Showing posts with label இதயம் ரோஜா காதல் முள். Show all posts
Showing posts with label இதயம் ரோஜா காதல் முள். Show all posts

Sunday, January 6, 2008

இதயம் ரோஜா காதல் முள் - IV


ஹலோ! நான் தாங்க வினி. இப்போதான் எங்கம்மா செஞ்ச சிக்கன் பிரியாணிய மூக்குப் பிடிக்க சாப்பிட்டு வந்து மொட்டை மாடில உக்காந்திருக்கேன். மனசுல இவ்வளவு கவலைய வச்சுக்கிட்டு எப்ப்டி உன்னால மட்டும் மூக்குப் பிடிக்க சாப்பிட முடியுது ஆச்சரியமா நினைக்காதீங்க. நீங்க ஆச்சரியப்படறதுக்கு ஒண்ணுமே இல்ல. ஏன்னா என் மனசுலதான் கவலையே இல்லையே :P இது என்னடா புது கூத்து. இந்த புள்ளக்கு என்னாச்சுனு பாக்கறீங்களா? சரிங்க. சுத்தி வளைச்சு உங்களை கடுப்பேத்தாம விஷயத்துக்கு வரேன். நேத்து நைட்டு அண்ணாகிட்ட பேசணும்னு முடிவு பண்ணி வச்சிருந்தேன். ஆனா எனக்கு ஒரு பயம். அண்ணா என்ன சொல்லுவானோன்னு ஒரு பக்கம் பயம். அண்ணா ஓகே சொல்லி எங்க அவன் இல்லைனு சொல்லிடுவானோன்னு பயம் இன்னொரு பக்கம். எதை மொதல்ல பண்ணலாம்னு எங்க வீட்டுலயே ரூம் போட்டு யோசிச்சேன்.

எப்படியும் அவன் சரி சொல்லி அண்ணா வேணாம்னு சொன்னாலும் அண்ணன சமாதானம் பண்ணப் போறோம். ஆனா அவன் சரி சொல்லி ஷ்யாம் சொல்லலைனா அது ரொம்ப கஷ்டம்னு மொதல்ல அவன்கிட்ட சொல்லிடலாம்னு முடிவு பண்ணி ஃபோன் பண்ணினேன். அவன் ஃபோன எடுத்ததும் அதுவரைக்கும் இருந்த தைரியமெல்லாம் எங்க ஓடிப் போச்சுன்னே தெரியலை. சாப்பிட்டியா சாப்பிட்டியானே நாலு தடவை கேட்டேன். அவன் ஒவ்வொரு முறையும் சாப்பிட்டேனு சொன்னதும் என்ன சாப்பிட்டனு கேட்டேன். அதுக்கு மேல பொறுக்க முடியாம ஏன்டி உளறிட்டே இருக்க?-னு கேட்டான். ஷ்யாம்! எங்க வீட்டுல எனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திருக்காங்கடா-னு சொன்னேன். அந்த பக்கம் இருந்து ஒரு பதிலும் வரலை. பையன் உங்க ஊருதான். உன்கிட்ட சொல்லிதான் விசாரிக்க சொல்லணும்னு இருந்தேன்னு சொன்னதும் அவன் ஓ! அப்படியா? அப்போ நீ ஓகே சொல்லிட்ட-ன்னு சொன்னான். குரல் அப்படியே கொஞ்சம் டல்லாயிடுச்சு. ஆமாம். பையன் சூப்பரா இருக்கான். நல்ல ஃபேமிலி. நல்ல பையன். ரொம்ப கேரிங். என்னை நல்லாப் பாத்துப்பான்-னு நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே போக ஹே! உனக்கெப்படி அவனைப் பத்தி தெரியும்? பாத்துப் பேசிட்டியா அதுக்குள்ள-னு அவன் கேட்டதுல பதட்டம் ரொம்ப நல்லா தெரிஞ்சது. எனக்கு சிரிப்பு வந்துடுச்சு. பேசிட்டியாவா? எனக்கு அவனப் பத்தி A to Z தெரியும்-னு சிரிச்சிக்கிட்டே சொன்னேன். என் சிரிப்புல உண்மைய தெரிஞ்சிக்கிட்டவன் பொய் கோழி! பொய்யாடி சொல்ற. இங்கதான வருவ. என்ன பண்றேன் பாரு-னு கத்தினான். நான் பொய் சொல்லலைடா. உண்மையாவே எனக்கு பையன் பாத்தாச்சு-னு சீரியஸா சொன்னேன். ஓஹோ! அப்படியா? பையன் பேரு என்ன? ஊரு என்ன? எங்க வேலை செய்யறான்?-னு நம்பாம கேட்டான். எங்க இருந்து தான் அப்போ எனக்கு அவ்ளோ தைரியம் வந்துச்சுனு இன்னமுமே எனக்கு தெரியலைங்க. உடனே வேகமா பையன் ஊரு கோயம்பத்தூர். வேலை செய்யறது TCSல. பேரு-ன்னு நான் இழுக்கவும் பேரு?-ன்னு ரொம்ப ஆர்வமாக் கேட்டான். உடனே எனக்கு வெக்கம் வந்துடுச்சு. ஹ்ம்ம்ம். இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு ஃபீலிங் அனுபவிச்சதே இல்ல. என்ன ஒரு நைஸ் ஃபீலிங் தெரியுமா? ஆனா அதைப் பாக்க அவன் பக்கத்துல இல்லைனுதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு :((( நேர்ல சொல்லி இருக்கலாம். நான்தான் முன்னாடியே சொல்லாம தப்பு பண்ணிட்டேன்.

