Wednesday, October 31, 2007

என்ன கொடுமை சார் இது???


எனது சமையல் அனுபவத்தில் என்னால் இதுவரை செய்ய முடியாமல் போன விஷயம் என்றால் இதுதான். ஒவ்வொரு முறையும் முயன்று முயன்று தோற்றுப் போகிறேன். எப்படித்தான் செய்கிறார்களோ???!!! கடலைப் பருப்பை கருகாமல் பொன்னிறமாக தாளிப்பதைத் தான் சொல்கிறேன். ஒவ்வொரு முறையும் கருகிப் போகும்போதோ நிறம் மாறாமலோ வரும்போது எரிச்சலாகி விடுகிறது. என்ன கொடுமை சார் இது???

***

ஆனந்த விகடனில் இந்த வாரம் எனது வலைப்பூவைப் பற்றி வந்திருப்பது தெரிந்ததும் என் நட்பு வட்டத்தில் அனைவருக்கும், எனது டீமுக்கும் தெரிவித்தேன். அனைவரும் சந்தோஷப்பட்டனர். புத்தகம் வாங்கி என் தோழிகளுக்கு காட்டினேன். எனது டீமில் மூன்றே பேர்தான் தமிழ் மக்கள். எனது லீடிடம் கொண்டு சென்று காட்டினேன். அவர் அதைப் பார்த்து விட்டு அவஸ்தையாய் சிரித்தார். இந்த படத்தைப் பார்த்தால் உன் ப்ளாக்குனு எனக்கு தெரியுதுடா. பட் எனக்கு தமிழ் கொஞ்சம் பேசதான் தெரியுமே தவிர படிக்கத் தெரியாதுனு சொன்னார். பரவால்ல அண்ணானு சொல்லிட்டு இன்னொரு டீம்மேட்டிடம் காட்டினேன். அவன் சந்தோஷமாய் அதை வாங்கி கொண்டு இன்னொரு பையனிடம் ஓடினான். டேய் இதுல என்ன போட்டிருக்குனு படிச்சு சொல்லுடா என்றான். அவனோ க.... தை.... க.... வி... தை..... என்று எழுத்துக் கூட்டிக் கொண்டிருந்தான். உனக்கு தெரியுமா தெரியாதா? இப்படி படிச்சனா நான் பஸ்ஸ விட்டுடுவேன் என்று இவன் சொல்லவும் அவன் சாரிடா எனக்கு ரொம்ப தெரியாது. எழுத்துக் கூட்டிதான் படிக்க தெரியும் என்று அவன் சொன்னான். கலிகாலமடா சாமி என்று தலையிலடித்துக் கொண்டேன். ஹ்ம்ம்ம்.... பரவாயில்லை. படிக்க தெரியவில்லை என்றாலும் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருக்கிறதே என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு நானே அவர்களுக்குப் படித்துக் காட்டினேன். என்ன கொடுமை சார் இது???

***

இப்பொழுதெல்லாம் சமையல் செய்ய எதையும் அரைத்துக் கொண்டு இருக்க தேவை இல்லை. எனது அம்மா சிக்கன் குழம்பு வைத்தால் வேலையை சீக்கிரமே ஆரம்பித்து விடுவார். நிறைய பூண்டு உரித்து, இஞ்சி உரித்து அதை அரைத்து இஞ்சி பூண்டு விழுது எடுப்பதற்கே நேரம் பிடிக்கும். இங்கு வந்து எங்கள் கைவண்ணத்தை ஆரம்பித்தபோதுதான் கடையில் ஒருநாள் பார்த்தோம். Ginger garlic Paste என்று இருந்தது. அட இது இப்படி கூட கிடைக்கிறதா என்று வியந்து அதன் பிறகு அதை வாங்கி உபயோகிக்க ஆரம்பித்தோம். பின்பு ஒரு நாள் ஒரு Food Worldல் பார்த்தோம். readymade Aloo Muttor Gravy, Aloo Paneer Gravy என்று. செய்முறை விளக்கம் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இந்த பாக்கெட்டை ஒரு பத்து நிமிடம் வைத்திருந்து பின் எடுத்து பரிமாறுங்கள் என்று. எனக்கு மயக்கம் வராத குறைதான். என்ன இது நாமளா செய்யணும்னு நினைச்சாக் கூட செய்ய விட மாட்டாங்க போலனு வாயடைத்துப் போய் வந்தோம் (சத்தியமாய் அந்த க்ரேவியை வாங்காமல்தான்). இரண்டு நாட்களுக்கு முன் TV பார்த்துக் கொண்டு இருந்தபோது 'புளிக் குழம்பு வைக்கணும்னா எதுக்கு புளிய வாங்கி ஊற வச்சு கரைச்சு கஷ்டப்படணும். இருக்கவே இருக்கு ஆச்சிப் புளி கரைசல்' என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் அதே மயக்கம் வந்தது. அடப் பாவிகளா புளியக் கரைக்கறது ஒரு கஷ்டமான வேலையா?? என்ன கொடுமை சார் இது???

***

எனது பக்கத்து வீட்டு அக்கா நான் சென்ற முறை வீட்டிற்கு போயிருந்த போது "பரவாயில்ல.... நீங்க கொஞ்ச நாள்லயே ரொம்ப நல்லா கன்னடம் பேசக் கத்துக்கிட்டிங்களே" என்று ஆச்சரியப்பட்டார். எனக்கு எக்கச்சக்க குஷி. நான் பேசிய கன்னடம் இதுதான்.

"சொல்ப வெயிட் மாடி"

"சொல்ப மூவ் மாடி"

"சொல்ப ஸ்டாப் மாடி"

என்ன கொடுமை சார் இது???

