Thursday, December 28, 2006

போதும் எனக்கு

உறைய வைக்கும்

மார்கழிப் பனியில்

கொழுந்து விட்டெரியும்

தீயின் அருகிலிருக்கும்

சுகம் வேண்டாம்...........

அன்பே!

ஆதரவாய்

என் கரம் பற்றும்

உன் உள்ளங்கையின்

வெப்பம் போதும் எனக்கு............

Wednesday, December 27, 2006

என் சோக கதைய கேளு ப்ளாக் குலமே!!!

கிறிஸ்துமஸ் லீவு முடிஞ்சிதே. நாளைக்கு ஆபிஸ்க்கு போகணுமேன்னு அவசர அவசரமா பொட்டிய கட்டிட்டு ஓடியாந்தா... அட பாவி மக்கா! இன்னும் ஒருத்தியும் வந்து சேரலையே... சரி எப்படியும் இன்னைக்கு ஒருத்தி வந்துடுவான்ற நம்பிக்கைல கெளம்பி ஆபிஸ்க்கு போயி மொத வேலயா போன போட்டா... நேத்து பஸ் கெடக்கல செல்லம் இன்னைக்கு நைட்தான் கெளம்பறேன்னு மனசாட்சியே இல்லாம சொல்றா. அய்யோ நான் என்ன பண்ணுவேன்? இன்னைக்கு ஆபிஸ்லதான் சாப்பாடா? கடவுளே...

வேலைய முடிச்சுட்டு கெளம்பலாம்னு பாத்தா மணி எட்டரை. எட்டரை மணிக்கா எனக்கு ஏழரை ஆரம்பிக்கணும்? நாமளே எதாவது செஞ்சா என்னன்னு ஒரு யோசனை பளீர்னு ப்ளாஷ் அடிச்சது. சரி என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டே வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டேன். தோசை செய்யாலாம் அதான் ஈஸின்னு முடிவும் பண்ணிட்டேன். அடடா தொட்டுக்க என்ன செய்யறது? அம்மாகிட்ட கேக்கலாம்னு போனை எடுத்து டயல் பண்றேன்... அட கொடுமையே! ரீசார்ஜ் பண்ண மறந்து தொலைச்சிட்டேன். சனி இப்படியா நம்ம தலைல உக்காந்து டான்ஸ் ஆடனும்? சரி இட்லி பொடி வாங்கிக்கலாம்னு ஐடியா பண்ணி போய் வாங்கிட்டு வந்துட்டேன். அய்யோ பசி வேற உயிர் போகுதேன்னு அவசர அவசரமா பாக்கெட்ட பிரிச்சு ஊத்தி மாவு ரெடி பண்ணி தோசய ஊத்தி தட்டுல பொடியக் கொட்டி எண்ணைய ஊத்தி கலக்கி ஒரு தோச சுட்டதும் பிச்சு வாயில வச்சா... அய்யோ... அய்யோ.... உப்பே இல்ல. மறுபடியும் மாவுல உப்ப போட்டு கலக்கி கொஞ்சம் தோச ஊத்தி எடுத்துட்டு வந்து அப்பாடான்னு உட்காந்து பிச்சு வாயில வக்கறேன்.... மொபைல் அடிக்குது.

யார்ரா இந்த நேரத்துலன்னு கோபத்தை அடக்கிக்கிட்டு போய் எடுத்தா சென்னைல இருந்து ஒரு ப்ரெண்டு. நான் மட்டும் வீட்டுல தனியா இருக்கேன்னு எவ்வளவு பீல் பண்ணி சொல்றேன். அந்த பிசாசு ரொம்ப அக்கறையா வீட்ட நல்லா லாக் பண்ணிட்டு படுத்துக்கோ. அப்புறம் யாராவது வந்து உன்ன பார்த்து பயந்து செத்து போயிட போறாங்கன்னு சொல்லி... இதுல ஒரு சிரிப்பு வேற.... கேட்டேனா இவளை?

