ச்சே! கையில் இருந்த ஹேண்ட்பேக்கை சோபாவில் தூக்கி வீசி விட்டு சென்று படுக்கையில் விழுந்தேன். என்ன இது? எப்போ பார்த்தாலும் என் கிட்ட சண்டை போட்டுக்கிட்டே. என்னை மட்டும் ஏன் பிடிக்கவே மாட்டேன் என்கிறது. நண்பர்களோடு சேர்ந்து அடுத்த வாரம் கோயம்புத்தூர் போகதானே அனுமதிக் கேட்டேன். கேட்காமல் எனக்குப் போகத் தெரியாதா? நாளையிலிருந்து வீட்டை விட்டு வெளியே தங்கி வேலைக்குப் போகப் போறேன். அங்கேயிருந்து நான் சொல்லாமல் போனால் தெரியுமா அம்மாவுக்கு. இருந்தாலும் சொல்லி விட்டுதான் போக வேண்டும் என்று நான் நினைப்பதை ஏன் புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.
ரம்யாவோட அம்மா எல்லாம் எவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருக்காங்க. நமக்கு மட்டும் ஏன் இப்படி இருக்காங்க? என்னையே நான் நொந்துக் கொண்டு கோயம்புத்தூர் செல்ல முடியாமல் போன கோபம், இயலாமை எல்லாம் சேர்ந்துக் கொள்ள முகம் சிவந்து கண்கள் பனித்ததை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. அப்பொழுது அறைக்குள் வந்த எனது அம்மா என்னை ஒரு நிமிடம் நின்றுப் பார்த்தார். பார்ப்பது எனக்குத் தெரிந்தும் தலை தூக்காமல் கவனியாததுப் போல இருந்தேன். எதுவும் பேசாமல் அவர் சென்றது எனது கோபத்தை சற்றே தணித்தது. இருந்தாலும் அண்ணன் எங்கு கேட்டாலும் உடனடியாய் விடுவதும் எனக்கு மட்டும் மல்லுக்கு நின்று போராடி அனுமதி வாங்க வைப்பதும் எனக்குள் இன்னும் கோபத்தை கிளறியது.
சிறு வயதில் இருந்தே அம்மாவுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பதே எனக்கு வழக்கமாகி விட்டது. எனது பிடிவாத குணம், அம்மாவின் விட முடியாத சில சமூக வழக்கங்களும் பெரும்பாலும் எங்களை சண்டையிட்டுக் கொள்ளவே செய்தன. அவர் சொல்வது சில சமயங்களில் புரிந்தாலும் இது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் கூட என்னை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுப்பது ஒருவித எரிச்சலை வர வைக்கிறது. சிறு வயதில் இருந்தே ஏனோ அம்மாவிற்கு என் மேல் பாசம் இல்லையென்றும் அண்ணன் மீதே முழு பாசமும் இருக்கிறதென்று நினைப்பு எனக்கு. சில சமயங்களில் அப்படி இல்லையென்று என்னுடன் நானே விவாதம் செய்து சமாதானப்படுத்த முயன்றால் கூட பல சமயங்களில் அந்த எண்ணமே மேலோங்கி வெற்றிக் கொள்ளவும் செய்கிறது.
