெருப்பு உருவத்தில் நடனமாடும் சிவனை ஒவ்வொரு முறை பார்க்கும்பொழுதும் சிலிர்த்துக் கொள்ளும். அதே சமயம் அரங்கநாதரைப் பார்க்கும்பொழுது விழிகள் மூட மனமில்லாமல் திருவுருவத்தை கண்களுக்குள்ளேயே கடத்தி வைத்துக் கொள்ளும் ஆசை எழும். ஆனால் பலமுறை யோசித்த ஒரு விஷயம் உலகையே ஆளும் கடவுளர்கள் இவர்கள். இவர்களுக்கு உலக மக்கள் அனைவரும் சமம் தானே. ஆனால் ஏன் தமிழரை மட்டுமே காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதும் தமிழ்நாட்டிற்கு மட்டுமேயான மொழியை வளர்க்க பாடுபட்டனர் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. அப்பொழுது அவர்களுக்கு ஆங்கில, ப்ரெஞ்ச், ஜெர்மன் மக்களெல்லாம் முக்கியமில்லையா என்று பல கேள்விகள் எழுகிறது. யோசிக்க யோசிக்க விடை கிடைக்காமல் நீண்டு செல்கிற விஷயம் இது. யோசிப்பதை விட்டுவிட்டு வணங்குவதோடு நிறுத்திக் கொள் பெண்ணே எனறு எனக்கு நானே சொல்லிக் கொண்டு விட்டேன் :)))
தசாவதாரம்...
பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சுத்தமான வைணவனாய், ஒரு இளம் விஞ்ஞானியாய், அக்மார்க் அமெரிக்க வில்லனாய், அமெரிக்க அதிபராய், காமெடியில் கலக்கிய பலராம் நாயுடுவாய், சித்தசுவாதீனமற்ற குறும்புக்கார பாட்டியாய், தங்கையின் கொலைக்கு பழிவாங்கத் துடிக்கும் ஒரு ஜப்பானியனாய், மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடும் நேர்மையான மனிதனாய், பாடுவதை வாழ்க்கையாய் நினைக்கும் அவதார் சிங்காய், அப்பாவியான கலிஃபுல்லாவாய் கமல் என்னைப் பொறுத்தவரை மீண்டும் ஒருமுறை அவரை நிருபித்திருக்கிறார்.
"லைட்டப் போடுங்கய்யா இங்கென்ன ஃபர்ஸ்ட் நைட்டா நடக்குது" என்றபோது, "Sir can speak five languages in Telugu" என்று சொல்லும்போது பெருமையாய் சிரிக்கும்போது, ராவ் பெயரைக் கேட்டதும் பொங்கி வழிந்த பாசத்தோடு தெலுக்குவாடா என்று கேட்கும்போது இப்படி பல இடங்களில் பல்ராம் நாயுடுவைப் பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
Big kudos Kamal!!!
ஏதேனும் உங்களை வருத்தப்படும் செய்யும் வகையில் எழுதி இருந்தால் தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள் ஜி.ரா அண்ணா.
பி.கு: எனக்கு ஆபிஸில் blogger access இல்லையென்பதால் எந்த ஒரு பின்னூட்டத்திற்கும் பதிலளிக்க இயலாமல் இருக்கிறேன். தயவு செய்துப் பொறுத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து பின்னூட்டமிடும் அன்பு உள்ளங்களுக்கு கோடி நன்றிகள் :)))
Posted by இம்சை அரசி at 9:42 AM 23 comments
Labels: சினிமா
Wednesday, June 18, 2008
மேக்-அப்
நம்ம முகத்துக்கு மேக்-அப் அவசியமானு எப்பயாச்சும் யோசிச்சிருக்கிங்களா? நான் பல தடவை யோசிச்சிருக்கேன். சின்ன வயசுல எல்லாம் இந்த Fair & Lovely, Fairever விளம்பரம் எல்லாம் பாக்கும்போது இது என்னம்மா-னு எங்கம்மாட்ட கேப்பேன். எங்கம்மா அது வெள்ளையாவறதுக்கு போடற க்ரீம்-னு சொன்னாங்க. அப்போ எனக்குனு கேட்டதுக்கு நீ ஏற்கனவே ரொம்ப வெள்ளையா இருக்கற கண்ணு. அதை போட்டு இன்னும் வெள்ளையானா எல்லாரும் உன்ன வித்தியாசமா பாப்பாங்க அப்டி இப்டினு சொல்லி சமாளிச்சிட்டாங்க. அப்புறம் ஒரு எட்டாவது படிச்சப்போ என் ஃப்ரெண்ட் ஒருத்தி நல்லா பளபளனு வருவா. நான் எண்ணை வடிஞ்சு பாவம்போல போவேன். ஒருநாள் அவட்ட உன் அழகோட ரகசியம் என்னடி-னு கேட்டேன். Fair & Lovely தானு சொன்னாளே பாக்கலாம். எனக்கு எங்கம்மா மேல வந்த கடுப்புக்கு அளவே இல்ல. அப்புறம் நானும் வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்.
