Thursday, March 27, 2008
Thursday, March 20, 2008
கவிதையே தெரியுமா?!
"இதுக்கெல்லாம் நான் பயந்த ஆளில்ல. உங்களுக்கு சூப்பரா சீட்டு பிடிச்சுத் தரேனா இல்லையானு பாருங்க" என்று சவால் விட்ட நித்யாவை பரிதாபமாய் பார்த்த தோழிகளில் ஒருத்தி சொன்னாள்
"டேய்! வேண்டாம்டா. இப்போ யாரும் இருக்க மாட்டாங்க. ஆனா பஸ் வந்ததும் எங்க இருந்துதான் எல்லாரும் வருவாங்கன்னு தெரியாது. நீ கீழ விழுந்தாக் கூட தூக்கி விட மாட்டாங்க. ஏறி மிதிச்சிட்டு பஸ்ஸுக்குள்ள ஏறத்தான் பார்ப்பாங்க. அதுமில்லாம கேர்ள்ஸ் இந்தக் கூட்டத்துல சிக்கினா அதோ கதிதான். நாங்க ஒரு தடவை எக்ஸ்பீரியன்ஸ் ஆனதால சொல்றோம். சொன்னாக் கேளு"
"நோ நோ... என்னோட தைரியத்தை ப்ரூஃப் பண்ணப் போறேன் உங்களுக்கு" என்று சொல்லி முடிப்பதற்குள் ஒரு பஸ் வந்தது. பஸ்ஸின் சாத்தியிருந்த கதவின் முன் அதற்குள் கூடியக் கூட்டத்தில் முண்டியடித்து முன்னே சென்று நின்றாள். முடியாது என்ற சொன்னத் தோழிகளை ஒருவிதப் பெருமிதத்தோடு திரும்பிப் பார்த்தவள் பார்வை பாத்தீங்களா! முன்னாடி வந்துட்டேன். கதவை ஓப்பன் பண்ணினதும் உள்ள ஏறி சூப்பரா சீட்டு பிடிச்சிடுவேன் என்று சொன்னது.
சில நிமிடங்களிலேயே அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. திடீரென்று பஸ்ஸின் கதவு திறக்காமலே நகர்த்த ஆரம்பித்தார்கள். கதவருகிலிருந்த அனைவரும் அசுரத்தனமாக முன்னோக்கி நகர உள்ளுக்குள் சிக்கியவள் கூட்டத்தில் நசுக்கப்பட்டு நகரவும் முடியாமல் வெளியே வரவும் முடியாமல் திணறினாள். "ஹலோ! ப்ளீஸ்... தள்ளாதீங்க" என்ற அவளது குரலை யாரும் சட்டை செய்யவே இல்லை. செருப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் சிதறியது. என்ன செய்வதென்று யோசிக்கக் கூட முடியாமல் திணறி கீழே விழ இருந்தவள் தோளை ஒரு கரம் ஆதரவாய் வளைத்துப் பிடித்தது. ஹே! என்று தட்டி விட நினைத்தவள் அவன் பிடிக்கவில்லையென்றால் நிச்சயம் கீழே விழுந்து செருப்புக் கால்களால் மிதிப்படுவோம் என்று தெளிவாக தெரிந்தபடியால் அப்படியே விட்டு விட்டாள். ஐந்து நிமிட போர்க்களம் முடிந்து கூட்டத்திலிருந்து பாதுகாப்பாய் வெளியே கொண்டு வரப்பட்டவள் ஒரு நிமிடம் எதுவும் யோசிக்கக் கூட முடியாமல் நின்றாள். தோளிலிருந்து நழுவி முழங்கையில் தொங்கிக் கொண்டிருந்த ஹேண்ட்பேக்கை தூக்கித் தோளில் மாட்டி
"ஆர் யூ ஆல்ரைட்?" என்று அவன் கேட்டதும்தான் தெளிந்தாள்.
"யா" என்று மெதுவாக அவள் சொல்லவும் ஒரு புன்னகையை பதிலாகத் தந்து விட்டு சென்று மறைந்தான். அவன் சென்ற பின்புதான் யாரிவன்? என்ற யோசனை வந்தது. அதற்குள் அருகில் வந்த தோழிகள் அர்ச்சனையை ஆரம்பிக்க அவளோ அடச்சே! ஒரு நன்றிக் கூட சொல்லாமல் விட்டு விட்டோமே என்று வருந்திக் கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் காலையில் இன்னைக்கு என்ன பதிவு போடலாம் என்று யோசித்தபடி ஆபிஸினுள் சாலையில் நடந்துக் கொண்டிருந்த நித்யாவின் வெகு அருகில் ஒரு குரல்
"ஹே! யு ஹாவ் அ ஸ்பைடர் ஆன் யுவர் பேக்" என்றுக் கூறியதோடு நில்லாமல் அவளது துப்பட்டாவின் பின்புறத்தில் இருந்த சிறிய சிலந்தியை தட்டி விட்டு அவளது பதிலுக்கு நில்லாமல் வேகமாக சென்று விட்டான்.
அவன் சொன்னதை அவள் உணர்வதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது. குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்தவள் பார்வையில் மறுபடியும் அவன். இரண்டாவது முறையும் அவனுக்கு நன்றிக் கூறவில்லை. ச்சே! என்று கடுப்பானவள் மனது ஏனோ சந்தோஷத்தில் துள்ளியது. அவனும் இதே நிறுவனத்தில் தான் பணிபுரிகிறான். இன்னொரு தடவைப் பார்க்காமலாப் போய் விடுவோம். அப்பொழுது இந்த இரண்டு நன்றிகளையும் சொல்லிக் கொள்ளலாம் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
அடுத்து வந்த ஒரு வாரமும் போகிற இடத்திலெல்லாம் அவன் தென்படுகிறானா என்றுப் பார்க்க ஆரம்பித்தாள். நாட்கள் செல்ல செல்ல அவள் தேடல் அவளுக்கு வேறுவிதமான மனநிலையைத் தர ஆரம்பித்தது. காண வேண்டும் பேச வேண்டும் என்ற ஆவலை அதிகரித்தது. அன்று பேருந்து நிலையத்தில் பார்த்த அவனது புன்னகை முகமே வந்து வந்துப் போனது. சில சமயங்களில் எங்கேடா செல்லம் இருக்க என்று நொந்துக் கொள்ளவும் ஆரம்பித்தாள். சில சமயங்களில் ச்சே என்ன இது? பேர் கூடத் தெரியாதவன் மேல இப்படி மனசு போகுது. கன்ட்ரோல் நித்தி கன்ட்ரோல்... என்று அவளது முட்டாள்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்தாள். ஆனால் விதி யாரை விட்டது? இது போன்ற விஷயங்களில் மனம்தானே அறிவை வெல்கிறது. நித்யா மட்டும் விதிவிலக்கா என்ன?
எட்டு மணிக்கெல்லாம் ஆபிஸ் வந்து விடும் வழக்கமுடைய நித்யாவிற்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் அந்த நேரத்தில் இதமாய் வீசும் குளிர்காற்றை இழுத்து நுகர்ந்தபடி சைக்கிளில் இரண்டு மூன்று சுற்றுகள் சென்று வருவது. ஒரு வாரம் கழித்து ஒரு காலை நேரத்தில் இதேப் போல் சுற்ற சைக்கிள் எடுத்து அழுத்த ஆரம்பித்த பொழுது அவள் தோழி எதற்கோ அழைக்க திரும்பி திரும்பிப் பார்த்தபடி என்னடி? என்று கேட்டபடி எதிரில் வந்த சைக்கிளில் சென்று முட்டி கீழே விழுந்தாள். விழாமல் சுதாரித்து நின்ற அவன் சைக்கிளை நிறுத்தி ஓடி வந்து அவள் மேல் கிடந்த சைக்கிளை எடுத்து நிறுத்தினான். இதற்குள் ஓடி வந்த அவளது தோழி அவளை கைகொடுத்து தூக்கினாள்.
"ஆர் யூ ஆல்ரைட்?" என்று கேட்டபோதுதான் அவனைப் பார்த்தாள். ஆ என்று ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தவள் மனது அடி லூஸுப் பொண்ணே! இந்த தடவையும் மிஸ் பண்ணிடாத என்று அறிவுறுத்த வேகமாய் அவன் கழுத்தில் தொங்கிய ஐடி கார்டைப் பார்த்து அவனது எம்ப்ளாயி ஐடியை மனனம் செய்துக் கொண்டாள். எந்த பதிலும் இல்லாதுப் போகவே அவன் ஒரு புன்னகையைத் தந்துவிட்டு சைக்கிளில் பறந்தான். அட! இப்பயும் நன்றி சொல்லலையே என்று நினைத்தாலும் அதற்காக வருந்தும் மனநிலையில் இல்லை.
வேகமாக அவளது இடத்திற்குச் சென்று employee search-ல் சென்று அவனது எண்ணைக் கொடுத்து அவனது தகவல்களை எடுத்தாள். பெயர் சுப்ரமணி... அட! தமிழ்ப்பையன். நல்லவேளை என்று மனம் குதூகலித்தது. அவனது மொபைல் நம்பரை எடுத்து உடனடியாய் அழைத்தாள். ரிங் போனபோது ஏனென்றே தெரியாமல் இதயம் வேகமாய் அடித்துக் கொண்டது. நாம பாட்டுக்கு ஃபோன் பண்றோம். என்னடா இந்த பொண்ணுனு தப்பா நினைச்சுட்டா... பேசாம கட் பண்ணிடுவோமா என்று நினைத்தபோது அவன் எடுத்து விட்டான். உள்ளுக்குள் இருந்த குறும்புத்தனம் தானாய் தலைதூக்கியது.
"ஹலோ!"
"சுப்ரமணி?"
"யா"
"நான் வித்யா"
"எந்த வித்யா?"
"என்னங்க இப்படி கேட்டுட்டீங்க? போன வாரம் சேலம் பஸ் ஸ்டாண்ட்ல மீட் பண்ணினோமே. அதுக்குள்ள மறந்துட்டீங்களா?"
"இல்லையே! போன வாரம் நான் யாரையும் புதுசா மீட் பண்ணலையே"
"போன வாரம் சேலம் பஸ் ஸ்டாண்ட் வந்தீங்க இல்ல" சும்மா அடித்து விட்டாள்.
