Showing posts with label Tag. Show all posts
Showing posts with label Tag. Show all posts

Monday, July 14, 2008

திண்ணை

ரெண்டு பேரு க்ரூப் சாட் போட்டு நம்ம அரை மணி நேரத்த சாப்பிட்டுட்டு மெதுவா திண்ணையப் பத்தி எதாச்சும் எழுதுங்கோ அக்கா-ன்னு மெதுவா கேட்டாங்க. அவ்ளோ நேரமா பேசிட்டு இருந்ததுல சரி பாசக்கார பயபுள்ளக கேட்டுட்டாங்க. ஸ்ரீ-ன்னு ஒரு பொண்ணு வேற நம்மள tag பண்ணிட்டாங்க. என்ன ஆயிடப் போவுது எழுதிடலாம்னு உக்காந்து யோசிச்சப்போதான் அந்த ஒரு பகிங்கரமான உண்மை படார்னு என்னை அறைஞ்சது. ச்சே! எதுக்கு இந்த பில்ட் அப் இம்சை? ஒழுங்கா சொல்லு...

அட ஆமாங்க... நான் நாலாவது படிச்ச வரைக்கும் ஒரு வீட்டுல குடி இருந்தோம். அந்த வீட்டுல மட்டும்தான் திண்ணை இருந்துச்சு. அதுக்கப்புறம் நாங்க இருந்த எந்த வீட்டுலயும் திண்ணையே இல்ல. என்ன கொடுமை இம்சை இது??? இதை வச்சு எப்படி எழுதறது? இப்படியெல்லாம் மானிட்டரையே பாத்து முறைச்சுட்டே இருந்ததுல அந்த திண்ணைல நடந்த கதையெல்லாம் கொசுவத்தி சுத்திட்டு வந்துச்சு. ஹி... ஹி... நமக்கு தான் நம்ம LKG வயசுல நடந்தது கூட ஞாபகம் இருக்குமே. அப்புறம் எப்டி இது மட்டும் மறந்துப் போகும்?? சரி நம்ம திண்ணைக் கதைக்கு போவோம்.

ஒன்ஸ் அப்பான் எ டைம் லாங் லாங் அகோ நாங்க குடியிருந்த ஒரு வீட்டுல வாசலுக்கு ரெண்டுப் பக்கமும் திண்ணை இருந்துச்சு. ஒரு மாதிரி மெரூன் கலர்ல பெயிண்ட் பண்ணீயிருப்பாங்க. வாசலுக்கு வலதுப் பக்கம் இருக்க திண்ணை நீளமா இருக்கும். இடதுப் பக்கம் இருக்கறது கொஞ்சம் நீளம் கம்மியா இருக்கும். அந்த பெரிய திண்ணைக்கு எனக்கும் என் தம்பிக்கும் சண்டை வரும். காலைல எழுந்து ப்ரஷ் பண்ணினதும் அம்மா தர காபிய வாங்கிகிட்டு வேக வேகமா போவோம் பெரிய திண்ணையப் பிடிக்க. அதுலப் போய் உக்காந்து ஒரு வெற்றி சிரிப்போட பெருமையா காபிக் குடிப்பேன். பாவம் அவன் சின்ன பையன்றதால என்கிட்ட ரொம்ப தோத்துப் போவான்.

எங்க எதிர்த்த வீட்டுல எங்களை மாதிரியே ஒரு அண்ணன் தங்கச்சி இருந்தாங்க. மகேந்திரன், கோமதினு பேரு. கோமதி என் செட்டுப் பொண்ணு. எனக்கும்(என் தம்பி யார்ட்டயும் சண்டை போட மாட்டான்) அவங்க ரெண்டு பேருல யாருக்குமாச்சும் சண்டை வந்து டூ விட்டுக்கிட்டா அவங்க வந்து எங்க திண்ணைல உக்காரக் கூடாது. நாங்க ரெண்டுப் பேரும் அவங்க திண்ணைக்கு போக மாட்டோம். இது எங்க எழுதப்படாத சட்டம். பழம் விடறப்போ யார் போய் பழம் விடறாங்களோ அவங்க வீட்டுத் திண்ணைலதான் உக்காந்து விளையாடுவோம்.

எங்க திண்ணைக்கு அடில ஆத்து மணல் கொட்டி வச்சிருந்தாங்க. அதுல கோவில் கட்டி வீட்டுல இருந்த பிஸ்கட், நொறுக்குத் தீனி எல்லாம் வச்சு சாமிக்குப் படைச்சு விளையாடுவோம். திண்ணை மேல ஒரு பக்கட் தண்ணி வச்சு அது மேல போற கம்பில ஒரு கொட்டாங்குச்சி கட்டின கயிறு விட்டு தண்ணி சேந்தி விளையாடுவோம். அச்சாங்கல், பல்லாங்குழி-னு என் சின்ன வயசு விளையாட்டுக்கெல்லாம் அந்த திண்ணைதான் ப்ளே க்ரவுண்டு.

