Monday, January 24, 2011

நேஹா குட்டி உருவாக்கும் அம்மாவின் உலகம்!

உனது முக்கிய தருணங்களை
புகைப்படம் எடுத்து வைக்கிறேன்
ஒவ்வொரு புதிய செயலையும்
ஏட்டில் குறித்து வைக்கிறேன்
நீ செய்யும் குறும்புகளை
வீடீயோ செய்து வைக்கிறேன்
ஆனால்..
உனது உள்ளங்கையின் மென்மையையும்
பாதத்தின் வாசனையையும்
அவற்றில் முத்தமிடும்போது
எனக்காய் மலரும் புன்சிரிப்பையும்
எதில் சேகரித்து வைப்பது??

—————ooOoo—————

அடுக்கி வைத்திருக்கும்
புத்தகங்களை கலைக்கிறாய்
கடிகாரத்தை இழுத்து
கீழே தள்ளி உடைக்கிறாய்
துடைத்த வீட்டில்
உடனே ச்சூ போகிறாய்
பாயின் கோரைகளை உருவி
வாயில் வைக்கிறாய்
வர வர உன் குறும்பு
அதிகமாய்தான் போய் விட்டது
வெளியே சலித்துக் கொண்டாலும்
மனம் என்னவோ சந்தோசமாய்
ரசிக்கத்தான் செய்கிறது..

—————ooOoo—————

முதலில் அணிந்த சட்டை
முதலாவதாய் போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’-களையும்
பாதுகாத்து வைக்கிறேன்
முதன் முதலாய்
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாய் அழைப்பதை
எப்படி பாதுகாப்பது??

—————ooOoo—————

பப்புக்குட்டிக்கு நேத்தோட 7 மாதங்கள் முடிஞ்சிடுச்சு. கொஞ்ச நாள் முன்னாடி எதாவது எடுக்கணும்னா அங்கபிரதட்சணம் பண்ணி போய்ட்டு இருந்தா. ரெண்டு வாரம் முன்னாடி அவளோட மாமா வாக்கர் வாங்கி தந்துட்டான். இப்ப வீட்டையே அலசி எடுக்கறா.எதையும் வைக்க முடியல. வண்டி நேரா கிச்சன்க்குதான் போகுது. தக்காளி கூடைல இருந்து எடுத்து கீழ போட்டுடறா. அத்தையோட கண்ணாடி, என் ஆபிஸ் பேக் எதையும் விட்டு வைக்கறதில்ல. தாத்தா, பாப்பா சொல்றா இப்ப. என் டைம் ஃபுல்லா அவள சுத்தியே நகருது. சீக்கிரம் பழைய மாதிரி எழுத ஆரம்பிக்கனும்னு நினைச்சுட்டு இருக்கேன். பாப்போம் :)))

13 comments:

நாகை சிவா said...

கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இந்த பதிவை கவிதையில் வகைப்படுத்துவது எந்த விதத்தில் நியாயமோ?

முதல் இரண்டும் சூப்பர்.

மூணாவதுக்கு பதில் - உங்க கைபேசி ல அவள் பேசுவதை சேமித்து வைங்க. காலம் போற கேட்டுக்கலாம்.

கோபிநாத் said...

அம்புட்டும் அழகு...;))

\\சீக்கிரம் பழைய மாதிரி எழுத ஆரம்பிக்கனும்னு நினைச்சுட்டு இருக்கேன். பாப்போம் :)))\\

ஏன் இந்த கொலைவெறி இப்போ ;)))

Unknown said...

என்ன சொல்றா என் மருமவ?


/சீக்கிரம் பழைய மாதிரி எழுத ஆரம்பிக்கனும்னு நினைச்சுட்டு இருக்கேன். பாப்போம்/
அதென்ன! குட்டி தேவதை கூட இருந்து விளையாடுறதை விட்டுட்டு எழுத்து என்ன வேண்டிக் கிடக்கு?

வல்லிசிம்ஹன் said...

நேஹா அம்மாவுக்கு என் அன்பு. நேஹாக் க்ட்டி நிறைய பேசு. அப்ப தான் கவிதைகள் இன்னும் வரும்:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகான விசயங்களை பகிர்ந்திருக்கே இம்சை.. நேஹாவின் சுட்டித்தனங்களைப் படித்து மகிழ்ச்சி .. நன்றி..

சிவா சொன்னது மாதிரி பதிவு செய்து வச்சிக்கோம்மா..
சபரிகுரலில் தான் என் தொலைபேசி அழைக்கும்..:))
(என் மகளின் குரலை பதிவு செய்ய என்னிடம் அப்ப போன் இல்லை :( ஆனா டேப்ரெக்கார்டரில் பதிஞ்சுவச்சிருக்கேன். )

அமுதா கிருஷ்ணா said...

சேட்டைகள் தொடரட்டும்.

commomeega said...

நேஹா குட்டி-ஐ அப்படியே தூக்கி கொஞ்சனும் போல கை பரபரக்கிறது.

Anisha Yunus said...

அய்யய்யோ இம்சை அரசின்னு ஒரு மானஸ்தி இருந்தாங்களே அவிங்க எங்க???


தக்காளிய உங்க பொண்ணாவது கீழ போடறாங்க. என் பையன், தண்ணி குடத்துல போட்டு மூடியும் வச்சிருவான். இப்பத்தானே வாங்கி வச்சோம் எங்க காணம்னு எங்கம்மா கிச்சன் ஃபுல்லா தேடினாலும் கிடைக்காது. அடுத்த நாள் தண்ணி பிடிக்க குடத்தை எடுத்தா, டம்ளர், தக்காளி, உருளை, பொம்மை...எதெல்லாம் உள்ளே போகற சைசோ அதெல்லாம் உள்ளாற மெதக்கும். என்சாய் பண்ணுங்க :)

Arul Kumar P அருள் குமார் P said...

அந்த ரெண்டாவது கவிதை அப்படியே எங்கள் வீட்டு பையன் செய்வதை போலவே உள்ளது. மிக அருமையான கவிதைகள். உங்கள் சம்மதத்துடன் உங்கள் பெயரிலேயே / உரலியுடன் அந்த மூன்று கவிதைகளையும் என்னுடைய பதிப்பில் போட அனுமதி வேண்டுகிறேன்.

ஹுஸைனம்மா said...

Best wishes.

But please dont use walker for toddlers, atleast until 9 months. That'll weaken their legs, if used before they were able to stand and move themselves.

சி.பி.செந்தில்குமார் said...

>>>முதன் முதலாய்
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாய் அழைப்பதை
எப்படி பாதுகாப்பது??

அழகு கற்பனை

Anonymous said...

நாம் தாயாகிறபோது தான் நம் தாயின் அருமை நமக்கு நன்றாகப் புரியும்.
சரளமான நடை!

shrisaran

Anonymous said...

neha is my daughters name too ..she is 8