இங்கதான் எங்கம்மாவோட திறமைய நான் எடுத்து சொல்லணும். எதாவது அவங்க வேண்டாம்னு சொல்லி நான் வேணும்னு அடம்பிடிச்சா என்னைத் திருப்பி கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா இது பண்ணினா இப்படி ஆகும் அப்படி ஆகும்னு சொல்லி நானே பயந்து போயோ இல்ல வெறுத்துப் போயோ தானா நிறுத்திடுவேன். ப்யூட்டி பார்லர் வச்சா கண்டவங்க முகத்த க்ளீன் பண்ணனும். காலை எல்லாம் தொடணும். நீயே பயங்கரமா சுத்தம் பாப்ப. நீ எப்படி இதையெல்லாம் செய்வ-னு கேட்டு என்னோட ப்யூட்டி பார்லர் கனவை என்ன வச்சே தகர்த்து எரிஞ்சுட்டாங்க. அப்பேற்பட்டவங்க என் Fair & Lovely மேட்டர சும்மா விடுவாங்களா? Fair & Lovely போட்டா இப்போ நல்லா இருக்கும். ஆனா சீக்கிரமாவே சுருக்கம் வந்து முகம் கிழவியாட்டம் ஆயிடும்னெல்லாம் பயமுறுத்தி அதுக்கப்புறம் Fair & Lovely என்ன பவுடரே வேணாம்னு நிறுத்திட்டேன். அதுக்கப்புறம் வாழ்க்கைல முகத்துக்கு எதுமே போட்டதில்ல. யாராவது இதைப் பத்திக் கேட்டா நாங்கெல்லாம் நேச்சுரல் ப்யூட்டிப்பா. எனக்கெதுக்கு இதெல்லாம்-னு சொல்லி சிரிப்பேன்.
கல்யாணம் முடிவானதும் எங்கக்கா கல்யாண மேக்-அப்க்காக ஒரு பார்லர் கூட்டிட்டுப் போனாங்க. எங்க ஊருல அவங்கதான் நம்பர் ஒன். நிறைய கல்யாணத்துல அவங்க பண்ணி விட்ட மேக்-அப் பாத்து ஆச்சர்யப்பட்டிருக்கேன். மூணு கோட் நாலு கோட்னு இல்லாம ரொம்ப சிம்பிளா ஆனா அதே சமயம் ரொம்ப அழகா பண்ணி இருப்பாங்க. அவங்ககிட்ட போனதும் கல்யாண தேதி எல்லாம் கேட்டுட்டு மூணு தடவை ஃபேஷியல் பண்ணிக்கோனு சொல்லிட்டாங்க. சரி கல்யாணத்துக்காகதானனு நானும் சரி சொல்லிட்டேன். மொத தடவை ஃபேஷியல் பண்ணப் போனப்போ என்ன முகம் இவ்ளோ ரஃப்-பா இருக்கு? என்ன க்ரீம் போடுவனு கேட்டாங்க. நான் பெருமையா எதுமே போட மாட்டேனு சொன்னேன். எதும் போடலைனா இப்படி தான் ரஃப் ஆகும்னு சொன்னாங்களே பாக்கலாம். தாய்க்குலத்து மேல தீராத கோபம். வீட்டுக்குப் போய் சண்டையான சண்டை போட்டேன். அவங்க எல்லாம் அப்படிதான் சொல்லுவாங்க. ஆன நீ எதும் போடாதனு அப்பவும் அம்மா அதையே சொன்னாங்க.சரி-னு சொல்லிட்டு அப்புறமா வாங்கி போட ஆரம்பிச்சிடலாம்னு விட்டுட்டேன்.