***
எனக்கு funny picture எதாவது அனுப்புங்கன்னு என் டீம்மேட்ஸ் எல்லாருக்கும் ஒரு மெயில தட்டி விட்டேன். அனுப்பின ரெண்டு நிமிஷத்திலேயே சண்டிகர்க்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போன டீம்மேட் ஒரு பையன் ரிப்ளை அனுப்பி இருந்தான். ஆஹா! இவன் எதாவது நல்ல படமா அனுப்பி இருப்பானு வேக வேகமா திறந்து பார்த்தா...... OMG!!!... பல்பு வாங்கிட்டேனே..... என் டீம்ல ஒரு பொண்ணுகிட்ட சொல்லி என்னையே ஃபோட்டோ எடுத்து தர சொல்லி ஐடியா கொடுத்திருந்தான். என்ன கொடுமை சார் இது???

***

நாமெல்லாம் பர்த்டேனா என்ன பண்ணுவோம்? நானெல்லாம் மொதல்ல எங்கம்மா, அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு கோவிலுக்கு போயிட்டு வந்ததுக்கு பிறகுதான் மத்த வேலைய ஆரம்பிப்பேன். ஆனா இப்போ சன் மியூசிக்குக்கோ இல்ல எதாவது FM ரேடியோவுக்கோ ஃபோனப் போட்டு அங்க இருக்கற பெரியவங்ககிட்ட வாழ்த்து வாங்கிகிட்டாதான் நமக்கு ரொம்ப புண்ணியம். அதும் ஒருத்தர் பர்த்டே பேபிக்கு டெடிகேட் பண்ணின பாட்டு "ஹிப் ஹிப் ஹூர்ரே... சின்னவங்க எங்ககிட்ட பெரியவங்க கத்துக்கோங்க(வல்லவன் படப் பாட்டு. வரிகள் சரியா தெரியலை. ஆனால் இதுதான் அர்த்தம் வந்தது)". என்ன கொடுமை சார் இது???

Tuesday, October 30, 2007

VODAFONE மக்களே உஷார்!!!

என்ன கொடுமை சார் இது??? prepaid connection வச்சுக்கிட்டு சும்மா ஏன் recharge rechargeனு அலையணும்னு ஓடிப் போயி Hutch postpaidஅ வாங்கிப் போட்டேன். Bill-ஐத் தவிர மத்தது எல்லாமே திருப்தியாதான் இருந்துச்சு. ஒரு பத்து மாசம் நல்லா வேலை செஞ்சுட்டு இருந்த SIM திடீர்னு பிரச்சினைப் பண்ண ஆரம்பிச்சது. அதுவா signal search பண்ணி பண்ணி சோர்ந்து போயி ஒரு கட்டத்துல Switch off ஆயிடுச்சு. நான் கூட என் மொபைல்தான் காலி ஆயிடுச்சுனு ஒரேடியா உடைஞ்சு போயி வேற என்ன மொபைல் வாங்கலாம்னு எல்லார்கிட்டயும் ஐடியா கேக்க ஆரம்பிச்சிட்டேன். அப்புறம் தான் என் கூட வேலை செய்யறவ பாத்துட்டு அட அறிவு கெட்டவளே! மொபைல் காலியானா எப்படி signal search பண்ணும்? SIMதான் எதோ ஆயிடுச்சுனு திட்டவும்தான் என் மண்டைல அப்படியே பல்பு எரிஞ்சது. ஆஹா! என் அறிவு கண்ணை திறந்து வச்சியேனு அவளுக்கு ஒரு நன்றி கவித வாசிச்சிட்டு நேரா HUTCH shopக்கு போனேன்.

இப்படி இப்படி ஆகுதுனு அவனுக்கு விம் பார் போட்டு விளக்கினேன். அவனும் யோசிச்சிட்டு நீங்க நைட் ஃபுல்லா சார்ஜ் பண்ணுவிங்களா மேடம்னு கேட்டான். அச்சச்சோ இல்லைனு அவசர அவசரமா சொன்னேன். திருப்பி அவன் சார்ஜ் பண்ணும்போது ஃபோன் பேசுவிங்களானு கேட்டான். அடடா! இவன் சொல்ற அத்தனை வெளங்காத வேலையும் செஞ்சு வச்சிருக்கோமேனு பயந்து போயி ஆமாம்னு ஒத்துக்கிட்டேன். அதனாலதான் SIM க்ராஷ் ஆயிடுச்சு. இனிமேல் சார்ஜ் பண்ணும்போது ஃபோன் பேசாதீங்க. நைட் ஃபுல்லா சார்ஜ் பண்ணாதீங்கனு ஒரு பெரிய அறிவுரை வழங்கிட்டு SIM replacementக்கு 250 ரூபா ஆகும். அடுத்த பில்லோட சேத்து போட்டுடுவோம்னு என் சின்ன இதயத்துல இடியை இறக்கிட்டான். நானும் உடைஞ்சு போன இதயத்தை அள்ளியெடுத்துக்கிட்டு புது SIMஅ வாங்கி போட்டுக்கிட்டு கண்ணைத் தொடைச்சிக்கிட்டே வந்துட்டேன். அடுத்த மாச பில் வந்ததும் 250 ரூபாய சேத்துக் கட்டினேன் :'((((((

அடுத்த மாசமே என் இன்னொரு ஃப்ரெண்டுக்கு இதே மாதிரி ஆச்சு. நானும் அக்கறையா ஃபோன போட்டு என்னொட அனுபவத்த விளக்கி சொன்னேன். அவ எல்லாத்தையும் கேட்டுட்டு கடைசில பொறுமையா போடா... இது எனக்கு போர் அடிச்சிடுச்சு. அதனால நான் Airtelக்கு மாறலாம்ன்ற ஐடியால இருக்கேனு சொல்லிட்டா. பாவி இதை முன்னாடியே சொல்லித் தொலைச்சிருக்க வேண்டியதுதானேடினு ஒரு மூச்சு கத்திட்டு விட்டுட்டேன். நம்மளைப் பாத்தா எல்லாருக்கும் இ.வா மாதிரி இருக்கோனு எனக்குள்ள மைல்டா ஒரு டவுட். ச்சேச்சே... அப்படியெல்லாம் இருக்காதுனு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன்.