இந்த கொடுமைய எல்லாம் முடிச்சுட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தா... அப்படியே என் கண்ணு ரெண்டும் கலங்குது..... ஏற்கனவே என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் என் கல்யாணத்தன்னைக்கு வந்து என் வீட்டுக்காரருக்காக கூட்டு பிரார்த்தனை பண்ண போறதா சொல்லுவாங்க. அவ்ளோ பாசக்கார புள்ளைங்க.

இப்ப தோச சுட்ட அனுபவத்துல நானும் அவருக்காக ப்ரே பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன். நீங்களே சொல்லுங்க. என் ஒருத்திக்கு தோசை சுடவே நான் எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேன். நாளைக்கு எனக்கும் சேர்த்து அவர் செய்யணும்னா அவர் எவ்வளவு கஷ்டப்படு்வாரு? இத நெனச்சு நெனச்சுதாங்க கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியல.......

Tuesday, December 26, 2006

திருவிளையாடல் ஆரம்பம்


ரெண்டு நாளைக்கு முன்னாடிதாங்க இந்த படத்தை பார்க்கிற பொன்னான(?) வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படத்த பார்த்துட்டு எனக்கு விமர்சனம் எல்லாம் பண்ண தெரியாது. படம் பார்த்தப்ப எனக்கு தோணினத உங்ககிட்ட சொல்றேன்.திருவிளையாடல் உபயத்தால எனக்கு வந்த சில டவுட்ஸ்........

1. அது எப்படிங்க நம்ம ஹீரோயினால மட்டும் எந்த காரணமுமே இல்லாம லவ் பண்ண முடியுது?

2. அது ஏன் எப்பவும் ஹீரோயினுக்கு பாக்குற மாப்பிள்ளை ஒண்ணு டாக்டராவோ இல்ல சாப்ட்வேர் இஞ்சினியராவோ மட்டும் இருக்கறாங்க? (நம்மள என்ன இளிச்சவா பசங்கன்னு நெனக்கறாய்ங்களா?)

3. அது எப்படி ஹீரோ பண்ற பிசினஸ் மட்டும் எந்த அடியும் வாங்காம ஹீரோவால சிகரத்தின் உச்சிக்கு போக முடியுது?

4. ஆரம்பத்துல ஹீரோ எவ்வளவு நேரமா எடுத்து சொல்லியும் காதலை ஏத்துக்காத ஹீரோயினோட அண்ணன் கடைசி ஒரு நிமிசத்து டயலாக்குல மனசு மாறுனது எப்படி? (க்ளைமாக்ஸ்ன்றதாலயா???)

5. ஹீரோயினோட லவ் பத்தியும் ஏற்கனவே நடந்த கல்யாணத்த பத்தியும் சபைல எல்லார் முன்னாடியும் சண்டை நடந்த பிறகும் எப்படி அந்த டாக்டர் மாப்பிள்ளையால மணவறைல அப்படியே உக்காந்து மந்திரம் சொல்றதை கண்டியூ பண்ண முடியுது? (இதுதான் படத்தோட பெரிய ஜோக்கே!!!)

6. ரெண்டு பேரும் என்னை நினைச்சு பார்த்தீங்களான்னு ஹீரோயின் கேட்கறப்ப அட திருந்தீட்டாங்களாய்யான்னு நிமிர்ந்து உக்காந்தா அடுத்த நிமிசமே ஹீரோ கடல போடறத பாத்துட்டு எழுந்து ஓடியாந்தராங்களாம். ஏனுங்க ரோஷம் வேணாமா?

வர வர தமிழ்நாட்டுல காமெடி படம் எடுக்கறதே பொழப்பா வச்சிருக்காங்க...... ஹூம்ம்ம்ம்ம்....... எங்கன போயி சொல்லி அழுவறது?

Friday, December 22, 2006

உதவி


இங்கும் அங்குமாய்

தேடி தேடியலைகிறேன்

என்றாலும் இதுவரை

கிடைத்தபாடில்லை....