அடடா! இப்படிதாங்க. ஒரு விஷயத்த சொல்றதுக்குள்ள வேற விஷயத்துக்கு போயிடுவேன். back to the matter. பேரு-ன்னு அவன் கேக்கவும் என்னால பேச முடியலை. ஏனோ கண்கள் அப்படின்னு கள்வனின் காதலி படத்துல ஒரு பாட்டு இருக்கும் தெரியுமா? அதுல ஒரு லைன் வரும். நூறு கோடி மான்கள் ஓடும் வேகம் போல இருதயம் துடிக்கிறதே அப்படின்னு. அந்த வரிய அப்போதான் அனுபவத்துல உணர்ந்தேன். அப்படியே நெஞ்சு பக் பக்குனு அடிக்குது. அந்த ஒரு நிமிஷத்துல அவன் என்ன சொல்லுவானோனு ஒரு எதிர்பார்ப்பு, ஓகே சொல்லிடுவான்ற சந்தோஷம், இல்லைனு சொல்லிட்டா-ன்ற பயம், அப்படி சொல்லிட்டா என்ன பண்றதுனு கவலை இப்படி எல்லா ஃபீலிங்ஸையும் மிக்ஸில போட்டு அடிச்சா என்ன ஃபீலிங் வரும். அதேதான் எனக்கும் இருந்துச்சு. ஷ்யாம்-னு வாய் வரைக்கும் வந்த வார்த்தை எனக்கேத் தெரியாம ஊஹூம்-ன்ற வார்த்தையா மாறிப் போய் வெளில வந்துச்சு. மேடம் வெக்கப்படறாங்கப் போல-னு அவன் சொன்னப்போ அவங்கம்மா அவனைக் கூப்பிட்ட சத்தம். grrrrrrrr....... அவன் அத்தைகிட்ட(ஹி... ஹி...) பேசிட்டு என்கிட்ட திரும்பி நான் வெளில போகணும் இப்போ. வர லேட்டாகும். சீக்கிரம் சொல்லு-னு என்னை அவசரப்படுத்தினான்.

அய்யய்யோ. நைட் வேற அண்ணன்கிட்ட பேசணுமே. அதுக்குள்ள இவன்கிட்ட பேச முடியாம போயிடுச்சுனா என்ன பண்றதுனு ஒரு பயம் வந்து வேக வேகமா நீதாண்டா-னு பட்டுனு போட்டு உடைச்சிட்டேன். ஓ! அப்படியா? சரிடி. நான் போயிட்டு வந்து பேசறேன்-னு ரொம்ப சாதாரணமா சொல்றான் மடையன். எனக்கு வந்துச்சே கோபம். டேய் நான் எவ்வளவு சீரியஸா கேட்டுட்டு இருக்கேந்னு கத்தவும் இப்ப உனக்கு என்னடி வேணும்னு கேட்டான். உன் பதில சொல்லு-னு கேட்டப்போ என் வாய்ஸ் எனக்கே கேக்கலை. ஒரு ரெண்டு செகண்ட்ஸ் யோசிச்சிட்டு என்னை ரொம்ப ஏமாத்திட்ட வினு-ன்னான். எனக்கு அப்படியே உள்ளுக்குள்ள ஏதேதோ கெமிக்கல் ரியாக்ஷன் எல்லாம் நடக்குது. கண்ணு கலங்குது. பேச்சே வரலை. அவனே உனக்குள்ள நான் வந்துட்டேன்னு எனக்கு எப்போவே தெரியும். அதே மாதிரி எனக்குள்ள நீ வந்தது உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். பட்.... ஏமாத்திட்டடி சொன்னானே பாக்கலாம். எனக்கு கோபமா வந்துச்சு. அழுகையாவும் வந்துச்சு. அப்படியே அழ ஆரம்பிச்சிட்டேன். போடா ராஸ்கல். என்னை பயமுறுத்திட்ட இல்லனு நான் அழவும் எதுக்கு இப்போ அழற? எந்த நிலைமைலயும் உன்னை விட்டுட்டு நான் போக மாட்டேன். சரியா? நீ இல்லாம, உன் செல்ல சண்டை இல்லாம, பொய்க் கோபம் இல்லாம, FM ரேடியோ மாதிரி வாய மூடாம பேசற பேச்சு இல்லாம, இழுத்து அறை விடத் தோண வைக்கற உன் அடம் இல்லாம, அட்வைஸ் பண்றதா நினைச்சு சொல்ற வெட்டி அறுவை இல்லாம, கோபப்பட்டு சிணுங்கற அந்த சிணுங்கல் இல்லாம, அறிவாளித்தனமா பேசறதா நினைச்சு என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கற இந்த அறிவு ஜீவி இல்லாம எனக்கு என்ன லைஃப் இருக்கு சொல்லு-னு மூச்சு விடாமப் பேசி முடிச்சான். அவன் பேச்சுல என் அழுகை அடங்கி வந்த பொய் கோபத்துல இதுதான் சாக்குனு என்னை நல்லா மட்டம் தட்டிட்ட இல்ல. ஊருக்கு வா உனக்கு நல்லா உண்டு-னு சண்டை போட ஆரம்பிச்சிட்டேன். அதுக்குள்ள அத்தை திரும்ப கூப்பிடவும் அப்புறம் பேசறேனு ஓடிப் போயிட்டான்.