அதுக்கப்புறமா ஒரு வாரம் கழிச்சு என் ரூமி ஒருத்திக்கு இப்படி ஆச்சு. அவளா கேக்கட்டும்னு அமைதியா இருந்த என்கிட்ட வந்து என்ன பண்ணினேனு கேட்டா. ஒரு பெரிய அனுபவசாலியா எல்லாத்தையும் எடுத்து சொன்னேன். அன்னைக்கே அவ Hutch shop போனா. சாயந்திரம் வந்ததும் என்னடி ஆச்சுனு கேட்டேன். சார்ஜ் பண்ணும்போதே பேசுவீங்களா... நைட்டு ஃபுல்லா சார்ஜ் பண்ணுவீங்களானு கேட்டான். நான் அதெல்லாம் இல்லைவே இல்லைனு அடிச்சு சொன்னேன். அப்புறம் எதும் சொல்லாம replacementக்கு 250 ரூபா ஆகும்னு சொன்னான். இதுல என்னோட தப்பு எதும் இல்ல. உங்க SIMதான் பிரச்சினைனு சண்டை போட்டேன். அவன் எதுமே பேசாம மாத்திக் கொடுத்துட்டானு சொன்னா. ஆனா பில்லோட சேத்துடுவான் பாரு. எனக்கும் பில்லோடதான் சேத்து அனுப்பினானு சொன்னேன். அப்படி அனுப்பினா திருப்பி போயி சண்டை போடுவேன். அப்புறம் வேற எதுக்காவது மாறிடுவேனு சொன்னா. எல்லாரும் அந்த மாச பில்லுக்காக ரொம்ப ஆவலா வெயிட் பண்ணினோம். பில்லு வந்ததும் பாத்தா.... படுபாவி பசங்க....... என்னைய மட்டும் அநியாயமா ஏமாத்திட்டானுங்க :'( எல்லாருக்கும் என்னைப் பாத்தா இ.வா மாதிரி இருக்கோனு அன்னைக்கு மைல்டா வந்த டவுட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன் :(((

ஹ்ம்ம்ம்..... இதுல இருந்து நான் கத்துக்கிட்ட பாடம் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.


டிஸ்கி:- நான் வாங்கினப்போ Hutch'ன்னு இருந்துச்சு, இப்போ அதை VODAFONE'ன்னு மாத்திட்டாங்கன்னு சொல்லுறாங்க, அப்போ தலைப்பு சரிதானே.......?

Thursday, October 25, 2007

உன் கண்ணோரம் வாழ... II



அரவிந்த் வேக வேகமாய் அந்த பேப்பரை பிரித்துப் பார்த்தான். ஒரு பெரிய மளிகை லிஸ்ட்டுக்கான பில் இருந்தது. அதைப் பார்த்ததும் ஒரு நொடி ஏமாற்றமடைந்தவன் அடுத்த வினாடியே குழப்பமாய் 'இதை எதுக்கு குடுத்து விட்டிருக்கா' என்று எண்ணிக் கொண்டே வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு சென்று அதையெ ஒரு பத்து தடவை திருப்பி திருப்பி பார்த்தான். பின் ஒவ்வொரு வரியாக உற்று பார்த்தபோது 'முருகன் ஸ்டோர்ஸ்' என்ற கடைப்பெயரில் முருகன் என்ற வார்த்தையின் அடியில் மெலிதாய் ஒரு கோடு இருந்தது. பிறகு வேக வேகமாய் ஒவ்வொரு வார்த்தையாய் பார்த்த போது அன்றைய தேதியின் அடியிலும், 7'O clock என்பதன் அடியிலும் கோடுகள் இருந்தன. ஏதோ புரிந்தது போல் இருக்கவும் ஒருவித நிம்மதியுடன் 7 மணிக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

மாலை ஆறு மணி ஆனதும் கிளம்ப ஆரம்பித்தவன் ஒருவித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் ஆறரை மணிக்கு முருகன் கோவிலுக்குள் இருந்தான். அவனுக்கிருந்த பதட்டத்தில் நேரம் நகராமல் அடம் பிடிப்பதாய் தோன்ற, கடிகாரத்தை எதிரியாய் பாவித்து சபித்துக் கொண்டிருந்தான். புதன் கிழமையாதலால் அவ்வளவாய் கூட்டம் இல்லை. அவ்வபோது ஓரிருவர் வந்து கொண்டிருந்தனர். அப்படியே கோவிலில் பின்னாலிருந்த மரங்களினடியில் உலாவிக் கொண்டிருந்தவன் ஏழு மணியாகியும் அவள் வராததால் ஒருவித ஏமாற்றமடைந்து ஒரு மரத்தினடியில் உட்கார்ந்தான். எதுக்கு வரச் சொன்னா. என்ன சொல்லப் போறா. இன்னும் ஏன் வரலை இப்படியாய் கேள்விகள் எழும்பிக் கொண்டிருக்க பொறுமை இழந்தவனாய் எழுந்து வேகமாய் திரும்பியவன் அங்கே நின்று கொண்டிருந்த அனுவைக் கண்டதும் ஒரு நிமிடம் அதிர்ந்து பின் சுதாரித்தான்.