கல்யாணத்துக்கு முன்னாடி ஃபேஷியல்-ன்ற பேருல முகத்த தேச்சு தேச்சு எடுத்தாங்க. எல்லாரும் பாத்துட்டு அட! கல்யாண களை வந்துடுச்சே... அப்டினு சொன்னப்போ எல்லாம் மனசுல அது எப்டினு எனக்குதான தெரியும். பார்லர்ல அந்த அளவுக்கு தேச்சு எடுத்தா வராமலா இருக்கும்னு நானா நினைச்சுக்கிட்டு சிரிச்சு வச்சேன். அப்றமா மூணாவது தடவையா பண்ண போனப்போ கோல்டன் ஃபேஷியல் பண்ணிக்கிறயா? அப்போதான் முகத்துல ஒரு glow வரும். நல்லா இருக்கும்னு சொன்னாங்க. சரி கல்யாணத்தப்போ நம்மள சுத்தி ஒரு ஒளிவட்டம் தெரியும். தக தக-னு மின்னுவோம் போலனு நினைச்சுட்டு சரி-னு சொன்னேன். அதுக்கு தண்டமா ஒரு ஆயிரம் ரூபாய அழுது வச்சிட்டு வந்தேன். பண்ணிட்டு வந்ததுக்கப்புறம் கண்ணாடி முன்னாடி நின்னு நின்னு பாத்தேன். ஒரு glow-யும் காணோம்.
கல்யாணத்தப்போ எல்லாரும் அழகா இருக்க அழகா இருக்க-னு சொன்னப்போ அப்படியே சந்தோஷம் பொங்குச்சு. நாம பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போகலை போலனு சந்தோஷப்பட்டுக்கிட்டேன். அப்புறம்தான் தோணுச்சு. அட! எத்தன கல்யாணத்துல சுமாரா இருந்தவங்களையெல்லாம் நாமளே ரொம்ப அழகா இருக்கீங்கனு சொல்லிட்டு வந்தோம்னு ஞாபகம் வந்து ஒரே சோகம் சோகமா போயிடுச்சு. இருந்தாலும் எல்லாரும் சொல்லும்போது சந்தோஷமாதான் வந்துச்சு. கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் சொன்ன விஷயம் என்னனா உனக்கு மேக்-அப் ரொம்ப நல்லா பண்ணி விட்டிருந்தாங்க. நீயும் ரொம்ப அழகா இருந்த. ஆனா எந்த மேக்-அப்ம் இல்லாம எப்பவும் ஸ்மைலோட இருந்த உன் வீட்டுக்காரர் உன்னை விட அழகா இருந்தார்னு சொன்னாங்க. ஃபோட்டோஸ் வந்ததும் எங்க வீட்டுலயும் இதே கமெண்ட்தான் குடுத்தாங்க.
இப்போதாங்க நல்லா புரியுது. தலைல இருந்த கால் வரைக்கும் ரொம்ப நல்லா பண்ணின மேக்-அப் தர அழகைவிட முகத்துக்கு ஒரு சின்ன ஸ்மைல் தர அழகு இருக்கே. அதை எந்த மேக்-அப்பாலயும் தர முடியாது. என்ன சொல்றீங்க?
Posted by இம்சை அரசி at 10:39 AM 28 comments
Labels: அழகு, சிந்தித்தது, சும்மா... லுலுலா...
Monday, June 9, 2008
உன் பேர் சொல்லி வாழ்த்துக் கூற...
ஆராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்துக் கூற நீயும் சேயில்லை
இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை
இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை
(ஆராரோ)
மார்பிலே போட்டு நான் பாட வழிதான் இல்லையே
மடியிலே போட்டுதான் பார்க்க நினைத்தால் தொல்லையே
வயதில் வளர்ந்த குழந்தையே வம்பு கூடாது
சிரித்து மயக்கும் உன்னையே நம்பக் கூடாது
மேலாடைப் பார்த்துதான் நீ சிரித்தால் ஆகுமா
மேனியே கூசுதே ஆசை வேர் விடுதே
(ஆராரோ)
தோளிலே நாளெல்லாம் சாய்ந்து இருந்தால் போதுமே
வாழ்விலே ஆனந்தம் மேலும் நிறைந்தே கூடுமே
இதயம் எழுதும் இனிமையே... இன்பம் வேறேது
கனவில் வளர்ந்த கவிதையே... என்றும் மாறாது
நீ என்றும் தேனென்றும் வேதங்கள் ஏதம்மா
நினைத்ததும் இனித்திடும் காதல் பூமழையே
(ஆராரோ)
*************
இன்று பிறந்த நாள் காணும் என் இனிய அன்பு கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்.
ஒரு பெரிய கவிதை எழுதியிருக்க வேண்டிய நான் ஏன் இப்படி செய்தேனென்றால்
"உன்னுள் முழுமையாக
என்னை தொலைத்தால்
வெட்கி சிவந்து
உன்னுள்ளேயே
ஓடி ஒளிந்து கொண்டன
எனது வார்த்தைகளும்"
(ஸ்ஸ்ஸ்.... அப்பாடா.... எப்படியோ சமாளிச்சாச்சு ;)))))
Posted by இம்சை அரசி at 4:35 AM 27 comments