நான் மண்டிப் போட்டு ஸ்லேட்டுல அ, ஆ... A, B, C, D... எழுதக் கத்துக்கிட்டது எல்லாம் அந்த திண்ணைலதான். ட்ராயிங் கத்துக்க ஆரம்பிச்சப்ப, கோலம் போட ஆசைப்பட்டப்ப எல்லாம் மொதல்ல தேடி ஓடினது அந்த திண்ணையதான். அம்மா திட்டினப்போ, அப்பா சாப்பிட சொல்லி மிரட்டினப்போ தஞ்சம் புகுந்ததும் அந்த திண்ணைகிட்டதான். இப்படி என் ஃப்ரெண்ட் மாதிரி இருந்த திண்ணைய் பிரிஞ்சுப் போனப்போ அப்போ ஒண்ணும் தெரியலை. திரும்ப ஒரு தடவை அந்தப் பக்கம் கோமதியப் பாக்க போக நேர்ந்தப்போ பூட்டியிருந்த அந்த காலி வீட்டுத் திண்ணைலப் போயி கொஞ்ச நேரம் உக்காந்துட்டு வந்தேன். ஏன் அப்படி பண்ணீனேனு இன்னமும் தெரியலை. ஹ்ம்ம்ம்... அதுக்கப்புறம் திண்ணையோட நட்பு எனக்கு வாழ்க்கைல கிடைக்கவே இல்ல.

ஒரு தடவை எங்கம்மாகிட்ட கேட்டேன். "கோமதி வீட்டுல, சாந்தி அக்கா வீட்டுல, சந்திரா அக்கா வீட்டுல, ராஜா அண்ணா வீட்டுலனு எல்லார் வீட்டுலயும் திண்ணை இருக்கே. எதுக்கங்கம்மா வீட்டுக்கு திண்ணை வச்சுக் கட்டி இருக்காங்க?"-னு. அதுக்கு எங்கம்மா "அந்தக் காலத்துல இப்படி சைக்கிள், பைக், கார்னு எதுமே கிடையாது. எல்லாரும் நடந்துதான் போவாங்க. வழில கால் வலிச்சோ இல்ல வேற எதுக்காகவோ உக்காரணும்னு நினைச்சா இடம் வேணும் இல்லையா? அதுக்காகதான் வழிப் போக்கர்கள் உக்காந்து ரெஸ்ட் எடுத்துட்டுப் போறதுக்காக அப்படிக் கட்டினாங்க"-னு சொன்னாங்க.

இந்தக் காலத்துல கண்ணு முன்னாடியே உயிருக்குப் போரடினாக் கூட நமக்கென்னனு கண்டும் காணாமப் போறவங்க வழிப் போக்கர்கள் உக்காரட்டும்னா பாக்கப் போறாங்க? இப்போ திண்ணை வச்சுக் கட்டற பழக்கம் இல்லாமப் போனதுக்கு இதும் கூட ஒரு காரணமா இருக்கலாம். ஹ்ம்ம்ம்...

சரிங்க... கொசுவத்தி சுத்தி சுத்தி கண்ணுல அந்த திண்ணையேதான் தெரியுது. அடுத்த தடவை ஊருக்குப் போகும்போது கண்டிப்பா போய் ஒரு அஞ்சு நிமிஷமாவது உக்காந்திருந்துட்டு வரணும்னு நினைச்சுட்டு இருக்கேன். இப்போ என் முறையா???

இந்தப் பதிவு எழுத சொல்லி க்ரூப் சாட்ல சொன்ன, என்னோட எல்லாப் படைப்புகளையும் ரசிச்சு விமர்சனம் பண்ற, ப்ளாக் ஆரம்பிச்சு பேருக்கு நாலு போஸ்ட் போட்டுட்டு அதுக்கப்புறம் தலை வச்சுப் படுக்காமலே இருக்கும் என் அன்பு தங்கச்சி வைதேகி... திண்ணைப் பதிவு மூலமா ரீஎன்ட்ரி கொடுடா செல்லம் :)))

ரெண்டுப் பேர பண்ணனுமாம். இன்னொருத்தர் யாரைப் பண்றது??? அடடா... அமெரிக்கால உக்காந்துக்கிட்டு அமெரிக்க மாப்பிள்ளை கதை எழுதி திரிஞ்சுட்டு இருக்கற நம்ம ஜி-ய சும்மா விடலாமா? யப்பா பூட்சு போட்ட பூனையாரே. எழுதிடுங்க :)))

Wednesday, July 9, 2008

காதலெனப்படுவது யாதெனில்...

