Wednesday, May 23, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 5

ஞாபகம் 1
ஞாபகம் 2
ஞாபகம் 3
ஞாபகம் 4

==================-oOo-==================

கல்லூரி லேபிலிருந்து வெளியே வந்த காவேரி எதையோ தீவிரமாக சிந்தித்தபடி படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று யாரோ எதிரில் நிற்பது கண்டு திடுக்கிட்டு நின்றாள். அவள் திரு திருவென விழிப்பதைக் கண்டதும் எதிரில் நின்றிருந்த வசந்த் அவளைப்
பார்த்து புன்னகைத்தபடி

"ஹாய்! நான் வசந்த்... காலேஜ் மேகசின்ல வந்திருந்த உங்க கவிதை ரொம்ப நல்லா இருந்தது. அதை சொல்லதான் வந்தேன்" என்றான்.

அவள் புரியாது விழிக்க

"என் நட்பேன்ற தலைப்புல எழுதியிருந்தீங்க இல்ல. அதை சொன்னேன்" என்று அவளுக்கு நினைவூட்டினான். அவள் எழுதிய கவிதை ஞாபகத்திற்கு வர புன்னகைத்தவள்

"ரொம்ப தேங்ஸ் வசந்த்" என்றாள். அவன் எதுவும் சொல்லாமலே நிற்கவும் என்ன செய்வதென்று தெரியாமல்

"எந்த க்ளாஸ் நீங்க?" என்று கேட்டாள்.

"அய்யோ நானும் ஃபர்ஸ்ட் இயர். அதும் உங்க க்ளாஸ்தாங்க. ஆனா EC டிபார்ட்மென்ட்"

"ஓ! சாரி... எனக்கு க்ளாஸ்ல CS ஸ்டூடண்ட்ஸே அவ்வளவா யாரையும் தெரியாது" என்று புன்னகைத்தாள்.

"நோ ப்ராப்ஸ்... சரி ஒரு பர்சனல் கொஸ்டின் கேக்கலாமா?" என்று அவன் கேட்கவும் கேள்வியாய் புருவம் சுருக்கி அவனை ஒரு நொடி பார்த்தவள் சரியென்பது போல மேலும் கீழுமாய் தலையாட்டினாள்.

"நீங்க இவ்ளோ ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்களே.... அந்த லக்கி ஃப்ரெண்ட் யாருனு நான் தெரிஞ்சிக்கலாமா?" என்று அவன் கேட்டதும் டக்கென்று அவள் மனம் 'வினோத்' என்று கூச்சலிட்டது. ஆனால் உதடுகள் அன்னிச்சையாய்

"அப்படி யாரும் இல்ல... சும்மா கற்பனைதான்" என்று சொன்னது.

"சரிங்க. நிறைய எழுதுங்க. ஓகே தென் பை" என்று சிரித்தபடி அவன் வழிவிட

"பை" என்றபடி படிகளில் இறங்கினாள்.

---------------------------------------------------------------------------------

'எப்படியோ நல்ல மார்க் எடுத்து நல்ல காலேஜ்ல சீட் கிடைச்சதால அப்பாவை சமாதானப்படுத்தி காலேஜ்ல சேர்ந்தாச்சு. சேர்ந்து ஒரு வருஷம் ஆச்சு. ஃபர்ஸ்ட் செம்ல காலேஜ் ஃபர்ஸ்ட் வாங்கின மாதிரி எல்லா செம்லயும் வாங்கிடணும். எல்லாக் கஷ்டத்தையும் தாங்கிட்டு நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கற அப்பா பெருமைபடற மாதிரி நான்
பேரெடுக்கணும்' இப்படி பலவாறாக நினைத்துக் கொண்டு ஹாஸ்டல் அறையில் தலை வாரிக் கொண்டிருந்த காவேரியிடம் ஓடி வந்தாள் உமா.

