அழகான விஷயங்கள பத்தி எழுத சொல்லி பாசமலர் tag பண்ணி ரொம்ப நாளாச்சு. அண்ணன்கிட்ட அழகு லிஸ்ட்ல என் பேரை சேக்காத்தால கோவிச்சுக்கிட்டு சண்டை போட்டு இவ்ளோ நாளா எழுதாம இருந்தேன். அதை எழுதினா எல்லாரும் உன் மேல கண்ணு வச்சிடுவாங்கடா... அதான் எழுதலை... இப்படி பல பிட்ட போட்டு அண்ணாச்சியும் என்னை சமாதானப்படுத்திட்டார். அதனால எனக்கு தோணினத எல்லாம் இங்க லிஸ்ட் போட்டு வச்சிருக்கேன். பொதுவா அழகுன்னாலே டக்குனு தோணறது பூக்கள், குழந்தைகள்தான். பூவும் சரி குழந்தையும் சரி எப்படி இருந்தாலுமே அது அழகோ அழகு. இது இல்லாம கடவுள், கவிதை, மழை, இயற்கை, வானவில், முயல், மான், கிளி, பூனை, அணில்னு எக்கச்சக்கமா லிஸ்ட் போட்டுட்டே போகலாம். இந்த மாதிரி பொது விஷயங்கல்ல இருந்து அப்பாற்பட்டு வேற என்ன அழகு விஷயங்கள் இருக்குனு யோசிச்சதுல எனக்கு தோணின சில அழகுகள்
1. பெண்ணின் கண்கள்:
பொதுவா கண்ணு பேசும்னு சொல்வாங்க. சின்ன வயசுல தில்லானா மோகனாம்பாள் "நலந்தானா" பாட்டு பாத்தப்போ ரொம்ப ஆச்சர்யப்பட்டிருக்கேன். பத்மினி நலந்தானானு அவங்க வாயால கேக்கறத விட அவங்க கண்கள் அவர்கிட்ட கேக்கறதுதான் ரொம்ப பவர்ஃபுலா இருக்கும். அதே நேரம் அவர் கைல இருந்து ரத்தம் வரும்போது அவங்க மனசு துடிக்கறத அவங்க கண்கள்
அப்படியே சொல்லும். அப்போ இருந்தே எனக்கு ரொம்ப அழகா தோணற விஷயம்.
இப்போ ப்ரூ காபி விளம்பரத்துல லக்ஷ்மி ராய் கண்கள்லதான் ரொம்ப அழகா expression கொடுப்பாங்க. அந்த சின்ன காபி கப்ப நீட்டினதும் அவர் அப்படியான்ற மாதிரி கேப்பார். அப்போ அவங்க கண்ணு அப்படியே வெக்கப்படும் பாருங்க. சான்ஸே இல்ல.......
2. காதல் நிறைவேறும் தருணம்:
இந்த மாதிரி ஒரு அழகான தருணம் எல்லாருக்கும் கிடைக்காது. நான் 11, 12வதும் ஹாஸ்டல்ல இருந்துதான் படிச்சேன். அப்போ எங்களோட இருந்த ஒரு பொண்ணுக்கு சின்ன வயசுலயே அவங்க அத்தை பையனுக்குதான்னு முடிவு பண்ணியிருந்தாங்க. அவங்களை அவ உருகி உருகி காதலிச்சா. நாங்க முடிச்சு போற டைம்ல அவங்க ரெண்டு பேர் வீட்லயும் எதோ பிரச்சினை. கல்யாணம் நடக்குமா நடக்காதான்ற கேள்வியோட பிரிஞ்சு போனோம். அதுக்கப்புறம் காலேஜ் 3rd year படிக்கிறப்போ அவ இன்விடேஷன் வந்தது. அதே மாமாவையே கட்டிக்க போறானு தெரிஞ்சதும் எனக்கே அவ்ளோ சந்தோஷமா இருந்தது. அவளுக்கு தாலி கட்டும்போது பூத்து பூத்துனு அழ ஆரம்பிச்சுட்டா. அவ வாய் சிரிக்குது. கண்ணுல இருந்து கண்ணீர் வழிஞ்சுட்டே இருக்கு. அப்புறமா அவள திட்டினேன். "ஏண்டி லூஸு அழுத? எல்லாரும் என்ன நினைப்பாங்க? பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்ல போலனு நினைக்க மாட்டாங்களா??? அதும் இல்லாம வீடியோல பாரு அழுது வடிஞ்சுட்டு இருப்ப" அப்படின்னு அவ்ளோ அக்கறையா திட்டறேன். போடி அதெல்லாம் உனக்கு புரியாதுனு பொசுக்குனு சொல்லிட்டு போயிட்டா. அவளுக்கு மட்டும் இல்ல. காதலிக்கிற எல்லாருக்குமே அவங்க வாழ்க்கைல ரொம்ப அழகான தருணம்னா அது அவங்க காதலை கைப்பிடிக்கிற நாளாதான் இருக்கும்.
