நம்ம முகத்துக்கு மேக்-அப் அவசியமானு எப்பயாச்சும் யோசிச்சிருக்கிங்களா? நான் பல தடவை யோசிச்சிருக்கேன். சின்ன வயசுல எல்லாம் இந்த Fair & Lovely, Fairever விளம்பரம் எல்லாம் பாக்கும்போது இது என்னம்மா-னு எங்கம்மாட்ட கேப்பேன். எங்கம்மா அது வெள்ளையாவறதுக்கு போடற க்ரீம்-னு சொன்னாங்க. அப்போ எனக்குனு கேட்டதுக்கு நீ ஏற்கனவே ரொம்ப வெள்ளையா இருக்கற கண்ணு. அதை போட்டு இன்னும் வெள்ளையானா எல்லாரும் உன்ன வித்தியாசமா பாப்பாங்க அப்டி இப்டினு சொல்லி சமாளிச்சிட்டாங்க. அப்புறம் ஒரு எட்டாவது படிச்சப்போ என் ஃப்ரெண்ட் ஒருத்தி நல்லா பளபளனு வருவா. நான் எண்ணை வடிஞ்சு பாவம்போல போவேன். ஒருநாள் அவட்ட உன் அழகோட ரகசியம் என்னடி-னு கேட்டேன். Fair & Lovely தானு சொன்னாளே பாக்கலாம். எனக்கு எங்கம்மா மேல வந்த கடுப்புக்கு அளவே இல்ல. அப்புறம் நானும் வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்.
இங்கதான் எங்கம்மாவோட திறமைய நான் எடுத்து சொல்லணும். எதாவது அவங்க வேண்டாம்னு சொல்லி நான் வேணும்னு அடம்பிடிச்சா என்னைத் திருப்பி கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா இது பண்ணினா இப்படி ஆகும் அப்படி ஆகும்னு சொல்லி நானே பயந்து போயோ இல்ல வெறுத்துப் போயோ தானா நிறுத்திடுவேன். ப்யூட்டி பார்லர் வச்சா கண்டவங்க முகத்த க்ளீன் பண்ணனும். காலை எல்லாம் தொடணும். நீயே பயங்கரமா சுத்தம் பாப்ப. நீ எப்படி இதையெல்லாம் செய்வ-னு கேட்டு என்னோட ப்யூட்டி பார்லர் கனவை என்ன வச்சே தகர்த்து எரிஞ்சுட்டாங்க. அப்பேற்பட்டவங்க என் Fair & Lovely மேட்டர சும்மா விடுவாங்களா? Fair & Lovely போட்டா இப்போ நல்லா இருக்கும். ஆனா சீக்கிரமாவே சுருக்கம் வந்து முகம் கிழவியாட்டம் ஆயிடும்னெல்லாம் பயமுறுத்தி அதுக்கப்புறம் Fair & Lovely என்ன பவுடரே வேணாம்னு நிறுத்திட்டேன். அதுக்கப்புறம் வாழ்க்கைல முகத்துக்கு எதுமே போட்டதில்ல. யாராவது இதைப் பத்திக் கேட்டா நாங்கெல்லாம் நேச்சுரல் ப்யூட்டிப்பா. எனக்கெதுக்கு இதெல்லாம்-னு சொல்லி சிரிப்பேன்.
கல்யாணம் முடிவானதும் எங்கக்கா கல்யாண மேக்-அப்க்காக ஒரு பார்லர் கூட்டிட்டுப் போனாங்க. எங்க ஊருல அவங்கதான் நம்பர் ஒன். நிறைய கல்யாணத்துல அவங்க பண்ணி விட்ட மேக்-அப் பாத்து ஆச்சர்யப்பட்டிருக்கேன். மூணு கோட் நாலு கோட்னு இல்லாம ரொம்ப சிம்பிளா ஆனா அதே சமயம் ரொம்ப அழகா பண்ணி இருப்பாங்க. அவங்ககிட்ட போனதும் கல்யாண தேதி எல்லாம் கேட்டுட்டு மூணு தடவை ஃபேஷியல் பண்ணிக்கோனு சொல்லிட்டாங்க. சரி கல்யாணத்துக்காகதானனு நானும் சரி சொல்லிட்டேன். மொத தடவை ஃபேஷியல் பண்ணப் போனப்போ என்ன முகம் இவ்ளோ ரஃப்-பா இருக்கு? என்ன க்ரீம் போடுவனு கேட்டாங்க. நான் பெருமையா எதுமே போட மாட்டேனு சொன்னேன். எதும் போடலைனா இப்படி தான் ரஃப் ஆகும்னு சொன்னாங்களே பாக்கலாம். தாய்க்குலத்து மேல தீராத கோபம். வீட்டுக்குப் போய் சண்டையான சண்டை போட்டேன். அவங்க எல்லாம் அப்படிதான் சொல்லுவாங்க. ஆன நீ எதும் போடாதனு அப்பவும் அம்மா அதையே சொன்னாங்க.சரி-னு சொல்லிட்டு அப்புறமா வாங்கி போட ஆரம்பிச்சிடலாம்னு விட்டுட்டேன்.
