Wednesday, August 29, 2007

கோடி நன்றிகள்!!!

போன 21ஆம் தேதி என் பிறந்த நாள் அன்னைக்கு வாழ்த்திய எல்லாருக்கும், என் பிறந்த நாளை அவங்க பிறந்த நாளா எண்ணி கொண்டாடிய என் ந்ட்புகளுக்கும் கோடானு கோடி நன்றிகள்.

உடம்பு சரியில்லாத காரணத்தால முன்னாடியே போன் பண்ணி வாழ்த்துக்கள் சொன்ன மைஃப்ரெண்ட், கப்பி, நைட் 12 மணிக்கே வாழ்த்தணும்னு தூங்காம முழிச்சு இருந்து போன் பண்ணி வாழ்த்திய ஜி, G3, புலி, சிபி அண்ணா(எனக்காக ரொம்ப அழகான சாங் டெடிகேட் பண்ணினதுக்கு ரொம்ப தேங்ஸ் அண்ணா), மெசேஜ் அனுப்பின துர்கா, காயத்ரி, 12 மணிக்கு மறந்து போயி 12.30க்கு போன் பண்ணின ராம் அண்ணா, காலைல கால் பண்ணின தொல்ஸ் அண்ணா, மோகன்தாஸ், ஓசை செல்லா அண்ணா, தேவ் அண்ணா, நவீன், சாயந்திரம் போன் பண்ணின அய்யப்பன் அண்ணா, மெயில் அனுப்பின பொன்ஸ் அக்கா, CVR, தம்பி, போஸ்ட் போட்டு சொன்ன கண்மனி அக்கா, மெசெஞ்சரில் பிங் பண்ணிய கார்த்திக் பிரபு, ரொம்ப லேட்டா இன்னைக்கு சொன்ன அருட்பெருங்கோ மற்றும் பின்னூட்டம் மூலமா வாழ்த்திய எல்லாருக்கும் கோடானு கோடி நன்றிகள் :)))))))))))))

ரெண்டாவது முறையா என் பர்த்டேவ ரொம்ப ரொம்ப சந்தோஷமா கொண்டாடினேன். thank u all :)))

இது என் அம்மாவும் அப்பாவும் அவங்களோட குட்டி ஏஞ்சல்க்கு கொடுத்தது...



இது ப.பா.ச தங்கங்கள் கொடுத்த பட்டு புடவை...

இது எனக்கு நானே கொடுத்துக்கிட்ட பட்டு புடவை ;)

இது என் ஃப்ரெண்ட் வாங்கி கொடுத்தது. இதுல வெள்ளில கோட்டிங் கொடுத்திருக்காங்க. லைட் வெளிச்சத்துல சும்மா தக தகனு மின்னுது...

இது ரெண்டும் என் பாசக்கார அண்ணனுங்க ராமும், ஜி-யும் வாங்கி கொடுத்தது...



இது நம்ம கவிதாயினி காயத்ரி கொடுத்தது...



என் கஸின் ரம்யா அக்கா கொடுத்தது....

பாருங்க இந்த ஒண்ணுந்தெரியாத பாப்பாவ... ;)))

Wednesday, August 8, 2007

காலம் கரைந்தாலும்...!!!

"அன்புள்ள அப்பா" என்று ராகமாய் இழுத்தபடி உள்ளிருந்து மெதுவாய் ஓடி வந்து அருகில் அமர்ந்த அன்பு மகள் சுசியை பார்த்து புன்னகைத்தார் சந்திரசேகர்.

"என்னடா? இன்னைக்கு ஆட்டமும் பாட்டமுமா ரொம்ப குஷியா இருக்க போல?" என்றபடி கையிலிருந்த பேப்பரை மூடி டீப்பாய் மீது வைத்து விட்டு பதிலுக்காக அவள் முகம் பார்த்தார்.

"உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா?" என்று அவள் மறுபடியும் பாடினாள்.

ஹ்ம்ம்ம் என்ற ஒரு பெருமூச்சோடு புன்னகையை மட்டுமே அவர் பதிலாய் தந்து விட்டு எழ முயல அவள் கையைப் பற்றி

"ப்ளீஸ் டாடி! இன்னைக்கு சொல்லியே ஆகணும். எத்தனை நாளா கேட்டுட்டே இருக்கேன்? நீங்க மம்மிய லவ் பண்ணிதான கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?"

"இல்லைடா"

"இப்போ சொல்ல போறீங்களா இல்லையா? அப்போ நானும் நீங்களும் அப்பா பொண்ணு இல்ல ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்னு சொன்னதெல்லாம் பொய்தான?" என்று அவள் சிணுங்கவும் அவர் செய்வதறியாது திகைத்தார்.

"சரி உனக்கு சொல்றேன். ஆனா சாப்பிட்டதுக்கு அப்புறம்தான்" என்று அவர்
போட்ட கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டு ஆர்வத்தில் வேக வேகமாய் சாப்பிட்டு முடித்தாள்.