பத்திரமாய் பாதுகாத்து

வைத்துக் கொள்ளாதது

எனது தவறுதான்

ஒத்து கொள்கிறேன்....


எவ்வித மாற்றமும்

இல்லாமல் அப்படியே

கிடைத்தாக வேண்டுமே

என்று தவிக்கிறேன்....


எங்கே புகார் செய்தால்

உடனடியாக தேடி

கண்டுபிடித்து கொடுப்பார்கள்

உங்களுக்கு தெரியுமா?


தெரிந்தவர் உதவுங்களேன்!

ஒரு அபலை பெண்ணிற்கு

உதவிய புண்ணியம்

உங்களை சேரும்....


அட!

தொலைத்தது எதை என்று

சொல்ல மறந்து விட்டேனா?

என் இதயத்தை.....

Sunday, December 17, 2006

உயிரின் அருமை

"ஏ! அவளை போய் சாப்பிட கூப்பிடுடி. காலைல இருந்து இன்னும் சாப்பிடவே இல்லை. நீ பேசற வரைக்கும் கண்டிப்பா அவ சாப்பிட மாட்டா" என்று சுபா சொன்னதும் திரும்பி அவளை முறைத்தேன்.


"இங்க பாரு. அவங்கவங்க வயித்துக்கு வேணும்னா அவங்களே சாப்பிட்டுப்பாங்க. எனக்கு ரெக்கார்ட்ல சைன் வாங்க போகணும். அதனால நான் போறேன். நீங்க போய் சாப்பிடுங்க" சொல்லி விட்டு பதிலை எதிர்பார்க்காமல் காலேஜ் நோக்கி விடு விடுவென்று நடந்து சென்றேன். காலையிலிருந்து சாப்பிடாததால் பசி வயிற்றை கிள்ளியது. இருந்தாலும் அவ சாப்பிடாம நான் மட்டும் எப்படி சாப்பிடுவேன். இது ஏன் அவளுக்கு புரிய மாட்டேன்றது. இருந்தாலும் அதுக்காக எல்லாம் மொதல்ல போய் என்னால பேச முடியாது.

அன்று இரவு எனது வகுப்பு தோழிகளிடம் அரட்டை அடித்து கொண்டிருந்த போது எனது அறைக்கு வந்தாள். "ஒரு வாக் போயிட்டு வரலாம் வா" என்று அவள் அழைத்ததும் எழுந்து அவளுடன் சென்றேன். இதற்காகத்தானே எதிர்பார்த்து காத்திருந்தேன்.


"என்ன சீக்கிரம் சொல்லு. எனக்கு வேலை இருக்கு" என்று நான் சொன்னதும் சடாரென்று என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களில் நிரம்பியிருந்த கண்ணீரை கண்டதும் எனக்குள் ஏதோ ஒன்று உருகியது. என்றாலும் கட்டுப்படுத்திக் கொண்டு

"இந்த மாதிரி எல்லாம் பண்ணினா அப்படியே உருகி சாரிடி... நான் பன்னினது தான் தப்புன்னு மன்னிப்பு கேட்பேன்னு நினைச்சியா சங்கீ? பண்ணாத தப்புக்கு நான் ஏன் சாரி கேட்கனும்?" என் மேலுள்ள தப்பு எனக்கே புரிந்திரிந்தும் இவ்வாறு கேட்டேன்.


"நீ சாரி கேட்கனும்னு நான் எதிர்பார்க்கலை............" என்று ஆரம்பித்து என்னுடைய தவறை தவறாய் சுட்டிக் காட்டாமல் சொல்லி நான் அவள் மீது தேவையில்லாமல் சொன்னவற்றை எல்லாம் பொறுத்து இறுதியாக என்னை சமாதானம் செய்தாள்.