கல்யாணத்துக்கு முன்னாடி ஃபேஷியல்-ன்ற பேருல முகத்த தேச்சு தேச்சு எடுத்தாங்க. எல்லாரும் பாத்துட்டு அட! கல்யாண களை வந்துடுச்சே... அப்டினு சொன்னப்போ எல்லாம் மனசுல அது எப்டினு எனக்குதான தெரியும். பார்லர்ல அந்த அளவுக்கு தேச்சு எடுத்தா வராமலா இருக்கும்னு நானா நினைச்சுக்கிட்டு சிரிச்சு வச்சேன். அப்றமா மூணாவது தடவையா பண்ண போனப்போ கோல்டன் ஃபேஷியல் பண்ணிக்கிறயா? அப்போதான் முகத்துல ஒரு glow வரும். நல்லா இருக்கும்னு சொன்னாங்க. சரி கல்யாணத்தப்போ நம்மள சுத்தி ஒரு ஒளிவட்டம் தெரியும். தக தக-னு மின்னுவோம் போலனு நினைச்சுட்டு சரி-னு சொன்னேன். அதுக்கு தண்டமா ஒரு ஆயிரம் ரூபாய அழுது வச்சிட்டு வந்தேன். பண்ணிட்டு வந்ததுக்கப்புறம் கண்ணாடி முன்னாடி நின்னு நின்னு பாத்தேன். ஒரு glow-யும் காணோம்.
கல்யாணத்தப்போ எல்லாரும் அழகா இருக்க அழகா இருக்க-னு சொன்னப்போ அப்படியே சந்தோஷம் பொங்குச்சு. நாம பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போகலை போலனு சந்தோஷப்பட்டுக்கிட்டேன். அப்புறம்தான் தோணுச்சு. அட! எத்தன கல்யாணத்துல சுமாரா இருந்தவங்களையெல்லாம் நாமளே ரொம்ப அழகா இருக்கீங்கனு சொல்லிட்டு வந்தோம்னு ஞாபகம் வந்து ஒரே சோகம் சோகமா போயிடுச்சு. இருந்தாலும் எல்லாரும் சொல்லும்போது சந்தோஷமாதான் வந்துச்சு. கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் சொன்ன விஷயம் என்னனா உனக்கு மேக்-அப் ரொம்ப நல்லா பண்ணி விட்டிருந்தாங்க. நீயும் ரொம்ப அழகா இருந்த. ஆனா எந்த மேக்-அப்ம் இல்லாம எப்பவும் ஸ்மைலோட இருந்த உன் வீட்டுக்காரர் உன்னை விட அழகா இருந்தார்னு சொன்னாங்க. ஃபோட்டோஸ் வந்ததும் எங்க வீட்டுலயும் இதே கமெண்ட்தான் குடுத்தாங்க.
இப்போதாங்க நல்லா புரியுது. தலைல இருந்த கால் வரைக்கும் ரொம்ப நல்லா பண்ணின மேக்-அப் தர அழகைவிட முகத்துக்கு ஒரு சின்ன ஸ்மைல் தர அழகு இருக்கே. அதை எந்த மேக்-அப்பாலயும் தர முடியாது. என்ன சொல்றீங்க?
Wednesday, June 18, 2008
மேக்-அப்
Posted by
இம்சை அரசி
at
10:39 AM
28
comments
Labels: அழகு, சிந்தித்தது, சும்மா... லுலுலா...
Wednesday, April 25, 2007
அழகென்ற சொல்லுக்கு.......