"என்ன மாமா? ரொம்ப நேரமா யாருக்கோ வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க போல? யாருக்குனு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்று கேட்டு களுக்கென்று சிரித்தாள்.

என்ன இவ வர சொல்லிட்டு இப்படி கேக்கறா... அப்போ இவ வர சொல்லலையோ என்று உள்ளே பலவாறு எண்ணங்கள் ஓட, ஏதும் பதில் பேசாமல் அவளைப் பார்த்து சிரித்து வைத்தான்.

"நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே" என்று அவள் அவனை உற்றுப் பார்க்கவும் "விளையாடாத அனு" என்று கோபமாய் சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

"அப்போ நீ வர சொல்லிதான் வந்தேன். உனக்காகதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு தொரையால சொல்ல முடியாதோ?" என்று அவள் கேலியாய் கேட்கவும் உள்ளுக்குள் பொங்கிய சந்தோஷத்தை வெளியில் காட்டாமல் நடையை நிறுத்தி அவளைப் பார்த்தான்.

"சும்மா எதுக்கு மாமா வெக்கப்படறீங்க?" என்று கேட்டபடியே கீழே குனிந்து அவன் காலடியில் ஏதோ தேடினாள். ஒரு அடி பின்னால் நகர்ந்தவன் "என்ன தேடற?" என்றான்.

"இல்ல தரைல கால் கட்டை விரலால நீங்க போட்ட கோலம் எப்டி இருக்குனு பாக்கலாம்னு பாத்தா.... ச்சே.... இங்க அவ்வளவா வெளிச்சம் பத்தலை" என்று அவள் கேலியாய் சலித்துக் கொள்ள அவனுக்கு சுருசுருவென ஏறியது. "ஏய்" என்றபடி அவன் அனுவின் கையைப் பற்ற வேகமாய் அவனது கையை தட்டி விட்டாள்.

"இந்த வேகத்தை என்னை கல்யாணம் பண்ணிக்கறதுல காட்டுங்க மாமா" என்று சீரியஸாய் சொல்லி விட்டு அமைதியாய் திரும்பி போய் மரத்தடியில் அமர்ந்தாள். 'ஆஹா... வேறெதற்கு? உன் கரம் பற்றத்தானே பெண்ணே இப்பிறவியெடுத்து வந்தேன்' என்று கவிதைத்தனமாய் அவனுக்குள் சந்தோஷம் துள்ள மெல்ல சென்று அவளருகில் அமர்ந்தான். தலை குனிந்து புற்களில் கைகளை அளைந்து கொண்டிருந்தவளை அப்படியே அள்ளியெடுத்துக் கொண்டு யாருமில்லாத தீவுக்கு ஓடி விட வேண்டும் போல தோன்றியது.

"அனு" என்ற அவனது அழைப்பிற்கு லேசாய் தலை நிமிர்ந்து பார்த்தவளது விழிகள் பனித்திருந்தன.

"இப்போ என்ன ஆயிடுச்சுனு இப்படி ஃபீல் பண்ணிட்டு உக்காந்திருக்க?" என்று புதிதாய் வந்து விட்ட தைரியத்தோடு கேட்டான்.

"நான் வந்து பேசினப்ப நீங்க இமைக்காம பாத்தப்பவோ, நீங்க என் தம்பிகிட்ட சாக்லேட் வாங்கி கொடுத்து என்னை பத்தி விசாரிச்சத அவன் என்கிட்ட சொன்னப்பவோ அந்த வயசுல எனக்கு எதுவும் தோணலை மாமா. ஆனா எனக்கு அடிக்கடி அது ஞாபகம் வரும். ஏன்னே தெரியாம ரொம்ப சந்தோஷமா இருக்கும். பின்னாடிதான் அந்த சந்தோஷத்துக்கெல்லாம் அர்த்தம் புரிஞ்சது. எனக்குள்ள நீங்க எப்பவோ வந்துட்டிங்க. அதே மாதிரி நானும் உங்களுக்குள்ள இருக்கேனு எனக்கு நல்லாவே தெரியும். இப்போ எனக்கு மாப்பிள்ளை வந்திருக்கிற விஷயம் உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அதான் இனியும் உங்ககிட்ட பேசாம இருக்க கூடாதுனு முடிவு பண்ணி இப்போ வர சொன்னேன்" என்று நிறுத்தாமல் அவள் பேசி முடித்தாள்.

"அது எப்படி நானும் உன்னை விரும்பறேனு உனக்கு தெரியும்? நான் எப்போவாவது சொன்னேனா?" என்று அவன் கேட்கவும் ஒரு நொடி திகைத்து விழித்தவள் பின் புன்னகையுடன்

"மாமா ஒண்ணு மொதல்ல தெரிஞ்சுக்கோங்க. என்னைக்கும் பசங்களுக்குதான் இந்த மாதிரி விஷயங்களை புரிஞ்சிக்க முடியாது. ஆனா பொண்ணுங்க பார்வைய வச்சே கண்டுபிடிச்சிடுவாங்க. அன்னைக்கு கல்யாண மண்டபத்துல நீங்க என்னையே பாத்துட்டு இருந்ததுதான் எனக்கு தெரியுமே. நீங்க வந்து பேசினப்போ ஏதாச்சும் சொல்லுவிங்கனு எவ்வளவு ஆசையாப் பாத்தேன் தெரியுமா? நீங்க என்னடான்னா ஷாக் அடிச்ச மாதிரி பேந்த பேந்த முழிச்சிட்டு பயங்கரமா உளறுனீங்க. அந்த உளறல் பத்தாதா உங்க மனசு புரிய. அப்போ என்னை கவனிச்சு இருந்திருந்தா உங்களுக்கும் புரிஞ்சிருக்கும்" என்றாள்.