சமையல் கற்றுக் கொள், பாத்திரம் கழுவு, வீட்டை சுத்தம் செய், பூக்கட்ட கற்றுக் கொள் என்றெல்லாம் என்னைக் கட்டாயப்படுத்தியபோதெல்லாம் எனக்குள் பொங்கி வந்த கோபத்தில் கத்தினேன். இதெல்லாம் கற்றுக் கொள்ளா விட்டால் போகிற இடத்தில் உன் மாமியார் பொண்ணை வளர்த்து வச்சிருக்கா லட்சணமா என்று என்னைதான் திட்டுவார் என்ற அவரது பதில் என் கோபத்தை மேலும் அதிகரிக்கவே செய்தது. அப்போ இன்னொரு வீட்டுக்கு சம்பளமில்லா வேலைக்காரியாப் போகத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பீர்களா என்று நான் கத்தியதில் ஆரம்பித்த சண்டை உனக்கு வரப் போற மாமியார் உலகமகா பாவம் செய்தவர் என்று வரப் போகிற என் மாமியாருக்காக என் அம்மாவும் உங்களுக்கு வரப் போற மருமக அதைவிட பாவம் செஞ்சவ என்று வரப் போகிற என் அண்ணிக்காக நானும் அனுதாபப்பட ஆரம்பித்ததில் சென்று முடிந்தது. ஆனால் அடுத்து வந்த ஒரு மாதத்தில் எனது அத்தைப் பையன் திருமணத்தன்று என் அத்தைப் பெண்கள் எல்லாருமாய் சேர்ந்து எனக்கு பூக்கட்டத் தெரியவில்லையென்று அடித்த கிண்டலில் அவமானப்பட்டுப் போன நொடியில்தான் அம்மா சொன்னதன் அருமை புரிந்தது. இவையெல்லாம் பரவாயில்லை. சொல்வது சரியென்று ஒத்துக் கொள்ளலாம். ஆனால் கோயம்பத்தூர் பயணம்??? இதில் மட்டும் என்னால் சமாதானமடையவே முடியாது.
அன்று இரவு உணவின்போது சாப்பிடப் போகாமல் இருந்த என்னை என் அப்பா வந்து சாப்பிட அழைக்கவும் என்னால் தட்ட இயலவில்லை. அவர் எது சொன்னாலும் என்னால் மறுத்துப் பேச முடியாது. என் மேல் அளவில்லாப் பாசம் வைத்திருப்பவர் அவர். அவர் அழைத்ததால் எதுவும் சொல்லாமல் சென்று அம்மாவிடம் பேசாமல் சாப்பிட்டு விட்டு வந்தேன். நாளை காலை ஒன்பது மணிப் போல் சென்னை கிளம்ப வேண்டும். எல்லாம் எடுத்து வைத்தாயிற்று. வேலையில் சேரப் போகிறேன். புதுவித சந்தோஷம் ஒருபுறம். கல்லூரி வரை வீட்டிலிருந்தே முடித்தாயிற்று. இப்போது வேலை நிமித்தமாக முதல் முதலாய் விடுதி வாசம். எப்படி இருக்குமோ? சமாளித்து விடுவோமோ என்ற மெல்லிய பயம் ஒருபுறம். வீட்டில் அனைவரையும் பிரிந்து எப்படி இருக்கப் போகிறோம் என்ற கவலை மறுபுறம் என்று எதையெதையோ எண்ணிக் கொண்டேத் தூங்கிப் போனேன்.
எழுந்திரு. மணி ஆறாகிறது. பொம்பளப் பிள்ள இப்படியா இன்னும் இழுத்துப் போர்த்தித் தூங்கறது என்று என் அம்மாவின் குரல் கேட்டதும் மெல்ல கண்கள் திறந்துப் பார்த்தேன். என்னருகில் நின்றுக் கொண்டிருந்தார். ஆறு மணிக்கு எழுந்திரு. உடனே பல் தேய். பல் தேய்த்துக் கொண்டே வீட்டிற்குள் உலாத்தாதே. குளித்து விட்டுதான் சாப்பிட வேண்டும். அழுக்குத் துணியை ஒழுங்காய் அதற்கான கூடைக்குள் போடு. தலை வாரி பெரியதாய் பொட்டிட்டுக் கொள். சீப்பில் முடியை உடனே எடு. இதெல்லாம் இன்றோடு