நான் பி.எஸ்.சியிலும் அவள் பி.காமிலும் இருந்த போது கடைசி ஆண்டில் நடந்த இந்த சம்பவத்தை எம்.சி.ஏ முதல் வருடத்தில் இருக்கும் போது ஒரு ஞாயிற்று கிழமை காலை வேளையில் நினைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். 'ஈகோ துளியளவும் இல்லாம என் அம்மாவை போல் பாசம் வச்சிருந்த உன்னை என்னோட ஈகோவால எவ்வளவு கஷ்டப்படுத்தினேன்' நினைக்கும்போது கண்கள் பனித்தது. நீ பக்கத்துல இருந்தப்ப எல்லாம் அவ்வளவு கஷ்டப்படுத்தினேன். இப்ப நீ என் பக்கத்துல இல்லாம எவ்வளவு கஷ்டப்படுறேன் தெரியுமா சங்கீ? கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து சென்று புதியதாய் வைத்திருந்த டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தேன்.


"உயிரின் அருமை

பிரியும் வேளையில் தான்

தெரியுமாம்!

உண்மைதான்.........

அனுபவத்தில் சொல்கிறேன்!!"

புரியவில்லை


உறங்கும் பொழுது

விழித்திருக்கும் பொழுது என

எல்லா நேரமும்

சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.......

என்றாலும் புரிபடவேயில்லை

என் விழிகளைப் பார்த்து

ரகசியமாய் புன்னகைக்கும்

உன் விழிகள்

என் இதயத்திற்கு

சொல்லும் சேதி என்னவென்று!

Friday, December 15, 2006

சந்தேகம்

இளைத்து
கொண்டே போகிறாயோ??!!!
இதயம் லேசாகி
கொண்டே வருகிறது!!!

அப்பாவிடம் ஒரு கேள்வி!


உங்க

உடம்பு முழுவதும்

கடவுள்

பாசத்தை மட்டுமே

உருக்கி உருக்கி

ஊத்தி செஞ்சானா அப்பா??!!!

மீண்டும் கிடைக்குமோ?


இயந்திரங்களோடும்

இயந்திர மனிதர்களோடும்

பழகி பழகி

உப்பில்லா வாழ்க்கையில்

அனுதினமும் உழன்று

மரத்து போன

என் உணர்வுகளுக்கு

உயிரளிக்க ஆசைதான்...

மீண்டும் கிடைக்குமோ

நான் கழித்த

அதே பிள்ளை பருவம்???

Thursday, December 14, 2006

ஐடியா ப்ளீஸ்.....

காலைல 8.30க்கு செல் அலாரம் அடிச்சதும் மெல்ல கண்ணு முழிச்சு பாத்தா எல்லாம் பர பரன்னு கெளம்பிட்டு இருக்காங்க... எழுந்து வேக வேகமா குளிச்சுட்டு கெளம்பனுமா... ஸ்ஸ்ஸ்.....அப்பா..... இப்பவே கண்ண கட்டுதேன்னு ரொம்ப பீலிங்கோட எழுந்தேங்க இன்னைக்கு.

என் எதிரி(கடைசில தெரியும் ஏன் இப்படி சொல்றேன்னு) என்கிட்ட "சாப்பாடு செஞ்சு வச்சாச்சுடா. சாப்பிட்டுட்டு லஞ்ச் எடுத்துட்டு வந்துடு" ன்னு சொல்லிட்டு கெளம்பிட்டா. சரின்னு நானும் வேக வேகமா குளிச்சுட்டு கெளம்பி தட்டுல சாதத்தை போட்டு கொழம்பை ஊத்தறேன்...... ஒரே கொழப்பமா இருக்கே..... கொழம்பு வைக்கலையா??? வெறும் ரசத்தோட நிறுத்திட்டாளா???!!! சரி இதையாவது சாப்பிட்டுட்டு போலாமேன்னு பிசைஞ்சு வாயில வச்சா...... அட பாவிங்களா...... புளிய கரைச்சு வாயில ஊத்துன மாதிரி இருக்குதே...... இது சரிப்படாதுன்னு அப்படியே வச்சுட்டு மதியம் ஆபிஸ்லயே சாப்பிட்டுக்கலாம்னு கெளம்பிட்டேன்.

