வேக வேகமாய் ஓடி வந்த சுதா பிரதாப்பின் மேல் மோதி நின்றாள். ஒரு நிமிடம் தடுமாறி சுதாரித்தவன்
"எரும மாடே! கண்ணு தெரியல? உங்கப்பா உன்ன இப்படிதான் வளத்தாரா? அடக்க ஒடுக்கம்னா என்னன்னே தெரியாது" என்று திட்ட சுய நினைவுக்கு வந்தவள்
"எவ்ளோ கொழுப்பு இருந்தா நீ எங்கப்பாவ பத்தியெல்லாம் பேசுவ? உங்கம்மாட்ட அப்பவே சொன்னேன். இவனுக்கு நெய் ஊத்தி போடாதீங்க. கொழுப்பு ஏறிட்டே போகுதுனு. உங்கம்மா கேட்டாதான?" என்று இடுப்பில் கைவைத்து அவள் திமிராய் சொல்ல
"ஆமா.... உங்கப்பா மாசம் ஆனா வண்டி வண்டியா நெய் அனுப்பறாரு... போடி.... சொல்ல வந்துட்டா" என்றான் கிண்டலாய்.
"எங்கப்பா எதுக்குடா உனக்கு நெய் அனுப்பனும்?" என்று அவள் எகிற
"ஏ! மரியாதையா பேசுடி.... உங்கப்பா உனக்கு மரியாதை கூட சொல்லி தரலையா? வாங்க மாமா போங்க மாமானு மரியாதையா சொல்லு"
"வாடா மாமா..... போடா மாமா..... இது ஓகேவாடா மாமா உனக்கு???" என்று அவள் பழிப்பு காட்டினாள்.
"எவ்வளவு திமிருடி உனக்கு???" என்றபடி அவன் கையை ஓங்க
"அத்தை.... என்னை அடிக்கறான்" என்று கத்தியபடியே சமையலறைக்குள் ஓடினாள்.
"ஏன்டா அவள்ட்ட சும்மா வம்பு பண்ணிட்டே இருக்க?" என்று ப்ரதாப்பின் அம்மா சலித்துக் கொள்ள
"அவள மொதல்ல சும்மா இருக்க சொல்லுங்கம்மா" என்று அவன் புகார் வாசித்தான்.
"என்னவோ உங்க சண்டைல என்னை இழுக்காதீங்க" என்று அவர் கழண்டு கொள்ள அமுக்கமாய் சுதா கிளுக்கி சிரித்தாள்.
"உன்ன அப்புறம் கவனிச்சிக்கறேண்டி" என்று அவன் விரலை ஆட்டி சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
------------------------------------ooOoo------------------------------------
"ஏய்! என் பெயிண்டிங்ஸ் எடுத்து என்னடி பண்ற?" என்றபடியே வேக வேகமாய் ரூமுக்குள் வந்தான் ப்ரதாப். அவன் பெட்டில் அமர்ந்து அவனுடைய பெயிண்டிங்ஸ் எல்லாவற்றையும் எடுத்து அவளைச் சுற்றி பரப்பி வைத்திருந்த சுதா
"ஓ! இதெல்லாம் நீ வரைஞ்சதா மாமா???!!! நான் கூட ஏதோ பிக்காஸோ பெயிண்டிங்ஸ்தான் வாங்கி வச்சிருக்கியோஓஓஓ.......னு நினைச்சேன்" என்று அவள் உதட்டை பிதுக்கி சிரித்தாள்.
"உன்ன........" என்று பற்களை கடித்தவன் அவள் கழுத்தில் கைவைத்து சுவற்றோடு சாய்த்தான்.
"அய்யோ என்னை கொல்றான் கொல்றான்" என்று அவள் கத்த அவள் வாயில் கை வைத்து பொத்தினான். அவள் பயத்தில் விழிக்க அருகில் வந்தவன் அலைபாயும் அவளிரு விழிகளையே ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தான். அவள் அப்படியே கண்களை மூட ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவன் பின் கைகளை விலக்கி திரும்பி வெளியே சென்றான்.
ஏதோ இனம் புரியாத உணர்வொன்று அவளை சூழ்ந்து கொள்ள அதுவரை சொல்லாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த காதல் மழை மேகம்
கண்ட மயில் தோகையாய் அழகாய் விரிந்து ஆடியது.
------------------------------------ooOoo------------------------------------
கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பும் வழியில் ஒரு சிறுவன் ஒரு சிறுமிக்கு சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுப்பதை கண்டதும் அவளையும் மீறி அவள் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.
"நீ நடக்க ஆரம்பிச்சப்ப பொசுக்கு பொசுக்குனு விழுந்துடுவ. ப்ரதாப் தான் ஓடி வந்து தூக்கி கைப்பிடிச்சி நடக்க வைப்பான்"
"அவன் எப்பயாச்சும் சான்ஸ் கிடைச்சா நல்லா அடிபடற மாதிரி தள்ளி விடலாம்னு ப்ளான் பண்ணிதான் இதெல்லாம் பண்ணியிருப்பான்" என்று அதற்கும் வாயாடியது நினைவுக்கு வர மெலிதாய் புன்னகைத்தாள்.