"ஆமா"
"அப்போ ஈரோடு பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தப்போ என்கிட்ட பேசினிங்க. நீங்கதான் உங்க நம்பர் தந்தீங்க. இல்லைனா எனக்கு எப்படி தெரியும்?"
"ஹலோ! யாருங்க. விளையாடாதீங்க. இப்போ சொல்லலைனா நான் ஃபோன கட் பண்ணிடுவேன்" இந்த பதிலில் நிஜமாகவே கட் பண்ணிவிடுவானோ என்ற பயம் வந்ததால் உளற ஆரம்பித்தாள்.
"ஹலோ ஹலோ! கட் பண்ணிடாதீங்க. நான் நித்யா"
"ஓகே!"
"உங்களுக்கு என்னைத் தெரியாது. ஆனா எனக்கு உங்களைத் தெரியும்"
"குழப்பறீங்களே"
"ஒரு வாரத்துக்கு முன்னாடி பஸ் ஸ்டாண்ட்ல கூட்டத்துல சிக்கின ஒரு பொண்ண காப்பாத்தினிங்களே ஞாபகம் இருக்கா?"
"ஓ! ஓகே ஓகே... தெரியுதுங்க.... இப்போதான விழுந்து எழுந்துப் போனீங்க. எதும் ரொம்ப அடியா?"
"அட! என்னை ஞாபகம் வச்சிருக்கீங்களா?"
"ஹலோ! உங்களோட தீவிர விசிறிங்க நான்"
"ஆ! என்ன நடக்குது இங்க? something weird"
"weirdம் இல்ல. ஒரு மண்ணும் இல்ல. நித்யாவுடன் சில நேரம்-ன்ற ப்ளாக் நீங்கதான எழுதறீங்க?"
"ஆமா! எப்படி நான்தான் அதுனு உங்களுக்குத் தெரியும்?"
"ஹாஹாஹா... அதான் internal blogs-ல அதுக்கு link கொடுத்து இருக்கீங்க இல்ல"
"அது சரி. ஆனா அந்த நித்யா நான்தான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?"
"அய்யோ என்னங்க சிஐடி ரேஞ்சுக்கு துருவறீங்க. உங்க கதைகள் கவிதைகள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரெகுலராப் படிப்பேன். நல்லா எழுதறீங்கன்னு சொல்லலாம்னு உங்க ஐடிய வச்சு சர்ச் பண்ணி உங்க நம்பர் எடுத்து வச்சிருந்தேன். சரி நாமளாப் போய் சொன்னா எதும் தப்பா எடுத்துப்பாங்களோனு நினைச்சு ஃப்ரீயா விட்டுட்டேன். போதுங்களா?"
"அப்போ நான் கால் பண்ணினப்போ யாருன்னே தெரியாத மாதிரி பேசினிங்க?" கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது.
"இல்ல. நீங்க ஏமாத்த நினைச்சு ஜாலியா ஆரம்பிச்சிங்க. சரி உங்க ஜாலி மூடைக் கெடுக்க வேணாமேன்னுதான்..." என்று அவன் இழுக்கவும் அதற்குள் கோபம் காணாமல் போய் தொற்றிக் கொண்ட சிரிப்புடன்
"சரி இப்போ பிஸியா நீங்க? ஃப்ரீனா காபி சாப்பிடப் போலாம்" என்று ஏதோ ஒரு தைரியத்தில் கேட்டு வைத்தாள்.
"ஓ! ஷ்யூர். எவ்வளவு நேரங்க ஆயிடப் போகுது. போலாம்" என்று அவன் பதிலளித்ததும் அவளால் சந்தோஷம் தாள முடியவில்லை. உடனே எங்கு வருவது என்று சொல்லி விட்டு வேகமாக ரெஸ்ட் ரூமிற்குள் ஓடினாள். முகம் கழுவி லேசாக ஒப்பனை செய்துக் கொண்டு சொன்ன இடத்திற்கு விரைந்தாள். அவளுக்கு முன்பே வந்து அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தபோது இந்த மனம் ஏன்தான் இப்படி குதியாட்டம் போடுகிறதோ... ஹ்ம்ம்ம்... புதிய அனுபவம் என்றெண்ணிக் கொண்டு வந்தவள்
"சாரி சாரி..." என்றபடி அவனிடம் சென்றாள்.
"பரவாயில்லைங்க" என்று புன்னகைத்தான். இருவரும் சென்று காபி வாங்கிக் கொண்டு வந்தமர்ந்தனர். வேலையில் ஆரம்பித்து தங்கியிருப்பது, கல்லூரி என்று எங்கெங்கோ சுற்றி வந்தப் பேச்சு இறுதியாக அவளது ப்ளாக்கில் வந்து நின்றது. அதுவரை அவந்து பேச்சை அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தவள் அவளது ப்ளாக்கைப் பற்றி ரசித்து சொல்ல ஆரம்பித்தாள்.
"நான்கூட எதாவது எழுத ட்ரை பண்ணலாமான்னு நினைச்சேங்க. ஆனா என்னால ரெண்டு வரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுத முடியாது. அதனால மக்களை ஏன் கஷ்டப்படுத்தணும்னு விட்டுட்டேன்" என்றவன் அவள் புன்னகைக்கவும் தொடர்ந்து
"உங்க கதை எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். படிக்கும்போது எப்படியெல்லாம் எழுதறாங்கன்னு ரொம்ப ஆச்சரியமா நினைப்பேன். உங்ககூட இப்படி உக்காந்து காபி சாப்பிடுவேனு நான் நினைச்சுப் பார்க்கவே இல்ல" அவன் சொல்ல சொல்ல அவளுக்கு பெருமையாய் இருந்தது. சாதாரணமாய் நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொன்னாலே மனம் விண்ணில் பறக்கும். அதிலும் மனதுக்கு பிடித்த ஒருவர் புகழ்ந்தால்...
"அன்னைக்கே பஸ் ஸ்டாண்ட்லயே பேசி இருப்பேன். பட் அதுக்காகதான் ஹெல்ப் பண்ணினேனு நினைச்சுட்டீங்கனா... அதான் பேசலை" ஒரு நிமிடம் அமைதியாயிருந்துப் பின்
"உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன். ஆக்சுவலா உங்க நம்பர் எடுத்ததும் அதுக்காகதான். பண்ணுவீங்களா?" என்று அவன் கேட்டதும் என்னவாய் இருக்கும் என்னவாய் இருக்கும் என்று மனம் அலைபாய்ந்தது. ஒரு நிமிடம் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.
"சொல்லுங்க" என்றால் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல்.
"எங்க வீட்டுல எனக்கு ஒரு பொண்ணு பாத்தாங்க. கிட்டத்தட்ட உறுதி ஆயிடுச்சு. நான் அந்தப் பொண்னை ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். எங்களுக்காக ஒரு கதை எழுதி தர முடியுமா?" அவன் கேட்டதும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று வெடித்து சிதறியது. ஒரு வித தாள முடியாத துயரத்தில் கண்கள் லேசாய் துளிர்க்க ஆரம்பித்ததும் சிவக்க ஆரம்பித்த முகத்தை தாழ்த்தி கைக்கடிகாரத்தில் மணிப் பார்த்தவள்
"அச்சோ! இப்ப ஒரு மீட்டிங் இருக்கு. மறந்துப் போயிட்டேன். சாரி. கதை எழுதி அனுப்பறேன். will catch u later" என்று சொல்லி விட்டு பதிலுக்கு காத்திராமல் எழுந்து விறுவிறுவென்று சென்றாள்.
ஏதோ பல வருடங்களாய் உருகி உருகி காதலித்தவன் தன்னை விட்டுப் பிரிந்ததுப் போல் தவித்தாள். சில மணி நேரங்களாய் ஒரு பெரிய போராட்டம் நடத்தி தனது முட்டாள்தனத்தை தானே கடிந்துக் கொண்டு ஒரு வழியாய் ஓரளவு மீண்டாள். மாலையில் அவன் கேட்ட கதையை எழுதி தரலாம் என்றெண்ணி எழுத ஆரம்பித்தாள். "இதுக்கெல்லாம் நான் பயந்த ஆளில்ல...." என்று ஆரம்பித்து அவளுடன் நடந்த சம்பவங்களைக் கோர்த்தாள். பெண்ணிற்கு வித்யா என்றும் பையனுக்கு அவனது பெயரையே வைத்து எழுதினாள். அவளை புதியவளாய் அவனுக்கு அறிமுகப்படுத்தி இருவரையும் நன்குப் பழக வைத்து இறுதியில் அவர்களைக் காதலர்களாக்கினாள். எழுதி முடித்ததும் அவனுக்கு மெயிலில் அனுப்பினாள். சில நிமிடங்களிலேயே காஃபி ஷாப்பிற்கு வர முடியுமா என்ற விண்ணப்பத்துடன் அவனிடமிருந்து கால் வந்தது. இப்பொழுது முடியாது என்று மறுத்தவள் ப்ளீஸ்! இந்த கதைக்கான ட்ரீட். மாட்டேனு சொல்லாதீங்க என்று அவன் கேட்கவும் அவளால் மறுக்க முடியவில்லை. சரியென்று சென்றாள்.
"கதை சூப்பருங்க. நான் உங்களை மீட் பண்ணினத வச்சு ஆரம்பிச்சு அட்டகாசமா முடிச்சிட்டிங்க" என்று அவன் புகழ்ந்து தள்ள அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
"ஆனா ஒரு சின்ன ரெக்வெஸ்ட். இதுல ஒரு விஷயம் மாத்தி தர முடியுமா?" என்று அவன் கேட்கவும் என்ன என்பது போல நிமிர்ந்துப் பார்த்தாள்.
"அந்த பொண்ணு பேரு வித்யா இல்ல..." என்று இழுக்கவும்
"அட! நான் அந்த பொண்ணு பேரு கேக்க மறந்துட்டேன். அதான் சும்மா ஒரு பேரை வச்சேன். மாத்தி தரேன். சொல்லுங்க" என்றாள்.