அழகான விஷயங்கள பத்தி எழுத சொல்லி பாசமலர் tag பண்ணி ரொம்ப நாளாச்சு. அண்ணன்கிட்ட அழகு லிஸ்ட்ல என் பேரை சேக்காத்தால கோவிச்சுக்கிட்டு சண்டை போட்டு இவ்ளோ நாளா எழுதாம இருந்தேன். அதை எழுதினா எல்லாரும் உன் மேல கண்ணு வச்சிடுவாங்கடா... அதான் எழுதலை... இப்படி பல பிட்ட போட்டு அண்ணாச்சியும் என்னை சமாதானப்படுத்திட்டார். அதனால எனக்கு தோணினத எல்லாம் இங்க லிஸ்ட் போட்டு வச்சிருக்கேன். பொதுவா அழகுன்னாலே டக்குனு தோணறது பூக்கள், குழந்தைகள்தான். பூவும் சரி குழந்தையும் சரி எப்படி இருந்தாலுமே அது அழகோ அழகு. இது இல்லாம கடவுள், கவிதை, மழை, இயற்கை, வானவில், முயல், மான், கிளி, பூனை, அணில்னு எக்கச்சக்கமா லிஸ்ட் போட்டுட்டே போகலாம். இந்த மாதிரி பொது விஷயங்கல்ல இருந்து அப்பாற்பட்டு வேற என்ன அழகு விஷயங்கள் இருக்குனு யோசிச்சதுல எனக்கு தோணின சில அழகுகள்
1. பெண்ணின் கண்கள்: 
பொதுவா கண்ணு பேசும்னு சொல்வாங்க. சின்ன வயசுல தில்லானா மோகனாம்பாள் "நலந்தானா" பாட்டு பாத்தப்போ ரொம்ப ஆச்சர்யப்பட்டிருக்கேன். பத்மினி நலந்தானானு அவங்க வாயால கேக்கறத விட அவங்க கண்கள் அவர்கிட்ட கேக்கறதுதான் ரொம்ப பவர்ஃபுலா இருக்கும். அதே நேரம் அவர் கைல இருந்து ரத்தம் வரும்போது அவங்க மனசு துடிக்கறத அவங்க கண்கள்
அப்படியே சொல்லும். அப்போ இருந்தே எனக்கு ரொம்ப அழகா தோணற விஷயம்.
இப்போ ப்ரூ காபி விளம்பரத்துல லக்ஷ்மி ராய் கண்கள்லதான் ரொம்ப அழகா expression கொடுப்பாங்க. அந்த சின்ன காபி கப்ப நீட்டினதும் அவர் அப்படியான்ற மாதிரி கேப்பார். அப்போ அவங்க கண்ணு அப்படியே வெக்கப்படும் பாருங்க. சான்ஸே இல்ல.......
2. காதல் நிறைவேறும் தருணம்:

இந்த மாதிரி ஒரு அழகான தருணம் எல்லாருக்கும் கிடைக்காது. நான் 11, 12வதும் ஹாஸ்டல்ல இருந்துதான் படிச்சேன். அப்போ எங்களோட இருந்த ஒரு பொண்ணுக்கு சின்ன வயசுலயே அவங்க அத்தை பையனுக்குதான்னு முடிவு பண்ணியிருந்தாங்க. அவங்களை அவ உருகி உருகி காதலிச்சா. நாங்க முடிச்சு போற டைம்ல அவங்க ரெண்டு பேர் வீட்லயும் எதோ பிரச்சினை. கல்யாணம் நடக்குமா நடக்காதான்ற கேள்வியோட பிரிஞ்சு போனோம். அதுக்கப்புறம் காலேஜ் 3rd year படிக்கிறப்போ அவ இன்விடேஷன் வந்தது. அதே மாமாவையே கட்டிக்க போறானு தெரிஞ்சதும் எனக்கே அவ்ளோ சந்தோஷமா இருந்தது. அவளுக்கு தாலி கட்டும்போது பூத்து பூத்துனு அழ ஆரம்பிச்சுட்டா. அவ வாய் சிரிக்குது. கண்ணுல இருந்து கண்ணீர் வழிஞ்சுட்டே இருக்கு. அப்புறமா அவள திட்டினேன். "ஏண்டி லூஸு அழுத? எல்லாரும் என்ன நினைப்பாங்க? பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்ல போலனு நினைக்க மாட்டாங்களா??? அதும் இல்லாம வீடியோல பாரு அழுது வடிஞ்சுட்டு இருப்ப" அப்படின்னு அவ்ளோ அக்கறையா திட்டறேன். போடி அதெல்லாம் உனக்கு புரியாதுனு பொசுக்குனு சொல்லிட்டு போயிட்டா. அவளுக்கு மட்டும் இல்ல. காதலிக்கிற எல்லாருக்குமே அவங்க வாழ்க்கைல ரொம்ப அழகான தருணம்னா அது அவங்க காதலை கைப்பிடிக்கிற நாளாதான் இருக்கும்.
