Wednesday, September 14, 2011

மாதத்தில் ஒரு முறையேனும்..

நாம் நமது குழந்தைகளைப் பார்த்து எவ்வளவு ஆனந்தம் அடைகிறோம். அதன் கொஞ்சு மொழியில், தளிர் நடையில் உலகை மறந்து சொர்க்கத்தில் திளைக்கிறோம். நமது உலகே நமது குழந்தைதான் என்று முற்றிலுமாய் மாறிப் போகிறோம். பிறந்தது முதல் இரவுகளில் தூங்க விடாமல், உணவு உண்ணாமல், குறும்புத்தனங்கள் செய்து நம்மை பாடாய் படுத்தும் நமது குழந்தையை வேண்டாம் என்று என்றேனும் தூக்கி எறிந்து விடுகிறோமா? கிடையாது. ஆனால் இது போல் அத்தனையும் பொறுத்துக் கொண்டு நம்மை சீராட்டி பாராட்டி வளர்த்த பெற்றவர்களை ஏன் மறந்து போகிறோம்?? வயதான காலங்களில் நமது அருகாமையை நேசிக்கும் அவர்களது உணர்வுகளை புரிந்த கொள்ள ஏன் மறுக்கிறோம்?

ஒரு முறை எனது அப்பா பற்றி எனது கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ‘முன்னலாம் இப்படி பேசவே மாட்டார். இப்ப விட மாட்டேனு இழுத்து வச்சு தேவை இல்லாத கதை எல்லாம் தொண தொணனு சொல்லிட்டு இருக்கார்’. எனது குற்றச்சாட்டுகளை பொறுமையாக கேட்ட என் கணவர் ‘வயசானவங்க அப்படிதாண்டா பேசுவாங்க. அவங்களுக்கு நாம எங்க அவங்க பேச்சக் கேக்காம போயிடுவோமோனு ஒரு பயம். மோர் தன் தட் அவங்களுக்கு நம்மகிட்ட பேசணும்னு ஒரு ஆசை. அவங்கள நாமதான் புரிஞ்சு நடந்துக்கணும். சின்ன வயசுல நீ உளறினத எல்லாம் அவங்க சந்தோஷமா பொறுமையா கேக்கல. உனக்கு ஏன் அந்த பொறுமை இல்லாமப் போச்சு. இனிமேல் அவர் எதாவது பேச ஆசைப்பட்டா கூட உக்காந்து கொஞ்ச நேரம் பேசிட்டு வா’ என்றார். அதன் பிறகுதான் நான் செய்து கொண்டிருந்த தவறுகளை உணர்ந்தேன். இப்பொழுதெல்லாம் அடிக்கடி ஃபோன் செய்து அவர்களுடன் நிறைய நேரம் பேசுகிறேன். எனது பெண்ணையும் பேச வைக்கிறேன்.

இந்த பதிவை எழுத தூண்டியது சென்ற வாரம் நான் சென்று வந்த ஒரு முதியோர் இல்லம். மக்கள் அனைவரும் படிக்கின்றனர். மற்றவரது உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றனர். உறவுகளை மதிக்கின்றனர். அதனால் முதியோர் இல்லங்கள் வெகுவாக குறைந்து விட்டன என்ற எனது கணிப்பை பெரிதும் தவறு என்றுணர்த்திய அந்த சில மணித்துளிகள். இதுவரை மூன்று தடவை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு ஞாயிறன்றும் மாலை 4 மணி எப்பொழுது வருமென ஆவலுடன் காத்திருப்போம் என்று நான் பேசிய அனைத்து பாட்டிகளும் சொன்னார்கள். கேட்கும்பொழுது சந்தோஷம்தான் என்றாலும் அவர்களைப் பார்க்கையில் பாவமாக இருந்தது. உண்ணும் உணவிற்கு பிரச்சினையில்லை. உடுத்த துணிக்கு குறைவில்லை. ஆனால் மகன் மகள் பேரன் பேத்திகள் என்று கடைசி காலத்தைக் கழிக்க வேண்டிய இந்த வயதில் பேசத் துணை வேண்டி ஏங்கி இருக்கும் அவர்களைப் பார்க்கையில் வேதனையாகவே இருக்கும். நான் முதல் முறை சென்ற போது பேசிய ஒரு பாட்டியிடம் என் பெண்னைப் பற்றி சொன்னேன். அதன் பின் ஆறு மாதங்களில் இரண்டு முறை மட்டுமே செல்ல முடிந்த என்னிடம் அவர் ஞாபகமாய் என் குழந்தையைப் பற்றி விசாரித்தார். அங்கு சென்று வந்ததன் பலனாய் அதை மட்டுமே நினைக்கிறேன். வேறொருவர் நம்மைப் பற்றி அன்பாய் நினைப்பதை விட வேறென்ன வேண்டும்?