"அந்த பொண்ணு பேரு நித்யா. நீங்க எழுதி இருக்கறது கதை இல்ல. நிஜம்" என்று அவன் முடிக்கவும் ஆச்சர்யமாய் நிமிர்ந்தாள். என்ன கனவு ஏதும் காண்கிறோமா என்று திகைத்து விழித்தாள்.
"எனக்கு ஒரு ரெண்டு மாசம் முன்னாடி ஒரு பொண்ணு பாத்தாங்க. ரெண்டு வீட்டுலயும் எல்லாம் ஓகே ஆயிடுச்சு. நானும் அந்த பொண்ணும் பேசி ஓகே சொன்னா முடிஞ்சது. பேசறதுக்கு முன்னாடி எதாவது தெரிஞ்சக்கணும்னு அவ அண்ணன்கிட்ட பேசினேன். அவர் சொன்னார் என் தங்கச்சிக்கு எழுதறதுனா ரொம்ப இஷ்டம். நித்யாவுடன் சில நேரம்-ன்ற பேருல ப்ளாக் கூட எழுதறானு அவ ப்ளாக் அட்ரஸ் கொடுத்தார். அப்போதான் அவ ப்ளாக் அறிமுகம். அவ எழுத்து எனக்கு ரொம்ப பிடிச்சது. அவளோட தீவிர ரசிகனானேன். அவள மீட் பண்ணப் போற நாளுக்காக காத்திருந்தப்போதான் அவ இன்னும் ஒரு வருஷம் கழிச்சுப் பண்ணிக்கறேனு பிடிவாதமா இருக்கறான்னு சொன்னாங்க. ஒரு பெரிய ஏமாற்றம். சரி ஒரு வருஷம் காத்திருப்போம்னு வெயிட் பண்ண ஆரம்பிச்சேன். யதேச்சையா அவளுக்கு ஹெல்ப் பண்ணப் போயி இன்னைக்கு என் முன்னாடி அவ" என்று மூச்சு விடாமல் அவன் சொல்ல உலகம் மறந்துக் கேட்டுக் கொண்டிருந்தவள்
"அப்போ... சரோஜா அத்தை தூரத்து சொந்தக்கார பையன் சுப்ரமணி..." என்று அவள் விழுங்கவும்
"யெஸ். நானேதான்" என்று அதே ட்ரேட்மார்க் புன்னகையை தந்தான். ஒரு நிமிடம் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருந்தவள் எதுவும் சொல்லாமல் எழுந்தாள். எதும் சொல்லவில்லை கோபமோ என்ற பார்வையைக் கொடுத்தவனிடம் எதுவும் பேசாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். சோகம் தாளாமல் அவளையே இமைக்காமல் பார்த்தபடி அவன் இருக்க சிறிது தூரம் சென்றவள் திரும்பி
"இப்போ ஊருக்கு கிளம்பறேன். இப்போ போனாதான் பஸ்ஸ பிடிக்க முடியும். வீட்டுக்குப் போங்க. போய் பேசி எங்க வீட்டுல வந்து கேக்க சொல்லுங்க" என்று புன்னகைத்தாள்.
"ஹே!" என்றபடி உலகின் மொத்த சந்தோஷத்தையும் அள்ளி நெஞ்சில் திணித்துக் கொண்டவன் எழுந்து அவளை நோக்கி வேகமாக சென்றான். அவன் கிட்டே நெருங்குவதற்குள் வேகமாக நடக்க ஆரம்பித்தவள் அவனிடம் திரும்பி
"இந்த சண்டேவே நிச்சயம் வச்சுக்க சொல்லலாமா?" என்று சிரித்தபடி நிற்காமல் நடந்தாள்.
"ஹே! நில்லு. இது ஆபிஸ். ஓடிப் பிடிச்சு விளையாடற இடமில்ல" என்று நடையிலேயே அவன் துரத்த இருவரும் நடந்துப் பிடித்து விளையாட ஆரம்பித்தனர்.
Posted by இம்சை அரசி at 11:55 AM 49 comments
Labels: கதை
Thursday, March 13, 2008
காதலியும் சிம்பன்ஸியும்!!!
சாரதி... பார்ப்பதற்கு கம்பீரமான வாட்டசாட்டமான இருபத்தைந்து வயது இளைஞன். இருபத்தைந்து வயதானாலும் மாறாதிருந்த குழந்தைத்தனமும், குறும்புத்தனமும் முகத்திற்கு இன்னும் ஒரு களையை சேர்த்தது.
அன்பான அப்பா, நெருங்கிய தோழியாய் அம்மா. இதை விட ஒருவனுக்கு வேறென்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க? சாரதி ஜெயித்துக் கொண்டிருப்பவன். நன்குப் படித்தான். படித்து முடித்த கையோடு சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் அமர்ந்தான்.
வேலையிலும் சுட்டி என்று அனைவரிடமும் பெயரெடுத்தாயிற்று. எழுத்தார்வத்தில் சிறு வயதிலிருந்தே செய்த முயற்சிகளின் விளைவாய் இன்று ஒரு நல்ல எழுத்தாளராய் அடையாளம் பெற்று விட்டான். எழுத்துலகில் கூடிய விரைவில் பெரிய இடத்திற்கு வருவான் என்று எல்லோராலும் நம்பப்படுகிற நம் சாரதி இதோ இங்கு பெருமாள் கோவில் பிராகாரத்தில் அமர்ந்திருக்கிறான்.
கற்பூர வாசனையும் துளசி கலந்த தீர்த்த மணமும் நாசியை இதமாய் வருடிச் செல்ல சாரதி அதனை இழுத்து நுகர்ந்து ரசித்தபடி தரையில் விரல்களால் ஏதேதோ வரைந்தபடி அமர்ந்திருந்தான். எவ்வளவுதான் இருந்தாலும் இந்த வாசனையை உள்வாங்கும்போது மனது அமைதியாகி லேசாகிப் போகிறதே என்று எண்ணி மெலிதாய் புன்னகைத்தவன் பார்வையில் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த ஒரு காதல் ஜோடி பட தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.
ஹ்ம்ம்ம்... எத்தனையோ காதல் கதைகள், கவிதைகள் எழுதியாயிற்று. அப்பொழுதெல்லாம் இது போல் ஓர் எண்னம் வந்ததில்லையே. ஆனால் சில நாட்களாய் மட்டும் மனதில் ஒரு வெறுமை படர்கிறதே. எனக்கே எனக்கென்று ஒரு உறவு வேண்டுமென்று மனம் ஏங்குகிறது. எல்லாருக்கும் கிடைத்திருக்கிறது. எனக்கு மட்டும் ஏன் இதுவரை கிடைக்கவில்லை? அதற்கான தகுதி எனக்கு இல்லையா? இந்தக் கேள்வியிலேயே மனமுடைந்து அதன் வெளிப்பாடாய் முகம் சுருங்கவும் அன்னிச்சையாய் நிமிர்ந்து நவக்கிரகங்களை சுற்றிக் கொண்டிருந்த நந்தினியைப் பார்த்தான்.
நந்தினி... சாரதியின் ஆருயிர் தோழி. ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாய் கூடப் படித்தவள். கல்லூரியிலும் ஒன்றாய் படித்து இன்று சென்னையில் ஒரே நிறுவனத்தில் வேலை. ஆறாம் வகுப்பில் ஒரு சிறு சண்டையில் ஆரம்பித்த அவர்கள் நட்பு இன்று வரை தொடர்ந்தது இருவரும் செய்த புண்ணியமாகவே அவர்களுக்குத் தோன்றும். அப்பொழுதே அவனது அம்மாவை பள்ளிக்கு அழைத்து வந்து அவளை அறிமுகப்படுத்தினான்.
ஆனால் அவளால் செய்ய முடியாதப் போன விஷயம் அது ஒன்றுதான். அவள் பெற்றோருக்கு இப்படி ஒரு ஆண்பிள்ளையின் நட்பு இருப்பது தெரிந்திருந்தால் அத்துடன் அவளது பள்ளி வாழ்க்கை முடிந்துப் போயிருக்கும். பள்ளியில் ஆரம்பித்து இன்று வேலை செய்யும் இடம் வரை பலமுறை எதிர்கொண்ட கேள்வி நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? முதல் முறை இந்த கேள்வியை எதிர்கொண்டபோது பதில் பேசமுடியாது திணறித்தான் போனாள்.
இப்பொழுதெல்லாம், என் அம்மா மேல எனக்கிருக்கற பாசத்துக்குப் பேரு காதல்னா நான் அவனைக் காதலிக்கிறேன்தான் என்று சிரித்துக் கொண்டே சொல்வாள். அவனும் அன்பாய் அவளை பப்பு என்றே அழைப்பான். அது அவனது பெண் குழந்தையை அழைப்பதற்கென்று தேர்ந்தெடுத்து வைத்திருந்தப் பெயராம். இதோ அவனது பப்பு என்ன செய்கிறாள் என்று பார்ப்போம்.
அவன் முகவாட்டத்தைக் கண்டதும் கடைசி இரண்டு சுற்றுகளையும் வேகமாய் முடித்துக் கொண்டு அவனை நோக்கி வருகையிலேயே அவனிடத்தில் புன்னகை வந்தமர்ந்தது. உன்னை விட என்னை யாரால பப்பு புரிந்துக் கொள்ள முடியும்? என் முகத்தை வைத்தே நான் என்ன மனநிலையில் இருக்கிறேனென்று கண்டுபிடித்து விடுவாயே. அவனையும் மீறி கண்கள் லேசாய் துளிர்த்தது.
"என்னடா? என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு சோகம்" என்று அவள் கேட்கவும் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறினான். திணறியவன் கண்கள் தற்செயலாய் அந்த காதல் ஜோடியிடம் போய் திரும்ப அவனதுப் பார்வை சென்ற இடத்தை வைத்தே அவனது மனக்கவலையை யூகித்தாள்.
"பப்பு உன்கிட்ட ரொம்ப நாளா ஒரு கேள்வி கேக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். நீதான் பெரிய எழுத்தாளராச்சே. பதில் சொல்லுவியானு பாப்போம்" என்று அவள் பீடிகையுடன் ஆரம்பிக்க என்னவாய் இருக்கும் என்று ஒருவித ஆர்வத்துடன் அவள் முகம் பார்த்தான்.