'இப்படி உன்னோட எப்பவும் சண்டை போட்டேதானடா எனக்கு பழக்கம்? எப்படி எனக்குள்ள வந்த??' என்றவளது எண்ணம் பின்னோக்கி சென்றது.
அவள் பன்னிரெண்டாம் வகுப்பிலிருந்த போது அவன் கல்லூரி இறுதியாண்டு. ப்ராஜக்டிற்காக ஹைதராபாத் கிளம்பி கொண்டிருந்தான். முடித்தபின் அங்கேயே வேலையில் சேர்ந்து கொள்வது போல கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகியிருந்தான். அவனுக்கு விடை கொடுப்பதற்காக சுதா வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தனர். எப்பொழுதும் போல இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது யதேச்சையாய்
"இனிமேல் பாருடி... அங்க போயி ஒரு நல்ல ஃபிகரா பாத்து ஃப்ரெண்டு பிடிச்சு அவளோடதான் பேசுவேன். உன்னோட இனி பேசக் கூட
மாட்டேன்" என்று அவன் சொன்னதும் அவளுக்கு பொசுக்கென்று கோபம் வந்தது.
"நீ பேசலைனு நான் ஒண்ணும் அழலை. எங்கேயோ போயி எக்கேடோ கெட்டு போ...... எனக்கென்ன வந்துச்சாம்" என்று எரிந்து விழுந்தவள் அவனிடம் அதற்கு பிறகு பேசவே இல்லை.
அதற்கு பின் ஒவ்வொரு முறையும் அவன் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் எதோ ஒன்றை தொலைத்தது போலவே தவித்தாள். என்னவென்று புரியாமல் குழம்பினாள். ஃபோன் செய்து பேசலாம் என்று நினைக்கும்போதெல்லாம் அவனாய் பேசும் வரை தானும் பேசக் கூடாது என்ற ஈகோ வந்து தடுத்தது. இந்த நிலையில் முழுத் தேர்வு வந்தது. அதில் கவனம் செலுத்தியதில் அவனைப் பற்றிய நினைவு சிறிது விலகிப் போயிருந்தது. தேர்வுக்கு இரண்டு நாட்களே இருக்கும்போது அவனிடம் இருந்து தேர்வு நன்றாய் எழுத வாழ்த்து அட்டை வந்தது. அதை கண்டதும் வாழ்க்கையில் தொலைத்த அதி அத்தியாவசியமான பொருள் ஒன்று மீண்டும் கைசேர்ந்தது போல பொங்கிய சந்தோஷத்தில் கண்கள் பனித்தது. ஓடிச் சென்று அவசர அவசரமாய் ஃபோன் செய்து அவனிடம் பேசினாள். நான்கு மாதங்களாய் சேர்த்து வைத்திருந்த ஏக்கங்கள் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தாள்.
அன்று மனதில் பூத்த காதல் இது நாள் வரை அவளது இதயத்தில் மட்டுமே மணம் பரப்பிக் கொண்டிருந்தது. அவனிடம்தான் முதலில் சொல்ல
வேண்டுமென்ற எண்ணத்தில் அவளது நெருங்கிய தோழியிடம் கூட சொல்லாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தாள். ஆனால் அவனிடம்
சொல்வதற்கு இதுவரை தைரியமே வரவில்லை. இதுவரை அவன் என்ன நினைக்கிறான் என்பது பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தவள் நேற்று
அவன் நடந்து கொண்ட விதத்தில் அதையும் சிந்திக்க ஆரம்பித்தாள். இந்த முறை நிச்சயம் சொல்லி விட வேண்டுமென்று முடிவெடுத்த வேளையில்
வீட்டை அடைந்திருந்தாள்.
"அம்மா இங்க பாருங்களேன் உங்க அண்ணன் மகள.... இவளுக்கு அப்போவே கீழ்ப்பாக்கத்துல ஒரு சீட் புக் பண்ணிடலாம்னு அப்பவே சொன்னேன். யாராவது கேட்டீங்களா??? அய்யோ.... இப்ப வேற சீட் கிடைக்குமானு தெரியலையே" என்று ப்ரதாப் புலம்ப அவனை என்ன என்பது போல பார்த்தாள்.
"உனக்கு மொதல்ல சீட் இருக்கானு பாரு" என்று மெதுவாய் சொன்னாள்.
"நானா கைல குடைய வச்சுக்கிட்டு மழைல நனைஞ்சுகிட்டே ட்ரீம் அடிச்சிட்டு வரேன்???" என்று அவன் கேட்டதும் தான் கவனித்தாள் கையிலேயே குடையை வைத்துக் கொண்டு தொப்பலாய் நனைந்திருப்பதை...
தொடரும்....