Monday, October 24, 2011

அன்புள்ள..


குழந்தை உறங்கிக் கொண்டிருந்த அந்த மதிய வேளையில் பீரோ லாக்கரை நோண்டிக் கொண்டிருந்த எனது கைகளுக்கு அப்பாவின் அந்த பழைய கைப்பை கிடைத்தது. எனக்கு தெரிந்து அந்த கைப்பைக்கு எனது வயதிருக்கும். சிறுவயது முதலாய் பார்த்திருக்கிறேன். அப்பாவின் சிறு வயது புகைப்படங்கள், தாத்தா பாட்டியின் புகைப்படங்கள், அத்தைகள் அவருக்கு எழுதிய கடிதங்கள், அவரது நண்பர்களின் முக்கியமான கடிதங்கள் என்று அந்தப் பைக்குள் அவர் சேர்த்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் ஏராளம். பதினொன்றாம் வகுப்பிலேயே விடுதியில் தங்கி படிக்க நேரிட்டதாலும் அதன் பிறகு கல்லூரி, வேலை, திருமணம் என்று வீட்டை விட்டு விலகியே இருந்ததாலும் அந்த வீட்டின் பிரதான இடங்கள் அந்நியமாகத்தான் போயிருந்தன. பத்தாம் வகுப்பிற்குப் பிறகு முதன் முறையாக அந்த வீட்டில் இவ்வளவு தங்க நேரிட்டது இந்த பிரசவக் காலத்தில் தான். இந்த இடைப்பட்ட இடைவெளியில் அவரது கைப்பைக்குள் இடம் பெற்றிருக்கும் நானறியா பொக்கிஷங்களை பார்க்கும் ஆவல் பிறந்தது.



மெத்தை மேல் நன்றாக சம்மணமிட்டு அந்தப் பையை திறக்கும்போது உள்ளே நுழைந்த அம்மா ‘அடுத்தவங்க பையை பாக்கறது தப்பில்ல’ என்று புன்னகைத்தார். ‘எங்கப்பா ஒண்ணும் அடுத்தவரில்ல’ என்று பதிலுடன் புன்னகையை தந்தவாறு மேலிருந்த கடிதங்களை பிரித்தெடுத்து அலசத் தொடங்கினேன். அவற்றின் நடுவில் நான் முதன் முதலில் விடுதி சேர்ந்த பொழுது எழுதிய அத்தனைக் கடிதங்களும் இருந்தன. முதன் முதலாய் எழுதிய கடிததை எடுத்துப் பிரித்துப் படித்தபோது என்னையுமறியாமல் கண்கள் தளும்பியது. அன்று வீட்டை விட்டு அம்மாவை அப்பாவை தம்பியை பிரிந்து அங்கு இருக்க முடியாமல் அடக்க முயன்றும் முடியாமல் கண்களில் வழிந்த கண்ணீர் பட்டுத் தெறித்த அந்த கடிதம் அன்றைய மனநிலையை அப்படியேத் தந்தது. எனக்கு நன்றாக நினைவிருந்தது. அன்று கடிததில் சிந்தியது ஒரு துளிதான். ஆனால் அதன் அருகே இன்னொரு கண்ணீர் துளியின் தடம். நான் யோசித்துக் கொண்டிருந்த போது அம்மா சொன்னார். ‘இந்த லெட்டர் வந்தப்போ படிக்கும்போதே அப்பா கண்ல தண்ணி வந்துடுச்சு. உன்னைப் பிரிஞ்சு இருக்கறதுக்கு ரொம்ப ஃபீல் பண்றாருனு எனக்கே அப்போதான் தெரியும்’. கேட்டதும் அழுகை வந்து விட்டது. ‘என் மேல நீங்கதான் எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க அப்பா. இந்த கடிதங்கள எடுத்துப் பாக்கலைனா எனக்காக நீங்க கண்ணீர் சிந்தினது எனக்குத் தெரியாமலேப் போயிருக்கும்’


பொறுமையாக நான் எழுதிய அனைத்துக் கடிதங்களையும் படித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு கடிதத்தின் போதும் அதை எழுதிய மனநிலை எனக்குள் வந்து வந்து சென்றது. பள்ளியில் இருந்த கையெழுத்திற்கும் கல்லூரிக் காலத்தின் கையெழுத்திற்கும்தான் எத்தனை வித்தியாசங்கள். எனது கையெழுத்தை கிட்டத்தட்ட மறந்தே போயிருக்கும் காலநிலை இது. எவ்வளவு விஷயங்களை நினைவூட்டுகின்றன. பேனா தொலைத்ததிலிருந்து தோழியிடம் சண்டைக் கட்டியது வரை ஒரு குழந்தைப் போல அப்பாவிடம் கொட்டித் தீர்த்திருக்கிறேன். அம்மாவிற்காக மல்லைகைப்பூ, பண்டிகை காலங்களில் ஊருக்கு வருவதற்கு முன்பே வாழ்த்து அட்டைகள், தம்பியின் தேர்விற்காக வாழ்த்துகள் என்று எத்தனை எத்தனை என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுது குழந்தை சிணுங்கினாள். அதன் பிறகு அவற்றைப் பற்றி நினைக்க நேரமில்லாமல் போனது.