'அடடா... இவ்வளவு நாளா இது தெரியம போச்சே' என்று நொந்து கொண்டவன் "சரி அதெல்லாம் இருக்கட்டும். இனிமேல் என்ன பண்றது?" என்று கேட்டான்.

"எப்படியும் அக்காவுக்கு முடியாம எனக்கு பண்ண மாட்டாங்க. அதனால பிரச்சினை இல்லன்னு நினைக்கறேன்"

"ஆனா இப்போதைக்கு நிச்சயம் மட்டும் பண்றதா அம்மா சொன்னாங்களே"

"இப்போதைக்கு பண்ண மாட்டாங்க மாமா. ஏனா இன்னும் ஒரு வாரத்துல ஆடி மாசம் வரப் போகுது. ஆடில எதுமே செய்ய மாட்டாங்க. அதனால ஒரு மாசத்துக்கு கவலை இல்ல. அதுக்குள்ள எப்படியாவது அப்பாவ கன்வின்ஸ் பண்ணி அக்கா கல்யாணத்துக்கு அப்புறமா பாத்துக்கலாம்னு சொல்லணும். அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க பயப்படாதீங்க"

"ஹ்ம்ம்ம்ம். சரி உன்கிட்ட நான் எப்படி பேச முடியும்?"

"எனக்கு காலேஜ் முடிய இன்னும் ஒரு செம் இருக்கு. ஆனா காலேஜ்ல இருந்து பண்ண முடியாது. அப்பாதான் என்னை கூட்டிட்டு போய் விட்டுட்டு ஈவ்னிங் திரும்ப கூட்டிட்டு வருவார். சோ அப்போ கால் பண்ண முடியாது. வீட்டுல யாரும் இல்லைனா உங்களுக்கு கால் பண்றேன்.வேற ஒண்ணும் பண்ண முடியாது" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே

"அனு... லேட் ஆச்சுடி... கிளம்பலாமா?" என்று கேட்டபடி ஒரு பெண் வர

"மாமா. இவதான் என் க்ளோஸ் ஃப்ரெண்ட் உமா. நம்ம ஆளு யாராவது வந்துடுவாங்களோனு நான் தான் பாத்துக்க சொல்லிட்டு வந்திருந்தேன். நேரமாச்சு. நான் கிளம்பவா?" என்று அவள் எழுந்திருக்க அவனுக்கு பளீரென ஒரு ஐடியா தோன்றியது.

"ஹாய் உமா" என்று அவளைப் பார்த்து புன்னகைக்க

"ஹாய் அண்ணா" என்று புன்னகைத்தாள் பதிலுக்கு.

"இவளுக்கு ஃபோன் பண்ணி இவ அம்மா எடுத்தா எப்படி பேசுவ?" என்றான். அவர்கள் இருவரும் புரியாமல் குழப்பமாய் பார்க்கவும்

"சொல்லு நான் சொல்றேன்" என்றான்.

"அம்மா உமா பேசறேன். அனுவ கூப்பிடுங்கனு சொல்லுவேன்"

"இப்போ ஃபோன் பண்ணி அவங்க அம்மாகிட்ட பேசற மாதிரியே பேசணும் சரியா" என்று கூறியபடி அவன் மொபைலில் எதையோ செய்து விட்டு அவளருகில் நீட்ட அவள்

"அம்மா உமா பேசறேன். அனுவ கூப்பிடுங்கம்மா" என்றதும் மறுபடியும் மொபைலில் எதோ செய்தான்.

"அவ அம்மா அவ இல்லைனு சொன்னதும் எப்டி சொல்லுவியோ அதையும் சொல்லு" என்று மறுபடியும் அவளருகில் நீட்டினான்.

"சரிங்கம்மா. நான் ஃபோன் பண்ணினேனு அவகிட்ட சொல்லிடுங்க. வச்சிடறேன்" என்று அவள் முடித்ததும் மொபைலில் எதோ செய்தான்.

"ரொம்ப தேங்க்ஸ் உமா. சரி நேரமாச்சு நீங்க கிளம்புங்க" என்றதும் அவர்கள் கிளம்ப அவர்கள் போவதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் கிளம்பி வீட்டிற்கு சென்றான். ஏதோ சாதித்து விட்டதாய் தோன்ற உலகத்தையே புரட்டி காலடியில் போட்ட சந்தோஷத்துடன் நிம்மதியாய் சாப்பிட்டு உறங்க சென்றான். உறக்கம் வராமல் புரண்டவன் 'ஒருவேளை அவளால சமாதானப் படுத்த முடியாம போய் அவ அப்பா நிச்சயம் பண்ணிட்டார்னா???' என்ற கேள்வி கண்முன் நிற்க மறுபடியும் நிம்மதியை தொலைத்தவனான்.

தொடரும்...

Wednesday, October 17, 2007

உன் கண்ணோரம் வாழ... I



"நம்ம லட்சுமி பொண்ணு அனுவ பொண்ணு கேட்டு வந்திருக்காங்களாம்" என்று அம்மா அக்காவிடம் சொல்லிக் கொண்டிருந்தது கேட்டு திடுக்கிட்டு விழித்தான் அரவிந்த். 'அனு... என் உயிரின் ஒவ்வொரு அணுவிலும் காதலை பிழிந்து பிழிந்து ஊற்றியவளே!' மனதில் மலைபோல் பாரம் அழுத்த, கண்களை விடாப்பிடியாய் தழுவியிருந்த தூக்கம் பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடியதில் அமைதியாய் எழுந்து அமர்ந்தான். ரெட்டை சடை பின்னலுடனும், பட்டாம்பூச்சியாய் துறுதுறுவென இமையடித்த விழிகளுடனும், குழந்தைதனம் மாறாத முகத்துடனும் பாவாடை சட்டையில் முதல் முதலாய் பார்த்த அவள் உருவத்தை கண்களுக்குள்ளேயே ஒளித்து வைத்திருந்தான். ஒளிந்திருந்தவள் வெளியே வந்து பழிப்பு காட்டி சிரிக்கவும் என்னை விட்டு வெளியே ஓடி விடாதே என்று வாய் விட்டு சொன்னவன் அங்கே வந்த அவளது அக்கா ஒரு மாதிரியாய் பார்க்கவும் திரும்ப படுத்து போர்வையை போட்டு முகத்தை மூடிக் கொண்டான்.