இன்னொரு பாட்டியின் கதையோ பெரும் சோகம். சொத்தை எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டு முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து விட்டு விட்டார்கள். வந்துப் பார்த்தால் கூடவே வீட்டுக்கு வந்து விடுவார் என்ற பயத்தில் யாரும் வந்து பார்ப்பதில்லை. பணத்தை மட்டும் அனுப்பி வைத்து விடுவார்களாம். அந்த பாட்டிக்கோ குடும்பத்தாரை பார்க்க வேண்டும் என்று ஆசை. சொல்லி சொல்லி புலம்பினார். அவர் வீட்டினரைப் பார்த்தால் நன்றாக கேட்க வேண்டும் போல் இருந்தது. என்ன செய்ய முடியும் நம்மால்?? :((

வயதானவர்களுக்கு ஏதேனும் உதவி செய்தால் அந்த புண்ணியம் எனது பெற்றோர்களுக்குப் போய் சேரும் என்பது என் எண்ணம். அடிக்கடி செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனது குழந்தை கொஞ்சம் பெரியவளானதும் அழைத்து செல்ல வேண்டுமென எண்ணியிருக்கிறேன்.

பணத்தால் மட்டுமின்றி மனதால் நாம் உதவிக்கரம் நீட்ட எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. மனம் வையுங்கள். உங்களால் முடிந்த பொழுது உங்கள் நேரத்தை தானமளியுங்கள். அவர்கள் இழந்துக் கொண்டிருக்கும் இந்த சின்ன சின்ன சந்தோஷங்களை திரும்ப பெற அவர்களுக்கு உதவிடுங்கள். மாதம் ஒரு நாள் இரண்டு மணி நேரம் என்பது நமக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால் அந்த நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் அந்த உள்ளங்களுக்கு அது மிகவும் பெரிய விஷயம்.


For more info, Please visit www.teameverestindia.org 
                                                              www.everestserveindia.org                                              
                                                                                12/365:
                                                            
Volunteer at least once a month!

7 comments:

ILA (a) இளா said...

பெரிய விசயம்தான்..

Anonymous said...

நீங்க சொல்றது சரிதான். நாமும் அந்த வயதை அடையும் போது, இந்த நிகழ்வுகள் நமக்கும் நேரலாம் என்பதை ஒரு முறை நினைத்து பார்த்தால், அதற்குரிய பொறுமை தானாகவே வந்துவிடும். நமது தாத்தா , பாட்டியின் அருகாமை நம்மை எவ்வளவு மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும்? அதை விட அவர்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பார்கள்? அந்த ஆனந்தத்தை , நமது பெற்றோருக்கும், நமது குழந்தைகளுக்கும் மாறாமல் கொண்டு சேர்ப்பது நமது கடமைதானே!! - பயனுள்ள பதிவு.. தொடரட்டும்!!!

சி.பி.செந்தில்குமார் said...

>>பிறந்தது முதல் இரவுகளில் தூங்க விடாமல், உணவு உண்ணாமல், குறும்புத்தனங்கள் செய்து நம்மை பாடாய் படுத்தும் நமது குழந்தையை வேண்டாம் என்று என்றேனும் தூக்கி எறிந்து விடுகிறோமா?

அழகிய அவதானிப்பு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்ல விசயம் ஜே..

kriishvp said...

யோசிக்க வைக்கும் விஷயம், கண்டிப்பாக ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியது

Anonymous said...

GREAT!

Shruti said...

உன்னோடுதான் என் ஜீவன் ---> indha kadhayoda 4th part enganga?? Was very eager 2 read it.. bit couldn find anywhere.. Dhayavu senju ezhudhunga :)