சென்னை வந்த பிறகு எனது கணவர் ஒரு ஸ்கூட்டர் பரிசளித்தார். முதன் முறையாக அதில் அமர்ந்து ஓட்டிப் பார்த்தபொழுது எங்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென என் அப்பா புது வண்டி வாங்குவதற்கு யோசித்துக் கொண்டே வெகு காலமாய் அந்தப் பழைய ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டிருந்தது ஏனோ நினைவுக்கு வந்தது. கூடவே அந்தக் கடிதங்களின் நினைவும். அப்பாவிற்கு கிடைத்த இது போன்ற சந்தோசங்கள் இமெயில், சாட், வீடியோ சாட், ஃபேஸ்புக் என்றாகி விட்ட இந்த நவீன யுகத்தில் எனக்கு கிடைக்குமா? எனக்குத் தெரிந்து மொபைல் ஃபோன் வந்த பிறகு அப்பாவிற்கு ஒரு கடிதமேனும் எழுதிய நினைவில்லை. நானே இப்படியென்றால் எனது பெண்? அவளும் என்னைப் போல விடுதி செல்ல நேர்ந்தால் அவளது கையெழுத்தே எனக்கு தெரியாமல் போய் விடும் அல்லவா? என்னதான் மெயில்களை சேகரித்து வைத்தாலும் அவள் கைப்பட எழுதியது போலாகுமா? இத்தனைக் கேள்விகளுக்கும் விடைத் தெரியும். ஆனால் மனம் என்னவோ இந்த சந்தோஷங்களைப் பெரிதும் இழப்பது போல ஒரு உணர்வைத் தந்துக் கொண்டேயிருந்தது. பரவாயில்லை. எனக்கு கிடைக்காமல் போவதற்கு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் என் அப்பாவிற்கேனும் கடைசி வரை கிடைக்க செய்ய என்னால் முடியும். வீடு வந்ததும் ஒரு இன்லாண்ட் லெட்டரை எடுத்து எழுத ஆரம்பித்தேன். ‘அன்புள்ள அப்பா, புதிதாய் ஒரு வண்டி வாங்கி இருக்கிறேன். இன்று நான் நினைத்ததை நினைத்த பொழுது வாங்கிக் கொள்கிறேன் என்றால் அதன் பின் ஒளிந்திருப்பது உங்கள் தியாகங்கள் தான்…’


இதை நான் தொலைபேசி வழியாக ஒரு நிமிடத்தில் முடித்திருக்கலாம். ஆனால் திரும்ப திரும்ப படித்து மகிழும் தருணங்களையும், பொக்கிஷமாய் வைத்து பாதுகாக்கும் சந்தோஷத்தையும் இது மட்டுமே தருமென எனக்கு நன்றாகத் தெரியும்.

12 comments:

கோபிநாத் said...

அருமை ;-)

F.NIHAZA said...

மனதை உசுப்பிவிட்டது...

யதார்த்தமா இருக்கு வாழ்த்துக்ள்...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

கத்தார் சீனு said...

நல்ல பதிவு சகோதரி !!!

ILA (a) இளா said...

அருமை

எம்.ஞானசேகரன் said...

நல்ல பதிவு. என் வலைப் பதிவுகளும் பழைய கடிதங்களைப் பற்றியே பேசுகின்றன. ஒரு முறை வந்து வாசித்தஃப் பாருங்கள்! முகவரி; http://kavipriyanletters.blogspot.com/

எம்.ஞானசேகரன் said...

பதிவு அருமை. என்னுடைய வலைப்பதிவிலும் இதற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன். http://kavipriyanletters.blogspot.com/

Kumaresh said...

படிக்கும்பொழுது என் தந்தை பற்றிய நினைவுகள் என்னுள் வந்தது. என் கண்களில் கண்ணீரையும் தந்தது. இதற்குமேல் ஒரு பாராட்டை என்னால் இந்த பதிவிற்கு செய்ய இயலாது. நன்றி இந்த பதிவிற்கு

Sreeram said...

Romba moving ah irundadu; romba edarthamaa, migaipadutalgal illama neenga vivaritha vidam arumai !

Anonymous said...

நீ பிரிந்து சென்றுவிட்டாய் என்று
எண்ணி எண்ணி ஏங்க
உன் காதலி இல்லை,,

இப்படி ஆரம்பம் ஆகும் உங்க கவிதையோட link please

Anonymous said...

நீ பிரிந்து சென்றுவிட்டாய் என்று
எண்ணி எண்ணி ஏங்க
உன் காதலி இல்லை,,

இப்படி ஆரம்பம் ஆகும் உங்க கவிதையோட link please

இம்சை அரசி said...

// Anonymous Anonymous said...

நீ பிரிந்து சென்றுவிட்டாய் என்று
எண்ணி எண்ணி ஏங்க
உன் காதலி இல்லை,,

இப்படி ஆரம்பம் ஆகும் உங்க கவிதையோட link please//

hi,

this is the link

http://imsaiarasi.blogspot.com/2006/12/blog-post_14.html

Subbu said...

அட்டகாசம்..