"நம்ம லட்சுமி பொண்ணு அனுவ பொண்ணு கேட்டு வந்திருக்காங்களாம்" என்று அம்மா அக்காவிடம் சொல்லிக் கொண்டிருந்தது கேட்டு திடுக்கிட்டு விழித்தான் அரவிந்த். 'அனு... என் உயிரின் ஒவ்வொரு அணுவிலும் காதலை பிழிந்து பிழிந்து ஊற்றியவளே!' மனதில் மலைபோல் பாரம் அழுத்த, கண்களை விடாப்பிடியாய் தழுவியிருந்த தூக்கம் பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடியதில் அமைதியாய் எழுந்து அமர்ந்தான். ரெட்டை சடை பின்னலுடனும், பட்டாம்பூச்சியாய் துறுதுறுவென இமையடித்த விழிகளுடனும், குழந்தைதனம் மாறாத முகத்துடனும் பாவாடை சட்டையில் முதல் முதலாய் பார்த்த அவள் உருவத்தை கண்களுக்குள்ளேயே ஒளித்து வைத்திருந்தான். ஒளிந்திருந்தவள் வெளியே வந்து பழிப்பு காட்டி சிரிக்கவும் என்னை விட்டு வெளியே ஓடி விடாதே என்று வாய் விட்டு சொன்னவன் அங்கே வந்த அவளது அக்கா ஒரு மாதிரியாய் பார்க்கவும் திரும்ப படுத்து போர்வையை போட்டு முகத்தை மூடிக் கொண்டான்.
"ஹே என்னடா இது நாம எப்படி விளையாடினாலும் தோத்து போறோம்" என்று தனது தம்பியிடம் புலம்பிய அரவிந்த் வெறுப்பாய் எதிரணியை பார்த்தான். விடுமுறையில் தனது மாமா வீட்டிற்கு வந்திருந்த அரவிந்தின் சொந்தத்திற்கும் அத்தை வழி உறவினர் சிலருக்கும் நடந்த விளையாட்டில் தோற்று போனது அவனுக்கு பெரிய மானப் பிரச்சினையாய் இருந்தது. அவனது குழுவில் ஒன்பதாவது படிக்கின்ற அவன் பெரிய பிள்ளையல்லவா... சலித்து போய் மரத்தடியில் தனியாய் அமர்ந்திருந்த அவன் அருகில் நிழலாட நிமிர்ந்துப் பார்த்தான். ஒரு சிறு பெண் நின்றிருப்பதை கண்டதும் யாராயிருக்கும் என்ற யோசனையில் இறங்க, அவனை பார்த்து புன்னகைத்தவள் "அவங்க உங்களை ஏமாத்தறாங்க..." என்று ஆரம்பித்து அவர்கள் செய்த திருட்டு வேலைகளை எல்லாம் மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் பார்வையோ படபடவென அடித்த அந்த கள்ளமில்லா விழிகளிலேயெ நிலைத்திருக்க, "எங்க சொந்தமாயிருந்தாலும் தப்பு தப்புதானே. அதான் உங்ககிட்ட சொன்னேன். பாத்து விளையாடுங்க" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு பறந்தாள். அவள் பெயர் அனு. ஆறாவது வகுப்பு முடித்து ஏழாவது போகிறாள். அவனது அத்தையின் அக்கா மகள் என்ற அவளைப் பற்றிய விவரங்களை அவளது சித்தி பையனுக்கு சாக்லேட் வாங்கி தந்து தெரிந்து கொண்டான். அன்று மனதில் போட்டு பூட்டி வைத்தவளை அதற்கு பிறகு பார்க்கவே முடியவில்லை.