போன உடனே மொத வேலையா போனை போட்டு "என்னடி செஞ்சு வச்ச?" ன்னு கேட்டதுக்கு என்ன பதில சொன்னா தெரியுமாங்க? "புளி சாதம் செய்யலாம்னு ட்ரை பண்ணுனோன்டா. அது தண்ணியா போயிட்டதால சாதத்தை கொட்டி கெளர முடியலை. அதனால அப்படியே பெசைஞ்சு சாப்பிடலாம்னு நினைச்சோம். கடைசில அதுவும் முடியலை. சரி உன்னால முடியுதான்னு சும்மா செக் பண்ணுனோம். சும்மா லுலுலா" ன்னு சொல்லி சிரிச்சா பாருங்க....... எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்ல.

இவ எல்லாம் எதுக்கு சமைக்கறேன்னு வரணும்? சமையல் தெரியலைன்னா பொண்ணா லட்சணமா என்னை மாதிரி ரிஸ்க் எடுக்காம அமைதியா இருக்க வேணாம்???

பழி வாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன். யாராவது நல்ல ஐடியாவா குடுங்க. நல்ல ஐடியா குடுக்கறவங்களுக்கு என் கையால நான் மொத மொத பண்ண போற சாப்பாடுடுடுடுடுடுடுடுடு............. அய்யோ ஓடாதீங்க.......... ஐடியாவ சொல்லிட்டு போங்க................ ஹலோ...............

என் தோழி!

நீ

என்னை பிரிந்து

சென்று விட்டாய் என்று

எண்ணி எண்ணி ஏங்க

உன் காதலி அல்ல நான்...



எனினும்

நான்

எண்ணி எண்ணி ஏங்கும்

நாம் கை கோர்த்து

திரிந்த நாட்களின்

காதலியாய் இங்கு நான்...

Wednesday, December 13, 2006

ஒத்து வருமோ?

தோல்வியே
வெற்றிக்கு முதல் படியாம்
ஒத்து வருமோ
காதலுக்கு???

Tuesday, December 12, 2006

என்ன ஒரு சோகம்??!!!


இதை பார்த்துட்டு சோகம் தாங்க முடியாம ரெண்டு நாளா சோறு தண்ணி எறங்கல... இன்னும் அழுதுகிட்டே இருக்கேனுங்க... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்.....

ப்ளீஸ் ப்ளீஸ்... நீங்களும் இப்படி அழ ஆரம்பிச்சா எனக்கு யாரு ஆறுதல் சொல்லுவாங்க??? அழ கூடாது... சரியா???

சின்ன சந்தேகத்துக்கு ஒரு சின்ன பதில்

ஒருத்தரை காதலிக்க ஆரம்பிச்சுட்டா ஐஸ்வர்யா ராய் கூட அவங்களை விட அழகா தெரிய மாட்டாங்க(அவங்க கண்ணுக்கு மட்டும்) . சோ கண்டவுடன் காதல் இங்க ஒத்து வருது...

ஒருத்தரை புரிஞ்சுகிட்டு அவங்க கேரக்டர் புடிச்சு காதலிக்க ஆரம்பிச்சிருந்தா அவங்க ப்ளஸ் மைனஸ் எல்லாமே ஓரளவு தெரிஞ்சிருக்கறதுனால அட்ஜஸ்ட் பண்ணி போற மனசு கண்டிப்பா இருக்கும். ஆனா அதுக்காக காதலோன்னு சந்தேகப்படற அளவுக்கு இன்னொருத்தர் மேல இம்ப்ரஸ் ஆக மாட்டாங்க. சோ புரிஞ்சுகிட்டு வர காதலும் ஓகே ஆயிடுச்சு...

இது சும்மா என்னோட கருத்து... நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கொஞ்சம் சொல்லிட்டு போங்க...

அடடா... இம்சை தாங்க முடியலையேன்னு நினைக்காதீங்க... அதுக்காக எல்லாம் விட்டுட மாட்டேன்...

இம்சைகள் தொடரும்...

ஓ பெங்களூரு...! ஓஓ பெங்களூரு...!!