நம்ம காதல் முரசு அருட்பெருங்கோ இருக்காரே.... சும்மாவே இருக்க மாட்டாரு. எதாவது ஒரு சிக்கல்ல மாட்டிக்க வேண்டியது. அப்புறம் நான் நிம்மதியா இருக்கறது பிடிக்காம என்னையும் மாட்டி விட வேண்டியது. இப்ப "காதலெனப்படுவது யாதெனில்"-ன்ற தலைப்புல எதாச்சும் எழுதுங்கனு மாட்டி விட்டுட்டாரு. இவ்வளவு அழகான தலைப்ப வச்சு சோகமா எழுதுனதே பெரிய தப்பு. இதுல என்னை வேற மாட்டி விட்டு இன்னும் பெரிய தப்பு பண்ணிட்டாரு... ஹி... ஹி... நாமதான் எந்த தலைப்புக் கிடைச்சாலும் அதை கொலைப் பண்ணாம விட மாட்டோமில்ல... மேடம் இதை வச்சு ஒரு கவிதை எழுத ட்ரை பண்ணி இருக்காங்க... தேறுமானு சொல்லிட்டுப் போங்கப்பூ....

******************************************



காதலெனப்படுவது யாதெனில்...
இதற்கு மேல் தொடரத்
தெரியவில்லை
உன்னைக் காணும் முன்பு...

எத்தனையோ விளக்கங்கள்
எத்தனையோ செய்திகள்
முன்பு கேட்டிருந்தாலும்
ஒரு புரிதல் இல்லாமலே நான்...

சொல்லவொண்ணா சோகங்களில்
நில்லாமல் வழிந்த விழிநீரில்
மனம் கசிந்து என்னுடன்
உனதிருப்பை உணர்த்திய
உன் உள்ளங்கையின்
மௌன மொழியா காதல்?

சிறு பிள்ளையாய்
அடம் பிடிக்கும் சமயங்களில்
விளையாட்டாய் சண்டையிட்டு
முகம் சுருங்கும் என்னை
ஆதரவாய் இழுத்தணைக்கும்
அணைப்பின் சுகமா காதல்?

கிண்டல்களில் துளிர்க்கும்
கோபங்களை ரசித்து
விடைத்த மூக்கில்
குறும்பாய் நீ வைக்கும்
முத்தத்தின் ஈரப்பதமா காதல்?

எழவும் துணிவற்ற
நலமிழந்த தருணங்களில்
நொடியும் பிரியாமல்
அடைகாக்கும் கோழியாய்
எனை கவனித்த உன்
உள்ளத்தின் தாய்மையா காதல்?

தனித்திருக்கும் பொழுதுகளில்
இதமாய் அணைத்து
காதுமடலில் மெலிதாய்
சூடுப் பரப்பிச் செல்லும்
முத்தங்களின் ஸ்பரிசங்களா காதல்?

உனைப் பிரிகையில்
எனையும் அறியாமல்
துளிர்க்கும் நீரைக் கண்டு
கூடாதென்று எவருமறியாமல்
சொல்லும் உன் சைகையில்
பொதிந்த அரவணைப்பா காதல்?

என்னாயிற்று எனக்கு?
சுருங்க சொல்லாமல்
விவரித்துக் கொண்டிருக்கிறேனே!!
காதலெனப்படுவது யாதெனில்
அன்பே நீதான்.... நீ மட்டும்தான்....
******************************************

அப்பாடா.... ஒரு வழியா தலைல விழுந்த பொறுப்பை சரியாவோ மொக்கையாவோ செஞ்சாச்சு... இனி அடுத்தவங்க தலைல கட்ட வேண்டியதுதான். யார் தலைல கட்டலாம்??? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....................(யோசிக்கிறேன் ;))))

நம்ம அண்ணன் இருக்கும்போது வேற யாரைப் போயி tag பண்றது?? ஹி... ஹி... நம்ம வெண்பா வாத்தி, ஃப்ரொபஷனல் கொரியர், என் அருமை பாசமலர் அண்ணா ஜீவ்ஸை இதை தொடர அழைக்கிறேன்.....

ஸ்ஸ்ஸ்ஸ்..... அப்பா.... சோடா எங்க? சோடா எங்க?? ;)))

Tuesday, January 29, 2008

இம்சை அரசியின் எழுத்துக்களில் எனக்குப் பிடித்தது


நம்ம ஜொள்ளுத்தம்பிக்கு நான் சும்மா இருக்கறதுப் பாத்து ஒரே பொறாமை. நீ எப்படிக்கா சும்மா இருக்கலாம்னு வயிறெரிஞ்சாரா... அதோட விட்டிருக்கனும். அதை விட்டுட்டு உனக்குப் பிடிச்ச பதிவு என்னன்னு எழுதுனு என்னையும் கோர்த்து விட்டுட்டாரு. சரி போன வருஷம் அப்டி என்னதான் நாம எழுதிருக்கோம்னு கொஞ்சம் அப்படியேக்கா தலைய உள்ள விட்டுப் பாத்தேன். ஓ மை காட்! 55 பதிவுகள் எழுதியிருக்கேன் :O நானா? நானா?? நானா???-ன்னு நாலாப் பக்கமும் ஒரே எக்கோவா அடிக்குது. ஒரு வாழைப்பழ சோம்பேறி நானே இவ்ளோ எழுதி இருக்கேனா அது ரொம்ப பெரிய சாதனைதானே...