"இந்த உலகத்தோட முதல் மனிதர்கள் யார்?" - இது ஒரு கேள்வியா என்றப் பொய்க் கோபத்துடன் அவன் போலியாய் முறைக்க
"இரு இரு... இன்னும் என் கேள்விக்கே வரலை. இதுக்கு மொதல்ல பதில் சொல்லு" என்றாள்.
"ஆதாம் ஏவாள்"
"ஹ்ம்ம்ம். குட். ஆதாம் ஏவாளைப் பார்க்கறதுக்கு முன்ன வேற யாரை காதலிச்சிருப்பான்னு நீ நினைக்கற?" இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல் தெரியாது என்பதுப் போல் தலையை இடவலமாய் அசைத்தான்.
"வெல். கடவுள் மொதல்ல ஆதாமைதான் படைச்சார். அவன் உலகத்துக்கே அதிபதியா அவனோட ராஜ்ஜியத்துல சந்தோஷமா இருந்தான். ஆனா அவனுக்கு விலங்குகள் எல்லாம் அதது அதோட துணையோட இருக்கறதப் பாத்துட்டு நமக்கு இப்படி ஒரு துணை இல்லையேனு தனிமைய உணர ஆரம்பிச்சான். அப்போ அவனுக்கான துணைய அவனே தேட ஆரம்பிச்சான்.
மனிதர்களே இல்லாத அந்த உலகத்துல அவனுக்கு ஒரு நல்ல துணையா தோணினது ஒரு அழகான சிம்பன்ஸி குரங்குதான். அந்த குரங்கை துணையா ஏத்துக்கிட்டா அதைக் கட்டிப் பிடிச்சிட்டு டூயட் பாடியிருப்பான். அதுக்காக மானே தேனே-ன்னு காதல் கவிதைகள் எழுதி இவ்வுலகில் உன்னைப் போல் அழகுண்டோ உன் குரலைப் போல் ஒரு இசையுண்டோனு உளறியிருப்பான். அதுதான் அவனோட வாழ்க்கைனு அதுக்கு புரிய வைக்க முயற்சிப் பண்ணியிருப்பான்.
ஆனா அவவ்ளவும் சுத்த வேஸ்ட். அந்த சிம்பன்ஸி குரங்குக்கு என்னப் புரிஞ்சிருக்கும்? இவன் சொல்ற எதும் புரியாம இருக்கற அதுகிட்ட இவனால எந்த சந்தோஷத்தையும் காதலையும் வாங்கி இருக்க முடியாது. அதுக்கு பதிலா அவன் என்ன பண்ணினான் தெரியுமா? அவனைப் படைச்சக் கடவுள் அவனுக்கான துணையைத் தருவார்னு நம்பினான்.
அதே மாதிரி கடவுள் அவனுக்கு அழகான யுவதி ஏவாளைக் கொடுத்தார். அவனுக்கு வேண்டியக் காதலை ஏவாள் கொடுத்தா. ரெண்டுப் பேரும் சந்தோஷமா இருந்தாங்க"- அவள் முடித்ததும் அவன் முகத்தில் வழக்கமான ஒரு புன்னகை அரும்பியது. சற்றுத் தெளிந்தாற் போல இருந்தான்.
தனது மனக்கவலை அவளுக்குத் தெரிந்து விட்டதே என்ற வெட்கமும் சொல்லாமலே தன்னைப் படிக்கிறாளே என்ற பெருமையும் சேர்ந்து மிளிர "என்ன சொல்ல வர இப்போ நீ?" என்று அவளை சீண்டினான்.
"டேய்! உன்னைப் படைச்சக் கடவுளுக்கு உனக்கான பெண்னை அனுப்பவும் தெரியும். சரியா? சும்மாக் கண்டதப் போட்டு குழப்பிட்டு இருக்காத"
"சும்மா ஆதாம் ஏவாள்னு எல்லாம் கதை விடாத. அப்போ காதலிக்கறது தப்புனு சொல்ல வரியா?"
"நான் தப்புனு சொல்லலைடா. ஆனா காதல் இல்லைனு ஃபீல் பண்ணாதனு சொல்றேன்"
"எனக்கென்ன இல்லை? ஏன் நான் காதலிக்கக் கூடாது?" - சிறுப் பிள்ளையைப் போல அடம்பிடிக்கும் அவனைப் பார்த்து அவளுக்கு சிரிப்புதான் வந்தது.
"சரி உன்கிட்ட இன்னொரு கேள்வி. இந்த அம்மா அப்பாவுக்கு பிறக்கணும், இந்தக் கலர்ல பிறக்கணும், இந்த அப்பியரன்ஸ் வேணும்னு நீயாவா எல்லாம் தேர்ந்தெடுத்த?"
"தலைவர் பாட்ட காப்பி அடிக்காத"
"கேட்டதுக்கு பதில சொல்லுடா வெண்னை"
"இல்ல"
"ஆனா உனக்கு பெஸ்ட்டான அம்மா அப்பாவக் கடவுள் கொடுத்தார் இல்ல. என்ன கொஞ்சமாச்சும் அழக கொடுதிருக்கலாம்" அவள் உதடு சுழிக்க
"நீ சைக்கிள் கேப்ல டேங்கர் லாரியே ஓட்டுவடி" என்று தலையில் குட்டினான்.
"சரி பேக் டு த டாபிக். இப்படி அம்மா அப்பாவுக்கு பிள்ளையாப் பொறந்ததுக்கு கர்வப்படறேனு சொல்லுவியே. இதையெல்லாம் உனக்கு பெஸ்ட்டா கடவுள் கொடுத்தார் இல்லையா?"
துளசி, வில்வ இலையெல்லாம் மருந்து மாதிரி. உடம்புக்கு ரொம்ப நல்லது. அதை சொன்னா எல்லாரும் சாப்பிட மாட்டாங்கனுதான் கடவுளுக்கு உகந்ததுனு சொல்லி கோவில்ல கொடுக்க ஆரம்பிச்சாங்க. கடவுளோட பிராசதம்னா எல்லாரும் கண்டிப்பா சாப்பிடுவாங்க இல்ல. அதான் - பால்ய வயதில் கோவிலுக்கு சென்ற பொழுது சொன்ன அம்மாவின் முகம் கண்முன் வந்தது. அம்மாவிற்கு எப்பொழுதும் பொறுமையாய் விளக்கி சொல்லும் குணம். அதே குணம் நந்துவிடமும் என்றெண்ணியபடியே அவளதுப் பேச்சை கவனித்தான்.
"அதே மாதிரி உனக்கான துணையைவும் பெஸ்ட்டாக் குடுப்பார். அதுக்கு முன்னாடி ஒரு சிம்பன்ஸியத் தேடிப் பிடிச்சுக்காத"
"சரி என்னை விடு. உனக்கு கடவுள் என்ன பெஸ்ட்டாக் குடுத்துட்டார்? எதுக்கெடுத்தாலும் சந்தேகப்படற அம்மா. உன் சம்பளத்த வாங்கி வச்சுக்கிட்டு செலவுக்குக் கூட பத்தாம பணம் தர அப்பா. ரெண்டு பேருக்கும் பாசம்னா என்னன்னே தெரியாது. இப்படி உனக்கு எல்லாமே வொர்ஸ்ட்டாக் குடுத்த கடவுள் உன் லைஃப் பார்ட்னர் மட்டும் பெஸ்ட்டாக் குடுப்பார்னு நம்பறியா?"
"ஹ்ம்ம்ம்ம். இப்போ உன் க்ளையன்டுக்கு ப்ராஜக்ட் டெலிவர் பண்ற. அதுல எக்கச்சக்க பக்ஸ். அதை நீ ஃபிக்ஸ் பண்ற வரைக்கும் அவங்க பொறுத்துக்கிட்டாங்க. அதே க்ளையண்டுக்கு அடுத்த தடவை ப்ராஜக்ட் பண்ணும்போது எப்படி பண்ணுவ?"
"எந்த பக்ஸ்ம் இல்லாம பக்காவா அனுப்பனும்னு நினைப்பேன்"
"அதே மாதிரிதான். எல்லாமே பெஸ்ட்டாக் கொடுத்த உனக்கே பெஸ்ட்டா ஒரு பொண்னைக் குடுக்கறார்னா வொர்ஸ்ட்டாக் குடுத்த எனக்கு எப்படிக் குடுப்பார்னு நீயே திங்க் பண்ணிப் பாரு"
இதற்குள் கவலையெல்லாம் விலகி தெளிவாகியிருந்தவன் அட! எவ்வளவு புத்திசாலித்தனமாய் சிந்தித்தாலும் இவள் முன் ஒன்றும் அறியா சிறுவனாகி விடுகிறோமே என்று வியந்தான்.
"கடவுள் எனக்கு எல்லாமே வொர்ஸ்ட்டாக் குடுக்கலைடா. பெஸ்ட்லயும் பெஸ்ட்டா உன்னை எனக்கு ஃப்ரெண்டா குடுத்திருக்கார் இல்ல" என்று அவள் அன்பாய் புன்னகைக்கவும் உலகின் மொத்தக் கவலையும் மறந்து ஆதரவாய் அவள் கையைப் பற்றி எழுப்பி அழைத்து சென்றான். "தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே" என்று அவளது உதடுகள் அவனுக்கான பாடலை தானாய் முணுமுணுத்தன.
பி.கு: இந்தக் கதையை எழுதத் தூண்டிய கதை. உங்க்ளுக்காக தமிழில் மாற்றி கொஞ்சம் நட்பும் சேர்த்து எழுதி இருக்கிறேன்.
Posted by இம்சை அரசி at 5:55 PM 17 comments
Labels: சிறுகதை
Sunday, March 9, 2008
வெள்ளித்திரை திரைப்படமும் எனக்குப் பிடித்த ஒரு நாவலும்
இன்னைக்குதான் இந்தப் படம் பாத்துட்டு வந்தேன். வந்ததுமே சுடசுட விமர்சனம் எழுதலாம்னு வரலை. ஹி... ஹி... விமர்சனம் எழுத தெரியாதே எனக்கு... ஆனா படத்தப் பத்தி என்னோட கருத்த சொல்லனும்னு தான்...