காலேஜ் நான்காவது வருடத்திலிருந்த போது ஒரு திருமணத்தில் அவளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பாவாடை தாவணியில் அவனது கண்களுக்கு தேவதையாய் தெரிந்தாள். வளர்ந்த பிறகும் முகத்தில் மாறதிருந்த குழந்தைதனமும் கவிதை பேசும் கண்களும் அவனது இதயம் துடிப்பது அவளுக்காக மட்டும் தான் என்றே அவனை எண்ன வைத்தது. அவள் கண்களுக்குள் புதைந்து விட துடித்தான். அவளை தனது இதயத்துக்குள் புதைத்துக் கொள்ள தவித்தான். டைனிங் ஹாலுக்கு வெளியே தனியாய் அவள் நின்று கொண்டிருந்ததை கண்டதும் அவளிடம் சென்று காதலை சொல்லி விட துடித்த இதயத்தை கட்டுபடுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
"ஹாய்.... என்னை..." என்று அவன் ஆரம்பிக்கவும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவளது புன்னகையில் உள்ளுக்குள் உற்சாகம் பீறிட
"என்னை.... என்னை...." என்று ஆரம்பிக்கவும் என்ன சொல்ல வருகிறான் என்ற யோசனையில் அவள் புருவம் சுருக்கி யோசனையாய் லேசாய் தலை சாய்த்து அவனை பார்த்தாள். அந்த பார்வையில் அவனது உலகம் சுற்ற உள்ளுக்குள் மயங்கியவனின் வாய் குழற
"நீங்க... நீங்க... தெரி... யு... தா.... யாரு.... னு...." என்று உளறவும் கலகலவென சிரித்தவள்
"என்ன இப்படி கேட்டுட்டிங்க? அரவிந்த் மாமாதானே.... நல்லா தெரியுது" என்று கூறி விட்டு ஒரு வெட்கப் புன்னகையுடன் அங்கிருந்து ஓடி விட்டாள்.
'அடச்சே! நல்ல சான்ஸ கெடுத்திட்டியேடா' என்று தன்னைதானே கடிந்து கொண்டாலும் மனம் என்னவோ அவளது பதிலில் ஆனந்த கூத்தாடியது. அதன் பிறகு அவளைப் பார்க்கும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கவே இல்லை. எப்போதாவது அவளது படிப்பு பற்றியும் வீட்டை பற்றியும் அவனது வீட்டில் பேசிக் கொள்வதை வைத்து அவளைப் பற்றி தெரிந்து கொண்டான். படித்து முடித்து நல்ல வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில் அவளது கல்யாணப் பேச்சு அடிபட, வலிக்காமல் இதயம் திருடிப் போனவளை எண்ணி மனம் வலியால் துடித்தது.
"உங்களுக்கு எப்படிம்மா தெரியும்? பையன் யாராம்?" என்ற அக்காவின் வார்த்தைகள் காதில் விழ அவர்களது பேச்சில் கவனமானான்.
"நேத்து உங்க அத்தை ஃபோன் பண்ணியிருந்தப்ப சொன்னா. ஒரு ஜாதகம் வந்திருந்திருக்கு. அந்த பையனோட அம்மா கடைவீதில அனுவ பாத்திருப்பாங்க போல. ரொம்ப பிடிச்சுப் போச்சாம்."
"ஹிம், அவ அக்காவுக்கே இன்னும் கல்யாணம் முடியலை? அதுக்குள்ளே இவளையும் கேட்க ஆரபிச்சிட்டாங்களா?"
"பெரியவளுக்கு பாக்கறதாதான் இருந்தாங்களாம். ஆனா அவளை விட அவங்களுக்கு அனுவே தான் பார்த்ததும் பிடிச்சிக்கிருச்சாம், கொடுத்தா சின்ன பொண்ணதான் கொடுங்கன்னு கேக்கறாங்களாம்" என்று அம்மா சொன்னதும் அந்த பையனின் அம்மா மீது அவனுக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது. கடைவீதிக்கு போனோமா வந்தோமானு இல்லாம அந்த அம்மாவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம் என்று சொல்லத் துடித்த வாயை அடக்கிக் கொண்டிருந்தான். சரி நம்ம அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்தானே. எப்படியாவது அம்மாவை கன்வின்ஸ் பண்ணி வேலைய முடிக்கணும் என்று எண்ணி கொண்டிருக்கையில்,
"அட அப்பிடியா! ரொம்ப அதிர்ஷடகாரி தான் அனு...."ன்னு அக்கா சொல்லி சிரித்தாள்.