"அடேயப்பா... பெங்களூரு வந்து 4 மாசம் ஆயிடுச்சே. இது வரைக்கும் ரெண்டே தடவை தான் ஷாப்பிங் போயிருக்கிறோமே. நெனச்சா நமக்கே ஷேம் ஷேம் பப்பி ஷேமா இருக்கே."

இப்படியெல்லாம் நெனச்சு தாங்க போன ஞாயித்து கிழமை நாங்க ஒரு மூணு பேரு சேர்ந்து ஷாப்பிங் கெளம்பினோம். மதியம் சரியா மூணு மணிக்கு மெஜஸ்டிக் போய் சேர்ந்ததும் நேரா ரோடை க்ராஸ் பண்ணி சப்வேல போய் ரைட்ல திரும்பினா... அம்மாடியோவ்.... எவ்வளோ கடைங்க... அய்யோ... அய்யோ... ஒரே குஷி... தாங்க முடியலை. எல்லா கடைலயும் ஒரு ரவுண்டு விட்டு கொண்டுட்டு போன காசையெல்லாம் காலி பண்ணிட்டோம். கடைசில ஒரு சுடிதார் தைக்க குடுக்கலாமேன்னு போனோம். ஒரு அரை மணி நேரத்துல தைச்சு குடுத்துடுவோம் மேடம்னு சொல்லவும் ரொம்ப சந்தோஷமா குடுத்துட்டு வந்தோம். ஒரு மணி நேரம் கழிச்சு திரும்பி போனா... கடவுளே... என் துணி அப்படியே வெட்டி(வெட்டி உங்களை இல்ல) போட்டவாக்குல கெடக்குது. எவ்வளவு நேரமாகும்னு நான் இங்க்லீஷ்ல கேக்க... அவன் ஏதோ ஹிந்தில பதிலை சொல்ல... நாஞ்சொல்றது அவனுக்கு புரியாம... அவஞ்சொல்றது எனக்கு புரியாம... தைச்சு குடுத்தா சரின்னு அங்கனயே கொஞ்ச நேரம் உக்காந்து துணிய வாங்கிட்டு ஒடியாந்தா மணி 6.00.

அட கடவுளே! எலக்ட்ரானிக் சிட்டி ப்ஸ்ஸை தொட கூட விட மாட்டேங்கறாய்ங்க. அவ்வளவு கூட்டம். அப்படியே எவ்வளவு நேரந்தான் பஸ்ஸையே பார்த்துட்டு இருக்கறதுன்னு ஒரு 7.30 மணிக்கு ஒரு சின்ன மீட்டிங்க போட்டு சரி அடுத்த ஸ்டாப்ல போய் வர எலக்ட்ரானிக் சிட்டி பஸ்ல ஏறி இங்க வந்துடுவோம். அப்படியே உக்காந்துகிட்டே போயிடுவோம்னு ப்ளான் பண்ணி நடக்கறோம்... நடக்கறோம்... நடந்துகிட்டே இருக்கறோம் ஒரு 45 நிமிஷமா... எனக்கு தலைய சுத்துது... அங்க ஒரு பஸ் ஸ்டாப்பை பாத்ததும் தான் சுத்துன என் தலை நின்னுச்சு.

ஒரு 20 நிமிஷம் பல்லை கடிச்சுட்டு... இந்த ஐடியா குடுத்தவளை முறைச்சுக்கிட்டோ நின்னோம். கடைசியா ஒரு 356C எங்களை தாண்டி போய் நின்னத பாத்ததும் அப்படியே பி.டி.உஷா கணக்கா ஓடி போய் ஏறுனோம். பஸ் ஸ்டாண்ட்க்கு வெளியே வந்து சேர்ந்ததும் சீட்டை புடிச்சு உக்காறோம்... கண்டக்டர் வண்டி டிப்போ போகுது எல்லாரும் எறங்குங்கன்னு சொல்றாரு... ஆவ்வ்வ்வ்... முடியலை... சனி இப்படியா வாழ்க்கைல வெளயாடனும்னு நெனச்சு எறங்கி மறுபடியும் உள்ள போய் கொஞ்ச நேரம் எல்லா பஸ்ஸையும் மொறச்சு பாத்துட்டே நின்னோம்.