3. தாய்மை:

ஒரு பொண்ணு எப்போ ரொம்ப அழகா இருப்பா? கண்டிப்பா அது அவ கர்ப்பமா இருக்கறப்பதான். அதை எத்தனையோ புத்தகத்துல, கதைகள்ல, கவிதைகள்ல படிச்சிருக்கேன். அப்போல்லாம் எனக்கு ரொம்ப பெருசா தெரியலை. எனக்குள்ள இருக்கற என் உயிர் சங்கீதா. அவ வளைகாப்புதான் நான் முதல் முதலா அட்டெண்ட் பண்ணின வளைகாப்பு. காலைல வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் சிரிச்சுட்டே மெதுவா நடந்து வந்தா. தலைல கட்டின துண்டும், நெத்தி வகிட்டுல குங்குமமும், மஞ்ச கயிறும், கால்ல மெட்டியுமா இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை பாத்திருக்கேன். ஆனா அது கூட உப்பிய வயிறுமா... அவ்ளோ அழகா என் சங்கி-ய அதுக்கு முன்னாடியும் பாத்ததில்ல. அதுக்கு அப்புறமும் பாத்ததில்ல. அதுக்கப்புறம் குழந்தை பிறந்ததுக்கப்புறம்தான் பாத்தேன். அப்போ அந்த பிஞ்சு கையையும் காலையும் தொட்டு தொட்டு கொஞ்சும்போது அவ முகத்துல தெரிஞ்ச பூரிப்பு..... அழகோ அழகு.....
4. எழுத்தாளராய் அங்கீகரிக்கப்பட்ட நாள்:

நான் ஒரு நாவல் எழுதி கண்மணிக்கு அனுப்பி 2 வருஷமாச்சு. வரவே இல்லை. எங்க தமிழ் சார் இதுக்கெல்லாம் சோர்ந்து போயிடக் கூடாது. இன்னும் எழுதி அனுப்பிட்டே இரு. ஒரு நாள் கண்டிப்பா வரும்னு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டே இருந்தார். இருந்தாலும் அந்த ஏமாற்றத்த தாங்கிக்க முடியாம அனுப்பாமலே இருந்தேன். ஒரு நாள் ஃபோன் வந்தது. உங்க கதை எங்களுக்கு பிடிச்சிருக்கு. வர 15th இதழ்ல போட போறோம். உங்களை பத்தி கொஞ்சம் எழுதி கொடுத்து உங்க போட்டோவும் அனுப்புங்கனு சொன்ன அன்னைக்கு இருந்த சந்தோஷம்.... என் வாழ்க்கைல முதல் அழகான தருணம்..... புத்தகம் வந்த அன்னைக்கு கைக்கு கிடைக்கறதுக்குள்ள இருந்த டென்ஷன்........ அதை வாங்கி என் போட்டோவையும் என்னோட எழுத்துக்கள் ஒண்ணொன்னையும் அச்சில பாத்த தருணம்.... ஒரே கண்ணீரா வருது. உலகத்தோட மொத்த சந்தோஷத்தையும் அள்ளியெடுத்து எனக்குள்ள புதைச்சு வச்ச மாதிரி அவ்ளோ சந்தோஷம். அன்னைக்கு என் டைரில எழுதி வச்சது "முதல் பிரசவம்... மனதளவில் உணர்ந்தேன் பிரசவ வலியை..."