அப்புறம் நைட் அண்ணனும் நானும் சாப்பிட்டு மொட்டை மாடிக்கு போனோம். ரொம்ப நேரம் அது இதுனு எல்லாம் பேசிட்டு இருந்தோம். எப்படி ஸ்டார்ட் பண்ணலாம்னு நான் யோசிச்சிட்டு இருந்தப்போ வினி நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு இருந்தேன்னு அவன் ஆரம்பிச்சான். என்னடா இது. அவனுக்கும் ஒரு ஸ்டோரி ஓடிருக்கும் போலனு நினைச்சுட்டே சொல்லுனு சொன்னேன். லவ் பத்தி என்ன நினைக்கறனு கேட்டான். ஹுஹாஹாஹானு விழுந்து புரண்டு சிரிக்கணும் போல இருந்துச்சு. கஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கிக்கிட்டு இதுல நினைக்க என்ன இருக்குனு நான் முடிக்கறதுக்குள்ள நினைக்க ஒண்ணும் இல்ல. ஆன செய்ய மட்டும் தெரியுதோனு சொல்லவும் ஒரு நிமிஷம் நடுங்கிப் போயிட்டேன். இன்னைக்கு மதியம் சாப்பிட்டு முடிச்சிட்டு ப்ளேட்ல ஹார்ட்டின் வரைஞ்சு அதுக்குள்ள உன் பேரையும் இன்னும் ஏதோ ஒரு பேரையும் எழுதினியே பாத்துட்டுதான் இருந்தேன்னு அவன் சிரிச்சுக்கிட்டே சொல்லவும்தான் என் பயம் போச்சு. அடியே வினிதா! இப்படியா லூசுத்தனமா செஞ்சு மாட்டிப்பனு என்னை நானேத் திட்டிக்கிட்டு அவன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னேன். சரி அம்மா அப்பாகிட்ட உனக்காக நான் பேசறேன். அதுக்கு நீ பதிலுக்கு என்ன செய்வ?-னு கேட்டான். ஒண்ணும் புரியாம முழிச்சிக்கிட்டே என்ன பண்ணனும்னு கேட்டேன். என் விஷயம்பத்தி அம்மா அப்பாகிட்ட நீதான் சொல்லணும்னு சொன்னானேப் பாக்கலாம். அடப்பாவி. என்னமோ நல்லவன் மாதிரி நடிச்ச. யாரு என் அண்ணினு கேக்கவும் அவனுக்கு வெக்கம் வந்துடுச்சு. தலையக் குனிஞ்சிட்டே உனக்கு தெரிஞ்ச பொண்ணுதான்னு சொன்னான். தோடா! உனக்கு வெக்கம் வருதானு அவன் காதை திருகி யாருனு ஒழுங்கா சொல்லுனு சொன்னான். உன் ஃப்ரெண்ட். என் ஆபிஸ்ல...னு அவன் ஆரம்பிச்சவே எனக்கு தெரிஞ்சிடுச்சு. ஓ! தெய்வா... அவதான் அந்த கல்ப்ரிட்டா. அவளைப் பேசிக்கறேனு சொன்னதும் ஆரம்பிச்சான் அவன் கதைய. ரொம்ப நேரம் உக்காந்து பேசிட்டு திரும்பி வரப்போதான் உன் ஆள் பேரென்னனு கேட்டான். ஷ்யாம்-னு நான் சொல்லவும் ஆச்சர்யமாப் பாத்தான். உன் பேரை வச்சிருந்ததாலதாண்ணா அவன மொதல்ல பாத்ததும் டக்குனு பிடிச்சதுனு சொன்னேன் :)))

இன்னைக்கு காலைல அம்மா அப்பாகிட்ட ரெண்டு பேர் விஷயத்தையும் சொல்லி சம்மதம் வாங்கியாச்சு. அவன் வீட்டுல பேசினதும்... வேறென்னங்க??? ஊஹூம். சிரிக்காதீங்க. இனிமேல் எனக்கு அவன்கிட்ட சாரி அவர்கிட்ட பேசவே நேரம் இருக்காதுன்னு நினைக்கறேன். ரொம்ப சாரிங்க. எங்க கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைப்பேன். அவசியம் வரணும் நீங்க. அண்ணனுக்கு கூட உங்களைத் தெரியுமாமே. போன வாரத்துக்கு முன்னாடி வாரம் உங்களோட பேசினானாம். அவனும் உங்களைக் கூப்பிடனும்னு சொல்லிட்டு இருந்தான். மறக்காம வந்துடுங்க. ஓகே. பைங்க. ஷ்யாம் கால் பண்றான். நான் போறேன் டேக் கேர். சீ யூ.