படம் என்ன டைப் அதாவது காமெடியா, இல்ல சென்டி கதையா, ஆக்சன் கதையா அப்படின்னோ இல்ல அட்லீஸ்ட் படத்தோட கதை என்னன்னே தெரியாம போய் பாத்தா அது உண்மையாவே ஒரு நல்ல அனுபவமாதான் இருக்கும். அதாவது அடுத்து என்ன நடக்கும்னு தெரியாம பார்க்கும்போது ஆட்டோமேட்டிக்கா என்ன ஆகுமோ என்ன ஆகுமோனு ஒரு இன்ட்ரெஸ்ட் வந்துடும். அதும் ஒரு நல்ல படமா அமைஞ்சுட்டா??? சொல்லவே வேணாம். அப்படி ஒரு சீன் கூட முன்னாடியேப் பார்க்காம நான் ரசிச்சுப் பார்த்தப் படங்கள் 12B, பார்த்தேன் ரசித்தேன், கனாக் கண்டேன். அந்தப் படங்கள் எந்த அளவுக்கு ஹிட் ஆச்சுன்னோ எந்த அளவுக்கு எல்லாருக்கும் பிடிச்சுதுன்னோ எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது. இப்பொல்லாம் திரை விமர்சனம் அது இதுனு எழுதி கதைய முன்னாடியே சொல்லிடறதால சில நல்ல கதைகள் ரீச் ஆகாம போயிடறதுன்றது என்னோடக் கருத்து. சோ இந்தப் படத்தோட கதைய நான் எழுதப் போறதில்ல.
ஆனா சில விஷயங்கள் மட்டும் சொல்லணும்னு ஆசை. அதான் எழுத வந்துட்டேன். படம் பாக்கலாமானு யோசிச்சப்ப என்னென்ன படம் ஓடுதுனு கேட்டேன். வரிசையா சொல்லும்போது வெள்ளித்திரை ப்ரகாஷ்ராஜ் படம்னு சொன்னாங்க. உடனே கண்ணை மூடிட்டு அதுக்குப் போலாம்னு சொல்லிட்டேன். அதுக்கு ரெண்டு ரீசன்ஸ். ஒண்ணு என்னோட ஃபேவரைட் ஆக்டர்(அவருக்காக ஒரு பதிவே பொடணும்னு நினைச்சுட்டு இருக்கேன். கூடிய விரைவில்...). ரெண்டாவது இது அவரோடத் தயாரிப்பு. அவரோட தயாரிப்புன்னா கண்டிப்பா ஒரு நல்லக் கதை இருக்கும்னு உறுதியா நம்பற ஆள் நான். அழகிய தீயே, மொழி ரெண்டுமே வித்தியாசமான கதைகள். அதே மாதிரி இதுவும் ரொம்பவே ஒரு வித்தியாசமானக் கதை.
குறுக்கு வழியிலாவது ஹீரோ ஆயிடணும்னு துடிக்கற ஒரு நடுத்தர வயது இளைஞன், வியாபரத்துக்காக இல்லாம ஒரு நல்லக் கதைய படமா எடுக்கணும்னு லட்சியத்தோட இருக்கற ஒரு உதவி இயக்குநர், உதவி இயக்குநரால அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு நல்ல இடத்தைப் பிடித்திருக்கற ஒரு நடிகை இவர்களை சுற்றி நகர்கிற கதை. சின்னதா ஒரு ரொமான்டிக் சீன் கூடப் படத்துல இல்ல. ஆனா கவிதை போல ஒரு அழகான காதல் ப்ளசண்டா ஒரு ஸ்மைல் வர வைக்குது. மத்த இரண்டுப் படங்களோட ஒப்பிடும்போது இதுல காமெடி ரொம்ப கம்மிதான். ரொம்ப விழுந்து விழுந்து சிரிக்கற அளவுக்கெல்லாம் எதுமே இல்ல. எனக்குப் பெரிய ஏமாற்றம் என்னன்னா மற்ற இரண்டுப் படங்கள்ல வந்த மாதிரி தலைவர் ஒரு நல்ல இண்ட்ரெஸ்டிங்கான வித்தியாசமான கேரக்டர்ல வருவார்னு ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனா இதுல ஒரு வில்லத்தனமான கேரக்டர்ல வந்து ஏமாத்திட்டார் :((( ஆனா எந்த கேரக்டரா வந்தாலும் என்னோட ஸ்பெஷாலிட்டி தெரியும்ன்ற விஷயத்த மட்டும் கொஞ்சமும் குறைவில்லாம இதுல பண்ணியிருக்கார். ப்ருத்விராஜ்... ஜாலியா காமெடிப் பண்ணிட்டு வாழ்க்கைய எஞ்சாய் பண்ற ஒரு சராசரி இளைஞனா இல்லாம லட்சியம்ன்ற வார்த்தைதான் வாழ்க்கைனு வாழ்ந்துட்டு இருக்கற ஒரு அழுத்தமான கேரக்டர். ரொம்ப நல்லாப் பண்ணியிருக்கார். கடைசில கொஞ்சம் சினிமாத்தனமா போயிடுச்சு. வழக்கம்போல ஹீரோன்னா ஜெயிக்கணும்ன்ற மாதிரி.
ஒரு நல்லப் படம் பார்க்கணும்னு நினைக்கறவங்க யோசிக்காமப் போய் பார்க்க வேண்டியப் படம். முடிஞ்சாப் பாருங்க.
இந்தப் படத்தைப் பார்த்தப்போ சினிமான்னு வாழற இளைஞர்கள்னு ஆரம்பிச்சப்போ நான் எப்போவோ கண்மணிலப் படிச்ச ஒரு நாவல் ஞாபகத்துக்கு வந்துச்சு. ஒரு ஆறு வருஷத்துக்கு முன்னாடிப் படிச்சக் கதை. இன்னும் ஒவ்வொரு அத்தியாயமும் ஞாபகம் இருக்கு. படிக்கும்போது எனக்கே கண்ணீரைக் கன்ட்ரோல் பண்ண முடியலை. அவ்ளோ ஃபீல் பண்ணிப் படிச்சக் கதை. நீங்கக் கூடப் படிச்சிருக்கலாம்.
கதையோட முதல் அத்தியாயமே ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பார்ல ஒருத்தன் தண்ணியடிச்சிட்டு கத்தறதால பார் ஆளுங்க வெளில போகச் சொல்லி சண்டை போடறதுலதான் ஆரம்பிக்கும். அவன் தமிழ்நாட்டோட நம்பர் ஒன் டைரக்டர். அவனை அவனோட அசிஸ்டெண்ட் டைரக்டர் வெளியக் கூட்டிட்டு வரப்போ "எனக்கு அவ வேணும் எனக்கு அவ வேணும்"-னு அவன் கதறி அழுவான். அப்போதான் ஃப்ளாஸ்பேக் ஆரம்பிக்குது. அவன் டைரக்டராகும்னு ஒரு லட்சியத்தோட சென்னை வரான். எப்படியோக் கஷ்டப்பட்டு அசிஸ்டெண்ட் டைரக்டரா ஆயிடறான். அவனுக்கு கொஞ்ச நாள்ல ஒரு பெரியவரோட நட்புக் கிடைக்குது. அவருக்கு இவனோட எண்ணங்களும் எழுத்துக்களும் ரொம்பப் பிடிக்குது. அவன் காசில்லாமக் கஷ்டப்படும்போதெல்லாம் அவர் உதவிப் பண்றார். ரெண்டுப் பேருக்கும் இடைல ஒரு நல்ல நட்பு வளர்ந்து அவரோட வீட்டுக்கெல்லாம் அவன் வர அளவுக்கு உரிமைக் கொடுக்கறார். அவருக்கு மனைவி இல்ல. மூணுப் பொண்ணுங்க. அதுல முதல் பொண்ணுக்கும் இவனுக்கும் காதல் வருது. அவதான் தனக்கு எல்லாமே நினைச்சு ரொம்ப டீப்பாக் காதலிக்கறான். இந்த விஷயம் தெரிஞ்ச அவ அப்பா அவளை கண்டிக்கறார். சினிமாக்காரவங்களோட நட்பா பழகலாம் ஆனா லைஃப்னு வரும்போது அவங்க சரிப்படமாட்டாங்கனும் அவ அவனைக் கல்யாணம் பண்ணிட்டா தங்கச்சிங்க லைஃப் ஸ்பாயில் ஆயிடும்னும் மீறி அவ பண்ணிக்கிட்டா அவங்க மூணுப் பேரும் தற்கொலைப் பண்ணிப்பாங்கன்னும் அவளை மிரட்டறார். அதனால அவனை மறந்துடறேனு அவ சம்மதிச்சிடுறா. அவங்கப்பா அவளுக்கு வேகமா மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிக்கறார். வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லாம அவனுக்கு 'நான் இல்லைன்ற கவலைல நீங்க நொடிஞ்சுப் போயிடக் கூடாது. நீங்க கண்டிப்பா ஒரு பெரிய டைரக்டரா வரணும். அதுதான் என்னோட ஒரே ஆசை'னு லெட்டர் எழுதிட்டு தற்கொலைப் பண்ணிக்கறா. அப்போதான் அவங்கப்பாவுக்கு செஞ்சத் தப்புப் புரியுது. அவன் முன்னாடி ஒரு குற்றவாளியா நிக்கறார். அவனுக்கோ உலகமே இருண்டுப் போன மாதிரி ஆயிடுது. ஒரு மாதிரி பைத்தியம் புடிச்சவன் மாதிரி ஆயிடறான். அவளோட ஆசைய நிறைவேத்தணும்னு வெறித்தனமா உழைச்சு ஒரு பெரிய டைரக்டர் ஆயிடறான். அதுக்கப்புறம் அவ குடும்பத்தை அவன்தான் பாத்துக்கறான். அவ அப்பா அவனை இப்போ மாப்பிள்ளைனு தான் கூப்பிடறார். அவர் ரெண்டாவது பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேக்கறார். அவன் என் வாழ்க்கைனா அது அவளோட மட்டும்தான். வேற யாருக்கும் இடம் இல்லைனு சொல்லி ரெண்டு பேருக்கும் நல்ல இடத்துலப் பாத்து கல்யாணம் பண்ணி வைக்கறான். காலம் முழுக்க அவளை நினைச்சுட்டே வாழறான்.