5. நட்பு:

எந்தவித சம்பந்தமும் இல்லாம எந்த எதிர்பார்ப்பும் இல்லாம ஒருத்தர் நம்ம மேல வைக்கற தூய்மையான அன்பு.... அதுக்கு பேர்தான் நட்பு. அந்த மாதிரி எனக்கு கிடைச்சவதான் சங்கீதா. நான் என்ன தப்பு பண்ணினாலும் ஒரு ஸ்மைல் பண்ணி என் தலைல செல்லமா ஒரு குட்டு வச்சு திருத்தறவ. அவளுக்கு மட்டுமில்லாம அவ வீட்டுக்காரருக்கும்(அவ அத்தை பையன்தான்) நான் பெஸ்ட் ஃப்ரெண்ட். அவ மாமியாரும் மாமனாரும் என்னை அவங்க பொண்ணுனு சொல்லுவாங்க. ரெண்டு பேருக்கும் நான் பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்றதால என் பர்த்டே அன்னைக்கே அவங்க கல்யாணம் வச்சாங்க. அன்னைக்கு நைட் கரெக்டா 12 மணிக்கு எல்லாரும் தூங்கிட்டாங்க. மாப்பிள்ளை சார் கேக் பாக்ஸ தூக்கிட்டு பொண்ணு ரூமுக்கு வந்தார். கேக் வெட்டி என் மேல எல்லாம் பூசி கத்தி அட்டூழியம் பண்ணிட்டிருந்தப்ப ஒரு சத்தம். மெல்ல திரும்பி பாக்கறோம். அவ மாமனார் கதவுகிட்ட முறைச்சுப் பாத்துட்டு நிக்கறார். பொண்ணு ரூமுக்கு போக கூடாதுனுசொல்லியிருக்குல்லனு அவர் சொன்னதும் கம்முனு ஓடிப் போயிட்டாங்க. ரெண்டு பேரும் எனக்கு ஒரு மொபைல் ப்ரெசெண்ட் பண்ணினாங்க. அந்த மொபைல்தான் இன்னும் வச்சிருக்கேன். அவளுக்கு ஒரு டைரி ஃபுல்லா கவிதை எழுதி கல்யாண கிஃப்டா கொடுத்தேன். அந்த கிஃப்ட வீட்டுக்கு வந்து பிரிக்கிற வரைக்கும் அவ கைலயே வச்சிருந்தா. யார்ட்டயும் குடுக்கலை. என்னை பொறுத்த வரைக்கும் எனக்குள்ள இருக்கற உயிர் சங்கீதாதான். அவளுக்கு நான் எழுதின கவிதைல ஒண்ணு
"அடுத்த பிறவியிலேனும்
ஒன்றாய் பிறக்க வேண்டும்
என்று வேண்டி
தொலைத்து விடாதே!
எனக்கு உன்னிடம்
சகோதர பாசம் வேண்டாம்
அதையும் மீறிய
இந்த நட்புதான் வேண்டும்"
6. எதையும் அழகாய் பார்க்கிற மனசு:

இந்த உலகத்துல இருக்கிற எல்லாமே அழகுதான். ஒண்ணொண்ணும் ஒவ்வொருவித அழகு. அதை பாக்கிற நம்ம மனசுலதான் எல்லாம் இருக்கு. ஒரு சாதரண விஷயத்தைக் கூட அழகுனு நினைச்சு பாத்தா அது ரொம்ப அழகா தெரியும். அழகில்லைனு நினைச்சுப் பாத்தா அழகா இருக்கறதும் ரொம்ப அசிங்கமா தெரியும். எல்லாமே நம்ம ரசனைதான்....
இப்போ என் சான்ஸ். இவங்க மூணு பேரும் அழகுப் பத்தி என்ன நினைக்கறாங்கன்னு பாப்போம். என்னை மாதிரியே லேட் பண்ணிடாதீங்க. கொஞ்சம் சீக்கிரம் போடுங்கப்பு.
1. ஜொள்ளுல பல வகை ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் பெற்ற நமது ஜொள்ளானந்தா Dr.ஜொள்ளுபாண்டி(நீங்க விடற ஜொள்ளுதான் அழகுனு சொல்லப்படாது)
2. காதல்ல வீடு கட்டி காதல சாப்பாடா சாப்பிட்டு காதலையே சுவாசிச்சு வாழ்ந்துட்டு இருக்கிற நம்ம காதல் முரசு அருட்பெருங்கோ(நீங்க இல்லவே இல்லைனு சொல்ற உங்க காதலிதான் அழகுனு சொல்லப்படாது)
3. இந்த உலகத்துல இருக்கிற எந்த ஒரு விஷயத்தையும் காதலாவே பாக்கிற நமது காதல் கவிஞர் நவீன் ப்ரகாஷ்(காதல்தான் அழகுனு அதையே 6 தடவை எழுதி வைக்கப்படாது)
ஓகே... ஓகே... உத்தரவு வாங்கிக்கறேனுங்க......
Posted by
இம்சை அரசி
at
5:48 PM
40
comments
Labels: அழகு