(சுபம்)

பி.கு: இந்த வினிதா ஒரு கற்பனை கதாப்பாத்திரம் ஆகையால் பத்திரிக்கை வரும் போய் ஒரு பிடி பிடிச்சிட்டு வரலாம்னு யாரும் கனவுல மிதக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் ;)))

Tuesday, January 1, 2008

இதயம் ரோஜா காதல் முள் - III

அப்பாடா! உங்களப் பாத்து ரெண்டு வாரம் ஆச்சுல்ல. என்னங்க பண்றது? எல்லாம் இந்த இம்சையாலதான். அடடா! இம்சை அரசிய சொல்லலைங்க. அவங்க எவ்ளோ நல்லவங்க... வல்லவங்க... எவ்ளோ பெரிய அறிவாளி... திறமைசாலி... பொறுமையானவங்க... பொறுப்பானவங்க... அமைதியானவங்க... அவங்களப் போய் இப்படியெல்லாம் சொல்லுவேனா? நான் சொன்னது என்னைப் பிடிச்சு ஆட்டற இம்சை... அதான் அந்த இம்சை புடிச்சவன் ஷ்யாம்...
உங்ககிட்ட பேசிட்டு இருந்தப்போ அவன் யாரோ ஒரு பொண்ணு கூட வரானு பயந்துட்டு இருந்தேன் இல்ல. அந்த பொண்ணு அவனோட வேலை செய்யற பொண்ணாம். ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்டுனு சொன்னான். இருந்தாலும் என்னை விட க்ளோஸா இருக்க மாட்டானு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன் :))) அவ உடனே கிளம்பிட்டா. அன்னைக்கு படம் பார்த்துட்டு பீச் போனோம். அவன் கையப் பிடிச்சிட்டு பீச்ல கால் நனைய நடக்கற சந்தோஷத்த அனுபவிச்சிட்டு இருந்தப்போதான் பேசாம நாமளே சொல்லிடலாமானு தோணுச்சு. நீ கல்யாணத்தப் பத்தி என்ன நினைக்கறனு மெல்ல பேச்ச ஆரம்பிச்சேன். கல்யாணம்னு ஒரு ரெண்டு நிமிஷம் சீரியஸா யோசிச்சான். எனக்கு வரவ என்னை நல்லா புரிஞ்சவளா இருக்கணும். என் ஃபேமிலியோட நல்லா மிங்கிள் ஆகி எங்க வீட்டுப் பொண்ணு மாதிரி பாசமா இருக்கணும். எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டா என் சந்தோஷத்தை கொண்டாடி, என் துக்கத்துல ஆறுதலா இருந்து, என் தப்பையெல்லாம் செல்லமா குட்டி ஒரு புன்னகையோட சரி செய்யறவளா இருக்கணும்னு சொன்னான். சொல்லிடு சொல்லிடுனு மனசு சொன்னாலும் வாய் மட்டும் திறக்கவே மாட்டேன்றது. நான் என்னதான் பண்ணுவேன். சரி எதாவது கேக்கணுமேனு யாரையாவது லவ் பண்ணியிருக்கியா ஷ்யாம்னு நான் கேட்டதும் என்னை முறைச்சான். ஹே! என் டீம் மேட் ப்ளாக் எழுதறா இல்ல. அதுக்கு எதாவது கதை தேறுமானு கேட்டேன்பானு நான் சமாளிச்சேன். உடனே என்னைப் பாத்து அவன் சிரிச்சப்போ எனக்கு ரொம்ப பயமாயிடுச்சு. வேற எதாவது இருக்குனு சொல்லிடுவானோனு நெஞ்சு படபடனு அடிச்சுக்குது.

சொல்லுடானு நான் அவசரப்படுத்தவும் முகத்த சோகமா வச்சிக்கிட்டு எனக்கு ஏகப்பட்ட காதல் கதை இருக்கு. ஆன எல்லாமே ஃபெயிலியர் லவ்ஸ்னு அவன் சொன்னதும் எனக்கு மனசு இன்னும் பக் பக்குனு அடிச்சது. சரி ஒவ்வொண்ணா சொல்லுனு நான் கஷ்டப்பட்டு எதையும் வெளில காட்டிக்காம சாதரணமா கேட்டேன். நான் பத்தாவது படிக்கறப்போ சிம்ரன் சிம்ரன்னு ஒரு பொண்ண லவ் பண்ணினேன். ஆனா அந்த பொண்ணு அப்போ வேற ஒருத்தர லவ் பண்ணுச்சுனு சொன்னாங்க. கொஞ்ச நாள் அப்படியே சோகத்துல இருந்தேன்னு அவன் சொன்னதும் எனக்கு கோபம் தலைக்கேறுச்சு. நான் முறைக்கவும் இரு இரு. இன்னும் கதை இருக்கு. சொல்றத முழுசா கேளுடி. அதுக்கப்புறம் பன்னெண்டாவது படிச்சப்போ ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா ராய்னு ஒரு பொண்ண லவ் பண்ணினேன். அந்த பொண்ணும் வேற ஒருத்தர லவ் பண்ணிடுச்சு. அந்த சோகமும் தாங்க முடியாம என் நெஞ்சே வெடிச்சுடுச்சு. ஆனாலும் என் வாழ்க்கைல இவ்ளோ சோகம் இருக்க கூடாதுனு சாமிகிட்ட எல்லாம் சண்டை போட்டேனு அவன் ரொம்ப சோகமான குரல்ல சொல்லவும் நான் பயங்கர கடுப்பாகி பட்பட்டுன்னு நாலு சாத்து சாத்தினேன். ஹே! இது மாதிரி இன்னும் எவ்ளோ சோகம் இருக்கு தெரியுமா? இதுக்கே இவ்ளோ சலிச்சுக்குற. கஷ்டப்பட்ட எனக்குதான தெரியும்னு அவன் சொல்லி முடிச்சப்போ அவன் பைக்கிட்ட வந்துட்டோம். சரி நேரமாச்சுனு கிளம்பினோம். வண்டில போகும்போது எப்படி சொல்றதுனு நான் யோசிச்சிட்டே வந்தேன். அவனும் எதுமே பேசலை. அமைதியாவே வந்தான்.

சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு போனோம். இப்போ எப்படியாவது சொல்லிடணும்னு லவ் பத்தி என்ன நினைக்கற ஷ்யாம்னு கேட்டேன். அவன் ஒரு ஸ்மைல் பண்ணினான். நான் சீரியஸா கேக்கறேனு சீரியஸா முகத்த வச்சுக்கிட்டு சொன்னேன். சரி நீ ஃபர்ஸ்ட் சொல்லு. நீ என்ன நினைக்கறனு கேட்டான். இவங்க கூட நாம ஃலைப் லாங்க் இருக்கணும்னு தோணற ஃபீலிங்னு நான் சொன்னதும் அது ஃப்ரெண்ட்ஸ் கூடவும் லைப் லாங்க் இருக்கலாமேனு சொன்னான். இது ஃப்ரெண்ட்ஷிப்பையும் மீறிய ஒரு ஃபீலிங். இவங்க மட்டும்தான் அந்த இடத்த ஃபில் பண்ண முடியும்னு தோணுது பாத்தியா. அதானு நான் சொன்னதும் மறுபடியும் அவன் சிரிச்சான். போடா எனக்கு சொல்லத் தெரியல. பட் இட்ஸ் அ நைஸ் ஃபீலிங்னு நான் சொன்னேன். சோ நீ யாரையோ லவ் பண்ற. அம் ஐ ரைட்?-னு அவன் கேக்கவும் எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை. கோழி திருடுனவளாட்டம் முழிச்சேன். நல்லா மாட்டிக்கிட்டேனு முழிச்சிட்டே சமாளிக்க நீ யாரையாவது லவ் பண்றியானு கேட்டேன். நான் கேட்டதுக்கு பதில் சொல்லுனு அவன் சீரியஸா கேக்கவும் இதுக்கு மேல மறைக்க முடியாதுனு யெஸ்னு சொன்னேன். யாருனு அவன் கேக்கவும் நான் பதில் சொல்லாம நான் கேட்டதுக்கு மொதல்ல பதில் சொல்லுனு கேட்டேன். அவன் ஒரு நிமிஷம் டேபிள்ல வச்சிருந்த கையவே பாத்துட்டு இருந்தான். அப்புறம் ஆமாம். நானும்தான்னு சொன்னான். எனக்கு அப்படியே சந்தோஷமாயிடுச்சு. இருந்தாலும் வேற யாராவதா இருந்துட்டானு ஒரு பயமும் வந்துடுச்சு. நான் அவள ரொம்ப சீரியஸா லவ் பண்றேன். அவ இல்லைனா எனக்கு லைஃபே இல்லைனு நினைச்சுட்டு இருக்கேனு அவன் சொன்னப்போ அவங்க வீட்டுல இருந்து அவனுக்கு ஃபோன் வந்துச்சு. அவன் தாத்தாவுக்கு ரொம்ப சீரியஸ்னு உடனே கிளம்பி வர சொன்னாங்க. அதனால என்னை ஆட்டோ பிடிச்சு ஹாஸ்டல் போக சொல்லிட்டு அவன் உடனே கிளம்பி போயிட்டான். இன்னும் ஹாஸ்பிட்டல்லதான் இருக்காங்க. தாத்தாவுக்கு இப்போ பரவால்லையாம். ஃபோன் பண்ணினப்ப சொன்னான். சரி இந்த நேரத்துல அதைப் பத்தி கேக்க வேணாம்னு நான் கேக்கலை.

எனக்குதான் சோறு தண்ணி இறங்க மாட்டேன்றது. அவன் சொன்னது என்னைதான்னும் ஒரு வேளை வேற யாராவதா இருக்குமோனு மனசு ரெண்டா பிரிஞ்சு உக்காந்து பட்டிமன்றம் நடத்தி என்னைப் பாடாபடுத்துது. இந்த வாரம் ஊருக்கு போறேன். அண்ணன் வரான். அவன்கிட்ட இதை சொல்லப் போறேன். அவன்கிட்ட பேசினாதான் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கும். பட் நேர்ல பாத்து பேசணும்னுதான் போறேன். அவன் வேற என்ன சொல்வானோனும் பயமா இருக்கு. காதல்ல விழுந்தா இப்படிதான் பயந்து பயந்தே சாகணும்னு எதாவது எழுதி வச்சிருக்குப் போல. பாவம்பா லவ் பண்றவங்க. அதும் நான் ரொம்ப பாவம். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்னு சும்மாவா சொல்லி வச்சிருக்காங்க. சரி விடுங்க. விட்டா நான் உக்காந்து ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிடுவேன். உங்களுக்கு நியூ இயர் செலிப்ஸ் எப்படி போச்சு? நல்லா எஞ்சாய் பண்ணினிங்களா? Happy New Year!!! நான் வரேங்க. இன்னொரு நாள் பாப்போம். பை.

தொடரும்...