இதான் கதை. நான் ஒருவேளை சொதப்பலா கதை சொல்லி இருக்கலாம். ஆனா நாவல் எழுதி இருந்த விதமும் ரொம்ப அருமையா இருந்துச்சு. யார் எழுதினதுனு நோட் பண்ணி வைக்காம விட்டுட்டேன் :((( ஒவ்வொரு பார்ட்க்கு முன்னாடியும் ஒரு குட்டி கவிதை எழுதி இருந்தாங்க. அதுல எனக்குப் பிடிச்சு இன்னமும் ஞாபகம் வச்சிருக்கற ரெண்டு கவிதைகள்
"என்
நுரையீரல் சங்கீதமே!
எங்கே சென்றாய்?
தேடியலைகிறேன்
தேடித்... தேடித்... தேடித்..."
இது அவ செத்துப் போய் அவன் அழற பார்ட்க்கு இருந்தது.
"சாதனை செய்து விட்டதாய்
பலரிட்ட மாலைகளில்
கழுத்து கனக்கிறது
யாருமற்ற ராவில்
தாஜ்மஹாலின்
யமுனை நதிக்கரையில்
மகுடம் கழற்றி
கதறியழ வேண்டும்
போலிருக்கிறது"
இது அவன் சினிமால ஜெயிச்சு அவார்ட் வாங்கற பார்ட்க்கு.
சில கதைகள் மயிலிறகு மாதிரி மனசை இதமா வருடிச் செல்லும். சிலக் கதைகள் அட்லீஸ்ட் ஒரு சில மணி நேரங்களாவது அதோடப் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த மாதிரி நான் ஒரு சில நாட்கள் இந்தக் கதையவே நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். எப்போவாவது இதை நினைப்பேன். இதுப் படிச்சப்புறம்தான் நாம காதலிச்ச உயிர் இந்த உலகத்தை விட்டேப் பிரிஞ்சுப் போனா எவ்வளவு வலி இருக்கும்னு திங்க் பண்ணிட்டே இருந்தேன். அந்த மாதிரி ஒரு கொடுமை வேற எதும் இந்த உலகத்துல இல்ல. மனசெல்லாம் படம் பாக்க சான்ஸ் கிடைச்சும் அதனாலதான் நான் பாக்கலை. என்னோட சின்ன இதயம் இதையெல்லாம் தாங்கவே மாட்டேங்குது.
சரிங்க. இதை எழுதிட்டு எனக்கே மனசு கஷ்டம் கஷ்டமா ஆயிடுச்சு. பாப்போம். பை.
Posted by இம்சை அரசி at 12:02 AM 17 comments
Wednesday, March 5, 2008
கவிதை... கவித... கவுஜ...
கவிதை எனக்கு அறிமுகமானது சின்ன வயசுலயே. புத்தகம் வாசிக்கறப் பழக்கம் இருந்தா சீக்கிரம் எதையும் கிரகிச்சிக்கற திறமை வரும்னு வீட்டுல என்னை சின்ன வயசுல இருந்து சிறுவர்மலர் குடுத்துப் படிக்க சொல்லுவாங்க. அதுக்கும் இவ்வளவு நேரத்துக்குள்ளப் படிக்கணும்னு deadline வேற(என்ன கொடுமை சார் இது???) அப்போ புத்தகம் படிக்க ஆரம்பிச்சப் பழக்கம்தான் இங்க வரைக்கும் கொண்டு வந்து உங்களையெல்லாம் இம்சை பண்ண வச்சிருக்குன்றதுல எனக்கு எந்த டவுட்டும் இல்ல. உங்களுக்கு??? :)))
ஆங்... மறந்துட்டேன். கவிதைப் பத்திப் பேச ஆரம்பிச்சோம் இல்ல. சின்ன வயசுல சிறுவர்மலர்ல கவிதைகள் எல்லாம் படிச்சிருக்கேன். அப்போ எல்லாம் நம்மள மாதிரி மக்கள்ஸ் எழுதறதுதானு எனக்குத் தெரியாது. அதுக்காகவே பிறந்து வளர்ந்தவங்க எழுதறாங்கன்னு நினைச்சுக்குவேன். புள்ளைக்கு இவ்ளோ திறமை இருக்குனு எங்கம்மா அப்பாவுக்கு அப்போத் தெரியலை. இல்லைனா அப்போ இருந்தே எழுதி ஒரு பெரிய கவிஞர் ஆகி இருப்பேனாக்கும். தமிழ் கூறும் நல்லுலகம் எங்கம்மா அப்பவோட அறியாமையால ஒரு நல்ல அறிவாளிக் கவிஞரை மிஸ் பண்ணிடுச்சு :(((
அப்படியே சிறுவர்மலர்ல இருந்து வீட்டுக்குத் தெரியாம வாரமலர் படிக்க ஆரம்பிச்சு அதுலயும் கவிதைகள் புரியாட்டியும் ரசிச்சுட்டு இருந்த நான் பத்தாவது படிச்சப்போ JCsல இருந்து வந்து ஏதோ லீடர்ஷிப் க்ளாஸ் எல்லாம் எடுத்தாங்க. அப்போ ஒரு நாள் கவிதைப் போட்டி வச்சாங்க. மலை/மழை பத்தி கவிதை எழுதி தரணும். நானும் எங்கயாவது படிச்சோமான்னு யோசி யோசின்னு யோசிச்சேன். ஞாபகம் வந்தா அப்படியே எழுதிக் கொடுத்துடலாம்னு தான். அன்னைக்குனு பாத்து நம்ம குருவி மூளைக்கு எதுமே எட்டலை :(((
அதுல மொதல் பரிசு என் தோழி ஒருத்தி வாங்கினா. அந்த வயசுலயே ரொம்ப நல்லா எழுதி இருந்தா. ஆனா ரொம்ப நாளா அவ எங்கேயோ படிச்ச கவிதைய நல்லா ஞாபகம் வச்சு எழுதிட்டானுதான் நினைச்சுட்டு இருந்தேன். ஹி... ஹி... நம்மளைப் போலவேதான எல்லாரையும் நினைக்கத் தோணுது ;))) அன்னைக்கு வீட்டுக்குப் போனதும் எங்கம்மாட்ட இதுப் பத்தி சொல்லி எனக்கு மட்டும் எழுத வர மாட்டென்றதுனு ஃபீல் பண்ணிட்டு இருந்தப்போதான் அம்மாவுக்குப் புரிஞ்சதுப் போல புள்ளைக்கு இருக்கற திறமை. அப்போ சொன்னாங்க. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணக் கூடாது. எடுத்ததுமே எழுத வராது. எழுத எழுததான் நல்லா ப்ராக்டிஸ் ஆகும். அதுக்கு நிறைய கவிதை புக்ஸ் படிக்கணும். சுத்தி நடக்கறத அப்சர்வ் பண்ணனும். அதை வச்சு கவிதை எழுதணும்னு ஒரே அட்வைஸ்.
அப்போதான் எனக்குள்ள இருந்த கவிதாயினி கண்ணு முழிச்சா. உடனே வேகமா நோட்ட எடுத்துட்டு உக்காந்துக்கிட்டேன். வேற எதுக்கு? சுத்தி நடக்கரத அப்சர்வ் பண்ணத்தான். நோட்டு தேடிப் பிடிச்சு எழுதறதுக்குள்ள மறந்துப் போயிட்டா. அதான் முன்னெச்செரிக்கையா நோட்டும் கையுமா உக்காந்தாச்சு. நானும் சுத்திப் பாக்கறேன். ஒண்ணுமே நடக்க மாட்டேன்றது. செவுத்துல பல்லி ஒண்ணுதான் நடந்துச்சு. ச்சே! என்ன கொடுமைடா சாமினு வீட்டுக்கு வெளில சேர் போட்டு உக்காந்து எதாவது நடக்குதான்னு பார்த்தேன். ரொம்ப நேரம் கழிச்சு ரெண்டு எருமை மாடுதான் நடந்துப் போச்சு. நான் கவிதை எழுதறேன்னு பொறாமைலதான் எதுமே நடக்க மாட்டென்றதுனு எனக்கு வந்ததே கோபம். என்ன வாழ்க்கை இது? எதிர்பார்த்ததே நடக்க மாட்டேன்றது-ன்னு சலிச்சுட்டப்பதான் எனக்கு பொறித் தட்டுச்சு. வாழ்க்கை!!!! இதைப் பத்தி ஏன் கவிதை எழுதக் கூடாதுனு எனக்குள்ள ஒரு பல்பு எரிஞ்சது. உடனே உக்காந்து பயங்கரமா யோசிச்சு என் வாழ்க்கையோட சில மணி நேரங்களை மோட்டுவளையப் பாத்தே செலவிட்டு நான் மொத மொத எழுதின அரும் பெரும் கவிதை
"வாழ்க்கை சர்க்கரையாய்
இனிக்க வேண்டும்
ஆனால்
சர்க்கரை நோயாய்
மாறி விடக் கூடாது"
ஹி... ஹி... எப்படி ஒரு அரும் பெரும் தத்துவத்த அஞ்சு வரில சொல்லிட்டேனு பெருமையா எங்கம்மாட்ட தூக்கிட்டுப் போய் காட்டினேன். எங்கம்மாவுக்கு அதைப் பாத்ததும் சிரிப்பு வந்துடுச்சு. அப்போ ஒரு கவிஞரைப் பெத்த பெருமைல சிரிக்கறாங்கனு நினைச்சுக்கிட்டேன். இப்போதான் தெரியுது :((( அப்போ சொன்னாங்க எதாவது மெசேஜ் சொல்ற மாதிரி இருக்கணும். இல்ல வர்ணனையா இருக்கணும். அது சந்தோஷமா இருக்கலாம். இல்ல துக்கமாவும் இருக்கலாம். அந்த மாதிரி எழுத ட்ரை பண்ணுனு சொன்னாங்க. என் கவிதை சூப்பரா இருக்குனு சொல்லலையேனு ஒரே கோபம். அதுக்கப்புறம் பத்தாவதுல கவிதை எழுத ட்ரை பண்ணவே இல்ல. பதினொண்ணாவது ஹாஸ்டல்ல போய் தள்ளினதும்தான் வீட்டைப் பிரிஞ்ச துக்கத்துல கவிதையா உள்ளுக்குள்ள ஊறுச்சு. அம்மாவுக்கு அப்பாவுக்குன்னு கவிதையா எழுதி தள்ளினேன். எங்க செட்டுலயே நான் தான் பெரிய கவிஞர்னு பேரெடுத்தேன்னா பாத்துக்கங்களேன். அப்புறம் பன்னிரெண்டாவது முடிக்கப் போறப்போ எங்க பிரிவுக்காக எழுதின கவிதைதான் எனக்கு பேர் வாங்கித் தந்துச்சு.
"எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்த
நாம் இங்கே
பள்ளியென்னும் தூணில்
நட்பென்னும் கயிற்றால்
ஒன்றாய் பிணைக்கப்பட்டுள்ளோம்
புறத்தில் வேறுபட்டாலும்
அகத்தில் ஒன்றாகி
நட்பு வானில்
சிறகடித்திருக்கும் இவ்வேளையில்
பிரிவென்னும் வேடன்
நம்மைப் பிரிப்பதேனோ...
என்ன செய்ய?
காலமென்னும் கூட்டில்
அடைந்துதானே ஆகவேண்டும்"
இன்னும் கொஞ்சம் நல்லாவே இருந்துச்சு. எனக்கு சில வார்த்தைகள் மறந்துப் போயிடுச்சு. அந்த வயசுல்ல இது ரொம்ப பெரிய இலக்கிய கவிதை ரேஞ்சுக்குத் தெரிஞ்சது. அப்புறம் காலேஜ் சேந்ததுக்கப்புறம் இப்படிதான் தத்துப் பித்துனு எதாவது எழுதிட்டு இருப்பேன். ஒருநாள் எங்க தமிழ் சார் கவிதைப் பத்தி எடுக்கும்போது ஒரு கேள்விக் கேட்டார்.
"மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் என்ன வித்தியாசம்?"-ன்னுக் கேட்டார்.
நிறையப் பேர் நிறைய பதில் சொன்னாங்க. நான் சொன்னேன் "எல்லாருக்கும் ஐ மீன் படிக்காதவங்களுக்குக் கூட ஈஸியாப் புரியற மாதிரி எழுதறது புதுக் கவிதை. மரபுக் கவிதைன்னா தமிழ் புலமை நல்லா இருக்கறவங்களுக்கு மட்டும்தான் புரியும்"-னு. உடனே அவர்
"கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது- இது உங்களுக்கு புரியுதா?"-ன்னார். நான் ஆமாம்னு தலையாட்டினேன்.
"சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தப்போ பாமர மக்களுக்கும் புரியணும்னு நாமக்கல் கவிஞர் எழுதின இது சுத்தமான மரபுக் கவிதை"-னு சொன்னார். அதுக்கு மேல யோசிக்க விருப்பப்படாம அமைதியா உக்காந்துக்கிட்டேன். அப்போ அவர் கொடுத்த விளக்கம்
"தமிழ் கவிதைக்கான சுத்தமான இலக்கணத்தோட எழுதப்படறதுதான் மரபுக் கவிதை. எந்தவித இலக்கணங்களுக்கும் உட்படாம எழுதறது புதுக் கவிதை. இது யார் வேணும்னாலும் எழுதலாம். எப்படி வேணும்னாலும் எழுதி அதை கவிதைனு சொல்லிக்கலாம்"-னு அவர் சொன்னப்போதான் புதுக் கவிதைக்கான இலக்கணமே எனக்குப் புரிஞ்சது. ஹைய்யா! அப்போ நான் எழுதறதும் கவிதைதான் அன்னைக்கு மனசுல ஊன்றிய விதை இன்று மரமாக வளர்ந்து உங்கள் முன் அப்பப்போ வந்து பூப்பூத்துட்டு இருக்கு :)))
நான் எழுதறது கவிதை இல்ல கவுஜன்னு சிலர் சொல்லி இருக்காங்க. யார் என்ன சொன்னாலும் எனக்கு தோணுவதை மட்டுமே செய்யும் நான் என்னுடையவை கவிதைகள் என்றே இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆஹா! தமிழ் நல்லாவே வருது :P
என் டீம்மேட் ஒரு பையன் ஒருநாள் காலைல நான் ஒரு கவிதை எழுதி இருக்கேன். எப்படி இருக்குனு சொல்லுனு சொன்னான். சரி சொல்லுனு சொன்னதுக்கு கிடைச்சக் கவிதை
"தலைக் கட்டாமலிருந்தால்
கொத்துமாம் பாம்பு!
உண்மைதான்...
உனது விழிகளும்
இமைகளால் கட்டப்படாமல்
இருந்தன"
எனக்கு இது ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. சும்மா இருக்க மாட்டாம சூப்பரா எழுதி இருக்கனு அவனப் புகழப் போயி அவன் "நான் முன்னாடியெல்லாம் சூப்பரா எழுதுவேன் தெரியுமா. காலேஜ் போய் தான் வேஸ்ட்டாப் போயிட்டேன். கவிதைக் கூட சும்மா திட்டற மாதிரியே வருது like
சட்டில சுடணும் தோசை
உனக்கு வைக்கப் போறேன் பூசை
ஏய் டண்டனக்கா டணக்குணக்கா"-ன்னு TR ஸ்டைல்ல சொன்னான். என்னால சிரிப்பு அடக்க முடியலை. சரி ஒரு கவிதை எழுதிக் குடுனு நான் கேட்டுக்கிட்டதுக்காக அவன் எழுதித் தந்தக் கவிதை இங்க... இதுல மொதல்ல 'சை'ன்னு முடியற மாதிரி வார்த்தைகள் தேடிப் பிடிச்சு அடுத்தடுத்த வரில எழுதிட்டு அப்புறமா முன்னாடி இருக்கற வார்த்தைகள் எழுதினான்.
"மனசுக்குள்ள ஆசை
நடத்தவேணும் பூசை
சம்பாதிக்கல காசை
நமக்கெதுக்கு மீசை
சட்டில கிடக்குது தோசை
தின்னுப்புட்டு தூங்குடா சூசை"
அவனோட இந்தக் கவிதைய எழுதறதுக்கு முன்னாடியே என் ப்ளாக்ல போடறதா தெரியாத்தனமா ப்ராமிஸ் பண்ணிக் கொடுத்துட்டேன். அதான்....... :)))
Posted by இம்சை அரசி at 7:06 PM 24 comments
Labels: அனுபவம், கவிதை, சும்மா... லுலுலா...
Monday, March 3, 2008
அம்மா!!!
ச்சே! கையில் இருந்த ஹேண்ட்பேக்கை சோபாவில் தூக்கி வீசி விட்டு சென்று படுக்கையில் விழுந்தேன். என்ன இது? எப்போ பார்த்தாலும் என் கிட்ட சண்டை போட்டுக்கிட்டே. என்னை மட்டும் ஏன் பிடிக்கவே மாட்டேன் என்கிறது. நண்பர்களோடு சேர்ந்து அடுத்த வாரம் கோயம்புத்தூர் போகதானே அனுமதிக் கேட்டேன். கேட்காமல் எனக்குப் போகத் தெரியாதா? நாளையிலிருந்து வீட்டை விட்டு வெளியே தங்கி வேலைக்குப் போகப் போறேன். அங்கேயிருந்து நான் சொல்லாமல் போனால் தெரியுமா அம்மாவுக்கு. இருந்தாலும் சொல்லி விட்டுதான் போக வேண்டும் என்று நான் நினைப்பதை ஏன் புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.
ரம்யாவோட அம்மா எல்லாம் எவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருக்காங்க. நமக்கு மட்டும் ஏன் இப்படி இருக்காங்க? என்னையே நான் நொந்துக் கொண்டு கோயம்புத்தூர் செல்ல முடியாமல் போன கோபம், இயலாமை எல்லாம் சேர்ந்துக் கொள்ள முகம் சிவந்து கண்கள் பனித்ததை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. அப்பொழுது அறைக்குள் வந்த எனது அம்மா என்னை ஒரு நிமிடம் நின்றுப் பார்த்தார். பார்ப்பது எனக்குத் தெரிந்தும் தலை தூக்காமல் கவனியாததுப் போல இருந்தேன். எதுவும் பேசாமல் அவர் சென்றது எனது கோபத்தை சற்றே தணித்தது. இருந்தாலும் அண்ணன் எங்கு கேட்டாலும் உடனடியாய் விடுவதும் எனக்கு மட்டும் மல்லுக்கு நின்று போராடி அனுமதி வாங்க வைப்பதும் எனக்குள் இன்னும் கோபத்தை கிளறியது.
சிறு வயதில் இருந்தே அம்மாவுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பதே எனக்கு வழக்கமாகி விட்டது. எனது பிடிவாத குணம், அம்மாவின் விட முடியாத சில சமூக வழக்கங்களும் பெரும்பாலும் எங்களை சண்டையிட்டுக் கொள்ளவே செய்தன. அவர் சொல்வது சில சமயங்களில் புரிந்தாலும் இது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் கூட என்னை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுப்பது ஒருவித எரிச்சலை வர வைக்கிறது. சிறு வயதில் இருந்தே ஏனோ அம்மாவிற்கு என் மேல் பாசம் இல்லையென்றும் அண்ணன் மீதே முழு பாசமும் இருக்கிறதென்று நினைப்பு எனக்கு. சில சமயங்களில் அப்படி இல்லையென்று என்னுடன் நானே விவாதம் செய்து சமாதானப்படுத்த முயன்றால் கூட பல சமயங்களில் அந்த எண்ணமே மேலோங்கி வெற்றிக் கொள்ளவும் செய்கிறது.