"ஹே என்னடா இது நாம எப்படி விளையாடினாலும் தோத்து போறோம்" என்று தனது தம்பியிடம் புலம்பிய அரவிந்த் வெறுப்பாய் எதிரணியை பார்த்தான். விடுமுறையில் தனது மாமா வீட்டிற்கு வந்திருந்த அரவிந்தின் சொந்தத்திற்கும் அத்தை வழி உறவினர் சிலருக்கும் நடந்த விளையாட்டில் தோற்று போனது அவனுக்கு பெரிய மானப் பிரச்சினையாய் இருந்தது. அவனது குழுவில் ஒன்பதாவது படிக்கின்ற அவன் பெரிய பிள்ளையல்லவா... சலித்து போய் மரத்தடியில் தனியாய் அமர்ந்திருந்த அவன் அருகில் நிழலாட நிமிர்ந்துப் பார்த்தான். ஒரு சிறு பெண் நின்றிருப்பதை கண்டதும் யாராயிருக்கும் என்ற யோசனையில் இறங்க, அவனை பார்த்து புன்னகைத்தவள் "அவங்க உங்களை ஏமாத்தறாங்க..." என்று ஆரம்பித்து அவர்கள் செய்த திருட்டு வேலைகளை எல்லாம் மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் பார்வையோ படபடவென அடித்த அந்த கள்ளமில்லா விழிகளிலேயெ நிலைத்திருக்க, "எங்க சொந்தமாயிருந்தாலும் தப்பு தப்புதானே. அதான் உங்ககிட்ட சொன்னேன். பாத்து விளையாடுங்க" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு பறந்தாள். அவள் பெயர் அனு. ஆறாவது வகுப்பு முடித்து ஏழாவது போகிறாள். அவனது அத்தையின் அக்கா மகள் என்ற அவளைப் பற்றிய விவரங்களை அவளது சித்தி பையனுக்கு சாக்லேட் வாங்கி தந்து தெரிந்து கொண்டான். அன்று மனதில் போட்டு பூட்டி வைத்தவளை அதற்கு பிறகு பார்க்கவே முடியவில்லை.

காலேஜ் நான்காவது வருடத்திலிருந்த போது ஒரு திருமணத்தில் அவளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பாவாடை தாவணியில் அவனது கண்களுக்கு தேவதையாய் தெரிந்தாள். வளர்ந்த பிறகும் முகத்தில் மாறதிருந்த குழந்தைதனமும் கவிதை பேசும் கண்களும் அவனது இதயம் துடிப்பது அவளுக்காக மட்டும் தான் என்றே அவனை எண்ன வைத்தது. அவள் கண்களுக்குள் புதைந்து விட துடித்தான். அவளை தனது இதயத்துக்குள் புதைத்துக் கொள்ள தவித்தான். டைனிங் ஹாலுக்கு வெளியே தனியாய் அவள் நின்று கொண்டிருந்ததை கண்டதும் அவளிடம் சென்று காதலை சொல்லி விட துடித்த இதயத்தை கட்டுபடுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
"ஹாய்.... என்னை..." என்று அவன் ஆரம்பிக்கவும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவளது புன்னகையில் உள்ளுக்குள் உற்சாகம் பீறிட

"என்னை.... என்னை...." என்று ஆரம்பிக்கவும் என்ன சொல்ல வருகிறான் என்ற யோசனையில் அவள் புருவம் சுருக்கி யோசனையாய் லேசாய் தலை சாய்த்து அவனை பார்த்தாள். அந்த பார்வையில் அவனது உலகம் சுற்ற உள்ளுக்குள் மயங்கியவனின் வாய் குழற

"நீங்க... நீங்க... தெரி... யு... தா.... யாரு.... னு...." என்று உளறவும் கலகலவென சிரித்தவள்

"என்ன இப்படி கேட்டுட்டிங்க? அரவிந்த் மாமாதானே.... நல்லா தெரியுது" என்று கூறி விட்டு ஒரு வெட்கப் புன்னகையுடன் அங்கிருந்து ஓடி விட்டாள்.

'அடச்சே! நல்ல சான்ஸ கெடுத்திட்டியேடா' என்று தன்னைதானே கடிந்து கொண்டாலும் மனம் என்னவோ அவளது பதிலில் ஆனந்த கூத்தாடியது. அதன் பிறகு அவளைப் பார்க்கும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கவே இல்லை. எப்போதாவது அவளது படிப்பு பற்றியும் வீட்டை பற்றியும் அவனது வீட்டில் பேசிக் கொள்வதை வைத்து அவளைப் பற்றி தெரிந்து கொண்டான். படித்து முடித்து நல்ல வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில் அவளது கல்யாணப் பேச்சு அடிபட, வலிக்காமல் இதயம் திருடிப் போனவளை எண்ணி மனம் வலியால் துடித்தது.

"உங்களுக்கு எப்படிம்மா தெரியும்? பையன் யாராம்?" என்ற அக்காவின் வார்த்தைகள் காதில் விழ அவர்களது பேச்சில் கவனமானான்.