ஹ்ம்ம்ம்... எனக்குப் பிடிச்ச பதிவு என்னன்னு ஒரு வாரமா ஒரே ஆராய்ச்சி. ஆரய்ச்சி பண்ணினதுல வலைச்சரம் ஆசிரியர் ரேஞ்சுக்குப் பதிவுப் போட வேண்டியதாயிடுச்சு. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்கப்பு ;)))

கவிதைகள் எழுத நான் முயற்சி செய்து ஓரளவு சுமாராக வந்த கோபமாய் வருகிறது, வெறித்தனமாய் காதலிக்கிறேன், என்ன ஒரு வில்லத்தனம், எங்கே நீ சென்றாயோ கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். வெறித்தனமாய் காதலிக்கிறேன் கவிதை எனக்கே ரெண்டு தடவை ஃபார்வார்ட் மெயிலல் வந்துடுச்சு. நம்மளோடது கூட ஃபார்வர்ட் பண்ற அளவுக்கு இருக்கானு எனக்கு ஒரே ஆச்சர்யம் :)))

அப்புறம் சும்மா லுலுலா பதிவுகள்ல எடுத்த சபதம் முடிப்பேன் ரொம்ப பிடிச்ச ஒண்ணு. அது கூட ஃபார்வார்ட்ல சுத்துச்சுனு கேள்விப்பட்டேன். ஆனா எனக்கு வரலை.

தொடர் கதைகள்னு எடுத்துக்கிட்டா வலி மற்றும் அத்தை மகனே அத்தானே. இந்த அத்தை மகனே அத்தானே பத்தி வலைச்சரத்துல நிறைய தடவை எழுதினாங்க. பாரி அரசு அவரது தமிழ்மண வாசிப்பில் என்ற பதிவிலும் இதைப் பற்றி எழுதி இருந்தார். இந்த ரெண்டு கதையும் நிறைய பேர் ரொம்ப நல்லா இருக்குனு சொன்னாங்க.

சிறுகதை எழுத நிறைய தடவை ட்ரை பண்ணிட்டேன். எனக்கு ரொம்ப நல்லா வராது. இப்போதான் கொஞ்சம் முன்னேறி இருக்கேன். அப்டி நான் நல்லா எழுதினதா நினைக்கற ஒரு கதை காலம் கரைந்தாலும். ரொம்ப நாளா எழுதணும்னு யோசிச்சு வச்சிருந்த கதை. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது.

அப்புறம் ரொம்ப முக்கியமானது இதே மாதிரி Tag பண்ணினதுல எழுதின அழகென்ற சொல்லுக்கு. என்னோட சிறந்தப் பதிவுக்கு வாக்களிக்க சொன்னா நிறைய பேர் இதைதான் சொல்வாங்க. வலைச்சரத்துலக் கூட வந்துச்சு.

நம்மளோட லிஸ்ட் இதுதாங்க. அப்டியே நம்ம நட்பு வட்டாரத்துல எல்லாம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்திட்டேன்.

1. அண்ணன் CVRக்குப் பிடிச்சது அத்தை மகனே அத்தானே.
2. தல ஜி சொன்னது எடுத்த சபதம் முடிப்பேன் மற்றும் அழகென்ற சொல்லுக்கு.
3. செல்லத் தங்கச்சி மைஃப்ரெண்ட் சொன்னது அழகென்ற சொல்லுக்கு.
4. சிறுகதை சூறாவளி தேவ் அண்ணாவுக்கு பிடிச்சது காலம் கரைந்தாலும மற்றும் கோடி நன்றிகள். இது என் பிறந்த நாளுக்காக போட்டப் பதிவு.
5. கடைசி தங்கச்சி துர்காவுக்கு பிடிச்சது அத்தை மகனே அத்தானே.
6. மோகன்தாஸுக்கு பிடித்ததும் அத்தை மகனே அத்தானே.
7. ஐயப்பன்(ஜீவ்ஸ்) அண்ணாச்சி சொன்னது அத்தை மகனே அத்தானே.
8. நம்ம ஜொள்ளுத் தம்பிக்கு பாய் ஃப்ரெண்ட் தேவையா பதிவுதான் ரொம்ப பிடிக்குமாம். இதைப் படிச்சப்போ தரைல விழுந்து புரண்டு சிரிச்சாராம். அப்படி சிரிக்கற அளவுக்கு அதுல என்னங்க இருக்குனு கேட்டதுக்கு அதுல மொத paragraph-ல கடைசி லைன படிச்சிட்டு அவரால சிரிப்ப அடக்கவே முடியலையாம். grrrrrrr........ என்ன ஒரு வில்லத்தனம்???