Monday, December 24, 2007

இதயம் ரோஜா காதல் முள் - II


ஹலோ! யாருடா இவன்? இவன் பாட்டுக்கு நம்மளப் பாத்து ஹலோ சொல்றானேனு பாக்கறீங்களா? என் பேரு ஷ்யாம். செஞ்சிட்டு இருக்கற வேலை பொட்டித் தட்டற வேலை. ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்னு நிறைய தடவை ஃபீல் பண்ணி இருக்கேன். அம்மா சமையல சாப்பிட்டு அப்பா கூட செஸ் விளையாடிட்டு தங்கச்சிகிட்ட லட்டுக்கு சண்டை போடற லைஃப் இருக்கே. சுகமே சுகம். ஹ்ம்ம்ம். எல்லாத்தையும் விட்டுட்டு வரணும்னு தலைல எழுதி இருக்கு. என்ன பண்றது. நான் எங்க வீட்டோட ரொம்ப attachedங்க. வந்த புதுசுல வாரம் ஆனா வீட்டுக்கு ஓடிப் போயிடுவேன். அதுக்கப்புறம் அப்படியே ஃப்ரெண்ட்ஸ் அப்படி இப்படினு நம்ம லைஃப் இங்க செட்டாயிடுச்சு. அச்சச்சோ! உங்ககிட்ட பேசிட்டு இருந்ததுல டைம் பாக்காம விட்டுட்டேன். அஞ்சரை ஆனா டாண்னு CCDல இருக்கணும். இல்லைனா ஒரு சுனாமியே வந்துடும். ஒரு நிமிஷம் இருங்க. சிஸ்டம் லாக் பண்ணிட்டு என் ஷூ-வப் போட்டுட்டு வரேன்.

ஏன் கிளம்பறீங்க? ஒண்ணும் பிரச்சினை இல்லைங்க. நான் போயிக்கிட்டேதான் பேசறேன். நான் யாரைப் பாக்கப் போறேனு நீங்க தெரிஞ்சிக்க வேணாமா? அவதான் என்னோட அழகான ராட்சசி தெய்வா. ஒரு எட்டு மாசத்துக்கு முன்னாடி காலைல கனவுகள்ல சஞ்சரிச்சிட்டு இருந்த என்னை என் தங்கச்சிக்கிட்ட இருந்து வந்த ஃபோன் தட்டி எழுப்புச்சு. அடிச்சு புடிச்சு எடுத்துப் பேசினேன். டேய்! என் ஃப்ரெண்ட்க்கு உன் கம்பனில வேலை கிடைச்சிருக்கு. அவளுக்கு அந்த ஊருல யாரும் தெரியாது. பாஷை தெரியாத ஊருல மாட்டிக்கிட்டேனேனு புலம்பிட்டு இருந்தா. நான்தான் நீ இருக்கறனு தைரியம் சொல்லி அனுப்பி இருக்கேன். உன் நம்பர் அவட்ட குடுத்திருக்கேன். இன்னைக்கு வந்து ஜாயின் பண்றா. உனக்கு கால் பண்ணுவா. அவள ஒழுங்கா பாத்துக்கோ. உன் வாலுத்தனத்தையெல்லாம் காட்டி என் மானத்த வாங்கிடாத-னு சொல்லிட்டு என் பதில கூட கேக்காம கட் பண்ணிட்டா. சரி தங்கை சொல் மிக்க மந்திரமில்லைனு நல்ல பிள்ளையா இருக்கணும்னு உள்ளுக்குள்ள சபதம் எடுத்துக்கிட்டு(ஹி... ஹி... ச்சும்மா பில்ட் அப்பு;)) ஆபிஸ் போனேன். வேலை பிஸில அப்படியே மறந்துப் போயிட்டேன்.

ஒரு பதினோரு மணி போல மீட்டிங்ல இருந்தப்போ அனானிமஸ் கால் வந்துச்சு. யாரா இருக்கும்னு எடுத்து பேசினேன். "நா...ன்... தெய்வா". எனக்கு சிரிப்பு வந்துடுச்சு. இருந்தாலும் கெத்தா "மீட்டிங்ல இருக்கேன். வில் கால் யு பேக்"-னு சொல்லி வச்சிட்டேன். ஆனாலும் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்திங்க. அன்னைக்கு அப்படியே மறந்துப் போயிட்டேன். அன்னைக்கு நைட் ஃபோன் பண்ணி என் உடன்பிறப்பு சாமியாடினாப் பாருங்க. வாழ்க்கைல மறக்கவே முடியாது. அந்த பொண்ணு இப்படியா போட்டுக் குடுக்கறதுனு ஒரு சின்ன கடுப்பு. இருந்தாலும் நான் மறந்திருக்கக் கூடாதுதானு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். அதுக்கப்புறம் அவளுக்கு நல்ல ஹாஸ்டல்லா பாத்து சேர்த்து விட்டு, சிம் கார்டு வாங்கி கொடுத்து, ஊருக்கு பஸ் ஏறது எல்லாம் எங்கனு சொல்லிக் குடுத்து, சனிக்கிழமை ஷாப்பிங் கூட்டிட்டுப் போயி, ஞாயித்துக் கிழமை சும்மா வெளிய எங்கயாவது கூட்டிட்டு போன என்கிட்ட அவ நல்லா பழக ஒரு மாசம் ஆச்சு. ஒரு மாசத்துக்கப்புறம் ஆபிஸ்லயும் எங்க ப்ரேக் பாஸ்ட் டைம், லஞ்ச் டைம் ஒண்ணாச்சு. அப்புறம் சாயந்திரம் டிஃபன் டைம். அப்புறம் மொபைல்ல ஆட்-ஒன் கார்ட் போட்டு நைட்டெல்லாம் பேசி, ஆபிஸ்ல எக்ஸ்டென்ஷன், இன்டெர்னல் கம்யூனிக்கேட்டர்னு ஆகி என் வாழ்க்கை ஃபுல்லா இவ என்னோடவே இருக்கணும்னு நான் நினைக்கற அளவுக்கு ஆயிடுச்சு.