"நேத்து உங்க அத்தை ஃபோன் பண்ணியிருந்தப்ப சொன்னா. ஒரு ஜாதகம் வந்திருந்திருக்கு. அந்த பையனோட அம்மா கடைவீதில அனுவ பாத்திருப்பாங்க போல. ரொம்ப பிடிச்சுப் போச்சாம்."

"ஹிம், அவ அக்காவுக்கே இன்னும் கல்யாணம் முடியலை? அதுக்குள்ளே இவளையும் கேட்க ஆரபிச்சிட்டாங்களா?"

"பெரியவளுக்கு பாக்கறதாதான் இருந்தாங்களாம். ஆனா அவளை விட அவங்களுக்கு அனுவே தான் பார்த்ததும் பிடிச்சிக்கிருச்சாம், கொடுத்தா சின்ன பொண்ணதான் கொடுங்கன்னு கேக்கறாங்களாம்" என்று அம்மா சொன்னதும் அந்த பையனின் அம்மா மீது அவனுக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது. கடைவீதிக்கு போனோமா வந்தோமானு இல்லாம அந்த அம்மாவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம் என்று சொல்லத் துடித்த வாயை அடக்கிக் கொண்டிருந்தான். சரி நம்ம அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்தானே. எப்படியாவது அம்மாவை கன்வின்ஸ் பண்ணி வேலைய முடிக்கணும் என்று எண்ணி கொண்டிருக்கையில்,

"அட அப்பிடியா! ரொம்ப அதிர்ஷடகாரி தான் அனு...."ன்னு அக்கா சொல்லி சிரித்தாள்.

"ஆமாண்டி, அவ நல்ல அதிர்ஷடகாரிதான். ரொம்ப நல்ல இடமாம். வீட்டுல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சாம். பேசாம இப்ப நிச்சயம் மட்டும் பண்ணிக்கிட்டு பெரியவ கல்யாணம் முடிஞ்சதும் இவளுக்கு பண்ணிடலாம்னு நானும் சொன்னேன்."

"அப்போ அவ அக்காவுக்கு எப்போ முடிக்கிறமாதிரியாம்?"

"கூடிய சீக்கிரத்திலே அவளுக்கு முடிச்சிட்டுதான் அனுவுக்கு முடிக்கனுமின்னு இருக்காங்களாம். அது இவங்களும் அந்த வீட்டிலே நிச்சயதார்த்தம் பண்ணப் போறதா இருக்காங்கன்னு அவளும் சொன்னா. நல்ல இடத்தை விட்டுட்டா அப்புறம் நல்லபடியா அமையுமோ அமையாதோ. எதுக்கு பிரச்சினை" என்ற தாயின் வார்த்தைகள் அவனுக்குள் ஈட்டி இறக்க என்ன செய்வதென்று அறியாமல் தொய்ந்து விழுந்தான்.

ஒரு மணி நேரமாய் யோசித்தும் என்ன செய்வதென்று எதும் பிடிபடாத நிலையில் கிளம்பி டீக்கடைக்கு சென்றான். டீ சொல்லி விட்டு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தவனது கண்ணில் தூரத்தில் நின்று இவனையே பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் விழ, யாராய் இருக்கும் என்று வேக வேகமாய் யோசித்தான். அவனைப் பார்த்து வருமாறு அவன் சைகை காட்டிய நொடியில் ஞாபகம் வந்தது அவன் அனுவின் சித்தி பையனென்று. வேகமாய் எழுந்து அவனிடம் சென்றான். அவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

"அனு அக்கா இதை உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க" என்றபடியே அவன் கைகளில் ஒரு கடிதத்தை திணித்து விட்டு வேகமாய் ஓடி விட்டான்.

(தொடரும்...)

Thursday, October 4, 2007

எங்க வீடு கல்யாண வீடு ஆயிடுச்சு!!!

ஆஹா! யாரு பொண்ணுனு கேக்கப்படாது. ஏனா எங்க வீட்டுல(பெங்களூரு
வீட்டுல) மூணு பேரு இருக்கோம். ஒருத்திக்கு அண்ணா இருந்ததால அவ வீட்டுல அவங்க அண்ணனுக்கு முடிச்சிட்டு அவளுக்கு கல்யாணத்துக்கு பாக்கலாம்னு சொல்லிட்டாங்க. அதனால ஓவரா பந்தா விட்டுட்டு எங்களை மிரட்டிட்டே இருப்பா. சீக்கிரம் கல்யாணம் ஆகி போக போற பொண்ணு.... இது கூட செய்ய தெரியலைன்னு ஓட்டிட்டே இருப்பா. அவதான் எங்க வீட்டு Chief Chef. ரெண்டு மூணு சமையல் குறிப்பு புக்ஸ் வாங்கி வச்சிட்டு அதை அப்பப்போ பாத்து பாத்து எதாவது எங்களுக்கு செஞ்சு தருவா.

போன ஞாயித்துக் கிழமை விடிய காலைல ஒரு 10 மணிக்கா அவங்க அப்பா ஃபோன போட்டு ஒரு ரெண்டு மூணு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுத்து உடனடியா அனுப்புமான்னு சொல்லிட்டார். உடனே அடிச்சு பிடிச்சு நாங்க ரெண்டு பேரும் எழுந்துட்டோம். ஆஹா! மாட்டிக்கிட்டாடா வசமான்னு அப்போ ஆரம்பிச்சதுதான். ஒரே ஜாலியா பொழப்பு ஓடிட்டு இருக்கு ;) அவ வீட்டுல அவகிட்ட நேரா பேசாம அவ அக்காவ பேச சொல்லி மாப்பிள்ள பாக்கிற விஷயத்த சொல்லிட்டாங்க. அதுல இருந்து பிள்ளைக்கு இருப்பு கொள்ளல. அச்சச்சோ.... என்கிட்ட காட்டன் சாரிதான இருக்கு. அதை கட்டினா குண்டா தெரிவெனேன்னு ஃபீல் பண்ணி அன்னைக்கு சாயந்திரமே போய் ஒரு புடவை எடுக்கணும்னு ப்ளான் போட்டுட்டு இருந்தா(ஹி... ஹி... நாங்க பண்ணின சதி வேலையால இன்னும் எடுக்கவே இல்ல).