சரி இதுல எதைப் போடலாம்னு என் குருவி மூளைய கசக்கி கசக்கி யோசிச்சேன். ஹ்ம்ம்ம். உனக்கு உன் பெரிய பிள்ளை பிடிக்குமா இல்ல சின்னப் பிள்ளையப் பிடிக்குமானு கேட்டா என்ன சொல்வீங்க? ரெண்டுமே ரொம்ப பிடிக்கும்னுதானே சொல்வீங்க. அதே மாதிரிதான். என்னோடப் படைப்புகள் என் பிள்ளைகள். அதுல இதைதான்னு தனியா குறிப்பிட்டு சொல்ல முடியாது. அதனால என்னோடதுல எனக்குப் பிடிச்ச பதிவுனா நான் எழுதின எல்லாமேதான் :)))

அப்புறம் ஏன் இங்க கொஞ்சம் பதிவுகள் பத்திதான் சொல்லி இருக்கனு கேக்கறீங்களா. என் பெரிய பையன் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கினா அதைப் பத்தி மட்டும்தான் சொல்வேன். கூடவே என் ரெண்டாவது பையன் பத்தாவது ரேங்க் வாங்கினானு சொல்ல மாட்டேன். அது மாதிரிதான் இதுவும் ;)))

சரி இப்போ நான் யாரையாவது எழுத சொல்லணுமே... இவங்களை எல்லாம் கூப்பிடலாம்னு யோசிச்சேன்.

  • அபி அப்பா
  • CVR
  • தேவ் அண்ணா
  • ஜி
  • கப்பி
  • மைப்ரெண்ட்
  • துர்கா
  • மோகன்தாஸ்
  • ஜீவ்ஸ் அண்ணா
  • கோபி அண்ணா
  • G3
  • அனுசுயா
  • கண்மணி அக்கா
  • புலி
  • சிபி அண்ணா
  • இளா அண்ணா
  • ராம் தம்பி
அப்புறம்தான் தோணுச்சு. ஒரு வாழைப்பழ சோம்பேறி நானே எழுதிட்டேன். இவங்க எல்லாம் இன்னுமா எழுதாம இருப்பாங்கன்னு பேசாம விட்டுட்டேன் :)))

Monday, July 2, 2007

எட்டுக்குள்ளே உலகம் இருக்கு ராமையா...

அட அட அட.... பாசக்கார பயபுள்ளக நம்மள விடாம இம்புட்டு இழுத்து புடிக்கறத நினைக்கும்போது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஒரே ஆனந்த கண்ணீரா வருது. நம்ம புளி ச்சே... பாசக்கார புலி, நிலவு நண்பன், காதல் முரசு அருட்பெருங்கோ, கொல்லிமலை சாரல் JK எல்லாரும் வாங்க வாங்கன்னு என்னையும் ஆட்டத்துல இழுத்து விட்டுட்டாங்க. இன்னும் போடலையா-ன்னு கோவத்துல புலி உறுமின உறுமுல பயந்து அலறியடிச்சுட்டு 8 போட ஓடியாந்துட்டேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். நம்மள பத்தி எட்டு பெருமையான விஷயத்த சொல்லனும்னு சொன்னதும் என்ன அப்படி நம்மகிட்ட எட்டு பெருமையான விஷயம்னு நின்னுக்கிட்டு யோசிச்சேன்.... உக்காந்தும் யோசிச்சேன்..... படுத்துக்கிட்டும் யோசிச்சேன்..... என்னய்யா இது அநியாயம். இப்போ தாஜ்மஹால் உலக அதிசயம்னா அதுல இருக்கற கதவு, ஜன்னல், தரை இப்படி ஒண்ணொன்னையும் அதிசயம்னு சொல்லிட்டு இருக்க முடியுமா??? அந்த மாதிரிதான். என்னை பொறுத்த வரைக்கும் உலக அதிசயம் எட்டும் நாந்தான்(இப்படியெல்லாம் மொறைக்கப்படாது:)))) அப்புறம் என்ன தனி தனியா பிரிச்சு எழுதிட்டுன்னு எனக்கே என் மேலயே கடுப்பா வந்துச்சு. அதான் நம்ம லிஸ்ட் இப்டி அழகா வந்துடுச்சு. ஹி... ஹி... உருட்டு கட்டையெல்லாம் அப்டியே ஓரமா தூக்கிப் போட்டுட்டு வரனும்.