அவகிட்ட எப்படி சொல்றதுனு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். அதுமில்லாம அவளுக்கும் அந்த மாதிரி இருக்கோ இல்லையோனு ஒரு சின்ன... இல்ல... ரொம்பவே பெரிய சந்தேகம். அதுனால என்ன பண்றதுனு புரியாம டெய்லி நைட்டு விட்டத்தப் பாத்து யோசிச்சிட்டே இருந்த எனக்கு எந்த ஐடியாவும் தோணவே இல்ல :((( போன வாரம் ரெண்டு பேரும் ஒரு பேய்ப்படத்துக்கு போயிருந்தோம். அடிக்கடி பயந்துப் போயி என் கைய இறுக்கிப் பிடிச்சுக்கிட்டே இருந்தா. இதுக்கு முன்னாடி போனப்போ ரொம்ப தைரியமாதான் பாத்தா. இன்னைக்கு ஏன் இப்படி பயந்துக்கறானு எனக்கு ஒரே டவுட். படம் முடிஞ்சு வெளில நடந்தப்போ என் சந்தேகத்தக் கேட்டேன். அது என்னவோ தெரியலை. இப்போல்லாம் எதைப் பாத்தாலும் ரொம்ப பயமா இருக்குனு சொன்னா. எனக்கு ஒண்ணுமே புரியல. பயமா இருந்தாதானே உங்க கையப் பிடிச்சிக்க முடியும்னு சொல்லிட்டு ஒரு புன்னகைய சிதற விட்டா பாருங்க. எனக்குள்ள லட்சம் பட்டாம் பூச்சி பறந்துச்சு. இருந்தாலும் ஒண்ணும் தெரியாதவன் போல என் கையப் பிடிக்கறதுக்கு என்ன இருக்குனு கேட்டேன். சென்னைல நான் பாக்காம மிஸ் பண்ணின சுனாமிய அவ முகத்துலதான் பாத்தேன். இன்னும் என்ன விளக்கமா சொல்லணுமா? என் லைஃப் லாங்க் உங்க கையப் பிடிச்சிட்டே இருக்கணும் போதுமானு சொல்லிட்டு என்னை மொறைச்சுப் பாத்தா. அது வரைக்கும் எனக்குள்ள மொட்டு விட்டுக்கிட்டு இருந்த காதல் பூவா மலர்ந்துச்சு. பாருங்க பாருங்க. முன்னாடியெல்லாம் இப்படி பூவு, மொட்டு, பட்டாம்பூச்சினு எல்லாம் நான் பேசவே மாட்டேன். என்ன பண்றது? இந்த காதல் வந்து என்னைய இப்படி பாடாப்படுத்துது.

ரெண்டு பேர் வீட்டுலயும் ஒண்ணும் பிரச்சினை இல்ல. ஆனா என் தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி நான் இப்படி போயி நின்னா நல்லா இருக்காது இல்ல. அதான் அவளுக்கு கல்யாணம் ஆனதும் வீட்டுல இதுப் பத்தி பேசலாம்னு முடிவு பண்ணி வச்சிருக்கோம். என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கூட இதைப் பத்தி சொல்லலை. அதுலயும் ரெண்டு ராட்சசிங்க இருக்காளுங்க. சொன்னா என்ன பாடுபடுத்துவாளுங்கனு தெரியலை. சரிங்க. வந்து சேர்ந்துட்டேன். இவ்ளோ தூரத்திலேயும் அவ முகத்துல இருக்கற கோபம் இங்க என்னை அடிக்குது. நான் போய் சமாதானப்படுத்தறேன். டேக் கேர். இன்னொரு நாள் பார்ப்போம். பை :)))

தொடரும்...

Saturday, December 15, 2007

இதயம் ரோஜா காதல் முள் - I


ஹாய்! எப்படி இருக்கீங்க? நானா? நான்தாங்க வினி அலைஸ் வினிதா. என் வீட்டுக்கு வினிக்குட்டி. எங்க வீடு பத்தி சொல்லணும்னா அம்மா, அப்பா, அண்ணா, நானு ஒரு அழகான கூடு. எங்கம்மாவும் அப்பாவும் எங்களை பாசத்த மட்டுமே கொட்டி கொட்டி வளத்திருக்காங்க. அவங்க மூணு பேரோட குட்டி ஏஞ்சல் நான்தான். ஹ்ம்ம்ம்ம்.... என் ஃப்ரெண்ட்ஸ்க்கு நான் வினி. என்னைப் பொறுத்த வரைக்கும் ஃப்ரெண்ட்ஸ் விஷயத்துல அடிச்சுக்க முடியாத அளவுக்கு அதிர்ஷ்டசாலிங்க நான். வீட்ட விட்டு வந்து தனி்யா தங்கி இருந்தாலும் ஃப்ரெண்ட்ஸ் தயவுல வாழ்க்கை ஜாலியாவே போயிட்டு இருக்கு. என்ன பண்றது? பொட்டி தட்டறவங்க நிறைய பேர் பொழப்பு இப்படிதானே போகுது.