அன்னைக்கு மதியம் நாங்க ரெண்டு பேரும் சர்ட்டிஃபிகேஷன்க்கு படிக்கறோம்னு சொல்லி கைல புக்க வச்சிக்கிட்டு ஆ-னு வாய பொளந்துக்கிட்டு டிவிய பாத்துட்டு இருந்தோம். அவ மட்டும் ஏதோ சின்சியரா படிச்சிட்டு இருந்தா. கொஞ்ச நேரம் கழிச்சு அப்டி என்னடா படிக்கறானு பாத்தா "வீட்டுக் குறிப்புகள்" புத்தகத்த வச்சு மூணாவது தடவையா ரிவிஷன் விட்டுட்டு இருக்கா.... ஆஹா! மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டா இப்படியெல்லாம் பண்ணனும்போலன்னு மனசுக்குள்ள பயந்துட்டே
மறுபடியும் மாட்டின அவள சும்மா விட்டிருப்போமா ;)))

செவ்வாகிழமை நைட் அவ வீட்டுல இருந்து ஃபோன். அவ அப்பா லிஸ்ட்
போட்டார். மலேசியால ஒரு பையன் வேலைல இருக்கானாம். ஒரு பையன்
scientistஆ இருக்கானாம். ஒரு பையன் M.Phil படிச்சிட்டு வீட்டுலதான்
இருக்கானாம். உனக்கு யாரை பிடிச்சிருக்குனு சொல்லுனு கேட்டார். அவ, அப்பா வேலைய மட்டும் சொல்லிட்டு இப்டி கேட்டா நான் என்ன சொல்லட்டும்னு சொன்னா. உடனே அவங்க அம்மா வாங்கி அதே டயலாக்க சொல்லி யார பிடிச்சிருக்குனு கேட்டாங்க. அவளும் அதே டயலாக்க சொன்னா. கொஞ்ச நேரம் கழிச்சு அவ அக்கா ஃபோன் பண்ணி அதே டயலாக்க சொன்னாங்க. அவங்க அக்கா பொண்ணும் சித்தி உனக்கு யாரை பிடிச்சிருக்குனு கேட்டாளே பாக்கலாம். பிள்ள டென்ஷன் ஆயி கோபமா அவளோட டயலாக்க அள்ளி விட்டா. கம்முனு ஃபோன வச்சிட்டாங்க.

ஹ்ம்ம்ம்ம்.......... இப்படியே மூணு நாளா ஜாலியா பொழப்பு ஓட, பிள்ள ஒரே
சந்தோஷத்துல செஞ்சு போட்டதெல்லாம் சப்பு கொட்டிகிட்டு சாப்பிட்டுட்டு
அவளையே ஓட்டு ஓட்டுனு ஓட்டிக்கிட்டு இருந்துட்டு Certificationக்கு படிக்காம விட்டுட்டேன் :(((( இன்னைக்கு mid night ஒரு ஆறு மணிக்கே எழுந்து படிச்சு எப்டியோ பாஸ் பண்ணிட்டேன் :))))

ஹ்ம்ம்ம்ம்..... பொண்ணு சமையல் குறிப்பு புக்க வச்சு படிக்கறத இப்படி நாமளே இவ்ளோ ஓட்டு ஓட்டறோமே. பசங்கனா இன்னும் எப்டி ஓட்டுவாங்கன்னு நினைச்சு பாத்தேன். நிச்சயம் ஆனதும் மொத வேலையா நமக்கு வர போற ஆளுக்கு சமையல் குறிப்பு புக்ஸ் வாங்கி கொடுத்து நல்லா கத்துக்க சொல்லனும்னு பண்ணி வச்சிருந்த முடிவ மாத்திக்கிட்டேன். அவர் கஷ்டபடகூடாதுனு நினைக்கற எனக்கு உண்மையா பெரிய மனசுதானே??? ;)))

Monday, October 1, 2007

யாருங்க இந்த ஹீரோ???

இன்னைக்கு காலைல ஆபிஸ்க்கு வேக வேகமா ஓடும்போது பாத்தா வழியெல்லாம் ஒரே வாழ்த்து போஸ்டர். யாருடா இதுன்னு நானும் இன்னைக்கு காலைல இருந்து யோசி யோசின்னு மண்டைய பிச்சிக்கிட்டு யோசிச்சேன்... கண்டே பிடிக்க முடியல :((( உங்க யாருக்காவது இந்த ஹீரோ யாருன்னு தெரிஞ்சா வந்து சொல்லிட்டு போங்க. அறிவு ஒளியேற்றி என் அறியாமை இருட்டை போக்கிய புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும் :))) அட! அந்த ஹீரோ போட்டோதானே கேக்கறீங்க??? கீழ போங்கப்பு...

"

"

"

"
"
"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"

"

"

"

"

"

"

Happy Birthday to you!

Happy Birthday to you!!

Happy Birthday to Dear Ji!!!

Happy Birthday to you!!!!

இது ஒரு பாட்டு. என்ன இது ஒண்ணும் புரியலலயேனு பாக்க கூடாது. இதை செலக்ட் பண்ணி ctrl + C பண்ணி ஓடி போய் Notepad open பண்ணி ctrl + V பண்ணி பாருங்க புரியும் :)))