சமயலறை விழுப்புண்களில்
மகிழவே செய்கிறேன்
எனக்கான துயரம்
தேங்கிய விழிகளுடன்
அன்பாய் நீ தரும்
முத்தங்களை எண்ணி...
என் உள்ளங்கைகளில்
பொத்தி பாதுகாத்திருக்கும்
உன் முத்தங்களின் இளஞ்சூட்டினை
இந்தப் பாழாய்ப் போன
கீபோர்டிற்குத் தர
எப்படி மனம் வரும் எனக்கு?
அதிசயம்தான்!
எனக்கு கழுத்தில்
மகுடம் சூட்டியிருக்கிறாயே!!
ஒரே தட்டில் உண்டு...
ஒரே கட்டிலில் உறங்கி...
இந்தக் கடவுள் மீது
கோபமாய் வருகிறது!
உடல்கள் மட்டும் ஏன்
இரண்டாய் படைத்தானென்று!!
எப்பொழுதும் உனது
கொஞ்சல் மொழிகளும்
கெஞ்சல் ஒலிகளுமே
காதுகளில் ஒலித்திருக்க
PR-களிலும் CR-களிலும்
எப்படி கவனம் செலுத்துவது??
தவமிருக்கிறேன்
எண்ணற்ற இதயங்கள்
வேண்டுமென்று...
அள்ளி அள்ளி
நீ தரும் காதலை
பொத்தி வைக்க
என் ஒரு இதயம்
போதவில்லையே...
Tuesday, November 18, 2008
என்றென்றும் காதலுடன்...!!!
Posted by இம்சை அரசி at 12:31 PM 36 comments
Thursday, November 6, 2008
அவள் முடிவு சரியானதா?!!
அவள் - ஒரு நல்ல ரசிகை. எதைக் கண்டாலும் ரசிப்பவள். எப்பொழுது பார்த்தாலும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பாள். அம்மா, அப்பா, தம்பி மற்றும் நல்ல நண்பர்கள் என்று அழகான உலகம் அவளுடையது. புத்தகங்களுக்குள் புதைந்துப் போக விரும்புவாள். அம்மாவின் மடியில் தலை வைத்து அம்மாவுடன் கதை பேசிக் கொண்டே இருக்க ஏங்குவாள். தம்பியுடனான செல்ல சண்டைகளை ரசிப்பாள். உணவு உண்பதை விட தூங்குவதை வாழ்வின் அத்தியாவசிய ஒன்றாக கொண்டவள். எழுத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவள். தனக்கென்று ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து மனம் தளராமல் மொக்கைப் போட்டவள். காதல் கதைகள் ஓரளவு நன்றாக எழுதுபவள். கதை என்ற ஒன்று இல்லாமலே நாலு பாகங்கள் ஐந்து பாகங்கள் என்று எழுதும் அதீத திறனுடையவள். இவ்வாறு ஒன்றுமில்லாமலே வலையுலகில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவள்.
காதல் கவிதைகள், காதல் கதைகள் என்று எழுதி காதலை காதலித்துக் கொண்டிருந்தவளை ஏனோ காதலுக்குப் பிடிக்கவில்லைப் போலும். அவளுக்கு அவள் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவளது அந்த அழகான உலகில் காதல் விதையூன்றினான் அவன். அவளது கனவுகளை அவன் வசம் செய்தான். அவளது ஒவ்வொரு நொடியையும் கொள்ளை கொண்டான். இவ்வாறாக அவர்களது திருமண வாழ்க்கை சிறப்பாய் ஆரம்பித்தது. யார் கண்பட்டதோ என்னவோ அவளுக்கு வேலை மாற்றம் கிடைக்கவில்லை. அவள் பெங்களூரிலும். அவன் சென்னையிலும். மூன்று மாதங்கள் இடைவிடாமல் போராடி வேலை மாற்றம் பெற்றாள். அந்த மூன்று மாத இடைவெளியில் நூற்றுக்கணக்கான மைல்கள் அப்பாலிருந்த அவனை எண்ணி எண்ணி சோகத்தில் ஆழ்ந்திருப்பதையே தொழிலாய் கொண்டிருந்ததில் அவளது வலைப்பதிவை கவனிக்க இயலவில்லை. சென்னை வந்ததும் உங்க ஊர் மொக்கை இல்லை. எங்க ஊர் மொக்கை இல்லை. அந்த அளவு படுபயங்கரமாய் மொக்கைப் போட்டுக் குவிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சென்னையில் வலது கால் எடுத்து வைத்தாள்.
மறுபடியும் யார் கண்பட்டதோ என்னவோ அவளால் எழுத இயலவில்லை. அவளில் எண்ணவோட்டமே இன்று இரவு டிபன் என்ன செய்யலாம், நாளை காலை என்ன செய்யலாம், வீடு துடைக்க வேண்டுமே, அழுக்குத் துணிக்கூடை நிரம்பி வழிகிறதே, எப்பொழுது துவைப்பது? வாஷிங்மெசினுக்கு கவர் வாங்கிப் போட வேண்டுமே, அடுத்த மாதம் கவிதாயினி கல்யாணத்திற்கு என்ன உடை உடுத்தலாம் என்றவாறே மாறிப் போனது. இவற்றை எல்லாம் மீறியும் வேலை நேரத்திற்கிடையில் எதாவது எழுதலாமென்று எடுத்து வைத்தாலும் எழுதுவதற்குத் தோன்றுவதில்லை.
காலையில் எழுந்து அரக்கப் பரக்க காலை மற்றும் மதிய உணவு செய்து, கணவருடன் ஆபிஸ் கிளம்பி, சாயந்திரம் திரும்பும்பொழுது MTC பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறி எவரேனும் எழுகிறார்களா என்று கண்கொட்டாமல் பார்த்து எவரேனும் எழுந்தால் ஓடிச் சென்று அந்த சீட்டில் அமர்ந்து நிறுத்தத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்தை சுற்றியுள்ள மரம், பூச்செடிகள், வேடிக்கைப் பேசியபடி சைக்கிளில் சுற்றும் பள்ளி மாணவர்கள் இப்படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஜாலியாய் வீட்டிற்கு நடந்து சென்று இரவு உணவிற்கான வேலையை துவங்கியபடியே பெற்றோருடனும் மாமியார், நாத்தனாருடனும் கதைகள் பேசிக்கொண்டிருந்து, கணவர் வந்ததும் இரவு உணவை முடித்துக் கொண்டு கம்ப்யூட்டரில் சண்டைப் போட்டுக் கொண்டு விளையாடுவது என்று இந்த வாழ்க்கையை அவள் மனம் வெகுவாய் ரசிக்கலாயிற்று. கொஞ்ச காலத்திற்கு இந்த வாழ்க்கையை முழுதாய் அனுபவிக்க வேண்டும். ஆனால் பதிவெழுத ஆரம்பித்தால் மனம் அதைப் பற்றியே யோசிக்க ஆரம்பித்து விடும். இரவு வந்ததும் கணினியையே நோண்டிக் கொண்டிருக்க வேண்டும். அதனால் சிறிது காலத்திற்கு வலைப்பதிவிற்கு விடுமுறை அளித்து விடலாம் என்ற முடிவிற்கு வந்து விட்டாள். அவள் முடிவு சரியானதா என்று கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன் :-)
பி.கு: அப்பாடா! என்னை ஹீரோயினா வச்சு ஒரு கதை எழுதணும்னு நெம்ப நாளா ஆசை. இன்னைக்கு நிறைவேறிடுச்சு :)))
Posted by இம்சை அரசி at 4:38 PM 49 comments