"ஹே காவேரி! நம்ம சூப்பர் சீனியர் அனு அக்கா கல்யாணத்துக்கு எல்லாரும் போற மாதிரி ப்ளான் பண்ணிட்டாங்க. வர சனிக்கிழமை காலைலயே கிளம்பி போறோம். ஞாயித்துக் கிழமை கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பி வரோம்" என்று மூச்சிரைத்தபடி சந்தோஷமாய் அவள் சொல்லவும்

'அனு அக்கா கல்யாணத்துக்கா??? என்கிட்ட ரொம்ப க்ளோஸா பழகினவங்க. பத்திரிக்கை குடுக்கும்போதே கண்டிப்பா வரணும்னு எத்தனை தடவை திருப்பி திருப்பி சொன்னாங்க. போலாமா வேண்டாமா?' என்று அவள் மனம் பட்டிமன்றம் நடத்தியது.

"என்னடி யோசிக்கிற? இருக்கறதிலேயே உன்னைதான் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க கல்யாணத்துக்கு இவ்ளோ யோசிக்கிற?" என்று உமா ஆச்சர்யமாய் விழிகளை விரிக்கவும்

"நான் வரலைன்னு உன்கிட்ட சொன்னேனா?" என்று அவசர அவசரமாய் சமாளித்தாள்.

சனிக்கிழமை...

காலையில் அனைவரும் கிளம்பினர். பயணம் முடிந்து போய் சேர கிட்டத்தட்ட இரவு நேரம் ஆகி விட்டது. அங்கு சாப்பிட்டு முடித்ததும் முதலாண்டு மாணவ மாணவிகள், இரண்டாமாண்டு மாணவ மாணவிகள் என்று அவரவர் தனித் தனியாய் அமர்ந்து விட்டனர். அனைவரும் ஜாலியாய் அடுத்தவரை ஓட்டிக் கொண்டும் கிண்டலடித்துக் கொண்டும் இருக்க
காவேரி அமைதியாய் சிரித்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது நெருங்கிய தோழி உமாவிடம் ஒரு பையன் ஜோசியம் பார்க்கிறேன் என்று சொல்லி அவளுக்கு பிடித்தவை ஒவ்வொன்றாய் கேட்டு கேட்டு அவள் கைகளில் எழுதினான். இறுதியில் அவளுக்கு பிடித்தமான சோப் என்னவென்று கேட்டு அதை போட்டு கையில எழுதினதையெல்லாம் அழித்துக் கொள்ள சொல்லவும் அவள் கோபப்பட்டு அவனை
அடிப்பதற்கு துரத்தி கொண்டு ஓடினாள். அதைக் கண்டு காவேரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் திரும்பி வந்து அமர்ந்தபோது அவள் முகம் கோபமாகவே இருப்பதைக் கண்டதும் காவேரி சிரித்துக் கொண்டே அந்த பையனிடம்

"உனக்கு நான் உண்மையாவே ஜோசியம் பார்க்கறேன். எனக்கு நல்லா தெரியும்" என்று சொன்னாள்.

"எனக்கே அல்வாவா?" என்று அவன் மறுக்கவும்

"ஹே நிஜமா எனக்கு தெரியும். உன்னை மாதிரி நான் ஏமாத்த மாட்டேன்" என்று அவள் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொல்லவும் அவளிடம் கையை நீட்டினான்.

ஜாதகத்தில் வரைவது போல அவன் உள்ளங்கையில் கட்டங்களை வரைந்தாள். பின்

"ஜோசியம் பாக்கறதுக்கு முன்னாடி தட்சிணை வைக்கணும். இல்லாட்டி பாக்கறவங்களுக்கு பாவம் சேருமாம்" என்று அவள் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்லவும் அவன் மறுக்க முடியாமல் பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்தான்.

"ஹ்ம்ம்ம்... உன் பேரு மணி... கரெக்டா?" என்று சொல்லவும் அவளை முறைத்தான்.