"சொல்லுங்க அம்மாவ எப்படி லவ் பண்ணினிங்க?" என்று அவள் ஆர்வத்துடன் கேட்க

"ஹ்ம்ம்ம்.... உங்க அம்மாவ நான் பாக்கறதுக்கு முன்னாடியே எங்கம்மா பாத்து நிச்சயம் பண்ணிட்டாங்க போதுமா?"

"பொய் சொல்றீங்க டாடி. நான் உங்க பழைய டைரில நீங்க எழுதி வச்ச சில
கவிதைகள பாத்தேன். அதனாலதான் அப்போ இருந்து கேட்டுட்டே இருக்கேன். நீங்க சொல்லவே மாட்டென்றீங்க"

"நான் காதலிச்சது உண்மைதான். ஆனா அது உன் அம்மாவ இல்ல" என்று அவர் விட்டத்தை வெறித்தபடி கூற அதிர்ச்சியில் வாய் பிளந்தாள்.

"என் அக்கா பொண்ண எனக்குதான் சின்ன வயசுல இருந்து சொல்லி சொல்லி வளர்த்தாங்க. நான் படிப்பு முடிச்சிட்டு வேலை தேடிட்டு இருந்த சமயம். கவர்மெண்ட் வேலைல இருக்கற மாப்பிள்ளை வந்துச்சுன்னு எங்க மாமா அவருக்கு பேசி முடிச்சிட்டார்" என்று அவர் எவ்வித உணர்ச்சியுமின்றி கூற ஆச்சர்யத்தில் விழிகள் இரித்து இமைக்காமல் தந்தையையே பார்த்தாள். சில நொடிகள் கழித்து

"நீங்க போய் எதும் கேக்கலையா?" என்றாள்.

"அப்போ எனக்கு வேலை இல்ல. எந்த முகத்த வச்சுக்கிட்டு மாமாகிட்ட போய் கேப்பேன்? அப்போ எனக்கு உலகமே வெறுத்து போச்சு. பேசாம அவள
கூட்டிட்டு போய்டலாமானு கூட நினைச்சேன். ஆனா அவ என்ன நினைக்கறான்னு எனக்கு தெரியவே இல்ல. கேட்டு அவ முடியாதுனு சொல்லிட்டா அது இன்னும் எனக்கு நரகம். அதான் கேக்காமலே விட்டுட்டேன். கல்யாணத்துக்கு போய் தாய் மாமா செய்ய வேண்டிய சடங்கு செஞ்சுட்டு வந்துட்டேன். அவளுக்கு சடங்கு செய்யும்போது நெத்தில சந்தனம் வச்சப்ப அவ கண்ணு கலங்குச்சு. இன்னைக்கு வரைக்கும் ஏன்னு தெரியல" என்றவரது கண்கள் கலங்க அதற்கு மேல்பேச முடியாமல் முகத்தை வேறுபுறம் திருப்பினார்.

அவர் கண்கள் கலங்குவதை பொறுத்துக் கொள்ள முடியாமல்

"பணத்துக்காக உங்களை விட்டு போனவங்களுக்காக நீங்க ஏன் டாடி
கவலைப்படணும்? கம் ஆன். சியர் அப்" என்றவள் அவளது அன்றைய காலேஜ் கதைகள் பேசி அவரது கவனத்தை திருப்ப முயன்றாள். அவர் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பியதும் தூங்கச் சென்றாள்.

ஆனால் சந்திரசேகரின் மனம் பழைய நினைவுகளையே அசை போட்டு
கொண்டிருந்தது. அக்கா பெண்ணின் திருமணத்திற்கு பிறகு வேலை கிடைத்ததும், அவரது தாயார் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்ததும், மனைவியுடன் டெல்லி வந்து செட்டில் ஆனதும், தாயாரின் மரணத்திற்கு மட்டுமே சொந்த ஊருக்கு சென்று வந்ததையும், பின்பு சுசி பிறந்து அவள் இரண்டு வயது குழந்தையாய் இருக்கும்போது மனைவியையும் விபத்தில் பறி கொடுத்ததும், மகளையே தனது உலகமாக்கி கொண்டதையும் எண்ணியபடியே தூங்கி போனார்.

சுசியோ இரவு முழுதும் அப்பா சொன்னதையே திரும்ப திரும்ப நினைத்து
கொண்டிருந்தாள். அப்பாவுக்குள்ள இப்படி ஒரு சோகமா? என்றெண்ணி
வருந்தியவளது மனது தானாய் அந்த பெண்ணின் மீது வெறுப்பை உமிழ
ஆரம்பித்தது. ச்சே! கேவலம் வேலை இல்லாததை காரணம் காட்டி அப்பாவின் காதலை குழி தோண்டி புதைத்த பெண்ணை என்னவென்று சொல்வது?
எப்படியாவது அவங்களை பாக்கணும். பாத்து இன்னைக்கு பாருங்க எங்க அப்பா எவ்ளோ ஒரு நல்ல நிலைமைல இருக்காருன்னு சொல்லணும் என்று எண்ணிக் கொண்டாள்.