1. நான்
2. ஜெயந்தி
3. இம்சை அரசி
4. ஜெயராஜ், ஜெயலஷ்மியோட பொண்ணு
5. தினேஷோட அக்கா
6. என் ஃப்ரெண்ட்ஸுக்கு நல்ல ஃப்ரெண்ட்
7. தொல்ஸ் அண்ணா, தேவ் அண்ணா, சிபி அண்ணா, ராம் அண்ணா, ஐயப்பன் அண்ணா, CVR அண்ணா இவங்களுக்கு தங்கச்சி
8. வரப் போற என் ஆத்துக்காரருக்கு ஒரு அழகான ராட்சசி (யாருல அது இதெல்லாம் நெம்ப ஓவருன்னு சொல்றது???)

அப்புறம் நம்ம தலைவர் வேற எட்ட பத்தி ஒரு பாட்டு பாடியிருக்கார். அதான் ஒரு ஸீனா இருக்குமேனு இந்த தலைப்பு வச்சேன். தலைப்ப பாத்துட்டு வந்து ஏமாந்திருந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல சாமியோவ்.......

எனக்கு தெரிஞ்சு எல்லாருமே எட்டு பதிவ போட்டுட்டாங்க. நிறைய பேர் கூப்பிட்டும் இன்னும் போடாம இருக்கறது எங்க அண்ணன்தான். ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சின்னு எப்படி ப்ரூஃப் பன்றோம் பாருங்க. ஹ்ம்ம்ம்...... அவரே ஒரு பெருமையான விஷயம். அவர் என்ன எழுதறாருன்னு பாக்கறேன்.

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.


பி.கு: இந்த மாதிரி ரூல்ஸை ஃபாலோ பண்றேன் பாருங்க. இதுவே எம்புட்டு பெரிய பெருமையான விஷயம்!!!!

ஷ்ஷ்ஷ்ஷ்........ அப்பாஆஆஆஆஆஆ....... இப்பவே கண்ண கட்டுதே...... போயிட்டு வரேனுங்க........

Wednesday, May 23, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 5

ஞாபகம் 1
ஞாபகம் 2
ஞாபகம் 3
ஞாபகம் 4

==================-oOo-==================

கல்லூரி லேபிலிருந்து வெளியே வந்த காவேரி எதையோ தீவிரமாக சிந்தித்தபடி படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று யாரோ எதிரில் நிற்பது கண்டு திடுக்கிட்டு நின்றாள். அவள் திரு திருவென விழிப்பதைக் கண்டதும் எதிரில் நின்றிருந்த வசந்த் அவளைப்
பார்த்து புன்னகைத்தபடி

"ஹாய்! நான் வசந்த்... காலேஜ் மேகசின்ல வந்திருந்த உங்க கவிதை ரொம்ப நல்லா இருந்தது. அதை சொல்லதான் வந்தேன்" என்றான்.

அவள் புரியாது விழிக்க

"என் நட்பேன்ற தலைப்புல எழுதியிருந்தீங்க இல்ல. அதை சொன்னேன்" என்று அவளுக்கு நினைவூட்டினான். அவள் எழுதிய கவிதை ஞாபகத்திற்கு வர புன்னகைத்தவள்

"ரொம்ப தேங்ஸ் வசந்த்" என்றாள். அவன் எதுவும் சொல்லாமலே நிற்கவும் என்ன செய்வதென்று தெரியாமல்

"எந்த க்ளாஸ் நீங்க?" என்று கேட்டாள்.

"அய்யோ நானும் ஃபர்ஸ்ட் இயர். அதும் உங்க க்ளாஸ்தாங்க. ஆனா EC டிபார்ட்மென்ட்"

"ஓ! சாரி... எனக்கு க்ளாஸ்ல CS ஸ்டூடண்ட்ஸே அவ்வளவா யாரையும் தெரியாது" என்று புன்னகைத்தாள்.

"நோ ப்ராப்ஸ்... சரி ஒரு பர்சனல் கொஸ்டின் கேக்கலாமா?" என்று அவன் கேட்கவும் கேள்வியாய் புருவம் சுருக்கி அவனை ஒரு நொடி பார்த்தவள் சரியென்பது போல மேலும் கீழுமாய் தலையாட்டினாள்.

"நீங்க இவ்ளோ ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்களே.... அந்த லக்கி ஃப்ரெண்ட் யாருனு நான் தெரிஞ்சிக்கலாமா?" என்று அவன் கேட்டதும் டக்கென்று அவள் மனம் 'வினோத்' என்று கூச்சலிட்டது. ஆனால் உதடுகள் அன்னிச்சையாய்

"அப்படி யாரும் இல்ல... சும்மா கற்பனைதான்" என்று சொன்னது.

"சரிங்க. நிறைய எழுதுங்க. ஓகே தென் பை" என்று சிரித்தபடி அவன் வழிவிட

"பை" என்றபடி படிகளில் இறங்கினாள்.