"வெயிட் வெயிட்..... உன் ஜாதகத்துல சுக்கிரன் உச்சத்துல இருக்கறதால நீ XXX காலேஜ்ல B.E CS படிச்சிட்டு இருப்ப.... உனக்கு ஒரு அம்மா ஒரு அப்பா.... அப்புறம்........" என்று இழுத்து விட்டு

"உனக்கு ஒரு தங்கை... அவ கூட நீ படிக்கிற காலேஜ்லயே ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா..... சரி கடந்த காலம் பத்தி சொல்லியாச்சு.... இனி வருங்காலம்.... அதுக்கு கொஞ்சம் தட்சிணை வைக்கணும்" என்றாள். அவள் சொன்னதை அதுவரை ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் "ஹேய்! தட்சிணை வைடா" என்று கத்தவும் அவன் மறு பேச்சின்றி பத்து
ரூபாயை எடுத்து வைத்தான்.

"உன் ஜாதகத்துல குரு ஏழாமிடத்துல இருக்கறதால நீ படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் வேலைக்கு போயிடுவ. அதுக்கப்புறம் ஒரு நாலு வருஷம் கழிச்சு உனக்கு ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அந்த பொண்ணு பேரு........." என்று அவள் இழுத்து விட்டு அமைதியாகவும்

"பொண்ணு பேரு என்ன என்ன?"என்று அனைவரும் கோரஸாக கத்தினர்.

"பொண்ணு பேரு Mrs.மணி" என்றதும் அனைவரும் குபீரென்று சிரித்தனர். உமா விழுந்து விழுந்து சிரித்தாள்.

"அப்புறம் சனி நாலாமிடத்துல வந்துட்டதால உன் நாக்குல விளையாண்டு இன்னைக்கு உமாகிட்ட வாங்கி கட்டிக்கிட்ட.......... அப்புறம் என்கிட்ட இருபது ரூபா அநியாயமா ஏமாந்துட்ட" என்றதும் அனைவரும் சந்தோஷமாய் கத்தினர்.

அதன் பின் இவனுக்கு பாரு இவளுக்கு பாரு என்று சொல்ல வரிசையாய்
ஒவ்வொருவருக்காய் பார்த்தாள். அந்த வரிசையில் கடைசியாய் வந்தான் வசந்த். அவளிடம் வந்து அமர்ந்தவன்

"எனக்கு ஜோசியம் பாக்க வேணாம். எல்லாருக்கும் ஜோசியம் சொன்ன
ஜோசியக்காரம்மாவுக்கு இப்போ நான் ஜோசியம் சொல்லப் போறேன்" என்றதும் அனைவரும் "ஹூர்ர்ர்ரேரே" என்று கத்தினர்.

அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் அவனிடம் கையை நீட்டினாள். அவள் வரைந்தது போலவே அவள் கையில் கட்டங்களை வரைந்தான். பின் தீவிரமாய் கட்டங்களைப் பார்த்து ஆராய்ந்தவன்

"ஃபர்ஸ்ட் தட்சிணை வை" என்றான்.

ஆச்சர்யமாய் விழிகளை விரித்தவள் உமாவை பார்க்க அவள் ஒரு ரூபாயை எடுத்து தந்தாள். அதை அவனிடம் அவள் தரவும் கிண்டலாய் புன்னகைத்தவன் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

"உன் ஜாதகப்படி உன் பேர் காவேரி. உங்க அப்பா பேரு பொன்னுசாமி. நீ ஒரே பொண்ணு. உங்க ஊர் ------- நீ படிச்சது --------- ஸ்கூல்ல. நீ டென்த்ல ------ மார்க். 11த் 12த் கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ரூப். ட்வெல்த்ல ---- மார்க். ஃபர்ஸ்ட் செம்ல ------- பர்சென்டேஜ்" என்று அவன் அடுக்கி கொண்டே போக ஆச்சர்யத்தில் இமைக்க மறந்து அமர்ந்திருந்தாள்.

'கவிதை பத்தி சொன்னதுக்கு அப்புறம் இதுவரைக்கும் ஒரு வார்த்தைக் கூட பேசினதில்ல. இவனுக்கு எப்படி???' என்ற சிந்தனை ஓட அமர்ந்திருந்தவளிடம்
"என்ன நான் சொன்ன ஜோசியம் கரெக்டா?" என்று அவன் வினவ உணர்வு பெற்றவளாய்

"ம்ம்ம்.... சரி" என்று திணறினாள்.