அவளது வேண்டுகோள் கடவுளின் காதுகளை எட்டியதோ என்னவோ அடுத்த நாள் அவளது அத்தைப் பெண் திருமண அழைப்பிதழ் வந்தது. அண்ணாவும் மருமகளும் இம்முறையாவது கண்டிப்பாக வர வேண்டும் என்ற ஒரு பெரிய வேண்டுகோளுடன் வந்திருந்த அழைப்பிதழை எடுத்துக் கொண்டு சந்திரசேகரிடம் ஓடினாள்.

"டாடி நான் ஒண்ணு கேப்பேன். கண்டிப்ப செய்யணும். மாட்டேனு சொல்ல கூடாது" என்று கைகளை பின்னால் கட்டியபடி கெஞ்சலாய் கேட்கும் மகளை பார்த்து புன்னகைத்த சந்திரசேகர் என்ன என்பது போல தலையசைத்தார்.

"ப்ராமிஸ் சொல்லுங்க. ப்ளீஸ் டாடி" அவள் கெஞ்சவும் சிரித்தபடி ப்ராமிஸ் என்றார். அவரிடம் அழைப்பிதழை நீட்டியவள்

"இந்த கல்யாணத்துக்கு நாம போறோம்" என்றாள். வேண்டாம் என்று அவர் மறுக்கவும் பிடிவாதம் பிடித்து, மிகவும் கெஞ்சி எப்படியோ சம்மதிக்க வைத்தாள்.

கல்யாணத்திற்கு போக எல்லா ஏற்பாடுகளையும் செய்தவள் அந்த நாளுக்காய் ஆவலாய் காத்திருந்தாள். அந்த பெண்ணை பார்த்து அவர் முன் பாருங்க நாங்கள் எப்படி நல்ல நிலமையில் இருக்கிறோமென்று காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அதற்காகதானே இத்தனை அடம் பிடித்து சம்மதம் வாங்கினாள்.

அங்கு சென்றதும் அவளது சின்ன அத்தை பெண் இவளுடன் நன்றாக ஒட்டிக் கொள்ள திருமணத்தன்று அவளுடனே சுற்றிக் கொண்டிருந்தாள். அவளிடம் கேட்டு அப்பாவின் அந்த அக்கா பெண் யாரென்று தெரிந்து கொண்டாள். அவர் யாருடனோ அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அவர்கள் முன்பு வேண்டுமென்றே அதற்கும் இதற்குமாய் நடந்தாள். அப்போது அந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த இவளது அத்தை இவளை கூப்பிட்டு அறிமுகப்படுத்த சுசியின் இதயம் வேகமாய் துடித்தது. இந்த தருணத்திற்காகதானே இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வந்ததே. மனப்பாடம் செய்து வைத்த டயலாக்குகளை எல்லாம் வேக வேகமாய் மனதுக்குள் ஓட்டி பார்த்துக் கொண்டாள்.

அவரோ சுசியை அருகில் அமர வைத்துக் கொண்டு கைகளை விடாமல் அவள் முகத்தையே இரு நொடிகள் பார்த்தார். அப்போது அவர் முகத்தில் சொல்ல முடியாத ஆர்வம் தென்பட சுசி புரியாமல் குழம்பினாள்.

"எப்படிம்மா இருக்க? என்ன படிக்கிற?" என்று அவர் கேட்கும்போது குரல் பிசிறியது அவளுக்கு தெளிவாக தெரிந்தது.

"நல்லா இருக்கேன் ஆன்டி. பி.இ ஃபைனல் இயர் படிச்சிட்டு இருக்கேன்" என்று அவள் சொன்னதும்

"ஆன்டியெல்லாம் சொல்லாத. அம்மானு சொல்லு" என்று அவர் சொல்லும்போது கீழுதடு துடித்தது. பற்களால் கடித்து அடக்கியவர் எங்கோ பார்த்தபடி

"அப்பா எப்படி இருக்கார்?" என்றார்.

"அவருக்கென்ன? ராஜா மாதிரி இருக்கார்" என்று அவள் முடிப்பதற்குள் அவளது அத்தை பெண் அப்பா கூப்பிடுவதாய் சொல்லி அவளை கூப்பிட "இருங்க வரேன்" என்று எழுந்தாள். சரியென்று அவர் அவளை நிமிர்ந்து பார்த்தபோது அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள்.

அவர் விழிகளில் நிரம்பியிருந்த கண்ணீர்..... அன்று தந்தையின் கண்களில் கண்ட அதே கண்ணீர்......