"ஆமாண்டி, அவ நல்ல அதிர்ஷடகாரிதான். ரொம்ப நல்ல இடமாம். வீட்டுல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சாம். பேசாம இப்ப நிச்சயம் மட்டும் பண்ணிக்கிட்டு பெரியவ கல்யாணம் முடிஞ்சதும் இவளுக்கு பண்ணிடலாம்னு நானும் சொன்னேன்."
"அப்போ அவ அக்காவுக்கு எப்போ முடிக்கிறமாதிரியாம்?"
"கூடிய சீக்கிரத்திலே அவளுக்கு முடிச்சிட்டுதான் அனுவுக்கு முடிக்கனுமின்னு இருக்காங்களாம். அது இவங்களும் அந்த வீட்டிலே நிச்சயதார்த்தம் பண்ணப் போறதா இருக்காங்கன்னு அவளும் சொன்னா. நல்ல இடத்தை விட்டுட்டா அப்புறம் நல்லபடியா அமையுமோ அமையாதோ. எதுக்கு பிரச்சினை" என்ற தாயின் வார்த்தைகள் அவனுக்குள் ஈட்டி இறக்க என்ன செய்வதென்று அறியாமல் தொய்ந்து விழுந்தான்.
ஒரு மணி நேரமாய் யோசித்தும் என்ன செய்வதென்று எதும் பிடிபடாத நிலையில் கிளம்பி டீக்கடைக்கு சென்றான். டீ சொல்லி விட்டு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தவனது கண்ணில் தூரத்தில் நின்று இவனையே பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் விழ, யாராய் இருக்கும் என்று வேக வேகமாய் யோசித்தான். அவனைப் பார்த்து வருமாறு அவன் சைகை காட்டிய நொடியில் ஞாபகம் வந்தது அவன் அனுவின் சித்தி பையனென்று. வேகமாய் எழுந்து அவனிடம் சென்றான். அவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
"அனு அக்கா இதை உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க" என்றபடியே அவன் கைகளில் ஒரு கடிதத்தை திணித்து விட்டு வேகமாய் ஓடி விட்டான்.
(தொடரும்...)
Wednesday, October 17, 2007
உன் கண்ணோரம் வாழ... I
Posted by இம்சை அரசி at 6:02 PM
Labels: உன் கண்ணோரம் வாழ..., தொடர் கதை
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
தொடர்கதை?
ஓகே ஓகே. :-)
ரெண்டு கேரக்டர் சூப்பரா அறிமுகம் ஆயிருக்காங்க. அடுத்த பாகம் எப்போ?
good keep writing.
ஆஹா! அடுத்த பாகத்துக்கு நானும் ரெடி! சூப்பர்:-))
கதை நன்கு தொடங்கப்பட்டு, எளிமையாக, நல்லதொரு சொல்லாடலுடன் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
கதை சூடு புடிச்சுருச்சு
good....
waiting for next part...
பட்னு தொடரும் போட்டுட்டிங்களே...
அடுத்த பதிவு எப்ப?
தலைப்பு கிடைச்சிடுச்சு போல!
கலக்கல் தொடர்!
\ வளர்ந்த பிறகும் முகத்தில் மாறதிருந்த குழந்தைதனமும் கவிதை பேசும் கண்களும் அவனது இதயம் துடிப்பது அவளுக்காக மட்டும் தான் என்றே அவனை எண்ன வைத்தது. அவள் கண்களுக்குள் புதைந்து விட துடித்தான். அவளை தனது இதயத்துக்குள் புதைத்துக் கொள்ள தவித்தான்.\
கதையின் நடை அருமை! உள்ளுனர்வை வெளிப்படுத்தும் அழகான வரிகள்.
அடுத்த பகுதிக்காக வெயிட்டீங்.
மறுபடியும் பீலிங்ஸ் கதயா...நீங்களாவது ரெண்டு பேரயும் தயவு பண்ணி சேத்து வச்சிடுங்க..ப்ளீஸ்ஸ்.
அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்.
யக்கா.. கதை சூப்பரா ஆரம்பிச்சிருக்கு :)
அடுத்த பாகத்தை சீக்கிரம் போடுங்க ;)
யக்கா அடுத்த பாகம் எப்போ???? :)
enna kodumainga ethu ? killing tamil and creating head ache !
Post a Comment