முடியப் போகிறது. ஆஹா! இந்த வார்த்தைகள் இல்லாமல் இனி என் நாட்கள் நகரப் போகின்றன. சந்தோஷத்திலும் தூக்கக் கலக்கத்திலும் கண்கள் செருக அப்படியே கண்களை மூடினேன். இரு நொடிகள் சென்றிருக்கும். என் கன்னத்தில் சொட் சொட்டென்று இரு துளி நீர் சூடாய் விழுந்தது. தூக்கம் பறந்து ஓட அதிர்ந்து கண்கள் விழித்தேன். என் அம்மாவின் கலங்கிய கண்களில் இருந்து அது அவரது கண்ணீர்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதிர்ச்சியில் ஏன் எதற்கென்று என்னால் சிந்திக்க இயலாமல் ஸ்தம்பித்திருந்தேன். என் முன் நெற்றியில் கைவைத்து மெல்ல தலைகோதியவர் இத்தனை வருஷம் ஹாஸ்டலுக்கு விடாம இங்கேயே உன்னை வச்சு வளர்த்துட்டேன். அங்கப் போய் என்னக் கஷ்டப்படப் போறியோ. துணித் துவைக்க எல்லாம் கஷ்டமா இருந்தா டோபிக்குப் போட்டுடு. நீ துவைச்சுக் கஷ்டப்பட்டுக்காத. வாரம் வாரம் ஒழுங்கா எண்ணை வச்சுத் தலைக்குக் குளி. தலைக்கு குளிக்கற அன்னைக்கு நல்லா தலையக் காய வச்சிடு. இல்லைனா உனக்கு தலைல நீர் கோத்துக்கும். ஊறுகாய் ஜாஸ்தி சேத்துக்காத. உனக்கு ஒத்துக்காது என்று மேலும் சொல்லிக் கொண்டேப் போனவர் இறுதியாய் இரு நொடி அமைதியாகிப் பின் உன்னைப் பிரிஞ்சு நான் எப்படி இருக்கப் போறேனோ என்றபோது அவரையுமறியாமல் கண்களில் இருந்துக் கண்ணீர் வழிந்தது. எதுவும் பேச முடியாமல் எழுந்து அமர்ந்து தலைக் கவிழ்ந்து நான் அழ அழாத கண்ணு என்றபடியே அப்பாவின் குரலுக்கு வெளியே சென்றார். என் மேல் பாசம் இல்லையென்று அம்மாவை தப்பாக எண்ணி விட்டோமோ இல்லை அம்மாவை பிரிந்துப் போகப் போகிறோமோ என்று எதற்கென்றே தெரியாமல் ஒரு பத்து நிமிடம் அழுதேன்.
இதோ வேலையில் சேர்ந்து ஒரு மாதம் ஓடிவிட்டது. முதன் முதலாய் சம்பளம் வாங்கி விட்டேன். ஒரு இனம் புரியாத உணர்வு எங்களை ஆட்கொள்ள அனைவரும் சந்தோஷமாய் பேசிக் கொண்டிருந்தோம். முதல் சம்பளத்தில் நீ என்ன செய்யப் போற நீ என்ன செய்யப் போற என்று ஒருத்தி எல்லாரிடமும் கேட்டுக் கொண்டிருந்தாள். எஸ்.பி.ஐ-ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி அதுல சேர்த்து வைக்கப் போறேன். சூப்பரா ஒரு மொபைல் வாங்கப் போறேன். ம்யூச்சுவல் ஃபண்ட்ஸ்ல இன்வெஸ்ட் பண்ணப் போறேன் இப்படி பலவாறாக பதில்கள் வந்துக் கொண்டிருந்த போது அந்த கேள்வி என்னிடம் வந்தது. நான் ஒரு கம்மல் வாங்கப் போறேன் என்று நான் சொன்னதும் ஏன் உங்கப்பா உனக்கு சேர்த்து வச்சிருக்கறது பத்தலையோ ஹே என்று சிரித்தார்கள். நான் மெல்ல சிரித்து வைத்தேன். என் அம்மாவிடம் முதல் சம்பளத்தில் முதல் முதலாய் உங்களுக்குதான் வாங்கினேன் என்று தரும்போது அந்த முகத்தில் வரும் சந்தோஷத்தைப் பார்க்க காலமெல்லாம் கம்மல் வாங்கவும் நான் தயாரானது யாருக்குத் தெரியப் போகிறது.