சமையல் கற்றுக் கொள், பாத்திரம் கழுவு, வீட்டை சுத்தம் செய், பூக்கட்ட கற்றுக் கொள் என்றெல்லாம் என்னைக் கட்டாயப்படுத்தியபோதெல்லாம் எனக்குள் பொங்கி வந்த கோபத்தில் கத்தினேன். இதெல்லாம் கற்றுக் கொள்ளா விட்டால் போகிற இடத்தில் உன் மாமியார் பொண்ணை வளர்த்து வச்சிருக்கா லட்சணமா என்று என்னைதான் திட்டுவார் என்ற அவரது பதில் என் கோபத்தை மேலும் அதிகரிக்கவே செய்தது. அப்போ இன்னொரு வீட்டுக்கு சம்பளமில்லா வேலைக்காரியாப் போகத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பீர்களா என்று நான் கத்தியதில் ஆரம்பித்த சண்டை உனக்கு வரப் போற மாமியார் உலகமகா பாவம் செய்தவர் என்று வரப் போகிற என் மாமியாருக்காக என் அம்மாவும் உங்களுக்கு வரப் போற மருமக அதைவிட பாவம் செஞ்சவ என்று வரப் போகிற என் அண்ணிக்காக நானும் அனுதாபப்பட ஆரம்பித்ததில் சென்று முடிந்தது. ஆனால் அடுத்து வந்த ஒரு மாதத்தில் எனது அத்தைப் பையன் திருமணத்தன்று என் அத்தைப் பெண்கள் எல்லாருமாய் சேர்ந்து எனக்கு பூக்கட்டத் தெரியவில்லையென்று அடித்த கிண்டலில் அவமானப்பட்டுப் போன நொடியில்தான் அம்மா சொன்னதன் அருமை புரிந்தது. இவையெல்லாம் பரவாயில்லை. சொல்வது சரியென்று ஒத்துக் கொள்ளலாம். ஆனால் கோயம்பத்தூர் பயணம்??? இதில் மட்டும் என்னால் சமாதானமடையவே முடியாது.
அன்று இரவு உணவின்போது சாப்பிடப் போகாமல் இருந்த என்னை என் அப்பா வந்து சாப்பிட அழைக்கவும் என்னால் தட்ட இயலவில்லை. அவர் எது சொன்னாலும் என்னால் மறுத்துப் பேச முடியாது. என் மேல் அளவில்லாப் பாசம் வைத்திருப்பவர் அவர். அவர் அழைத்ததால் எதுவும் சொல்லாமல் சென்று அம்மாவிடம் பேசாமல் சாப்பிட்டு விட்டு வந்தேன். நாளை காலை ஒன்பது மணிப் போல் சென்னை கிளம்ப வேண்டும். எல்லாம் எடுத்து வைத்தாயிற்று. வேலையில் சேரப் போகிறேன். புதுவித சந்தோஷம் ஒருபுறம். கல்லூரி வரை வீட்டிலிருந்தே முடித்தாயிற்று. இப்போது வேலை நிமித்தமாக முதல் முதலாய் விடுதி வாசம். எப்படி இருக்குமோ? சமாளித்து விடுவோமோ என்ற மெல்லிய பயம் ஒருபுறம். வீட்டில் அனைவரையும் பிரிந்து எப்படி இருக்கப் போகிறோம் என்ற கவலை மறுபுறம் என்று எதையெதையோ எண்ணிக் கொண்டேத் தூங்கிப் போனேன்.
எழுந்திரு. மணி ஆறாகிறது. பொம்பளப் பிள்ள இப்படியா இன்னும் இழுத்துப் போர்த்தித் தூங்கறது என்று என் அம்மாவின் குரல் கேட்டதும் மெல்ல கண்கள் திறந்துப் பார்த்தேன். என்னருகில் நின்றுக் கொண்டிருந்தார். ஆறு மணிக்கு எழுந்திரு. உடனே பல் தேய். பல் தேய்த்துக் கொண்டே வீட்டிற்குள் உலாத்தாதே. குளித்து விட்டுதான் சாப்பிட வேண்டும். அழுக்குத் துணியை ஒழுங்காய் அதற்கான கூடைக்குள் போடு. தலை வாரி பெரியதாய் பொட்டிட்டுக் கொள். சீப்பில் முடியை உடனே எடு. இதெல்லாம் இன்றோடு முடியப் போகிறது. ஆஹா! இந்த வார்த்தைகள் இல்லாமல் இனி என் நாட்கள் நகரப் போகின்றன. சந்தோஷத்திலும் தூக்கக் கலக்கத்திலும் கண்கள் செருக அப்படியே கண்களை மூடினேன். இரு நொடிகள் சென்றிருக்கும். என் கன்னத்தில் சொட் சொட்டென்று இரு துளி நீர் சூடாய் விழுந்தது. தூக்கம் பறந்து ஓட அதிர்ந்து கண்கள் விழித்தேன். என் அம்மாவின் கலங்கிய கண்களில் இருந்து அது அவரது கண்ணீர்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதிர்ச்சியில் ஏன் எதற்கென்று என்னால் சிந்திக்க இயலாமல் ஸ்தம்பித்திருந்தேன். என் முன் நெற்றியில் கைவைத்து மெல்ல தலைகோதியவர் இத்தனை வருஷம் ஹாஸ்டலுக்கு விடாம இங்கேயே உன்னை வச்சு வளர்த்துட்டேன். அங்கப் போய் என்னக் கஷ்டப்படப் போறியோ. துணித் துவைக்க எல்லாம் கஷ்டமா இருந்தா டோபிக்குப் போட்டுடு. நீ துவைச்சுக் கஷ்டப்பட்டுக்காத. வாரம் வாரம் ஒழுங்கா எண்ணை வச்சுத் தலைக்குக் குளி. தலைக்கு குளிக்கற அன்னைக்கு நல்லா தலையக் காய வச்சிடு. இல்லைனா உனக்கு தலைல நீர் கோத்துக்கும். ஊறுகாய் ஜாஸ்தி சேத்துக்காத. உனக்கு ஒத்துக்காது என்று மேலும் சொல்லிக் கொண்டேப் போனவர் இறுதியாய் இரு நொடி அமைதியாகிப் பின் உன்னைப் பிரிஞ்சு நான் எப்படி இருக்கப் போறேனோ என்றபோது அவரையுமறியாமல் கண்களில் இருந்துக் கண்ணீர் வழிந்தது. எதுவும் பேச முடியாமல் எழுந்து அமர்ந்து தலைக் கவிழ்ந்து நான் அழ அழாத கண்ணு என்றபடியே அப்பாவின் குரலுக்கு வெளியே சென்றார். என் மேல் பாசம் இல்லையென்று அம்மாவை தப்பாக எண்ணி விட்டோமோ இல்லை அம்மாவை பிரிந்துப் போகப் போகிறோமோ என்று எதற்கென்றே தெரியாமல் ஒரு பத்து நிமிடம் அழுதேன்.
இதோ வேலையில் சேர்ந்து ஒரு மாதம் ஓடிவிட்டது. முதன் முதலாய் சம்பளம் வாங்கி விட்டேன். ஒரு இனம் புரியாத உணர்வு எங்களை ஆட்கொள்ள அனைவரும் சந்தோஷமாய் பேசிக் கொண்டிருந்தோம். முதல் சம்பளத்தில் நீ என்ன செய்யப் போற நீ என்ன செய்யப் போற என்று ஒருத்தி எல்லாரிடமும் கேட்டுக் கொண்டிருந்தாள். எஸ்.பி.ஐ-ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி அதுல சேர்த்து வைக்கப் போறேன். சூப்பரா ஒரு மொபைல் வாங்கப் போறேன். ம்யூச்சுவல் ஃபண்ட்ஸ்ல இன்வெஸ்ட் பண்ணப் போறேன் இப்படி பலவாறாக பதில்கள் வந்துக் கொண்டிருந்த போது அந்த கேள்வி என்னிடம் வந்தது. நான் ஒரு கம்மல் வாங்கப் போறேன் என்று நான் சொன்னதும் ஏன் உங்கப்பா உனக்கு சேர்த்து வச்சிருக்கறது பத்தலையோ ஹே என்று சிரித்தார்கள். நான் மெல்ல சிரித்து வைத்தேன். என் அம்மாவிடம் முதல் சம்பளத்தில் முதல் முதலாய் உங்களுக்குதான் வாங்கினேன் என்று தரும்போது அந்த முகத்தில் வரும் சந்தோஷத்தைப் பார்க்க காலமெல்லாம் கம்மல் வாங்கவும் நான் தயாரானது யாருக்குத் தெரியப் போகிறது.
--------------------ooOoo--------------------
பி.கு: இது என்னோட 100வது பதிவு. இதுவரை அம்மாவுக்காக நான் எதுமே எழுதினதில்ல. 100வது பதிவு அம்மாவுக்காகதான் எழுதணும்னு ப்ளாக் ஆரம்பிச்சவே நினைச்சு வச்சிருந்தேன். அதே மாதிரி எழுதியாச்சு. ஆனா இது எனக்கும் என் அம்மாவுக்குமான உண்மைக் கதை இல்ல. என்னோட முதல் ஃப்ரெண்ட் என் அம்மாதான். என் வெற்றிகளில் பெருமிதம் கொண்டு, நொடிந்து விழுந்த தருணங்களில் இதமாய் தலைகோதி, தோல்விகளில் மனம் தளராதே என்று ஆறுதல் சொல்லி, நான் செய்த தவறுகளைப் பொறுத்துக் கொண்டு இதுவரைக்கும் அன்பைத் தவிர வேற எதையுமே என்கிட்ட காட்டாத என் அம்மாவுக்காக...
தத்து பித்தென்று
நான் உளறும்
வார்த்தைகளுக்குள்
அடக்க இயலா
கவிதை நீ...
கோடி கோடியாய்
சொத்து சேர்த்தாலும்
தூசுக்கு சமமாய்
ஆக்கி விடும்
செல்வம் நீ...
எத்தனை உறவுகள்
வந்தாலும்
எவரும் என்றும்
ஈடு செய்ய இயலா
உறவு நீ...
அன்பு என்றொரு
வார்த்தைக்கு மட்டும்
அர்த்தம் கொண்டிருக்கும்
அரும் பெரும்
அகராதி நீ...
எனக்கு வேண்டிய
வரங்களை
நான் கேட்காமலே
அள்ளித் தரும்
வள்ளல் நீ...
கடவுள் உண்டா
என்கிற விவாதங்களைப்
புறக்கணித்து அனுதினம்
நான் வணங்கும்
கடவுள் நீ...
Posted by இம்சை அரசி at 5:55 PM 36 comments
Labels: சிறுகதை