---------------------------------------------------------------------------------

'எப்படியோ நல்ல மார்க் எடுத்து நல்ல காலேஜ்ல சீட் கிடைச்சதால அப்பாவை சமாதானப்படுத்தி காலேஜ்ல சேர்ந்தாச்சு. சேர்ந்து ஒரு வருஷம் ஆச்சு. ஃபர்ஸ்ட் செம்ல காலேஜ் ஃபர்ஸ்ட் வாங்கின மாதிரி எல்லா செம்லயும் வாங்கிடணும். எல்லாக் கஷ்டத்தையும் தாங்கிட்டு நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கற அப்பா பெருமைபடற மாதிரி நான்
பேரெடுக்கணும்' இப்படி பலவாறாக நினைத்துக் கொண்டு ஹாஸ்டல் அறையில் தலை வாரிக் கொண்டிருந்த காவேரியிடம் ஓடி வந்தாள் உமா.

"ஹே காவேரி! நம்ம சூப்பர் சீனியர் அனு அக்கா கல்யாணத்துக்கு எல்லாரும் போற மாதிரி ப்ளான் பண்ணிட்டாங்க. வர சனிக்கிழமை காலைலயே கிளம்பி போறோம். ஞாயித்துக் கிழமை கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பி வரோம்" என்று மூச்சிரைத்தபடி சந்தோஷமாய் அவள் சொல்லவும்

'அனு அக்கா கல்யாணத்துக்கா??? என்கிட்ட ரொம்ப க்ளோஸா பழகினவங்க. பத்திரிக்கை குடுக்கும்போதே கண்டிப்பா வரணும்னு எத்தனை தடவை திருப்பி திருப்பி சொன்னாங்க. போலாமா வேண்டாமா?' என்று அவள் மனம் பட்டிமன்றம் நடத்தியது.

"என்னடி யோசிக்கிற? இருக்கறதிலேயே உன்னைதான் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க கல்யாணத்துக்கு இவ்ளோ யோசிக்கிற?" என்று உமா ஆச்சர்யமாய் விழிகளை விரிக்கவும்

"நான் வரலைன்னு உன்கிட்ட சொன்னேனா?" என்று அவசர அவசரமாய் சமாளித்தாள்.

சனிக்கிழமை...

காலையில் அனைவரும் கிளம்பினர். பயணம் முடிந்து போய் சேர கிட்டத்தட்ட இரவு நேரம் ஆகி விட்டது. அங்கு சாப்பிட்டு முடித்ததும் முதலாண்டு மாணவ மாணவிகள், இரண்டாமாண்டு மாணவ மாணவிகள் என்று அவரவர் தனித் தனியாய் அமர்ந்து விட்டனர். அனைவரும் ஜாலியாய் அடுத்தவரை ஓட்டிக் கொண்டும் கிண்டலடித்துக் கொண்டும் இருக்க
காவேரி அமைதியாய் சிரித்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது நெருங்கிய தோழி உமாவிடம் ஒரு பையன் ஜோசியம் பார்க்கிறேன் என்று சொல்லி அவளுக்கு பிடித்தவை ஒவ்வொன்றாய் கேட்டு கேட்டு அவள் கைகளில் எழுதினான். இறுதியில் அவளுக்கு பிடித்தமான சோப் என்னவென்று கேட்டு அதை போட்டு கையில எழுதினதையெல்லாம் அழித்துக் கொள்ள சொல்லவும் அவள் கோபப்பட்டு அவனை
அடிப்பதற்கு துரத்தி கொண்டு ஓடினாள். அதைக் கண்டு காவேரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் திரும்பி வந்து அமர்ந்தபோது அவள் முகம் கோபமாகவே இருப்பதைக் கண்டதும் காவேரி சிரித்துக் கொண்டே அந்த பையனிடம்

"உனக்கு நான் உண்மையாவே ஜோசியம் பார்க்கறேன். எனக்கு நல்லா தெரியும்" என்று சொன்னாள்.

"எனக்கே அல்வாவா?" என்று அவன் மறுக்கவும்

"ஹே நிஜமா எனக்கு தெரியும். உன்னை மாதிரி நான் ஏமாத்த மாட்டேன்" என்று அவள் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொல்லவும் அவளிடம் கையை நீட்டினான்.

ஜாதகத்தில் வரைவது போல அவன் உள்ளங்கையில் கட்டங்களை வரைந்தாள். பின்

"ஜோசியம் பாக்கறதுக்கு முன்னாடி தட்சிணை வைக்கணும். இல்லாட்டி பாக்கறவங்களுக்கு பாவம் சேருமாம்" என்று அவள் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்லவும் அவன் மறுக்க முடியாமல் பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்தான்.

"ஹ்ம்ம்ம்... உன் பேரு மணி... கரெக்டா?" என்று சொல்லவும் அவளை முறைத்தான்.