--------------------ooOoo--------------------
பி.கு: இது என்னோட 100வது பதிவு. இதுவரை அம்மாவுக்காக நான் எதுமே எழுதினதில்ல. 100வது பதிவு அம்மாவுக்காகதான் எழுதணும்னு ப்ளாக் ஆரம்பிச்சவே நினைச்சு வச்சிருந்தேன். அதே மாதிரி எழுதியாச்சு. ஆனா இது எனக்கும் என் அம்மாவுக்குமான உண்மைக் கதை இல்ல. என்னோட முதல் ஃப்ரெண்ட் என் அம்மாதான். என் வெற்றிகளில் பெருமிதம் கொண்டு, நொடிந்து விழுந்த தருணங்களில் இதமாய் தலைகோதி, தோல்விகளில் மனம் தளராதே என்று ஆறுதல் சொல்லி, நான் செய்த தவறுகளைப் பொறுத்துக் கொண்டு இதுவரைக்கும் அன்பைத் தவிர வேற எதையுமே என்கிட்ட காட்டாத என் அம்மாவுக்காக...
தத்து பித்தென்று
நான் உளறும்
வார்த்தைகளுக்குள்
அடக்க இயலா
கவிதை நீ...
கோடி கோடியாய்
சொத்து சேர்த்தாலும்
தூசுக்கு சமமாய்
ஆக்கி விடும்
செல்வம் நீ...
எத்தனை உறவுகள்
வந்தாலும்
எவரும் என்றும்
ஈடு செய்ய இயலா
உறவு நீ...
அன்பு என்றொரு
வார்த்தைக்கு மட்டும்
அர்த்தம் கொண்டிருக்கும்
அரும் பெரும்
அகராதி நீ...
எனக்கு வேண்டிய
வரங்களை
நான் கேட்காமலே
அள்ளித் தரும்
வள்ளல் நீ...
கடவுள் உண்டா
என்கிற விவாதங்களைப்
புறக்கணித்து அனுதினம்
நான் வணங்கும்
கடவுள் நீ...
Monday, March 3, 2008
அம்மா!!!
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
உங்களோட 100-வது பதிவுக்கு வாழ்த்துக்கள். அம்மா பற்றிய கவிதை ரொம்பவே நெஞ்சை தொட்டுடுச்சி.
ஹாய் இம்சை,
பாத்ததுமே, இதெண்டா அப்பா பொண்ணு அம்மானு எழுதி இருக்கே அப்படினு நினைச்சேன். சூப்பரா எழுதி இருக்கே.
100-வது பதிவு வாழ்த்துக்கள்.
அம்மாட்ட சொல்லிட்டயா.
இத பாத்தா இன்னும் ரொம்ப சந்தோசப்படுவாங்க.
//சமையல் கற்றுக் கொள், பாத்திரம் கழுவு, வீட்டை சுத்தம் செய், பூக்கட்ட கற்றுக் கொள் என்றெல்லாம் என்னைக் கட்டாயப்படுத்தியபோதெல்லாம்//
அடப்பாவி. இப்படி எல்லாம் கத விடுற. இத பாத்தா உங்க அம்மா எவ்ளோ வருத்தப்படுவாங்க. நம்ம பொண்ணு எவ்வளவு பொய் சொல்லுதுனு.
100க்கு வாழ்த்துக்கள்
net is too slow comment window is opening opening opening.......................
அதனால நிஜமா நல்லவன் 1ச்ட் இடத்த புடிச்சிட்டாரு :(
அட ரெண்டாவது இடம் கூட இல்லியா :)
நான் கூட எதோ 'அப்பாவி தர்க்கா'வ கிண்டல்விட்டு பதிவு எதோ எழுதியிருக்க போலிருக்குன்னு நினைச்சேன்
அப்பாவி சிறுமியின் ஸ்டேடஸ் மெசேஜ்
துர்கா : I want my ammmaaaaa :(( I cant eat my own cooking anymore...GOD please help me
செம செண்டிமெண்ட் போஸ்டா இருக்கே.
ஆண்ட்டி அப்போ 200வது போஸ்ட் யாருக்காக எழுதுவீங்க? :P
//
சிறு வயதில் இருந்தே அம்மாவுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பதே எனக்கு வழக்கமாகி விட்டது.
//
வெரி இண்டரஸ்டிங்!!
//
சமையல் கற்றுக் கொள், பாத்திரம் கழுவு, வீட்டை சுத்தம் செய், பூக்கட்ட கற்றுக் கொள் என்றெல்லாம்
//
என்னா வில்லத்தனம்!!!!!!