3. தாய்மை:
ஒரு பொண்ணு எப்போ ரொம்ப அழகா இருப்பா? கண்டிப்பா அது அவ கர்ப்பமா இருக்கறப்பதான். அதை எத்தனையோ புத்தகத்துல, கதைகள்ல, கவிதைகள்ல படிச்சிருக்கேன். அப்போல்லாம் எனக்கு ரொம்ப பெருசா தெரியலை. எனக்குள்ள இருக்கற என் உயிர் சங்கீதா. அவ வளைகாப்புதான் நான் முதல் முதலா அட்டெண்ட் பண்ணின வளைகாப்பு. காலைல வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் சிரிச்சுட்டே மெதுவா நடந்து வந்தா. தலைல கட்டின துண்டும், நெத்தி வகிட்டுல குங்குமமும், மஞ்ச கயிறும், கால்ல மெட்டியுமா இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை பாத்திருக்கேன். ஆனா அது கூட உப்பிய வயிறுமா... அவ்ளோ அழகா என் சங்கி-ய அதுக்கு முன்னாடியும் பாத்ததில்ல. அதுக்கு அப்புறமும் பாத்ததில்ல. அதுக்கப்புறம் குழந்தை பிறந்ததுக்கப்புறம்தான் பாத்தேன். அப்போ அந்த பிஞ்சு கையையும் காலையும் தொட்டு தொட்டு கொஞ்சும்போது அவ முகத்துல தெரிஞ்ச பூரிப்பு..... அழகோ அழகு.....
4. எழுத்தாளராய் அங்கீகரிக்கப்பட்ட நாள்:
நான் ஒரு நாவல் எழுதி கண்மணிக்கு அனுப்பி 2 வருஷமாச்சு. வரவே இல்லை. எங்க தமிழ் சார் இதுக்கெல்லாம் சோர்ந்து போயிடக் கூடாது. இன்னும் எழுதி அனுப்பிட்டே இரு. ஒரு நாள் கண்டிப்பா வரும்னு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டே இருந்தார். இருந்தாலும் அந்த ஏமாற்றத்த தாங்கிக்க முடியாம அனுப்பாமலே இருந்தேன். ஒரு நாள் ஃபோன் வந்தது. உங்க கதை எங்களுக்கு பிடிச்சிருக்கு. வர 15th இதழ்ல போட போறோம். உங்களை பத்தி கொஞ்சம் எழுதி கொடுத்து உங்க போட்டோவும் அனுப்புங்கனு சொன்ன அன்னைக்கு இருந்த சந்தோஷம்.... என் வாழ்க்கைல முதல் அழகான தருணம்..... புத்தகம் வந்த அன்னைக்கு கைக்கு கிடைக்கறதுக்குள்ள இருந்த டென்ஷன்........ அதை வாங்கி என் போட்டோவையும் என்னோட எழுத்துக்கள் ஒண்ணொன்னையும் அச்சில பாத்த தருணம்.... ஒரே கண்ணீரா வருது. உலகத்தோட மொத்த சந்தோஷத்தையும் அள்ளியெடுத்து எனக்குள்ள புதைச்சு வச்ச மாதிரி அவ்ளோ சந்தோஷம். அன்னைக்கு என் டைரில எழுதி வச்சது "முதல் பிரசவம்... மனதளவில் உணர்ந்தேன் பிரசவ வலியை..."