அடுத்து ஜோசியம் பார்ப்பதை வைத்து அனைவரும் விளையாட ஆரம்பிக்கவும் அவன் அவர்களோடு சேர்ந்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான்.

காவேரிக்கோ ஏதேதோ புரியாத உணர்வுகள் எழ ஆச்சர்யத்தில் இருந்து மீள முடியாதவளாய் குழம்பியபடி அமர்ந்திருந்தாள்.

==================-oOo-==================

நண்பர்களே! இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி. இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும். இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும். இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும். ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும். இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்த‌ அத்தியாயத்தை எழுத அன்பு தம்பி ராயல் ராமை அழைக்கிறேன்.

Wednesday, May 16, 2007

அன்புடன் போட்டிக்கு அனுப்ப இயலாத கவிதைகள்

நாலு நாளு லீவை போட்டுட்டு ஊருக்கு போயிட்டேன். திரும்பி வந்ததும் save பண்ணி வச்சிருந்த இந்த படத்த பார்த்ததும்தான் அன்புடன் கவிதை போட்டி ஞாபகம் வந்தது. வேக வேகமா ரெண்டு கவிதை எழுதி சரி இதை மொதல்ல அனுப்பிடலாம்னு பாத்தா அவங்க கொடுத்திருந்த தேதி தாண்டி போயிடுச்சு :(((( சரின்னு விடுப்பா விடுப்பா விட்டுக் குடுத்துடுவோம்னு நினைச்சுட்டே இங்க போட்டுட்டேன். இதையும் ரொம்ப நாளா போட மறந்துட்டேன். நேத்து போட்டி முடிவு மெயில பாத்ததும் தான் இதுவும் ஞாபகம் வந்தது. ஒரே மறதி கோழியாயிட்டேன் போல... ஞாபக சக்திய வளத்தறதுக்கு any idea??? சரி அதை விடுங்க... இந்த கவிதை நல்லாயிருக்கா???






ஓகே......... பை பை............. டாட்டா............

Tuesday, May 15, 2007

ஆணென்றால். . .


போன வெள்ளிக்கிழமை spiderman-3 பாத்தேன். அதை பத்தி விமர்சனம் எழுத போறேனோன்னு யாரும் பயந்துக்காதீங்க. அந்த நல்ல பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது. ஏன்னா அந்த அளவுக்கு மேல் மாடில ரொம்ப ஒண்ணும் இல்ல(யாருல அது களிமண்ணான்னு கேக்கறது???).

சரிங்க நம்ம விஷயத்துக்கு வருவோம். spiderman-3 ல அப்படி என்ன இருந்தது நீ புதுசா சொல்றதுக்குனு நீங்க கேக்கறது புரியுது. பாதி படம் வர வரைக்கும் ஒரு blogger பார்வையில நான் பாக்கலை. parker-ரோட காதலி அவன்கிட்ட நான் உன்னை காதலிக்கலை... வேற ஒருத்தரை காதலிக்கறேன்... என்னை மறந்துடுனு சொன்னப்பதான் எனக்குள்ள இருந்த blogger திடுக்கிட்டு கண்ணு முழிச்சது. சரி அதுக்கு அவன் என்ன சொல்லப்போறானு பாக்கலாம்னு நினைக்கறதுக்குள்ள அவன் அழ ஆரம்பிச்சிட்டான். ப்ளீஸ் அப்படி மட்டும் சொல்லாதனு அவன் அழுதப்போதான் எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு.