:-)))))))))))))))))
போஸ்ட் நல்லா இருக்கு. ஒரே ப்பீலிங்ஸா பூடுச்சு
எங்கம்மா ஞாபகத்துக்கு வந்திட்டாய்ங்க நான் இன்னிக்கு ஆப்பீஸ்க்கு லீவு.
100'க்கு வாழ்த்துக்கள்'க்கா....
ரொம்ப செண்டி ஆகிட்டீங்க போல!
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!! :-)
100 க்கு வாழ்த்துக்கள் தங்கையே!
கவிதை சூப்பர்
100 வது பதிவு மிகவும் அருமை. வாழ்த்துக்கள் :)
100க்கு வாழ்த்துக்கள்... ஒரே சென்டிதான் போங்க... பதிவுலேயும்... பதிவை படிச்சபிறகு இங்கேயும்...:-)
100க்கு வாழ்த்துகள்..பொருத்தமான பதிவு..100க்கு.
உங்க நூறாவது பதிவ அம்மாக்கு டெடிக்கேட் செய்தது ரொம்ப டச்சிங்ஸ் ஆப் இண்டியா வா இருந்ததுங்க!
Congrats on ur 100th post!
100-க்கு வாழ்த்துக்கள்!! :))
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் இம்சை அரசி :)))
மெய்யாலுமே உங்க முதல் மாச சம்பளத்துல நீங்க என்ன செலவு செஞ்சீங்க.... மறைக்காம சொல்லுங்க பார்ப்போம். :)))
பதிவு வழக்கம் போல அருமை :))
100வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))
கவிதை அருமை ;)
100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் இம்சை!
கவிதை ரொம்ப அருமையாக இருக்கிறது இம்சை!!
அம்மா-மகள் உறவை, உரசல்களை அழகாக, தெளிவாக எழுதியிருக்கிறீங்க, மிகவும் ரசித்தேன்!!!
cogratulations.enga pidikiringa pictures!cho chweet.cute
Hi Jayanthi,
Nice one.
Congrats for 100th Post
100க்கு வாழ்த்துக்கள்..
கதைக்கு வாழ்த்துக்கள்..
கவிதைக்கு வாழ்த்துக்கள்..
இதெல்லாம் விட ஸ்பெஷல் வாழ்த்துக்கள் அம்மாவுக்கு. :-) சொல்லிடுங்க.
Very Nice & Touching Post!
100kku Vaazthukkal!
rumba nalla irukunga .. ellarukkum avangaavanga amma niyabagam kandippa vanthirkkum itha read pannumpothu..
100.....super kavitha.kalaku da sellam.
100.....super kavitha.kalaku da sellam
வெகு இயல்பான கதை. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அம்மாவுக்கு எப்பவுமே தனி இடம்தான்.
கவிதை ரொம்ப நல்லா இருக்குமா. 100ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.
அம்மான்னா சும்மாவா!
ஆசை முத்தம்!அன்னமிட்ட கைக்கு
இல்லத்தரசியின் இன்முகமலரை
ஈர இதயத்துடன் காணிக்கை இந்த சதம் ஓர் சாதனை. வாழ்க!வாழ்த்துக்கள்!!
ஆஹா கண்களில் நீர் கோர்க்க வைத்துவிட்டீர்கள். மிகவும் அருமையான பதிவு.
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!
அருமை. இனிமேல் தினமும் உங்கள் blog 3 முறை visit செய்ய போறேன். அப்போ தான் உங்கள் எல்லா படைப்புகளையும் படித்து முடிக்க முடியும். அருமையான படைப்புகள் - thanks for sharing - பிளேடு பக்கிரி
வாழ்த்துக்கள்!!!
உங்களோட 100-வது பதிவுக்கு என்னோட வாழ்த்துக்கள்.
இம்ச!
கவிதை ரொம்ப அருமை; மிகவும் ரசித்தேன்; தெளிவாக எழுதியிருக்கிறீங்க அழகாக இருக்கிறது... உங்க பதிவு இன்னும் நிறைய படிக்க தூண்டுகின்றது!!! இந்த பின்னூட்டம் மூலம் உங்களின் அறிமுகம் தேடும் இலங்கை நண்பன்....
பௌமி!!!
Post a Comment