"வெயிட் வெயிட்..... உன் ஜாதகத்துல சுக்கிரன் உச்சத்துல இருக்கறதால நீ XXX காலேஜ்ல B.E CS படிச்சிட்டு இருப்ப.... உனக்கு ஒரு அம்மா ஒரு அப்பா.... அப்புறம்........" என்று இழுத்து விட்டு

"உனக்கு ஒரு தங்கை... அவ கூட நீ படிக்கிற காலேஜ்லயே ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா..... சரி கடந்த காலம் பத்தி சொல்லியாச்சு.... இனி வருங்காலம்.... அதுக்கு கொஞ்சம் தட்சிணை வைக்கணும்" என்றாள். அவள் சொன்னதை அதுவரை ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் "ஹேய்! தட்சிணை வைடா" என்று கத்தவும் அவன் மறு பேச்சின்றி பத்து
ரூபாயை எடுத்து வைத்தான்.

"உன் ஜாதகத்துல குரு ஏழாமிடத்துல இருக்கறதால நீ படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் வேலைக்கு போயிடுவ. அதுக்கப்புறம் ஒரு நாலு வருஷம் கழிச்சு உனக்கு ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அந்த பொண்ணு பேரு........." என்று அவள் இழுத்து விட்டு அமைதியாகவும்

"பொண்ணு பேரு என்ன என்ன?"என்று அனைவரும் கோரஸாக கத்தினர்.

"பொண்ணு பேரு Mrs.மணி" என்றதும் அனைவரும் குபீரென்று சிரித்தனர். உமா விழுந்து விழுந்து சிரித்தாள்.

"அப்புறம் சனி நாலாமிடத்துல வந்துட்டதால உன் நாக்குல விளையாண்டு இன்னைக்கு உமாகிட்ட வாங்கி கட்டிக்கிட்ட.......... அப்புறம் என்கிட்ட இருபது ரூபா அநியாயமா ஏமாந்துட்ட" என்றதும் அனைவரும் சந்தோஷமாய் கத்தினர்.

அதன் பின் இவனுக்கு பாரு இவளுக்கு பாரு என்று சொல்ல வரிசையாய்
ஒவ்வொருவருக்காய் பார்த்தாள். அந்த வரிசையில் கடைசியாய் வந்தான் வசந்த். அவளிடம் வந்து அமர்ந்தவன்

"எனக்கு ஜோசியம் பாக்க வேணாம். எல்லாருக்கும் ஜோசியம் சொன்ன
ஜோசியக்காரம்மாவுக்கு இப்போ நான் ஜோசியம் சொல்லப் போறேன்" என்றதும் அனைவரும் "ஹூர்ர்ர்ரேரே" என்று கத்தினர்.

அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் அவனிடம் கையை நீட்டினாள். அவள் வரைந்தது போலவே அவள் கையில் கட்டங்களை வரைந்தான். பின் தீவிரமாய் கட்டங்களைப் பார்த்து ஆராய்ந்தவன்

"ஃபர்ஸ்ட் தட்சிணை வை" என்றான்.

ஆச்சர்யமாய் விழிகளை விரித்தவள் உமாவை பார்க்க அவள் ஒரு ரூபாயை எடுத்து தந்தாள். அதை அவனிடம் அவள் தரவும் கிண்டலாய் புன்னகைத்தவன் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

"உன் ஜாதகப்படி உன் பேர் காவேரி. உங்க அப்பா பேரு பொன்னுசாமி. நீ ஒரே பொண்ணு. உங்க ஊர் ------- நீ படிச்சது --------- ஸ்கூல்ல. நீ டென்த்ல ------ மார்க். 11த் 12த் கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ரூப். ட்வெல்த்ல ---- மார்க். ஃபர்ஸ்ட் செம்ல ------- பர்சென்டேஜ்" என்று அவன் அடுக்கி கொண்டே போக ஆச்சர்யத்தில் இமைக்க மறந்து அமர்ந்திருந்தாள்.

'கவிதை பத்தி சொன்னதுக்கு அப்புறம் இதுவரைக்கும் ஒரு வார்த்தைக் கூட பேசினதில்ல. இவனுக்கு எப்படி???' என்ற சிந்தனை ஓட அமர்ந்திருந்தவளிடம்
"என்ன நான் சொன்ன ஜோசியம் கரெக்டா?" என்று அவன் வினவ உணர்வு பெற்றவளாய்

"ம்ம்ம்.... சரி" என்று திணறினாள்.

அடுத்து ஜோசியம் பார்ப்பதை வைத்து அனைவரும் விளையாட ஆரம்பிக்கவும் அவன் அவர்களோடு சேர்ந்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான்.

காவேரிக்கோ ஏதேதோ புரியாத உணர்வுகள் எழ ஆச்சர்யத்தில் இருந்து மீள முடியாதவளாய் குழம்பியபடி அமர்ந்திருந்தாள்.

==================-oOo-==================

நண்பர்களே! இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி. இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும். இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும். இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும். ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும். இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்த‌ அத்தியாயத்தை எழுத அன்பு தம்பி ராயல் ராமை அழைக்கிறேன்.