எப்பேற்பட்ட ஆணா இருந்தாலும் ஒரு பொண்ணுக்காகன்னு வரும்போது கண்ணீர் வடிப்பான். அதுக்கு spiderman மட்டும் விதிவிலக்கா என்னன்னு. பா.விஜயோட "உடைந்த நிலாக்கள்" என்னோட favourite கவிதை தொகுப்பு. இதை படிச்சவங்களுக்கு நல்லா தெரியும் பெண்களால எத்தனை ராஜ்ஜியம் எழுந்திருக்கு... எத்தனை ராஜ்ஜியம் வீழ்ந்திருக்குனு... ஷாஜகான், அலெக்ஸாண்டர், நெப்போலியன், கஜினி முகம்மது, ஆபிரஹாம் லிங்கன், திப்பு சுல்தான், ஒத்தெல்லோ, பிருத்விராஜன்.......... இப்படி நீண்டுட்டே போற லிஸ்ட்ல கடைசில நம்ம பருத்தி வீரனும். இவங்க வாழ்க்கைல நடந்த பெரும் மாற்றங்களுக்கு பின்னாடி பெண் மட்டும்தான் முக்கிய காரணம்.

"பெண் என்னும்

பிஞ்சு பிராவகமே!

கனவாக நீயிருந்தால்

கண்விழித்தா நான் இருப்பேன்?

நிலமாக நீயிருந்தால்

நடக்க மாட்டேன். தவழ்ந்திருப்பேன்

முள்ளாக நீயிருந்தால்

குத்திக் கொண்டு குதூகலிப்பேன்

தீயாக நீயிருந்தால்

தினந்தோறும் தீக்குளிப்பேன்

தூசாக நீயிருந்தால்

கண் திறந்து காத்திருப்பேன்

மழையாக நீயிருந்தால்

கரையும் வரை நனைந்து நிற்பேன்"

-- உடைந்த நிலாக்களிலிருந்து

பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்காது. எந்த ஒரு ஆணோட வாழ்க்கையும் பெண்ணில்லாம முழுமையடையாது. எதோ ஒரு பாட்டுல வரும் "ஒரு பொண்ணு நினைச்சா இந்த வானுக்கும் பூமிக்கும் பாலத்தை கட்டி முடிப்பா"-ன்னு. இதை பலர் ஒத்துக்க மறுக்கலாம். அதுக்காக என் கொள்கைல இருந்து நான் பின் வாங்கப் போறதில்ல. ஏத்துக்கறவங்க ஏத்துக்கோங்க. திட்டறவங்க திட்டிக்கோங்க. எல்லாருக்கும் ஒரு பெரிய :-)

Thursday, May 10, 2007

நினைவில்லாமல்...!!!

நீண்ட நேரம்
நின்றிருந்தேன்
நீல ஓடையிலே.......
நிலவினை எதிர்பார்த்து!
நினைவில்லாமல்.......
அன்று அமாவாசையென!!

Tuesday, May 1, 2007

எங்கே நீ சென்றாயோ!!!



மௌன வண்டுகள்

காதுகளில் எப்பொழுதும்

உன் பெயரையே ரீங்கரிக்கின்றன


தனிமை பொழுதுகள்

சிறகு விரித்து ஏனோ

உனையே சுற்றி வருகின்றன


இதய இருட்டுகளில்

ஒளிர்ந்த உன் புன்னகையை

தேடித் தவிக்கிறது மனம்


உள்ளிழுக்கும் காற்றிலாவது

உன் சுவாசம் கலந்திருக்காதாவென்ற

ஏக்கத்தில் துடிக்கிறது இதயம்


புண்பட்ட இதயத்தில்

ஆழமாய் வேல் பாய்ச்சுகிறது

உன் ஒற்றைப் பார்வை


நீயில்லாத உலகில்

பார்வையிழந்துதான் போய் விட்டன

உனை சுமந்த விழிகள்


மரணத்தின் வாயிலிலும்

புன்னகை சிந்தும் மனம் இன்று

வாழ்க்கைப் படிகளில் தள்ளாடுகிறது


கனவுகளில் கட்டிய

காதல் சாம்ராஜ்ஜியத்தை

எந்த பூகம்பம் தகர்த்தெரிந்ததோ


உயிரின் வேர் வரை

கசிந்துருகிய உன் காதலை

ஒரு நொடியும் மறவாது நெஞ்சம்