5. நட்பு:
எந்தவித சம்பந்தமும் இல்லாம எந்த எதிர்பார்ப்பும் இல்லாம ஒருத்தர் நம்ம மேல வைக்கற தூய்மையான அன்பு.... அதுக்கு பேர்தான் நட்பு. அந்த மாதிரி எனக்கு கிடைச்சவதான் சங்கீதா. நான் என்ன தப்பு பண்ணினாலும் ஒரு ஸ்மைல் பண்ணி என் தலைல செல்லமா ஒரு குட்டு வச்சு திருத்தறவ. அவளுக்கு மட்டுமில்லாம அவ வீட்டுக்காரருக்கும்(அவ அத்தை பையன்தான்) நான் பெஸ்ட் ஃப்ரெண்ட். அவ மாமியாரும் மாமனாரும் என்னை அவங்க பொண்ணுனு சொல்லுவாங்க. ரெண்டு பேருக்கும் நான் பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்றதால என் பர்த்டே அன்னைக்கே அவங்க கல்யாணம் வச்சாங்க. அன்னைக்கு நைட் கரெக்டா 12 மணிக்கு எல்லாரும் தூங்கிட்டாங்க. மாப்பிள்ளை சார் கேக் பாக்ஸ தூக்கிட்டு பொண்ணு ரூமுக்கு வந்தார். கேக் வெட்டி என் மேல எல்லாம் பூசி கத்தி அட்டூழியம் பண்ணிட்டிருந்தப்ப ஒரு சத்தம். மெல்ல திரும்பி பாக்கறோம். அவ மாமனார் கதவுகிட்ட முறைச்சுப் பாத்துட்டு நிக்கறார். பொண்ணு ரூமுக்கு போக கூடாதுனுசொல்லியிருக்குல்லனு அவர் சொன்னதும் கம்முனு ஓடிப் போயிட்டாங்க. ரெண்டு பேரும் எனக்கு ஒரு மொபைல் ப்ரெசெண்ட் பண்ணினாங்க. அந்த மொபைல்தான் இன்னும் வச்சிருக்கேன். அவளுக்கு ஒரு டைரி ஃபுல்லா கவிதை எழுதி கல்யாண கிஃப்டா கொடுத்தேன். அந்த கிஃப்ட வீட்டுக்கு வந்து பிரிக்கிற வரைக்கும் அவ கைலயே வச்சிருந்தா. யார்ட்டயும் குடுக்கலை. என்னை பொறுத்த வரைக்கும் எனக்குள்ள இருக்கற உயிர் சங்கீதாதான். அவளுக்கு நான் எழுதின கவிதைல ஒண்ணு
"அடுத்த பிறவியிலேனும்
ஒன்றாய் பிறக்க வேண்டும்
என்று வேண்டி
தொலைத்து விடாதே!
எனக்கு உன்னிடம்
சகோதர பாசம் வேண்டாம்
அதையும் மீறிய
இந்த நட்புதான் வேண்டும்"
6. எதையும் அழகாய் பார்க்கிற மனசு:
இந்த உலகத்துல இருக்கிற எல்லாமே அழகுதான். ஒண்ணொண்ணும் ஒவ்வொருவித அழகு. அதை பாக்கிற நம்ம மனசுலதான் எல்லாம் இருக்கு. ஒரு சாதரண விஷயத்தைக் கூட அழகுனு நினைச்சு பாத்தா அது ரொம்ப அழகா தெரியும். அழகில்லைனு நினைச்சுப் பாத்தா அழகா இருக்கறதும் ரொம்ப அசிங்கமா தெரியும். எல்லாமே நம்ம ரசனைதான்....
இப்போ என் சான்ஸ். இவங்க மூணு பேரும் அழகுப் பத்தி என்ன நினைக்கறாங்கன்னு பாப்போம். என்னை மாதிரியே லேட் பண்ணிடாதீங்க. கொஞ்சம் சீக்கிரம் போடுங்கப்பு.
1. ஜொள்ளுல பல வகை ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் பெற்ற நமது ஜொள்ளானந்தா Dr.ஜொள்ளுபாண்டி(நீங்க விடற ஜொள்ளுதான் அழகுனு சொல்லப்படாது)
2. காதல்ல வீடு கட்டி காதல சாப்பாடா சாப்பிட்டு காதலையே சுவாசிச்சு வாழ்ந்துட்டு இருக்கிற நம்ம காதல் முரசு அருட்பெருங்கோ(நீங்க இல்லவே இல்லைனு சொல்ற உங்க காதலிதான் அழகுனு சொல்லப்படாது)
3. இந்த உலகத்துல இருக்கிற எந்த ஒரு விஷயத்தையும் காதலாவே பாக்கிற நமது காதல் கவிஞர் நவீன் ப்ரகாஷ்(காதல்தான் அழகுனு அதையே 6 தடவை எழுதி வைக்கப்படாது)
ஓகே... ஓகே... உத்தரவு வாங்கிக்கறேனுங்க......