கடைசில ஒரு 9.30 மணிக்கு கொஞ்சம் நிக்கற மாதிரி எடம் கெடச்ச பஸ்ல ஏறி ஒரு 10.30 மணிக்கு "ஓ பெங்களூரு...! ஓஓ பெங்களூரு... !!"ன்னு பாடிக்கிட்டே வீடு வந்து சேர்ந்தோம்.

(அப்பா... டைட்டிலோட ரிலேட் பன்னியாச்சு... ஹைய்யா... ஜாலி... ஜாலி...)

Friday, December 8, 2006

ஒரு சின்ன சந்தேகம்!!!

ஒரு ஆர்வத்துல ப்ளாக் ஆரம்பிச்சு நாலு கவிதையை போட்டாச்சு. வேற எதாவது எழுதலாமேன்னு பார்த்தா ஒண்ணுமே தோண மாட்டேங்கறது... ம்ம்ம்... சரி ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருக்குதே. அதை கேட்டா யாராவது நம்ம சந்தேகத்தை தீர்த்து வைப்பாங்களேன்ற நம்பிக்கைல இந்த பதிவு :-)

இந்த காதல் காதல் அப்படின்றாங்களே... அப்படின்னா என்னங்க???

'கண்டவுடன் காதல்' - இதையே எடுத்துப்போம். இன்னைக்கு ஒருத்தரை பார்க்கறோம். பாத்த உடனே பிடிச்சு போச்சுங்க. சரின்னு 'மின்ன்லே' மாதவன் கணக்கா காதலிக்க ஆரம்பிச்சுடறோம். கொஞ்ச நாள் கழிச்சு பார்த்தா... அட... இன்னொருத்தவங்களை அதை விட பிடிக்குதுங்க. இப்ப இதுக்கு பேரு என்னங்க???

சரி அதை விட்டு தள்ளுங்க... நல்லா பழகி புரிஞ்சுக்கிட்டு வரது தான் காதல்ன்றதையே எடுத்துப்போம். ஒருத்தர் கிட்ட ரொம்ப பழகிட்டு இருக்கோம். அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சுங்க. சரி இது தாண்டா காதல்னு காதலிக்க ஆரம்பிச்சுட்டோம். அப்புறமா கொஞ்ச நாள் கழிச்சு பார்த்தா இன்னொருத்தரை அதை விட பிடிச்சு போச்சுங்க. இப்ப இதை என்னன்னுங்க சொல்றது???

ப்ளீஸ்... ப்ளீஸ்... no violence please... இப்படியெல்லாம் முறைக்க கூடாது... பாவங்க நான்... சின்ன பொண்ணு... ஏதோ வெவரம் தெரியாம கேட்டுட்டேன்... தெரிஞ்சா கொஞ்சம் சொல்லிட்டு போங்க... :-)

Thursday, November 30, 2006

மறந்து விடாதே!!!

உன் புன்னகையை
பேனாவில் ஊற்றி
என் வாழ்க்கை ஏடுகளை
நிரப்புகிறேன்
அன்பே!
புன்னகைக்க மறந்து விடாதே!

தவம்




உன் பாதங்கள் படவே
தவம் கிடக்கின்றன
என்
வீட்டு வாசலில்
உதிர்ந்திருக்கும் பூக்கள்!!!

எப்படி முடிகிறது?

எப்படி முடிகிறது
உன்னால் மட்டும்?
உன் இதயதிலிருக்கும்
எனக்கும் சேர்த்து
இரண்டிரண்டு முறை
சுவாசிக்க???!!!

என்ன செய்ய?

உன் விரல் பிடித்து
நடை பயில
ஆசை தான்...
என்ன செய்ய?
உன்னை காணுமுன்னே
நடை பழகிவிட்டேனே!!!