அதுக்கப்புறம்... இன்னொருத்தருக்கு நான் வினு டியர் :))) யெஸ். உங்க கெஸ் ரொம்ப சரி. நான் உள்ளுக்குள்ள கோட்டை மேல கோட்டை கட்டி அதுல ஒரே ஒரு சிம்மாசனம் வச்சு காலியாவே இத்தனை நாளா வச்சுட்டு இருந்தேன். அதுல எனக்கே தெரியாம அதுவும் என்னோட அனுமதி இல்லாமலே நுழைஞ்சு கம்பீரமா பெவிகால் போட்டு ஒட்டி வச்ச கணக்கா உக்காந்துக்கிட்டு இருக்கற ஷ்யாம். அவன நினைச்சாலே மனசு படபடனு அடிச்சுக்கிது :))) இது வரைக்கும் கல்யாணமா... ச்சீ... என்னால ஒரு வட்டத்துக்குள்ள எல்லாம் வாழ முடியாது... காதலா... ச்சீச்சீ... எல்லாம் சுத்த பேத்தல்... வேலை வெட்டி இல்லாதவங்க சும்மா பண்ணிட்டு திரியறது... காதலாவது கத்திரிக்காயாவதுனு பக்கம் பக்கமா டயலாக் பேசிட்டு இருந்தவதாங்க நான். இப்போ மேடம் டோட்டல் டேமேஜ். இப்போ என்னை பாத்தா என் முகத்த வச்சே நான் எதை பத்தி பேசறேன்னு கண்டுபிடிச்சிடுவிங்க... அந்த அளவுக்கு ஆயிட்டேன்.

சரி அதை விடுங்க. அவனை எப்போ நான் பாத்தேன் தெரியுமா?? இதோ இப்ப நான் நின்னுட்டு இருக்கற இதே இடத்துல சரியா ஒரு வருஷம் நாலு மாசம் ஏழு நாள் மூணு மணி நேரத்துக்கு முன்னாடிதான் மீட் பண்ணினேன். எப்படி தெரியும்னு முழிக்காதீங்க. என்னோட காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து இந்த செகண்ட் வரைக்கும் என்னோட ஆருயிர், ஏழுயிர், எட்டுயிரா இருக்கற சுஜியோட ஸ்கூல் ஃப்ரெண்ட் அவன். இங்கதான் அவன எனக்கு சுஜி இன்ட்ரோ பண்ணி வச்சா. அந்த நாள்ல இருந்து நாங்க மூணு பேரும் மூவேந்தரா... சண்டை போட்டுக்கலைங்க... போன வாரம் வரைக்கும் ஒண்ணா சுத்திட்டு இருந்தோம். ஹ்ம்ம்ம்... ஒரே சோகம் :((( சுஜிக்கு லாஸ்ட் வீக் தான் கல்யாணம் ஆகி UK போயிட்டா. போகும்போது எனக்கு ஒரே அட்வைஸ். அந்த மோப்ப நாய் எனக்குள்ள அவன் வந்தத கெஸ் பண்ணிடுச்சு. ஆனா நம்ம ஊர் போலிஸ் டாக் மாதிரி அவளும் ஒரு அரைகொறை. அவனுக்கு வந்துடுச்சானு அவளால கெஸ் பண்ண முடியலை. ஆனா எனக்கு நல்லாவே தெரியும் அவனுக்குள்ள நான் வந்துட்டேன்னு. ஆனா சொல்லியே தொலைய மாட்டேன்றான்.

நீங்களே சொல்லுங்க. அவன்தான மொதல்ல சொல்லணும். நானா சொன்னா நல்லா இருக்காது இல்ல. அவன் வந்து சொல்லும்போது எப்படி நான் பதில் சொல்லணும்னு நிறைய யோசிச்சிட்டு இருக்கேன். மி டூன்னு சொல்லவா இல்ல நானும்னு சொல்லவா இப்படிதான். ஆனா ஒரு ஐடியாவும் தோண மாட்டென்றது :((( பேசாம கொஞ்சம் பிகு பண்ணிட்டு அப்புறம் சரி சொல்லலாமான்னு இப்பொ நினைச்சுட்டு இருக்கேன். அடடா... அவன் வந்துட்டான். சரிங்க. நாங்க இப்போ "Jab We Met" படத்துக்கு போறோம். அந்த படத்துலயாவது எனக்கு எதாவது ஐடியா கிடைக்குதானு பாக்கறேன் ;))) யார்கிட்டயும் இதை சொல்லிடாதீங்க. அய்யோ என்ன இது?? ஒரு பொண்ணோட வரான். அந்த பொண்ணு வேற இவன் கைய பிடிச்சுட்டே நடந்து வருது. எனக்கு வேற பயமா இருக்கே... நான் போய் யாருன்னு பாக்கறேன். நாம இன்னொரு நாள் பாப்போங்க. சீ யு. பை...

(தொடரும்)

பி.கு: ஜி.ரா, CVR, ஜி இவர்கள் வரிசையில் நானும் இணைந்து விட்டேன்.

பி.குக்கு பி.கு: ஆனால் அவர்கள் வழியை பின்பற்றாமல் அதாவது பிரதி திங்களன்று இல்லாமல் பிரதி செவ்வாயன்று வெளியிடுவேன் ;)

பி.குக்கு பி.குக்கு பி.கு: இது ஒரு மாத கதை. அதாவது நான்கு வாரங்கள் மட்டுமே. அதாவது நான்கு பகுதிகள் மட்டுமே. அய்யோ மொறைக்காதீங்க. பாவம் சின்ன பொண்ணு. பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுங்க.